World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Tokyo aid conference fails to restart Sri Lankan peace process

டோக்கியோ உதவி மாநாடு இலங்கையில் அமைதி நடவடிக்கையை மறுபடியும் தொடங்கும் முயற்சியில் தோல்வியடைகிறது

By Wije Dias
17 June 2003

Back to screen version

டோக்கியோவில் ஜூன் 9-10 தேதிகளில் நடைபெற்ற உதவி மாநாட்டில் 51 நாடுகளும் 20 சர்வதேச நிதி நிறுவனங்களும் கலந்துகொண்டன. நான்கு வருடங்களில் பிரித்து அளிக்கப்படும் உதவித் தொகையாக $4.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இம்மாநாட்டில் வழங்கப்பட்டது. இது எதிர்பார்த்ததைவிட கூடுதலேயாயினும் கொழும்பு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால்தான் உறுதியளிக்கப்பட்ட இந்நிதி வழங்கப்படும் என்ற நிபந்தனை போடப்பட்டது. இருப்பினும் இப்பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் நடக்காமற் போயின.

போரால் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ள தீவின் வடகிழக்குப் பகுதியை மறு சீரமைக்கவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஓர் இடைக்காலக் குழு (Interim Council) மேற்பார்வையிடத் தேவை என்ற LTTE யின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்த அளவில் LTTE மாநாட்டைப் புறக்கணித்துவிட்டது. மாநாடு தொடங்கவிருந்த நாளுக்கு இரு வாரங்கள் முன்பிருந்தே, கொழும்பு தற்பொழுதுள்ள அரசியலமைப்பையொட்டியே சில மாற்றுத் திட்டங்களைக் கொடுத்தது. அவற்றில் எதுவுமே LTTE க்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை.

பிரதம மந்திரி ரனில் விக்கிரமசிங்கா டோக்கியோ மாநாட்டில் பங்குபெற்றுத் துவக்க அறிக்கையை அளித்தார். இது ''LTTE க்குக் கூடுதலான அதிகாரங்கள் கொண்ட இடைக்கால ஆட்சி அமைப்பை அளிக்கும்'' உறுதியைக் கொண்டிருந்தது. அவருடைய ஆலோசனைகளான அமைதிப் பேச்சுக்கள் மீண்டும் தொடங்கப் பெறுவதற்கும் பொருளாதார மறு சீரமைப்பிற்கும் முக்கிய அரசாங்கங்கள் இசைவு கொடுத்துள்ளன என்பதில் அவருக்குத் தெளிவான மகிழ்ச்சியேதான். ''இன்றைய டோக்கியோப் பிரகடனம், இலங்கையில் அமைதியையும் வளர்ச்சியையும் புதிய அளவில் சக்தி கொடுக்க உதவுவதுடன் புதிய அமைப்பிற்கு வழிகோலும் என்று நான் நம்புகிறேன்'' என்று அவர் அறிவித்தார்.

ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நிலைத்திருக்கவில்லை. LTTE தான் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதாக இல்லை என்று குறிப்புக்காட்டிவிட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் குறைகளைக் காட்டியும், தமிழர்களுக்கு போதுமான உதவியும் இல்லை என்று கூறியதுடன் கடந்த ஏப்ரல் மாதம் இதையொட்டிய முதல் கட்ட மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றபோது இதன் வருகையைத் தடைசெய்த அளவில் LTTE பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டது.

ஜூன் 11 ல் LTTE யின் அறிக்கை ஒன்று டோக்கியோ மாநாட்டில் ''புதிய திட்டம் எதையும் அளிக்கவில்லை'' என்று விக்கிரமசிங்காவைக் குறைகூறியதுடன், அவருடைய வடகிழக்குப் பகுதிகளுக்கான ஆட்சிமுறை அமைப்பையும் கண்டனத்திற்கு உட்படுத்தியது. ''இலங்கையின் அரசியலமைப்பு, சட்டங்கள் இவற்றை அரணாகக் கொண்டு பிரதம மந்திரி செயல்படுகிறார். இவைதான் தமிழர்களுக்கு எதிரான இன வெறியைத் திறமையுடன் நிறுவன அமைப்பு முறைகளாக்கிவிட்டன. இதை எதிர்த்துத்தான் பல ஆண்டுகளாக தமிழர்கள் போராடி வருகிறார்கள்'' என்று அறிவித்தது.

பெரிய வல்லரசுகள் தலையிடுவது பற்றிய நரம்புத் தளர்வை இந்த அறிக்கை புலப்படுத்துகிறது. குறிப்பாக அமெரிக்கா பற்றி, அதிலும் அமைதி வழிவகை என்று கூறப்படும் முயற்சியிலும் வளரும் கோரிக்கைகள் LTTE மீது சுமத்தப்படும் முறையிலும், அரசாங்கம் "அமைதி முயற்சிகளில் மூன்றாவது குழு வசதி செய்து கொடுக்கும் அளவிலிருந்து, சர்வதேச தீர்ப்பு என்ற நிலைக்கு, அதிலும் மிக சக்தி வாய்ந்த வெளி அதிகாரங்களிடம்" மாற்றிவிட்டது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. டோக்கியோ அறிவிப்பிற்குத் தாங்கள் கட்டுப்படமாட்டோம் என்று LTTE தெரிவித்துள்ளது. "கொழும்பு அரசாங்கம் மற்றும் தந்திர அணுகுமுறை நண்பர்கள் ஆகியோரின் ஆர்வமிகு உதவியைக் கொண்டு தந்திர அறிக்கையையுடன் LTTE மீது தன்னுடைய செயல்பட்டியலையே சுமத்த முற்பட்டுவிட்டது.'' என்று கூறியது.

இந்தக் கருத்துக்கள் LTTE யிலிருந்து பெரிய வல்லரசுகள், நோர்வேயின் வசதியாளர் இவர்கள் மீது துவக்கத்தில் கொண்டிருந்த பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுவிட்டதைக் காட்டுகிறது. கடந்த பெப்ரவரி மாதத்தில்கூட முக்கியப் பேச்சுவார்த்தையாளரான ஆன்டன் பாலசிங்கம் ஜேர்மனியில் LTTE கூட்டம் ஒன்றில் கூறியபோது ''நம்மைத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், ஆயுதமேந்திய குழுவினர் என்றெல்லாம் கூறிய சர்வதேச சமூகத்தினர், இப்பொழுது ஒவ்வொரு மாதமும் தகுந்த மரியாதையுடன் நம்முடன் பேசுகின்றனர். இம்முறை ஜேர்மனி நம்மை அழைத்துள்ளது. இதற்குக் காரணம் நம்முடைய இராஜதந்திர நடவடிக்கையேயாகும்'' என்றார்.

ஆனால் இந்தக் களிப்பு ஏப்ரல் மாதத்தில் ஆவியாகப் போய்விட்டது. அமெரிக்கப் பட்டியலில் LTTE தீவிரவாத அமைப்பு என்று உள்ளதால் வாஷிங்டன் LTTE பிரதிநிதிகளைத் தடைசெய்த அளவில், அமெரிக்கத் துணை இராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் இத்தடை நீக்கப்பெறுவதற்குப் பல தொடர்ச்சியான கோரிக்கைகளை கோடிட்டுக் காட்டியுள்ளார். முக்கியமாக LTTE ஆயுதமேந்திய போராட்டத்தைக் கைவிட்டு ஆயுதக் கலைப்பு செய்யவேண்டும் என்பதாகும். இலங்கை இராணுவத்தினர் பல ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை அசட்டை செய்துள்ள ஆர்மிடேஜ் கூறுவது: ''புலிகள் சில கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் மதிக்கவேண்டும். போர் நிறுத்த அறிவிப்பின்படி - வருங்காலப் பேச்சுவார்த்தைகளையும் - காணப்பட்டுள்ள ஆயுத முறையைப் பற்றியும்.... தர்க்க ரீதியாக சாலையில் இவை முழுமையாக ஆயுதங்கள் இல்லாத நிலை பற்றியும் அமையும்.'' என்றார்.

டோக்கியோ மாநாட்டிக்கு தன்னுடைய தற்காலிக வரவியலாமையைத் தெரிவித்த பின்னர் பாலசிங்கம் LTTE நோர்வேஜிய வசதியாளருக்கு ஒரு கடிதம் எழுதினர். டோக்கியோ உதவி மாநாட்டிற்கு ''ஒரு திறமையான, புதிய செயலாற்றும் தன்மையுடைய நிர்வாக அமைப்பு'' கூடுதலான அதிகாரங்களுடன் உடனடியாக அமைக்கப்பட்டால்தான் தாம் வரமுடியும் என்றும் அதில் கூறினார். ஆனால் பெரிய அரசாங்கங்களோ, குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் ஆகியன LTTE பங்கு கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் மாநாடு நடைபெறும் என்று கூறி, கொழும்பு LTTE யின் கோரிக்கையை நிராகரிக்க ஊக்கமளித்தன.

ஓர் அரசியல் சங்கடம்

LTTE ஒரு சங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. அதனுடைய உயர்மட்டத் தலைவர்கள் ஏற்கனவே தங்கள் போர்க்கோல உடைகளைத் துறந்துவிட்டு வணிகச் சீருடையில் தோன்றி சர்வதேச நன்மதிப்பை பெறுவதற்காக தொடர்ந்தும் பல கணிசமான சலுகைகளைக் கொடுத்துள்ளனர். இந்த அமைப்பு தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையையும் கைவிட்டு, கொழும்பு அரசாங்கத்துடன் அதிகாரப் பங்கீட்டிற்கான உடன்பாட்டை ஏற்கத் தயார் என்று கூறியிருப்பதுடன் தடையிலா வணிகக் கொள்கைகளுக்கும் தன்னுடைய ஆதரவைத் தருவதாகக் கூறியுள்ளது. ஆனால் இவற்றிற்கெல்லாம் சாதனை என்று தமிழர்களிடம் சொல்லிக்கொள்ளக் கூடிய அளவில் எதையுமே பதிலுக்குப் பெறவில்லை. மாறாக, எந்த அரசியல் தீர்மானமும் ஒப்புக்கொள்ளப்படுவதற்கு முன்பு ஆயுதக் கலைப்பு செய்துவிட வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்கவேண்டியிருக்கிறது.

அமைதிப் பேச்சுக்கள் நீண்டு இழுபறியாக நடைபெற்றதால், LTTE அதனுடைய உட்பகுதி அயல் ஆதரவுத் தளத்தையும் இழந்து வருகிறது. மே 21ம் தேதி கடிதத்தில், LTTE 19 ஆண்டுகால உள்நாட்டுப் போரினால் ஏற்பட்டுள்ள தகர்க்கப்பட்ட பகுதிகள், சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய அழுத்தம் இவற்றைப் பற்றிய நடவடிக்கைகள் எடுப்பதில் தோல்வி கண்டுள்ளதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. ''செயலளவில் ஒன்றுமில்லாமலும், மனிதாபிமானப் பிரச்சினைகளில் எந்தக் குறிப்பிடத்தக்க, தெரியக்கூடிய விளைவுகளையும் ஏற்படுத்தாத அளவில் தமிழ் மக்களுடைய அனைத்து நம்பிக்கைகளும் SIRHN மீது (Sub-Committee on Immediate Rehabilation and Humanitarian Needs) இருந்தவை செல்லரித்துவிட்டன. இது ஒன்றுதான் நீண்ட பேச்சுவார்த்தைகளை ஒட்டி ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்ற நிலையில் உள்ளன.'' என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

LTTE அமைதிப் பேச்சுவார்த்தைகளிலிருந்தும் SIRHN கூட்டங்களிலிருந்தும் விலகிய அளவில், விக்கிரமசிங்கா அரசாங்கம் புதிய நிர்வாக ஏற்பாடுகளை முன்வைத்தது. மூன்றடுக்குக் குழுக்கள், உள்ளாட்சி அரசு நிறுவனங்கள் வளர்ச்சிக்காகவும், மறு சீரமைப்பிற்காகவும் ஏற்படுத்துவது உட்பட இந்தத் திட்டத்தை நிராகரித்தும், இடைக்காலக் குழுவை அமைக்கும் அழைப்பை விடுத்தும் பாலசிங்கம் கூறியது அமைப்பின் எண்ணத்தைத் தெளிவாக்கியது. ''ஒரு அரசியல் விடுதலைக்காகவும் தனி நாட்டிற்காகவும் போராட்டம் நடத்திய பின்னர் இறுதியில் கிராமக் குழுக்கள் - அதிலும் அதிகாரமற்றவை - பெற்றதில் இயக்க நடவடிக்கை முடிந்தால் தமிழ் மக்களால் நாங்கள் எள்ளி நகையாடப்படுவோம்.'' என்று அவர் குறிப்பிட்டார்.

டோக்கியோ மாநாடு தொடங்குவதற்கு முன்பு கொழும்பும் LTTE யும் மேலும் 4 கடிதங்களைப் பரிமாற்றம் செய்துகொண்டன. வட கிழக்கில் ஏற்படுத்தப்பட இருக்கும் எந்த நிர்வாக அமைப்பும் இப்பொழுதுள்ள அரசியலமைப்பிற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்று விக்கிரமசிங்கா வலியுறுத்திவிட்டார். அவருடைய அரசாங்கம் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா, அவருடைய கட்சியான மக்கள் கூட்டணி (PA) மற்றும் பல சிங்களத் தீவிர இயக்கங்கள் ஆகியன LTTE க்கும் தமிழ்ச் சிறுபான்மைக்கும் எந்தவிதமான சலுகையும் கூடாது என்று கூறும் எதிர்ப்பையும் எதிர்நோக்கியுள்ளது.

மே 30 ம் தேதி விக்கிரமசிங்காவிற்கு LTTE எழுதிய கடிதத்தில்: ''ஒரு கோபமுற்ற பழிவாங்கும் உணர்வுடைய ஜனாதிபதி, அதிக மாறுதல்கள் செய்ய முடியாத அரசியலமைப்பு இரண்டுக்குமிடையே அகப்பட்டுக்கொண்டுள்ள உங்கள் பலவீன நிலையை நாங்கள் நன்கு புரிந்துகொள்கிறோம்.'' ஆனால் LTTE அதனுடைய பெரிய பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது என்று நொந்துபோய்க் குறிப்பிட்டுள்ளது. ''சர்வதேச மற்றும் பிராந்தியத்தின் முக்கிய அரசுகள்.... LTTE ஐ மட்டமாக நடத்துவதுடன் `தடை செய்யப்பட்ட அமைப்பாகவும்` `பயங்கரவாதம்` என்ற முத்திரை குத்தியும் சர்வதேச அரங்குகளில் பங்குபெறாமல் செய்கின்றனர்'' என்று பாலசிங்கம் புகார் கூறியுள்ளார். தன்னால் இயன்றதை LTTE செய்துவிட்டதாகவும் ''பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் தொடரத் தன் அடித்தள ஆதரவு இழப்பு நிலை ஏற்படக்கூடிய சூழ்நிலையிலும்'' செயல்பட்டுள்ளதாக மேலும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

டோக்கியோ மாநாட்டில் இன்னும் அதிகமான நிபந்தனைகள் கோரப்படும் என்ற நிலையில், LTTE சர்வதேச தலையீடு இல்லாத அளவில், தன் நிலைமையை ஓரளவு சீரமைக்கும் முறையில் உடனடியாக இடைக்கால நிர்வாகம் தேவை என்பதை கேட்டுக்கொண்டது. ஜூன் 1 ம் தேதி LTTE சார்பு நாளிதழான சுடரொளி அதனுடைய தலைமையின் மீது அமெரிக்க, இந்திய அழுத்தங்கள் வளர்வதைப் பற்றிய கவலையைத் தெரிவித்தது. ''விடுதலைக்காகப் பாடுபடும் இயக்கங்கள் சர்வதேசச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஈழத்தமிழர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த அளவில் ஜப்பான் மாநாடு LTTE ஐ சர்வதேச மாநாட்டிற்குக் கொண்டுவந்து அதன் மீது அழுத்தம் கொடுக்க நினைக்கும் ஒரு பொறியே ஆகும்'' என்று எச்சரித்துள்ளது.

LTTE ன் கவலைகளைப் புறக்கணித்த விக்கிரமசிங்கா, ஜூன் 1 ம் தேதி இன்னொரு கடிதம் LTTE க்கு அனுப்பினார். இது பூச்சளவில் சில மாறுதல்களைக் கொண்டிருந்தது. LTTE, அவர் கூறும் ''Apex Body'' தலைமையமைப்பில் பங்குபெறலாம் என்றும் அது ''பெரும்பான்மைக் குரலைக்'' கொண்டிருக்கும் என்றும் கூறி, வேறு எந்த விவரமும் தெரிவிக்காமல் ''விரிவான, சாரமான உரையாடல் புதிய அமைப்பைப் பற்றி தெளிவுபடுத்தவும், விரிவுபடுத்தவும் மேற்கொள்ளப்படலாம்'' என்று தெரிவித்தார்.

48 மணி நேரத்துக்குள் அரசாங்கத்தின் திட்டத்தை நிராகரித்துப் பாலசிங்கம் விடையிறுத்தார். டோக்கியோ மாநாட்டிற்கு முன்பாகவே எவ்வாறாயினும் இடைக்காலக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று கருதிய அவர், ''இந்த சிறு அரசுக் குழு அமைப்பை ஏற்படுத்தும் முன் இன்னமும் எத்தனை சுற்றுக்கள் பேச்சுவார்த்தைகளுக்காக கட்சிகள் ஈடுபட வேண்டும்?'' என்று வினவினார். சர்வதேச ஒப்புதலுக்கு விக்கிரமசிங்காவின் திட்டம் உட்படுத்தப்படும் என்ற கவலையையும் வெளிப்படையாகவே தெரிவித்தார். ''சில சர்வதேச பலம் வாய்ந்த சக்திகள் எங்கள் மீது நல்லெண்ணம் கொண்டிருக்கவில்லையாதலால், நாங்கள் கஷ்டப்பட்டு எங்கள் மக்களுடைய உண்மையான சார்பாளர்கள் என்று ஈட்டிய நன்மதிப்பை மறுப்பதாலும், இந்த ஒப்புதல் கிடைக்க வாய்ப்பில்லை'' என்றார்.

LTTE போலவே, விக்கிரமசிங்காவின் அரசாங்கமும் அமைதிப் பேச்சுக்களைத் தொடரத் தீவிரமாயுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி (UNF) 2001 ம் ஆண்டு தேர்தல்களில் குமாரதுங்காவின் PA கட்சியை போர் முடிக்கப்படும் என்ற உறுதியைக் கொடுத்து தோற்கடித்தது. இலங்கையின் வணிகக் குழுக்களில் பெரும்பாலானவை விக்கிரமசிங்காவிற்கு ஆதரவு அளிக்கின்றன. போரானது பொருளாதார வளர்ச்சி, அயல்நாட்டு முதலீடு இவற்றிற்குத் தடையாக இருப்பதால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்தால் அரசாங்கம் இக்குழுக்களின் ஆதரவை இழக்க நேரிடலாம்.

குமாரதுங்கா, PA மற்றும் சிங்களத் தீவிரவாத ஜனதா விமுக்தி பேரமுனா (JVP) ஆகியவை மக்களுடைய நாட்டுப்பற்றுத் தீவிர உணர்வைத் தூண்டி, அமைதிப் பேச்சுக்களின் மதிப்பைக் குறைக்கப் பாடுபடுகின்றன. டோக்கியோ மாநாட்டிற்கு முன் நிகழ்வுகளில் அவை எந்தவிதமான இடைக்காலக் குழுவும் ஏற்படுத்தக்கூடாது என்று பிரச்சாரம் செய்தன. அத்தகைய அமைப்பு தனித் தமிழ்நாட்டிற்கு முதல் படியாக அமைந்துவிடும் என்றும் அவர்கள் பிரச்சாரம் செய்தனர். எதிர்க்கட்சிகளின் அறைகூவலைத் தள்ளிவிடும் முயற்சியில் UNF, LTTE க்கு பெருமளவு சலுகைகள் கொடுக்க இயலாது என்று முடிவு செய்துவிட்டது.

அத்துடன் வாஷிங்டனோடு மோத முடியாது என்பதையும் விக்கிரமசிங்கா நன்கு அறிவார். டோக்கியோ மாநாட்டின் இணைத் தலைவராக இருந்த அமெரிக்க துணை இராஜாங்க அமைச்சர் ஆர்மிடேஜ், இதனைத் தெளிவாக்கிவிட்டார். இலங்கைப் பிரச்சனைக்கான முடிவு அமெரிக்க நிப்ந்தனைகளின்படிதான் இருக்கும் என்பதை LTTE யின் புறக்கணிப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் தெரிவித்தார். ''எந்தவிதமான அச்சுறுத்தல் முயற்சிக்கும் ஒரு குழு கலந்துகொள்ளமாட்டேன் என்று தெரிவித்திருந்தாலும் கூட்டத்தைக் கைவிடாமல் இருந்த'' ஜப்பானை அவர் பாராட்டினார்.

LTTE இறுதியில் தன் எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைகளுக்கு வந்துவிடும் என்று ஆர்மிடேஜ் ஐயத்திற்கு இடமின்றிக் கருதுகிறார். உட்குறிப்பான அச்சுறுத்தலுக்கு புஷ் நிர்வாகம் LTTE ஐத் தன்னுடைய அடுத்தகட்ட ''பயங்கரவாதத்தின் மீதான போரின்'' இலக்காகக் கொண்டு கொழும்பிற்குக் குறிப்பிடத்தக்க இராணுவ ஆதரவை அளிக்கலாம். தன்னுடைய அணியிலேயே வளர்ந்துள்ள நெருக்கடிகளில், LTTE இதுகாறும் பெரிய அரசின் ஆதரவைப்பெற நினைத்திருந்த உத்தியில் அமெரிக்க நிபந்தனைக்கு உடன்படக்கூடும்.

அமைதிப் பேச்சுவார்த்தை என்று அழைக்கப்படும் இந்த வழிவகைகள், சாதாரண மக்களின் - தமிழர்கள் அல்லது சிங்களவர்கள் - நலனைப் பற்றிச் சிறிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இலங்கையிலும் மற்றும் இப்பிராந்தியத்திலும் புதிய பொருளாதார அடிப்படை மாற்றங்கள் கொண்டுவர பெரிய அரசாங்கங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் இன்னும் அதிகமான அளவில் பெரும்பாலான மக்களின் சமூக நிலையை குறிப்பாக இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் செல்லரித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved