World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா

Russia and the war against Iraq

ரஷ்யாவும் ஈராக்கிற்கு எதிரான போரும்
By Vladimir Volkov
20 February 2003

Back to screen version

அமெரிக்க புஷ் நிர்வாகம் பிரதான தூண்டுதலாளராக இருக்கும், டோனி பிளேயரின் பிரிட்டிஷ் நிர்வாகத்தினால் உதவி செய்யப்படும், ஈராக்கிற்கு எதிரான போர் அடுத்த சில வாரங்களில் ஏன் சில நாட்களிலேயே கூட தொடங்கப்படலாம். ஒரு பலவீனமான கிட்டத்தட்ட பாதுகாப்பு இல்லாத ஒரு நாட்டிற்கு எதிரான அப்பட்டமான நவீன காலனி ஆதிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கை இது. இதன் விளைவு உலகம் முழுவதிலும் அரசியல் மற்றும் சமுதாய உறவுகளில் ஆழமான மாற்றங்களை உருவாக்கும் சங்கிலித் தொடர்போன்ற நிகழ்ச்சிகளைத் தொடக்கிவைக்கும் என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது.

ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்பு மிக கடுமையான அளவிற்கு இராணுவமயத்தை தூண்டிவிடும் தன்மை கொண்டது. இதன் அத்தியாவசிய உள்ளடக்கம், சர்வதேச அளவில் செல்வாக்கு மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களை பூகோளரீதியாய் மறுபகுப்பு செய்ய வேண்டியதாக இருக்கும். ஏகாதிபத்தியத்தின் வன்முறை வெடித்துச் சிதறுவதால் உலகமே கொந்தளிப்பில் ஆழ்த்தப்படும் என்ற மிரட்டல் ஏற்பட்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற பேரழிவுகளை இந்தப்பேரழிவு மிஞ்சக்கூடும்.

ரஷ்யா தனது எல்லைகள் அமைந்துள்ள நிலையையும் அதன் மிகப்பெரும் அளவிலான இயற்கை வளங்களையும் கருத்தில் கொண்டு இந்த நிகழ்வுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விலகி நிற்க முடியாது. தற்போதைய ரஷ்ய ஆளும் தட்டினரிடையே அவர்களது அணுகுமுறைகளையும், உணர்வுகளையும் பாதிக்கின்ற வகையில் உடனடியாக இந்த சம்பவங்கள் அழுத்தத்தை கொடுக்கும். அதைவிட முக்கியமானது ரஷ்ய சமுதாயத்தின் பரவலான பரந்த தட்டினர் மத்தியில், பல மிக முக்கியமான அரசியல் மற்றும் வரலாற்றுப் பிரச்சனைகளில் மறுசிந்தனையை உருவாக்குகின்ற அளவிற்கு தூண்டுகோலாக இந்த நிகழ்ச்சிகள் அமையும்.

இந்த மாற்றங்களின் தன்மையையும் ஆழத்தையும், மிகத்துல்லியமாக மதிப்பீடு செய்வதற்கு மீண்டும் ஒரு முறை நடைபெறவிருக்கும் போரின் பொதுத்தன்மையை, அதன் சமுதாய வேர்களை அவை நவீன உலக வரலாற்றில் எந்த இடத்தில் உள்ளன என்பதை ஆராய்வது, அவசியமாகிவிட்டது.

உலகை மறு பங்கீடு செய்வதற்கான போர்

அமெரிக்க வெகுஜன ஊடகங்கள் ஈராக்கிற்கு எதிரான போர் தற்காப்பிற்காக நடத்தப்படுகின்ற தடுப்பு நடவடிக்கை என்பதாக சித்தரித்துக் காட்டுகின்றன. உலக நாகரீகத்தின் அடித்தளங்களையே மிரட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு எதிரிக்கு எதிராக இந்தப் போர் நடப்பதாகவும், ஈராக்கில் சதாம் ஹூசேனின் சர்வாதிகாரத்தை நீக்கிவிடும் ஓர் முயற்சி என்றும் அங்கு ஓர் ஜனநாயக ஆட்சியை நிறுவப்போவதாகவும், அமெரிக்க ஊடகங்கள் சித்தரித்துக் காட்டுகின்றன. அப்படியிருந்தும் உலகம் முழுவதிலும் இருக்கின்ற மக்களில் என்றுமிராத அளவு அதிகரித்த அளவில் பலர் இந்தப்போர் மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்களை கைப்பற்றும் பிரதான நோக்கத்தோடு நடத்தப்படுவதாக புரிந்து கொண்டிருக்கின்றனர்.

என்றாலும் நடைபெறவிருக்கின்ற ஆக்கிரமிப்பில் எண்ணெய் என்பது ஒரே ஒரு அம்சம் தான். அமெரிக்காவின் ஆளும் தட்டினர் மூலோபாய கணிப்புக்கள் எண்ணெய்கும் அப்பால் சென்று, உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான பாதையில் ஈராக்கை முறியடித்து அடிப்பணியச் செய்வது அதை ஒரு படிக்கட்டாக இருக்கும் என கணக்கிடுகின்றனர். இதை வேறுவகையில் சொல்வது என்றால், அமெரிக்க மூலதனத்தின் நலன்களின் பேரில் புஷ் அரசாங்கம் உலகின் பொருளாதார மற்றும் அரசியல் மறு ஒழுங்கமைப்பிற்கு செயல்பட்டு வருகிறது.

ஈராக் போன்ற பலவீனமான மற்றும் ஒப்பீட்டளவில் பின்தங்கிய நிலையிலுள்ள நாடுகளை மட்டுமல்ல, ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், மிக முக்கியமான போட்டி போடும் நாடுகளான (ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளையும்) அமெரிக்க அரசியல் தட்டினர் மற்றும் கார்ப்பொரேட் கம்பெனிகளின் கட்டளைக்கு அடிபணிய வைக்க வேண்டுமென்ற அடிப்படையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. ரஷ்யா, உலகிலேயே இரண்டாவதாக மிகப்பெரும் அளவிற்கு அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது, ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன மற்றும் அதனுடைய பொருளாதாரம் மிகக் கடுமையான நெருக்கடியில் உள்ளது. எனவே அமெரிக்காவின் இந்த சர்வதேச ஏகாதிபத்திய ''ஆளும் கட்டளைக்கு'' உட்படுத்தப்பட வேண்டிய வாய்ப்புள்ள நாடுகளின் சிறிய பட்டியலில் ரஷ்யாவும் இடம் பெற்றிருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்படி வெடித்து வெளிகிளம்புவது, யாரோ ஒருவருடைய மிகப்பெரிய மனிதனாக வேண்டும் என்ற பைத்தியக்காரத்தனத்தில் உருவானது அல்ல, அல்லது வாஷிங்டனில் பொறுப்பில் இருப்பவர்களது தரம் தாழ்ந்த கற்பனைகளின் விளைவு அல்ல; இதற்கான காரணங்கள் உலக முதலாளித்துவ அமைப்பில் காணப்படுகின்ற அடிப்படை முரண்பாடுகளில் ஆழமாக வேரூன்றிக் கிடக்கின்றன. முதலாளித்துவம் தன்னுடைய முரண்பாடுகளை சமாதான மற்றும் தகராறு இல்லாத வழிகளில் தீர்த்துக்கொள்வதற்கு இயலாத நிலையில் தத்தளிக்கிறது. நடப்பு உலக உற்பத்தி சக்திகளை இனி தேசிய அரசுகள் அமைப்புமுறை என்ற கட்டமைப்புக்குள்ளும் தனிச்சொத்துடைமையின் பொருளாதார உறவுக்குள்ளேயும் அடக்கிவிட முடியாது, தனியார் சொத்துடைமை என்பது கார்ல் மார்க்சின் வார்த்தைகளில் சொல்வதென்றால் முதலாளித்துவ சமுதாயத்தின் ''உடற்கூறு" தான்.

இந்த முரண்பாடுகள் மிகக் கூர்மையாக ஆன வரலாறு அண்மையில் தோன்றியது அல்ல. இவை குறைந்தபட்சம் 100-ஆண்டுகளுக்கு முன்னர் வெளிப்பட்டன. முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தியில் சமூகத்தன்மைக்கும் சுவீகரிப்பில் தனியார் வடிவத்திற்கும் இடையே ஏற்படும் மோதல்கள் இருபதாம் நூற்றாண்டில் இரண்டு முறை பயங்கரமான உலகப்போர்களாக வெடித்தன ஒன்று 1914-ல் தொடங்கியது. இரண்டாவது 1939-ல் நடந்தது.

இந்த இரண்டு படுகொலைகளும் உலகின் குற்றம் நிறைந்த பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளில் மறுஒழுங்கமைத்தலில் முன்னறிவிப்புக்களாக இருந்தன. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய அமெரிக்க அரசுகள் முன்னணி பங்கு வகித்தது. முதலாளித்துவத்திற்குள் ஒரு ஸ்திரத்தன்மை தருகின்ற சக்தியாக அமெரிக்கா செயல்பட வேண்டும் என்பது வரலாற்றின் கட்டளையாக ஆகிவிட்டது. அமெரிக்கா தனது சொந்த சூறையாடும் நோக்கங்களை, நலன்களை கடைப்பிடித்த போதிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் தோல்வியைத் தழுவிய தனது முன்னாள் எதிரி நாடுகளில் உலக அதிகார சமநிலைக்குள்ளே அந்த நாடுகளின் சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் அந்தஸ்தை மீட்டுத் தருவதற்கு உதவும் நிலையில் அமெரிக்கா இருந்தது. [1]

இன்றைய தினம் அமெரிக்கா மற்றொரு அத்தகைய மறுஒழுங்கமைப்பை நோக்கமாக கொண்டிருக்கிறது. ஆனால் அதன் பணி மாறிவிட்டது. இன்றைய தினம் அமெரிக்கா உலக முதலாளித்துவத்தின் ஒரு பொறுப்பு உறுதியாளரும் அல்ல; அல்லது இறுதியான ஆதாரமும் அல்ல. அதற்கு நேர் எதிரான நிலையில் சர்வதேச நெருக்கடிக்கு மையமாக விளங்குகிறது. பழைய சமநிலையை தீவிரமாக அழிந்து வருகிற ஒரு சக்தியாக விளங்குகிறது. அமெரிக்க ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்டலில் (Pax Americana) புதிய மறுஒழுங்கமைத்தல் என்பது சில ஏகாதிபத்திய போட்டியாளர்களுடன் "சமாதான சகவாழ்வு" நடத்துவதற்கு இடம் தராததை முன்நிலையாகக் கொள்கிறது. எல்லா நாடுகளுமே ஒன்றின் கட்டளைக்கு கீழ்படிந்து அதன் நலன்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற நிலையைக் கொள்கிறது. தெளிவாகவே இந்தக் குறிக்கோள் பயங்கரமான எதிர்ப்பை உருவாக்கும் மற்றும் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தும், இரத்தக்களரி மோதல்களை உருவாகும்.

அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான மோதல்

ஆகையால் அமெரிக்காவின் இராணுவ திட்டங்களுக்கு ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் தீவிரமான எதிர்ப்பு தெரிவிப்பதில் வியப்பிற்கு இடமில்லை. இந்த எதிர்ப்பின் காரணமாக இரண்டாவது உலகப் போருக்கு பிந்திய பல அமைப்புக்கள் சீர்குலைவதற்கான, சிதைவதற்கான மிரட்டல்கள் தோன்றியுள்ளன. அவற்றில் ஒன்று தான் நேட்டோ.

ஐரோப்பிய அரசாங்கங்கள் இரண்டு வகையான கவலைகளால் உந்தப்படுகின்றன. ஒரு பக்கம் ஈராக்கை அடிபணியச் செய்வதில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டால் தங்களது சொந்த பூகோள அரசியல் அந்தஸ்து மிக வேகமாக பலவீனப்பட்டுவிடும் என்று அஞ்சுகின்றன. மேலும் அமெரிக்காவினால் பாதிக்கப்படும் எதிரானவையாக தங்களை வைத்துவிடும், சிறப்பாக தங்களது எரிபொருள் சக்திகளின் ஆதாரங்கள் வகையில். மற்றொரு பக்கம் உள் நாடுகளில் வளர்ந்து வரும் சமுதாயத்தின் அடித்தளத்திலிருந்து எழுந்துவரும் கண்டனங்கள், எதிர்ப்புகள், கண்டு பயப்படுகின்றன. தங்களது சொந்த நாடுகளைச் சேர்ந்த பரந்த உழைக்கும் மக்கள் கண்டன இயக்கங்களை நடத்தி வருகின்றனர். இந்த கண்டனம் போருக்கு எதிர்ப்பாக தொடங்கியுள்ளது. அது இந்த அரசுகளின் பொருளாதார கொள்கைகளை ஒதுக்கித்தள்ளுகின்ற மக்களது விழிப்புணர்வோடு இணைக்கப்படுவது தவிர்க்க முடியாதது. இந்த ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார அரசியல் நடவடிக்கைகள் வாஷிங்டனில் உள்ள நிர்வாகத்தின் நடவடிக்கைகளிலிருந்து எந்த வகையிலும் பிரதானமாக சிறிதே வேறுபடுகின்றன.

ஐரோப்பிய நாடுகள் தங்களது முதலாளித்துவ கார்ப்பரேஷன்கள் போட்டி போடும் தன்மையை, ஆற்றலை ஊக்குவிப்பதற்காக, பல தலைமுறைகளாக ஐரோப்பிய உழைக்கும் வர்க்கம் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகள் மற்றும் சமுதாய சீர்த்திருத்தங்களில் கைவைக்காமல் மிச்சமாக விட்டிருக்கும் உரிமைகளையும் ரத்து செய்கின்ற முயற்சியில் இறங்கியிருக்கின்றன.

என்றாலும் ஐரோப்பிய ஆளும் தட்டுக்கள் அமெரிக்காவின் போர் ஆயத்தங்களுக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தாலும், தற்போது இருதலைக்கொள்ளி எறும்பு போல் சிக்கித்தவித்து நிற்கின்றன. அந்த நாடுகள் அமைதியாக அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு கட்டுப்பட முடியாது அப்படி செய்தால் அது அமெரிக்காவின் காபந்து நிலைக்கு ஐரோப்பிய நாடுகளை கொண்டுவந்து விடும். அதே நேரத்தில் எந்த ஒரு ஐரோப்பிய நாடும் உண்மையிலேயே போருக்கு எதிர்ப்பு தெரிவித்து துணிந்துநிற்க முடியாது. அப்படி நின்றால் அந்த ஐரோப்பிய நாடுகளின் சொந்த சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்க அடித்தளங்களே கேள்விக்குறியாகிவிடும்.

எனவேதான் ஐரோப்பிய கட்சிகள் மற்றும் அரசாங்கங்கள் ஈராக் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மிகக்குறைந்த, நீக்கு போக்குள்ள மற்றும் ஆழ்ந்த ஏய்க்கும் குணம் கொண்டதாக இருக்க மட்டுமே முடியும். இந்த நேரத்தில் போர் தேவையில்லை என்று ஐரோப்பிய நாடுகள் சொல்லுகின்றனவே தவிர, அமெரிக்காவின் போர் நோக்கங்களை நியாயமானவை, சட்டபூர்வமானவை என்று ஏற்றுக்கொள்கின்றன. போரின் நோக்கங்கள் குறித்து எவரும் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ஈராக் வசம் மக்களை கொன்றுகுவிக்கும் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற கட்டுக்கதையை நம்புகின்றன. எனவே வாஷிங்டனின் போர்த் திட்டங்கள் சட்டபூர்வமானவை என்று ஏற்றுக்கொள்ளுகின்ற நிலைக்கு வந்துவிட்டன.

இந்தச் சூழ்நிலையில் விளாதிமிர் புட்டினின் ரஷ்ய அரசாங்கம் எடுத்துள்ள நிலை எப்படித் தோன்றுகிறது? ஐரோப்பிய நாடுகளைவிட மழுப்பிப்பேசும் போக்கில் இந்தக் கொள்கையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நேரடி இராணுவத் தலையீடு ஈராக் விவகாரத்தில் அவசியம் இல்லை என்று புட்டின் அரசாங்கம் கூறுகிறதே தவிர, அமெரிக்க நிர்வாகத்தால் கூறப்படும் மிக வெறுக்கத்தக்க கோரிக்கைகள் மற்றும் விவாதங்களை மற்றும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதற்கு எடுத்துவைக்கும் சாக்குபோக்குகளை ஊடகங்கள் எந்த வகையிலும் கேள்விக்குள்ளாக்கவில்லை.

ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஈராக் பிரச்சனை தொடர்பாக எடுத்துள்ள நிலைக்கு ரஷ்ய அரசாங்கம் ஆதரவு தெரிவித்தாலும், அட்லாண்டிக்கிற்கு அப்பால் உள்ள தனது பிரதான பங்குதாரரின் நம்பிக்கையை அப்படியே நிலைநாட்டுவதற்கு மாஸ்கோ தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது. 2001-செப்டம்பர் 11-க்கு பின்னர் அறிவிக்கப்பட்ட ரஷ்ய அரசாங்கத்தின் ''மூலோபாய தேர்வு'' கொள்கையை கேள்விக்குள்ளாக்க புட்டின் விரும்பவில்லை. அந்தக் கொள்கை மூலம் அமெரிக்காவுடன் நீண்ட கால உடன்பாட்டிற்கு அப்போது வழிவகை செய்யப்பட்டது. புட்டின் இரு தரப்புக்களோடும் பேரம் நடத்துகின்ற சாதாரண வர்த்தகரைப்போல் செயல்படுகிறார். எந்த தரப்பு தனக்கு அதிகமாக லாபம் தருமோ அந்தத் தரப்பை ஆதரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இப்படிப்பட்ட, நாயைப் போன்று வாலை ஆட்டுகின்ற போக்கை ரஷ்ய ஊடகங்கள் ஏதோ ஒரு சிறப்பு ஞானம் போல் சித்தரித்துக் காட்டுகின்றன. உண்மையில் இந்த பேர போக்கிற்கு பின்னால் ஒன்றும் இல்லை. ஒரு சாதாரண அடிவருடி ''நீங்கள் விரும்புவதை தாருங்கள்'' என்று சொல்வதைப் போன்றது தான் இந்த நடவடிக்கை.

ரஷ்யாவும் உலக ஏகாதிபத்தியமும்

தெளிவான சுதந்திர மூலோபாயக் குறிக்கோள் இல்லாமல் புட்டின் எந்தவிதமான கொள்கை அடிப்படையும் இல்லாமல் வெளிநாட்டுக் கொள்கைகளில் தனது முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். 1991-ம் ஆண்டு சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் நிறுவப்பட்ட ஆட்சியின் தோற்ற தன்மையிலிருந்து இந்த கொள்கைகள் உருவாகியுள்ளன. ரஷ்யாவில் புதிய ஆட்சி முன்னணி ஏகாதிபத்திய வல்லரசுகளின் நேரடி ஆதரவோடு தோன்றியது. இப்படி ஆதரவுதந்த ஏகாதிபத்திய வல்லரசுகள் சோவியத்யூனியன் நீடித்திருப்பது யூரோசியாவின் உட்பகுதிகளில் கிடைக்கும் கணிசமான இயற்கை, மனித, தொழில் நுட்பவளங்களை நேரடியாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு பெரிய தடைக்கல்லாக சோவியத் ஒன்றியம் விளங்குகிறது என்று கருதிவந்த நாடுகள் ஆகும்.

சோவியத் ஒன்றியமானது, உலக வரலாற்றின் அக்டோபர் புரட்சியிலிருந்து வளர்ந்தது. அந்தப் புரட்சி அதன் புறநிலை இயல்பில் சர்வதேச நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டது. ஜார் மன்னனின் எதேச்சாதிகார அரசின் சிதைபாடுகளிலிருந்து அக்டோபர் புரட்சியானது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை உருவாக்கிற்று, அதே நேரத்தில் மூலதனத்தின் உலக ஆதிக்கத்திற்கு சவாலையும் விடுத்தது.

**பொருளாதார பின் தங்கிய நிலையின் சுமையின் கீழான அதன் அடுத்தடுத்த தனிமைப்படுத்தல் மற்றும் சீரழிதல் இருப்பினும், சோவியத் ஆட்சியானது 1917- அக்டோபர் புரட்சியின் மிகப்பெரிய வெற்றியான அரசுடைமையாக்கப்பட்ட சொத்துறவுகளை இழந்துவிடவில்லை. அதன் அதிகாரத்தின் சர்வாதிகாரத் தன்மை இருப்பினும், சோவியத் பொருளாதாரத்தின் இடுக்குகளிலிருந்து வெளிப்பட்ட ஸ்ராலினிச அதிகாரத்துவம் தேசிய பிற்போக்கு பண்புருவமாக ஆனது மற்றும் ரஷ்ய பாட்டாளி வர்க்கம் போராடிப்பெற்ற சமுதாய வெற்றிகளின் அடிப்படையை தாக்குவதற்கு பலதலைமுறைகள் பயந்து கொண்டே செயல்பட்டது.

ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிசத்தை தொழிலாளர் அரசின் "உடலின் உட்கூற்று அழிவு" (gangrene) மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஒரு முகவாண்மை என்று மிகச் சரியாக வர்ணித்தார். அப்படியிருந்தும் உலக ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க பாசாங்குகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் சமூக அடித்தளங்களை பாதுகாக்கவும் நீண்டகாலத்திற்கு நிர்பந்திக்கப்பட்டிருந்த அளவு, அக்டோபர் புரட்சியின் தூண்டு விசை சக்தி மிக்கதாக இருந்தது, அவ்வாறு அது செய்தபோதிலும், ஸ்ராலினிச அதிகாரத்துவம் தனது சொந்த கிரிமினல் மற்றும் அழிவு முறைகளைக் கையாண்டது. புதிய திட்டவட்டமான வரலாற்று பூர்வமான சாதக நிலை தோன்றியதும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோசலிசத்தை அமைப்பது பற்றிய அனைத்து நடிப்புகளையும் உதறித்தள்ளிவிட்டு, உலக ஏகாதிபத்தியத்திற்கு நேரடி கருவியாகவும் இளைய பங்கு தாரராகவும் ஆவதற்கு தானே முன்வந்து கொண்டு, இறுதியாக, முற்றிலும் உலக ஏகாதிபத்தியத்தின் பக்கம் தன்னை சேர்த்துக்கொள்ள முடிவு செய்தது. [2]

சோவியத் ஒன்றியம் சிதைந்து 11-ஆண்டுகளுக்கு பின்னர் ஸ்ராலினிச அதிகாரத்துவம் மேற்கொண்ட ஆழமான அழிவு வேலைகள் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அவை பொருளாதார, சமுதாய மற்றும் கலாச்சார வாழ்வில் பிரம்மாண்டமான பின்னடைவு இயக்கத்திற்கு, சமாதான கால வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பின்னடைவிற்கு வழிவகுத்தன. கோர்பச்சேவ், எல்ட்சின், மற்றும் புட்டின் அரசாங்கங்கள் நாஜிகள் படையெடுத்தும் அவர்களால் செய்ய முடியாத காரியத்தை இவைகள் இப்போது செய்திருக்கின்றன. 1917- அக்டோபர் புரட்சி உருவாக்கிய சமுதாய உறவுகளை தூக்கியெறிந்து விட்டார்கள், முன்னாள் சோவியத் பொருளாதாரத்தை உலக முதலாளித்துவ சந்தையின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வைத்து விட்டார்கள்.

''சொத்துக்காக அதிகாரத்தை'' கைமாற்றி தந்துவிட்ட முன்னாள் அதிகாரத்துவம் தன்னை புதிய எஜமானர்களாக ஒரு சாதியாக மறு ஆக்கம் செய்து கொள்வதில் வெற்றி பெற்றிருக்கிறது. [3] ஆனால் அதன் சமூக உருமாற்றத்தின் வரலாற்று நிலைமைகள் சூழ்ச்சிகளுக்கு சிறிதே இடம் விடுபவையாக இருக்கின்றன: இந்தப் புதிய ஆளும் தட்டு உலக நிதி ஆதிக்க சிலராட்சியின் மற்றும் முன்னணி ஏகாதிபத்திய அரசுகளின், எந்த விதமான சக்தியும் இல்லாத செயற்கை கோளாக இருக்கிறது. ரஷ்யாவின் இந்த புதிய ஆதிக்க குழுவின் பொருளாதார நிலை மிக பலவீனமானது ஐரோப்பாவில் நிலைபெற்றுவிட்ட பெரும் அரசுகள் சந்திக்கின்றதை விட மிகவும் சிக்கல் நிறைந்த, ரஷ்யாவின் "இக்கட்டான நிலையை" ஏற்படுத்தும் வண்ணம் அதன் சொந்தப் பொருளாதாரமானது, உலகச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப சார்ந்தும் பலவீனமாகவும் இருக்கிறது.

ஒரு பக்கம் புதிய ரஷ்ய முதலாளித்துவ வர்க்கம் ''மாபெரும் ரஷ்யாவின்'' பாரம்பரிய வரலாற்று அடிப்படையில் வளர்ந்த புவிசார் அரசியல் செல்வாக்குகளை மரபுரிமையாய் தன்னிடம் வைத்திருக்கிறது. அதற்கு சொந்த பொருளாதார நலன்கள் உண்டு. அவை தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றன.

அதே நேரத்தில் உலகின் முன்னணி ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்காவின் அப்பட்டமான வலுச்சண்டைக்குப் போதலை எதிர்த்து நிற்பதற்கு ரஷ்ய -முதலாளித்துவத்திடம் சொத்துக்கள் எதுவும் இல்லை. ஜேர்மனி, மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு அமெரிக்காவிற்கு எதிரான போக்கை புதிய ரஷ்யாவின் ஆளும் தட்டு மேற்கொள்ள முடியாது.

ரஷ்யாவில் தற்போது பரவலாக வறுமை நிலவும் நிலைமையில், பழைய சோவியத் ஒன்றியத்தில் நன்றாக சாப்பிட்டு வாழ்ந்து வந்தோம் என்ற அண்மைக்கால நினைவுகளும், சற்று பலவீனமாகயிருந்தாலும், நீடித்து இருக்கின்ற அக்டோபர் புரட்சியின் வரலாற்று நினைவுகளும், இத்தகைய அமெரிக்க எதிர்ப்புவாதம் தவிர்க்க முடியாத அளவிற்கு முதலாளித்துவத்திற்கு எதிரான கண்ணோட்டங்களாக வளர்ந்துவிடுமானால், அது இன்றைய ஆட்சிக்கு ஆபத்தாக ஆகிவிடும். இதை தடுக்க ஒரே வழி ரஷ்ய தேசியவாதம் மற்றும் பேரினவாதம் ஆகும். ரஷ்யாவில் மேலை நாடுகள் தங்களது சொந்த நலன்களை உத்தரவாதம் செய்வதில் அது பயனுள்ளது என்று கருதும் மட்டத்திற்கு மட்டுமே நன்கு முயற்சிக்கப்பட்ட இந்த பிற்போக்கு சூதாட்டவித்தை கிரெம்ளினால் ஆதரிக்கப்படுகிறது.

புட்டின் அரசாங்கம் போர் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் எந்த பாசாங்கு செய்தாலும் அதில் கொள்கை அடிப்படையிலான எந்த விதமான அடையாளமும் இல்லை. ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் அரசாங்கங்களோடு இணைந்து, கிரெம்ளினானது ஈராக்கை தாக்கி அதை ஆக்கிரமித்துக்கொள்கிற வல்லரசு உரிமையை சர்ச்சைக்கு உள்ளாக்கவில்லை, உண்மையிலேயே புட்டின், ஜாரிச சர்வாதிகார பாணியில், தனது பலவீனமான பக்கத்து நாடுகளை தாக்கி பிடித்துக்கொள்கின்ற ரஷ்ய உரிமையைப் பாதுகாப்பதற்காக வேண்டி, பலம்படைத்தவரின் உரிமைகளை வலியுறுத்துவதில் சுயநலத்துடன் செயல்படுகிறார்.

செச்சென்யாவில், புட்டின் தனது சொந்த குற்றத்தனமான போரை நடத்தி வருகிறார். வடக்கு காக்கசஸ் பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாவது போர் இப்பொழுது 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது மற்றும் அந்த மண்டலத்து மக்களுக்கு மிக பயங்கரமான பாதிப்புக்களை உருவாக்கி வருகிறது. சாதாரணமாக கிரெம்ளினுக்கு அதிகாரத்தை மாற்றித்தருவது என்ற அடிப்படையில் தூண்டிவிடப்பட்ட அந்தப்போர் தற்போது ரஷ்யாவின் ஆளும் தட்டின் நவீன காலனி ஆதிக்க மற்றும் புவிசார் அரசியல் பாசாங்குகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளாக விரைவில் பரிணாமமடைந்துவிட்டது.

புஷ் நிர்வாகத்தின்போர் முயற்சியைப் போன்று ரஷ்யாவின் செர்சன்யா போர் ஆழமான நெருக்கடியின் ஓர் வெளிப்பாடு, இதிலிருந்து மீளுவதற்கு புட்டின் ஆட்சிக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு -அந்த ஒரு வழி ரஷ்யாவிற்கு வெளியில் வன்முறையை தூண்டிவிடுவது. உள் நாட்டிற்குள் குறுகிய கண்ணோட்ட இராணுவமய நஞ்சை பரப்புவது.

சமூக சமத்துவமின்மைக்கும் போருக்கும் எதிரான போராட்டம்

ரஷ்யாவில் 11 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ''சீர்திருத்தங்கள்'' ரஷ்ய மக்களுக்கு துன்பத்தையும் வறுமையையும்தான் கொண்டு வந்திருக்கிறதே தவிர வேறொன்றுமில்லை. ரஷ்யாவின் சீர்திருத்தங்கள் இன்னும் தொடங்கவே இல்லை என்று சொல்லி இந்த சமுதாய சீரழிவை நியாயப்படுத்துவது பொய்யாகும். இப்படிப்பட்ட பொய்யான வாதங்களை எடுத்துவைப்பவர்கள் முதலாளித்துவத்தின் அருவ மாதிரியை காரணம் காட்டுகின்றனர். அவை வரலாற்றில் எந்தக் காலத்திலும் நடைமுறையில் இல்லாதவை. முதலாளித்துவம் வளர, வளர ஜனநாயகம் வளரும் மற்றும் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் உயரும் என்பது தான் இந்த தத்துவம் [4]

உண்மையிலேயே சீர்திருத்தங்கள் அவசியமான அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன. அதாவது அவற்றின் குறிக்கோள் நிறைவேறிவிட்டது. சில ஆண்டுகளிலேயே ''எவருக்கும் சொந்தமில்லாத'' அரசாங்க சொத்தின் மிகக் குறிப்பிடத்தக்க அம்சங்கள் தனியார்கைகளுக்கு மாற்றல் நடந்திருக்கிறது. சொத்து மாற்றம் என்பது மிக குறிப்பிடத்தக்கது. கோடிக்கணக்கான மக்களின் அன்றாடவாழ்வில் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு, உயிர் வாழ்வதற்கே தத்தளிக்கும் மட்டத்திற்கு நிலை உருவாகி உள்ளது. நோய்களும் குற்றங்களும் வளர்ந்துகொண்டு வருகின்றன. பிராந்திய மற்றும் இன மோதல்கள் பெருகிக்கொண்டுள்ளன. தொழில் நுட்ப கட்டமைப்பு வசதிகள் மிக நெருக்கடியை உருவாக்குகிற அளவிற்கு சிதைந்துவிட்டன.

இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுவிட்டன அவை தீர்ந்து விட்டன. இவை அத்தனையும் தன்செயலாக நடந்து விட்டவை அல்ல. இவைகள் ''தவறுகள் அல்ல'' மாறாக நவீன வரலாற்றில் இது வரை காணாத சமூக பின்னடைவுகளின் ஒரே சாத்தியமான விளைவுதான் இது.

முதலாளித்துவத்தால் பின்தங்கிய மண்டலங்களை முன்னேற்றம் அடையச்செய்வதற்கு அல்லது பொருளாதார மற்றும் சமுதாய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு அதன் இயலாமையை சமகால முதலாளித்துவம் தினசரி உலக அளவில் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தனியார் லாபம் என்ற பெயரால் மிகப்பெரும்பாலான மனிதர்கள் பலியிடப்படுகிறார்கள். அவர்களது வாழ்கை நிலைமை அந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது ரஷ்யாவிலும், புதிய ஆளும் குழுவினர் எப்படியும் தங்களை பணக்காரர்கள் ஆக்கிக்கொள்ள முயன்று வருகிறார்கள், ''நாங்கள் எதையும் செய்வோம் எங்களுக்குப்பின்னால் எது நடந்தால் என்ன'' என்ற கொள்கை அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சிறிது காலம் ரஷ்ய முதலாளித்துவத்தின் குற்றத்தன்மையான குணங்களின் மீது குற்றம்சாட்ட "கம்யூனிசம் விட்டுச்சென்ற பாரம்பரியம்" என்பதன்பேரில் பழிபோடும் முயற்சிகள் நடந்தன அல்லது சில குறிப்பிட்ட ரஷ்ய நிலவரங்களை காரணமாக காட்டி வந்தார்கள். ஆனால் அண்மையில் அமெரிக்காவின் பெரிய கம்பெனிகளில் நடைபெற்ற மோசடிகள் அம்பலத்திற்கு வந்தன. கணக்குகளை தவறாக எழுதுவது, சொத்துக்களை சூறையாடுவது, வரி மோசடிகள், கணக்கு புத்தகங்களில் மோசடி செய்வது போன்ற நடவடிக்கைகள் முன்னணி முதலாளித்துவ நாட்டில் வர்த்தக மேல்தட்டினரின் நடத்தை பற்றிய குணங்கள் ஆகும். இது ரஷ்யாவில் நடைபெற்ற மோசடிகளை விட குறைவானது அல்ல.

இன்றைய ரஷ்யா உலகிலேயே மிக மோசமான சமுதாய ஏற்றத்தாழ்வுகளில் முன்னணியில் உள்ளது. முதலாளித்துவம் தொடர்பாக மார்க்சிச தத்துவ விமர்சன அடிப்படைகளில் விளக்குவதென்றால் தனது எல்லைக்குள் இரண்டு நாடுகளை காணுகின்ற ஒரு காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது: ''புதிய ரஷ்யர்களின் ரஷ்யா மற்றும் சராசரி தொழிலாளர்களின் ரஷ்யா''. இந்த இரண்டு ரஷ்யாக்களும், ஒன்றை ஒன்று எப்போதாவது தான் அபூர்வமாக சந்தித்துக்கொள்ள முடியும். நேற்றைய தினம் சோசலிசத்தின் விளம்பர பலகையாக விளங்கிய மாஸ்கோ, இன்றைய தினம் புதிய முதலாளித்துவத்தின் சின்னமாக, "சூதாட்ட பொருளாதாரமாக", நியூயோர்க்கும், லாஸ்வேகாசும் இணைந்த நகரமாக மாறிவிட்டது.

2002-ம் ஆண்டில் உலகில் வாழும் 188-மிகப் பெரிய பணக்காரர்கள் பற்றய ஆய்வு நடத்தி பட்டியல் ஒன்றை தயாரித்தார்கள், அதில் 9-ரஷ்ய குடிமக்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் 39-வயதான மிக்கைல் கொடரோவ்ஸ்க்கி, இவர் கோம்ஸோமால் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி, தற்போது யூகோஸ் என்கிற முன்னணி எண்ணெய் நிறுவன தலைவர். அவரது சொத்துக்களின் மதிப்பு 8-பில்லியன் டாலர்கள். உலகிலுள்ள 30-மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அவர் இடம் பெற்றுவிட்டார்.

இத்தகைய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அரசாங்க அதிகாரிகளும் இடம் பெற்றிருக்கிறார்கள். வி.செர்ணோ மிர்டீன் (1.35-பில்லியன் டாலர்கள்) மற்றும் ஓய்வுபெற்ற ஆர்.வியாகிரேவ் (1.8-பில்லியன் டாலர்கள்) இவர்கள் இருவரும் காஸ்புரோம் என்கிற ரஷ்யாவின் முன்னணி எரிவாயு கம்பெனியில் பணியாற்றியவர்கள், இவர்கள் பொதுநலப் பண்பு அடிப்படையில் செயல்படவில்லை என்று தெளிவாகத்தெரிகிறது.

அதே நேரத்தில் ரஷ்ய பொருளாதாரத்தின் பல பிரிவுகளில் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் கூட தரப்படவில்லை. ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான அளவு என்று குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர் துறை இதை மாதத்திற்கு 450-ரூபிள்கள் என்று கட்டளையிட்டது. இது ஒரு மனிதன் "குறைந்தபட்ச உயிர்வாழ்விற்கு" தேவையான ஊதியத்தில்" 22 சதவீதத்தைத்தான் கொண்டிருக்கிறது. இது "அந்த தொழிலாளி சரீர ரீதியாய் உயிர்வாழ்வதற்கே போதுமானதைக் கூட அளிக்காது."

எந்த நேரமும் உண்மையான உயிர்வாழ்வு மட்டத்திற்கு இந்த "குறைந்தபட்ச உயிர்வாழ்விற்கு" என்பதை உயர்த்துவதற்கு வரவு-செலவு திட்ட கட்டுப்படுத்தல்கள் தடுக்கின்றன. இதற்கிடையில் புட்டின் அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டுக் கடன்காரர்களுக்கு 15-பில்லியன் டாலர்களை வழங்கி வருகிறது. இந்தத் தொகை உலக வங்கிகள் மற்றும் மேற்கு நாடுகளின் கணக்குகளில் போய் சேர்ந்துவிடுகிறது. [5]

''ஜனநாயகம் வந்துவிட்டதல்லவா?" என்று பதில் சொல்வார்கள். ''சராசரி ரஷ்ய குடிமகன் உண்மையிலேயே துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஆனால் 1991-ல் ஆகஸ்ட் மாதம் நாம் சுதந்திரம் பெறவில்லையா?''

இதுபோன்ற விவாதங்களையும் பார்க்கின்றோம். இதைவிடப் பலமாக மிகப்பிடிவாதமான உள்ளங்கள் ரஷ்ய சீர்திருத்தங்கள் இன்னும் தொடங்கவில்லையே என்று உறுதியாக சொல்லிக்கொண்டிருக்கினறன. சர்வாதிகார ஸ்ராலினிச ஆட்சி வீழ்ச்சியடைந்த போது உரிமைகள் சுதந்திரம் பற்றியெல்லாம் மிக உருக்கமாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்புகள் எல்லாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற முதலாளித்துவ ஜனநாயக புரட்சிகள் பற்றிய வரலாற்று பாடப்புத்தகங்களிலிருந்து தற்காலிகமாக கடன் வாங்கப்பட்ட சொற்றொடர்கள் ஆகும்.

எவ்வாறாயினும், இவை மக்கள் போராடி பெற்ற வெற்றிகள் அல்ல, இவை அதிகாரத்துவத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதி மீது நிகழ்த்திய வெற்றியின் விளைவாகும், இதில் மக்களது நலன்கள் பலியிடப்பட்டு செய்யப்பட்டன. உண்மையிலேயே ''ஜனநாயகம்'', ''சுதந்திரம்'' மற்றும் ''மக்களது இறையாண்மை'' என்பது எல்லாம் வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட சொற்கள். ஸ்ராலின் மற்றும் பிரெஷ்நேவ் 1936-மற்றும் 1977-ல் கொண்டுவந்த அரசியல் நிர்ணயச் சட்டங்களில் இடம் பெற்றிருந்தது போன்ற வெறும் சொல் அலங்காரம் ஆகும்.

சோவியத் ஆட்சிக்குப் பிந்தைய புதிய ஆட்சி உண்மையிலேயே ஸ்ராலினிசத்தை அழித்துவிடக் கருதவில்லை. பழைய கட்சி தலைமையில் தலைமை வகித்தவர்களை கீழே தள்ளிவிட்டு, அதன் அணிகளில் பழைய துறை வழக்காறு சொற்கள் பெரும்பாலானவற்றை அப்படியே வைத்துக்கொண்டார்கள். மேலெழுந்தவாரியாக சிலர் மாற்றப்பட்டார்கள், பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டன. கேஜிபி (KGB) தலைமையிலான முழு ஸ்ராலினிச அடக்குமுறை எந்திரமும் அப்படியே பராமரிக்கப்பட்டு விரைவில் அதன் அந்தஸ்து மீண்டும் உயர்த்தப்பட்டது.

1993-ம் ஆண்டு இலையுதிர்காலத்தில், எல்ட்சின் மேற்கொண்ட ஆட்சி கவிழ்ப்புசதி, புதிய ஆட்சியின் ஜனநாயகம் என்கின்ற முகமூடியைக் கூட கிழித்து எறிந்துவிட்டது. சில சர்வாதிகாரிகளின் அபிலாஷைகளையும் மிஞ்சுகின்ற வகையில் புதிய ஜனாதிபதிக்கு தனி உரிமைகள் வழங்கப்பட்டன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் நடுநிலை நீதித்துறை, சுதந்திரமான பத்திரிகை என்பது எல்லாம் ஒரு அலங்கார திரைச்சீலையாக பயன்படுத்தப்பட்டன. அதற்குப்பின்னால் பழைய ஸ்ராலினிச பிழைப்புவாதி தனது அருவருக்கத்தக்க முகத்தைக் காட்டிக்கொண்டார், பழைய ஜார்ஜ் காலத்து பழக்க, வழக்கங்களைப் போல் மிரட்டுகின்ற ஆளாக தன்னை மாற்றிக்கொண்டார். இன்றைய தினம் தற்போது புதிய பணக்காரர்கள் ஆகிவிட்ட, ஓரளவிற்கு கிரிமினல் குற்ற சார்புடையவர்களுக்கு அவர்களது நலன்களை காப்பதற்கு இந்த அதிகாரத்துவம் துணைபோகிறது.

ரஷ்ய-முதலாளித்துவம் வந்துவிட்டது. ஆனால் அது தனித்தன்மைகளைக் கொண்டது, முழுக்க முழுக்க ஊழல் நிறைந்தது, குற்றச் சார்புடைய பிறரை சார்ந்திருக்கும், முதலாளித்துவம் இது -- இது வேறு எந்த வகையிலும் இருக்க முடியாது. இந்த உண்மையை நாம் ஒப்புக் கொண்டு அதிலிருந்து தேவையான முடிவுகளுக்கு வர வேண்டும். ரஷ்யாவில் முதலாளித்துவம் என்பதற்கு எதிர்காலம் இல்லை, அதற்கு கடந்தகாலமும் இல்லை, நிகழ்காலமும் இல்லை. ஆழமான வரலாற்றுப்பொருளில் பார்த்தால் அது முறைமை அற்றதாகும்.

இன்றைய ஆட்சி நீண்டகாலம் நீடிக்கமுடியாது. ஏனெனில் மிக ஆழமான நெருக்கடியில் உள்ளது, வளர்ச்சி எதுவும் இல்லை. ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா தொடுக்கும் போரில் ஆரம்ப கட்ட விளைவுகள் எதுவாயிருந்தாலும் இறுதியில் ரஷ்ய முதலாளித்துவம் உலக சந்தையை மேலும் அதிக அளவிற்கு சார்ந்திருக்கும் நிலைக்குத்தான் தூண்டப்படும். ரஷ்ய மக்களிடையே ஒரு மாயை நிலவுகிறது. புட்டின் ''தேசத்தை காப்பாற்றியவர்'' என்று கருதுகிறார்கள். இந்த மாயை மிக விரைவாக விலகிவிடும். அப்போது கோர்பச்சேவ் மற்றும் எல்ட்சின், பாதையில் தான் அதே பாரம்பரியத்தில் தான் இவரும் நடைபோடுகிறார் என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்வார்கள். புட்டின் ஒருசில வர்த்தக ஆதிக்க குழுவையும், அதிகாரத்துவத்தையும், உலக முதலாளித்துவத்தையும், பிரதிநிதித்துவபடுத்துவதற்காகவே பணியாற்றுகிறார் சாதாரண மனிதனது நலன்களில் அவருக்கு அக்கறையில்லை என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

இதுவரை சோவியத் ஒன்றியத்திற்கு பிந்திய ஆட்சியின் பலமானது, நடப்பு உலக முதலாளித்துவம் மார்க்சும் லெனினும் ஆய்வு செய்து சுட்டிக்காட்டிய முதலாளித்துவத்திலிருந்து வேறுபட்டது என்று பொதுமக்களின் நம்பிக்கையில் இருக்கிறது. 1945-ம் ஆண்டுக்கு பின்னர் சமுதாய சீர்திருத்தம் மற்றும் ஜனநாயகத்திற்கு ஏற்புடையதாக சமகால முதலாளித்துவம் மாறிவிட்டதாக பொதுமக்கள் கருதினார்கள். இந்தக் கருத்து வெறும் கானல் நீர் என்பதை நிரூபிக்கின்ற வகையில் தற்போது மோதல்கள் நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதிலும் திடீரென்று ஏகாதிபத்திய போட்டிகள், போர்கள், வன்முறைகள் வெடித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து உழைக்கும் மக்களது உரிமைகள், மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கின்ற வகையில் கொடூரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளிலும், இதே நிலை நீடிக்கிறது, இது முதலாளித்துவத்தை சீர்திருத்திவிட முடியும் என்ற மாயையை அடித்து நொறுக்கும். சோசலிசம் என்பது கடந்த காலத்தில் மறைந்துவிட்ட கொள்கை அல்ல மாறாக, இன்றைய தினம் புதிய மற்றும் வரலாறு காணாத காட்டுமிராண்டித்தனங்கள் வடிவங்களில் மனித நாகரீகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி கொண்டுவருகின்ற இந்த நெருக்கடிக்கு யதார்த்தபூர்வமான மாற்று சோசலிசம் தான் என்பதை உழைக்கும் மக்கள் இப்போது மீள கண்டுபிடித்து விடுவார்கள்.

நடைபெறவிருக்கின்ற போர் அழிவு உணர்வை மட்டும் வெளிக்கொண்டுவராது. அது புரட்சிகர போக்குகளுக்கு உத்வேகத்தையும் கூட வழங்கும். நான்காம் அகிலம் இன்றைய தினம் புரட்சிகர மாற்றின் செறிந்த வெளிப்பாட்டை உள்ளடக்கி இருக்கிறது. ஒரு காலத்தில் ஸ்ராலினிச வளர்ச்சிக்கு எதிரான ரஷ்ய மார்க்சிசத்தின் போராட்டத்திலிருந்து வளர்ந்தது, இது மீண்டும் ரஷ்யாவிற்கு திரும்பும்.

வலுவான கருவியான உலக சோசலிச வலை தளத்தின் மூலம் நான்காம் அகிலம், உலக அளவில் முதலாளித்துவத்திற்கும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிரான போராட்டத்தோடு இந்தப் போராட்டத்தை இணைக்காமல், போரை எதிர்த்துப் போராட முடியாது என்று ரஷ்ய மக்களை உணரவைக்கும். மூன்று ரஷ்ய புரட்சிகளின் பாரம்பரியங்கள் திரும்பவும் தோன்றுவது தவிர்க்க முடியாதது. சோசலிசத்திற்கான இன்றைய சர்வதேசப் போராட்டத்தில் ரஷ்ய தொழிலாள வர்க்கம் தனக்குரிய சரியான இடத்தைக் கண்டுகொள்வதற்கு கடப்பாடுடையதாக இருக்கும்.

குறிப்புகள்:

1. தனது ஏகாதிபத்திய போட்டியாளர்களுக்கு அமெரிக்கா பொருளாதார உதவி தருவதற்கு முடிவு செய்தது நீண்டகால அடிப்படையில் நடத்தப்பட்ட கணிப்புகள் அல்லது பொதுநல அடிப்படையில் அமைந்ததல்ல, மாறாக தான் எப்படியும் உயிர் வாழ்ந்தாக வேண்டும் என்ற நோக்கில் தான் என்பதைக்கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம். உலக முதலாளித்துவத்தின் அடித்தளங்கள் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச புரட்சிகர இயக்கத்தின் அழுத்தத்தின் கீழ் நொருங்கிக்கொண்டுள்ளன. மாற்று எதுவும் இல்லை. முதல் உலகப் போரைத் தொடர்ந்து அமெரிக்கா உதவிய ஆஸ்திரியாவும், வைமார் ஜேர்மனியும் தங்களது பொருளாதார அமைப்புகளை மீண்டும் பழைய நிலைக்குக்கொண்டுவந்தன. ஐரோப்பாவில் கம்யூனிச புரட்சி ஆபத்தை பலவீனப்படுத்துவதற்காக இவ்வாறு அமெரிக்கா உதவியது. அதே நோக்கங்களோடுதான் இரண்டாவது உலகப்போர் முடிந்ததும் மேற்கு ஐரோப்பா மற்றும் ஜப்பான் தொடர்பாக அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. இன்றைய தினம் அமெரிக்காவின் ஆளும் மேல்தட்டினர் அதே போன்ற உதவியை அதன் சர்வதேச போட்டியாளர்களுக்கு வழங்குவதற்கு எந்தவித காரணத்தையும் காணவில்லை.

2. சோவியத் ஒன்றியம் பொறிந்துபோனது, பொருளாதார அடிப்படையிலோ அல்லது வரலாற்று ரீதியிலோ முன்னரே தீர்மானிக்கப்பட்டதல்ல. சோவியத் பொருளாதாரம் முட்டுச் சந்தில் போய்' நிலைகுத்தி நின்று விட்டதற்கு காரணம் ''தனி ஒரு நாட்டில் சோசலிசம்" கட்டுதலை நோக்கமாக்க் கொண்ட, 'ஸ்ராலினிச அதிகாரத்துவம் மேற்கொண்ட பிற்போக்கு கொள்கைதான். 1970களின் கடைசியிலும் 1980களிலும் பொருளாதார சர்வதேசமயம் மிக வேகமாக வளர்ந்தது. இந்த உள்ளடக்கத்திற்குள் தன்னிறைவு அபிவிருத்தி பற்றிய முன்னோக்கு என்றுமிராத அளவில் பிற்போக்கானதாக ஆனது மற்றும் பொருளாதார அடிப்படையில் உருப்படக் கூடியதாக இல்லை. சோவியத் பொருளாதாரத்தை ஏதாவதொரு வழி முறையில் உலக உற்பத்தி முறையோடு ஒருங்கிணைத்தாக வேண்டும். ''இரும்புத்திரை'' விலகியாக வேண்டும்.

இந்த நிகழ்ச்சிப்போக்கு இரண்டு வழிகளில் ஒன்றுக்கொன்று எதிரான வழிகளில் நடந்திருக்கலாம். சோசலிசத்திற்கு அல்லது முதலாளித்துவத்திற்கு ஆதரவாக முடிந்திருக்கலாம். சோவியத் யூனியன் எல்லைக்கு அப்பால் பாட்டாளி வர்க்கப் புரட்சி பரவியிருக்குமானால் இந்த நெருக்கடியை முற்போக்கான வழியிலேயே தீர்த்துக்கொண்டிருக்கலாம். இப்படி மாறினால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆளும் அதிகாரத்துவம் பெரிதும் அஞ்சியது. எனவேதான் ''கிளாஸ் நோஸ்ட்'' ''பெரஸ்துரொய்க்கா'' என்ற போர்வையில் பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்த்திசையில் கொண்டு சென்றார்கள்: அரசாங்க சொத்துக்களைத் தனியார் மயமாக்கினர், வெளிவர்த்தகத்தில் ஏகபோக முறையை ஒழித்துக்கட்டினர், சோவியத் பொருளாதாரத்தை நாடுகடந்த முதலாளித்துவ கார்ப்பொரேஷன்களுக்கு கதவு திறந்து விட்டனர்.

சோவியத் ஒன்றியத்தின் பொருளாதார மற்றும் சமுதாய நெருக்கடி தொடர்பாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அந்த நேரத்தில் கீழ்கண்டவாறு பதிலளித்திருந்தது: ''சோவியத் ஒன்றியத்தில் சோசலிச அபிவிருத்தியும் அது வளரும்போது உருவாகும் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதும் உலக அரங்கில் பாட்டாளி வர்க்கப் புரட்சி விரிவு படுத்தப்படுவதுடன், நீக்கமுடியாத அளவிற்கு பிணைந்திருக்கிறது. தொழில் நுட்ப பற்றாக்குறை மற்றும் தொழிற்துறை மற்றும் விவசாயத்திற்கு இடையே தொடரும் முரண்பாடுகள் ஆகியவற்றை உலக சந்தைக்கு செல்வதன் மூலம் மட்டுமே தீர்த்து வைக்க முடியும். உலக சந்தையில் சோவியத் ஒன்றியத்தை ஒருங்கிணைப்பதற்கு இரண்டே பாதைகள் தான் உள்ளன. அவற்றில் ஒன்று கோர்பச்சேவ் இட்டுச்செல்லும் முதலாளித்துவ மீட்சி, மற்றொன்று சர்வதேச சோசலிச புரட்சி'' (நானகாம் அகிலம் தொகுதி -14-எண்-2-ஜுன்-1987 பக்கம் 38)

3.சோவியத் ஒன்றியத்தின் சமுதாய குணம் பற்றி ஆராயும் போது மார்க்சிஸ்டுகள் எப்போதுமே, அதிகாரத்துவமானது பொருளாதார அடிப்படையில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கமல்ல, ஆனால் அவர்கள் சலுகை மிக்க சாதியாக அரசுடமையாக்கப்பட்ட பொருளாதாரத்தின் அடிப்படைகளில் ஒட்டுண்ணி பாத்திரத்தையே ஆற்றி வருகிறது. அவர்கள் இப்போது நாம் குறிப்பிடுகின்ற ''வர்க்கம்'' என்ற சொல்லின் பொருளுக்கு எப்படி பொருந்தி வருகிறார்கள்?

நடப்பு நிலவரங்களோடு பழைய சம்பவங்களை மிக சாதாரணமாக இணைத்துப் பார்ப்பது போதுமானதல்ல. பொருளாதார விளக்கங்களை கண்டிப்பாக பின்பற்றுவதென்றால் இப்போது ரஷ்யாவில் உருவாகியுள்ள தனியார் உரிமையாளர்களை ''வர்க்கம்'' என்று நாம் கூறமுடியும். இப்படிப்பட்ட பொது அணுகுமுறையை தள்ளிவிடாமல் ஸ்தூலமான விளக்கங்கள் அதிகமாக இல்லாத சூழ்நிலையில் அத்தகைய முத்திரை குத்தி விடுவது சில முக்கியமான சமுதாய அரசியல் தனித்தன்மைகளை கணக்கில் கொள்ளாது விட்டுவிடும், அதனால் தவறான அரசியல் முடிவிற்கு வர நேரிடும்.

ரஷ்ய தொழில் நிறுவனர்கள் உலக முதலாளித்துவ மேல்தட்டின் ஒரு பகுதியினராகவே அமைந்திருக்கின்றனர். இவர்கள் என்றுமிருந்திரா அளவு ஒட்டுண்ணித்தனம் கொண்டோராக ஆகி இருக்கின்றனர். அதன் இருப்பானது திட்டவட்டமான வரலாற்று அவசியத்துடன் மிகக் குறைவாகவே இணைக்கப்பட்டுள்ளது மற்றும் உற்பத்தி முறையிலும் முற்போக்கான பாத்திரம் வகிப்பதில் குறைந்த பங்கு வகிப்பது, குறைந்த முக்கியத்துவம் உடையது அல்ல. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் உலக முதலாளிகள் தங்களது பழைய குணங்களை இழந்து வருகிறார்கள். முன்னர் இவர்கள் ஒரு சமுதாய குழுவாக ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். பொருளாதார கட்டுக்கோப்பிற்கு வெளியில் பயன்படுத்தப்படும் முறைகளான அப்பட்டமான பலாத்காரம், தவறான கணக்கு எழுதுவது, நிதி தஸ்தாவேஜுக்களில் மோசடி செய்வது, கணக்குகளை புரட்டுவது போன்ற நடவடிக்கைகளின் விளைவால் அல்லாமல், அவர்கள் பொருளாதார ஆதிக்கத்திற்கு அப்போது வந்தார்கள்.

எனவேதான் அவர்களிடம் எவ்வளவு தான் திருடப்பட்ட பணம் குவிந்திருந்தாலும், நெடுஞ்சாலையில் வழிப்பறி செய்யும் கொள்ளைக்கூட்டம் பொருளாதார ஆதிக்க வர்க்கமாக வர முடியாது. எப்படி கத்தியும், உழியும் கொள்ளைக்காரர்களுக்கு தேவையோ, எப்படி அந்தக் கொள்ளைக்காரர்கள் பொருள் உற்பத்தி சாதனங்களாக ஆக முடியாதோ, அதே அடிப்படையில் இவர்களும் பொருளாதார ஆதிக்க வர்க்கமாக வர முடியாது.

தற்போது அமெரிக்கா, ஐரோப்பா, அல்லது ஜப்பான், நாட்டில் ஆளும் மேல்தட்டினரை பொதுவான பொருளாதார அர்த்தத்தில் நாம் விளக்கும்போது கொள்ளைக்கூட்ட கும்பல் என்று குறிப்பிடுவது அவர்களது இயல்பான நிலைக்கு சரியான விளக்கமாக அமையாது. ஆனால் வரலாற்று போக்குகள் இந்த வழியைத்தான் காட்டுகின்றன. இப்போது தாமதமாக மிக அப்பட்டமாக உருவாகியுள்ள ரஷ்ய முதலாளித்துவம் இந்த வகையில் கருதப்படவேண்டியதுதான். ரஷ்யாவில் "வர்த்தகர்கள்" பொருளாதாரத்தை வளர்த்தது குறைவு. அவர்கள் கம்பெனிகளின் நிர்வாகத்தை எடுத்துக்கொள்வது, பங்குகளை மாற்றிப்போடுவது, போன்ற செயல்களில் சம்பாதித்தது அதிகம். இத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட மிகுந்த ஆபாசமான உணர்வுகள் கொண்ட இந்த மேல்தட்டு குழு படிப்படியாக வளர்ந்து வருகிறது. எனவேதான் நமது கருத்தில் இந்த குழுவிற்கு ''ஜாதி'' என்று பெயர் சூட்டுவது நல்லது.

4. முதலாளித்துவமும், ஜனநாயகமும் பிரிக்க முடியாதவை என்ற மாயைக்கு உண்மையான பொருளாதார அடிப்படை என்னவென்றால் தனிமனிதர்கள் உற்பத்தி சாதனங்களை பயன்படுத்தி சிறிய அளவிற்கு பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள் கூலித் தொழிலாளர்கள் பரவலாக பயன்படுத்தப்படுவதில்லை. ஒரு சிறிய உற்பத்தியாளர் மற்றொரு சிறிய உற்பத்தியாளரோடு சமமாக கருதப்படுகிறார். ''கார்ல் மார்க்ஸ்'' தனது மூலதனத்தில் காட்டியவாறு, வரலாற்று அடிப்படையில் சிறிய பொருள் உற்பத்தியாளர்கள் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முந்திய காலத்தில் தனித்தனியாக செயல்பட்டுவந்தவர்கள் என்றும் அவர்கள் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு சமமானவர்கள் அல்லர். முதலாளித்துவத்தில் உற்பத்திக்கான சாதனங்கள் அனைத்தும் ஒரு சிலர் கையில் குவிந்திருக்கிறது. இவர்கள் நகரங்களிலும், கிராமங்களிலும் சிறிய அளவில் உற்பத்தி செய்து வருகின்ற சுதந்திரமான மிகப்பெரும்பாலான உற்பத்தியாளர்களது உற்பத்திப்பொருட்களை அபகரித்து கொள்கிறார்கள். இதனால் மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உருவாகின்றன. இவற்றின் விளைவாக ஜனநாயகம் வெறும் கற்பனை கதையாகிவிடுகிறது.

18ம் நூற்றாண்டில் தொழில் புரட்சிக்கு முந்தைய யுகத்தில் -- முதலாளித்துவத்தின் தொழில் துறை மற்றும் தொழில் நுட்ப அடிப்படை-- சிறிய அளவில் பொருட்களை உற்பத்தி செய்பவர் "மனிதநேயத்தின்" சிறந்த எடுத்துக்காட்டாக கருதப்பட்டார். அந்த காலத்து பெரிய சிந்தனையாளர்கள் எடுத்துக்காட்டாக ரூசோ, இத்தகைய சிறிய தனித்தனி பொருள் உற்பத்தியளர்களைக் கொண்ட கற்பனை ஜனநாயகத்தை தனது சிந்தனையால் உருவாக்கிக்காட்டினார். இப்படிப்பட்ட தனிப்பட்ட சிறிய பொருள் உற்பத்தியாளர்கள் சம உரிமைகளும், பொருளாதார சம அந்தஸ்தும் பெற்றவர்கள் என்று கருதினார். பிரெஞ்சுப் புரட்சியின் போது இந்தக் கருத்துக்கள் ஒழித்துக்கட்டப்பட்டன.

5. "பெரஸ்துரொய்கா" காலத்தில் "முன்னேறிய" அறிவுஜீவிகள் வட்டாரங்களில் முதலாளித்துவ மனப்பான்மைகள் உருவாயின. முதலாளிகளுக்குரிய குறைபாடுகளும் உருவாயின அப்போது மேலை நாடுகளின் முதலாளித்துவ மேன்மையை சோவியத் ஒன்றியத்தின் மிக மோசமான நிலையோடு ஒப்பிடுவதற்காக ஒரு பழமொழி போன்று ஒரு சொற்றொடரை பயன்படுத்துவார்கள்: ''நமது வாழ்க்கைத்தரம் அவர்களது சாகும் தரத்திற்கு சமமாக உள்ளது.'' இந்த வார்த்தைகளை இன்றைக்கு நினைத்துப்பாருங்கள் கசப்பான உணர்வு ஏற்படாதிருப்பது இயலாதது. இந்த வார்த்தைகள், முதலாளித்துவத்தின் அற்புதம் விளைவிக்கும் ஆற்றலில் தருக்குநிறைந்த எதிர்பார்ப்புகளையும் மற்றும் கவின்கலை ஆர்வரின் நம்பிக்கைகளையும் எதிரொலிக்கின்றன. ஆனால் "சந்தை சீர்திருத்தங்கள்" பற்றிய யதார்த்தங்கள் மிக இருண்ட, நல்லெண்ணத்தோடு செய்யப்பட்ட எச்சரிக்கைகளையும் மீறி நிலைபெற்றுவிட்டது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved