WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்கா
G8 summit gives go ahead for US offensive against Iran and North Korea
ஈரான் மற்றும் வடகொரியா மீது அமெரிக்க தாக்குதலுக்கு ஜி-8 உச்சிமாநாடு
பச்சைக்கொடி
By Chris Marsden
6 June 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
ஜி-8, உச்சி மாநாடு உலகின் ஏழு முன்னணி தொழில்துறை நாடுகளும் அத்துடன் ரஷ்யாவும்
இணைந்து இவியான் பகுதியில் நடத்தப்பட்டது. வாஷிங்டனுக்கு ஐரோப்பிய நாடுகள் சாஷ்டாங்க சரணாகதி அடைந்துவிட்டன
என்பதைக் காட்டுகின்ற வகையில் அந்த மாநாட்டு நடவடிக்கைகள் அமைந்து விட்டன.
புஷ் நிர்வாகம் ஈராக் மீது நடத்திய போருக்கு எதிராக தெரிவித்து வந்த கண்டனங்களை
பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ரஷ்ய ஆட்சிகள் மறந்து விட்டன என்பதோடு நின்று விடாமல் அதற்கு அப்பாலும்
சென்றிருக்கின்றன. மே 22ம் தேதியன்று ஈராக்கில் போருக்குப் பின்னர், அமெரிக்காவின் ஆட்சி நடப்பதற்கு ஐ.நா,
பாதுகாப்பு சபை ஒப்புதல் வழங்கியுள்ளதில் இது ஏற்கனவே விளக்கிக் காட்டப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக எதிர்ப்புகள்,
கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தாலும் ஜூன் 3ம் தேதியன்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கை அமெரிக்கா, ஈரான்
மீதும் வடகொரியா மீதும் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டது.
குடியரசுக் கட்சி நிர்வாகத்திற்கு முன்னர் சிம்ம சொப்பனமாக பிரான்ஸ் விளங்கி வந்த
நிலையில், ஜனாதிபதி ஜாக் சிராக் ஏற்பாடு செய்த கூட்டத்தில் இருந்து மற்றும் பிரான்சிற்கு அவரது வருகையிலிருந்து
ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ் இதைவிட வெற்றிகரமான விளைவை, எதிர்பார்த்து இருக்கவோ, நம்பி இருக்கவோ
முடியாது.
புஷ் உச்சிமாநாட்டை அதிக அளவில் அலட்சியம் செய்தார். ஒரு நாளைக்கும் குறைந்த
கால அளவிற்குத்தான் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் அவர் அரபு நாட்டுத்தலைவர்கள், இஸ்ரேல்
தலைவர்கள் மற்றும் பாலஸ்தீன ஆட்சித் தலைவர்கள் ஆகியோருடன் மத்திய கிழக்கில் அமைதிக்காக அவரது முன்மொழிதலான
"சாலை வரைபடம்" பற்றி ஒரு சுற்று பேச்சு நடத்துவதற்காக மத்திய கிழக்கு சென்று விட்டார். அவர் மத்திய கிழக்கு
புறப்பட்டுச் செல்லும் முன்னர் அவருக்கு முன்னர் தொந்தரவு கொடுத்து வந்த ஆட்சித்தலைவர்கள், அவருக்கு முகஸ்துதி
செய்தனர், அவர் விரும்பியதை செய்ய தயாராயிருந்தனர்.
உச்சி மாநாட்டின் முதல் நாள், முதலாளித்துவ எதிர்ப்பு, பூகோளமய எதிர்ப்புக் குழுக்கள்
மிகப் பெருமளவிற்கு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. அவர்கள் மீது, கலவரங்களை அடக்கும் பொலீசார் மிகக்
கொடுமையாக தாக்குதல்களை நடத்தினர்.
உலகம் முழுவதிலும், பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளில், அமெரிக்க நிர்வாகமும்
மற்றும் பிரிட்டனின் தொழிற்கட்சி ஆட்சியும், புலனாய்வு அறிக்கைகளை தவறாகவும் அல்லது மிதமிஞ்சிய உருவகம்
கொடுத்தும் ஈராக்கிடம் மக்களை கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்கள் இருப்பதாக கூறி, ஈராக் மீது போர்
தொடுப்பதை நியாயப்படுத்த முயன்றனர், என்ற விபரங்கள் மேலாதிக்கம் செய்தன. அமெரிக்க ஆயுத ஆய்வாளர்கள்
ஈராக்கிடம் எந்தவிதமான பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பு திட்டமும் இல்லை என கண்டு பிடித்தனர். மற்றும்
பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்டும், அவரது துணை அமைச்சர் வொல்போவிட்சும் தனித்தனியாக
அறிக்கை தந்து, ஈராக்கிடம் பயங்கர ஆயுதங்கள் எதுவும் இல்லை என்றும் இந்த பிரச்சனை போருக்கான அமதிகாரத்துவ"
சாக்குப்போக்காக மட்டும் இருந்து வந்ததை ஒப்புக் கொண்டனர். எனவே இதனால் அரசியலில் எந்தவிதமான
பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, இரண்டு நாடுகளிலும் ஓரளவிற்கு அரசு தரப்பு விசாரணைகளுக்கு ஏற்பாடு
செய்ய இது நிர்பந்தித்தது. இவியான் பகுதி உச்சிமாநாட்டில் நிலவிய மிக அபூர்வமான சூழ்நிலையில், சட்டவிரோதமான
ஆக்கிரமிப்பை தொடக்குவதற்கு பிரதானமாக, பொறுப்பான ஒரு மனிதர் நண்பர்கள் நடுவில் மிகுந்த உற்சாகத்தோடு,
ஓய்வு எடுத்துக் கொள்ள முடிந்திருக்கின்றது. அத்தகைய தலைவர்களை காக்காய் பிடிப்பவர்கள் என்று கூறுவதே பொருத்தமாக
இருக்கும்.
ஜெனீவா ஏரியை எதிர்நோக்கியுள்ள சொகுசு விடுதியில், ஒரு நாள் முழுவதும் புஷ் தலைவர்களோடு
கைகுலுக்கி மற்றும் ஒருவரையொருவர் தட்டிக் கொடுத்த நிழற்படம் பிடிப்பதற்கு வாய்ப்புக்கொடுப்பதில் ஈடுபட்டார்.
தனிப்பட்ட முறையில் 25 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில் புஷ் மத்திய கிழக்குத் தொடர்பாக, சிராக்கிற்குள்ள அறிவை
பாராட்டினார். இஸ்ரேல் பாலஸ்தீன தகராறில் தீர்வுகாணும் முயற்சியில், சிராக்கை கலந்து ஆலோசிக்கப் போவதாக
உறுதியளித்தார். அமெரிக்க பிரெஞ்சு உறவுகள் "நன்றாக" இருப்பதாகவும் ஒரு "சங்கடமான காலத்தை" கடந்து
வந்துவிட்டதாகவும் புஷ் குறிப்பிட்டார்.
சிராக்கின் தோள்பட்டையில் தட்டிக்கொடுத்து, ஈராக்கில் ஆட்சி நடத்துவதற்கு அமெரிக்காவிற்கு
சுதந்திரமான உரிமை வழங்கும் தனது தீர்மானத்திற்கு ஐ.நா ஆதரவு தந்ததை ஆதரிப்பதற்காக புஷ் சிராக்கிற்கு
நன்றி தெரிவித்துக்கொண்டார். அதற்குப் பின்னர், அமெரிக்க இந்திய பண்பாடு பற்றிய தோலுறையால் கட்டமைப்பு செய்யப்பட்ட
மூன்று புத்தகங்களை அவர் சிராக்கிற்கு அன்பளிப்பாக கொடுத்தார். அதற்குப் பதிலாக சிராக் அவருக்கு மிகவும்
கணிசமான வெகுமதியைத் தந்தார். அது என்ன வென்றால் ஆப்கானிஸ்தானிற்கு பிரெஞ்சு துருப்புக்களை அனுப்ப
உறுதியளித்தார்.
அந்த ஹோட்டல் மாடியில் ஜேர்மன் அதிபர் சுரோடர் உடன் புஷ் காட்சியளித்தார்.
சுரோடரின் போர் எதிர்ப்பு வாய்ச்சவடால் காரணமாக, இருவரும் மாதக் கணக்கில் ஒருவரையொருவர் சந்தித்துக்
கொள்ளவில்லை. உச்சி மாநாட்டைத் தொடர்ந்து சுரோடர், உணர்வற்ற நிலையில் இருந்து வெளியே வந்ததைப்
போல், தெளிவான உணர்வு பெற்றார். "பழைய சம்பவங்கள் மறைந்துவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது,
ஆனால் அந்த சம்பவங்கள் நமக்குப் பின்னால் இருக்கின்றன" என்று சுரோடர் குறிப்பிட்டார்.
செச்சன்யா பகுதியில், தனது சொந்த கிரிமினல், போரை நடத்துவதற்கு ரஷ்ய ஜனாதிபதி
விளாடிமீர் புட்டினுக்கு அமெரிக்கா முழு உரிமை வழங்கிவிட்டது. எனவே, உச்சி மாநாடு பற்றி, கருத்து தெரிவித்த
புட்டின் "உச்சி மாநாட்டிற்கு பின்னர், நிலைமை நன்றாக உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதுதான்
மாநாட்டின் பிரதான முடிவு" என்று குறிப்பிட்டார்.
இராஜ்ஜியத்துறை முயற்சிகள் மத்திய கிழக்கில் வெற்றிபெற வேண்டும் என்ற ஜி-8ன்
வாழ்த்துக்களுடனும் ஆசீர்வாதத்துடனும் பிற்பகலின் நடுப்பகுதியில் புஷ் மத்திய கிழக்கிற்கு தனது பயணத்தை தொடக்கினார்.
கனேடிய பிரதமர் ஜோன் கிரிடியன் (Jean Chrétien),
"விவாதத்தில் கலந்து கொண்ட இதர நாடுகளின் நல்லெண்ணங்களை தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாக" கூறினார்.
அவர் மத்திய கிழக்கிற்கு பயணத்தை மேற்கொள்ளும் முன்னர், பயங்கரவாதிகளுக்கு,
"ஒரு பாதுகாப்பான இடம்" தர மறுப்பதை உறுதிப்படுத்தும் வகையில் பூகோள ரீதியில் பயங்கரவாதத்தை முறியடிக்கவும்
நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் நகல் அறிக்கையை முதலில் பெற்றுக் கொண்டார். இந்த
சாக்கு போக்கில், உலகம் முழுவதிலும் தொடர்ந்து அமெரிக்க இராணுவ தலையீட்டிற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கெல்லாம் மேலாக மிக முக்கியமாக மாநாட்டில் கலந்து கொண்ட எல்லாத்
தரப்பினரும் வெளிப்படையாக வட கொரியாவுக்கும் ஈரானுக்கும் மிரட்டல் விடுவதில் உடன்பட்டு நின்றனர். அணு ஆயுதப்
பரவலைத் தடுப்பதற்கான அறிக்கை ஜூன் 2ம் தேதி வெளியிடப்பட்டது. அடுத்த நாள் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டதில்
வட கொரியா தனது அணு ஆயுத திட்டம் எது இருந்தாலும் அதை "வெளிப்படையாக, விசாரித்து அறிந்து கொள்ளும்
வகையில் அழித்துவிட" அறிக்கை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டது. ஈரானுக்கு அந்த அறிக்கை எச்சரிக்கை விடுத்தது.
"அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுகின்ற வகையில்" ஈரான் செயல்படவில்லை எனில்,
ஈரான் "முன்னேறிய அணு ஆயுதத் திட்டத்தை மேற்கொள்ளும் பட்சத்தில்" அதன்மீது இலக்கு வைக்கப்படும் என்று அறிக்கை
எச்சரிக்கை விடுத்தது.
இந்த அறிக்கையின் மூலம், தான் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையென்று கருதினால்,
அதற்கு உடனடி அனுமதி கிடைத்து விட்டதாக (பச்சை விளக்கு காட்டப்பட்டு விட்டதாக) வாஷிங்டன் கருதியது. ஒரு
மூத்த அமெரிக்க அதிகாரி, இதைப் பற்றி கருத்துத் தெரிவிக்கும்போது, அறிக்கையில் உள்ள ஒரு பந்தி, சர்வதேச
உடன்படிக்கைகளை மீறியதாக சோதனைகள் தொடர்வது போன்றவை அழிவுகர ஆயுதங்களைத் தடுப்பதற்காக இருக்கும்
"கருவிகள் வகையினை" குறிப்பிடுகிறது, தேவைப்பட்டால் "சர்வதேச சட்டவிதிகளுக்கு ஏற்ப" "இதர நடவடிக்கைகளும்"
மேற்கொள்ளலாம் என இந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றார். "ஏனைய நடவடிக்கைகள்" பலாத்காரத்தைப்
பயன்படுத்துவதற்கான ஒரு குறியீட்டுச்சொல் என்றார் அவர்.
இத்தகைய விமர்சனம் ஜி-8 நாடுகளின் இதர தலைவர்களுக்கு கவலையை உருவாக்கியது.
இத்தகைய விமர்சனம் "மிக அசாதாரணமான துணிச்சல் நிறைந்தது. இராணுவத்தைப் பயன்படுத்தும் எந்தப் பேச்சும்
நடைபெறவில்லை" என பிரெஞ்சு ஜனாதிபதி சிராக் கருத்துத் தெரிவித்தார்.
ஜப்பானிய பிரதமர் ஜுனிச்சுரோ கொய்சுமி கருத்துத் தெரிவிக்கும்போது, "ஈராக்கைப்
போன்று அல்லாமல் வடகொரியா பிரச்சனையைப் பொறுத்தவரையில் சமாதானமான முறையில் இராஜியத்துறை
பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படவேண்டும்" என்பதில் எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டது என்றார்.
ஜனாதிபதி புஷ்ஷின் மிக முக்கியமான கூட்டாளி பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர், "ஈரானுக்கு
எதிராக யாரும் இராணுவ நடவடிக்கை எடுப்பதாக மிரட்டவில்லை" என்று தனது எம்.பி க்களிடம் அவர் மீண்டும்
உறுதியளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதே நேரத்தில் கனடா பிரதமர் கிரிட்டியன் கருத்துத் தெரிவிக்கும்போது,
"இராஜியத்துறை பேச்சுவார்த்தைகள், ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகள் மூலம் இந்த பிரச்சனைக்குத் தீர்வு
காண்பதுதான் எப்போதும் சிறந்த வழி" என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் கட்டளைகளுக்கு கட்டுப்பட ஜி-8 நாடுகள் தயாராக இருக்கின்றன
என்பதை கோடிட்டுக் காட்டும் வகையில் கிரீட்டியன் அறிக்கையில் ஒரு பகுதி அமைந்திருக்கிறது. வட கொரியாவில் இராஜியத்துறை
பேச்சு வார்த்தைகள் மிகச் சிறந்தவையாக இருக்கலாம் என்ற போதிலும், "நீங்கள் எவருக்கும் நன்றாகத் தெரியாத
மற்றும் எவரும் நன்கு புரிந்திராத ஒரு அரசாங்கத்துடன் அணுகுகிறீர்கள்" என்று கிரீட்டியன் குறிப்பிட்டார்.
இப்படி அத்தகைய கூற்றுக்களின் வேறுபட்ட விளக்கங்கள் வந்து கொண்டிருக்கின்றன
என்றாலும் அமெரிக்காவைப் பொறுத்தவரை தனது ஆயுத வலிமையால் உலகில் மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்று
மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அந்த விமர்சனங்கள் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. புஷ்ஷின் கும்பலைப்
பொறுத்தவரை அவர்களுக்குத் தேவையான எல்லாவிதமான இராஜியத்துறை ஆயுதங்களும் அதன் வசமுள்ளன. மற்ற
நாடுகளைப் பொறுத்தவரை தங்கள் ஆதரவுக்குப் பிரதிபலனாக அமெரிக்கா ஏதாவது தருமானால் அமெரிக்க நிர்வாகத்தை
அந்த நாடுகள் தொடர்ந்து ஆதரிக்கத்தான் செய்யும்.
ஜி-8 மாநாடு முடிந்த பின்னர், நிருபர்களுக்கு பேட்டியளித்த சிராக், மிகுந்த அகம்பாவத்தோடு
ஒரு கருத்தை தெரிவித்தார். ஈராக் மீது அமெரிக்கா தலைமையில் படையெடுப்பு நடத்தப்பட்டது "நியாயமற்றது
மற்றும் சட்ட விரோதமானது என்ற தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்றும் ஆனால், தற்போதுள்ள நிலவரத்தைக்
கருத்தில் கொண்டு நாம் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும். சொந்தமாக ஒரு நாடு தானே போர் புரிவது மிக எளிதானது.
ஆனால், சொந்தமாக ஒரு நாடு சமாதானத்தை உருவாக்குவது என்பது மிகமிகச் சிக்கலானது" என சிராக் கருத்துத்
தெரிவித்தார்.
சுருக்கமாகச் சொல்வதானால், ஈராக்கிய நிர்வாகத்தை அமெரிக்கா ஏற்றுக் கொள்வதன்
மூலம் கொள்ளைப் பொருளில் தனக்கு ஏதாவது பங்கு வேண்டும் என்பதைக் கணக்கிட்டு பாரிஸ் ஆதரவு தருகிறது. அப்படி
அதற்கு பிரதியுபகாரமாக பிரான்ஸ், ஈரானிலோ அல்லது வட கொரியாவிலோ அமெரிக்கா மேற்கொள்ளவிருக்கும்
நடவடிக்கைகளை ஆதரிப்பது தேவைப்படும். அதற்குப் பிரதிபலனாக என்ன கிடைக்கும் என்பது, முன்கூட்டியே ஏற்பாடு
செய்து கொள்ளப்பட வேண்டும் என்பதாகும்.
See Also:
ஜி8
உச்சி மாநாட்டு எதிர்ப்புக்கள் மீதான கடும் நடவடிக்கை, உச்சிமாநாட்டை உன்னிப்பாய் கவனிக்கச் செய்கிறது
பிரெஞ்சு - சுவிஸ் எல்லையில் நூற்றுக்கணக்கானோர் கைது
Top of page
|