World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US raid on Palestinian embassy in Baghdad: an act of political gangsterism

பாக்தாதின் பாலஸ்தீனியத் தூதரகத்தில் அமெரிக்கச் சோதனை: ஓர் அரசியல் கொள்ளைக்காரத்தனம்

By Jean Shaoul
5 June 2003

Back to screen version

மே மாதக் கடைசியில் பாக்தாதிலுள்ள பாலஸ்தீனியத் தூதரகத்தைச் சோதனை செய்து அமெரிக்கப் படைகள் சேதப்படுத்தின. உயர் தூதரக அதிகாரி உட்பட தூரகத்தைச் சார்ந்த 11 பணியாளர்களைக் கைது செய்தனர். அவர்களைப் பற்றிய தகவல் ஏதும் அதற்குப் பின்னர் தெரிவிக்கப்படவில்லை. இந்த சோதனை சட்ட விரோதமான அடித்தளத்தில் போரை ஆரம்பித்து ஈராக்கை ஆக்கிரமிக்கும் அமெரிக்கப் படைகளின் அரசியல் கொள்ளைக்காரத்தனமாகும். இஸ்ரேலின் நிதிச் செயலரும் பழைய தலைமை அமைச்சருமான பெஞ்சமின் நெடன்யாஹுவின் நேரடி வேண்டுகோளையொட்டி இத்தூண்டிவிடப்பட்ட செயல் நடைபெற்றது.

AP செய்தி அறிக்கை ஒன்று தூதரகப் பணியாளர் ஒருவரான மொகமது அப்துல் வகாப் பின்வருமாறு கூறியதாக தெரிவித்துள்ளது: "அவர்கள் எங்களுடைய தண்ணீர் போத்தல்களளையும், உணவு பாத்திரங்களை கூட எடுத்துச் சென்றுவிட்டனர், அவர்கள் சாதாரணத் திருடர்களைப் போல நடந்து கொண்டுள்ளனர்.''

வகாபின் சொற்களின்படி, மே 28ம் தேதி நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் கவசமணிந்த இராணுவ வண்டிகள் பாதுகாப்போடு தூதரகத்தில் நுழைந்தன. வாயிற் காவலர்கள் கதவைத் திறந்தவுடன் அவர்கள் உடனே கைது செய்யப்பட்டு கை விலங்கிடப்பட்டனர். இராணுவ வீரர்கள் கட்டிடத்திற்குள் விரைந்து வந்து அதிகாரிகள், வண்டி ஓட்டுனர்கள், தோட்டக்காரர்கள், தூதுவர் இல்லா நிலையில் பதவியில் இருக்கும் தூதரக பொறுப்பாளரான Najah Abdul Rahman உட்பட எல்லோரையும் சிறைபிடித்தனர். அவர்கள் அமெரிக்கர்களால் நகரத்தின் நடுவிலுள்ள அமெரிக்கத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இன்னமும் அங்கு சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர் கதவுகளை உதைத்து தள்ளியும் உடைத்தும் உள்ளே நுழைந்தனர். பல தூதரகக் கதவுகளிலும் காலணிகளின் ஆணித்தடங்கள் உள்ளன. அத்துடன் திறவுகோல்களை வாயிலில் இருந்த அல்லது வெறுமே மூடப்பட்டு இருந்தபோதிலும் கூட துப்பாக்கிகளால் கதவை உடைத்தும் உட்புகுந்தனர். கோப்புக்கள் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு பல கோப்புக்களும் எடுக்கப்பட்டுவிட்டன. தூதரகப் பணப் பீரோவின் கதவுகளைத் தகர்த்து அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டனர். மேலும் பாலஸ்தீனிய ஜனாதிபதி யாசீர் அரபாத்தின் அதிகாரபூர்வ புகைப்படத்தை நொருக்கியதோடு அதைத் தரையிலும் வீசியெறிந்தனர்.

இராணுவ வீரர்கள் இரண்டு தூதரகக் கொடிகளையும் 3 AK-47 தானியங்கித் துப்பாக்கிகளையும் பறித்துச் சென்றுவிட்டனர். பாக்தாத்தில் அமெரிக்க கைப்பற்றுதலையடுத்து கட்டிடத்தைப் பாதுகாக்க இவை பயன்படுத்தப்பட்டுவந்தன என்றார் வகாப்.

''ஓர் அயல்நாட்டுத் தூதரகத்தைத் தாக்குவது குற்றச் செயலாகும். இராஜதந்திர காப்பு நெறியை மீறியதாகும்'' என்றார் வகாப்.

தூதரகப் பணியாளர்கள் தன்னியங்கி துப்பாக்கிகளை வைத்துக்கொள்ள அனுமதி இல்லையென்றும், இது தூதரகப் பணியாளர்கள் பயங்கரவாதத்தோடு தொடர்புடையவர்கள் என்பதற்கு நிரூபணம் என்றும் அமெரிக்கப் படைகள் கூறினர். சதாம் ஹூசேனின் அரசாங்கத்திடமிருந்து இதற்கு உரிமை பெற்றிருந்ததாக வகாப் தெரிவித்தார். ''ஒவ்வொரு தூதரகத்திலும் துப்பாக்கிகள் உள்ளன. கொள்ளையடிப்போரிடமிருந்து காப்பாற்ற நாங்கள் அவற்றைப் பயன்படுத்துவதற்காக'' வகாப் கூறினார்.

பல வெளிநாட்டு அமைப்புக்களும், செல்வந்தரான ஈராக்கியரும் ஹூசேனின் ஆட்சியை அமெரிக்கர் வீழ்த்திய பின்னர் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்ததை அடுத்து ஆயுதமேந்திய காவலரை வாடகைக்கு அமர்த்தி உள்ளார்கள்.

இந்தச் சோதனையைத் தொடர்ந்து துருப்புக்கள் தூதரகத்தை சீல் வைத்து மூடியதுடன், முக்கிய வாயில்கதவைச் சுற்றிலும் முள் வேலியும் அமைத்துள்ளனர்.

அடுத்த நாள் ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தரைப் படைகளின் தளபதியான அமெரிக்கத் தளபதி டேவிட் மக்கிர்மன் (David McKiernan) சோதனையை நடத்தியதாக ஒப்புக்கொண்டு ஏழு பாலஸ்தீனியரும் ஒரு சிரிய நாட்டவரும் உட்பட 8 பேர்கள் மட்டுமே சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அவர்களில் எத்தனை பேருக்கு தூதரக அந்தஸ்து இருக்கிறது என்று தனக்குத் தெரியாது என்றார் அவர். ''எங்கள் வீரர் ஒருவரை இழந்த பாக்தாத் பகுதியில் இது நடந்தது'' என்றார் அவர். பாலஸ்தீனியர்கள்தான் அதற்குப் பொறுப்பு என்பது போலும், தூதரகம் பயங்கரவாதிகள் ஆயுதங்களை வைத்துக்கொள்ளும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது என்ற கருத்தை அவர் இவ்வாறு சூசகமாகத் தெரிவிக்கிறார்.

அதற்கும் அடுத்த நாள், அமெரிக்க வெளிநாட்டு திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பெளச்சர் (Richard Boucher), சதாம் ஹூசேன் ஆட்சியின் கீழ் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட எல்லா தூதர்களுக்கும் வழங்கிய தூதரக பாதுகாப்பு நெறிகள் அனைத்தும் இப்போது உண்டு எனக் கூறவியலாது என்றும் அவர்கள் தூதுப் பாதுகாப்பையோ சதாம் ஹூசேன் அளித்த சலுகைகளையோ தொடர்ந்து எதிர்பார்க்கலாம் எனக் கூறுதற்கில்லை என்று அறிவித்துவிட்டார். ஈராக்கில் புதிய அரசாங்கம் ஏற்படும் வரையில் வெளிநாட்டுத் தூதர்கள் வருவதைத் தவிர்க்க அமெரிக்கா முனைவதாகவும், உண்மையில் இதுவரையில் அவர்கள் இங்கிருப்பதில் எந்த தேவையும் இல்லை என்றும் கூறினார். மேலும் அமெரிக்கப் படையின் அனுமதியுடன் அங்கே உள்ள தூதர்களுக்குகூட தூதரக பாதுகாப்பு கிடையாதென்றும் கூறிவிட்டார்.

இந்தச் சோதனை ஏப்ரல் 7ம் தேதி வேண்டுமென்றே இந்தத் தூதரகம் குண்டு வீச்சுக்குட்பட்டதைத் தொடர்ந்த செயலாகும். வானிலிருந்து நேரடியாகத் தரையை இலக்கு கொண்ட ஏவுகணை ஒன்றினால் பட்டப்பகலில் இந்தக் கட்டிடத்திற்கும் அதனுள்ளே இருந்த பொருள்களுக்கும் சேதங்கள் விளைந்தன. பாக்தாதில் தூதரகங்கள் உள்ள பகுதியில் இந்தக் கட்டிடம் உள்ளது.

ஒரு பாலஸ்தீனிய அதிகார செய்தித் தொடர்பாளர் ''வேறு எந்த தூதரகங்களும் அந்த குண்டு வீச்சின்பொழுது தாக்கப்படவில்லை. இது திட்டமிடப்பட்டு வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் எதிர்பாரா விபத்து எனக் கூறுவதற்குமில்லை. இது அனைத்து இராஜதந்திர மரபுகளுக்கும் நெறிகளுக்கும் புறம்பானது என்பது ஆகும்; ஏனெனில் தூதரகங்கள் பாதுகாப்பிற்கு உட்பட்டவை, இராணுவ நடவடிக்கைகள் அவற்றின் மீது மேற்கொள்ளப்படக் கூடாது'' என தெரிவித்திருந்தார்.

அந்தத் தாக்குதலுக்கு முன்தினம்தான் பாலஸ்தீனிய சிவிலிய அகதிகள் வாழ் பகுதியில் குண்டு வீச்சு நடந்தது; 1948ல் சியோனிஸ்ட் அரசு இஸ்ரேலில் அமைக்கப்பட்ட காலத்திலிருந்து, பாலஸ்தீனியர்கள் அங்கு வசித்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட போர்க்காலத்திற்குரிய மரபுகள் ஒவ்வொன்றையும் அமெரிக்கர்கள் கிழித்து எறிந்துள்ளனர். எதையும் தாங்கள் செய்யலாம் என்ற காலத்தில் அவர்கள் உள்ளனர். எதுவும் நடக்கலாம். அதனுடைய ஈராக்கின் மீதான சட்ட விரோதப் போரின்பொழுது வாஷிங்டன் போரைப் பற்றி எழுத வந்துள்ள பத்திரிக்கையாளர்களைத் தாக்கிக்கொன்றதுடன், குறிப்பாக பாக்தாத்திலுள்ள அல் ஜஸீரா தொலைக்காட்சி நிலையத்தை தாக்கியது. 1999ல் சேர்பியா மீது அமெரிக்க தலைமையில் நடைபெற்ற போரின்போது பெல்கிரேடிலிருந்த சீனத் தூதரகத்தைத் தாக்கியது. இவை அது செய்த பல அட்டூழியங்களில் ஒரு சிலவாகும்.

பாலஸ்தீனியத் தூதரகத்தை அமெரிக்கர் தாக்கியது அவர்கள் எண்ணத்தைக் எடுத்துக்காட்டுவதில் முக்கியமானது. முதலில் இது பாலஸ்தீனியர்கள் ஈராக்கிற்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்புடையதாகக் காட்டப் பயன்படுவதோடு, இஸ்ரேல் கேட்பதற்கு இணங்கி பாலஸ்தீனியரை அச்சுறுத்தும் முயற்சியாகவும் அமைந்துள்ளது.

இஸ்ரேலின் வற்புறுத்தலின் பேரில்தான் இது நடைபெற்றது என்பதற்கு பல குறிப்புக்கள் காணப்படுகின்றன. இஸ்ரேலிய நிதியமைச்சர் பெஞ்சமின் நெடன்யாகுவின் வலைத் தளத்தில் ஜோசப் பரா (Joseph Farah); ''இந்த G2 Bulletin அறிக்கையின் கடைசிப் பதிப்பில் நான் குறிப்பட்டபடி பாலஸ்தீனிய தூதரகம் (ஈராக்கிலுள்ளது) ஈராக்கின் பாரிய அழிவுக்கான ஆயுதங்களைப் பற்றியும் அவை எங்கே மறைத்துவைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் நன்கு அறியும் என்பதற்குச் சான்றுகள் கணிசமாக உள்ளன'' எனக் கூறுகிறார்.

''பல ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத ஆய்வாளர்களால் நுழைய முடியாத தூதரகப் பாதுகாப்பில் இந்த ஆவணங்கள் உள்ளன. இப்பொழுதும்கூட அமெரிக்கத் தலைமையிலான படைகளுக்கு அதை அடைவதற்கு தடையாக உள்ளன. இந்த ஆவணங்கள் பாரிய அழிவுக்கான ஆயுதங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் வாங்கியது மற்றும் பயன்படுத்தப்பட்டது தொடர்பான தகவல்களை கொண்டுள்ளன. பாக்தாதில் மிகுந்த பாதுகாப்பிற்குட்பட்ட ஒரு மதில் சுவருக்குள் உள்ள அரண்மனை போன்ற யசீர் அராபத்தின் தனிப்பட்ட மாளிகையில் பாலஸ்தீன தூதரகம் உள்ளது.'' என அவர் மேலும் தெரிவித்தார்.

''ஈராக்கிய எதிர்ப்புக் குழுக்களின் அமெரிக்க ஆதரவாளர்களில் ஒருவரும், அவர்களோடு 1991லிருந்து 1994 வரை லண்டனின் இணைந்து இயங்கியவரும் பின்னர் அவர்களுக்காக வாஷிங்டனில் நடவடிக்கைகளை மேற்கொண்டவருமான ஒருவர் மறைத்துவைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் ஈராக்கியரின் இரசாயன ஆயுதங்கள், VX நரம்பு விஷ வாயு மற்றும் சிலவேளை அணுவாயுதங்களைப் பற்றிக்கூட இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.''

நெடன்யாகு புஷ் நிர்வாகத்தினுள் கூடுதலான அரசியல் செல்வாக்கு நிறைந்த தீவிர வலதுசாரி, கிறிஸ்தவ அடிப்படையாளர், சியோனிச இயக்கத்தின் தீவிரவாத பிரிவுகள் ஆகியவறின் அரசியல் ஆதரவாளராவார். இந்தச் சோதனையிடல் மற்றும் கைது செய்யல் மூலம் புஷ் நிர்வாகம் அதன் ஆணை எங்கும் செலுத்தப்படக்கூடும் என்ற தகவலை எல்லோருக்கும் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன அதிகாரத்துவம் அமெரிக்கா கொண்டு வரும் ''சாலை வரை படத்தை'' (Road map) ஏற்று சியோனிஸ்டுகளுடைய கோரிக்கைகளுக்கு இணங்கிவிடுவது அதற்கு நல்லது, இல்லாவிடில் நேரடியாக லிகுட் அரசாங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் பயங்கரவாதத் தொடர்புடையதாகக் கருதப்பட்டு அதனை சந்திக்க நேரிடும். இதை தவிர்த்துக்கொள்ள பாலஸ்தீன அதிகாரத்துவம் தங்கள் சொந்த மக்களை காவல் காத்து நச்சுத்தனமாக ''தனி நாடு'' என்றழைக்கப்படும் முள்வேலிக்குள் அடைத்து வைத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் இஸ்ரேலில் உள்ள அதன் பிராந்திய காவலாளியான ஆரியல் ஷரோனினதும் நலன்களுக்காக இயங்க வேண்டும்.

இன்னும் பொதுவான அளவில் இந்த நடவடிக்கை தங்கள் கோட்டை மீற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அச்சுறுத்தும் தன்மையைக் கொண்டது ஆகும். லிபியா இந்தச் செய்தியை நிச்சயமாக உணர்ந்துவிட்டது. பெளச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, இரண்டு நாட்களிலேயே ஈராக்குடன் தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாகவும், பாக்தாதில் அதன் தூதரகத்தை மூடிவிடுவதாகவும் அது அறிவித்தது. ''லிபியா ஈராக்கோடு தூதரக உறவுகளைத் துண்டித்துக்கொள்வதோடு பாக்தாதில் அது கொண்டிருந்த தூதரகத்தை மூடி அங்குள்ள அலுவலர்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளப் போவதாகவும்'' அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

மேலும் இந்த முடிவு ''அமெரிக்க பிரிட்டிஷ் தலைமையிலான ஈராக்கிலுள்ள படைகள் பாக்தாதில் தூதரகங்களிலிருந்ப்பதை விரும்பவில்லை என்பதாலும், அவற்றிற்கு இராஜதந்திர பாதுகாப்பு கிடையாது என்பதை அறிவித்துள்ளதாலும்'' எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை தொடர்கிறது. அமெரிக்கத் தலைமையிலான படைகளின் பாதுகாப்புடன்தான் லிபிய தூதரகத்தினர் பத்திரமாகத் திரும்பியதாகவும் மற்றும் அவர்களுடைய தூதரகத்திற்கு பாதுகாப்பு கிடைத்தது என்பதும் வலியுறுத்திக் கூறப்பட்டது.

இந்த சோதனைக்கு எதிராக உத்தியோகபூர்வ அரசியல் மட்டத்தில் எந்தப் பிரிவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டியது. அமெரிக்கக் காட்டுமிராண்டித்தனத்தைப் பற்றியும் சட்ட நெறியற்ற தன்மையையும் பற்றி ஏன் கூப்பாடு இல்லை? அமெரிக்க புஷ் நிர்வாகம் கண்டனத்திற்குட்படவதற்கு இன்னமும் என்ன அக்கிரமங்களைச் செய்யவேண்டும்? என ஒருவர் கேட்கலாம்.

ஐக்கிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் பாலஸ்தீன அதிகாரத்திற்கு பண உதவி செய்திருந்தபோதிலும், வாஷிங்டனை குழப்பக்கூடாது என்பதற்காகவும், மேலும் ஏதேனும் ஒரு தொடர் சமூக கொந்தளிப்பு ஏற்பட்டால் அது அப்பிராந்தியத்தில் அவர்களுடைய ஏகாதிபத்திய நலன்களுக்கும் ஊறு விளையலாம் என்பதால் மெளனமாக உள்ளனர். மண்டியிட்டு மன்றாடும் நிலையிலுள்ள அரேபிய ஆட்சிகள் ஒரு கண்டனச் சொல்கூடக் கூறவில்லை. அமெரிக்கரைக் குறைகூறாமல் லிபியா பாக்தாதைவிட்டு வெளியேறிவிட்டது.

உலகம் முழுவதிலும் உள்ள செய்தி ஊடகங்களும் எந்த விதமான ஆத்திர கூப்பாடுகளை தெரிவிக்கவில்லை. வழமையாக தாராளவாத கொள்கையுடைய ஊடகங்களில் பெரும்பாலானவை கூட இதைப் பற்றிய செய்தியைக்கூடக் வெளிவிடவில்லை. ஒரு மேம்போக்கான ஆரம்ப கட்டுரைக்குப் பின்னர், கொதிக்கும் உருளைக்கிழங்கை கைகள் கீழே போட்டுவிடுவது போல் இச்செய்தியை கைவிட்டுவிட்டன.

இப்படிப்பட்ட மெளனம், இவ்வாறான வகையில் பிறரை அச்சுறுத்தும் போக்கிற்கு வழியமைத்துக்கொடுப்பதுடன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெருநகர மையங்கள் உட்பட உலகெங்கிலும் சமூக நெறிமுறைகளைக் கிழித்துப்போடவும், அடிப்படை ஜனநாயக உரிமைகள் தகர்க்கப்படுவதற்கும் காரணமாகிவிடும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved