A press round-up
அமெரிக்கப் போர், ஜேர்மனியின் நடைமுறை அரசியலும் சர்வதேச சட்டமும்
ஒரு பத்திரிகை கண்ணோட்டம்
By Wolfgang Weber
10 May 2003
Back to screen version
''அதிகாரம், உயர் அதிகாரத்திற்கு மட்டுமே இடம்கொடுக்கின்றது. எவ்வாறாயினும்,
அதிகாரம் வெற்றி மூலம் சட்டபூர்வமானதாக்கப்படுகிறது!......வெற்றி வரலாற்றின் தீர்ப்பு. உலகில் மிக உயர்ந்த
அதிகாரம் படைத்த 'உலக நீதிமன்றத்தில்' மனிதாபிமான தன்மைகளுக்கு மேல் முறையீடு செய்வதற்கு எந்த வழியும்
இல்லை''[1].
லூத்விக் ஒகுஸ்ட் வொன் ரோஷுவ்
(Ludwig August von Rochau -1810-1873)
மேலே குறிப்பிடப்பட்டிருப்பதையும், அது போன்ற வெற்றிதான் அளவுகோல் மற்றும் ''உண்மையான நடைமுறை அரசியல்
தத்துவங்கள்'' போன்ற தனிமனித அரசியல் சீர்திருத்த கருத்துக்களையும் பிரசுரித்திருந்தார். இந்த முடிவிற்கு அவர் வந்ததற்குக்
காரணம் 1848-49ன் முதலாளித்துவப் புரட்சி தோல்வியடைந்ததால் ஆகும். அவர் இந்த தாராளவாத (லிபரல்) பத்திரிகையாளர்
ஜேர்மன் முதலாளித்துவத்தினுள்ளும், மத்தியதர வர்க்கத்தினுள்ளும் உள்ள தனது வாசகர்களுக்கு ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின்
உயர்ந்த தத்துவங்களை கைவிட்டு விட்டு, பிரஷ்யா (Prussian)
வின் போலீஸ் மற்றும் இராணுவ ஆட்சியோடு சமரசம் செய்து கொண்டு
போகுமாறு கேட்டுக் கொண்டார். பிரஷ்யாவின் அரசாங்கம் புரட்சியை இரத்தக் களரியில் அடக்கியதன் மூலம் தன்னை
சட்டபூர்வமாக்கிக்கொண்டது. அந்த புத்தகம் அப்போது சிறந்த நூலாக பெருமளவில் விற்பனையாகி வெற்றி பெற்றது.
இன்றைய ஜேர்மனியில் ரோஷுவையும், அவரது எழுத்துக்களையும் மறந்து விட்டார்கள். ஆனால்,
அவர் கூறிய ''உண்மையான நடைமுறை அரசியலை'' மறக்கவில்லை. ஈராக் போர் தொடர்பாக ஜேர்மன் ஊடகங்களின்
அணுகுமுறை இந்த உண்மையை, குறிப்பாக நமக்கு வெறுப்புக்குரிய முறையில் ஞாபகப்படுத்தும் வகையில் கடந்த வாரங்களில்
அமைந்திருக்கிறது.
அமெரிக்க இராணுவம் பாக்தாத் நகருக்கு நுழையும் தினம் வரை ஜேர்மன் ஊடகங்களில் அமெரிக்காவையும்
பிரிட்டனையும் கண்டிக்கின்ற வெளியீடுகள் நிறைந்திருந்தன. பல்வேறு சிறப்புக் கட்டுரைகளிலும், ஆசிரியத் தலையங்கங்களிலும்
அமெரிக்கா ஜெனிவா ஒப்பந்தத்தை மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானங்களை மீறி செயல்படுவது சர்வதேச
சட்டத்தை மீறும் செயலாகும் என எழுதியிருந்தன. ஆனால், ஏப்ரல் 2-3ல் அமெரிக்க படைகள் ஈராக் தலைநகரின்
நுழைவு வாயிலுக்கு வந்ததும், ஜேர்மன் ஊடக ஆசிரியர்கள் அலுவலகங்களில் நிலவரம் மாறத்தொடங்கியது.
இந்த மாற்றத்திற்கு அடையாளமாக,
Süddeutsche Zeitung
பத்திரிகையின் ஏப்ரல் 4ந்தேதி பதிப்பு அமைந்திருக்கிறது. அப்போதும், முதல் பக்கங்களில் ஈராக் மக்களுக்கு எதிராக
புரியப்பட்ட குற்றங்கள் விரிவாக வெளியிடப்பட்டிருந்தன. நடைபெறவிருக்கும் அழிவுகள் மற்றும் நாட்டின் கலாச்சார
பொக்கிஷங்கள் சூறையாடப்பட்டிருக்கலாம் என்பது குறித்தும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. எவ்வாறிருந்தபோதிலும்,
கட்டுரையின் பக்கங்களில் பூகோளமயமாக்கலின் முதலாளித்துவ எதிர்ப்பாளர், உல்றிச் பெக்
(Ulrich Beck)
திடீரென போரின் சட்டபூர்வமான தன்மை குறித்து புதிய கேள்வியை எழுப்பியிருந்தார். பெக்கை பொறுத்தவரை
போருக்கான எதிர்ப்பு சட்டபூர்வமானது மட்டுமல்ல, பயங்கர ஆயுதங்களால் பாதிக்கப்படும் நாகரீகத்தை காப்பாற்றுவதற்காக
சுதந்திரம் மற்றும் ஜனநாயத்தின் பெயரால் போர் புரிவதும் சட்டப்படி நியாயம்தான் என எழுதியிருந்தார். போர்,
அதை நடத்துவதற்கு எடுத்துக்காட்டப்படும் ஆபத்துக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான், அந்த போர் பற்றி
முடிவு செய்ய வேண்டும். துரதிஸ்டவசமாக இதில் உண்மை பற்றிய எதுவும் இல்லை.
''கலாச்சார கண்ணோட்டமும் மதிப்பீடும் இல்லாமல் அதிலிருந்து தனிமைப்படுத்தப்படுத்தி
ஒரு ஆபத்து என்று கருதக்கூடிய தன்மை எதுவும் இல்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட ஆபத்தின் தன்மையும் உருவாக்கமும்
அதை நம்புவதில் உள்ளடங்கியிருப்பதுடன், ஒரு குறிப்பிட்ட அபாயத்தை மட்டும் நம்புபவர்கள் வேறொரு உலகில் வாழ்ந்து
கொண்டிருப்பதுடன், இந்த நம்பிக்கையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாததுடன், அல்லது அது முட்டாள்தனமானது என
கருதுகிறார்கள்.''
உல்றிச் பேக் அதற்கு பின்னர், அவரும் அவரைப் போன்றவர்களும் நேற்று வரை போருக்கு
எதிராகயிருந்து இன்று போருக்கு ஆதரவாக தங்களது போக்கை மாற்றிக் கொண்ட தங்களது ஆன்மாவுக்குள் நடத்திக்
கொண்டிருக்கின்ற போராட்டம் பற்றி விளக்குகிறார். இப்படிப்பட்ட சீரழிந்தபோக்கு ஒவ்வொருவரையும் பாதிக்கின்றது.
போருக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பது உண்மையிலேயே நாடுகளையும் கண்டங்களையும் பிரிக்கவில்லையா? இந்த தார்மீக
போராட்டம் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளேயும் நடக்கவில்லையா? என்று அவர் கேட்கிறார்.
ஐரோப்பாவில் இராணுவமயம்
புதிய ஐரோப்பா என்ற தலைப்பில்,
Süddeutsche Zeitung
பத்திரிகை அதே பதிப்பில் Stefan Kornelius
தலையங்கம் எழுதியிருக்கிறார். அந்த தலையங்கத்தில் அவர் பாக்தாத்தில் புதிதாக
உருவாகியுள்ள உண்மையான நிலவரங்களை கருத்தில் கொண்டு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிற்கு எதிரான தங்களது
புகார்களை கைவிட்டுவிட வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறார். நமக்கு உள்ளேயே நடக்கின்ற தார்மீக உள்மனப்போராட்டங்களால்
ஐரோப்பிய அரசியல் முடக்கப்பட்டு விடக்கூடாது என அவர் எழுதுகிறார். உலக ஒழுங்கு அமைப்பும் அதன் அமைப்புக்களான
ஐக்கிய நாடுகள் சபை அல்லது நேட்டோ மற்றும் அவற்றின் ''நடைமுறை விதிகளும்'' கடுமையாக பாதிப்படைந்துள்ளன.
அமெரிக்கா அவற்றை முழுமையாக சிதைத்துவிட்டு, தனது நலன்களை நிலை நாட்ட முடிவு செய்திருப்பதை தெளிவுபடுத்திவிட்டது
என்று விளக்குகின்ற Kornelius
அதற்கு பின்னர் கீழ்கண்டவாறு முடிவு கூறுகின்றார்.
பழைய ஐரோப்பா மிக விரைவாக செயல்பட்டாக வேண்டும். உலக அரசியலை
ஒழுக்கமைக்க அது விரும்புமானால் பல தடைக்கற்களை கடந்தாக வேண்டும். மூன்று படிப்பினைகளை இதிலிருந்து பெற்றாக
வேண்டும். முதலாவது, அமெரிக்காவுடன் மோதிக் கொண்டு பழைய மற்றும் புதிய ஐரோப்பாவை ஒன்றுபடுத்த முடியாது.
இந்த மோதலால் அவை சிதைந்து விடும். இரண்டாவது படிப்பினை, ஐரோப்பாவின் பூகோள அரசியல் மேலாதிக்க வல்லரசான
ஜேர்மனி எப்போதுமே பாரீசா லண்டனா என தேர்ந்தெடுக்கப்படும் நிலையை மேற்கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால்
ஐரோப்பா கண்டத்தை உடையச்செய்வதுடன், கல்லறையிலிருந்து பழைய காலத்தின் ஆவிகள் கிளம்பி வந்துவிடும். மூன்றாவது
படிப்பினை ஐரோப்பா புகார் கூறுவதை நிறுத்திக் கொண்டு அதற்கு மாறாக செயல்படவேண்டும். நான்கு நாடுகளின்
நீர்மூழ்கி கப்பற்படை, பிரிட்டன் உட்பட முக்கிய ஐரோப்பிய அரசுகளின் விமானப்படை, திட்டவட்டமான அரசியல்
கோரிக்கைகளுடனான கூட்டாக வளர்முக நாடுகளுக்கு உதவுகின்ற வெளிநாட்டு உதவி வரவுசெலவுத் திட்டம் போன்றவற்றை
முன்வைக்கவேண்டும்'' என எழுதுகின்றார்.
இதை வேறுவார்த்தைகளில் விவரிப்பதென்றால், ஐரோப்பாவிற்கு பொதுவான, கப்பற்படை
மற்றும் விமானப்படை இருக்க வேண்டும். அமெரிக்காவிற்கு இணையான வல்லரசாக விளங்க வேண்டும். வாஷிங்டனைப்
போல் காலனி நாடுகளையும், பிராந்தியங்களையும், ''திட்டவட்டமான அரசியல் கோரிக்கைகளை'' முன்வைத்து அழுத்தங்களுக்கு
உள்ளாக்க வேண்டும்.
அமெரிக்காவுடன் மோதல்களை தீவிரப்படுத்தாமலும், தன்னை ஒரு உலக வல்லரசு என அமெரிக்கா
பிரகடனப்படுத்துவதையும் எதிர்க்காமல் Kornelius
சொல்லுகின்ற முதலாவது படிப்பினையை எப்படி செயல்படுத்த முடியும். அதைப் பற்றி அவர் எதுவும் கூறாமல் அமைதியாகிவிட்டார்.
ஏனென்றால் அவரது முதலாவது படிப்பினைப்படி ஐரோப்பா உடைத்துவிடும்.
ஐரோப்பா ஆயுத பலத்தை மீண்டும் பெருக்கிக்கொள்ள வேண்டும் என அவர் விடுத்த
கோரிக்கை ஏதோ ஒரு தனி மனிதன் கூறியதும் அல்ல, அக்கோரிக்கை அலட்சியப்படுத்தப்படவும் இல்லை. பாக்தாத்
தெருக்களில் அமெரிக்க இராணுவ வீரர்கள் நடைபோடுவதைப் போன்று பேர்லின் ஏற்கனவே புதிய திசையில்
நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் தாக்குதல் ஆரம்பித்த நேரத்தில் ஜனாதிபதி ஷ்ரோடரும், வெளியுறவு
அமைச்சர் பிஷ்ஷரும் ஈராக்கிற்கு எதிரான போரை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தப் போர் முற்றிலும் நியாயமற்றது
என்று குறைந்தபட்சம் வாய்ச் சொல்லளவிலாவது எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் பாக்தாத் வீழ்ச்சியடையும் நேரம்
நெருங்கியதும் அவர்கள் இருவரும் அமெரிக்க துருப்புகள் விரைவாக வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்கள்.
சதாம் ஹூசேனின் குற்றம்மிக்க ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என குறிப்பிட்டார்கள். அமெரிக்காவின் நம்பிக்கையை பெறுவதற்கு
பழைய கசப்பை மறந்து விட்டு அமெரிக்காவுடன் சமாதானப்படுத்திக்கொள்ள முயல்வது போருக்குப்பின் பங்கு போடுவதில்
தம்மை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஆகும். அதே நேரத்தில் ஐரோப்பாவை மீண்டும் ஆயுதமயமாக்கவும்
ஜேர்மன் இராணுவத்தை ஆக்கிரமிப்பு இராணுவமாக மாற்றுவதற்கும் மற்றும் ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்கவும் ஜேர்மனி
நடவடிக்கை எடுத்துள்ளது.
உண்மையிலேயே பழைய காலத்து ஆவிகள் தங்களது கல்லறைகளிலிருந்து ஏற்கனவே வந்துவிட்டன.
இராணுவமயம் மற்றும் போர் காட்சிகள் ஐரோப்பாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
ஜேர்மனியின் பத்திரிகை வெளியீட்டாளர்கள், தலையங்க எழுத்தாளர்கள், தலைமை
ஆசிரியர்கள் மற்றும் சிறப்புக் கட்டுரை எழுதுபவர்களின் நிலை என்ன? எதிர்பார்த்தபடியே அவர்கள் அதே வழியில்
நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக் கட்சி ஆளும் கூட்டணியின் வலதுசாரி
திருப்பத்தை நியாயப்படுத்தும் விவாதங்களை வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
சர்வதேச சட்டத்தின் செயல்பாடு
ஏப்ரல் 12/13ல் Stefan
Kornelius மற்றொரு கட்டுரையை வெளியிட்டார். இந்தக் கட்டம்
வரை Süddeutsche Zeitung
பத்திரிகை சர்வதேச சட்டத்தையும், ஜெனீவா ஒப்பந்தங்களையும் கண்டிப்பாக
பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தது. தற்போது
Kornelius அதற்கு எதிராக வாதாடுகிறார். சர்வதேச சட்டத்தை
செயல்படுத்துவதற்குப் பதிலாக புதிய சட்டம் உருவாக்கப்பட்டு நிறுவப்பட வேண்டும் என்று எழுதுகிறார். யார் அந்த சட்டத்தை
உருவாக்குவது? அமெரிக்காதான் அதை செய்ய வேண்டும். ''அமெரிக்காவின் வெற்றி, அமெரிக்காவின் கடமை'' என்று
அவர் எழுதுகிறார்.
''எவ்வாறிருந்தபோதிலும், இதில் மிகவும் முக்கியமானது என்னவென்றால், ஈராக்கில்
எதிர்கால ஆட்சியை விட முக்கியமானது என்னவென்றால், உலக நாடுகள் ஒன்றோடொன்று உறவு கொள்வதற்கு எந்த
நடைமுறைகளை மேற்கொள்வது என்பதுதான். இங்கும் கூட அமெரிக்கா இல்லாமல் அத்தகைய ஒரு நடைமுறையை உருவாக்கிவிட
முடியாது. தான் பழைய விதிமுறைகளுக்கு கட்டுபட முடியாதென வாஷிங்டன் தெளிவுபடுத்திவிட்டது. ஏனென்றால் அவை
காலாவதியானவை என்றும் தடைக்கல்லாக உள்ளவை என்றும் அமெரிக்கா கருதுகின்றது. புதிய விதிகளின்படி, தற்காப்பு
நடவடிக்கை மற்றும் கூட்டணிகள் அன்றைய உணர்வை பொறுத்து உருவாக்கப்பட வேண்டும். அத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு
முதலில் உதவுகின்றன. உலகின் மற்றய பகுதிகளுக்கு உதவுவது என்ன? குறைந்த பட்சம், மிகுதியாக இருக்கின்ற உலகம் அமெரிக்காவின்
நலன்களுக்கு சேவை புரியலாம். இப்படி செய்வதன் மூலம் வாஷிங்டன் மீது ஆளுமையை வென்றுகொள்ளலாம்'' என மேலும்
அவர் குறிப்பிடுகின்றார்.
அரசியலை சட்டபூர்வமானதாக்க விதிகள் அவசியம். ஏனெனில், பொதுமக்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன
என்று விளக்குகின்ற Kornelius
அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து இந்த விதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.
ஏனென்றால், இந்த அரசாங்கம் குறித்து சேர்ச்சிலின் (Churchill)
சொற்களில் கூறுவதென்றால் வெற்றி பெற்றவர்களால்தான் வரலாறு எழுதப்படுகின்றது''.
இதை வேறுவார்த்தைகளில் விளக்குவதென்றால், அமெரிக்கா தன்னை விட உயர்ந்த சர்வதேச
சட்டம் எதையும் பின்பற்ற விரும்பவில்லை. வெற்றி பெற்ற நாடு என்ற முறையில், உலகின் இதர பகுதிகளுக்கு தற்போது
தனது சொந்த விதிகளை கட்டளையாக பிறப்பிக்கின்றது.
வார இதழான Die Zeit,
வெற்றி பெற்ற ஆக்கிரமிப்பாளர் முன் மண்டியிடுகின்ற நிலைக்கு
சர்வதேச சட்டத்தை பாதுகாக்கும் இதே தார்மீகநெறி மாறியதை எடுத்துக் காட்டுவதாக கட்டுரை எழுதியிருக்கிறது.
தனது மார்ச் 27ந் தேதி வெளியீட்டில் தலையங்க பகுதியில் ''சட்டத்தின் அழிவின் மேல் போர்'' என்ற தலைப்பில்
தலையங்கம் எழுதியிருக்கிறது. இந்த தலையங்கத்தை எழுதிய மிக்கைல் நெளமான்
(Michael Naumann)
''பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டு வளர்ந்து வந்த ஐரோப்பிய இயற்கை நீதியின்
(European natural justice)
முழுமையான பெறுமதிகளான தனிமனித சுதந்திரம், சமத்துவம், பொதுநலன் ஆகியவற்றை மதித்தல் அரசு வடிவங்களுடன்
மாறுபடுவதல்ல. அதனால், ஜனநாயக வெளிநாட்டுக் கொள்கைக்காக அவற்றை மாறுபடுத்தி பயன்படுத்திக் கொள்ள
முடியாது. வெளிநாட்டு கொள்கைக்கும் அவைதான் அளவுகோல்'' என எழுதியிருக்கிறார்.
அதே பத்திரிகையில் ஏப்ரல் 3ம் தேதி ''உண்மையின் அதிர்ச்சி'' என்ற தலைப்பில்
Josef Joffe
இதற்கு நேர்மாறாக எழுதியிருக்கிறார். ''21ம் நூற்றாண்டில் புதிய சக்தியை சர்வதேச சட்டம் என்கிற தத்துவ
எல்லைக்குள் அடக்கிவிட முடியாது. இந்த பாரம்பரியத்தை மறுப்பது மிகவும் கொடூரமானதாக இருக்கலாம், ஆனால், புதிய
உண்மைகள் உருவாகும்போது சட்டமும் மாறியாக வேண்டும். எவ்வாறிருந்தபோதும், இதுதான் நமது நாட்டில் நாம் கடைபிடிக்கின்ற
நெறிமுறை'' என எழுதியுள்ளார்.
Josef Joffe இன் கருத்துப்படி,
எதிர்காலத்தில் இயற்கை நீதியின் உயர்ந்த தத்துவங்கள், அரசியலுக்கு வழி காட்டுவதாக அமையாது, ஆனால் வெற்றிபெற்றவரின்
முரட்டுத்தனமான அரசியல் சட்டத்தை உருவாக்கும் அளவுகோலாக இருக்கும்.
ஒரு வாரம் கழித்து, Die
Zeit பத்திரிகையில்,
Bernd Ulrich தனது தலையங்கத்தில் அதே தந்துதியை முழக்குகிறார்.
''உதவியற்ற ஐரோப்பா'' என்ற தலையங்கத்தின் கீழ் ''இந்தப் போர் சர்வதேச சட்டங்களை மீறுகின்றது. இதற்காக
அமெரிக்கர்களை கண்டிக்க வேண்டும் மற்றும் அதேபோன்று சர்வதேச சட்டத்தையும் கண்டிக்க வேண்டும்'' என்றும் எழுதியிருக்கிறார்.
Die Zeit
இன்் சட்டம் பற்றிய தத்துவத்தை கீழ்கண்டவாறு
விளக்கலாம். பலாத்காரமான திருடன், சட்டத்தை மீறி ''புதிய காரணங்களை'' உருவாக்கிவிட்டால், அப்பொழுது
அந்த சட்டத்தைக் விமர்சித்து, மாற்றிவிட வேண்டும் அல்லது ஒழித்துக் கட்டிவிட வேண்டும்.
அதே கருத்தை
Frankfurter Allgemeine Zeitung பத்திரிகையில்
Reinhard Mueller
பகிர்ந்துகொண்டுள்ளார். ஆனால், அவர் ஜேர்மன் சட்ட நிபுணர்கள் அதனை பிரச்சனையின்றி
கையாளும்வகையில் அதை சித்தரித்திருக்கிறார். ஏப்ரல் 16ந் தேதி அவர் எழுதியிருப்பதாவது, மிக தெளிவாக அமெரிக்கா
சேதப்படுத்தியிருந்தாலும் சர்வதேச சட்டம் ஒரு முடிவானதல்ல. "சர்வதேச சட்டம் வைைளக்க முடியாததல்ல. அது ஒரு
சக்திவாய்ந்த அமைப்பு. நாடுகள் தன்னிச்சையாகவும் மற்றும் ஒன்றுக்கொன்று உடன்பட்டும் இந்த சட்டத்தை உருவாக்கின.
சட்டபூர்வமான செல்லுபடியாகும் சட்டத்தை மீறினால் அது அந்த சட்டத்தை சேதப்படுத்தும், ஆனால் சர்வதேச சமுதாயத்தின்
பிரதிபலிப்பின் படி அதுவே அந்த சட்டத்தை வலுப்படுத்த முடியும். ஆனால், அமெரிக்கா சட்டத்தை சிதைத்தாலும்,
அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளுகின்ற வாய்ப்பு வசதிகள் திடசித்தமும் உலகம் முழுவதற்கும் பொறுப்பை ஏற்றுக்
கொள்ளுகின்ற வல்லமையும் படைத்த ஒரே ''ஜனநாயக நாடு'' அமெரிக்கா என்ற ஒர் உண்மையை சர்வதேச
சமுதாயம் கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
1933 மற்றும் 1938 நினைவுகள்
சர்வதேச சட்டம் தொடர்பான, மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான
வளைந்துகொடுக்கும் அணுகுமுறை உண்மையிலேயே Josef
Joffe எழுதியுள்ளதைப் போல், ஜேர்மனியின் ''உள் உலக''
பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், அது மிகவும் ஆபத்தானது.
பத்திரிகையாளரும், எழுத்தாளருமான
Sebastian Haffner
எழுதியுள்ள நினைவு குறிப்புகள் இந்த வகையில் மிகவும் பயனுள்ள தகவல்களை தருகின்றன.
ஹிட்லர், 1933ம் ஆண்டு பதவியைப் பிடித்துக் கொண்ட பின்னர் பேர்லின் உயர்நீதி மன்றத்தில் நடந்த நிகழ்ச்சிகளை அவர்
விவரிக்கிறார். நீதிபதிகளின் புதிதாக பதவிக்கு வந்த முற்றிலும் அறியாமையால் இருந்த தீவிரவாத சோசலிஸ்ட் (நாஜி)
இளைஞர்கள் தங்களது மூத்த சகாக்களான நீதிபதிகளுக்கு கூறிய ஆலோசனை என்னவென்றால் பழைய சட்ட பந்திகள் இரண்டாவது
இடத்தில் வைக்கப்படவேண்டும். ஏனெனில், சட்ட வாசகங்களை மட்டும் கொண்டு அவை அமையக் கூடாது, ஆனால் சட்டத்தின்
உணர்வு குறிப்பாக ஹிட்லரின் விருப்பத்தை எதிரொலிப்பதாக இருக்க வேண்டும்.
இது நடந்து கொண்டிருக்கும்போது, பழைய வயதான நீதிபதிகளின் முகத்தை பார்த்தால் பரிதாபமாயிருந்தது.
வர்ணிக்க முடியாத துக்கத்தோடு அவர்கள் தங்களது கோப்புக்களை புரட்டிப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது
விரல்கள் வேதனையோடு, காகித கிளிப்புகளை அல்லது மைஒற்று தாள்களை தடவிக் கொண்டிருந்தன. தற்போது,
அவர்கள் கேட்கின்ற வார்த்தைகளை அதற்கு முன்னர் எந்த சட்ட மாணவனாவது கூறியிருந்தால், அவனை சட்டத் தேர்வில்
தோல்வியடையச் செய்திருப்பார்கள். ஆனால் இப்போது மிக உயர்ந்த ஞானத்தைப் போல் இளைஞர்கள் வயதான நீதிபதிகளுக்கு
ஆலோசனை கூறிக் கொண்டிருந்தனர். அவர்கள் இப்படி பேசியதற்கு பின்பலமாக அரசாங்க அதிகாரம் நின்று
கொண்டிருந்தது. தேசிய அரசியலின் நம்பகத்தன்மை பாதிப்பு ஏற்படுகின்ற வகையில் நடந்து கொள்ளுகின்ற நீதிபதிகள் பதவியிலிருந்து
தூக்கியெறியப்பட்டு, உணவில்லாது, சித்ரவதை முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள். ஒரு நீதிபதி லேசாக இருமி அவர்
கூறினார், ''உங்களது கருத்தை நாங்கள் முழுமையாக பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் நீங்கள், சட்ட நடைமுறைகளை
சிறிது புரிந்து கொண்டு, அவற்றில் எதை காப்பாற்ற வேண்டுமோ, அதை காப்பாற்ற வேண்டும் என்று இளம் நீதிபதிகளை
கேட்டுக் கொண்டார்.'' [2]
1933ம் ஆண்டு நீதித்துறையைச் சார்ந்தவர்கள் எப்படி அதிகார வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டார்கள்
என்பதை இந்தக் காட்சி விளக்குகின்றது. இதே அடிப்படை பல்கலைக்கழகங்கள், மற்றும் பத்திரிகை ஆசிரியர் குழுக்களுக்கும்
பொருந்தும். சிறியளவு வன்முறை பாவிக்கப்பட்டாலும், பெரும்பாலானவர்களைப் பின்பற்றி மிகப் பெரும்பாலான நீதிபதிகள்,
அரசு வக்கீல்கள், வக்கீல்கள் மற்றும் பேராசிரியர்கள் நாஜி ஆட்சியின் ''புதிய உண்மைகளுக்கு'' ஏற்ப அடிபணிந்தனர்.
வாஷிங்டனில் உள்ள கும்பல் குழுவின் ஆதரவை பெறவேண்டுமென்பதற்காக ஜேர்மன் அரசியல்
வாதிகளும், ஊடகங்களும், எல்லையற்ற முயற்சிகளை மேற்கொண்டிருப்பது மற்றொரு சமமான வரலாற்று சம்பவத்தை
நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது.
''ஆதரவற்ற ஐரோப்பா'' என்ற தலைப்பில் ஏப்ரல் 10ம் தேதி
Die Zeit
பத்திரிகையில் Bernd Ulrich
தலையங்கம் எழுதிய நேரத்தில், உலகம் முழுவதும் காணும் வகையில் ஈராக்
நகரங்களின் மீது விமானப்படை குண்டு வீச்சு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது,
Die Zeit
தனது தலையங்கத்தில் புஷ் பிரகடனம் செய்துள்ள போர் ''மத்திய கிழக்கை ஜனநாயகமாக்கும்'' நோக்கத்தைக்
கொண்டது. அந்த நோக்கத்தை நல்ல நாணயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவரது, சமாதான மற்றும் மனித உரிமைகள்
நாட்டம் மனித இனத்திற்கு அதிர்ஷ்டம் தருவது என எடுத்துக் கொள்ளுமாறு'' அந்த பத்திரிகை எழுதியிருக்கிறது.
''இங்கு ஒரு பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது, அமெரிக்கா தனது பழைய ஆதிக்க அரசியலுக்கு
புதிய வடிவத்தை காட்டுவதை விட அதிகம் சாதிக்க உண்மையிலேயே விரும்புமானால், ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின்
வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளுமானால் பூகோளமயமாக்கப்பட்ட உலகில் ஜனநாயகமயமாக்கல்தான்
பாதுகாப்பை கொண்டுவர முடியும் என்றால், இப்போது, மேலை நாடுகள் எத்தகைய ஆபத்தையும் பொருட்படுத்தாது
சுதந்திரத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும். முதலில் மிகவும் ஆபத்தான, ஆபத்தில் சிக்கியுள்ள மத்திய கிழக்கிற்கு இந்த
சுதந்திரத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும். பழைய ஐரோப்பியர்களை விட அமெரிக்கர்கள் இதை சிறப்பாக அறிந்திருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் ஏன் மிகவும் மோசமான வழிமுறையை முதலில் கையில் எடுத்திருக்கிறார்கள்? எதிர்காலத்தை பொறுத்தவரை
ஒன்று நிச்சயம், ஐரோப்பியர்கள் தங்களது கொள்கை உணர்வுகளை
[Idealistic impulses-!]
முக்கியமாக எடுத்துக் கொண்டால்தான், அமெரிக்க இராணுவமயத்திற்கு ஒரு தடையாக ஐரோப்பியர்கள் செயல்பட
முடியும்''.
இதைப் படிக்கும்போது, 1938ம் ஆண்டு உருவான மூனிச் உடன்படிக்கை (Munich
Accord) எவருக்கும் நினைவில் வரத்தான் செய்யும். அப்போது நாஜி
ஆட்சியை சமாதானப்படுத்துவதற்காக பிரிட்டனின் பிரதமர் நெவில் சாம்பர்லினும் (Neville
Chamberlain) பிரெஞ்சு பிரதமர் எடுவார்ட் டலாடியேரும் (Edouard
Daladier), செக்கோஸ்லேவாக்கியாவிலிருந்த சூட்டெட்ன்லாண்ட் (Sudetenland)
பகுதியை பிரித்து ஜேர்மனியின் மூன்றாவது ரைசுடன் (Third
Reich) இணைக்கும் ஹிட்லரது கோரிக்கையை அப்படியே ஏற்றுக்
கொண்டனர். அதற்கு முன்னர் ஹிட்லர், சமாதானத்தின் மீது தமக்கு இருக்கும் நம்பிக்கையை பிரகடனப்படுத்தி சூடெட்டன்
பகுதியிலுள்ள ஜேர்மனிய மக்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதோடு தனது நாட்டு பிராந்தியம் பற்றிய கோரிக்கைகள்
முற்று பெற்றுவிடும் என்று உறுதி மொழி அளித்திருந்தார்.
மனித உரிமைகள், சமாதானம், சுதந்திரம் ஆகியவற்றை பற்றி வன்முறை ஆக்கிரமிப்பாளர்
கூறுகின்ற வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொள்வதன் மூலம் அவர்களை ''ஆளுமைக்குட்படுத்தி'' மேலும் மோசமான
விளைவுகள் ஏற்படாமல் தடுக்கலாம் என்ற ''நடைமுறை அரசியல் தத்துவத்தை'' அன்றைக்கும் சொன்னார்கள்,
இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மூனிச் மாநாடு முடிந்து, மூன்று வாரங்களுக்கு பின்னர்
செக்கோஸ்லோவாக்கியாவின் மற்ற பகுதிகளையும் பிடித்துக் கொள்ள ஹிட்லர் தனது இராணுவத்திற்கு கட்டளையிட்டார்.
ஐந்து மாதங்களுக்கு பின்னர் பிராக்கிற்குள் நாஜிக்கள் படையெடுத்துச் சென்றனர். அதற்கு ஆறு மாதங்களுக்கு பின்னர்
போலந்தினுள் படையெடுத்துச் சென்றனர்.
ஜேர்மனியில் ஹிட்லர் சார்ந்திருந்ததைப் போல், புஷ்ஷும், டிரம்ஸ்பீல்ட்டும் அமெரிக்காவில்
பாரிய பாசிச இயக்கத்தை சார்ந்திருக்க நீண்ட தூரம் சென்றாக வேண்டும். ஆனால் சர்வதேச அரங்கில் ஈராக்கில்
அவர்கள் புரிந்துள்ள குற்றங்களை மறைத்துவிடுவதும் மற்றும் சர்வதேச சட்டம் கோழைத்தனமாக செயல்படுவதும் ஹிட்லர்
காலத்தில் நடைபெற்ற சமாதானப்படுத்தும் போக்குகள் ஏற்படுத்தியதுபோன்ற விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். வல்லவன்
வகுத்த சட்டங்கள் இன்று மீண்டும் ஒருதடவை உலக அரசியலின் சட்டங்களாக்கப்படுகின்றது. இன்று ஐரோப்பிய அரசுகள்
அதே வல்லவனின் சட்டங்களுக்கு உரிமை கொண்டாட முயன்று வருகின்றனர்.
குறிப்புகள்:
1. லூத்விக் ஒகுஸ்ட் வொன் ரோஷுவ் (Ludwig
August von Rochau) -நடைமுறை அரசியலின் அடிப்படைகள்
என்ற புத்தகத்தை எழுதியவர். தனது, இளமைக் காலத்தில், ஐரோப்பாவில் மெர்ட்டர்நிச் முறை (Metternich
system) ஆட்சி கொண்டு வரப்படுவதை எதிர்த்து புரட்சி செய்தார்.
பிராங்போர்ட் பகுதியில் மாணவர் செயல் வீரர்களுடன் கூட்டமாக சென்று போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற திடீர்
தாக்குதலில் பங்கெடுத்துக் கொண்டார். அது ஒரு பிரபலமான சம்பவம். அந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையிலிருந்து தப்பியோடி 15 ஆண்டுகள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்ந்தார். 1848ம் ஆண்டு, லிபரல் நடுத்தர
வகுப்பு பத்திரிகையாளர் என்ற முறையில் இடதுசாரிகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை எழுதினார். ஜேர்மன்
அரச குடும்பங்களின் ஆதரவாளர்களையும் கடுமையாக சாடினார். 1852ம் ஆண்டு, தனது நடைமுறை அரசியலின்
முதல் பகுதியை எழுதினார். இரண்டாவது பகுதியை 1869ம் ஆண்டு எழுதினார். 1866ம் ஆண்டு பிரஷ்யா,
டென்மார்க் மற்றும் ஆஸ்திரியாவை முறியடித்தபோது பிஸ்மார்க்கையும் மற்றும் பிரஷ்யாவின் இராணுவ அரசையும் கண்டனம்
செய்வது அனைத்தையும் கைவிட்டுவிட்டு ''உலக நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு'' அடிபணிந்து போனார்.
2. Sebastian Haffner,
ஒரு ஜேர்மானியனின் வரலாறு. பக்கம் 177 - 178.
|