World Socialist Web Site www.wsws.org |
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஸ்பெயின் ஈராக்கில் இராணுவம் இருப்பதை ஸ்பெயின் விரிவுபடுத்துகிறது By Keith Lee மேலும் துருப்புக்கள் அனுப்பப்படுவதில்லை என திரும்பத் திரும்ப அது கொடுத்த உறுதிகளை மீறி, செப்டம்பர் வாக்கில் மத்திய ஈராக்கில் நிலைபெறவிருக்கும் 8,000- வீரர்கள் அடங்கிய இராணுவப்படையில், 1100-இராணுவத்தை அனுப்ப இருப்பதாக ஸ்பானிய மக்கள் கட்சி அரசாங்கம் (Spanish Popular Party government ) அண்மையில் அறிவித்தது. இது ஈராக்கில் உள்ள ஸ்பெயின் நாட்டு துருப்புக்களின் மொத்த எண்ணிக்கையை 2000 ஆக ஆக்க இருக்கிறது. போலந்து நாட்டு ஜெனரல் ஆன்ட்ரிஜே டெஸ்கிவிச் (Andrzej Tyszkiewicz.) தலைமையில் ஸ்பெயின் நாட்டு இராணுவத்தினர் செயல்படுவார்கள். போலந்து 2,300- இராணுவத்தையும், உக்ரைன் 1100-இராணுவத்தையும் அனுப்புகிறது. இவர்களோடு சேர்ந்து பல்கேரியா, ருமேனியா, ஹங்கேரி, மற்றும் லித்துவேனியாவிலிருந்து படைப்பிரிவுகளும் செயல்படும். ஸ்பெயின் நாட்டு பத்திரிகையான எல்முன்டோ (El Mundo) தந்திருக்கிற தகவலின்படி லத்தீன் அமெரிக்க நாடுகளை எல் சால்வடார், ஹோண்டுராஸ் மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகள் மேலும் 1,000- துருப்புக்களை அனுப்ப இருக்கின்றன. ஈராக்கில் பிரிட்டன் மற்றும் அமெரிக்கப் படைப்பிரிவுகளுக்கு இடையில் போலந்து நாட்டுக் கட்டுப்பாட்டில் உள்ள மண்டலத்தில் 8,000- துருப்புக்களும் பணியாற்றும். இந்த மண்டலத்தில் கர்பலா மற்றும் நாசிரியா போன்ற நகரங்களும் அடங்கும். இந்தப் படைப்பிரிவுகளின் ஒட்டு மொத்த தலைமைவகிக்கும் பொறுப்பு சில மாதங்களில் சுழற்சி அடிப்படையில் மாற்றித்தரப்படும் என்று ஸ்பெயின் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பிரடரிக்கோ திரில்லோ (Federico Trillo) குறிப்பிட்டார். இந்தப் பன்னாட்டு படைப்பிரிவு பெயருக்கு போலந்து நாட்டு தலைமையில் செயல்பட்டாலும், புஷ் நிர்வாகத்திற்காக முக்கியமான அரசியல் பணியை நிறைவேற்றும். போலந்து நாடு அரசியல் அடிப்படையில் அமெரிக்காவிற்கு கீழ்படிந்து நடக்கும் மற்றும் செயல்பாடுகளின் நிதிக்காக அதனை சார்ந்து இருக்கும், ஆனால் போலந்தின் கட்டுப்பாட்டின் கீழ் பெயருக்காக ஒரு மண்டலத்தை உருவாக்குவது ஈராக் அமெரிக்காவின் பாதுகாப்பு இருக்கின்ற நாடு அல்ல என்ற ஒரு மாயையை உருவாக்குவதற்காகத்தான். அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட் ஸ்பெயின் பங்கேற்கும் முடிவை வரவேற்றார். "கணிசமான அளவு எண்ணிக்கை கொண்ட துருப்புக்களுடன் ஸ்பெயின் நாடு பங்குபெற முடிவு செய்திருப்பது பற்றி நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம்" என ரம்ஸ்பீல்ட் குறிப்பிட்டார். அதே நேரத்தில் நேட்டோ பொதுச்செயலாளர் ரொபேர்ட்சன் பிரபு அது ஒரு "துணிச்சலான முடிவு" என்று அறிவித்தார். ஸ்பெயின் இராணுவத்தின் பங்கு அதிகரித்திருப்பது ஸ்பெயின் அரசாங்கத்திற்கு அரசியல் ஆபத்து நேர்வைத் தோற்றுவித்துள்ளது. போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்கு கொண்டதன் மூலம் பெரும் எதிர்ப்பை உள்நாடு ஏற்கனவே எதிர்கொண்டிருக்கிறது. தற்போது அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து, பெரிய நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் சாத்தியத்தை ஸ்பெயின் துருப்புக்கள் எதிர்கொண்டிருக்கின்றன, அது காலனி ஆதிக்க பாணியில் ஒடுக்கு முறைப்போர் ஆக மாறிக்கொண்டிருக்கிறது. ஈராக் மக்களது வளர்ந்துவரும் குரோதத்தையும் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பையும் சமாளிப்பதற்காக அமெரிக்கப்படைகள் தற்போது கிளர்ச்சியை ஒடுக்குவதற்கான எதிர் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதுவரை "மனிதநேயம்" பாசாங்கின் கீழ் ஸ்பெயினின் இராணுவ பாத்திரம் நடந்திருக்கிறது, ஆனால் இது இனியும் தொடர முடியாது. ஈராக்கில் இந்த துருப்புக்கள் தற்போது போரினால் கிடைக்கும் மிகுந்த லாபம் தருகின்ற கொள்ளைப்பொருட்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்படவிருக்கின்றன மற்றும் அரசாங்கம் அமெரிக்காவிலிருந்து பிரதிபலனை எதிர்பார்க்கிறது. அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ்-W-புஷ் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். தைவானுக்கு அமெரிக்கா உறுதியளித்துள்ள எட்டு நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கு ஸ்பெயின் நாட்டு இஸ்ஸார் (Izar) கப்பல் கட்டும் தளத்தை பயன்படுத்திக் கொள்ள தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். ஆரம்பத்தில் இதற்கான ஏற்பாடு ஜேர்மன் கப்பல் கட்டும் தளத்திற்கு செல்வதாக இருந்தது. ஆனால் அந்தத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இது பற்றி கருத்து தெரிவித்த முன்னாள் அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர், ஈராக்போரில் அஸ்சனர் (ஸ்பெயின் நாட்டு பிரதமர்) ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தன்னால் முடிந்ததை செய்வதற்கு புஷ் முயன்று வருகிறார்... இது (ஒப்பந்தம்) ஸ்பெயினிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவின் காரணமாக தீவிரமாக கருதப்படக் கூடும், இது தெளிவாக உள்ளது" என்று தெரிவித்தார். ஸ்பெயின் நாட்டு இரண்டாவது பெரிய எண்ணெய் நிறுவனக் குழு செப்சா (Cepsa), ஈராக்கில் இருந்து 10-லட்சம் பீப்பாய்கள் எண்ணெயை வாங்குவதாக அறிவித்திருக்கின்றது. இந்த விற்பனை ஈராக் அரசு எண்ணெய் விற்பனை கம்பெனியான சோமோவும் (SOMO), ஐரோப்பிய, துருக்கி மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் அடங்கிய குழுவும் கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் இடம்பெறும். இந்த வாரத்தில் முதலாவது ஈராக் எண்ணெய் ஏற்றுமதி ஒப்பந்தங்கள் வழங்கப்பட இருக்கின்றன. சோமோ பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த ஒப்பந்தங்கள் ஒதுக்கப்படும். 10-லட்சம் பீப்பாய்கள் கணக்கில் இவை ஒதுக்கீடு செய்யப்படும். பெரும்பாலும் இவை ஈராக்கின் வடக்கு எண்ணெய் கிணறுகளிலிருந்து கிடைப்பவை. ஈராக்கின் தெற்குப் பகுதி எண்ணெய் கிணறுகளிலிருந்தும் கனமற்ற எண்ணெய் வகைகள் கிடைக்கின்றன. ஈராக்கிற்கு எதிரான போரில் பங்கெடுத்துக் கொள்ள மறுத்த நிறுவனங்களுக்கு எதிராக எந்த விதமான பாரபட்சமும் காட்டப்பட மாட்டாது என்றும் "முற்றிலும் பகிரங்கமான ஏல நடைமுறை" ஆக இருக்கும் என்றும் சோமோ பிரதிநிதி ஒருவர் தெரிவித்தாலும், அந்த அமைப்பு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருவதால் யார் என்ன பெறுவர் என்பதை இறுதியில் அமெரிக்காதான் முடிவு செய்யும். ஈராக்கின் தொழிற்துறை மற்றும் கனிம அமைச்சக மூத்த ஆலோசகர், டிம் கார்னி, ஈராக் எண்ணெய்க் கிணறுகளை தனியார் மயமாக்குவது தொடர்பான எந்த முடிவையும் ஈராக்கில் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் முடிவிற்கு விட்டுவிடப் போவதாக முன்னர் கூறிய உறுதிமொழியை, இப்போது பின்வாங்குவதற்கு தீர்மானித்திருக்கிறார். பிடியில் வைத்திருக்கும் நிர்வாகம் செயல்படத் தொடங்கியதும் உடனடியாக எண்ணெய்க் கிணறுகளை தனியார் மயமாக்குவதற்கு தற்போது திட்டங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அரசிற்கு சொந்தமான முதல் 100- எண்ணெய் நிறுவனங்களை ஓராண்டிற்குள் தனியார் மயமாக்கிவிட கார்னி திட்டமிட்டிருக்கிறார். ''21-ம் நூற்றாண்டு ஈராக்கிற்கு தனியார்மயம்தான் சரியான திசைவழியாகும்'' - என்று கார்னி குறிப்பிட்டார். |