WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: Millions join one-day strike against pension cuts
பிரான்ஸ்: ஓய்வூதியக் குறைப்புக்களை எதிர்த்து மில்லியன் கணக்கில் தொழிலாளர்கள் ஒரு
நாள் வேலை நிறுத்தம்
By a WSWS Reporting Team
13 June 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
ஜூன் 10ம் தேதி, பிரெஞ்சு அரசாங்கத் தொழிலாளர்கள், தனியார்துறை ஊழியர்ளோடு
இணைந்து மாபெரும் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, பொதுப் போக்குவரத்தைச் சீர்குலைத்து அல்லது நிறுத்தி,
அஞ்சல் பணியையும் மற்றைய அடிப்படைப் பணிகளையும் நிறுத்தி வைத்தனர். கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக
இப்படிப்பட்ட ஒரு நாள் வேலைநிறுத்தம், பாராளுமன்றம், மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் ஓய்வூதியக் குறைப்புகளைப்
பற்றிய விவாதத்தை தொடங்க இருக்கும் நேரத்தையொட்டியே நடைபெற்றது.
சட்ட வரைவின்படி அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் 40 ஆண்டுகள்
உழைக்க வேண்டும். இப்பொழுது 37.5 ஆண்டுகளாகும். இது மேலும் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் 42 வருடங்களாக
உயர்த்தப்படும். ஒய்வூதிய நன்மைகளில் அதன் பாதிப்பு 30 சதவிகித குறைப்பு இருக்கும் என்றும் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்கிழமை வேலைநிறுத்த
நடவடிக்கை CFDT ஐ தவிர
(Confédération française démocratique du
travail), எல்லா முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புக்களாலும் அழைப்பு விடுத்ததன் பேரில்
நடைபெற்றது; இவ்வமைப்பு ஒய்வூதிய "சீர்திருத்தம்" பிரான்சின்
ஜனாதிபதி ஜாக் சிராக், பிரதம மந்திரி ஜோன் பியர் ரஃபரன் ஆகியோரின் வலது--மைய அரசாங்கத்தால்
(Le gouvernement de centre droit) தயாரிக்கப்பட்ட
ஓய்வூதிய "சீர்திருத்தம்" என்பதில் கையெழுத்திட்டது. CFDT
சோசலிஸ்ட் கட்சியின் வலதுசாரிப் பகுதியோடு மரபு முறையில் இணைந்ததாகும். கம்யூனிஸ்ட் கட்சியோடு நீண்டகால
உறவுகள் கொண்ட CGT மற்றும் நீண்டகாலமாய் சோசலிஸ்ட்
கட்சியோடு தொடர்புடைய FO (Force ouvrière)
ஆகியன, அதிகாரபூர்வமாக அரசாங்க நடவடிக்கையை எதிர்த்துள்ளதாகக் கூறியுள்ளன.
அஞ்சல்துறைப் பணியாளர்கள், இரயில்வே தொழிலாளர்கள், அரசு வங்கித் தொழிலாளிகள்,
தொலைத் தொடர்பு ஊழியர்கள், செவிலியர்கள் (தாதிகள்), ஆசிரியர்கள், எரிவாயு மற்றும் மின்சார ஊழியர்கள்,
நீதித்துறை, பாதுகாப்பு, சுங்கவரித்துறை அலுவலர்கள் ஆகியோரும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பொலிஸ் அதிகாரிகளும் பங்கு கொண்டனர்.
பாரிஸ் நகரத்தில் போக்குவரத்து முடங்கியது, போக்குவரத்து வாகனங்கள் தலைநகரத்திற்கு
வெளியேயும் பல மைல்கள் ஸ்தம்பித்து நின்றன. பொதுப் போக்குவரத்துத் துறையில் வேலை நிறுத்தத்தால் நகரப்
போக்குவரத்து மற்ற பல நகரங்களிலும் சிற்றூர்களிலும் சீர்குலைந்தது, மார்சைல்ஸ் உட்பட இங்கு வேலைநிறுத்தம் கிட்டத்தட்ட
முழுமையாக இருந்தது. உள்நாட்டு விமானப் போக்குவரத்தும் பெருமளவு குறைந்திருந்தது.
கணக்கிலடங்காத சிறு நகரங்களில் பல நாட்களாக குப்பை கூளங்கள் அகற்றப்படவில்லை.
பல செய்தித்தாள்கள் வரல்லை, சில வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களின் பணிகளும் தடைப்பட்டன.
30 சதவிகிதத்திற்கும் மேலான தொடக்கநிலை மற்றும் இடைநிலை
(Du primaire et du secondaire) ஆசிரியர்கள்
வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். கல்வித்துறை ஊழியர்கள் பெருமளவு வேலைநிறுத்த இயக்கத்தில் முன்னணியில் உள்ளனர்;
அவர்களும் ஆட்குறைப்பிற்கு எதிராகவும் 110,000 ஆசிரியரல்லாத ஊழியர்கள் தேசியப் பொது கல்வித் துறையிலிருந்து
உள்ளாட்சி மன்ற அதிகார வரம்பிற்கு மாற்றப்படுவதையும் எதிர்க்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், இரயில்வே
தொழிலாளர்களோடும் மற்றய பிரிவுகளின் தொழிலாளர்களோடும் இணைந்து ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்த
வேலைநிறுத்தத்தில் உள்ளனர், சிலர் மார்ச் மாத தொடக்கம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொலிஸ் மற்றும் தொழிற்சங்க மதிப்பீடுகளில் அதிக அளவு வேறுபாடு இருந்தாலும்
200,000 மக்கள் பாரிசிலும், மார்சைல்ஸிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 50 நகரங்களில் 5000க்கும் மேற்பட்டோர்
ஆர்ப்பாட்டம் செய்தனர்; 50,000 பேர் துலூஸ், கிளர்மான்ட்- பெரான்ட், கிரனோபில், மொன்ட்பெலியேயிலும்
மற்றும் ருவானிலும், அமியானிலும் 8000 பேர் என்ற அளவிலும் அணிதிரண்டனர்.
பாரிசில் மாபெரும் ஆர்ப்பாட்ட அணி,
Place de la Bastille லிருந்து, Place de la
Concorde வரை சென்றது; இதில் அனைத்து வயதினரும் அடங்கியிருந்தனர்; பள்ளி, பல்கலைக் கழக மாணவர்களிலிருந்து
பொது, தனியார் துறைகளின் பல பிரிவுகளையும் சேர்ந்திருந்த தொழிலாளர்கள் பங்கு பெற்றனர். மிகப் பெரிய அளவினர்
ஆசிரியர்களுடையதாக இருந்தது; ஆனால் வரி அலுவலகங்கள்,
EDF-GDF (பொது மின்சாரத்துறை, எரிவாயுத்துறை) ஆகியவற்றின் ஊழியர்களும் அதிக அளவு இருந்தனர்.
பெரிய குழுக்கள் FSU (பிரதான கல்விக் கூட்டமைப்புச்
சங்கம்) CGT மற்ற தொழிற்சங்கங்களின் பதாகைகளையும்
கொடிகளையும் உயர்த்திப் பிடித்தபடி அணிவகுத்து வந்தனர்.
வேலை நிறுத்தங்களினால் பாதிக்கப்பட்ட போதிலும் அரசாங்க ஊழியர்களுக்குப்
பொதுமக்களிடமிருந்து பரந்த அளவில் ஆதரவு இருந்தது. ஜூன் 7ம் தேதி
La Figaro பத்திரிகையில் வெளியிடப்பட்ட
வாக்குக் கணிப்பின்படி 66 சதவிகித பதில் கூறியவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு ஆதரவோ, பரிவுணர்வோ
காட்டியிருந்தனர்.
வேலை நிறுத்த இயக்கத்தை அதிகாரபூர்வமாக ஆதரித்தாலும்,
CGTயும் FO
தலைமையும், அது சிராக் --ரஃபரன் அரசாங்கத்திற்கு நேரடி அரசியல் சவாலை முன்வைக்கும் ஒரு மிகவும் பொதுமைப்படுத்தப்பட்ட
அணிதிரட்டலின் எல்லையை விடாமுயற்சியுடன் மட்டுப்படுத்த வேலைசெய்து வருகின்றனர். மைய--வலதுசாரி கூட்டணி
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான பிரதிநிதிகளைக் கொண்டுள்ள நிலையில், பிரதம மந்திரி ரஃபரன் பலமுறை எப்படியும்
ஓய்வூதியச் சட்ட வரைவை மன்றத்தில் நிறைவேற்றிவிடப் போவதாக பலமுறை அறிவித்துள்ளார்.
ஆயினும் கூட தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு இயக்கம் "அரசியல்" சார்ந்தது அல்ல
என்றும், அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எண்ணம் கிடையாது என்னும் நிலையைக் கொண்டுள்ளன. அதனுடைய நோக்கம்,
தொழிற்சங்கத் தலைவர்களின்படி, அரசாங்கத்தின் மீது ஒய்வூதியச் "சீர்திருத்தத்தை" கைவிடுதல், அல்லது அதைத்
திருத்துவதற்காக வெறுமனே அழுத்தம் கொடுப்பதாகும்.
சோசலிச மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் இயங்கும் "பன்மை இடது" பாராளுமன்ற
எதிர்ப்பின் பலதரப்பட்ட அரசியல் கட்சிகள் வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு இயக்கத்திலிருந்து தள்ளியே உள்ளனர்.
சோசலிச கட்சியின் முக்கியத் தலைவர்களான முன்னாள் பிரதமர் மிசேல் ரொக்கா (Michel
Rocard) போன்றோர் உள்ப்பட அரசாங்க மசோதாவிற்கு வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
செவ்வாயன்று ஒரு முக்கிய நிகழ்ச்சியாக அமைச்சர்களும் கல்வித்துறை அமைச்சரும், கல்வித்துறை
சங்கங்களும் கூடி, பிரான்சின் பல்கலைக் கழகங்களில் சேர்வதற்காக செகன்டரி மாணவர்கள் எழுத இருக்கும்
Baccalaureate தேர்வுகள் எந்த தடையுமின்றி நடத்தப்பட
அழைக்கும் கூட்டத்தை நடத்தினர். ஜூன் 12ம் தேதி தொடங்க இருக்கும் தேர்வில் 600,000 மாணவர்கள் முதல்
தாளான 'தத்துவம்' எழுத உள்ளனர். பல வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை
அதிகரிப்பதற்காக தேர்வைச் சீர்குலைத்து விடலாம் என்றும் நினைத்திருந்தனர்.
ஜூன் 10ம் தேதி, அமியான் உள்ப்பட
Somme பிராந்தியத்திலிருந்த 400 கல்வித்துறை வேலைநிறுத்தக்காரர்கள் கூடி எந்தச் சரியான வழியைக்
கையாண்டால் Baccalaureate தேர்வுகள் நடத்த
முடியாமற் போய்விடக்கூடும் மற்றும் தேர்வு மையங்களில் சக்திமிக்க மறியலை நடத்தலாம் என்பதையிட்டு பிரதான கலந்துரையாடல்
இடம்பெற்றது. FSU-ல் மிகப்பெரிய சங்கமான
SNES இடைநிலை கல்வி ஆசிரியர் தொழிற் சங்கங்களில் முக்கியமானது,
பெரும் கோபத்தைத் தூண்டி விட்டது. Le Mondeல்
வெளிவந்த SNES ஜூன் 12 அன்று வேலைநிறுத்தம் இருக்குமெனக்
கூறப்போவதாக அறிவிக்கப் போகிறது என்று இருந்தது; இதைத் தொழிற்சங்க அறிக்கை மறுதலித்தது.
ஜூன் 10ல் கல்வி அமைச்சர்களுக்கும் கல்வித்துறைச் சங்கங்களுக்கும் இடையே
நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் ஒன்றைக் கொடுத்து ஒன்று வாங்கிய
(qud pro quo)
நிலையைக் காட்டியது. உள்ளாட்சி அரசுக்குப் பொறுப்பான உள்துறை அமைச்சர், 20,000 பள்ளி மருத்துவர்கள்,
மனநோய் மருத்துவர்கள், சமூகப் பணியாளர்கள் கல்வித்துறையிலேயே தொடருவார்கள் என்ற உறுதியைக் கொடுத்தார்;
பதிலுக்கு தொழிற் சங்கங்கள் Baccalaureate தேர்வுகள்
தடையின்றி நடைபெறும் என்று உத்தரவாதம் அளித்தன.
அறிக்கையானது: "இளைஞர்களின் நலம் கருதி, தொழிற்சங்கங்கள், தேர்வுகளுக்கு
எதிராக எந்தவிதமான முறையிலும், புறக்கணிப்போ, தடையோ நடவடிக்கையோ வந்தால், அவற்றைத் தாம் எதிர்க்கும்"
என பிரகடனப்படுத்தியுள்ளது. தன்னுடைய பங்கிற்கு கல்வி அமைச்சர்
Luc Feery
அரசாங்கத்தின் நோக்கமான பல்லாயிரக்கணக்கான தொழிலாளரைத் தேசிய கல்வி சேவையிலிருந்து மாற்றிவிடுவதில்
எந்த மாற்றமும் கிடையாது என்பதை, "எந்த வகையிலும் சீர்திருத்த திட்டங்கள் திரும்பப் பெறப்பட மாட்டாது" என
கூறிவிட்டார்.
பாரிசிலும், அமியானிலும் உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கான
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மே 24 உலக சோசலிச வலைத் தளத்தின் அறிக்கையான "பிரான்சில்
தொழிலாளர்களின் ஓய்வூதியங்களைப் பாதுகாக்க ஒரு அரசியல் மூலோபாயம்" என்பதன் புதுப்பிக்கப்பட்ட
பதிப்பை ஆயிரக் கணக்கில் விநியோகித்தனர்.
(ஆசிரியர் குறிப்பு: WSWS,
பாரிசிலும் அமியானிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தோர் உடன் கண்ட
பேட்டிகளை அடுத்துவரும் நாட்களில் வெளியிடும்.)
See Also :
பிரான்ஸ்: வேலை நிறுத்தங்கள், ஓய்வூதியத்தின்மீதான தாக்குதல்களை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டங்கள்
ஓய்வூதிய வெட்டுக்களை எதிர்த்து மில்லியன் தொழிலாளர்கள் பிரான்சில் நடத்திய பேரணி
பிரான்சில்
தொழிலாளர்களின் ஓய்வுதியங்கள் மீதான தாக்குதலை எதிர்த்துப்
போராட ஒரு அரசியல் மூலோபாயம்
பிரான்ஸ்:
ஓய்வூதிய உரிமைகளை தற்காத்து நிற்பதற்கு சர்வதேச இயக்கம் தேவை
Top of page
|