World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Israel: Sharon government builds fortified wall around West Bank

இஸ்ரேல்: ஷரோன் அரசாங்கம் மேற்குக்கரையைச் சுற்றி அரணை எழுப்புகிறது

By Robert Stevens
4 February 2003

Back to screen version

மேற்குக்கரையை (West Bank) அடைத்து விடுவதற்காக இஸ்ரேல் தனது இராணுவ அரணைக் கட்டியெழுப்பும் பணியை மிகவும் துரிதமாக முடுக்கிவிட்டுள்ளது.

அரண் எழுப்பும் பணிகள் முதன்முதலாக ஜுலை 2002 ல் தொடங்கியது. சிமென்ட் கலவை மற்றும் இரும்பினாலான இந்தப் பிரம்மாண்டமான அரண் உலகிலேயே மிக நீளமானதும், வரலாற்றிலேயே மனிதனால் ஆக்கப்பட்ட மிகக் கனமானதாகவும், பேர்லின் சுவரைவிட நான்கு மடங்கு நீளமுடையதாகவும் இருக்கும்.

கட்டுமானத்தின் இறுதி வேலையானது மேற்குக்கரை முழுவதையும் சுற்றி கச்சிதமாக அமைவதால் பாலஸ்தீன மக்கள் சிறைவாசத்திற்கு உட்படுகிறார்கள். ஆனால் ஏரியல் ஷரோனின் அரசாங்கம் இந்தக் கட்டுமானப்பணியை ''பாதுகாப்பு'' காரணங்களுக்காகவும், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் தற்கொலைப் படையினரை விலக்குவதற்காகவும் என்கிறது.

உண்மையில் இந்த அரண் எழுப்பும் கொள்கையானது பாலஸ்தீன மக்கள் தற்போது வாழும் பகுதிகளை தூய்மைப்படுத்தி அந்த நிலங்களை இஸ்ரேல் அபகரித்துக் கொள்ளும் நடவடிக்கையாக இருக்கின்றது. இப்பகுதியில் வாழும் பாலஸ்தீன மக்கள் இதனை ''இனவெறிச் சுவர்'' என்று அழைப்பதில் ஆச்சரியமில்லை.

இந்தக் கட்டுமானப்பணிக்கு 2 பில்லியன் டொலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை கட்டிமுடிக்கப்பட்டுள்ள சுவரின் வரைபடங்களை ஷரோன் அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும் அதைப்பற்றிய செய்திகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது.

இந்தப் பாதுகாப்பு அரண் கட்டி முடிக்கப்பட்டால் எட்டு மீட்டர் உயரமும் 220 மைல் நீளமும் உள்ளதாக இருக்கும். இதன் அடிப்பாகம் பாரிய சிமென்ட் கற்பாறைகளைக் கொண்டதாகவும், கண்காணிப்புக் கோபுரங்கள் ஒவ்வொரு 300 மீட்டர் இடைவெளியில் இருக்கக்கூடிய விதத்திலும் அமையவிருக்கிறது.

பலப்படுத்தப்பட்டுவரும் இந்த அரணின் அகலம் கிட்டத்தட்ட 100 மீட்டர் கொண்டதாக இருக்கும். அரணின் இருபக்கங்களிலும் பீரங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் இதர யுத்த வாகனங்கள் செல்வதற்காக இராணுவ வீதிகள் அமைக்கப்படும். இந்த வீதிகளுக்கு அப்பால் ஆறு மீட்டர் அகலமும் நான்கு மீட்டர் ஆழமும் கொண்ட அகழி தோண்டப்படும்.

இந்த அரணைப் பாதுகாக்க முட்கம்பிகள், கேமராக்கள், நகர்வை கண்காணித்து கண்டுபிடிக்கும் கருவிகள், மற்றும் மின்சார வேலியும் அமைக்கப்பட உள்ளது. அதற்கு அப்பால் 35 முதல் 50 மீட்டர் வரையிலான அகலத்திற்கு நடமாட்டம் தவிர்க்கப்பட்ட பகுதிகள் அமைகின்றன. இந்த அரணைத் தாண்டி செல்வோர்களின் கால் தடங்களை அறிந்து கண்டுபிடிப்பதற்கு ஏதுவான வகையில் மின்னணு நுட்ப பொருட்களால் இந்த இடத்தின் சில பகுதிகள் வேயப்பட உள்ளது.

இந்த அரண் கட்டப்படுவதற்காக மேற்குக்கரையின் 10 வீத நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுவிடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் இந்த நிலங்களை மட்டும் அல்லாது மற்ற எல்லாவிதமான வளங்களையும் கொண்டுள்ள, 1967 ல் பச்சைக்கோட்டிற்கு (green line) உட்பட்டுள்ள மேற்குப்பகுதி மலையின் நீர்நிலைகளையும் சேர்த்து அபகரித்துக் கொள்கின்றது. தற்சமயம் இந்த நீர் நிலைகள் மேற்குக்கரையில் வாழும் 50 வீதத்திற்கும் மேலான பாலஸ்தீனியர்களின் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்கிறது.

ஜமால் ஜுமா (Jamal Juma) என்ற பாலஸ்தீன சுற்றுப்புறச் சூழல் வலைத்தளம் இதுபற்றிக் கூறுகையில் ''இந்த அரண் கட்டிமுடிக்கப்பட்டால் பாலஸ்தீனியர்களின் விவசாயமும், பொருளாதார செயல்பாடும் முடமாகிவிடும். மேற்குக்கரை துண்டிக்கப்பட்ட, தொடர்ச்சியாக யாரையும் சார்ந்து இருக்கவேண்டிய பந்துஸ்தான்களாக (Bantustans) அல்லது அவர்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாற்றிவிடும். ஆதலால் பாலஸ்தீனர்கள் இவ்விடத்தைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இதைத்தான் இஸ்ரேல் இடமாற்றம் அல்லது இனத்தூய்மைப்படுத்தல் என்று முழங்கி வருகிறது''.

இந்தக் கட்டுமானப் பணிகள் தொடங்கியது முதல் வடக்கே 70 மைல் நீளமான பகுதியிலிருக்கும் 15 கிராமங்கள் இந்த அரணுக்கும் பச்சைக்கோட்டிற்கும் (green line) இடையே சிக்கிக்கொண்டுள்ளது. அத்துடன் மேலும் 15 கிராமங்கள் இதற்கு முன் நம்பியிருந்த விளை நிலங்களிலிருந்து பிரிக்கப்பட்டுவிட்டதால் இப்போது இக்கிராமங்கள் இந்த அரணுக்கு அடுத்த பகுதியில் உள்ளது.

ஜெசிக்கா மெக்கலின் என்ற பத்திரிகையாளர் ''இந்த சுவர் நேர்கோட்டில் இருக்காது. அது வளைந்தும், திரிந்தும், பாதையைவிட்டு விலகியும், சில சமயங்கள் 10 மைல்கள் மேற்குப் பகுதியின் உள்ளே சென்று அங்குள்ள குடியேற்றங்களையும் நீண்ட பாதைகளையும் தன்னகத்தே சேர்த்துக்கொள்ளும். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குள் பிரமாண்டமான பெரிய அரண் கட்டப்படும். இதில் தீவிரவாத, மதவாத யூதர்கள் குடியேறிய புனித நகரங்களான நேபுலஸ் (Nablus) மற்றும் ஹெப்ரான் (Hebron) அடங்கும். இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்குமிடையே அறிவிக்கப்பட்ட, 1949 ம் ஆண்டு போர்நிறுத்தத்தில் ஏற்படுத்தப்பட்ட பச்சைக்கோட்டையும் இஸ்ரேல் பின்பற்றாது. இந்தக் கோடுதான் இப்போது இஸ்ரேலையும் மேற்குக்கரையையும் பிரிக்கும் கோடாகும். பாலஸ்தீனியர்களின் கண்ணோட்டத்தில் இஸ்ரேலையும் சுதந்திர பாலஸ்தீனத்தையும் அடிப்படையில் பிரிக்கும் எல்லை இது என்கிறார்கள்'' என்று கூறினார்.

இதுபற்றி அவர் ''ஒரு பகுதியில் கிட்டத்தட்ட 90 சதுர கிலோமீட்டர் நிலங்கள் அபகரித்து வளைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பல வீடுகள் இடிக்கப்பட்டும், விளைநிலங்கள் அழிக்கப்பட்டும், அரண் கட்டுவதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது'' என மேலும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை அமைப்புகளும் மற்றும் பாலஸ்தீன இயக்கங்களும் இந்த அரணை சுட்டிக்காட்டி இது இஸ்ரேலுக்கும், மேற்குக்கரைக்கும் உள்ள எல்லைக்கோடு மட்டுமல்லாது இது மேற்குக்கரைக்கும் ஜோர்தானுக்கும் இடையே வரும் எல்லைக்கோடாகவும் இருக்கின்றது என்கின்றன.

ஜெருசலத்தைச் சுற்றியுள்ள அரண் சுமார் 54 கிலோ மீட்டர்கள் நீளம் உடையதாகவும், 1967 ல் இஸ்ரேல் அபகரித்த பகுதிகளையும் அது சுற்றிவளைக்கின்றது. இந்த அபகரித்த பகுதிகள் பெரும்பாலும் ஜெருசலத்தின் கிழக்கேயும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளது. இஸ்ரேல் தனது குடியிருப்புக்களை உருவாக்குவதற்கு இங்கிருக்கும் பாலஸ்தீனர்களை வெளியேற்ற வேண்டியுள்ளதால் இந்தப் பகுதியிலுள்ள அரண் பாதையைவிட்டு விலகியும் வளைந்தும் காணப்படுகின்றது. இவற்றில் சில இடங்கள் சில மீட்டர் தூரம் தான் துண்டாடப்பட்டுள்ளது.

பாதி கட்டிமுடிக்கப்பட்ட ஒரு பகுதி சுவரே இப்பிராந்தியத்தில் பெரிய அளவில் பதட்டத்தை விளைவித்து வருகின்றது. ஏனென்றால் இது எல்லையாகவும், இராணுவ சோதனைச் சாவடியாகவும், தன்னகத்தே கொண்ட ஒட்டுமொத்த கண்காணிப்பு செயல்பாட்டையும் கொண்டுள்ளது.

42.000 ம் ஜனத்தொகையைக் கொண்ட கல்கிலியா (Qalqiliya) நகரத்தில் இந்தப் பதட்டங்கள் கண்கூடாகத் தெரிகிறது. சுமார் 45.000 ம் சுற்றுப்புற கிராம மக்கள் மருத்துவ சேவைகளுக்கும், பாடசாலைகளுக்கும், கடைகளுக்கும் பயன்படுத்திவரும் அளவுக்கு இந்த நகரம் முக்கிய பங்காற்றி வருகிறது.

கல்கிலியா மூன்று பக்கங்களாலும் அரணால் சூழப்பட்டிருக்கிறது. இந்தச் சுவர் அருகே வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள்ளும், அறைகளுக்குள்ளும் உற்று நோக்கி கண்கானிக்கும் காமிராக்கள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றது. இந்த ஊரைவிட்டு செல்லவோ, கால்நடையாய் உள்ளே வரவோ ஒரு மீட்டர் அகலமுள்ள இராணுவ சோதனைச்சாவடி வழியே தான் சென்றுவர வேண்டும். கார்கள் ஐந்து மீட்டர் அகலமுள்ள பாதையில் சென்று வரவேண்டும். யேயோஸ் (Jayyous) என்ற அருகாமையிலுள்ள கிராம மக்கள் பலரும் கல்கிலியாக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. மற்றவர்கள் கடைசிவரை பலமணி நேரமாக அந்த சோதனைச்சாவடியில் இராணுவத்தினாரல் நிறுத்தி வைக்கப்படுகின்றனர்.

பாலஸ்தீன அதிகாரத்தின் தலைவர் யாசீர் அரபாத் இந்த அரண் கட்டப்படுவதை கண்டித்துள்ளார். ''இப்போது இஸ்ரேலியர்கள் தங்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொள்கிறார்கள், அவர்களுடைய ஒரே குறிக்கோள் நம் கழுத்தை நெரிப்பதுதான். நம்மை அழித்து வருவதால் அரண் கட்டுவதைத் தொடங்க அவர்களுக்கு ஏதுவாக உள்ளது. இந்த அரண் 350 கிலோ மீட்டருக்கும் அதிகமாகவே இருக்கும். 1967 ஆம் ஆண்டு நிர்ணயித்து நிறுவப்பட்ட 'பச்சைக் கோட்டின்' நோக்கத்தை இந்த அரண் மிக அதிகமாய் ஏமாற்றுகிறது'' என்று இந்த மாத தொடக்கத்தில் அரபாத் கூறியுள்ளார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved