World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்காUS suffers Latin American rebuke at OAS meeting OAS கூட்டத்தில் அமெரிக்காவிற்கு இலத்தின் அமெரிக்க நாடுகள் சூடுBy Bill Vann சிலி நாட்டில், சாந்தியாகோவில் இந்த வாரத் துவக்கத்தில் நடந்த அமெரிக்க நாடுகளின் அமைப்பு (Organization of American States) ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமெரிக்க அரசுத்துறை செயலர் கொலின் பவல் தன்னாட்டிற்கு வெறுங்கையுடன் திரும்ப வேண்டியதாயிற்று. கியூபாவிற்கு எதிராகக் கடின நடைமுறை கொண்டுவரப்பட வேண்டும் என்ற முயற்சியில் அமெரிக்கக் குழு தோல்வியுற்றது மட்டுமல்லாமல், அமெரிக்க நாடுகளின் அமைப்பின் வரலாற்றில் முதல் தடவையாக அதன் மனித உரிமைக் குழுவிற்கு அமெரிக்கா முன்மொழிவு செய்திருந்த உறுப்பினருக்கும் அது எதிர்த்து வாக்களித்துள்ளது. இப்பகுதியின் உறுதித்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் குறித்து OAS பொது மன்றத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே கடும் வேறுபாடுகள் மேலோங்கி நின்றன. பவல் தான் ஆற்றிய உரையில் இலத்தீன் அமெரிக்க நாடுகளும் கரிபியனும் இணைந்து ''கொடுங்கோலர்கள், போதை மருந்து கடத்துவோர், தீவிரவாதிகள்'' இவர்களுக்கு எதிராக போர் தொடுக்கவேண்டும் என்று தூண்டினார். இலத்தின் அமெரிக்க, கரிபியன் பிரதிநிதிகளோ தொடர்ந்து அதிகரித்து வரும் வறுமையினால் தூண்டப்படும் சமூகக் கொந்தளிப்பு இந்த மூன்றையும் விடக் கூடுதலான ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று விடையிறுத்தனர். காஸ்ட்ரோ அரசாங்கத்தைக் கியூபாவில் கவிழ்க்கும் வாஷிங்டன் பிரச்சாரத்திற்கும், அதேபோல கொலம்பியாவில் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சி எதிர்ப்புப் போருக்கும், உலகு முழுவதும் தம் இராணுவ ஆக்கிரமிப்புக் கொள்கைக்கும் பின்னே இலத்தின் அமெரிக்க நாடுகளின் அரசாங்கங்கள் அணி திரண்டு ஆதரவு தரவேண்டும் என்ற முறையில் பவலின் பேச்சு இருந்தது. 33 ஏனைய அமெரிக்க நாடுகளின் அயலுறவு அமைச்சர்களுக்கு அமெரிக்காவின் நோக்கங்களை விளக்கும் வகையில் பவல், ''என்னுடைய அரசாங்கம் தன்னுடைய OAS பங்காளிகளுடன் இணைந்து கியூபாவில் கட்டாயம் நடக்கவேண்டிய ஜனநாயகமுறை மாறுதலை விரைவுபடுத்துவதற்கு வழிவகை காணவேண்டும்'' என்று முன்மொழிந்தார். இந்த அமெரிக்கக் கருத்திற்கு சிறிய வரவேற்பே இருந்தது. ஒரு மூத்த OAS அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில் பெரும்பாலான இலத்தீன் அமெரிக்க அரசாங்கங்கள், சமீபத்திய அமெரிக்காவால் நிதியூட்டப்பட்ட "எதிர்ப்பாளர்கள்" மீது நடத்தப்பெற்ற அதிரடிகளை விரும்பவில்லை என்றபோதிலும் காஸ்ட்ரோ ஆட்சியை "தீமையின் அச்சு" என்ற நிலையில் நான்காவது நாடாகக் கூறப்படவேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் முயற்சியுடன் ஒரு சில அணிசேர்ந்திருந்தன. மேலும் தீவு நாட்டிற்கு எதிரான அமெரிக்க வணிகத் தடைக்கு கடுமையான எதிர்ப்பு இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார். ''இங்கு கியூபா இல்லாத நிலையில், அது தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியாத நிலையில் அதைப் பற்றிய ஒரு முடிவை எடுப்பது கடினம்'' என்று அந்த அதிகாரி கூறினார். ''ஏறத்தாழ அனைவருமே பொருளாதாரத் தடையை விரும்பவில்லை'' என்றார். மேலும் கியூபா பால் உள்ள மக்களின் பரிவு உணர்வும், ஈராக் மீதான அமெரிக்கப் போருக்கு உள்ள விரோத உணர்வும், உலகம் முழுவதையும் அமெரிக்கா மிரட்டும் போக்கைக் கொண்டிருப்பதும், இலத்தீன் அமெரிக்க அரசாங்கங்கள் வாஷிங்டன் பின்னால் அணிவகுத்து நிற்பதைக் கஷ்டமான செயலாக்கிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். தன்னுடைய நீண்டகால கியூபாவிற்கு எதிரான ஆக்கிரமிப்புப் பிரச்சாரத்தை மனித உரிமைகள் போர்வையில் அமெரிக்கா மறைக்கச் செய்த முயற்சி, அமெரிக்காவை Inter-American Human Rights Association ல் உள்ளே வரவிடாமல் ஒதுக்கிய அளவில் எதிர்த்து வாக்களித்ததின் மூலம் அது கடுமையான அவமதிப்புக்கு ஆளானது. அமெரிக்கா கியூபாப் பிரச்சினையை மனித உரிமைகள் அடிப்படையில் சித்தரித்ததை நிராகரித்ததைத் தவிர, புஷ் நிர்வாகத்தின் விருப்பப்படி நியமிக்கப்படவிருந்த இகழ்வுக்குரியவரைப் பற்றியும் இலத்தின் அமெரிக்கப் பிரதிநிதிகள் எதிர்ப்புக் காட்டினர். புளோரிடாவின் ஓர்லண்டோப் பகுதியைச் சார்ந்த கியூப-அமெரிக்க குடியரசுக்கட்சி அலுவலரான Rafael Martinez ஐ மனித உரிமைகள் அதிகாரியாக போட அமெரிக்கா கருதியிருந்தது. மார்ட்டினஸ், நிர்வாகத்தின் வீடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரியான மெல்க்வையாடெஸ் ஆர்.மார்ட்டினெஸ்ஸுடைய (Melquiades R. Martinez) சகோதரராவார். இரண்டு சகோதரர்களும் இணைந்து நின்று மியாமி தேர்தல் அதிகாரிகள் குழுவை அச்சுறுத்த ஒரு கூட்டத்திற்கும் ஒழுங்கு செய்திருந்தது உள்பட, 2000 ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதில் குடியரசுக்கட்சியின் பிரச்சாரத்தில் முக்கிய பாத்திரம் வகித்தனர். இலத்தீன் அமெரிக்க நாட்டுப் பிரதிநிதிகள் மனித உரிமைகள் கழகத்தில் பணியாற்ற மார்ட்டினெஸிற்கு என்ன தகுதியுள்ளது என்ற வினாவை எழுப்பினர். ஒழுங்கற்ற மருத்துவத் தொடர்புடைய வழக்குகளில் புளோரிடாவில் இவர் பெரும்பணம் ஈட்டியதுடன், தன் சகோதரரோடு இணைந்து தனிக் காயங்கள் பற்றிய வழக்குகளை நடத்துவதில் சிறப்புத்தேர்ச்சி பெற்றிருந்தார். இந்த OAS பொதுமன்றக் கூட்டம் ஈராக்குடனான அமெரிக்காவின் போருக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டமாகும். மேலும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் அமெரிக்காவிற்கு படையெடுக்கும் அதிகாரத்தைக் கொடுக்கும் தீர்மானம் கைவிடப்பட்ட பின்னர் நடக்கும் முதல் கூட்டமும் இதுவேயாகும். பாதுகாப்புக் குழுவிலுள்ள இரு இலத்தீன் அமெரிக்க உறுப்பு நாடுகள் மெக்ஸிக்கோவும் சிலியும் புஷ் நிர்வாகம் ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும் முயற்சியைக் கைவிடுவதற்கு முன்பாக அதை எதிர்த்து வாக்களிக்கப் போவதாகக் கூறியிருந்தன. சிலியுடன் இரு நாட்டுத் தடையிலா வணிகத்தைக் கொள்ளவிருந்த உடன்பாட்டைக் கிடப்பில் போட்டதன் மூலமும், புலம்பெயர்ந்தோர் பற்றிய உறவைச் சீர்செய்தலையும் அமெரிக்காவில் தங்கியுள்ள மெக்சிகோ மக்களின் அந்தஸ்து மற்றும் புலம்பெயர்ந்த நிலையை சீர்செய்யும் மெக்ஸிகோவின் முயற்சியைப் பொருட்படுத்தாத அளவில் அமெரிக்கா இரு நாடுகளுக்கும் பதிலடி கொடுத்திருந்தது. இந்த நடவடிக்கைகள், சமீப காலத்தில் இப்பகுதியின் மீது புஷ் நிர்வாகம் காட்டிய ஒரேயடியான விரோதப்போக்காக இல்லாவிட்டாலும், அக்கறை இன்மையுடன் தொடர்புடையதாக இருந்தன. வாஷிங்டனிலிருந்து செயல்பட்டு வரும் The Inter-American Dialogue என்னும் பழமைவாத சிந்தனைக் குழு பழைய இலத்தீன் அமெரிக்கத் தலைவர்களையும், அமெரிக்கப் பெரு நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் ஒன்றாகக் கொண்டுவரும் முயற்சியில், தன்னுடைய சமீபத்திய அறிக்கையில் அமெரிக்கா இப்பகுதியில் கொண்டிருக்கும் மறுக்க முடியாத உறவுச் சரிவைச் சுட்டிக்காட்டியுள்ளது. ''...வாஷிங்டன் இந்தப் பகுதியில் அக்கறை காட்டுவதை இழந்துவிட்டது என்ற கருத்தே பரந்த அளவில் உள்ளது'' என்று அறிக்கை கூறுகிறது. ''கடந்த ஆண்டு ஆர்ஜென்டினாவில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டதைப் பற்றி வாஷிங்டன் அக்கறை கொள்ளவில்லை என்றே இலத்தீன் அமெரிக்க மக்கள் உணர்ந்துள்ளனர். Hugo Chavez க்கு எதிராக ஏப்ரல் 2002 ல் இராணுவக் கவிழ்ப்பு முறைக்கு புஷ் நிர்வாகம் விருப்பம் தெரிவித்த முறையும் பலரைக் கவலைக்குட்படுத்தியுள்ளது. அதேபோல் அமெரிக்க கொள்கை ரீதியான கவனம் 9/11 க்குப் பிறகு மெக்சிகோவில் காட்டப்படாததையும் அப்பொழுதைய கருவூலச் செயலர் பால் ஓ நெய்ல் இப்பகுதியின் பொருளாதாரத்தைப் பற்றிக் கூறிய விமர்சனங்களைப் பற்றியும் கவலை கொண்டுள்ளது''. மேலும் பெரும்பாலான இலத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசாங்கங்கள், ''அமெரிக்காவின் ஒருமுகச் சிந்தனை வாய்ந்த வற்புறுத்தலான பயங்கரவாதத்திற்கெதிரான போரைப் பற்றியும்'' ஈராக்கிற்கெதிரான தூண்டுதலில்லாது நடத்தப்பட்ட போர் பற்றியும் எதிர்ப்பையே கொண்டுள்ளன என்றும் கூறுகிறது. OAS கூட்டத்திற்குச் சென்று திரும்பிய பவல் அந்தப் பயணத்தைத் "தோட்டத்து ராஜதந்திரம்" என்று கூறிய விளக்கமானது நடைமுறையில் அதிக முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அவர்களுடைய கருத்தின்படி அத்தகைய விவரிப்பு இலத்தீன் அமெரிக்கப் பகுதியை வாஷிங்டன் தன் "கொல்லைப்புறம்" போல் நடத்தும் தன்மையையே வெளிப்படுத்தியுள்ளது என்று அவர்கள் நினைக்கின்றனர்.OAS கூட்டத்தில் வெளிப்பட்ட ஒருமித்த கருத்துடன் கூடிய உறுதியான தன்மைக்கு ஏழ்மையின் தீவிரமும், சமூக ஏற்றத்தாழ்வான நிலையும் இலத்தின் அமெரிக்காவில் இருக்கின்ற அரசாங்கங்களின் ஸ்திரத்தன்மைக்கு கடும் அச்சுறுத்தலை முன்வைக்கின்றன என்பதேயாகும். ''அமெரிக்காக்களில் ஜனநாயக அரசாளுமை'' என்பதே கூட்டத்தின் கருத்து ஆகும். இந்தத் தலைப்பு இலத்தீன் அமெரிக்க நாடுகளில் வளர்ந்துவரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளையும் புதிய சுற்று இராணுவ சர்வாதிகாரங்களையும் ஏற்படுத்தாமல் சமாளிக்க முடியுமா, அல்லது சமுதாயப் புரட்சியின் மூலம் தகர்த்துவிடப்பட்டுவிடுமா என்பதே உள்ளடங்கியுள்ள கேள்வி ஆகும்.கனடாவின் அயலுறவு அமைச்சர் பில்கிரஹாம் சமீபத்திய OAS அமைச்சர்கள் கூட்டத்தில் வெளிப்படையாகவே இந்தக் குறிப்பைக் கூறினார்: ''பொருளாதாரங்கள் தோல்வியுற்றால் மக்கள் ஜனநாயகத்திற்கு வெளியே தீர்வுகளை எதிர்நோக்குவார்கள்.'' Inter-American Dialogue ன் ஆவணம் குறிப்பிடுகிறவாறு: ''நவம்பர் 2000 ல் நாங்கள் கொடுத்த அறிக்கைக்குப் பிறகு, இப்பகுதியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டின் நிலைமையும் சீரழிந்து வரும் சூழ்நிலையையே காண்கிறோம். வளர்ச்சி தேக்கமடைந்து நின்றுள்ளது. வெளிநாட்டு முதலீடு கடுமளவில் வீழ்ச்சியடைந்துவிட்டது. வேலையின்மையும் ஏழ்மையும் மிகுந்துவிட்டன.''அதேபோல் Economic Commission for Latin America and the Carribean என்ற ஐ.நா. அமைப்பு அதனுடைய ஸ்பானிய முதலெழுத்துக்களின் கூட்டால் CEPAL என்று அறியப்படுவது, 0.5 சதவிகித எதிர்மறை வளர்ச்சியை 2002 ம் ஆண்டிற்குச் சுட்டிக்காட்டுவதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி தனி நபருக்கு 1.9 குறைவும் ஏற்பட்டதைத் தெரிவிக்கிறது. சராசரியாக பணவீக்கம் 12 சதவிகிதம் உயர்ந்ததுடன் உண்மை ஊதியம் 1.5 சதவிகிதம் குறைந்துவிட்டது. ''வாஷிங்டன் ஒருமித்த கருத்து'' (Washington Consensus) என்ற புதிய தாராளக் கொள்கை சிந்தனைக் கூறுபாடுகளின் உறுதிமொழி - தனியார்மயமாக்கும் திட்டம், அயல்நாட்டு வணிகம் மற்றும் முதலீடு இவற்றிற்குத் தடையற்ற நிலை, கடுமையான பொருளாதார, வட்டிவிகிதக் கொள்கைகள் - ஆகியவை பிராந்தியத்தின் பொருளாதாரத்தைப் புதுப்பிக்கும் என்ற நினைப்பு மிகப்பெரிய அளவு ஏமாற்றமாகப் போய்விட்டது. இப்பகுதியில் அயல்நாட்டுக் கடன் நெருக்கடி வெடித்ததில் இருந்து, பெரும்பாலான இலத்தீன் அமெரிக்க உழைக்கும் மக்களுக்கு வருமான அளவு கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து சரிவாய் உள்ளது. கட்டமைப்பைச் சரிசெய்யும் முயற்சிகள் பெரும்பாலான மக்களுக்கு வேலையின்மையையும் ஏழ்மையையும் தீவிரப்படுத்திவிட்டன. அதே நேரத்தில் அவை வரிகள் குறைப்பு, குறைந்த தொழிலாளர் ஊதியம் இவற்றுடன் அயல்நாட்டிற்கு இலாபத்தை அனுப்புவதிலும் குறைந்த தடைகள் கொண்டு வந்த திட்டத்தோடு இணைத்த அளவில், எப்பொழுதும் செல்வக்கொழிப்புடைய சிறு வட்டத்தைத் தோற்றுவித்துவிட்டன. இலத்தீன் அமெரிக்காவின் 520 மில்லியன் மக்களில் 43 சதவிகிதத்தினர் வறுமையில் வாழ்கிறார்கள். அதேவேளை 92.8 மில்லியன் மிகக்கொடிய வறுமையில் வாடுவதாக CEPAL கூறுகிறது. மற்றொரு மதிப்பீட்டின்படி 70 சதவிகித இலத்தீன் மக்கள் ஒரு நாளைக்கு 5 டொலர்களுக்கும் குறைவான தொகையில்தான் வாழ்கிறார்கள். 40 சதவிகித மக்கள் நாள் ஒன்றுக்கு 2 டொலர்களையும் விட குறைவான பணத்தில்தான் வாழ்க்கைப் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் பொருளாதாரச் சிக்கன நடவடிக்கைகள் என்ற முறையில் தொடரப்படும் நடவடிக்கைகள் கண்டம் முழுவதும் அலைபோன்ற எழுச்சிகளைத் தூண்டிவிட்டுள்ளது. சிலியில் OAS மன்றக் கூட்டத்திற்கு கூடிய நேரத்தில் பல அரசாங்கங்கள் உள்நாட்டில் பெரும் நெருக்கடிகளையும் கொந்தளிப்புக்களையும் எதிர்கொண்டுள்ளன. பெருவில் அலெஜான்ரோ டோலிடோவின் (Alejandro Toledo) அரசாங்கம், 300,000 ஆசிரியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம், மாணவர்கள் விவசாயிகள் மற்றும் சமுதாயத்தின் மற்றைய பிரிவுகளைச் சார்ந்த தொழிலாளர்கள் இணைந்து நடத்தும் எதிர்ப்புக்கள், வேலை நிறுத்தங்கள், நெருக்கடி நிலை போன்ற முற்றுகையைத் திணித்துள்ளது. அண்டை நாடான ஈக்வடாரில் ஆசிரியர்கள், எண்ணெய்த் தொழிலாளரோடு இணைந்து வேலை நிறுத்தம் செய்த அளவில் நாட்டின் முக்கிய வருமானமான ஏற்றுமதி வருவாய்கள் ஸ்தம்பிதம் அடைந்தன மற்றும் அரசுக்குச்சொந்தமான பெட்ரோலியத் துறையைத் தனியார்மயமாக்கும் திட்டத்திலிருந்து அரசாங்கத்தைப் பின்வாங்கும்படி நிர்பந்தித்தது. பிரேசிலில் 20,000 பொதுத்துறை ஊழியர்கள் சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்ட சிக்கன திட்டத்துடன் பொருந்தும் வகையில், ஜனாதிபதி Luiz Inacio Lula da Silva வின் அரசாங்கத்தின் திட்டமான ஓய்வு ஊதியக் குறைப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். கோஸ்டா ரிகாவில் 40,000 ஆசிரியர்களும் 10,000 மின்துறை ஊழியர்களும் வெளிநடப்புச் செய்தனர். சமூக அமைதியின்மை, இலத்தின் அமெரிக்காவின் உயராட்சிக் குழுக்கள் தாங்கள் கொண்டுவந்த பொருளாதாரப் புதிய தாராளக் கொள்கைகளினால் பேரிழப்பும் துன்பமும் மக்களுக்கு கொண்டு வந்துள்ளதைக் கவலையுடன் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. முன்னாள் கொலம்பிய ஜனாதிபதியான சீசர் கவீரியா, தற்பொழுது OAS ன் பொதுத் தலைமைச் செயலாளராக இருப்பவர், மன்றக் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்: ''நம்முடைய பொருளாதார வளர்ச்சி தீவிரமாகத் தடைப்பட்டுள்ள நிலைமையில் நாம் கூடியிருக்கிறோம் என்பது மட்டுமல்லாமல், எவ்வாறு நம்முடைய அரசாங்கங்கள் அத்தகைய தடைகளைப் போக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற கேள்விகளும் எழுகின்றன'' என்றார். மேலும் ''பொருளாதாரக் கூறுபாடுகளினால்தான் வளர்ச்சி ஏற்படுகிறது என நம்பப்படுவது ஒரு தவறேயாகும்'' என்றும் கூறியுள்ளார். முடிவில், வாஷிங்டனால் அதிக அளவு புகழ்ந்து பரப்பப்பட்டுள்ள தடையிலா வணிகத்தால் (விளைந்துள்ள தீமைகளுக்கு) எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு எந்த இலத்தீன் அரசாங்கத்தாலும் பதில் சொல்ல முடியவில்லை. பிரேஸிலில் லூலா தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஈக்வடாரில் லுசியா குடிரேஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதோ, கண்டத்தின் இடதுசாரித் திருப்பம் என்று வர்ணிக்கப்பட்டாலும், இந்தத் தலைவர்கள் அனைவருமே பதவியில் தங்களுக்கு முன்பு இருந்தவர்கள் கடைப்பிடித்த அடிப்படைப் பொருளாதாரக் கொள்கையையே பின்பற்றுவதாக உறுதியளித்துள்ளனர். பவலின் பயணத்தின்போது அமெரிக்கா எதிர்ப்பை எதிர்கொண்ட சிக்கலான பகுதிகளுள் ஒன்று, இலத்தின் அமெரிக்காவின்பால் அமெரிக்கக் கொள்கையின் அச்சாணியான அமெரிக்காக்களின் தடையிலா வாணிபம் (Free Trade Agreement of the Americas - FTAA) ஆகும். புஷ் நிர்வாகம் இந்தத் திட்டத்தை 2005 அளவில் - கண்டம் முழுவதும் தடையற்ற வணிகப் பகுதியாக மாற்றியமைத்தல் - செயல்படுத்திவிட வேண்டுமெனக் கருதுகிறது. ஐரோப்பாவில் உள்ள வோல் ஸ்ரீட்டின் போட்டியாளர்களுக்கு எதிரான எதிர்ப்பில் இலத்தீன் அமெரிக்காவை அமெரிக்கத் தலைநகருடன் நெருங்கிய தொடர்புடையதாகச் செய்வது அதன் பிரதான இலக்குகளுள் ஒன்றாகும். இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் இப்பிராந்தியத்தின் பெரும்பாலான அரசாங்கங்கள் கையெழுத்திட குறைவான ஊக்குவிப்பே உள்ளது. ஆயினும், தற்பொழுதுள்ள அமெரிக்க வேளாண்மை உதவித்தொகைகள், மற்றைய வணித் தடைகள் இவை நீடிப்பதை எடுத்துக் கொண்டால், பெரும்பாலான இலத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை தொடர்ந்து இருக்கும். தன்னுடைய ஆர்ஜென்டினியப் பயணத்தின்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலக்கு ஆண்டாக பவல் 2005 ஐத்தான் மீளவலியுறுத்தினார். ஆனால் அர்ஜென்டினாவின் அயலுறவு அமைச்சர் Rafael Biesla அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில், அமெரிக்காவிற்கும் சிலிக்கும் இடையேயான தடையற்ற வணிக உறவுக்கு 12 ஆண்டு கால அவகாசம் தேவைப்பட்டிருந்தது எனத் தெரிவித்தார். அர்ஜென்டினாவும் ''அதே பாதையைப் பின்பற்றி விளைவுகள் எங்கள் மக்களுக்கு உண்மையிலேயே நன்மையை கொடுக்கின்றனவா என்று பார்க்க முயற்சிக்கும்" என்றார். இந்தக் கருத்து பொதுவாக அர்ஜென்டினிய அரசாங்கம் அமெரிக்க அரசாங்கத்தோடு ஒப்பந்தம் செய்துகொள்ள எந்த அவசரத்தையும் காட்டவில்லை என்ற எச்சரிக்கையை தெளிவுபடுத்துகிறது. பவலுடன் சந்திப்பு ஏற்பட்ட ஒரு நாளின் பின்னர், கிர்ஷ்நெர் (Kirchner) பிரஸிலியாவிற்குப் பறந்து சென்று அங்கிருந்து டா சில்வாவுடன் சேர்ந்து, Southern Cone Common Market என்ற திட்டத்தை அகலப்படுத்தவும் ஆழப்படுத்தவும் அறிவிப்புச் செய்தார். இந்த வணிகக் கூட்டு ஸ்பானிய முதலெழுத்துக்களைக் கொண்டு Mercosur என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு பிராந்தியப் பாராளுமன்றத்தையும் பொது நாணய முறையையும் தோற்றுவிக்க இருப்பதாகக் கூறப்படும் இந்தத் திட்டம் அமெரிக்க வணிக ஒப்பந்த யோசனைக்கு நேரடி சவாலாகப் பார்க்கப்பட்டு வருகிறது. வாஷிங்டனுடன் மிகுந்த ஆழமான அளவு வணிகப் பூசல்களில் ஈடுபட்டிருந்த பிரேசிலின் ஆளும் மேல்தட்டு, அர்ஜென்டினாவையும் FTAA யின்பால் மெதுவாகச் செல்லும் நோக்கை ஏற்குமாறு வலியுறுத்தியுள்ளது. |