World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spain: Mass demonstrations against government's right-wing policies and warmongering

ஸ்பெயின்: அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகள் மற்றும் போர் வெறிப்போக்கிற்கு எதிராக கண்டனப் பேரணிகள்

By Vicky Short
1 March 2003

Back to screen version

ஸ்பெயின் பிரதமரும் மக்கள் கட்சியின் தலைவருமான ஜோசே மரியா அஸ்னார், ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா தலைமையில் நடைபெற இருக்கும் போருக்கு மிகுந்த ஆவேசத்தோடு ஆதரவு காட்டுகின்ற ஆதரவாளர்களில் ஒருவராக உள்ளார். இவர், அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷினுடைய தூதர்களில் ஒருவராக போருக்கு ஆதரவு தேடி உலகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து வருகையில், இவரது உள்நாட்டு மற்றும் சர்வதேச கொள்கைகளைக் கண்டித்து ஸ்பெயினில் மிகப்பெரும் கண்டனப் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.

பிப்ரவரி 15-16 வாரக் கடைசியில் போருக்கு எதிராக பார்சலோனாவில் (Barcelona) 2 மில்லியன் மக்களும், மாட்ரிட்டில் (Madrid) 1 மில்லியன் மக்களும், நாட்டின் இதர பெரிய மற்றும் சிறிய நகரங்களில் நூறாயிரக்கணக்கான மக்களும் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். மக்கள் கருத்துக்கணிப்புக்கள் நடத்தப்பட்டதில் ஐ.நா. அங்கீகாரம் அளித்தாலும் போர் நடைபெறக்கூடாது என்று தொண்ணூறு வீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு வாரத்திற்குள் மேலும் 1 மில்லியன் மக்கள் பிப்ரவரி 23 ந்தேதி மாட்ரிட் தெருக்களில் கண்டனப் பேரணி நடத்தினர். இந்த முறை, காலிஸியா (Galicia) பகுதியில் கடலில் ஏற்பட்ட எண்ணெய்க் கப்பல் பேரழிவினால் எணெணெய்ப் படலம் கடற்கரை வரை ஒதுங்கி வந்து மில்லியன்கணக்கான மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஆபத்தை தடுத்து அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர். 979 அடி நீளமும் 26 ஆண்டு வயதைக் கொண்டதுமான பிரஸ்டீஜ் என்ற எண்ணெய்க் கப்பல் தூரக்கிழக்கு நாடுகளுக்கு சென்று கொண்டிருந்தது. இக்கப்பல் நவம்பர் 13 ந் தேதி ஸ்பெயினின் வடமேற்கு மாகாணமான காலிசியாவிலிருந்து 31 மைல்களுக்கு அப்பால் கடலில் தத்தளிக்கத் தொடங்கி இறுதியாக நவம்பர் 19 ந் தேதி எண்ணெயைக் கடலில் பரவவிட்டு மூழ்கிவிட்டது.

இந்தப் பேரழிவிற்கு அஸ்னார் அரசாங்கமே பொறுப்பு என்றும், சேதமடைந்த இக்கப்பலை காலிசியாவிற்கு எதிரே கடலுக்குள் நிர்பந்தம் செய்து அரசாங்கம் அனுப்பியிருக்கிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கப்பலில் இருந்த 77.000 தொன் எண்ணெயில் 20.000 தொன் எண்ணெயை கடலுக்குள் விடப்பட்டதால், ஸ்பெயினின் 92 கடற்கரைப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 40 கடற்கரைப் பகுதிகள் முழுவதுமாக எண்ணெய்ப் படலத்தால் மூடப்பட்டுள்ளது. [See "Thousands of tons of oil pollute Spanish coast" ]

பாதிக்கப்பட்ட பகுதி வளமான மீன்பிடிப்பு மற்றும் கடல்வளம் தொடர்பான தொழிலுக்கு சிறப்புமிக்க இடமாகும். சர்வதேச அளவில் சிறப்புமிக்க பறவை இனங்கள் வாழுகின்ற, தங்கிச் செல்லுகின்ற இடமாகவும் அது இருக்கிறது. தற்போது இந்த எண்ணெய்ப் படலத்தால் காலிசியாவின் சில பகுதிகளும், பிரான்ஸ் மற்றும் போர்த்துக்கல் ஆகியவற்றின் சிலபகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதோடு பல குடும்பங்கள் தங்களது வாழ்வையும் இழந்துவிட்டன. அரசாங்கம் உறுதிமொழி கொடுத்திருந்தாலும், தினசரி இந்தக் கப்பலில் இருந்து 2 தொன் எண்ணெய் வெளியேறிக் கொண்டு இருப்பதால், இதுவரை 40.000 தொன்னுக்கு மேற்பட்ட எண்ணெய் கடற்கரைக்கு வந்துள்ளது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் ''மீண்டும் எப்போதும் கூடாது'' (Nunca Mais) என்ற தற்காலிக ஒரு கூட்டணி அமைப்பாக சேர்ந்து ஏற்பாடு செய்தனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட பஸ் வண்டிகள், பல ரயில்கள், ஆயிரக்கணக்கான தனியார் கார்கள் மற்றும் விமானங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மட்டும் 200.000 ம் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு வந்து பேரணி நடத்தினர். இந்தப் பாதிப்பிற்கு அரசாங்கத்திடமிருந்து விளக்கம் கேட்கவும், அதற்கு பொறுப்பான அதிகாரிகளை பதவி விலகக் கோரியும் பேரணியில் கோரிக்கைகளை எழுப்பினர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அஸ்தூரியாஸ், காண்டபிரியா, பாஸ்க் கண்ரி, கட்டலோனியா, வலன்சியா, மற்றும் போர்த்துக்கல்லில் இருந்தும்கூட வந்திருந்தனர். அவர்களுடன் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சேர்ந்துகொண்டனர். அவர்கள் எண்ணெய்ப் படலத்தை தூய்மைப்படுத்தியதால் தமது வெள்ளை ஆடைகளில் ஏற்பட்ட கறைகளுடன் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

காலீசியாவிலிருந்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பல்லாயிரக்கணக்கான மாட்ரிட் நகரத்து மக்களும் இதற்கு முன்னர் நடைபெற்ற போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கொண்டு வந்த பதாகைகளோடு வந்திருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களில் பலர் அஸ்னார், ஈராக்கிற்கு எதிரான போருக்கு ஆதரவு தெரிவிப்பதையும், அவரது உள்நாட்டுக் கொள்கைகளையும் இணைத்து கண்டனம் செய்தனர். ''உங்களுக்கு எண்ணெய் வேண்டுமென்றால், காலீசியாவிற்குச் செல்லுங்கள் அங்கு இலவசமாக கிடைக்கிறது'' என்று முழக்கமிட்டனர். சில ஆர்ப்பாட்டக்காரர்கள் எண்ணெய்யை தங்கள் மீது ஊற்றிக்கொண்டு ''யுத்தம் வேண்டாம்'' என்ற முழக்கங்களை எழுப்பினர்.

''மீண்டும் எப்போதும் கூடாது'' என்ற பதாகைகள் தெருக்களின் குறுக்கே கட்டப்பட்டு இருந்தன. பல்வேறு அரசியல் தலைவர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், சமூக அமைப்புக்கள், மீனவர் சங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள், இடைத்தரகர்கள் போன்ற பல்வேறு தரப்பினர் பேரணியில் கலந்துகொண்டனர். 2 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த ஊர்வலம் சென்றது. ஆனால், ஊர்வலம் தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னரே இந்த ஊர்வலம் முடியவேண்டிய இடம்வரை பரவலாக ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களால் நிறைந்து இருந்தது.

ஸ்பெயின் பத்திரிகையான லா-வான்கார்டீயா இந்தப் பேரணிபற்றி விளக்கம் தரும்போது, இந்தப் பேரணி செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்குமேல் ஆயிற்று என்றும், பேரணி முடியும் நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து களைந்து சென்றுவிட்டனர் என்றும், பேரணியின் முன் பகுதியில் வந்தவர்கள் முடிவடையும் இடத்துக்கு வந்த நேரத்தில், பின் பகுதியில் வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையில் சிக்கிக்கொண்டதால் அவர்களால் மேலும் நகர முடியாமல் போய்விட்டது என்றும் கூறியது. அத்துடன் இட நெருக்கடி காரணமாக உண்மையிலேயே நேரடியாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் அவர்களது ஆதரவாளர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டதாகவும், அரசியல் தலைவர்களும், தொழிற்சங்கத் தலைவர்களும், முன்னணியில் இடம்பெற்றனர் என்றும் இந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்ட முடிவில், இரண்டு அறிக்கைகள் வாசிக்கப்பட்டன. ஒரு அறிக்கை அரசாங்கம் ''தாமதமாகவும் தவறாகவும்'' நடவடிக்கை எடுத்ததாக கண்டித்தது. கடற்கரையையும், கடலையும், தூய்மைப்படுத்த முறையான திட்டம் வகுத்து அதை செயல்படுத்தவதற்கு குறிப்பிட்ட நாட்களையும் நிதி ஆதாரங்களையும் ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த அறிக்கை கேட்டுக்கொண்டது. பொதுப்பணி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ, அல்வாரீஸ் காஸ்கோஸ் மற்றும் காலீசியா தன்னாட்சி அரசின் தலைவர் மேனுவல் பிராகா (80 வயதான இவர் பாசிசவாதியான பிராங்கோ ஆட்சியில் அமைச்சராகயிருந்தவர்) ஆகிய இருவரும் ராஜினாமா செய்யவேண்டும் என்றும், மூழ்கிவிட்ட கப்பல் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. காலீசியா எழுத்தாளர் மானுவேல் ரிவாஸ் இந்த அறிக்கையை படித்தார். ''இது ஒரு போர். இந்தப் போரை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு ''நம் நாட்டை முடக்கிக் கொண்டிருக்கும் சர்வாதிகாரம், வேண்டியவர்களுக்கு சலுகை செய்யும் போக்கு, அரசியல் தரகர்கள் ஆகியோரை மக்கள் தள்ளிவிட விரும்புகிறார்கள்'' என்றும் மானுவேல் ரிவாஸ் குறிப்பிட்டார்.

இரண்டாவது அறிக்கையை நடிகர்களான ஜூவான் டியாகோ போட்டோ, மற்றும் லூயிடோசா ஆகியோர் படித்தனர். துணை ஜனாதிபதி மாரியானோ ரஜாய், சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் ஜாமே மாத்தாஸ் மற்றும் ஐரோப்பிய யூனியன் கமிஷனர் லயோலா டி-பலோசியோ ஆகியோர் ராஜிநாமா செய்ய வேண்டுமென இரண்டாவது தீர்மானம் வலியுறுத்தியது. எண்ணெய்க் கப்பல் மூழ்கியதற்கு பின்னணியாக உள்ள உண்மையை கண்டறிவதற்கான அமைப்புக்களை உருவாக்குமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்குமாறும், தவறு செய்த கம்பெனிகள் மற்றும் நிறுவனங்களுக்கு தண்டத் தீர்வை விதிக்குமாறும் இரண்டாவது பிரகடனம் கேட்டுக்கொண்டது.

இப்படி இலட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் அணிவகுத்து வந்ததால் ஸ்பெயினின் ''அரசியல் வர்க்கம்'' சாமானிய மனிதர்களுக்கு நடுவில் அம்பலத்துக்கு வந்துவிட்டதாக பல பத்திரிகைகள் விமர்சனம் செய்திருக்கின்றன. அத்துடன் பாரம்பரிய கட்சிகள் மீது மக்களுக்கு அவநம்பிக்கையும் வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் மக்கள் அரசியலில் பங்கு பெறவும், கோரிக்கை விடுக்கவும் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருவதாகவும் இந்த பத்திரிகைகள் விமர்சனம் செய்திருக்கின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved