ஈராக்கியப் போரைப் பற்றிய பேர்லின் கூட்டம்:
''சர்வதேச அரசியலில் ஒரு திருப்புமுனை''
Peter Schwarz
June 9 2003
Back to screen version
உலக சோசலிச வலைத் தளமும் மற்றும் ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சியும்
ஜூன் 1ம் திகதி பேர்லினில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில்
பீட்டர் சுவாட்ஸ் ஆற்றிய உரையைக் கீழே தருகிறோம். உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவில்
பீட்டர் சுவாட்ஸ் ஓர் உறுப்பினராவர். இந்தக் கூட்டத்தின் தலைப்பு: ''ஈராக்கியப் போரின் படிப்பினைகள்: ஐரோப்பிய
தொழிலாள வர்க்கத்தின் பணிகள்'' என்பதாகும்.
சர்வதேச அரசியலில் ஈராக்கியப் போர் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதுவரை
இப்போரின் அர்த்தமும், அதன் நீண்டகால தாக்கங்களும் முழு அளவில் புரிந்துகொள்ளப்படவில்லை. முதலில், ஒரு கட்டிடத்தின்
ஆதாரத்தூண்களும் மற்றைய பகுதிகளும் ஒரு கட்டிடத்தை தாங்கி நிற்கின்றன. அதில் இப்பொழுது இங்குமங்கும் ஒரு சில
விரிசல்கள், விலகல்கள் தெரிகின்றன. ஆனால் விரிசலைச் சரியாக்கும் முயற்சியோ, விலகல்களைச் சரியாக்கும் முயற்சியோ
பலனளிக்காமல் போய்விட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. இறுதியில் முழுக்கட்டிடமும் இடிந்து விழுந்துவிடும் நிலையிலுள்ளது.
இதுபோலவே, உலகப்போருக்குப் பின்னர் அடிப்படையாக கொண்டிருந்த முன்னைய அரசியல்
வழிவகைகள், அமைப்புகள் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் புதிய திசை திருப்புதலால் துகிலுரியப்பட்டு நிற்கின்றன.
இது சர்வதேச உறவுகளுக்கு மட்டுமல்லாது ஒவ்வொரு நாட்டின் தேசிய நிலைமைகளுக்கும் பொருந்தும். இந்த சர்வதேச
நடைமுறைகளிலும், அமைப்புகளிலும் தங்கியிருக்காத சமூக அரசியல் கட்டுமானங்கள் எந்த நாட்டிலும் இல்லை என்றே கூற
முடியும்.
இந்த அடித்தளத்தில், ஈராக்கியப் போர் உண்மையான புரட்சிகர உள்ளடக்கங்களை
கொண்டுள்ளது. அதிகரித்துவரும் சமூக நெருக்கடிகள் ஒரு முக்கிய பங்கை வகித்தபோதும் அதனால் மட்டும் புரட்சி
உருவாகுவதில்லை. பாரிய வரலாற்று பிரச்சனைகள் அப்போதுள்ள சமூக அமைப்பினால் தீர்க்கப்படாதபோது புரட்சி
உருவாகின்றது. நாம் இப்போது அத்தகைய காலகட்டத்திற்கு வந்துள்ளோம்.
உலகப் போருக்குப் பிந்தைய உலக அரசியல் அடித்தளங்களான சர்வதேச சட்டங்களும்,
அமைப்புக்களும் ஈராக்கியப் போரில் புஷ் நிர்வாகத்தினால் புறத்தே ஒதுக்கிவைக்கப்பட்டுவிட்டன. பொதுவாக சர்வதேச
அளவில் ஏற்கப்பட்ட சட்டங்கள், நாடுகளின் இறைமை, ஆக்கிரமிப்புப் போர் தடுப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை
போன்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் போன்றவை அமெரிக்காவாலேயே உறுதியளிக்கப்பட்டிருந்தன.
கடந்த சில மாதங்களாக புஷ் நிர்வாகம், தான் இத்தகைய விதிமுறைகளுக்கும், நிறுவன
அமைப்புக்களுக்கும் தொடர்ந்தும் கட்டுப்படப்போவதில்லை என்பதை தெளிவாகக் கூறிவிட்டது. புதிய அமெரிக்க வெளிநாட்டு
உறவுக்கொள்கை, இராணுவ அதிகாரம், அச்சுறுத்துதல், பொய்யுரைகள், அரசியல் சதிகள் இவற்றை அடிப்படையாகக்
கொண்டுள்ளது. இது ''போக்கிரி நாடுகள்'' (Rogue
states) என்று அழைக்கப்படும் நாடுகளுக்கும், அபிவிருத்தியடையாத
நாடுகளுக்கும் மட்டுமல்லாது, தனது கூட்டு என்று அது சொல்லிக்கொள்ளும் நாடுகளுக்கும், உயர் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும்
பொருந்தும்.
புஷ்ஷுடைய அறிவிப்பான, ''ஒன்றில் நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள் அல்லது எங்களின்
விரோதி'' என்ற சொற்றொடர் அவருடைய வெளிநாட்டுக் கொள்கையின் சாரமாக உள்ளது.
ஐரோப்பியப் பயணத்தை மேற்கொண்டு தன்னுடைய ஒப்புதல் முத்திரையை ''விரும்பும்''
வார்சோவிற்கு (Warsaw)
வழங்கி, ''விருப்பமற்ற'' பேர்லினுக்கு மூக்கறுப்புச் செய்து கடந்த காலத்தில்
அதனை ஒன்றுபடுத்தி, உறுதிப்படுத்தியதை போலல்லாது அமெரிக்கா தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி பழைய கண்டத்தைப்
பிரிக்கவும், ஆற்றல் குன்றவும் தேவையானதைச் செய்கின்றது. சிறுபிள்ளைத்தனமாக புஷ்ஷின் செயல்கள், பொருளாதார
கொள்கைகளுடன் இணைந்து யூரோ மீதும் ஐரோப்பிய ஏற்றுமதிச் சந்தையிலும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி
வேண்டுமென்றே டொலரின் மதிப்பைக் குறைக்கும் மூலமாக அமைந்து உள்ளன.
புஷ்ஷின் வெளிநாட்டு உறவுக்கொள்கை ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச உடன்படிக்கைகள்,
அட்லான்டிக்கிற்கு இடையிலான உறவு போன்றவற்றிற்கு முன்னரையும் மற்றும் 1945க்கு முந்தைய நிலைக்கு செல்லும்
போக்கில் மட்டுமல்லாது, 1918 இற்கு முன்பான சர்வதேச இராணுவ கூட்டு மற்றும் ஜனாதிபதி வூட்ரோ வில்சனின் 14
அம்சத்திட்ட காலகட்டத்திற்கு சென்றுள்ளது. இது மிக வெளிப்படையான ஏகாதிபத்திய முறைக்குத் திரும்பியுள்ளதை தவிர
வேறொன்றையும் காட்டவில்லை. இறுதி ஆய்வுகளில் ஒரு புதிய உலகப்போருக்கு வழியமைக்கும் முறையில் அது உள்ளது.
ஏனென்றால், லெனின் விளக்கியபடி, இராணுவ பலம் உள்ளடங்கலான அதன் பலம் தான் இரு பாரிய சக்திகளுக்கு (நாடுகளுக்கு)
இடையேயான பலத்தின் உறவை தீர்மானிக்கும்.
புதிய அமெரிக்க வெளிநாட்டு கொள்கையின் நோக்கம் என்ன? அமெரிக்க பெரு
வர்த்தகத்தின் தேவைகளுக்கு இந்த உலகம் முழுவதையுமே கொண்டுவருவதுதான் அதன் நோக்கமாகும்.
20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜேர்மனி, பழைய கண்டத்தின் மிக அபிவிருத்தியடைந்த
சக்திமிக்க முதலாளித்து நாடு என்ற வகையில் இருமுறை ஐரோப்பாவை பலாத்காரத்தால் மறு பங்கீடு செய்வதன் மூலம்
தன்னுடைய உள் முரண்பாடுகளை தீர்க்க முயன்றது. இன்று, அமெரிக்கா உலகில் அதிக அளவு அபிவிருத்தியடைந்த முதலாளித்துவ
நாடு என்ற வகையிலும், சக்திவாய்ந்த நாடு என்ற வகையிலும் பலாத்காரத்தால் உலகத்தை மறுபங்கீடு செய்யும் முயற்சியில்
இறங்கியுள்ளது.
அவ்வாறு செய்கையில், ஈராக்கில் செய்ததுபோல் இராணுவ ரீதியில் நாடுகளைக் கைப்பற்றி,
அவற்றின் மூலப்பொருட்களைத் கொள்ளையடிக்கும் முயற்சிகளோடு நிறுத்திக்கொள்ளாது, உலகப் பொருளாதார முறைகள்
அனைத்தையும் அப்பட்டமான, மூர்க்கமான சுதந்திர சந்தை முறையால் மாற்றியமைக்க முற்படுகிறது. அமெரிக்க ஆளும்
தட்டினரின் கண்ணோட்டத்தில், எந்தச் சமூகநல நடவடிக்கையும், வருமானம் மற்றும் இலாபம் மீதான வரி, பொருளாதாரத்தில்
அரசாங்கத்தின் தலையீடு, சுற்றுசூழலை பாதுகாக்க அரசாங்க விதிமுறைகள் ஆகிய அனைத்துமே உலகத்தைக்
கொள்ளையடிக்க வேண்டும் என்ற அவர்களின் ''சுதந்திரத்தைக்'' கட்டுப்படுத்தும், ஏற்க முடியாத தடைகளாகும்.
எனவேதான், அமெரிக்க வெளிநாட்டுக்கொள்கையின் புதிய போக்கு அனைத்து சர்வதேச
உறவுகளையும் மாற்றியிருப்பதோடு எல்லா நாடுகளிலும் உள்நாட்டு அரசியல் விவகாரங்களிலும் பரந்த அளவில் தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது. இது வர்க்கங்களிடையே முரண்பாடுகளை தீவிரப்படுத்தியிருப்பதுடன் அரசியலில் உறுதியற்ற தன்மையையும்
அதிகரித்துள்ளது. அத்துடன் சமூக ஒத்துழைப்பு, வர்க்க சமரசம் போன்றவற்றிற்கு அடிப்படையே இல்லாமல் தகர்த்துவிடுகிறது.
புஷ்ஷால் எவ்வாறு ஆதிக்கம் செலுத்த முடிகிறது?
புஷ் நிர்வாகத்தின் முக்கிய பிரதிநிதிகளின் வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தால், அதனுடைய
வெளிநாட்டுக் கொள்கை ஆச்சரியத்தை அளிக்காது. பழைமைவாத சிந்தனைக் குழாங்களின் சிந்தனையாளர்களான அவர்கள்
சில ஆண்டுகளுக்கு முன்புவரை தீவிர வலதுசாரி போக்கு உடையவர்களாகக் கருதப்பட்ட பெளல் வொல்வோவிட்ஸ், ரிச்சர்ட்
பேர்ல் (Paul Wolfowitz, Richard Perle),
மற்றும் முக்கிய பென்டகனின் பிரதிநிதிகளும் மதவெறியர்களுமான சட்டமா
அதிபர் ஜோன் ஆஷ்கிரோப்ட் (John Ashcroft)
போன்றவர்களும், எண்ணெய்த் தொழில் மற்றும் கிரிமினல் நிறுவனங்களான
என்றோன் போன்றவற்றின் பல மில்லியனர்களையும் கொண்டுள்ளது. இந்தச் சிறு குழுவிற்கு 40 வயதுவரை மதுப்பழக்கத்திற்கு
அடிமையாயிருந்த மற்றும் முக்கிய படிப்பும் இல்லாத ஒரு மனிதரால் தலைமை தாங்கப்படுகிறது.
உண்மையான பிரச்சினை எப்படி இந்த வலதுசாரிக்குழு அமெரிக்க அரசாங்கத்தில் முக்கிய பதவிகளைப்
பெற்றுத் தன் விருப்பத்தை அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சுமத்த முடிகிறது என்பதேயாகும்.
ஹிட்லருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்
Ian Kershaw, அதன் முன்னுரையில் ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின்
தனிமனித தன்மையைவிட, எப்படி ஒரு ஹிட்லர் உருவாக முடிந்தது என்பது பற்றி அதிக அக்கறை கொண்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
அவர் கூறுகிறார்: ''`ஹிட்லரைப் பற்றி அறிந்திருக்கும் குணநலன்களில் இதற்குத் திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால்,
ஹிட்லர் தோன்றக் காரணமாயிருந்த ஜேர்மன் சமுதாயத்தின் சமூக, அரசியல் உந்துசக்திகளில்தான் அதை முக்கியமாகத் தேடவேண்டும்''
என குறிப்பிடுகின்றார்.
புஷ் நிகழ்வையும் அதேபோல்தான் ஆராயவேண்டும். இவருடைய ஆட்சி நடைபெறுவதற்கு காரணமாயுள்ள
சமூக, அரசியல் உந்து சக்திகள் எவை?
மிகச்சிறு அளவிலான மிக அதி செல்வந்தர்கள், பெரும் நிறுவனங்களால் நடத்தப்படும் செய்தி
ஊடகம் போன்றவற்றைத்தவிர புஷ்ஷிற்கு குறிப்பிடத்தக்க சமூக அடித்தளம் ஏதும் கிடையாது. அது ஜனாதிபதிப் பதவியைத்
திருடியது; புஷ் தன்னுடைய எதிர் ஜனநாயக கட்சி வேட்பாளர் அல்கோரை விடக் குறைவான மக்கள் வாக்குகளே
பெற்றார். வலதுசாரிகளின் ஆதிக்கத்திற்குட்பட்ட அமெரிக்க உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால்தான் இவர் ஜனாதிபதியாக
வரமுடிந்தது.
ஆயினும்கூட எத்தடையுமின்றி தனது திட்டத்தை இவர் வெளிநாடுகளில் மட்டுமல்லாது உள்நாட்டு
விவகாரங்களிலும் செயல்படுத்த முடிகிறதோடு, பணக்காரருக்கு பெரும் வரி விலக்குகள் வழங்குவதோடு, சமுதாயத்தில்
பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தவும் முடிகிறது.
உத்தியோகபூர்வமான எந்த அரசியல் எதிர்ப்பும் முற்றுமுழுதாக இல்லாமல் சரிந்துவிட்டதே
இந்த நிலைக்குக் காரணமாகும். ஈராக்கில் புஷ் நடாத்திய போர் தனது விருப்பப்படி நடந்துகொள்ள ஜனநாயகக் கட்சி
அனுமதித்தது. அவருடைய வெளிநாட்டுக்கொள்கை பற்றியோ, சமூக, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் பற்றியோ
எந்த எதிர்ப்பையும் அக்கட்சி காட்டுவதில்லை.
அதேபோன்ற பங்குதான் அமெரிக்கச் செய்தி ஊடகத்தாலும் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு காலத்தில்
தங்கள் தாராளவாதக் கொள்கை மரபுகளைப் பற்றிப் பெருமையுடன் இருந்த நியூயோர்க் டைம்ஸ் போன்ற
நாளேடுகள், இன்று அரசாங்கத்தின் பொய்யுரைகளையும் தேவைக்கேற்ற முறையில் தயாரிக்கப்படும் பிரச்சாரங்களையும்
அப்படியே ஏற்கின்றன.
அப்படிப்பட்ட நடைமுறைகளுக்கு ஆழ்ந்த புறநிலை அடித்தளங்கள் இருக்க வேண்டும். எந்தவிதமான
அரசியல், சமூக சமரசத்தைக் கடைபிடிக்க முடியாத அளவுக்கு அமெரிக்க சமுதாயம் பிளவுபட்டு நிற்கிறது.
1930களின் ஆரம்பத்தில் ஜேர்மனியில் இருந்த தேசியவாதிகள், தாராளவாதிகள், கத்தோலிக்க
மத்தியவாதிகள் ஆகிய அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் மற்றும் அரைமனத்துடன் சமூக ஜனநாயக கட்சியும்
பொருளாதார நெருக்கடி சமூக சமரசத்தை சாத்தியமற்றதாக செய்ததால் ஒரு சர்வாதிகார அரசை விரும்பின. இதற்கு
மாற்றான ஒரே உண்மையான மாற்றீடு சமுதாயத்தைச் சோசலிச அடித்தளத்தில் மறு ஒழுங்கமைப்பதாகும்.
அதேபோன்ற காரணங்களுக்காகத்தான் அமெரிக்க அரசியல் பிரிவினர் அனைவரும் புஷ்ஷிற்குப்பின்
ஆதரவுடன் நிற்கின்றனர். ஒரு சாதாரண எதிர்ப்பு கூட ஜனநாயகக் கட்சி பொறுக்க தயாராக உள்ள கோரிக்கைகளை
விட அதிகமானதை கோருவதற்கான சமூக சக்திகளை கட்டவிழ்த்துவிடக்கூடும்.
புஷ்ஷிற்கு அளிக்கும் ஆதரவின் மூலம், அமெரிக்க சமுதாயத்தினதும் மற்றும் இந்த நூற்றூண்டு
முழுவதும் அமெரிக்காவின் ஆதிக்கத்தில் உள்ள முழு உலக முதலாளித்துவத்துவ அமைப்பினதும் ஆழமடைந்து செல்லும் நெருக்கடிகளுக்கு
அமெரிக்க ஆளும்தட்டினர் பதிலளிக்கின்றனர். அமெரிக்கப் பொருளாதாரத்தில் உள் நெருக்கடிகளும், சமுதாயத்
தேவைகளும் உலக மூலப்பொருட்கள் அனைத்தையும் அமெரிக்கா தடையின்றிப் பெறவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க முதலாளித்துவத்தின் தீர்ப்புகளுக்கு தீர்மானகரமானதாக இருக்கும் இறையாண்மை நாடுகளை உலகின் எந்தப் பகுதியிலும்
அமெரிக்க முதலாளித்துவம் பொறுத்துக்கொள்ள தயாராக இல்லை. உலக பொருளாதாரம் என்பது நாடுகளின் சுயநிர்ணய
உரிமையுடன் இனியும் ஒத்துப்போவதாக இல்லை. அமெரிக்கா எந்தப் போட்டியாளரையும் அனுமதிக்கத் தயாராக
இல்லை. இதுதான் அத்திலாந்திற்கு இடையிலான முரண்பாடுகளுக்கான அடித்தளம்.
அமெரிக்க அரசாங்கம் செல்லும் பாதை தவிர்க்க முடியாத பேரழிவை நோக்கியே
போகும். உலக மக்கட் தொகையில் 5 சதவீத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாட்டின் கிரிமினல் தலைமை காலவரையின்றி
95 சதவிகித உலக மக்கள் மீது தனது விருப்பத்தை திணிக்க முடியாது.
ஈராக்கில் நடைபெற்ற மிருகத்தனமான அடக்குமுறை இன்னும் என்ன நடைபெற இருக்கின்றன
என்பதற்கு ஒரு முன்னோடிதான். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வான இரு நாடுகள் சண்டையில் ஈடுபட்டமைக்கு சில முன்னுதாரணங்கள்
உள்ளன. பழைமையான ஆயுதங்களேந்திய ஈராக்கிய இராணுவத்தினரும் சாதாரண மக்களும் அமெரிக்க உயர் தொழில்நுட்ப
ஆயுதக்கலங்களால் படுகொலைக்கு உள்ளாயினர்.
அமெரிக்காவிலேயே அடிப்படை ஜனநாயக உரிமைகள் ஒன்றன்பின் ஒன்றாக ''பயங்கரவாதத்திற்கு
எதிரான போர்'' என்ற பெயரில் இல்லாதொழிக்கப்பட்டன. போர்ச் செலவுச் சுமையை பொதுமக்கள் தலையில் சுமத்தும்போது
ஏற்கமுடியாத நிலையில் உள்ள சமூக அசமத்துவம் இன்னும் கசப்பான நிலையை அடையும்.
இந்த ஆபத்தை எவ்வாறு எதிர்ப்பது?
கடந்த சனிக்கிழமை ஜேர்மன் நாளேடு
Frankfurter Allgemeine Zeitung
மற்றும் பிரான்சின் Libération
இரண்டும் இப்பிரச்சனைக்கு பதிலளிக்க முயன்ற ஜேர்மனியின் தத்தவமேதையான
Jurgen Habermas, அவருடைய பிரெஞ்சு நண்பரான
Jaques Derrida
இருவருடைய இணைந்த கோரிக்கையை வெளியிட்டன. ஐரோப்பிய மக்களுக்கு அமெரிக்காவின் ஒருதலைபட்சத் திட்டங்களை
எதிர்க்குமாறு அது கேட்டுக்கொண்டுள்ளது. ''அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான ஆதிக்கத்திற்கு எதிராக ஐரோப்பா
தன்னுடைய செல்வாக்கை சர்வதேச அளவிலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பயன்படுத்தவேண்டும், வெளிப்படுத்தவேண்டும்''
என்று அந்தக் கோரிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கையைத் தொடர்ந்தும், ஆதரித்தும் பல முக்கிய ஐரோப்பிய இதழ்களில் நன்கறியப்பட்டுள்ள
புத்திஜீவிகள் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். இத்தாலிய எழுத்தாளர்
Umberto Eco, La Repubblica
வில் ஒரு கட்டுரையையும், எழுத்தாளர்
Adolf Muschg, Neue Zürcher Zeitung
என்ற இதழிலும், அமெரிக்க தத்தவ மேதை Richard
Rorty
Süddeutsche Zeitung இலும் கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிஞர்கள் புரையோடியுள்ள இடத்தைக் கண்டுள்ளனர் என்பதை ஒப்புக் கொண்டேயாக
வேண்டும். அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளும், பெரும்பாலான செய்தி ஊடகங்களும் போரை மறந்தும் மற்றும் ஒன்றுமே
நடக்காததுபோல் நடக்கையில் இந்த புத்திஜீவிகள் உண்மையைக் கூற தயங்கவில்லை.
ஆனால் அவர்களுடைய பிரதிபலிப்பு இரண்டும்கெட்ட, நடைமுறைக்கு ஒவ்வாத நம்பிக்கைகள்
இவற்றின் பரிதாப கலைவையாகத்தான் இருக்கின்றன. ஐரோப்பிய அரசாங்கங்கள் அமெரிக்காவின் உலக ஆளுமைய
உந்துதலைத் தடுத்து நிறுத்த, ஒன்றாக எதிர்க்க ''பல தலைப்பட்சமான சட்டபூர்வமான சர்தேச ஒழுங்குமுறை அமைப்பையும்,
சீர்திருத்தப்பட்ட ஐ.நா.வின் தலைமையில் ஒழுங்காகச் செயல்படும் உலக உள்நாட்டுக் கொள்கை வகுத்தலும் தேவை''
என்று வலியுறுத்தியுள்ளனர். ''அரசியல்வாதிகள் கொள்கை நெறியுடையவர்கள் என்று கட்டாயப்படுத்தப்பட வேண்டிய நிலை
ஒன்று பொதுமக்கள் கருத்திற்கு உண்டென்றால், அது இப்பொழுதுள்ள நிலைதான்'' என்று கூறியுள்ளனர்.
Jurgen Habermas உம்
Derrida உம் தங்கள்
நிலைப்பாட்டை மிகுந்த காலம்கடந்த நிலையில் கூறியுள்ளனர். சமீப வார நிகழ்வுகளில் ஏதேனும் ஒரு படிப்பினை உண்டு
என்றால் ஐரோப்பிய அரசுகள் முழுவதும், குறிப்பாக ஜேர்மனியின் சமூக ஜனநாயக- பசுமைக்கட்சி கூட்டணி அரசால் புஷ்
நிர்வாகத்திற்கு எந்தவிதமான எதிர்ப்பையும் காட்ட முற்றுமுழுதாக இயலாது என்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க
- பிரிட்டிஷ் ஈராக்கில் நடத்திய ஆக்கிரமிப்பு தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்து, போர் நடந்து முடிந்த பின்னர் சட்டபூர்வமாக்கிய
அளவில், பேர்லின், பாரிஸ் இவற்றின் அதிகாரபூர்வமான எதிர்ப்பு கேவலமான முறையில் சரிந்துவிட்டது.
அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர், வெளிநாட்டு அமைச்சர் ஜொஸ்கா பிஷ்ஷர் ஆகியோரின் பேர்லின்
அரசாங்கம் ஆரம்பத்தில் போரை நிராகரித்தது ஒரு தேர்தல் தந்திரம் மட்டும் அல்ல. அவர்கள் உண்மையிலேயே அமெரிக்கரின்
பொறுப்பற்ற வழி மத்திய கிழக்கில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி உறுதித்தன்மையைத் தகர்த்து, தங்கள் நலன்களையும்
பாதிக்கவைத்துவிடும் என்றுதான் கருதினர். தன்னுடைய பங்கிற்கு பிரான்ஸும் ஜேர்மனியின் நிலையை ஒரு சந்தர்ப்பமாக
கொண்டு தன்னை சர்வதேசரீதியான அமெரிக்காவிற்கு எதிரான சக்திகளுக்குத் தலைமை தாங்கித் தன் செல்வாக்கை உலக
அரங்கில் வளர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக நினைத்தது.
வாஷிங்டனின் கடுமையான பிரதிபலிப்பு இவ்விரு நாடுகளுக்கும் பெரிய அதிர்ச்சியைத் தந்தது.
தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி ஐரோப்பாவைப் பிரிக்க அமெரிக்கா மோசமான முறையில் நடக்கும் என்று அவை
எதிர்பார்க்கவில்லை.
அதே நேரத்தில், ஜேர்மன், பிரெஞ்சு அரசாங்கங்களின் போரெதிர்ப்பு ஒலியினால் ஊக்கம்
பெற்ற மில்லியன் கணக்கான மக்கள் தெருக்களில் வந்து போருக்கெதிரான எதிர்ப்புக்களைத் தெரிவித்தனர். சர்வதேச
அளவில் மிகப்பெரிய போரெதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பெப்ரவரி 15, 16 தேதிகளில் நடைபெற்றன.
Jurgen Habermas உம்
Derrida உம் இந்த
ஆர்ப்பாட்டங்களை மிகச்சிறந்த நிகழ்வுகளாகக் கருதி ''வரலாற்றுப் புத்தகங்களில் ஐரோப்பாவில் புதிய மக்கள்
தோன்றியுள்ளதற்கு அடையாளம் எனக் குறிப்பிடப்படும்'' என எழுதியுள்ளார்கள். இந்த ஆர்ப்பாட்டங்களை ஆதாரமாகக்
கொண்டு ஐரோப்பா, அமெரிக்காவிற்கெதிரான சக்தியைத் திரட்டும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்; ஆனால் மக்கள்
இயக்கத்திற்கும் அரசாங்கங்களுக்கும் இடையேயுள்ள மாபெரும் பிளவை அவர்கள் பார்க்கவில்லை.
பிரான்ஸ், ஜேர்மன் அரசாங்கங்களின் கொள்கைகள் பற்றி ஆர்ப்பாட்டக்காரர்களிடையே
மாயத்தோற்றம் இருந்தது என்பது உண்மையே. ஆயினும்கூட ஆழ்ந்த சமுதாய அடித்தளத்திலிருந்து ஆர்ப்பாட்டங்கள் வெளிப்பட்டதால்,
ஐரோப்பிய அரசாங்கங்களின் சமூகநலன் எதிர்ப்புத் திட்டங்களுக்கு எதிராக, ஐரோப்பிய அளவிலான இயக்கம்
தோன்றக்கூடிய திறன் இதற்கு உண்டு.
Jurgen Habermas உம்
Derrida உம் இந்தப்
பிரச்சினையின் முக்கியத்துவத்தை காணவில்லை. அவர்களுடைய முறையீட்டில் ஒரு சொல்கூட ஐரோப்பா (மற்றும் அமெரிக்க)
வில் உள்ள சமூக பிளவுகள் பற்றிக் கூறப்படவில்லை. மாறாக, அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை (EU)
அலங்கோல முறையில் துதிபாடியுள்ளனர்.
அவர்கள், "ஐரோப்பா மிகச்சிறந்த முறையில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இரண்டு
சிக்கல்களுக்கு விடை கண்டது" என்றனர். மேலும் ''ஐரோப்பிய ஒன்றியம் சிறந்த ''தேசிய அரசுகளுக்கு அப்பாலான
ஒரு ஆட்சிக்கு'' சிறந்த சான்றாகும் என்றும் ''நல்ல மாதிரியான ஐரோப்பிய பொதுநலத் திட்டம் பின்தங்கிவிடக்கூடாது
மற்றும் எல்லையற்ற அமைப்பாக அதிகரித்தவகையில் உருவாகும் பண்பற்ற முதலாளித்துவத்தின் எதிர்கால கொள்கைகளின்
நோக்கத்தின் இலக்காகி விடக்கூடாது'' எனவும் கூறியுள்ளனர்.
உண்மையில், ஐரோப்பிய ஒன்றியம் ''ஐரோப்பிய சமூகநல திட்டங்களை தகர்க்க விரும்பும்
மிக அதிக செல்வாக்கு படைத்த வர்த்தக நலன்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட அரசாங்கங்களின் இணைப்பு ஆகும்.
ஐரோப்பாவை மேலிருந்து ஒன்றுபடுத்தும் முயற்சியான ஐரோப்பிய ஒன்றியம், ஒருவகையிலும் ஐரோப்பிய மக்களின் ஒற்றுமைக்கான
வெளிப்பாடு என்று கூறப்படுவதற்கில்லை. ஐரோப்பாவின்
Maastricht திட்டத்தின்கீழ் ஒடுக்குமுறையான வரவுசெலவுத்திட்டம்
முந்தைய சமுகநலத் திட்டங்களைக் கைவிடும் அளவிற்குக் கடுமையானது என்பது
Jurgen Habermas
இற்கும் Derrida
இற்கும் தெரிந்திருக்கவேண்டும். தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும், புரூஸ்ஸல்ஸில்
இயங்கும் அதனுடைய அதிகாரத்துவமும் இரண்டுமே வேலைகளை அழித்து, பொதுநலத் திட்டத்தை தகர்க்கும் கைக்கூலிகளாகத்தான்
ஐரோப்பிய பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
வாஷிங்டனுக்கு அடிபணிவு
பிரான்சினதும், ஜேர்மனியினதும் அரசாங்கங்களும்,
Habermas இன்
சீடர் என ஒப்புக்கொண்டுள்ள ஜேர்மனிய வெளிநாட்டு அமைச்சர் ஜொஸ்கா
பிஷ்ஷரும் பாரிய ஆர்ப்பாட்டங்களிலிருந்து Habermas
உம்
Derrida உம் எடுத்துக்கொண்ட படிப்பினைகளுக்கு முற்றிலும் மாறான
முடிவுகளையே எடுத்துக்கொண்டுள்ளனர். அவ்வரசுகள், மிகச் சிறிய வயதுடையவர் உள்ளடங்கலாக மில்லியன் கணக்கான மக்களின்
தலையீட்டை தங்கள் சமுதாய, அரசியல் திட்டத்தை செயல்முறைப்படுத்துவதற்கு ஒரு எதிர்ப்பாக நினைக்கின்றனர். புஷ்
அரசாங்கத்தின் கூடுதலான அரவணைப்பைப் பெறவேண்டும் என்பதே அவ்வரசாங்கங்களுடைய கருத்து ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்ததின் மூலம்,
போரெதிர்ப்பு இயக்கத்தை அவர்கள் முதுகில் குத்தியுள்ளனர். இந்த வெட்கங்கெட்ட அடிபணிவின் அளவு, முக்கியத்துவம்
பற்றி மிகைப்படக் கூறத்தேவையில்லை. இதன்மூலம் புஷ் அரசாங்கத்தை வலுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ஐரோப்பா
முழுவதும் வலதுசாரிகளுக்கு ஊக்கம் கொடுத்துள்ளனர். தன்னுடைய ஈராக்கின் மீது தொடுக்கப்பட்ட போருக்கு ஐ.நா. ஒப்புதல்
அளித்துவிட்டது என்று புஷ் தன் நாட்டிலும் உலகெங்கிலும் பிதற்றிக்கொள்ள முடியும்.
Süddeutsche Zeitung பத்திரிகை
''புஷ் அரசாங்கம் தன்னுடைய ஆக்கிரமிப்பு கொள்கைக்கு காலங்கடந்தபின் ஒப்புதலைப் பெற்றுவிட்ட சிலவேளை
போருக்கு முன்னால் இதனைப் பெற அரும்பாடுபட்டது வீணானதா. ஐ.நா.வின் ஒப்புதல் முத்திரையையும் பெயரளவிற்கான
வரைமுறை, சட்டநெறி இவற்றையும் பெற்றுவிட்டது. வாஷிங்டனில் உள்ளவர்கள் இத்தீர்மானத்தை மற்றவரிடம் முகத்திற்கெதிரே
காட்டி, ''கவனியுங்கள், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் சபையே எங்களை ஈராக்கிய ஆட்சியாளராக ஒப்புக்கொண்டுவிட்டது.
இதன்மூலம் எங்களுடைய ஆக்கிரமிப்பையும், வலிந்துதாக்கும் கொள்கையையும் தவிர்க்கமுடியாது அங்கீகரித்துள்ளது. முன்னைய
சர்வதேசச் சட்டம் மடிந்துவிட்டது; அமெரிக்க ஏகாதிபத்திய சட்டங்கள் நீடுழி வாழ்க'' என கூறமுடியும் என எழுதியது..
பேர்லின், பாரிஸ் இரண்டினதும் பின்வாங்கலானது அநேகமாக ஈரானோ, சிரியாவோ இலக்காகவுள்ள
அடுத்த போரை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள சக்திகளின் கரத்தை வலுப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் தங்கள் அடிபணிவு
மூலம் ஷ்ரோடரும், பிஷ்ஷரும் தங்கள் அரசியல் வாழ்வின் புதை குழியையும் தாங்களே தோண்டிக்கொண்டதற்கான முக்கிய
அடையாளங்கள் காணப்படுகின்றன. சமூக ஜனநாயக கட்சியினுள்ளான வலதுசாரி பிரிவுகள் ஆரம்பித்துள்ள தாக்குதல்கள்
சமூக ஜனநாயக- பசுமைக்கட்சி கூட்டணியைத் துரத்திவிட்டு சமூக ஜனநாயக-பழைமைவாத எதிர்ப்பின் கூட்டணியாக மலரும்
வாய்ப்பு ஈராக் தொடர்பான பின்வாங்கலால் ஏற்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பின்படி சமூக ஜனநாயக கட்சி எப்பொழுதும் இல்லாத அளவு குறைந்த ஆதரவையே
கொண்டுள்ளது. ஷ்ரோடர் தன்னுடைய கட்சியையே தன் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு தொடர்ந்த இறுதி எச்சரிக்கைகளையும்
ராஜிநாமா செய்வேன் என்று கூறுவதும் அன்றாட வாடிக்கையாகப் போய்விட்டது. அச்சுறுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து
சமூக ஜனநாயக கட்சியில் பாதிப்பேர் அவருடைய வரவுசெலவுத்திட்ட வெட்டுக்களை -Agenda
2010- எதிர்க்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் அன்றாடம் கட்சியைவிட்டு
வெளியேறுகின்றனர். வலதுசாரி அணியினர் இதைப் பயன்படுத்தி ஜனநாயக அங்கீகாரம் இல்லாத அரசாங்கத்தை ஆட்சியில்
கொண்டுவரப் பார்க்கிறது. அத்தகைய அரசாங்கம் -Agenda2010-
விடக் கூடுதலான தாக்குதல்களை மக்கள்மேல் நடாத்தும்.
புதிய தொழிலாளர் கட்சியை உருவாக்குதல்
ஏதேனும் முக்கியப் படிப்பினை இந்த நிகழ்வுகளிலிருந்து எடுத்துக்கொள்ளப்படலாம் என்றால்,
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எதிர்ப்பு இயக்கம், இப்பொழுதுள்ள அரசாங்கங்கள், அமைப்புகளுக்கு எதிராகத்தான்
நடத்தப்படவேண்டும் என்பதுதான். போருக்கெதிரான போராட்டத்தையும், தொழிலாள வர்க்கம் பாடுபட்டு அடைந்த
கடந்தகால சமூகவெற்றிகளையும் பாதுகாப்பதையும் ஒன்றிணைக்கும் ஒரு புதிய சர்வதேச தொழிலாளர் கட்சி உருவாக்கப்பட
வேண்டும் என்பதாகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆபத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் தங்களுடைய
சொந்தப் பொறுப்பை அபிவிருத்தி செய்யவேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒத்துப்போதலோ சமரசம் செய்துகொள்ளுதலோ
உள்ள திட்டங்களை நிராகரிப்பதுடன், ஐரோப்பிய முதலாளித்துவம் வாஷிங்டனை நோக்கி விடும் சமரசக் கூவல்களால்
முட்டாள்களாக்கப்படக்கூடாது.
ஐரோப்பிய செய்தி ஊடகங்கள் அனைத்தும் எவ்வாறு நடந்துகொண்டால் அமெரிக்கரோடு
நல்ல உறவைக் கொள்ளலாம் என்ற சிந்தனையில் மூழ்கி உள்ளன. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான முரண்பாடு
என்பது தவிர்க்க முடியாது. அது இப்பொழுது உலக அமைதிக்கும், சமூக சமத்துவத்திற்கும், நீதிக்கும் பெரிய ஆபத்தாக
உள்ளது. ஐரோப்பிய முதலாளித்துவ முறை அதற்குக் வழங்கும் சலுகைகள் அதன் அடங்கா ஆர்வத்தை மேலும் வளர்க்கும்.
அமெரிக்காவோடு போரை எப்படித் தவிர்ப்பது என்பது பிரச்சினை அல்ல; மாறாக எப்படி அப்படிப்பட்ட முரண்பாட்டை
எதிர்கொள்வது என்பதுதான் வினா.
போருக்கும், இராணுவவாதத்திற்கும் எதிராக ஓர் அமைதிவாத முறை போதாதுள்ளது. அது
வெறும் சாத்வீகமான முறையாகத்தான் இருக்கும். தொழிலாள வர்க்கத்திற்கு ஊக்கமுடன் செயல்படவேண்டிய கொள்கை
ஒன்று தேவை. நேட்டோவை கலைப்பதற்காக! ஐரோப்பிய மக்களுக்கு மத்திய கிழக்கு, ஆபிரிக்க மக்களுடன் இணைந்த
கூட்டு பாதுகாப்பு தேவை!
தேவையானது ஒரு போரெதிர்ப்பு இயக்கமல்ல; அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான
ஒரு இயக்கம் தேவை.
அத்தகைய இயக்கம் ஒருபுறமும் ஐரோப்பிய, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தினதும் மறுபுறத்தில்
அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தினதும் வேறுபட்ட நலன்களை அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும்.
ஐரோப்பாவில் அமெரிக்க முறையிலான சமூக நிலைமைகளை சுமத்த முற்படும், ஷ்ரோடரின் ''Agenda
2010" இல் ஆரம்பித்து ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் முயற்சிகளுக்கு
எதிராக இருக்கவேண்டும்.
தங்களுடைய சொந்த மக்களுடனான முரண்பாடே ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தை
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணையை நாடச் செய்துள்ளது. 1940ல் நாஜி ஜேர்மனி பிரான்சைத் தோற்கடித்த பின்னர்
பெரும்பாலான பிரெஞ்சு ஆளும் வர்க்கம் Vichy
இன் France
அரசாங்கத்தை விரும்பியது, அதாவது வெற்றிபெற்ற பெரிய வல்லரசுக்கு சேவை செய்யும் அரசாக இருக்க விரும்பியது.
ஈராக்கியப் போருக்குப் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இளம் பங்காளியாகச் செயல்படும்
Vichy ஆக ஐரோப்பா
உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அப்படிப்பட்ட ஐரோப்பாவின் உள் நிலைமை
Vichy இன்
பிரான்சில் இருந்ததைவிடச் சிறப்பாக இராது. சக்தி வாய்ந்த வர்த்தக,
பொருளாதாரக் குழுக்களின் பிடியில்தான் அரசுகள் அமைக்கப்பட்டு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தகர்க்கப்பட்டு, வறுமைக்கூலி,
இராணுவாதம், ஜனநாயக உரிமைகள் அடக்கப்படுதல் ஆகியவைதான் தோன்றும். ஏற்கனவே பெரும்பாலான ஐரோப்பிய
வலதுசாரி அணியினர் -குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில்- சமுதாயத்தில் மிகக்குறைந்த அடித்தளத்தை கொண்டிருந்தாலும்
அமெரிக்க கொடிக்குப் பின்னால் அணிதிரண்டுள்ளன.
பெரிய வங்கிகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில் நிறுவனங்கள் இவற்றிற்கெதிரான
எம்முடைய பதில் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளாகும். இது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சோசலிச
கொள்கையின் அடித்தளத்தில் ஐரோப்பாவை கீழிருந்து மேலாக ஒன்றுபடுத்தலாகும்.
நாம் ஐரோப்பிய, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக
போராடுகின்றோம். உடலின் நிறம், தேசப் பின்னணியை கவனத்திற்கொள்ளாது சகல தொழிலாளருக்கும் தடையில்லாத
சமமான அரசியல், சமூக உரிமைகளை வழங்கும் எல்லைகளற்ற ஐரோப்பாதான் எமது நோக்கம். எமது இலக்கு ஏகாதிபத்தியத்திற்கு
எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒன்று திரட்டுவதேயாகும்.
அப்படிப்பட்ட கொள்கை வெறும் அமெரிக்க எதிர்ப்போடு பொதுவான தன்மை ஒன்றையும்
கொண்டிருக்கவில்லை. மாறாக, இது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை கவர்ந்திழுக்கும் ஒரு மகாத்தான துருவமாக
இருக்கும். இது அமெரிக்காவை எதிர்க்கும் முயற்சியல்ல, அமெரிக்க ஆளும் தட்டை எதிர்ப்பதாகும். இது அமெரிக்க ஏகாதிபத்தியம்
மாபெரும் ஆற்றல் வாய்ந்ததென்றோ, வெல்ல முடியாததோ அல்ல என்பதை விரைவில் தெளிவுபடுத்துவதுடன், மேலெழுந்தவாரியாக
தோன்றும் அதனுடைய சக்தி, ஐரோப்பிய அரசாங்கங்களின் கோழைத்தனத்திலும், அமெரிக்காவின் உத்தியோகபூர்வமான
அரசியல் எதிர்ப்பிலும் தங்கியுள்ளது என்பதை எடுத்துக்காட்டும். |