World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

US tortures two detainees to death in Afghanistan

அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் கைதிகளை சாகும்வரை சித்திரவதை செய்துள்ளது
By Peter Symonds
10 March 2003

Back to screen version

அமெரிக்க இராணுவமானது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வடக்கிலுள்ள பக்ரம் விமானத்தளத்தில் உள்ள விசேட விசாரணை மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் குறைந்தபட்சம் இருவரையாவது சாகும் வரை சித்திரவதை செய்துள்ளதற்கான புதிய சாட்சியங்கள் உருவெடுத்துள்ளன. எந்தவொரு சமயத்திலும் ஏறத்தாள 100 கைதிகள் இந்தத் தளத்தில் குற்றச்சாட்டுகளின்றி தடுத்துவைக்கப்பட்டு, விசாரணைகள் சம்பந்தமான அவர்களின் எதிர்ப்பைத் தடுப்பதற்காக, பலவிதமான அவமதிப்பு, குழப்பம் மற்றும் உடல்ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இரு இளைஞர்களது மரணமும் கடந்த டிசம்பரில் சம்பவித்தது. ஆனால் அமெரிக்க பேச்சாளரால் இது இயற்கை மரணமாக பூசி மெழுகப்பட்டிருந்தது. இந்த இருவரது பெயர், ஊர் சம்பந்தமான எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை. இருவரது மரணத்துக்கான சூழ்நிலைகள் பற்றிய பூரண விசாரணை மேற்கொள்ளப்படுமென உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் இரு மாதங்களுக்குள் இச்சம்பவங்கள் எல்லாம் உத்தியோகபூர்வமாக புதைக்கப்பட்டுவிட்டன.

எவ்வாறாயினும் கடந்த செவ்வாய்கிழமை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் கட்டுரை ஒன்று இந்த இரு மரணங்களும் இயற்கை மரணங்களல்ல என வெளிப்படுத்தியிருந்தது. இந்த பத்திரிகையாளர் இந்த இருவரில் ஒருவரான, 22 வயது விவசாயியும் பகுதிநேர வாடகை வாகன சாரதியுமான டிலாவரின் உறவினரை பின்தொடர்ந்தார். அவர் கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் டில்வரின் மூத்த சகோதரரிடமிருந்து அவரின் மரண அத்தாட்சிப் பத்திரத்தின் பிரதியைப் பெற்றுக்கொண்டார். அது ஜனவரி 17, சடலத்துடன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அதன் உள்ளடக்கத்தை யாரும் புரிந்துகொண்டிருக்கவில்லை.

டிசம்பர் 13 திகதியிடப்பட்டிருந்த பத்திரத்தின் பிரகாரம், டிலாவர் காவலிலிருந்தபோது அவரது கூண்டில் "மூச்சுப்பேச்சின்றி" காணப்பட்டார். அவர், மொட்டை ஆயுதத்தினாலான தாக்குதலினால் உடலின் கீழ்பாகத்தில் ஏற்பட்ட உட்காயங்களின் விளைவாக இருதய நாடி நோயினால் பீடிக்கப்பட்டு மரணித்துள்ளார். "இறப்புக்கான காரணங்கள்" பற்றிய பகுதியில் நான்கு காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன: இயற்கை, விபத்து, தற்கொலை மற்றும் கொலை. இவற்றில் கொலை என்ற பகுதி குறியிடப்பட்டிருந்தது.

இராணுவத்துக்கு சொந்தமான விசேட நோய் அறிகுறி நிபுணரால் கையொப்பமிடப்பட்ட இப்பத்திரத்தின் நம்பகத்தன்மையை அமெரிக்க அலுவலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இராணுவ பேச்சாளரான கேர்ணல் ரொஜர் கிங், டிசம்பர் 3 முல்லா ஹபீபுல்லாவின் மரணமும் சுவாசப்பையில் இருந்த இரத்தக் கட்டி மற்றும் மொட்டை ஆயுதத்தினாலான தாக்குதலில் ஏற்பட்ட உட்காயங்களின் விளைவாகவே இடம்பெற்றது என ஏற்றுக்கொண்டார். 30 வயதான ஹபீபுல்லா தென்மாகாணமான ஒருஸ்கன்னைச் சேர்ந்தவராவார். இராணுவம் அவரது மரணம் பற்றி எந்தவித விபரத்தையும் அவரது குடும்பத்தவருக்கு வழங்காத நிலையில் செஞ்சிலுவைச் சங்கத்தினூடாகவே அறிந்து கொண்டனர்.

இந்த மரணம் தொடர்பாக விசாரணைகள் நடைபெறுவதாக குறிப்பிட்ட கிங், வேறெந்த விபரங்களையும் வழங்கவில்லை. அவர் மரண சான்றிதழ்கள் தொடர்பாக அக்கறையின்றி பேசினார். "இது இன்னமும் ஒரு குற்றவியல் சம்பவமாக அர்த்தப்படவில்லை. குற்றவியல் கொலை உள்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது," எனப் பிரகடனப்படுத்தினார். இவரது குறிப்புகள் மோசமான தட்டிக்கழிப்பாகும். இருவரும் நடத்தப்பட்ட விதம் மற்றும் அவர்களது வைத்திய சிகிச்சைக்கான நிலைமை பற்றிய அக்கறையீனம் ஆகியன, மிகக் குறைந்த மட்டத்திலேனும், எந்தவொரு நீதிமன்ற சட்டத்தின் முன்னிலையிலும் மோசமான குற்றவியல் புறக்கணிப்பாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தமது தொந்தரவுகளுக்கு இரையானவர்கள் தொடர்பாக கிங் இன் அக்கறையானது, அமெரிக்க விசாரணையாளர்களின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணானதாகும். டில்வருக்கு மனைவியும் இரண்டு வயது மகளும் உள்ளனர். அவரது வாடகை வாகனம் கோஸ்ட் நகரிலுள்ள அமெரிக்கத் தளத்திற்கு அருகாமையில் ஆப்கானிஸ்தான் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட போது கைதுசெய்யப்பட்டுள்ளார். வாகனத்திலுருந்த இரு பயணிகளான உள்ளூர் கிராமப் பொலிசும் மற்றுமொரு கிராமத்தவரும் கைதுசெய்யப்பட்டு குற்றச்சாட்டுகளின்றி இன்னமும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

டில்வர் பக்ரமில் தடுப்புக் காவலில் இருந்த சமயம் அவரைக் கண்ட பலரை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையாளர் சந்தித்து உரையாடியுள்ளார். அவர்கள், இரு தட்டுக்களாக பிரிக்கப்பட்டிருந்த, மேல் தட்டில் தனிமைப்படுத்தப்பட்ட விசாரணைக் கூண்டுகளையும் தரைப் பகுதியில் விசாலமான தடுத்துவைப்பு பிரதேசத்தையும் கொண்ட ஒரு விசாலமான விமானத் தரிப்பிடத்தைப் பற்றி விபரித்தார்கள். அப்துல் ஜபார் மற்றும் ஹக்கீம் ஷாவும், தாம் மேல் மாடியில் கண்கள் கட்டப்பட்டும் நிர்வாணமாக கைகளை உயர்த்தி சீலிங்கில் சங்கிலியினால் பிணைக்கப்பட்டும், கால்கள் விலங்கிடப்பட்டும் இரு வாரங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டனர். அவர்கள் சாப்பிட, தொழ, கழியறை செல்ல மற்றும் நாளாந்த விசாரைகளுக்காகவும் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். காவலர்கள் சத்தமிட்டோ அல்லது உதைத்தோ அவர்களை உறங்கவிடாது செய்தனர்.

டில்வர் கீழ் தட்டில் குளியலறைக்கு செல்வதற்காக கண்கள் கட்டப்பட்டு கீழே கொண்டுசெல்லப்பட்டதை கிடத்தப்பட்டிருந்ததை பார்த்ததாக ஜபார் நினைவுகூர்ந்தார். "அவர் பெரிதும் போராடிக்கொண்டிருந்ததால், அவர் யாரென நான் கேட்டேன். சங்கிலிகள் அவிழ்க்கப்பட்டபோது டில்வர் மூச்சுவிட பெரிதும் சிரமப்படுவதாக தெரிந்ததோடு அவர் கீழே படுத்துக் கிடந்தார். அவரால் பிராணவாயு பெறமுடியாதிருந்ததால் பீதியடைந்திருந்தார்" என ஜபார் கூறினார்.

தாம் கீழ்மாடி அறைகளை கூட்டி சுத்திகரிக்கையில் டில்வரை கண்டதாக ஷா கூறினார். "அவர் ஆரோக்கியமானவராக காணப்படவில்லை. முகம் கறுத்துப் போயிருந்தது. கால்கள் சங்கிலியிடப்பட்டிருந்ததால் நன்கு நகர முடியாமல் இருந்தார். அவர் மிக கவலையுடன் காணப்பட்டார்" என ஷா கூறினார். ஷாவின் சொந்த வேதனை நிறைந்த அனுபவங்களின் போது, அவரது கணுக்கால்களுக்கு விலங்கிடப்பட்டிருக்கையில் இரத்த ஒட்டமின்றி வீங்கிவிட்டன. இறுதியில் அவர் அமர்ந்திருக்குமாறு கூறப்பட்டார். ஆனால் விலங்குகள் முற்றாக அகற்றப்பட்ட பின்னும் தனது கால்கள் அசைக்கவே முடியாது மரத்துப்போயிருந்ததாக ஷா தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது "தொந்தரவு செய்தல் மற்றும் நிர்ப்பந்தித்தல்" வழிகளை தாம் பிரயோகித்ததாக அமெரிக்க அலுவலர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் இவை சித்திரவதை நடவடிக்கைகள் அல்ல என வெறுமையாக மறுத்தனர். "நாம் அவர்களுக்கு சமநிலை ஆகாரம் வழங்கினோம். அவர்கள் காலநிலையிலிருந்து பாதுகாப்பாக இருக்கிறார்களா என பார்த்துக்கொள்கிறோம். அவர்கள் கட்டிடங்களில் வாழ்கிறார்கள். நான் கூடாரத்தில் இருக்கிறேன். மனிதாபிமான முறையில் அவர்களை பராமரிக்க எம்மால் முடிந்தவற்றை எல்லாம் செய்கிறோம்," என கிங் பிரகடனப்படுத்தியதோடு, அமெரிக்கா சர்வதேச விதிகளைப் பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்.

அவரது குறிப்புகள், சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமான புஷ் நிர்வாகத்தினதும் அமெரிக்க இராணுவத்தினதும் வெறுப்புணர்ச்சியை சாதாரணமாக கோடிட்டுக் காட்டியது. பக்ரம், கியூபாவின் குவாண்டனமோ குடா மற்றும் ஏனைய இடங்களிலும் நூற்றுக்கணக்கான கைதிகள் --போராளிகள் பற்றிய விடயத்தில் ஜெனீவா உடன்படிக்கையின் கீழ்-- அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பக்ரமில் பயன்படுத்தப்பட்ட வழிமுறைகள், 1994ல் அமெரிக்க காங்கிரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஐ.நா.வின் சித்திரவதை எதிர்ப்பு உடன்படிக்கையை மீறியுள்ளன. ஒரு துணை சட்டத்தின்படி அமெரிக்காவிலோ அல்லது ஒரு அமெரிக்கரால் வேறு ஒரு இடத்திலோ சித்திரவதை மேற்கொள்ளப்பட்டிருக்குமானால் 20 வருட சிறைத் தண்டனைக்குரிய பெரும் குற்றமாகும். சித்திரவதையினால் மரணம் நேருமாயின் மரணதண்டனை வழங்கப்படலாம்.

சர்வதேச மன்னிப்புச் சபை அண்மையில் குறிப்பிட்டுள்ளதாவது: அமெரிக்க அலுவலர்களின் நேர்மாறான வலியுறுத்தல்கள் இருப்பினும், புலன்ரீதியான இம்சைகள் (கண்களை மூடி கட்டுதல்), நீண்டகாலமாக உடல் உபாதைகளுக்கு உட்படுத்துதல் (விலங்கிடுதல்), மருத்துவ உதவி மறுப்பு என்பன சித்திரவதைக்கான மூலங்களாக பண்புமயப்படுத்தப்படுவதோடு உளவியல் சித்திரவதைகள் சர்வதேச சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டவையாகும். குவான்டனமோ அல்லது ஆப்கானிஸ்தானில் உள்ள விசாரணையாளர்கள் சித்திரவதைகளாக கணிக்கப்படுபவை எவை என்பதையிட்டு தவறாக புரிந்துகொள்ளாமல், சித்திரவதைகளாக கணிக்கப்படும் வழிமுறைகளை தவிர்த்து தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும். காவலில் இருக்கும் போது நிகழும் மரணம், தற்கொலை முயற்சிகள் ஆகியன எல்லை மீறியவையாக மட்டுமன்றி சட்டத்தையும் மீறிய தடுப்புக் காவல் நிலைமைகள் மற்றும் விசாரணைகளின் வழிமுறைகள் பற்றிய ஆழ்ந்த கவனத்துக்குரிய சந்தேகங்களை எழுப்புகின்றன."

எவ்வாறெனினும், அமெரிக்க புலனாய்வு வட்டாரத்துக்குள் இழிவான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள "துன்பகரமான மற்றும் பலாத்காரமான" வழிமுறைகளின் படி, அவை "இலேசான சித்திரவதைகளுக்கு" மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக நம்புவதற்கான காரணங்கள் எதுவும் கிடையாது. அண்மையில் அல் கைடா தலைவர் எனக் கூறப்படும் காலித் ஷேக் முகமட் கைதுசெய்யப்பட்டதைப் பற்றி குறிப்பிடும்போது அமெரிக்க அலுவலர் ஒருவர், "ஐ.நா. சித்திரவதை எதிர்ப்பு உடன்படிக்கைக்கு அமுலாக்கல் இயந்திரம் கிடையாது. ஆகவே நீங்கள் உங்களது கற்பனையால் வெறுமனே கட்டுப்படுத்தப்படுகிறீர்கள்" என்றார். அசோசியேட்டட் பிரஸ் உடன் பேசும்போது, அங்கீகரிக்கப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு மேலதிகமாக குவான்டனமோ குடாவில் உள்ள அதிகாரிகளுக்கு "சுருங்கிய முகத்தைக் காட்ட வழியமைத்தது" சில அல் கைடா உறுப்பினர்களுக்கு மேலதிக உற்சாகம் தேவை என்பதாலாகும்" எனக் குறிப்பிட்டார்.

ஜனநாயகக் கட்சி செனட்டரான 4வது ஜோன் ரொக்பெயிலர், சித்திரவதைகள் சட்டவிரோதமக்கப்படாத ஒரு மூன்றாவது நாட்டுக்கு மொகமட் கைமாற்றப்பட வேண்டும் என ஆலோசனை கூறினார். இது கடந்த காலத்தில் சீ.ஐ.ஏ. யால் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டு வந்த "செயலை நிறைவேற்றுதல்" எனப்படும் ஒரு வழக்காறாகும். "நான் அதை கைவிடமாட்டேன். அவர் சம்பந்தமான விடயத்தில் மேசையில் இருக்கும் எதையும் ஒதுக்க மாட்டேன். ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களைக் கொன்றது இந்த நபர்தான்," என அவர் வலியுறுத்தினார்.

ரொக்பெயிலரின் குறிப்புகள், புஷ் நிர்வாகமானது செப்டெம்பர் 11 தாக்குதல்களில் இருந்து, பகிரங்கமான மறுப்புகள் எவ்வளவு இருப்பினும் இராணுவ மற்றும் சீ.ஐ.ஏ.யின் சித்திரவதை பிரயோகங்களை மன்னித்து வருவதையே சாதாரணமாக அம்பலப்படுத்துகிறது. முகமட் போன்றவர்களுக்கு எதிரான நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்கள், இதுவரை குற்றம்சாட்டப்படாத அல்லது நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படாத நூற்றுக்கணக்கான மக்களை கைதுசெய்யவும் சித்திரவதை செய்யவும் மற்றும் காலவரையறையற்ற தடுப்புக்காவலில் வைப்பதற்குமான வழிமுறைகளை உருவாக்குவதற்காக சுரண்டப்பட்டு வருகின்றன.

இளம் சாரதி டில்வர் மற்றும் கிராமவாசியான முல்லா ஹபீபுல்லாவின் விடயத்தில் --அமெரிக்க அதிகாரிகளால் பொறுப்பாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத குற்றம்-- அவர்களின் சாவுக்கு அமெரிக்க இராணுவமே பொறுப்பாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved