:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரித்தானியா
Crisis over missing Iraqi WMDs
Britain: Blair, advisor boycott parliamentary inquiry
காணாமற்போன ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய நெருக்கடி
பிரிட்டன்: பிளேயர், ஆலோசகர் பாராளுமன்ற விசாரணையைப் புறக்கணிக்கின்றனர்
By Chris Marsden
12 June 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
பிரதம மந்திரி டோனி பிளேயரும் அவருடைய செய்தித் தொடர்பு இயக்குநரான அலஸ்டைர்
காம்ப்பெல்லும் (Alastair Campbell), அவர்கள்
வேண்டுமென்றே பொய் கூறினரா அல்லது உளவுத்துறை அறிக்கையை திரித்தனரா என்பது பற்றி பாராளுமன்ற கீழ் பிரிவான
மக்கள் மன்றத்தின் அயலுறவுக் குழு நடத்தும் ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய விசாரணையில் தாங்கள்
சாட்சியம் கொடுக்கமாட்டோம் என்று தெளிவாகக் கூறிவிட்டார்கள்.
ஈராக் மீதான போருக்கு முன்பு இப்பொழுது நம்பகத்தன்மை இழந்துவிட்ட இரண்டு
உளவுத்துறை அறிக்கைகள் வெளியிடப்பட்டது தொடர்பாக தனிப்பட்ட நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற
கோரிக்கையை நிராகரித்து, பாராளுமன்ற உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக்குழு அப்பணியைச் செய்தால் போதும்
என்று பிளேயர் கூறிவிட்டார்.
இந்தக் குழு பிரதம மந்திரியால் நியமிக்கப்பட்டு,
M15, M16, உளவு மையம்
GCHQ ஆகியவற்றின் செலவினங்கள், நிர்வாகம், கொள்கை,
ஆகியவற்றை ஆராய்ந்து வருகிறது. பாராளுமன்றத்தின் இரு பிரிவுகளிலிருந்தும் வெவ்வேறு கட்சியிலிருந்து நியமிக்கப்படும்
ஒன்பது உறுப்பினர்கள் தொழிற் கட்சியின் தலைமைக் கொறடாவான ஆன் டெய்லரின்
(Ann Taylor) தலைமையில் அமைந்துள்ளது. அது தனியாகக்கூடித்
தன் கருத்துக்களைப் பாராளுமன்றத்திற்குக் கொடுக்காமல், பிரதம மந்திரிக்கே அளிக்கும்; பிளேயர் அது மூடிமறைப்பு
செய்யக்கூடியது என நம்புகிறார்.
ஆனால்- பாராளுமன்ற விவாதத்தில் லிபரல் டெமக்ராட் நீதி விசாரணை வேண்டும் என்று
கொண்டு வந்த தீர்மானத்தையடுத்து - அயலுறவு அமைச்சகம் "ஈராக்கில் போர் தொடுக்கப்படும் வரையிலான
அளவு, குறிப்பாக ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்களைப் பொறுத்தவரையில், சரியான அளவு முழுத் தகவலையும்,
பாராளுமன்றத்திற்கு அளித்ததா என்பது பற்றி, அயலுறவுக் குழுவே தன்னுடைய விசாரணையை மேற்கொள்ளலாம்
என்பதை ஜூன் 4ம் தேதி முடிவால் பிளேயரும் காம்ப்பெல்லும் மிகவும் வெளிப்படையாக ஏற்க நேரிட்டது.
அயலுறவுக் கொள்கைக் குழு தொழிற் கட்சியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது மற்றும் அதன்
தலைமையில் நடத்தப்படும் விசாரணை, லிபரல் டெமக்ராட்ஸ், டோரிகள், மற்றும் கையளவே ஆன தொழிற்கட்சியிலிருந்து
பிரிந்து சென்றவர்கள் தலைமையிலான நீதி விசாரணையைவிட ஆபத்துக் குறைவானதே. ஆனால் பெரும்பாலான விசாரணை
முறைகள் பொதுவில் நடத்தப்படும் மற்றும் இதன் அறிக்கை பாராளுமன்றத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.
இதனுடைய தலைவர் டோனால்ட் ஆண்டர்சன் MP (தொழிற்கட்சி),
``இவ்விசாரணை கூடுதலான நம்பிக்கையூட்டும் தன்மையைப் பெற்றிருக்கும் - உளவு, பாதுகாப்புக் குழு விசாரணையைவிட"
என்று கூறியுள்ளார்; ஏனெனில் ISC உறுப்பினர்கள் "பிரதம
மந்திரியால் நியமிக்கப்பட்டு அவரிடமே அறிக்கை கொடுக்கும்... அதைப் பற்றிய நம்பிக்கைச் சிக்கல், எங்கள் விசாரணையில்
அமையாது`` என்று கூறியுள்ளார்.
இது பிளேயர் நினைத்துப் பார்க்க விரும்பாத "வெளிப்படைத் தன்மையையும்", "பொறுப்புக்
கூறும் தன்மையையும்" கொண்டிருக்கும். ஒரு பாராளுமன்றக் குழுவின் முன் பொய் பகர நேர்ந்தால் அது அவருக்கு
அரசியல் ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே தன்னுடைய உதவியாளர்கள் மூலமாக தான் மக்கள் மன்ற தொடர்புக்குழு
விசாரணையில் சாட்சியம் அளிக்க இருப்பதாகக் கூறினார்; இக்குழுவில் எல்லா சிறப்புக் குழுக்களின் தலைவர்களும் உள்ளனர்;
ஆண்டுக்கு இரு முறை இக்குழுவில் அவர் கலந்துகொள்வார் - இப்பொழுது ஈராக் பற்றிய பிரச்சினைகளைப் பற்றிப்
பேச இது மிகவும் அவருக்குப் பொருத்தமான இடமேயாகும்.
காம்ப்பெல்லைப் பொறுத்தவரையில் இந்த நொண்டிச் சாக்கையும் கூற முடியாது. அயலுறவுக்
குழு அவருடைய சாட்சியம் தேவை என்று விரும்பியுள்ளது; ஏனெனில் அவருடைய துறை தான் பெப்ரவரியில் வெளியிடப்பட்ட
ஈராக்கிய பேரழிவு ஆயுதங்கள் பற்றிய அரசாங்கத்தின் இரண்டாவது கோப்புத் தொகுப்பைத் தயாரித்தது;
பெரும்பாலும் ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய அறிக்கையை, 12 ஆண்டுகளான ஒரு அமெரிக்க மாணவர் எழுதிய
ஆய்வுக் கட்டுரை உள்ளடங்கலான, பொதுவில் கிடைக்கும் பல பத்திரங்களில் இருந்து கருத்துத் திருடி, தன் பெயரில்
தயார் செய்தது.
கோப்புத் தொகுப்பு கூட்டு உளவுத்துறைக் குழுவின் பெயரில் வெளிவந்தது; உண்மையில்
அதனுடைய ஒப்புதல் இல்லாமல், ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் அமெரிக்க அரசுத்துறை செயலாளர் கொலின் பவல்
தன்னுடைய வாதத்தை வலுப்படுத்த இதைப் பயன்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டது.
ஜூன் 10ல் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக்குழு தன்னுடைய ஆண்டறிக்கையைச்
சமர்ப்பித்தது. பிளேயரின் சங்கடத்தைக் கூடுதலாக்கும் வகையில் இரண்டாவது "அவலமான கோப்புத் தொகுப்பு"
எம்16ன் ஒப்புதல் இல்லாமல் வெளிவந்தது என்பதைப் பற்றிய தெளிவாக குறைகூறல், பிளேயரை இன்னும் சங்கடமான
நிலைக்குள் ஆழ்த்தி உள்ளது. குழுவின் விமர்சனங்கள் M16 தலைவர்
சேர் ரிச்சார்ட் டியர்லவ் (Sir Richard Dearlove)
அளித்த சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
``உளவுத்துறை பொறுப்பாகப் பயன்படுத்தம்.... பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட
வேண்டும்`` என்று கூறிய குழுவின் ஆண்டறிக்கை மேலும் தெரிவித்தது: ``அவர்களின் அறிக்கைகள் ஏதேனும் வெளியிடப்படும்
முன்னர் குறிப்பிட்ட உளவுத்துறையின் ஆலோசனை கட்டாயமாகக் கேட்கப்பட வேண்டும்.``
செப்டம்பர் 2002ல் வெளியிடப்பட்ட கோப்புத் தொகுப்புக்களில் உள்ள கூற்றுகள் மிகப்படுத்தப்பட்டவையா
என்பது பற்றியும் தான் ஆராயும் என்று உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக் குழு கூறியுள்ளது. முதல் கோப்புத்
தொகுப்பில், ஈராக் தொடர்ந்து இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதத் தயாரிப்புத் திட்டத்தைக் கொண்டுள்ளதாகவும்,
ஆபிரிக்காவில் இருந்து அணு ஆயுதத் தயாரிப்பு மூலப்பொருட்களைப் பெற இருப்பதாகவும் உள்ளது. பிந்தைய கூற்று
ஆவணங்கள் சிலவற்றை ஆதாரமாகக் கொண்டிருந்தது, ஐ.நா. இவற்றைச் ``சிறு பிள்ளைத்தனமானது,`` ``வெளிப்படையான
போலித் தயாரிப்புக்கள்`` என்று அறிவித்துவிட்டது.
ஆன்டெய்லர், பிளேயரோ அல்லது காம்ப்பெல்லோ உளவு மற்றும் பாதுகாப்புக் குழுவின்
ஈராக் பற்றிய விசாரணையில் விசாரிக்கப்படுவார்களா என்பதைப் பற்றி உறுதி செய்ய மறுத்துவிட்டார்.
பிரதம மந்திரியும் அவருடைய உயர் புனைந்துரை ஆலோசகரும் அயலுறவுக் கொள்கைக்
குழு முன்பு சாட்சியம் சொல்ல மறுத்தது. அவர்களுக்கெதிராகப் புதிய அரசியல் தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. கன்ஸர்வேடிவ்
கட்சித் தலைவர் Iain Duncan Smith, பிளேயருக்கு
எழுதியுள்ள கடிதத்தில், ``எந்த ஒரு டெளனிங்தெரு பற்றிய விசாரணையிலும் - உளவுத்துறையைப் பற்றியதில் - மிஸ்டர்
காம்ப்பெல்லின் சாட்சியம் எடுக்கப்படவில்லை என்றால் அதை நம்ப முடியாது.... கடந்த வாரம் நீங்கள்
உறுதியளித்தது போல், குழு நன்கு ஆராய்ந்து தீர்ப்புக் கூறுவதற்கு, அலெய்ஸ்ஸ்டர் காம்ப்பெல் அழைக்கப்பட்டால்
வருவார் என்பதற்கு நீங்கள் உத்தரவாதம் தரமுடியுமா?`` எனக் கேட்டுள்ளார்.
ஆனால் பிளேயரும் காம்ப்பெல்லும் இத்தகைய எதிர்ப்புக்களைச் சமாளிப்பது சாட்சியம்
கூறுவதைவிடக் குறைவான கெடுதலையே தரும் என்று கணக்குப் போட்டிருப்பார்கள்.
தற்பொழுது பிளேயர் ஜூன் 4ம் தேதி பாராளுமன்றத்தில் தீர்மானத்தின் மீதான விவாதம்
நடைபெற்றபோது இருந்த பரிதாபகரமான எதிர்ப்பை - 11-லேபர் எம்.பி.க்களைத் தவிர மற்ற அனைவரும் அவர்
பக்கம் இருந்தனர் - மட்டும் சந்திக்கவில்லை. போரை நியாயப்படுத்துவதற்காக கூறிய பொய்கள் அனைத்தும், அமெரிக்காவும்
பிரிட்டனும் இணைந்து நடத்திய எண்ணெய்க்கான போரை எதிர்க்கப் பாடுபட்ட மில்லியன் கணக்கான தொழிலாளிகள்
முன்பு அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
ஈராக்கின் WMD திட்டங்களைப்
பற்றி அரசாங்கம் வேண்டுமென்றே பொய் சொல்லியுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், பின்னர் அது சட்ட விரோதமான
ஆக்கிரமிப்புப் போராகக் கருதப்பட்டு, ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷூம், பிளேயரும் அவர்களுடைய உதவியாளர்களும்
போர்க் குற்றவாளிகள் என்று குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC)
-ஹேக்கில் உள்ளது- ஏற்கனவே பிளேயரின் மீது குற்றஞ்சாட்டப்பட்டு போர்க் குற்றவாளியென்று ஏதென்ஸ் வழக்கறிஞர்
சங்கத்தால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது ரபிந்தர் சிங்
Q.C. எனும் மாட்ரிக்ஸ் சேம்பர்ஸில் உள்ள முக்கியமான
பன்னாட்டு மனித உரிமைகள் வழக்கறிஞர், பேரழிவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற அடிப்படையைக்
கொண்டு, நீதி மறு ஆய்வு நடத்த அழைப்பு விடுத்துள்ளார் -
பிளேயரின் மனைவியார் Cherie
மாட்ரிக்ஸ் சேம்பர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களில் ஒருவர் ஆவார்.
ஜூன் 8ம் தேதி சிங்கின் சட்டக் கருத்தை ஆதாரமாகக் கொண்டு
Observerல் வந்துள்ள கட்டுரை ஒன்று -அணுவாயுதக் கலைப்புப்
பிரச்சாரம் மற்றும் பிற அமைதிக் குழுக்களுக்காகத் தயார் செய்தது - முதலில் அட்டர்னி ஜெனரல், கோல்டுஸ்மித்
பிரபு கூறிய போர் சட்டரீதியானது என்ற மூலக் கருத்து இப்பொழுது பொருந்தாது என வாதிடுகிறது, ஏனென்றால்
ஈராக்கிடம் இல்லாத பேரழிவு ஆயுதங்களைப் பறித்துவிடுவதற்காக அப்போர் தொடக்கப்பட்டது.
அவருடைய சட்டக் கருத்தின் சுருக்கம் கூறுகிறது: ``அமைச்சரவை உறுப்பினர்களாக சமீபத்தில்
இருந்தவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்களின்படி, பேரழிவு ஆயுதங்கள் உள்ளது பற்றிய சான்றுகள் மிகைப்படுத்தப்பட்டு
மார்ச் 2003ல் ஈராக்கியப் போரை அமெரிக்கா, பிரிட்டன் தொடக்கும் முன்பு அட்டர்னி ஜெனரலின் கருத்தான
சர்வதேச சட்டத்தின்படி ஆக்கிரமிப்பு செல்லும் என்பதைக் கேள்விக்குட்படுத்துகிறது. எங்கள் கருத்தில், எனவே நீதி
விசாரணை நடத்துவதற்குப் போதுமான சட்டக் கேள்வி இதில் அடங்கியுள்ளது.
சிங் முடிக்கிறார்: ``இரு பாராளுமன்றத் தீர்மானங்களையும் எந்த அவமதிப்பிற்கும்
உட்படுத்தாமல், அவை நடைபெற இருக்கிற அளவில், நாம் ஒரு நீதி விசாரணைக்குத் தேவையான வலுவான வழக்கு
இருப்பதாகக் கருதுகிறோம்; அடிப்படையில் இவை சட்டப் பிரச்சினைகள்.... சட்டப் பிரச்சினைகளைத் தீர்மானித்தல்
மற்றும் சாட்சியங்களை ஆராய்தல் சாராம்சரீதியாக சுதந்திரமான நீதிபதிகளின் பணி ஆகும்.
CND யும் மற்றய குழுக்களும் சிங்கின்
சட்டக் கருத்தைப் பயன்படுத்தி உயர்நீதிமன்றத்தில் நீதி மறு ஆய்வு செய்ய இருக்கின்றன.
Observer:
``ஒரு செயல் வெற்றியடைந்துவிட்டால், பிரதம மந்திரி போர்க் குற்றங்களுக்காகத் தன் மனைவியின் அலுவலகத்தினால்
வழிநடத்தப்படும் நடவடிக்கையின் மூலம் விசாரணைக்குட்பட நேரிடும்.`` எனக் கூறுகின்றது
Top of page
|