WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Bitter Sri Lankan power struggle flares up over lotteries board
இலங்கையின் கசப்பான அதிகாரப் போராட்டம் லொத்தர் சபை மீது பற்றி எரிகிறது
By Wije Dias
23 May 2003
Use
this version to print | Send
this link by email | Email the author
இலங்கையில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கும் ஐக்கிய தேசிய முன்னணி
(UNF) அரசாங்கத்திற்கும் இடையிலான அரசியல் போராட்டமானது
இம்மாத முற்பகுதியில் குமாரதுங்க, அபிவிருத்தி லொத்தர் சபையை (Development
Lotteries Board -DLB) தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்போவதாக திடீரென அறிவித்ததையடுத்து
மேலுமொரு கூரிய திருப்பத்தை அடைந்தது. முன்னர் பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ்
இருந்த லொத்தர் சபை, அரசியல் இலாபங்களுக்காக நிதி வழங்கும் அமைப்பாக செயற்பட்டு வந்துள்ளது.
இந்த முரண்பாடு உடனடியாக நாட்டை அரசியலமைப்பு நெருக்கடிக்குள் தள்ள அச்சுறுத்தியது.
இலங்கையில் கணிசமானளவு நிர்வாக அதிகாரங்களை கொண்ட மற்றும் தனியாக தேர்ந்தெடுக்கப்பட்ட குமாரதுங்க,
எதிர்க்கட்சியான பொதுஜன முன்னணியின் தலைவியாவார். ஐ.தே.மு. 2001 தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தை
அமைத்தது முதல், அதிகார நெம்புகோல்களை கட்டுப்படுத்துவது யார் என்பதில் இடையறாத மற்றும் ஆழமான
போராட்டம் நடைபெற்று வருகின்றது.
ஜனாதிபதி அரசாங்கத்துடனான எந்தவொரு ஆலோசனையும் இன்றி தனது ஆத்திரமூட்டல்
முடிவை எடுத்துள்ளார். அவர் மே 8 அன்று, இப்போது சபையை தானே நிர்வகிப்பதாக விளைவுடனும் உறுதியாகவும்
அறிவித்து பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொடவிற்கு சாதாரணமாக எழுதினார். அவரது
கடிதம் உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிக்கை மறுநாள் பிரசுரமாவதாகவும் அறிவித்திருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அரசாங்கத் தரப்பு
பேச்சுவார்த்தையாளர்களில் ஒருவரான மிலிந்த மொறகொட, லொத்தர் சபை தன்னிடமிருந்து பறக்கப்பட்டால் இராஜினாமா
செய்வதாக அச்சுறுத்தி ஒரு அறிக்கை விடுத்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், "ஒரு
பிரதமர் என்ற வகையில் ஒப்படைக்கப்பட்ட எந்தவொரு பொறுப்பையும் அல்லது நடைமுறையையும் என்னுடன் கலந்துரையாடாது
நீங்கள் மாற்றியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதென உணர்கிறேன். இது அரசியலமைப்பின் 44ம் விதியின்
கட்டளை" என பிரகடனம் செய்தார். லொத்தர் சபை 2001 டிசம்பரில் அரசாங்கம் அமைக்கப்பட்ட சமயம் தனது
அமைச்சர்களில் ஒருவருக்கு ஒப்படைக்கப்பட்டிருந்ததையும் அவர் குமாரதுங்கவுக்கு நினைவூட்டினார்.
பிரதமர் சட்டரீதியான வாதங்களை முன்வைத்த அதேவேளை ஐ.தே.மு. ஆதரவாளர்
கும்பல் ஒன்று வர்த்தமானி அறிக்கை அச்சிடப்படுவதை தடுப்பதற்காக அன்று மாலை அரசாங்க அச்சகத்தை ஆக்கிரமித்தது.
இந்தக் குண்டர்கள் பல வாகனங்களையும் ஏனைய உபகரணங்களையும் சேதமாக்கியதோடு அலுவலர்கள் மற்றும்
தொழிலாளர்களையும் மிரட்டினர். அச்சகத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி கண்டதையடுத்து உள்துறை அமைச்சர் ஜோன்
அமரதுங்க, நிறுவனத்திலிருந்து தொழிலாளர்களை பஸ்களில் ஏற்ற தலையீடு செய்யுமாறு பொலிசாருக்கு உத்திரவிட்டார்.
மறுநாள் விக்ரமசிங்க, இந்த விடயத்தை கலந்துரையாட அவசர அமைச்சரவைக்
கூட்டமொன்றைக் கூட்டினார். சட்டமா அதிபர் கே.சி. கமலசபேசன், ஜனாதிபதியின் செயல் அரசியலமைப்பிற்கு
மாறானது என்ற பொதுவான அபிப்பிராயத்தை அவருக்கு தெரிவித்தார். ஏனெனில் அது "அமைச்சுக்களுக்கு கீழ்ப்பட்ட
விடயங்களில் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையேயான கலந்தாலோசனையை வேண்டுகிறது" என அவர் குறிப்பிடடார்.
எவ்வாறெனினும் குமாரதுங்க, தான் கமலசபேசனது அபிப்பிராயத்தை கேட்கவில்லை,
ஆகவே அது கேட்காது கிடைத்த ஆலோசனை என்ற அடிப்படையில் தொடர்ந்தும் அதை ஒதுக்கி வைத்துள்ளார். அத்தோடு
லொத்தர் சபையை அரசாங்க அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைத்த பூர்வ தீர்மானம் தவறுதலான ஒன்று எனவும்
பிரகடனம் செய்துள்ள அவர், வெகுஜன தொடர்புசாதன அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கரிடம் தனது வர்த்தமானி
அறிக்கையை வெளியிடத் தவறியமைக்காக விளக்கம் கோரி எழுதியதுடன், லொத்தர் சபையை கையேற்கத் தனக்கு
அரசியலமைப்பு அதிகாரம் இருப்பதாக தொடர்ந்தும் வலியுறுத்தினார்.
அபிவிருத்தி லொத்தர் சபையானது 1980களில் ஜனாதிபதிக்கு பணம் சேகரிக்க ஆரம்பிக்கப்பட்டதோடு
பல்வேறு காலகட்டங்களில் பல அமைச்சர்களால் முகாமைப்படுத்தப்பட்டது. அது 1994ல் குமாரதுங்க ஜனாதிபதியான
போது நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன் அக்காலத்தில் ஜனாதிபதியே நிதியமைச்சராகவும் விளங்கினார். ஆனால்
ஜனாதிபதி அமைச்சர் பதவி வகிக்காத சமயம் லொத்தர் சபை ஒருபோதும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை.
ஜனாதிபதி நிதியானது பொதுக் கல்வி சுகாதாரம் போன்ற பல்வேறு திட்டங்களுக்காக
--அரசாங்கம் இத்துறைக்கு ஒதுக்கும் நிதி வெட்டப்பட்ட நிலைமைகளின் கீழ்-- உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்பட்டதாகும்.
ஆனால் இந்த நிதியின் உண்மையான நோக்கம் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் அரசியல் வாய்ப்புக்களை வாங்குவதற்கான
நிதி ஊற்றை உருவாக்குவதாக விளங்கியது. அரசாங்க கணக்காளர் நாயகம், ஜனாதிபதி நிதியத்தின் சரியான கணக்காய்வுகள்
குமாரதுங்க பதவியேற்ற நாளிலிருந்து இன்னமும் முன்வைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது குமாரதுங்க அரசாங்கம் தனது நிதிக்கு லொத்தர் சபையின் முழுப் பணத்தையும்
தரவில்லை எனக் குற்றம் சாட்டுகிறார். குமாரதுங்கவின் படி ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் 2002ம் ஆண்டில் லொத்தர்
சபை 940 மில்லியன் ரூபாய்களை கையாண்ட போதிலும் 470 மில்லியன் ரூபாய்கள் மட்டுமே ஜனாதிபதி நிதியில் வைப்பிடப்பட்டதாகவும்
தெரிகிறது.
எதிர் அதிகார மையங்கள்
எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட பணக் கணக்குகள் கணிசமானவையாகும். முரண்பாட்டின்
உக்கிரமும் கசப்புத்தன்மையும் பந்தயத்தில் இன்னும் அதிகமாக உள்ளதென்பதையே காட்டுகின்றது. லொத்தர் சபையை
கட்டுப்படுத்துவது சம்பந்தமான போராட்டமானது அரச அதிகாரத்தின் தனியானதும் போட்டிக்குரியதுமான இரு மையங்களுக்கிடையிலான
--ஒரு பக்கத்தில் ஜனாதிபதியை சூழவும் மறுபுறம் அரசாங்கமும்-- வளர்ச்சி கண்டுவரும் மோதலின் பாகமாகும்.
விக்கரமசிங்கவும் ஐக்கிய தேசிய முன்னணியும், 20 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்துக்கு
முடிவுகட்டுவதன் பேரில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலமான கொடுக்கல் வாங்கல்களுக்கு செல்லக்
கோரும், பெரு வர்த்தக பிரிவுகள், பிரதான வல்லரசுகள், விசேடமாக அமெரிக்காவின் கோரிக்கைகளை முன்னெடுக்க
வாக்குறுதியளித்து 2001 தேர்தலில் வெற்றியீட்டினர். வர்த்தகத் தலைவர்கள், யுத்தமானது வளங்களை சகிக்கமுடியாதளவு
நாசமாக்குவதாகவும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஒரு தடையாகவும் கருதினர். அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லரசுகளும்
யுத்தத்தை பிராந்தியத்தின் ஸ்திரப்பாடின்மைக்கான ஒரு ஆழமான காரணியாக கணிக்கின்றன.
எனினும் யுத்தமானது அழிவின்மூலம் இலாபமீட்டிய இராணுவம், அரச அதிகாரத்துவம்
மற்றும் வியாபாரிகளின் பிரிவினரிடையே சக்திவாய்ந்த உள் நலன்களைத் தோற்றுவித்திருந்தது. இதற்கும் மேலாக யுத்தத்தைத்
தொடர்வதற்காக ஐ.தே.மு. மற்றும் பொதுஜன முன்னணி இரண்டும் சிங்கள பேரினவாதத்தை ஊக்கப்படுத்தி வந்துள்ளன.
இது ஒரு திருப்பத்தில், விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகையையும் ராஜ துரோகமாக கருதும்
சிங்களத் தீவிரவாத குழுக்களை தோற்றுவித்தது. குமாரதுங்க அழைப்புவிடுப்பது இந்த சமூகத் தட்டுக்களுக்கேயாகும்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது ஜனாதிபதி சேனாதிபதி என்ற வகையில் தனது
அதிகாரத்தைப் பிரயோகித்து பேச்சுவார்த்தைகளை கீழறுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். கடற்படையினர் கடந்த
மூன்று மாதங்களில் இரு தடவை விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையின் போது விடுதலைப் புலிகளின் படகுகளுடன்
மோதல்களைத் தூண்டினர். முதல் தடவை விடுதலைப் புலிகள் தம்மோடு சேர்த்து படகுகளையும் வெடிக்கச் செய்தனர்;
இரண்டாவதாக கடற்படையினர் விடுதலைப் புலிகளின் யுத்தப் படகை மூழ்கடித்தனர். இத்தகைய துயரமான சம்பவங்கள்
சமாதான முன்னெடுப்புகள் எனப்பட்டதை குழப்பத்தின் புள்ளிக்கே கொண்டுவந்தன.
இத்தகைய ஆத்திரமூட்டல்களை முன்னெடுப்பதற்காக குமாரதுங்க இராணுவ உயர்மட்டத்தினரின்
மிகவும் கடும்போக்காளர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். ஓய்வு பெறவிருந்த கடற்படை
தளபதி தயா சந்தகிரியின் சேவைக் காலத்தை மூன்று வருடங்கள் நீடிக்கும் அசாதாரணமான நடவடிக்கையை அவர் மேற்கொண்டார்.
அதேபோல், சேனாதிபதி என்ற வகையில், பொதுத் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னர் பாராளுமன்றத்தை
ஒரு தலைப்பட்சமாக கலைக்கும் அதிகாரத்தை குமாரதுங்க கொண்டுள்ளதுடன், கடந்த காலத்தில் அவர் அவ்வாறு செய்வதற்கு
தயாராகலாம் என்ற சமிக்கைகளையும் காட்டினார்.
அபிவிருத்தி லொத்தர் சபை சர்ச்சையானது எதிர்க் கட்சிகள் குமாரதுங்கவை ஜனாதிபதி
என்ற வகையில் அவருக்குள்ள அதிகாரத்தைப் பிரயோகித்து அரசாங்கத்தை கவிழ்க்குமாறு நெருக்குவாரம் கொடுத்து
வருவதன் விளைவாகவே இடம்பெற்றுள்ளது. பொதுஜன முன்னணி கூட்டின் பிரதான கட்சியும் அவரின் சொந்தக்
கட்சியுமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க), அரசாங்கத்தையும் சமாதான முன்னெடுப்புக்களையும் சவால்
செய்வதன் பேரில் சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி) தீவிரமாக கலந்துரையாடல்
நடத்தியது. ஜே.வி.பி.யுடன் நெருக்கமாக உடன்படிக்கை செய்தபடி ஸ்ரீ.ல.சு..க. அதன் ஏனைய கூட்டுக் கட்சிகளை
ஒதுக்கித் தள்ளிவிட்டு ஜே.வி.பி.யுடன் நெருக்கமாக இணைந்து முக்கிய அமைச்சுக்களை குமாரதுங்க கையேற்க வேண்டும்
என கோருகிறது.
குமாரதுங்கவின் சகோதரரும் சிரேஷ்ட ஆலோசகருமான அனுரபண்டாரநாயக, மார்ச்
11 ஸ்ரீ.ல.சு.க- ஜே.வி.பி. கூட்டாக நடத்திய பொதுக் கூட்டமொன்றில் பேசியபோது, தனது சகோதரி அதிகாரத்தை
பிரயோகித்து உடனடியாக தகவல் தொடர்பு சாதன மற்றும் உள்துறை அமைச்சுக்களை கையேற்க வேண்டுமென தெரிவித்தார்.
ஐ.தே.மு. அரசாங்கம் வெகு விரைவில் கவிழ்க்கப்பட்டு "ஒரு புதிய அரசாங்கம் 2004 ஜனவரி முதலாம் திகதிக்கு
முன் அதிகாரத்துக்கு வரும்" எனவும் அவர் வாக்குறுதியளித்தார்.
ஜனாதிபதியின் பேச்சாளரான கரிம் பீரிஸ், "பொதுஜன முன்னணியோ ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியோ அல்லது உண்மையில் ஜே.வி.பி.யும் கூட லொத்தர் சபையை ஜனாதிபதி கையேற்கும் தீர்மானத்தை முன்னெடுக்கும்
நடவடிக்கையில் சம்பந்தப்படவில்லை என சுட்டிக்காட்டினார். இந்த நடவடிக்கை வெறும் நிர்வாக நடவடிக்கையே என
பிரகடனப்படுத்தியதோடு, "ஜனாதிபதி பொருளாதார அபிவிருத்தியையும் தற்போதைய சமாதான முன்னெடுப்புகளையும்
குழப்ப முயற்சிக்கின்றார்" என்ற குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்தார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கும் முயற்சிகளை
கீழறுப்பதற்காக அரசியல் நெருக்கடியை உருவாக்கினார் என்பது தெளிவானதாகும். அவர் தனது இலக்கை மிகக்
கவனமாக தேர்ந்தெடுத்துள்ளார். விடயத்தோடு சம்பந்தப்பட்ட அமைச்சர் மொறகொட, அரசாங்க சார்பு
பேச்சுவார்த்தையாளர்களில் ஒருவராகும். ஜூன் ஆரம்பத்தில் மிகவும் பிரசித்தமான நிதியுதவியாளர்களின் மாகநாடு
டோக்கியோவில் நடக்கவுள்ளதுடன் அதில் விடுதலைப் புலிகள் பங்குபற்றுவது நிச்சயமில்லாததாக உள்ளது. விக்கிரமசிங்க
தனது அரசாங்கத்தை ஜனாதிபதி கவிழ்க்க திட்டமிடுகிறார் என்ற பீதியின் காரணமாக, லொத்தர் சபையை கையேற்றமைக்காக
மிக விரைவாக பதிலளித்துள்ளார்.
ஐ.தே.மு. சார்பு பத்திரிகையான சன்டே லீடர் மே 11 ஆசிரியர் தலையங்கத்தில்
இது பற்றி அக்கறை செலுத்தியிருந்தது. "ஐக்கிய தேசிய முன்னணியின் பிடியிலுள்ளவற்றில் ஒரு பெரும் பகுதியை பறித்துக்கொள்வதற்கான
இறுதி எதிர்பார்ப்பாக குமாரதுங்க இந்த குறைந்தபட்ச சாத்தியமான ஆத்திரமூட்டலை மேற்கொண்டார். அவர் இதற்கும்
மேல் சென்று திலக் மாரப்பனவை (பாதுகாப்பு அமைச்சர்) பதவி நீக்கியிருப்பார். அப்படி செய்வதாக பல தடவை
அச்சுறுத்தியும் உள்ளார். அவர் முன்பு சபதமிட்டபடி மீண்டும் முழு அமைச்சுக்களையுமே தனக்கு கீழ்
கொண்டுவந்திருக்கவும் கூடும். ஆனால் ஹிட்லர் ஆஸ்திரியாவை இணைத்ததைப் போன்று இந்த அவமரியாதை ஐக்கிய தேசியமுன்னணிக்கு
எதிர்த்துப் போராடுவதற்கு போதுமானளவு திடத்தை ஏற்படுத்தலாமென அவர் தெளிவாக கணிப்பிட்டுக்
கொண்டிருந்தார்," என அது குறிப்பிட்டிருந்தது.
அதே தினம், பல அமைச்சர்கள் பங்குபற்றிய பத்திரிகையாளர் மாநாடு ஒன்றும் நடந்தது.
விவசாய கால்நடை அமைச்சர் எஸ்.பி. திசாநாயக குமாரதுங்கவுக்கு அரசியல் சவால் விடுத்தார். "ஜனாதிபதி தற்போதைய
அபிவிருத்தி மற்றும் சமாதான முன்னெடுப்புக்களை குழப்புவதற்காக இத்தகைய அற்பமான வழிமுறைகளைத் தேடியிருக்கக்
கூடாது." அப்படியானால் அவர் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு முன்வரவேண்டும்," என்றார்.
குமாரதுங்க, அரசாங்கத்துக்கு எதிராக மிகவும் தீவிரமாக நடக்காமைக்கான பிரதான
காரணங்களில் ஒன்று, அவர் இத்தருணத்தில் பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்காக நெருக்குவாரம் கொடுத்து வரும்
வாஷிங்டனின் பிரதிபலிப்பை பற்றி அக்கறையுடன் இருப்பதேயாகும்.
மே 11 கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அஸ்லி வில்ஸ் பேசுகையில், அரசாங்கத்தையும்
எதிர்க்கட்சியையும் தமது வேறுபாடுகளை புதைத்துவிடுமாறு வேண்டினார். விடுதலைப் புலிகள், பேச்சுவார்த்தை மேசையில்
இரு முக்கிய கட்சிகளும் ஐக்கியமாக இருப்பதைக் காண்பதென்பது எத்துணை முக்கியமானது என்பதை சிந்தியுங்கள்." அப்போது
எந்தளவு சக்திவாய்ந்த பேச்சுவார்த்தை பங்காளிகளாக விளங்கலாம். இன்றுவரை அது அவ்வாறிருக்கவில்லை. இது மிகவும்
குழப்பகரமானது," என அவர் குறிப்பிட்டார்.
மறுநாள் அமெரிக்க துணை அரச செயலாளர் கிறிஸ்டினா ரொக்கா கொழும்பு வந்து
பிரமர் விக்கிரமசிங்கவுடனும் ஜனாதிபதி குமாரதுங்கவுடனும் கலந்துரையாடல் செய்தார். அவர் வில்ஸ் பகிரங்கமாக
ராஜதந்திர முறையில் பிரகடனம் செய்ததை இவர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக, மிகவும் வலிமையாக எடுத்துச்
சொல்லியிருப்பார் என்பதில் ஐயமில்லை. இதுவரை நடந்திருப்பது என்னவெனில் நாட்டின் அழிவுகரமான வெள்ளப்பெருக்குக்கு
முகம் கொடுக்கும் முகமாக குமாரதுங்கவுடன் ஒரு அவசரகால கூட்டுக்குழுவை உருவாக்க விக்கிரமசிங்க பிரேரித்துள்ளார்.
எவ்வாறாயினும் வாஷிங்கடனிடமிருந்து வரும் அழுத்தமானது ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும்
இடையிலான ஆழ்ந்த பிளவிற்கு முடிவுகட்டிவிடாது. நாடு முகம்கொடுத்துள்ள ஆழமான சமூக பொருளாதார
நெருக்கடியை இரு பிரதான கட்சிகளும் தீர்க தவறின என்ற அடிப்படை அம்சத்திலிருந்து இது ஊற்றெடுக்கின்றது.
ஆத்திரமூட்டல்களைக் கையாளவும் ஜனநாயக வழிமுறைகளை அலட்சியம் செய்யவும் குமாரதுங்க முன்வந்துள்ளமையானது,
தமது ஆளுமைக்குள் திணிப்பதற்காக முதலாளித்துவ வட்டாரங்களுள் தெளிவாகக் கலந்துரையாடப்பட்டு வரும் ஜனநாயக
விரோத வழிமுறைகள் பற்றிய தெளிவான எச்சரிக்கையாகும்.
Top of page
|