World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Bush lays out his "vision" for the Middle East
US imperialism's rendezvous with disaster

மத்திய கிழக்கு பற்றிய புஷ்ஷின் ''கனவு''
அமெரிக்க ஏகாதிபத்தியம் சந்திக்க இருக்கும் அழிவு
By Bill Vann
28 February 2003

Back to screen version

மக்களை கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்களைப் பற்றிய அச்சமூட்டும் கதைகள் மற்றும் பாக்தாத் பயங்கரவாதிகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை உலகம் தழுவிய போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தடுத்து நிறுத்திவிட்ட காரணத்தினால், இந்த வாரம் புஷ் நிர்வாகம் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கான மற்றொரு பாவணையை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. அது, ஜோர்ஜ் ஆர்வெல்லினுடைய கதைகளின் பாணியில் போர்தான் சமாதானத்தை அடைவதற்குரிய ஒரே வழி என்றும், ஈராக்கை அமெரிக்க இராணுவம் ஆக்கிரமித்துக் கொள்வதுதான் மத்திய கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்குரிய ஒரே வழி என்றும் சொல்ல ஆரம்பித்துவிட்டது.

புதன்கிழமையன்று, வாஷிங்டனின் வலதுசாரி சிந்தனையாளர்கள் அமைப்பான அமெரிக்க தொழில் முயற்சிகள் கழகத்தில் (American Enterprise Institute - AEI) ஜோர்ஜ் W. புஷ் ஆற்றிய உரையில், அவரது மத்திய கிழக்கு பற்றிய எதிர்காலக் ''கனவையும்'', ''விடுவிக்கப்பட்ட'' ஈராக், சீரமைக்கப்பட்ட மத்திய கிழக்கில் எவ்வாறு அமையும் என்ற சிந்தனையையும் அதில் வெளிப்படுத்தியிருந்ததாக புஷ் நிர்வாக அதிகாரிகள் வர்ணித்திருந்தனர்.

புஷ் மேற்கொண்டுள்ள புதிய காலனியாதிக்கத் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அவசரமாக இந்த உரை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இந்த அமெரிக்க தொழில் முயற்சிகள் கழகத்தில் தனது ''நிரந்தர சிந்தனையாளர்கள்'' இருபது பேரை புஷ் நிர்வாகம் முக்கிய இடங்களில் அமர்த்தியுள்ளது. அதில் துணை ஜனாதிபதியின் மனைவியான லியன் செனி, மற்றும் முன்னணி வலதுசாரி சிந்தனையாளரும், ஈராக் போர்த் திட்டத்தை உருவாக்கிய முன்னணி நிபுணருமான பாதுகாப்பு கொள்கை சபைத் தலைவர் ரிச்சர்ட் பேர்ள் ஆகியோர் முக்கியமானவர்களாவர்.

AEI யின் முன்னாள் நிர்வாகத் துணைத்தலைவர் ஜோன் போல்டன் தற்போது ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புத் தொடர்பாக புஷ்ஷின் வெளியுறவு துணை அமைச்சராக பணியாற்றி வருகிறார். 1972 ம் ஆண்டு நீண்ட தூர ஏவுகணை தொடர்பான கட்டுப்பாட்டு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதற்கும், சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள மறுத்ததற்கும் இந்த போல்டன் காரணமாக இருந்தார்.

இஸ்ரேலில் உள்ள வலதுசாரி லீக்குட் கட்சியின் கொள்கைகளோடு நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவது இந்த AEI அமைப்பாகும். நீண்ட காலமாக, ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரை'' மத்திய கிழக்கு முழுவதிலும் ''ஆட்சி மாற்ற'' இயக்கமாக நடத்தப்பட வேண்டும் என்று இந்த அமைப்பு இயக்கம் நடத்தி வருகிறது. இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் புஷ் நிர்வாகத்தில் உள்ள முன்னணி நிர்வாகிகள் இந்த புதிய ''ஆதிக்க தத்துவத்தைக்'' கொண்டிருக்கின்றனர். ஈராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் போர், மத்திய கிழக்கில் மகத்தான மாற்றங்களை தொடக்கி வைக்கும். ஈராக் போரில் சிதைந்துவிடுமானால் மத்திய கிழக்கில் தற்போதுள்ள ஆட்சிகள் ஒவ்வொன்றாக கவிழ்ந்து கொண்டே வரும். அவற்றிற்கு பதிலாக ''அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஜனநாயகங்கள்'' அமர்த்தி வைக்கப்படும் என்று இந்த நடக்க முடியாத தத்துவம் கூறுகின்றது.

புஷ் உரையாற்றிய அதே நாளில், இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எரிக் சின்செக்கி பாராளுமன்ற ஆயுதப்படைகள் கமிட்டிக் கூட்டத்தில் உரையாற்றியபோது, ஈராக்கை போர் மூலம் ஆக்கிரமித்து வெற்றி பெறவேண்டும் என்றால், அந்த நாட்டை ''பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள்'' தொடர்ந்து காலவரையின்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்று தெரிவித்தார். அத்துடன், அமெரிக்க ஆதரவு ஆட்சியிடம் இரண்டு ஆண்டுகளுக்குள் அதிகாரம் ஒப்படைக்கப்படும்போது இராணுவம் அங்கிருந்து விலகிக்கொள்ளும் என்றும் அமெரிக்க நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், மிகுந்த நம்பிக்கை கொண்ட இராணுவ ஆய்வாளர்கள் அமெரிக்க இராணுவ ஆட்சி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு அங்கு நீடிக்கும் என்று மதிப்பிட்டிருக்கின்றனர்.

அத்தகைய நீண்ட கால, மற்றும் பெரும் எடுப்பிலான இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எவ்வளவு செலவாகும் என்று அரசாங்கம் மதிப்பீடு எதையும் தரவில்லை. போருக்கான செலவு மட்டுமே 60 பில்லியன் டொலர்களிலிருந்து, 95 பில்லியன் டொலர்கள் வரை செலவாகலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

புஷ், தனது போர்க் கொள்கையினால் ஏற்படுகின்ற பொருளாதார செலவினங்கள் மற்றும் மனித உயிர்கள் தொடர்பாக அமெரிக்க மக்களை தயார்படுத்தவில்லை என்றும், அமெரிக்க இராணுவம் ஈராக்கை பிடித்தப்பின்னர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்து எதையும் தெளிவாக அறிவிக்கத் தவறியதாக விமர்சிக்கப்பட்டிருந்தார். அதற்கு பதில் தருகிற வகையில் இந்த உரையை நிகழ்த்துவதற்கு அவர் தள்ளப்பட்டார்.

அவரது பேச்சில் இந்த இரண்டு அம்சங்களுக்கும் சரியான பதிலில்லை. அதற்கு பதிலாக எதிர்காலக் ''கனவை'' அவர் வெளிப்படுத்தியதோடு, அடக்க முடியாத ஏகாதிபத்திய திமிர்ப்போக்கையும் அதில் காட்டிக்கொண்டார். ஆனால், அமெரிக்கா நடத்துகின்ற போரால் உருவாகும் நெருக்கடி குறித்து மிகக்குறைவான மதிப்பீட்டையே அவர் செய்திருக்கிறார்.

''ஈராக் மக்களது வாழ்வும், அவர்களது சுதந்திரமும் நமக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை'' என்று புஷ் வாஷிங்டன் நிர்வாகத்தின் உள்ளே சம்மந்தப்பட்ட மிடுக்கான உடையணிந்தவர்கள் நடுவில் உரையாற்றினார். குறைந்தபட்சம் முதல் 48 மணி நேரத்தில் 800 ஏவுகணைகளை பாக்தாத் மற்றும் இதர மக்கள் நிறைந்த பகுதிகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்துவதற்கான இராணுவப் பிரச்சாரத்தின் மூலம் அவரது இந்தக் கருத்து நிரூபனமாகியது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஈராக்கிய மக்களைக் கொன்று குவித்து மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக ஆக்கிவிட்டு மேலும் இம்மக்களது உறுதிப்பாட்டை சிதைத்த பின்பு, வாஷிங்டன் தனது ஒரு இராணுவ ஜெனரலை அங்கு ஆட்சியாளராகவும் ஆக்கிவிடும்.

அமெரிக்க இராணுவத் தலையீட்டினால் ஜனநாயகப் பாதைக்கு எடுத்து வைக்கப்படும் முதலாவது நடவடிக்கை இது என்று புஷ் கூறுவது மிகவும் அபத்தமானது. இவற்றை பொய்யாக்குகின்ற வகையில் அமெரிக்கா தலையிட்ட உலகின் பல நாடுகளின் வரலாறுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இது போன்ற வாஷிங்டனது இராணுவ நடவடிக்கைகள் எந்த நாட்டில் மனிதாபிமான பாத்திரத்தை வகித்துள்ளன? கெயிட்டியை எடுத்துக்கொள்வோம், அங்கு அமெரிக்க இராணுவம் விட்டு வந்தது என்ன? சீர்குலைந்த பொருளாதாரமும் திருடர்களின் ஆட்சியும் தானே! அல்லது குவைத்தை எடுத்துக்கொள்வோம். 1991 ல் அமெரிக்கா இந்த நாட்டை ''விடுவித்து'' மீண்டும் ஒரு மன்னர் குடும்பத்திடம் அதனை ஒப்படைத்தது. அவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளைக் கூட மறுக்காமல் கொடுத்தா வருகிறார்கள்? அல்லது, கோசாவோவை எடுத்துக்கொள்வோம். அங்கு போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்து கொண்டிருக்கும் கோசாவோ விடுதலை இராணுவம், ஐ.நா.வின் மேற்பார்வையில் சேர்பியா சிறுபான்மையினர் மீது பயங்கர தாக்குதலை நடத்தி அவர்களை அங்கிருந்து வெளியேற்றியது. இந்த சமூக விரோதக் கும்பல் ஆட்சி இதனை ஒழுங்கமைக்கவில்லை? அல்லது ஆப்கானிஸ்தானை எடுத்துக்கொள்வோம். அங்கு இன்னமும் அமெரிக்கத் துருப்புக்கள் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த நாடு, அங்குள்ள கொடுங்கோன்மை யுத்தப் பிரபுக்களுக்கு பிரித்து தரப்படவில்லை?

ஈராக்கில் ஆட்சியை நடத்துவதற்கு ஒருபோதும் ஜனநாயக முறையை கடைப்பிடிக்கமாட்டார்கள் என்று புஷ் நிர்வாகத்தில் கொள்கை வகுப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். இப்போதே அமெரிக்க இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் CIA அதிகாரிகளும் சதாம் ஹூசேனின் பாத் கட்சி ஆட்சியில் பணியாற்றிவரும் இராணுவ அதிகாரிகளில் எவரை எடுத்து பிளவு சக்திகளை முறியடிக்கவும், எதிர்கட்சிகளை ஒடுக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற பட்டியலை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதே சதாம் ஹூசேன் ஆட்சியைத்தான் இரக்கமற்ற கொடுங்கோன்மை ஆட்சி என்று வர்ணிக்கிறார்கள். இதேபோன்று, வடக்குப் பகுதியில் நீண்ட காலமாக தனி நாடு கோரி சுதந்திர போராட்டம் நடத்திவரும் குர்தூ சிறுபான்மை இனத்தவர் தனி நாடு அமைப்பதற்கு ஏதாவது கிளர்ச்சியில் ஈடுபட்டால் அதை ஒடுக்குவதற்கு வாஷிங்டன் துருக்கிப் படைகளுக்கு அழைப்புவிடும்.

அமெரிக்க ஆக்கிரமிப்பின் ஆரம்பக்கட்ட விளைவுகள் எதுவாகயிருந்தாலும் ஈராக் மக்கள் பெருமளவில் மடிவார்கள் என்பது நிச்சயமாக இருப்பதுடன், அமெரிக்க துருப்புகளுக்கு பேரழிவு ஏற்படும் என்பதையும் தள்ளிவிட முடியாது. படிப்படியாக அமெரிக்க இராணுவம் அரசியல், இன மற்றும் மத வேறுபாடுகள் என்கிற உலை களத்தின் நடுவில் சிக்கிக்கொள்ளும். கடைசியாக, அமெரிக்கப் படைகள் தெற்கில் ஷியாக்கள் நடத்துகின்ற கிளர்ச்சியை ஒடுக்கி வடக்கில், குர்தூக்களின் கிளர்ச்சியை சமாளிக்க வேண்டும். மற்றும் கணக்கில்லா இதர சண்டைகளுக்கு மத்தியில் அமெரிக்கப் படைகள் சிக்கிக்கொள்ளும்.

இந்தக் காட்சி, இந்தப் பிராந்தியத்தில் உள்ள ''இதர நாடுகளுக்கு உத்வேகம் ஊட்டுகின்ற, வழிகாட்டுகின்ற, ஜனநாயக பாதைக்கு இட்டுச் செல்லுகிற'' வகையில் அமையும் என்று புஷ் கணித்திருப்பது பைத்தியக்காரத்தனத்தின் எல்லைக்கே சென்றுவிட்ட கணிப்பாகும். அதற்கு நேர் எதிர்மாறாக, இந்தப் பிராந்தியம் முழுவதிலும் அமெரிக்காவின் சூறையாடும் போர் நோக்கம் தெரிய வரும். அதே நேரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அத்தியாவசியமான எண்ணெய் வளத்தை பிடித்து தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு உலகம் முழுவதிலும் தனது மேலாதிக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயலும்.

ஈராக் மக்களை விடுவிப்பதற்கான பொறுப்பை யார் வாஷிங்டனுக்குத் தந்தார்கள்? அல்லது இந்த பிராந்தியத்து மக்கள் முழுவதையும் விடுவிக்கும் பொறுப்பை யார் அவர்களுக்கு கொடுத்தார்கள்? ஈராக் மக்களுக்கும் குறிப்பாக அரபு உலகிற்கும் ''பொதுவான கடமை'' அமெரிக்காவிற்கு இருப்பதாக புஷ் பேசிக்கொண்டிருப்பது ஐரோப்பிய காலனி ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலத்தில், ''வெள்ளை மனிதனின் சுமை'' என்று வெளியிடப்பட்ட பிரகடனங்களைப் போன்று அமைந்திருக்கிறது.

புஷ் மற்றும் அவரது எடுபிடிகள் தீட்டியுள்ள எதிர்காலத் திட்டத்தை செயல்படுத்தும் முன்னர் இந்தப் பிராந்தியத்து மக்கள் தங்களது தந்தையர்கள், பாட்டனார்கள், மற்றும் மூதாதையர்கள், அன்னியநாட்டு ஆதிக்க அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கு நடத்திய கடுமையான கிளர்ச்சியை மறந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்களா? 1920 களில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து ஈராக்கில் நடைபெற்ற போர்களில் இருந்து 1962 வரை நீடித்த பிரான்சுக்கு எதிரான அல்ஜீரியா விடுதலைப் போர் வரை நடைபெற்ற பல்வேறு விடுதலை கிளர்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது உயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள். இந்த தேசிய விடுதலைக்குப் பின்னர் கொடுமையான ஏமாற்றங்களை இன்று அரபு பூர்ஷ்சுவா ஆட்சியில் அவர்கள் சந்திக்கிறார்கள். அப்படியிருந்தும், அமெரிக்க மேலாதிக்கத்தில் ''சுதந்திரம்'' என்பதை அரபு மக்கள் ஏற்றுக்கொள்வது இயலாத ஒன்றாகும்.

ஈராக்கிற்கு எதிரான போரினால் புஷ்ஷினுடைய கொடூரமான சதிக்கூட்டம் நினைப்பதைப்போல், அரபு நாடுகளின் அரசுகள் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ச்சியடையாது. அதற்கு மாறாக, ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் புதிய போராட்டங்கள் வெடித்தெழுகின்ற நிலைதான் அங்கு உருவாகும்.

ஜனநாயகத்தின் தூதன் புஷ் என்பதற்கு உரிய சான்றுகள்தான் என்ன? அவர் குண்டர் முறைகளைக் கையாண்டு தேசிய தேர்தலில் வாக்குகளை அமுக்கினார். தன்னை வெள்ளை மாளிகையில் பதவியில் அமர்த்திக் கொள்வதற்காக வலதுசாரி சதிகாரக் குழுவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூலம் பதவியில் அமர்ந்தார். மக்களது சிவில் உரிமைகளைக் கட்டுப்படுத்த வரலாறு காணாத அடக்குமுறை நடவடிக்கைகளை அவரது அரசு தற்போது எடுத்து வருகிறது. குற்றச்சாட்டுக்கள் எதுவும் தாக்கல் செய்யாமல், அல்லது விசாரணை நடத்தாமல் பொதுமக்களை சிறையில் அடைக்கிறார்கள். சோதனைகள் மற்றும் கண்காணிப்புகளை நடத்துவதற்கு போலீஸ் அதிகாரம் மிகப்பெரும் அளவிற்கு விரிவாக்கப்பட்டிருக்கிறது. உலகின் எந்த நாட்டையும்விட, அமெரிக்காவில் தான் மக்களை அதிக அளவில் சிறையில் வைக்கும் நடைமுறை இன்றும் உள்ளது. அத்தோடு காட்டுமிராண்டித்தனமான மரண தண்டனையை இன்னும் நடைமுறையில் வைத்திருக்கிறது.

ஈராக்கை அமெரிக்கா முறியடிப்பதன் மூலம், இஸ்ரேல் பாலஸ்தீன தகராறுகளுக்கு நியாயமான தீர்வு ஏற்படும் என்று புஷ் கூறுவது அதைவிட நம்பகத்தன்மை இல்லாததாகும். ஈராக், படுமோசமாக தோல்வியடையும்போது பாலஸ்தீன மக்களை அது அச்சுறுத்தி மேலும் பலவீனப்படுத்திவிடும். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அவர்கள் நடத்தும் போராட்டத்தை கைவிட்டுவிட்டு அமைதிக்கு பாடுபடும் ''புதிய தலைவர்களை'' பாலஸ்தீன மக்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் என்பது புஷ்ஷின் கருத்து. ஆனால் இதுவரை பாலஸ்தீன மக்கள் தேர்தல் நடத்துவதை அமெரிக்க நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், பாலஸ்தீன மக்கள் அமெரிக்கா விரும்புகிற தலைவர்களை தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்று வாஷிங்டன் கருதுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துப்படி, பாக்தாத் வீழ்ந்துவிட்டால் பாலஸ்தீன மக்களது போராட்டமும் முடிவுக்கு வந்துவிடும் என்பதாகும். அதற்கு அவர் கூறுகிற காரணம் மிகவும் முட்டாள்தனமான அகந்தைமிக்கது. ஈராக்கானது ''பயங்கரவாதிகளின் பயிற்சிக்கும், தற்கொலை படையினரின் குடும்பத்திற்கும் பெருமளவில் பண உதவிகள்'' செய்வதாக அவர் கூறுகிறார். பாலஸ்தீன இளைஞர்கள் பாக்தாத்திற்கு சென்று தங்களைத் தாங்களே வெடி வைத்துக் கொன்றுவிடுவதற்கு பயிற்சி பெறுகிறார்கள் மற்றும் கற்றுக்கொள்கிறார்கள் என்று அவர் நம்புகிறாரா? அல்லது அப்படி அவர்கள் செய்வது தங்களது குடும்பங்களுக்கு ஈராக்கின் ''வெகுமதிகள்'' கிடைக்கவேண்டும் என்பதற்காகவா என்பதை புஷ் உண்மையிலேயே நம்புகிறாரா?

2000 ம் செப்டம்பரில் பாலஸ்தீனத்தில் இன்டிபாடா தீவிரமடைந்தலிருந்து மிகப்பெரும்பாலான ஆயுதங்கள் எதுவும் இல்லாத 2.300 பாலஸ்தீன பொதுமக்கள் இஸ்ரேலிய துருப்புக்கள் மற்றும் சியோனிஸ்ட் குடியேற்றவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காசா மற்றும் மேற்குக் கரைப்பகுதிகளில் வாழுகின்ற 3.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் நிரந்தரமாக முற்றுகையிடப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வெளியில் வந்தால் கொல்லப்படுவோம் என்ற பீதியில் வீடுகளுக்கு உள்ளேயே அடைபட்டு கிடக்கிறார்கள். நூற்றுக்கணக்கான வீதித் தடைகளும், தடுப்பரண்களும் அங்கு எழுப்பப்பட்டுள்ளன. அவற்றை மீறி அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. தேவையான உணவும், மருந்தும் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. புஷ் நிர்வாகம் இந்த அப்பட்டமான அடக்குமுறைக்கு முழுமையாக உடந்தையாக செயல்பட்டு வருகிறது. அப்படியிருந்தும் புஷ் தீட்டியுள்ள ''தொலைநோக்குத்'' திட்டத்தில் பாலஸ்தீன மக்கள் ''பயங்கரவாதத்தை கைவிட வேண்டும்'' என்பது முக்கியமானதாகும்.

''இஸ்ரேலின் புதிய அரசாங்கமானது பயங்கரவாத மிரட்டல்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பை அதிகரித்த பின்னர், பாலஸ்தீன நாட்டை உருவாக்க ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கலாம். மிக விரைவாக இறுதி உடன்பாட்டிற்கு புதிய அரசு பணியாற்றி சமாதானத்தை நோக்கி முன்னேற்றம் காணும்போது, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் குடியேற்ற நடவடிக்கைகள் முடிவிற்கு வந்தாக வேண்டும்'' என்று புஷ் கூறுகிறார்.

இஸ்ரேலின் புதிய அரசாங்கம் அத்தகைய நடவடிக்கை எதற்கும் ஆதரவு தராது. இது புஷ்ஷிற்கு நன்றாகத் தெரியும். இஸ்ரேல் வரலாற்றிலேயே ஷரோனுடைய கூட்டணி அரசாங்கம்தான் மிகத் தீவிரமான வலதுசாரித் தன்மையைக் கொண்டதாகும். இந்தக் கூட்டணியானது ஓரளவு பாசிச உணர்வு கொண்ட இரண்டு கட்சிகளின் ஆதரவை நம்பி இருக்கிறது. இதில் ஒரு கட்சி ஆக்கிரமித்த பகுதியிலுள்ள குடியேற்றவாசிகளின் ஆதரவைப் பெற்றது. இன்னொரு கட்சி, மேற்குக்கரை மற்றும் காசாப் பகுதியிலிருந்து பாலஸ்தீன மக்களை வெளியேற்றும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது.

இஸ்ரேல் அரசாங்கம் ஈராக்கிற்கு எதிரான போரை வரவேற்றுள்ளதுடன் அதனை ஊக்குவித்தும் வருகிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பை ஒரு சாக்காக பயன்படுத்திக்கொண்டு பாலஸ்தீன மக்கள் மீது தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தும். இதில் புஷ் நிர்வாகத்தின் நெருக்கமான ஒத்துழைப்பு இஸ்ரேலுக்கு உண்டு. தற்போது, ஈராக்கிற்கு எதிரான போரைத் திட்டமிடுவதில் மிக நெருக்கமான நேரடித் தொடர்பு கொண்டிருக்கும் அமெரிக்க அதிகாரிகள், இதற்கு முன்னர் இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் லீக்குட் கட்சிக்கு ஆதரவாளர்களாகவும், ஆலோசகர்களாகவும் பணியாற்றி வந்துள்ளார்கள்.

எடுத்துக்காட்டாக ரிச்சார்ட் பேர்ள், பென்ஜமின் நெட்டன்யாகு 1996 தேர்தலில் லீக்குட் கட்சியின் வலதுசாரி வேட்பாளராக பேட்டியிட்டபோது, பேர்ள் அவருக்கு ஆலோசகராக பணியாற்றியதுடன், பாலஸ்தீனியர்களுடனான சமாதான பேச்சுவார்த்தையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று இயக்கம் நடத்தினார். காசா மற்றும் மேற்குக்கரைப் பகுதிகளை இஸ்ரேல் இராணுவம் மீண்டும் பிடித்துக்கொள்ள வேண்டுமென்ற ஆலோசனையையும் கூறி வந்தார்.

இவருடன், சியோனிஸ்ட் வலதுசாரியான டக்லஸ் பெய்த் இன்னொரு ஆலோசகராக பணியாற்றி வந்தார். தற்போது இவர் அமெரிக்காவில் பாதுகாப்புக் கொள்கை தொடர்பான துணை அமைச்சராக பணியாற்றி வருகிறார். 1997 ல் இவர், இஸ்ரேல் மீண்டும் பாலஸ்தீன எல்லைகளை பிடித்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்றார். அப்படி பிடித்துக்கொள்வதை ''விஷ முறிவு'' மருந்து என்று வர்ணித்து, அங்கு ''அதிகம் இரத்தம் சிந்தவேண்டியதாக இருந்தாலும்'' அந்த விலைக்கு இது ஈடானதுதான் என்று எழுதியும் உள்ளார்.

பெய்த் தற்போது பென்டகனின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஈராக் ''போருக்குப் பின்னர் சீரமைப்பு'' செய்வதற்கான திட்ட வழிகாட்டியாக இவர் விளங்குகிறார். ஈராக்கில் ''சீரமைப்பு அலுவலக'' தலைமை சிவிலியன் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மைக்கேல் மொப்ஸ் மற்றொரு பென்டகன் அதிகாரத்துவ அதிகாரியாகும். இவர் முன்னர் அரசாங்கப் பணியில்லாத நேரத்தில் பெய்த் நடத்திய லாபகரமான சட்ட பங்குதாரர் நிறுவனத்தின் ஒரு வாடிக்கையாளராகும்.

சென்ற ஆண்டு மொப்ஸ் அமெரிக்க பிரஜைகள் எவரையும், ''எதிரியின் ஆட்கள்'' என்று அறிவித்து அவர்களை குற்றச்சாட்டுக்கள், விசாரணைகள், வக்கீல்கள் உதவி அல்லது ஜாமீன் இல்லாமல், காலவரையின்றி சிறையில் அடைப்பதற்கு கட்டளையிட ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என்று இரண்டு பக்க பிரம்மான வாக்குமூலம் ஒன்றை தாக்கல் செய்தார். இவர் மேலும், அமெரிக்காவில் பிறந்த சவுதி இனத்தைச் சேர்ந்த 21 வயது யாசர் எஸ்ஸாம் ஹம்தி, ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டு யாருடனும் தொடர்புகொள்ள முடியாமல் குவான்டனமோவிலுள்ள தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருந்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசிற்கு ஆதரவாக வாக்குமூலம் ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார் .

இத்தகைய நபர்களை தன்னுடன் வைத்துக்கொண்டு, ஈராக்கில் தனது நோக்கம் ஜனநாயகத்தை மீட்பதுதான் என்று புஷ் கூறுவது மிகவும் அபத்தமானது. ஆனால் ஈராக்கில் தயாராகிக்கொண்டு வருவது கொடூரமான காலனி ஆதிக்கமாகும். அத்துடன், சதாம் ஹூசேனின் சொந்த ஒடுக்குமுறை அமைப்பில் மிச்சமிருக்கும் நிர்வாக அமைப்புக்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நலன்களுக்கு பயன்படுத்திக்கொள்வதுதான் இவர்களது திட்டத்தின் நோக்கமாகும். இன்று இவர்களது பிரதான பணி, ஈராக்கினுடைய எண்ணெய் வளத்தை எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் அமெரிக்கா சுரண்டுவதற்கு உத்திரவாதம் செய்து தருவதும், பொதுமக்களுடைய கிளர்ச்சிகளை அடக்கி ஒடுக்குவதும் தான்.

புஷ்ஷினுடைய ''தொலைநோக்குத்திட்டம்'' ஈராக்கோடு முடிந்துவிடப் போவதில்லை. ஈராக் மீது ஆக்கிரமிப்பு நடத்துவதோடு வாஷிங்டன் மத்திய கிழக்கு முழுவதிலும், உலகம் பூராவிலும் முடிவில்லா ஒருதலைப் பட்சமான இராணுவ தலையீடுகளுக்கு திட்டமிட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கிலும், உலகம் முழுவதிலும் புரட்சிகரமான கொந்தளிப்புகள் உருவாகும்.

அத்துடன், புஷ் நிர்வாகம் தொடக்கி வைக்கும் இந்தப் போரானது சுதந்திரம், ஜனநாயகம் அல்லது முற்போக்கு ஆகியவற்றோடு எந்த வகையிலும் சம்மந்தப்பட்டதல்ல என்பது அமெரிக்க உழைக்கும் மக்கள் முன்னிலையில் முழுமையாக அம்பலத்திற்கு வரும். ஏனென்றால் சர்வதேச இராணுவமயத்திற்கு ஆகும் செலவுகளை குறிப்பாக பொருளாதார அடிப்படையிலும், மற்றும் போருக்குச் சென்ற தமது அன்பிற்குரிய உறவினர்களை இழப்பதிலும் அமெரிக்க மக்கள் பெரும் சுமையை ஏற்க வேண்டிவரும்.

ஆகவே வெள்ளை மாளிகையில் உள்ளவர்கள் புரட்சிகர வேகத்திற்கு தீ மூட்டிவிட்டிருக்கிறார்கள். அந்தத் தீ ''மூன்றாவது உலகத்தோடு'' நின்றுவிடாது. ஏகாதிபத்திய மையங்களுக்கு உள்ளேயே அதன் வலுவான தாக்கம் இருக்கும். மேலும் அமெரிக்காவிற்கு உள்ளேயே வேறு எந்த நாட்டையும்விட அதிகமாக வெடித்துச் சிதறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved