World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா Violent crackdown on protests marks G8 summit Hundreds arrested at French-Swiss border ஜி8 உச்சி மாநாட்டு எதிர்ப்புக்கள் மீதான கடும் நடவடிக்கை, உச்சிமாநாட்டை உன்னிப்பாய் கவனிக்கச் செய்கிறது பிரெஞ்சு - சுவிஸ் எல்லையில் நூற்றுக்கணக்கானோர் கைது By Bill Vann G -8 - நாடுகள் குழு உச்சி மாநாட்டிற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அடக்குவதற்காக, ஞாயிற்றுக்கிழமையன்று இரண்டாவது நாளாக போலீஸார், கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்தனர், ரப்பர் குண்டுகளால் சுட்டனர், தடியடிப் பிரயோகம் செய்தனர் மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். ஈராக்கில் நடைபெற்ற சட்டவிரோதப் போர் பிரதான ஏகாதிபத்திய வல்லரசுகளிடையே பிளவை ஏற்படுத்தியதற்குப் பின்னர், ஜனாதிபதி புஷ் முதல் தடவையாக, ஐரோப்பிய நாடுகளின் ஆட்சித் தலைவர்களை நேருக்கு நேராக, சந்திப்பதற்காக வந்தபோது, சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் இரண்டு பக்கங்களிலும், திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.1,20,000- பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கின்றது. 50,000- பேர், சுவிட்சர்லாந்து பக்கமாகயிருந்து மற்றும், 70,000-பேர் பிரான்ஸ் பக்கமாகயிருந்தும் மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்திற்காக இரண்டு நாடுகளின் எல்லையிலும் திரண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல் இல்லாத எல்லையை கடக்கும்போது, ``எல்லைகள் வேண்டாம், சுதந்திரமாக நடமாடும் உரிமை வேண்டும்`` என்று முழக்கமிட்டு வந்தனர். G-8 - உச்சி மாநாடு, சர்வதேச நிதி நிறுவனம் மற்றும் உலக வங்கி ஆகியவை நடத்துகின்ற மாநாடுகளில், இழைக்கப்படுகிற பொருளாதார அநீதியை கண்டிப்பதற்காக தொடர்ந்து திரண்டு வருகின்ற ஆர்ப்பாட்டக்காரர்களோடு, ஈராக் மீது அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போர் மற்றும் அந்த நாட்டை ஆக்கிரமித்துக்கொண்டதை கண்டிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து ஆர்ப்பாட்டக்காரர்களின் கூட்டம் மிகப்பெரும் அளவில் திரண்டது. ஞாயிற்றுக்கிழமை காலை, லோசான் (Lausanne) பகுதியில், போலீஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களில் ஒருவர் படு காயமடைந்தார். வேறு பலருக்கும் காயங்கள் ஏற்பட்டன. பாதுகாப்பு படைகள், மிகப் பெருமளவிற்கு, கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்தன. தடியடி பிரயோகம் செய்தன, தண்ணீரை பீய்ச்சியடித்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள், நகரப் பகுதியிலிருந்து பின்வாங்கிச் சென்றதும், போலீஸார் மூன்று கண்ணீர் புகைக் குண்டுகளை நகரத்தின் தாவரவியல் தோட்டத்திற்குள் வெடித்தனர். இதனால், குடும்பங்களும் அவர்களது குழந்தைகளும், அந்த பகுதியிலிருந்து வெளியேறி சிதறி ஓடினர். ஒரு பிரிட்டிஷ் குடிமகனான மார்ட்டின் ஷா சாலை மறியல் ஒன்றை கலைப்பதற்காக போலீஸார், நடவடிக்கை எடுத்தபோது, 60 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றின் கரையோரம் கற்களின் மீது விழுந்த அவர், படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மார்டீன் ஷா மரம் ஏறுவதில் உயரமான கட்டிடங்கள் ஏறுவதில் பயிற்சி பெற்றவர். அதையே தொழிலாகக் கொண்டிருப்பவர். அந்த பாலத்தின் குறுக்கே, ஒரு கயிற்றில் கட்டி அவர் ஒரு பக்கம் தொங்கினார். இன்னொரு ஆர்ப்பாட்டக்காரர் மற்றொரு பக்கம் தொங்கினார். போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதற்காக வந்த போலீஸார், பாலத்தில் நின்றவர்களை தாக்கினார்கள். பின்னர், கையிற்றை வெட்டினார்கள், ஷா ஆற்றுக்குள் விழுந்து அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. மோதல்களைத் தொடர்ந்து லோசான் பல்கலைக்கழகத்திற்கு அருகில் முகாமிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸார் பின்தொடர்ந்து வந்து, நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்தனர். அமைதியான முறையில் கண்டனம் நடத்துவதற்காக முன்னர் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதாக, லோசான் நகர அதிகாரிகள் அறிவித்தனர். கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு தகுந்த ஆயுதங்களுடன் வந்திருந்த போலீஸார் ஞாயிற்றுக்கிழமையன்று, ஜெனீவாவின் மத்திய பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, கண்ணீர் புகை குண்டுகளை வெடித்தனர் மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பிரெஞ்சு எல்லைப் பகுதியில் உள்ள அன்னமாஸ் (Annemasse) பகுதியில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் உச்சி மாநாடு நடைபெறும், இவியான் (Evian) பகுதிக்கு அணிவகுத்துச் செல்ல முயன்றனர். சென்ட் செர்க்கூஸ் (Saint-Cergues) கிராமத்தில் திரண்டிருந்த போலீஸார் அவர்களை தடுத்தனர் மற்றும் தண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்தும், ரப்பர் குண்டுகளால் சுட்டும், மற்றும் அதிர்ச்சி ஏற்படுத்தும் வெடிகுண்டுகளை வீசியும் அவர்களை பின்வாங்கச் செய்தனர். உச்சி மாநாடு நடைபெறும் இவியான் பகுதிக்கு செல்லும் வழித்தடங்களை தடுப்பதற்கும் முயற்சிகள் செய்யப்பட்டன. அரசின் தலைவர்களும் மாநாட்டில் பங்கேற்கும் மற்றவர்களும் எதிர்ப்புக்களுக்கு மேலாக ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டனர். அண்மைக்கால G8 - உச்சி மாநாடுகள் அனைத்தையும் போலவே, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், மற்றும் ரஷ்யா ஆகியன ஒன்று கூடுதல், பெருமளவில் இராணுவத்தினரும், போலீஸாரும் திரட்டப்பட்டதால் கவனத்திற்குரியதானது. கடைசியாக நடைபெற்ற G8 உச்சி மாநாடு, கனடாவில் தொலைதூரத்தில் உள்ள மலைப்பாங்கான ஒரு இடத்தில் நடைபெற்றது. இப்போது நடைபெறுகின்ற உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்யும் பிரெஞ்சு அரசாங்கம், இவியான் பகுதியைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், ஆல்ப்ஸ் மலைத் தொடரில் உள்ள அந்தப் பகுதி குறுகலான, தெருக்களைக் கொண்டது, பாதுகாப்பு அளிப்பதற்கு மிக எளிதானது என்பதனால் ஆகும். அந்த எல்லையின் பிரெஞ்சு பகுதியில் 18000 போலீஸாரும், இராணுவத் துருப்புகளும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக, போர் விமானங்களும், கவச வாகனங்களும், விமான எதிர்ப்பு ஏவுகணைகளும், ஹெலிகாப்டர்களும், கப்பற்படை ரோந்து படகுகளும், நீச்சல் பிரிவு சிறப்புப் படைகளும் விமானப்படை கண்காணிப்பு விமானங்களும் பாதுகாப்பிற்காக, திரட்டப்பட்டிருந்தன. இவியான், பிரான்ஸ் நாட்டு உல்லாச பயணிகள் தங்கும் நகரம். அந்த நகரத்து வாசிகளுக்கு, விசேஷ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு மே-28-ந் தேதி முதல், உச்சி மாநாடு முடியும் ஜூன்-3-ந்தேதி வரை, அவற்றை அவர்கள் அணிந்துகொண்டுதான் நடமாட வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டனர். அதிகாரிகள் நீங்கலாக மற்றும், அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் தவிர மீதி அனைவரும் அந்த இடத்தில் நடமாடுவது தடைசெய்யப்பட்டது. பிரான்ஸ், மற்றும் சுவிட்சர்லாந்து போலீஸார், ஜேர்மன் போலீஸ் ரிசேர்வ் படை உதவியோடு, அந்த உச்சி மாநாடு நடக்கும் பகுதியைச் சுற்றி, 10 மைல் சுற்றளவில், பந்தோபஸ்து மண்டலமாக, கண்காணித்து வந்தனர். ஜெனீவா ஏரியில், உச்சி மாநாட்டிற்காக பயன்படுத்தப்படும் படைகளைத் தவிர, மற்றைய அனைத்து படகு வாகனங்கள் போக்குவரத்தும் தடுத்து நிறுத்தப்பட்டது. மாநாடு நடைபெறும் பகுதியில், விமானங்கள் பறப்பதும் தடுக்கப்பட்டது. இத்தகைய அசாதாரணமான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கூறப்பட்ட, சாக்குபோக்கு, பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்ற அச்ச உணர்வுதான். ஆனால், இப்படி மிகப்பெரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதற்கான பிரதான குறிக்கோள் என்னவென்றால், அமெரிக்கா மற்றும் ஏனைய பிரதான நாடுகளின் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் மாநாடு நடக்கும் இடத்திற்கு அருகாமையில் நெருங்கி வராமல் தடுப்பதேயாகும். அமெரிக்காவிற்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குமிடையில் நிலவுகின்ற ஆழமான பொருளாதார மற்றும், பூகோள அரசியல் கொந்தளிப்புகளை இந்த உச்சி மாநாடு தீர்த்துவைக்கும் என்ற எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. உச்சி மாநாட்டு தொடக்கத்தில் புஷ்-சும், ஈராக் மீது வாஷிங்டன் தன்னிச்சையாக படையெடுத்துச் சென்றதை ஆரம்பத்தில் அனுமதிப்பதற்கு மறுத்த ஐரோப்பிய தலைவர்களும், தங்களது கருத்து வேறுபாடுகள் கடந்தகாலத்திற்கு உரியவையாக மாறிவிட்டதாக கூறிக்கொண்டனர். பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் புஷ் இருவரும் ஈராக் பிரச்சினை குறித்து விவாதிக்கக்கூடும். "அப்படி அவர்கள் செய்தாலும் அது பழைய சம்பவங்களை கிளறுவதாக அமையாது. அதனைக் கிளறுவதால் பயனில்லை. ஆனால், எதிர்காலத்தில்தான் கவனம் செலுத்தவேண்டும்" என பிரெஞ்சு ஜனாதிபதிக்கான பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி இந்த மாநாட்டை அலட்சியப்படுத்தினார். ஏழு நாட்கள் ஆறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதற்கு நடுவில் ஒரு நாள் தங்கி கலந்துரையாடுவதற்காகத்தான் இந்த மாநாட்டை பயன்படுத்திக்கொண்டார். போலந்து மற்றும் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்யுமுன்னர் மற்றும் அதற்குப் பின்னர் மத்தியக் கிழக்குப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிற ஜனாதிபதி புஷ் இடையில் ஒரு நாள் இந்த உச்சி மாநாட்டை பயன்படுத்திக் கொண்டார். சமரசத் தொனியில் ஜனாதிபதி புஷ் தனது அழைப்பை விடுத்தார். சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான பூகோளப் போரில் ஒற்றுமைக்காய் அழைப்பு விடுத்தார். "பெரிய கூட்டணியில் பிளவுகளைத் தூண்டிவிடுவதற்கு இதுநேரமில்லை என்பதாக ஜனாதிபதி புஷ் கருத்துத் தெரிவித்தார். அமெரிக்க விமானப்படை விமானத்தில் புஷ்சுடன் பயணம் செய்த பத்திரிகையாளர்களுக்கு ஒரு "மூத்த அமெரிக்க அதிகாரி அறிக்கை ஒன்றைத் தந்தார். அதில், வாஷிங்டனின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமே "ஐக்கியம்" என்பது சாத்தியம் என தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. ஐரோப்பிய அரசுகள் அமெரிக்காவின் அரசியல் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளும் எந்த முயற்சியும் பயங்கரவாதத்திற்கு உதவுவதாகவே அமையும் என்று எச்சரித்தார். "குழப்பத்தை ஏற்படுத்தும் சக்திகள் நடமாடிக்கொண்டு இருக்கின்றன. அவை, பயங்கரவாத செயல்களில் ஈடுபடவும் மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்களை உருவாக்கவும் விரும்புகின்றன. அந்த பயங்கரவாத சக்திகள் மேலை நாடுகளின் அணியில் இடையறாத மோதல்கள் நடைபெற வேண்டும்; அதுவும் யாருடைய அதிகாரத்தை கட்டுப்படுத்துவது அவசியம் என்பதில் மோதிக்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாக" அந்த மூத்த அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டார். வெள்ளிக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் வெளிநாட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்த ஜனாதிபதி புஷ்ஷின் தேசிய பந்தோபஸ்து ஆலோசகர் கொண்டாலிசா ரைஸ் தெரிவித்த கருத்துக்களின் பாணியில் அதே தொனியில் இந்த அறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, ஈராக்கில் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பக்க பலமாக பிரான்ஸ், கனடா மற்றும் இதர நாடுகள் அணிவகுத்து வருவதற்கு தவறிவிட்டதாக அவர் கடிந்துகொண்டார். ``சதாம் ஹூசேனின் அதிகாரத்தைவிட, அமெரிக்காவின் அதிகாரம் மிக ஆபத்தானது என்று தோன்றுவதாகக் கருதப்பட்ட காலங்களும் இருந்தன. அதை நான் சற்று வெளிப்படையாகச் சொல்வது என்றால், எங்களுக்கு அது என்னவென்றே புரியவில்லை`` என கொண்டாலிசா ரைஸ் கருத்துத் தெரிவித்தார். ஈராக்கிற்கு எதிரான போருக்கு கூறப்பட்ட அதே சாக்குப்போக்குகளின் அடிப்படையில் தனது எதிர்கால ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் சட்டபூர்வமாக அங்கீககரிக்கச் செய்வது உள்பட பல்வேறு பிரச்சினைகள் G8, உச்சி மாநாட்டில் அமெரிக்க செயல்திட்டத்தில் அடங்கி இருக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. பேரழிவு ஆயுத பரவலை நசுக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அமெரிக்காவின் உடனடி இலக்கு ஈரான், அந்நாட்டில் மறைமுகமாகக் குழப்பத்தை உருவாக்கும் இயக்கத்தை நடத்துவது அல்லது இராணுவ தலையீடு நடவடிக்கையை மேற்கொள்வது என்ற திட்டத்தின் பின்னணியில், அங்கு "ஆட்சி மாற்றம்" செய்யும் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்று புஷ் நிர்வாகத்தின் முன்னணி உறுப்பினர்கள் கோரி வருகின்றனர். ரஷ்யா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஈரானில் பொருளாதார அக்கறைகள் உள்ளன. அதேபோல, வடகொரியாவுக்கு எதிராக நிர்ப்பந்தங்களை அதிகரிப்பதில் வாஷிங்டன் தனது நடவடிக்கைகளுக்கு ஆதரவை நாடுகிறது. கடல் வழிகளில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதாகக் கருதப்பட்டால் அவற்றைப் பறிமுதல் செய்வதற்கு புஷ் நிர்வாகம் சர்வதேச அங்கீகாரத்தைக் கோருகிறது. இந்த ஆலோசனை ஒரு சம்பவத்தின் அடிப்படையில் உருவானதாக நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்ற ஆண்டு இறுதியில் அமெரிக்க மற்றும் ஸ்பெயின் நாட்டுப் படைகள் யேமன் நாட்டிற்குச் சென்ற ஸ்கட் ஏவுகணைகள் ஏற்றப்பட்டு இருந்த வட கொரியக் கப்பல் ஒன்றைப் பிடித்தன. யேமன் நாடு, தனது பாதுகாப்பிற்காக சட்டபூர்வமாக அந்த ஏவுகணைகளை வாங்கியதாக அறிவித்து கப்பல் நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த பின்னர்தான் அந்த கப்பல் செல்வதற்கு விடுவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சோதனைகளை நடுக்கடலில் செய்வது, எந்தவிதமான ஆத்திரமூட்டலும் இல்லாத போர் நடவடிக்கை என்றுதான் பகுக்கப்படும். இப்படிப்பட்ட செயலை, அதிகாரத்தை எந்த வகையில் அமெரிக்கா மேற்கொள்ள இருக்கிறது என்பதை அமெரிக்காவிடம் இருந்து தெரிந்துகொள்வதற்கு ஐரோப்பிய அதிகாரிகள் காத்துக்கொண்டு இருப்பதைக் கோடிட்டுக் காட்டும் அதேவேளையில் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இறையாண்மை கொண்ட நாடுகளின் ஆயுதங்களையும் கப்பல்களையும் தனது விருப்பம் போல் கைப்பற்றுவதக் கட்டுப்பாடு எதுவுமில்லாத உரிமை வேண்டும் என்று வாஷிங்டன் கோருகிறது. ஒற்றுமை பற்றிய பேச்சுக்கள் மற்றும் நடந்தது நடந்தபடி இருக்கட்டும்; இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்ற உரைகளுக்குப் பின்னால், அமெரிக்கா தொடர்ந்து இராணுவமயம், இராஜியத்துறை மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறதுடன் இணைந்து, ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முற்றிக்கொண்டிருக்கின்ற கொந்தளிப்புக்கள் உச்சி மாநாட்டில் முக்கிய இடம்பெறலாம். அதுவும் ஆழமாக முற்றிக்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துச் சமாளிப்பதற்கு எந்தவிதமான பொது உடன்பாட்டையும் காண்கின்ற சாத்தியக்கூறு எதுவுமில்லாத சூழ்நிலையின் கீழ் இடம் பெறலாம். |