World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Who's going to be next?

Canada's prime minister denounces US "regime change" policy

அடுத்தது யாராக இருக்கப் போகிறார்கள்?
அமெரிக்காவின் ''ஆட்சி மாற்ற'' கொள்கைக்கு கனடா பிரதமர் கண்டனம்

By Keith Jones
4 March 2003

Back to screen version

ஐ.நா-வின் ஆயுதக்குறைப்பு நடவடிக்கைகள் எப்படி நடந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் புஷ் நிர்வாகம் ஈராக்கில் ''ஆட்சி மாற்றத்திற்கு'' நடவடிக்கை எடுக்கப்போவதாக வலியுறுத்தல் செய்திருப்பது குறித்து கனடா பிரதமர் ஜோன் கிரிட்டியன் (Jean Chrétien) அதிர்ச்சியையும் கண்டனத்தையும் தெரிவித்தார்.

கிரிட்டியன் கலவரம் அடைந்திருப்பது காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்கா ஏற்றுக் கொள்ளாத எந்த ஆட்சியையும் தனது இராணுவ வலிமையைப் பயன்படுத்தி மாற்றியமைக்க அமெரிக்காவிற்கு உரிமை உண்டென்றால் உலகின் பூகோள அரசியலே குழப்பத்தில் ஆழ்ந்து விடும் என அவர் எச்சரித்தார்.

மெக்சிகோவிற்கு அரசு விஜயம் மேற்கொண்ட கிரிட்டியன் அங்கு உரையாற்றும் பொழுது, ''ஆட்சி மாற்றத்திற்கு நாம் நடவடிக்கை எடுக்கும்போது அதனால் மிகவும் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என நான் நினைக்கிறேன். எப்போது நாம் பிற நாட்டுக்குச் செல்ல விருக்கிறோம்? அடுத்து யாராக இருக்கப் போகிறார்கள்? எனக்கு அந்தப்பட்டியலைத் தாருங்கள்....... இது மிகவும் ஆபத்தான கருத்து'' என்று அறிவித்தார்.

ஐ.நா-பாதுகாப்பு சபையின் 1441-வது தீர்மானம் ஈராக் ஆயுதக்குறைப்பை மட்டுமே கோருகிறது. ''அதை நீங்கள் வாசித்தால். அது ஆட்சி மாற்றம் பற்றி எதுவும் கூறவில்லை'' என கிரிட்டியன் கருத்துரைத்தார்.

கிரிட்டியன் ஆட்சி போதுமான அளவிற்கு வாஷிங்டனை ஆதரிக்கவில்லை என்று கனடாவின் கம்பெனிகள் சார்ந்த ஊடகங்களும் அமெரிக்க அரசியல் நிர்வாகத்தின் பெரும் பகுதியினரும் கண்டித்து வருகின்றனர். புஷ் நிர்வாகத்தின் ''ஆட்சிமாற்ற'' கொள்கை கொந்தளிப்பை உருவாக்கும் தன்மை கொண்டது என்பதை கிரிட்டியன் வலியுறுத்தி வருகிறார். ''ஆட்சி மாற்றம்'' பற்றி வஞ்சப் புகழ்ச்சியாக தன்னையே சுட்டிக்காட்டி அவர் கருத்து தெரிவித்தார். 2004- பெப்ரவரியில் பிரதமர் பதவியிலிருந்து தான் இறங்கப்போவதாக அவர் சுட்டிக்காட்டினார். ''இப்போது நான் நன்றாக இருக்கிறேன். நான் பதவியிலிருந்து செல்வதற்கு இன்னும் 11-மாதங்களே உள்ளன. ஆனால் மற்றவர்கள் அந்த இடத்தில் வருவதென்றால் எப்படி? எனவே இது மிகவும் ஆபத்தான கருத்து'' என கிரிட்டியன் குறிப்பிட்டார்.

கிரிட்டியன் எப்போதுமே தனது அறிவாற்றலை வெளிப்படுத்திய திறமைசாலி அல்ல. ஆனால் அவர் தனது அரசியல் வாழ்வின் 35-ஆண்டுகளில் பெரும் பகுதியில் லிபரல் கேபினட் மந்திரியாக கனடா அரசாங்கத்தில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகிறார். பல்வேறு சர்வதேச மாநாடுகள் மற்றும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் கூறும் இந்தக்கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில் புஷ் நிர்வாகத்தின் போர் வெறிப்போக்கு அமெரிக்காவின் மிக நெருக்கமான நட்பு நாடுகளின் அரசியல் வட்டாரங்களிலேயே எந்த அளவிற்கு ஆதங்கத்தையும் அச்சத்தையும் விளைவிக்கின்றன? என்பதை கிரிட்டியன் கருத்து எதிரொலிக்கிறது.

கனடாவின் அதிதீவிர வலதுசாரி அலையன்ஸ் அணியினர், பிரிட்டனின் டோனி பிளேயர் புஷ்-ன் நெருக்கமான நண்பராக ஆவதற்கு அனுமதித்துவிட்டதாக கிரிட்டியன் மீது குற்றம் சாட்டினர். அவரும் அவரது லிபரல் கட்சி அரசாங்கமும் வாஷிங்டனின் போர் வெறிப்போக்குகளை ஆதரித்துவருகின்றன. சதாம் ஹூசேன் ஆயுதங்களை துறக்க வேண்டும், அல்லது அவரை ஆட்சியிலிருந்து தூக்கி எறியவேண்டும், என்ற கோரிக்கையை தொடர்ந்து கனடா வலியுறுத்தி வருகிறது. ஈராக் ஆயுதக்குறைப்பு செய்யாவிட்டால் ஈராக்மீது படையெடுப்பதற்கு ஐ.நா-பாதுகாப்பு சபையில் இரண்டாவது தீர்மானம் நிறைவேற்ற தேவையில்லை என்று அமெரிக்காவின் கருத்தை கனடா எதிரொலித்து வருகிறது. கிரிட்டியன் ஆட்சி மாற்ற கருத்தை கண்டித்தாலும், ஐ.நா-1441-தீர்மானத்தின் போர்வையில் ஈராக் மீது அமெரிக்கா படையெடுப்பதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அதில் அவர் கவனமாக இருக்கிறார். சதாம் ஹூசேன் தன்னை "மாற்றிக் கொள்ளவில்லை" என்றால் --ஒரு நாள் வரும்-- அப்போது பொறுப்பு அவர் தலையில் தான் விழும். அப்போது வேறு எவர் மீதும் அவர் பழிபோட முடியாது. தன்னைத்தானே நொந்து கொள்ளும் நிலைவரும்'' என்று கிரிட்டியன் எச்சரித்தார்.

கனடாவின் ஆயுதப் படைக் கப்பல்களும், போர்விமானங்களும், அமெரிக்கா, ஈராக் மீது போர் தொடுக்கும் போது அதில் கலந்துகொள்ளும் என்பதில் சந்தேகத்திற்கு சிறிதேதான் இடம் இருக்கிறது. கனடாவின் தலைமை இராணுவ அதிகாரிகள் இரண்டு டஜன் பேர் வரை ஏற்கனவே கத்தார் சென்று அங்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் ஈராக் மீது படையெடுப்பதற்கான திட்டத்தை தீட்டி வருகின்றனர். பாரசீக வளைகுடாவில் ஏற்கனவே கனேடிய போர் கப்பல்கள் பல நடமாடிக்கொண்டிருக்கின்றன.

ஈராக் தொடர்பாக ஒட்டாவாவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே உறவுகளில் ஏற்படும் விரிசல்கள், கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக வல்லரசுகள் தங்களுக்கு இடையே உருவாகும் மோதல்களை அவற்றின் மூலம் சரிசெய்து கொள்ளவும் தங்களது மேலாதிக்கத்திற்கு எதிராக உருவாகும் சவால்களை சமாளிக்கவும் செய்த, அந்த பல்முனை கொண்ட நிறுவனங்கள் கொண்ட அமைப்பை மற்றும் கூட்டணிகளை, புஷ் நிர்வாகம் அலட்சியம் செய்வதை சுற்றிச் சுழன்று வருகிறது.

பழைய புவிசார் அரசியல் ஒழுங்கை அப்படியே தக்கவைத்துக்கொள்வதற்கு மற்றும் ''நேட்டோ'', ஐ.நா-மற்றும் இதர பல பக்கங்கள் கொண்ட அமைப்புகள் முற்றிலும் சிதைந்துவிடாமலிருந்தால் கூட, ஓரங்கட்டிவிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடக் கூடாது என்பதில் வெறிகொண்ட முயற்சியில் கனடா அரசாங்கம் இறங்கியுள்ளது. அப்படியே நீடிக்க வேண்டும் என்பதில் கனடா ஆர்வம் கொண்டிருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு:

முதலாவது காரணம் கனடாவின் அச்சத்தை அடிப்படையாகக் கொண்டது. வாஷிங்டன் முன்னரே தாக்குதல் மற்றும் ஆட்சி மாற்றம் போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக நடவடிக்கை நோக்கி திரும்புதல் மற்றும் சர்வதேச சட்டம், தேசிய இறையாண்மை போன்ற பாரம்பரிய கருத்துருக்களை, தூக்கி எறிவது, சர்வதேச உறவுகளில் அது மிகக்கடுமையான குழப்பத்தை ஏற்படுத்திவிடும். உலகம் முழுவதும் புதிதாக ஆயுதக்குவிப்பு போட்டிகளுக்கு உந்து சக்தியாக அமைந்துவிடும். உலகம் முழுவதிலும் செல்வத்தையும் புவிசார் அரசியல் அதிகாரத்தைப் பகிர்வதில் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய மிகப்பெரும் கொந்தளிப்பு உருவாகிவிடும்.

இரண்டாவது காரணம்: நீண்ட காலமாக கனடாவின் ஆளும் குழுவினர் பன்னாட்டு அமைப்புகளை பயன்படுத்தியே அமெரிக்க பொருளாதார மற்றும் பூகோள அரசியல் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தி வந்திருக்கின்றன. அமெரிக்க ஆதிக்கத்தை சரிக்கட்டுவதற்காக இந்த உறவுகளை பிரதான தந்திரமாக கனடா பயன்படுத்தி வந்தது. ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே இடைவெளி ஏற்படுமானால், விரிசல்கள் உருவானால், கனடாவைச் சேர்ந்த முதலாளிகள் சுதந்திரமாக தங்களது அதிகாரத்தை செலுத்துகின்ற வல்லமை மேலும் குறைந்து தங்களது சொந்த சூறையாடும் நலன்களைப் பின்பற்ற முடியாது போய்விடலாம்.

இரண்டு சுண்டெலிகள்

மெக்சிகோ விஜயத்தின் போது பொதுமேடையில் உரையாற்றிய கிரிட்டியன் கனடாவின் முன்னாள் பிரதமர் பியர் ருடோவின் பிரபலமான துடுக்கு கதை ஒன்றை நினைவுபடுத்தினார். வட அமெரிக்காவோடு ஒரே இடத்தில் சேர்ந்திருப்பது சுண்டெலி யானையோடு உறவு கொண்டிருப்பதை போன்றது என்று ருடோ கூறுவார். NAFTA- விற்கும், அமெரிக்காவிற்கும் இடையே நிலவுகின்ற இன்றைய உறவு இரண்டு சுண்டெலிகளுக்கிடையே நிலவுகின்ற உறவைப்போன்றது, என்று கிரிட்டியன் குறிப்பிட்டார்.

இந்த சிந்தனைகளையும் கட்டுத்திட்டங்களையும் கருத்தில் கொண்டுதான் ஈராக் தொடர்பாக ஐ.நா-வில் கனடா, சமரச தீர்மானம் ஒன்றை உலவ விட்டிருக்கிறது. ஆயுத சோதனைகளுக்கு அதிக அவகாசம் கொடுத்து ஈராக் 1441-வது தீர்மானப்படி அதன் நிபந்தனைகளை ஏற்றுசெயல்படுகிறதா என்பதை முடிவு செய்வதற்காக சமரச முயற்சியில் கனடா இறங்கியிருக்கிறது. இந்த சமரச முயற்சியில் உண்மையான நோக்கம் ஐ.நா- அங்கீகாரத்தோடு வல்லரசுகள் ஈராக் மீது படையெடுப்பதற்கு வகைசெய்ய வேண்டும் அதற்கு பேரம் பேசுவதற்கு அதிக நேரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக கனடா இவ்வாறு முயற்சி செய்துவருகிறது.

கனடாவின் "சமரசம்" ஐ.நா-பாதுகாப்பு சபையில் ஒற்றுமையை நிலை நாட்டவேண்டும் என்பதுதான். வாஷிங்டன் கேட்டுக்கொள்ளக்கூடிய காலக்கெடுவிற்கு அப்பால் மேலும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை ஆயுத சோதனைகளுக்கு அவகாசம் தந்து, அமெரிக்கா தலைமையில் படையெடுப்பதற்கு தீர்மானம் வகை செய்கிறது. அமெரிக்காவும், பிரிட்டனும் தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில் கண்டுள்ள வாசகங்களுக்கு அப்பால், மிக வெளிப்படையான அர்த்தத்தில், ஈராக் நிபந்தனைகளை மீறுமானால் கனடாவின் தீர்மானம் இராணுவ நடவடிக்கைக்கு வழிவகை செய்கிறது.

கனடாவைப் போல் அல்லாமல், ஐ.நா-பாதுகாப்பு சபையில் தற்போது இடம் பெற்றிருக்கின்ற மெக்சிகோவும் சிலியும், கனடாவின் தீர்மானத்தை ஆதரிக்கின்றன. அந்த இரு நாடுகளிலும் பொதுமக்கள் மிகப்பெரும் அளவிற்கு போருக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், வாஷிங்டனது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுகின்ற சாதனமாக அதனை முன்னிலைப்படுத்தி வருகின்றன. இதற்கிடையில் புஷ் நிர்வாகம் கனடாவின் நிலைப்பாடு ''உதவுவதாக இல்லை'' என்று கூறிவிட்டது.

வாஷிங்டன் தனது பாரம்பரிய கூட்டாளிகளை துச்சமாக மிதித்துத் தள்ளி தனது போர் முயற்சியில் குறியாக உள்ளது மட்டுமல்லாமல், "ஆட்சிமாற்றம்", "முன்கூட்டிய தாக்குதல்கள்" என்ற சாக்கு போக்குகளை தொழுது ஏற்றுவதன் மூலம், புஷ் நிர்வாகமானது ஈராக்கை வெல்வது தனது அதிகார வேட்கையைத் தணிக்காது என்று அதிகமாய் உணர்வதால், கிரிட்டியனின் குறிப்புக்கள் அவ்வாறு விளைந்தன என்பதில் ஐயம் ஏதுமில்லை. ''அடுத்து யாராக இருக்கப் போகிறார்கள்" என்பதுதான் உண்மையான கேள்வி.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved