World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பிலிப்பைன்ஸ்Philippine military implicated in brutal murder of human rights activists மனித உரிமைக்காக போராடுபவர்களை படுகொலை செய்ததாகப் பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் மீது குற்றச்சாட்டு By Dante Pastrana மனித உரிமைகளுக்காகப் போராடி வந்த இரண்டு பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதில் இராணுவம் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக பிலிப்பைன்ஸ் நாட்டு செய்தி ஊடகங்களில் மிகப் பெரும் அளவுக்கு ஆதாரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பிலிப்பைன்சின் தலைநகரான மணிலாவிற்கு தென் கிழக்கே சுமார் 150 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள மிண்டோரோ (Mindoro) தீவில் ஏப்ரல் 21ம் தேதி, தெற்கு டகலாக் (Southern Tagalog) பகுதியைச் சேர்ந்த மனித உரிமைக் குழு பொதுச் செயலாளரான ஈடன் மார்சிலானாவும் விவசாயிகள் தலைவர் எடி குமனாயும் (Eddie Gumanoy) படுகொலை செய்யப்பட்டனர். கேர்னல் ஜோவிடோ பால்பரான் தலைமையில் பிலிப்பைன்சின் 204-வது காலாட்படைப் பிரிவு இராணுவ வீரர்கள் குளோரியா மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின் போது ஈடுபட்டதாகக் கூறப்பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களை நேரில் விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக அனுப்பப்பட்ட 12 உறுப்பினர்கள் உண்மை அறியும் விசாரணைக் குழுவில் மார்சிலானாவும் குமனாயும் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் இருவரும் வேறு மூன்று பேருடன் -- வெர்க்கிளியோ கட்டாய் II (Virgilio Catoy II), பிரான்சிஸ்கோ ஷார்ஸ் (Francisco Saez) மற்றும் மால்வின் ஜோக்சன் (Marlvin Jocson) ஆகியோரும் ஆயுதம் தாங்கிய வலதுசாரிகள் என்று கூறப்பட்டவர்களால் ஏப்ரல் 21ம் தேதி கடத்திச் செல்லப்பட்டனர். அடுத்த நாள் மார்சிலானா எனும் அப்பெண் இரண்டு கத்திக்குத்துக் காயங்கள் மற்றும் அவரது முகத்தில் இரண்டு துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். குமனாய் அவருக்கு அருகில் மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்ட ஒரு காயத்துடனும் தலையின் பின்புறமும் சுடப்பட்டுக் கிடந்தார். கட்டாய், சேசஸ் மற்றும் ஜாக்சன் ஆகிய மூவரும் ஏனையோரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு கட்டிப் போடப்பட்டு பின்னர் விட்டுச்செல்லப்பட்டனர். இறுதியாக அவர்கள் மூவருமே தங்களை விடுவித்துக் கொண்டு தப்பி வந்து சேர்ந்தனர். கறபட்டான் மற்றும் பயான் முனா (தேசம் முதலில்) என்ற இடதுசாரி அரசியல் கட்சி. இந்தக் கட்சி உடனடியாக பிலிப்பைன்சின் 204வது காலாட்படைதான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று அறிக்கை வெளியிட்டது. தளபதி பால்பரான்தான் இந்தப் படுகொலைக்கு மூலகாரணம் என அந்த இடதுசாரிக் கட்சி குற்றம் சாட்டியது. அந்தப் பகுதியில் இந்த ஓராண்டில் இடதுசாரி அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் துன்புறுத்தப் படுவதாகவும் கடத்திச் செல்லப்படுவதாகவும் அவர்கள் குடியிருக்கும் இடங்களில் இருந்து நிர்ப்பந்தமாக வெளியேற்றப்படுவதாகவும் கொலை செய்யப்படுவதாகவும் 33 வழக்குகள் தொடர்பாக புகார்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று தான் அண்மையில் நடைபெற்ற படுகொலைகள். ஏப்ரல் 23ம் தேதி பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி குளோரியா ஆராயோ (Gloria Arroyo) கடைசியாக நடைபெற்றுள்ள கொலைகள் குறித்து நடுநிலையான விசாரணை நடத்துவதற்கு நீதித்துறைக்கு கட்டளை பிறப்பித்தார். இராணுவம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் இருந்தும் "கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான இயக்கம்தான் இப்படி ஆட்களைக் கடத்திப் படுகொலை செய்கிறது" என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்சின் ஜனநாயக முறையின் கீழ் இத்தகைய போக்குகளைத் தனது நிர்வாகம் இதை சகித்துக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார். ஆனால், கம்யூனிச எதிர்ப்பு கதை விரைவில் அம்பலமாகத் தொடங்கியது. நீதித்துறையின் 5 நபர் விசாரணைக் குழுவின் பூர்வாங்க அறிக்கையின் சில பகுதிகளை ஏப்ரல் 24ம் தேதி நீதித்துறை உயர் அதிகார வட்டாரம் ஒன்று பிலிப்பைன்ஸ் டெய்லி என்கொயரர் (Philippine Daily Inquirer) பத்திரிகைக்கு இரகசியமாகத் தகவல் தந்தது. நீதித்துறை துணைச் செயலாளர் ஜோஸ் காலிடா வால் தலைமை வகிக்கப்பட்ட அந்த குழு, எட்டுமணி நேர நேரடி விசாரணையில் இராணுவத்தினர் அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்குப் போதுமான சான்றுகளைக் கண்டது. அதே தினத்தில் கலிடா பத்திரிகையாளர்களிடம், சாட்சிகள் சந்தேகத்திற்குரிய 5 நபர்களை அடையாளம் காட்டியதாகவும் அவர்களில் 3 பேர் பற்றிய வரைபடங்களை அவர்கள் கோடிட்டுக் காட்டியதாகவும் தெரிவித்தார். படுகொலைகளை கம்யூனிச எதிர்ப்பு இயக்கத்தினர் செய்தார்கள் என்ற கூற்றை அந்த அதிகாரி மறுத்தார். கேர்னல் பால்பரான் பணியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் பரிந்துரை செய்திருக்கிறீர்களா? என்று அந்த அதிகாரியை நிருபர்கள் கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அந்த நீதித்துறை அதிகாரி எங்களது பரிந்துரையின் மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கிறார் என நம்புகிறேன். அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் வரை நான் அது பற்றி எந்த கருத்தையும் கூற மாட்டேன்," என குறிப்பிட்டார். அடுத்த நாள் அந்த கேர்னல் "தற்காலிகமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்". அவரது பிரிவு முழுவதும் முறையான விசாரணையின் கீழ் கொண்டுவரப்பட்டது. மே மாதம் முதல் வாரத்தில், உயிர் தப்பிய மூவர், இதர சாட்சிகளுடன், நாடாளுமன்ற மனித உரிமைக் குழுக்கள் முன்னர் பிரமாண வாக்குமூலங்களைத் தாக்கல் செய்தனர். அந்தப் பகுதியில் உள்ள இராணுவ பிரிவு மிகவும் ஆபத்தான அளவிற்கு கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டிருப்பதாக வாக்கு மூலத்தில் குறிப்பிட்டிருந்தனர். பாயன்முனா செய்திக்குறிப்பு ஒன்று பிரமாண வாக்குமூலங்களின் சுருக்கத்தை வெளியிட்டிருந்தது. அந்த படுகொலைகளுக்கு முந்தைய சம்பவங்கள் அதில் விவரிக்கப்பட்டிருந்தன. ஏப்ரல் 19ம் தேதி குளோரியா நகருக்கு உண்மை கண்டுபிடிப்புக்குழு விஜயம் செய்தது. அந்த நகர்ப் பகுதியைச் சார்ந்த 3 பேர் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டது குறித்து விசாரிப்பதற்காக அந்தக் குழு சென்றது. மார்டின்-டு-லா-செர்னா, கில்பேர்ட்டோ ராபே மற்றும் றோலண்டோ சதீவா ஆகிய மூவரும் கேர்னல் பால்பரான் தலைமையில் உள்ள 204-வது காலாட்படை பிரிவினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குற்றச்சாட்டு. இந்த மூவரும் புதிய மக்கள் சேனையின் (New People's Army) சார்பில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட திடீர்த் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டிருந்தனர் என்றும் அந்தப் படைப் பிரிவின் முகாமில் சட்ட விரோதமாக இராணுவ வீரர்களை காவலில் வைத்திருந்தார்கள் என்றும் இராணுவம் குற்றம் சாட்டியது. ஏப்ரல் 20ந் தேதி, இந்த விசாரணைக் குழுவினர் இராணுவம் கைது செய்துள்ள மூவரையும், சந்திக்க முயன்றனர். ஆனால் அவர்களது கோரிக்கையை இராணுவத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் சமரசம் செய்ய முயன்ற நகர அதிகாரிகளிடம் மார்சிலானா "ஒரு எதிரி" என்றும், "தேசீய ஜனநாயக முன்னணியில் பெரிய புள்ளி" என்றும் குற்றம் சாட்டினார். தேசீய ஜனநாயக முன்னணி மற்றும் புதிய மக்கள் சேனைக்கு எதிராக இராணுவம் இடைவிடாத போரை நடத்தி வருகின்றது. இந்த இரண்டு அமைப்புக்களும், பிலிப்பைன்ஸ் நாட்டு ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியோடு (CPP) தொடர்புடையவை. பிலிப்பைன்ஸ் டெய்லி என்கொயரர் பத்திரிகையில் வந்திருக்கிற செய்தியின்படி அடுத்த நாள் ஆயுதம் தாங்கியவர்கள் "பிலிப்பைன்ஸ் போர் வீரர்கள்" என்று சொல்லிக் கொண்டு, மற்றும் "சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நட்புப் படைகள்" என்று கூறிக்கொண்டும், நகரில் வந்து நகரைச் சேர்ந்த பலரை அடித்து நொருக்கினார்கள். அவர்கள் புதிய மக்கள் சேனையின் ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டினர். அவர்களது வாகனம் இடையில் பழுதுபட்டு நின்று விட்டது எனவே அவர்கள் உதவிகோரினர். அவர்களது வாகனத்தை இழுத்துச் செல்வதற்காக இராணுவ ஜீப் ஒன்று வந்தது, அந்த ஜீப்பில் சிறப்புப் படைகளின் அடையாளச் சின்னங்கள் இடம் பெற்றிருந்தன. அப்போது, இராணுவ வீரர்களால் தாக்கப்பட்ட பொதுமக்கள் நகர, நிர்வாக அதிகாரிகளிடம் புகார்களை தாக்கல் செய்தனர். அவர்கள் விசாரணைக் குழுவிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பின்னர் ஏப்ரல் 21-ந்தேதி அந்த விசாரணைக் குழுவினர் காலாப்பான் நகருக்கு புறப்பட்டனர். படை முகாமிலிருந்து 5.5 கிலோ மீட்டருக்கு அப்பால் பிரதான நெடுஞ்சாலையில் விசாரணைக் குழுவின் வாடகை வாகனம் சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை இடையில் நிறுத்துமாறு ஆயுதம் தாங்கிய நபர்கள் கட்டாயப்படுத்தினர். அந்த நெடுஞ்சாலைக்கு குறுக்கே பயணிகளுக்கான வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. தடுத்த நபர்கள் தங்களை நிலவர அமைதிகாப்பு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள், ஆனால் அவர்கள் தாங்கள் சேர்ந்துள்ள அமைப்பு குறித்து ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்களை கூறினர். விசாரணைக்குழு உறுப்பினர்களும், அவர்களுடைய வாகனத்துடன் கைப்பற்றப்பட்டு, அவர்களது வாகனம் மார்சிலானாவும் குமனாயும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. அங்குதான் உயிரோடு இருக்கும் மூவரும், கடைசியாக அந்த இருவரையும் பார்த்தனர். கொலை நடந்து மூன்று வாரங்களுக்கு பின்னர், 204-வது காலாட்படை பிரிவைச் சார்ந்த பொறுப்பு அதிகாரி ஒருவர் இறுதியாக தாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை என சம்பிரதாயபூர்வ மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பிலிப்பைன் ஸ்டார் என்கிற பத்திரிகையின் தகவலின்படி லெப்டினன்ட் கேர்னல் ரெனால்ட்டோ-காபிகாவோ (Reynaldo Cabigao) நீதித்துறை அதிகாரி கலிடாவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், நகர மக்களை தாக்கியதிலோ அல்லது மார்சிலானா மற்றும் குமனாய் கொலைகளிலோ தமது இராணுவ வீரர்களுக்கு சம்மந்தம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இராணுவ-ஜீப் எதுவும் "பயணிகள் ஜீப்பை இழுத்து வருவதற்கு" பயன்படுத்தப் படவில்லை என்று காபிகாவோவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மே 11-ந் தேதி, அவர் கடிதம் அனுப்புவதற்கு முன்னர் நீதித்துறை விசாரணைக்குழு பயணிகள் ஜீப் -இழுவைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஜீப்-பை கண்டுபிடித்தனர். அந்த ஜீப் இராணுவப் பிரிவு தலைமையகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்தது. பிலிப்பைன்ஸ் ஸ்டார் பத்திரிகை செய்தியின்படி, அந்த வாகனம் 68-வது பட்டாலியனில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படி பெருகிவரும், சான்றுகளுக்கு பின்னரும், ஒரு மாதத்திற்கு பின்னர் விசாரணை தேக்க நிலைக்கு வந்தது. நீதித்துறை விசாரணை குழுவைச் சேர்ந்த வட்டாரங்கள் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, இராணுவம் தனது படைவீரர்களை காப்பாற்றுவதற்காக சம்பவத்தை மூடி மறைக்கப் பார்க்கிறது என்று நம்புவதாக தெரிவித்தனர். இராணுவத்தினர், சந்தேகத்திற்குரிய நபர்களை அதாவது ஒரு சார்ஜன்ட் மற்றும் இதர-மூவரை விசாரணைக்காக அனுப்புவதற்கு மறுத்துவிட்டனர். இவர்களில், முன்னாள் கிளர்ச்சிக்காரரும் தற்போது இராணுவ உளவுத்துறை முகவராக பணியாற்றி வருபவரும் அடங்குவார். இந்த கொலைகள் ஏதோ - தனிப்பட்ட முறையில் நடைபெற்றுவிட்ட சம்பவங்கள் அல்ல, அல்லது கட்டுப்பாடு இல்லாத அதிகாரிகள், அல்லது இராணுவப் பிரிவுகளின் செயலும் அல்ல. 2001- தொடக்கத்தில், ஆராயோ- பதவிக்கு வந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஜோசப்- எஸ்ட்ராடாவை, இராணுவ தலைமை அதிகாரிகள், நீதித்துறை மற்றும் பெரு முதலாளிகளின் ஆதரவோடு வெளியேற்றிவிட்டு ஆராயோ பதவிக்கு வந்தார். CPP- உட்பட பல்வேறு, இடதுசாரி அமைப்புக்கள் ஆராயோவை ஆதரித்தன. அமெரிக்காவில் பயிற்சி பெற்ற வலதுசாரி பொருளாதார நிபுணர் ஆராயோவை எஸ்ட்ராடா நிர்வாகத்திற்கும் அதன் ஊழல் நடைமுறைகள் என்று கூறப்படுவதற்கும் ஒரு "ஜனநாயக" மாற்று என்று பிரகடனப்படுத்தினார். பதவிக்கு வந்தது முதல் ஆராயோ புஷ் நிர்வாகத்தோடு, நெருக்கமாக உறவு கொண்டு செயல்பட்டு வருகிறார், குறிப்பாக, அமெரிக்கா மீது செப்டம்பர்-11-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இவரது உறவு இறுகி வருகிறது. அமெரிக்காவின் இராணுவ மற்றும் பொருளாதார உதவியை, பெறுவதற்கான முயற்சியில், தனது நாட்டில் தெற்கு மிண்டானாவோ பகுதியில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்க இராணுவம் தலையிடுவதற்கு பச்சைவிளக்கைக் காட்டியதன் மூலம், வாஷிங்டனின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்பதில் தனது நிர்வாகத்தின் நம்பகத் தன்மையை நிலைநாட்ட முயற்சித்து வருகிறார். பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஆராயோ ஜனநாயக உரிமைகளை மிகக் கடுமையாக கட்டுப்படுத்தி விட்டார். அவரது நிர்வாகம் புதிய மக்கள் சேனையிடம், சமரச பேச்சு நடத்துவதை கைவிட்டுவிட்டது. தனிநாடு கோரும், மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணிக்கு (MILF) எதிராக, இராணுவ நடவடிக்கையை தொடக்கியுள்ளார். இத்தகைய அரசியல் சூழ்நிலையில், நீண்ட காலமாக கொடூரச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாக வரலாறு படைத்துள்ள பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் சில பிரிவுகள் துணிச்சலோடு, இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுவதில் வியப்பு எதுவுமில்லை. சென்ற ஆண்டு ஆரம்பத்தில், கேர்னல் பால்பரான் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், மின்டோரோ தீவுப்பகுதியில், புதிதாக கொரில்லாக்களை தேர்ந்தெடுத்து, பயிற்சி தருவதில் புதிய மக்கள் சேனையின் முன்னோடி அமைப்புக்களாக, கரப்பட்டான் மற்றும் பயோன் முனா ஆகிய அமைப்புக்கள் செயல்பட்டு வருவதாக அவர் வெட்டகங்கெட்ட வகையில் குறிப்பிட்டார். தனது பகுதியில் முந்தைய ஆண்டு சரணடைந்த NPA கொரில்லாக்களில் 60சதவீதம் பேர் அரசு சார்பில்லாத அமைப்புக்களால் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் என்று அவர் கூறினார். அவர் குறிப்பிட்ட அமைப்புக்கள் சட்டபூர்வமானவை என்றாலும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பால்பரான் கேட்டுக் கொண்டார். பயன் முனா ஒரு அரசியல் கட்சியாகும். சென்ற முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மூன்று சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றிருக்கின்றது மற்றும் அக்கட்சிக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஓராண்டிற்கு பின்னர், அந்தப் பகுதியில் 17 பேர் மரண தண்டனைக்கு உள்ளாயினர்-- அவர்களில் 13 பேர் பாயன் முனா உறுப்பினர்கள் அல்லது அந்த அமைப்பின் நிர்வாகிகள். அவர் மீது பாயன் முனா ஒருங்கிணைப்பாளர் எடில்பர்டோ நப்போல்ஸ் (Edilberto Napoles) கொலை தொடர்பாக முறையான புகார் மனுவை தாக்கல் செய்திருந்தும் பால்பரான் நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு, பிரிகேடியர் ஜெனரலாக பதவி உயர்வு கிடைக்கப்பெற்றார். நாடு முழுவதிலும் மனித உரிமைகள் மீறல் அதிகரித்து வருவதை புள்ளி விவரங்கள் குறிகாட்டுகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டு கத்தோலிக்க ஆலயத்தோடு நெருக்கமான உறவு கொண்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான பிலிப்பைன்ஸ் கைதிகள் பணிக்குழு (Task Force Detainees of the Philippines) டிசம்பர் 2002 நிலவரப்படி, குறைந்த பட்சம் 197 அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களில் 12 பேர் காணாமல் போய்விட்டனர். 8 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்டனர். கிளர்ச்சி ஒடுக்கல் நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டபோது 14,851 பேர் தங்களது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்று அந்த தன்னார்வ அமைப்பு தகவல் தந்திருக்கிறது. 1986ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டு சர்வாதிகாரி பெர்டினாண்ட் மார்கோஸ் பதவியில் இருந்து விரட்டப்பட்டார். அதற்குப் பின்னர் அரசாங்கத்தின் மனித உரிமைகள் கமிஷன் திரட்டியுள்ள தகவல்களின்படி 6,913 மனித உரிமை மீறல்கள் நடைபெற்று இருக்கின்றன. 1999ம் ஆண்டில் மட்டும் 1,434 சிவில் உரிமைகள் மீறல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 556 சம்பவங்கள்தான் நீதிமன்றங்களில் வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 27சதவீதம் மட்டுமே குற்றச்சாட்டு நிலைக்கு வந்துள்ளன. சாதாரண குற்றவியல் வழக்குகள் தொடர்பான நடைமுறைகளை சர்வதேச பொது மன்னிப்புச்சபை அறிக்கையாகத் தாக்கல் செய்திருக்கிறது. சாதாரண குற்றவியல் வழக்குகளில் "குற்றச் சாட்டுக்களை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யும் முன்னர், 'புலன் விசாரணைக்காக' கைதிகளைக் காவலில் வைக்கும் காலக்கெடு சட்ட விரோதமாக நீடிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது". "சந்தேகத்திற்குரிய நபர்களை போலீசார் அல்லது இராணுவத்தினர் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்காக அல்லது தகவல் திரட்டுவதற்காக சித்திரவதை செய்கிறார்கள் அல்லது முறைகேடாக நடத்துகிறார்கள்" என்று சர்வதேச பொது மன்னிப்பு சபை தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மனித உரிமைகள் மீறல் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதற்குக் காரணம் அந்நாட்டு ஆளும் மேல்தட்டினர் அப்பட்டமான ஒடுக்கு முறைகளுக்கு தாவிவிட்டனர் என்பதை சமிக்கை காட்டுகிறது. பக்கத்து நாடுகளைப் போல், பிலிப்பைன்சின் பொருளாதாரக் கொள்கைகளாலும் அல்லது அதிகரித்துவரும் பொருளாதார கீழிறக்க நிலையினாலும் வளர்ந்து கொண்டு வருகின்ற சமுதாய மற்றும் அரசியல் கொந்தளிப்புக்களுக்கு அரசாங்கத்தின் வசம் தீர்வு எதுவும் இல்லை. 2002 நிலவரப்படி பிலிப்பைன்ஸ் மக்கள் தொகை 76.5 மில்லியன். இவர்களில் 40சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 3.5 மில்லியன் மக்கள் வேலையில்லாது இருக்கின்றனர். 5 மில்லியன் மக்களுக்கு முழுமையான, நிறைவான பணிகள் கிடைக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தித்தின் புள்ளி விவரப்படி, பிலிப்பைன்ஸ் மக்களில் பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற 20 சதவீதம் பேர் தேசிய வருமானத்தில் 47.8 சதவீதத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் அல்லது சம்பாதிக்கின்றனர். அதே நேரத்தில் பரம ஏழைகளாக உள்ள 20 சதவீத மக்கள் தேசிய வருவாயில் 6.5 சதவீதம்தான் சம்பாதித்து வருகின்றனர். குறைந்த பட்ச ஊதியம் 265 பெசோக்களாக உள்ளது, இந்த அளவு கடந்த இரண்டு ஆண்டுகளில் உயரவில்லை, மணிலா புறநகர்ப் பகுதியில் 6 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை செலவு --530.01 பெசோக்களாகும். அப்படி இருந்தும் 8,161 நிறுவனங்களில் 24.8 சதவீத நிறுவனங்கள் குறைந்த பட்ச ஊதியத்தைக் கூட வழங்கவில்லை. இது போன்ற சூழ்நிலைகளில் CPP மற்றும் இதர இடதுசாரி அமைப்புக்களின் பங்குப்பணி குறிப்பாக மிகவும் ஆபத்தானதாக உள்ளது. ஆராயோ பதவிக்கு வருவதற்கு அவர்கள் உதவி செய்ததுடன், அவரது நிர்வாகம் இராணுவத்திற்கு அழுத்தம் கொடுத்து கட்டுப்படுத்தும் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் என்ற பிரமையினை தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள். இதன் காரணமாக ஒரு வலதுசாரி அரசை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அரசாங்கம், அரசியல் எதிர்ப்பு அறிகுறிகள் தோன்றினால், அவற்றை ஆத்திரமூட்டவும் நசுக்கவும் அதிக அளவில் பாதுகாப்பு படைகளையே சார்ந்திருக்கிறது. |