WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆபிரிக்கா
Algerian earthquake disaster provokes wave of anger
அல்ஜீரிய பூகம்பத்தின் பேரழிவு சீற்ற அலையை ஏற்படுத்துகின்றது
By Chris Talbot
27 May 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
கடைசியாக வந்துள்ள அதிகாரபூர்வமான தகவல்படி அல்ஜீரியப் பூகம்பத்தில், இறந்தோர்
எண்ணிக்கை 2162, காயமுற்றோர் 8965; கட்டிட இடிபாடுகளிலிருந்து சடலங்கள் மீட்புப்பணி தொடரும் அளவில்
இறுதி இறப்பு எண்ணிக்கை 3000த்தையும் தாண்டலாம் எனத் தெரிகிறது.
பல பன்னாட்டு மீட்புப் பணிக்குழுக்கள் சிறப்புக் கருவிகளுடனும், மோப்ப நாய்களுடனும்
வந்தவை மேலும் பலரை உயிருடன் மீட்க முடியும் என்ற வாய்ப்பு பூஜ்ய அளவுதான் என்ற அளவில் தங்கள் நாடுகளுக்குத்
திரும்பிச்செல்லத் தலைப் பட்டுவிட்டன. 30 டிகிரி சென்டிகிரேட் (86F)
அளவிற்கு மேல் வெப்பம் சென்று விட்ட அளவில், மே 21ம் தேதி புதன் கிழமை மாலை அல்ஜீரியாவின் வடக்குக்
கடற்கரைப் பகுதியின் அடர்த்தியான மக்கட் தொகை நிறைந்த பகுதியைப் பூகம்பம் தாக்கியதிலிருந்து, இடிபாடுகளுள்
அகப்பட்டுள்ளவர்களுள் மிகச் சிலரே உயிர் தப்பி இருக்கின்றனர். ரிக்டர் அளவில் 6.8 என்றிருந்த பூகம்பத்தால் தாக்கப்பட்டதையடுத்து,
தலைநகர் அல்ஜீயர்சின் (Algiers) சில பகுதிகளும், கிழக்கில்
பூமர்டஸ் (Boumerdes) போன்ற நகரங்களிலும்
பாதிக்கும் மேலான உயிர்கள் பலியாயின. பூகம்பத்தின் மையம் அல்ஜீயர்சிலிருந்து 65 கிலோமீட்டர் (40 மைல்)
தொலைவில் உள்ள தேனியா என்ற இடமாகும்.
பல அறிக்கைகளும் கூடுதலான இறப்பு எண்ணிக்கைக்குக் காரணமாக, வீடுகள் மட்டமான
முறையில் கட்டப்பட்டதுதான் என்று தெளிவாக்குகின்றன. ரேகையா (Reghaia)
என்ற இடத்தில் (அல்ஜீரியாவிலிருந்து 40கி.மீ (25மைல்) தொலைவிலுள்ளது) கட்டப்பட்டுள்ள 10 மாடிக் கட்டிடத்தில்
78 குடியிருப்புகள் இருந்தவை ஒரு உதாரணமாகும். அது முழுமையாகத் தகர்ந்து கீழே விழுந்துவிட்டது; 250
சடலங்கள் மீட்கப்பட்டன, ஆனால் 600 பேர் இன்னமும் புதையுண்டு இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மற்றொரு
தகவலின்படி ஒரு குடியிருப்பு அடுக்கு மாளிகை சரிந்து வீழ்ந்ததில், 38 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேருக்கும்
மேல், அல்ஜீரியப் புறநகரான போர்ட்ஜா எல் கிபானில் (Bordja
el Kiffan) பாதிப்பிற்குட்பட்டுள்ளனர். கட்டப்பட்டு இரண்டு வருடங்களே ஆன இதில் ஒரு சிலரே
தப்பினர்.
கட்டுமானப் பணியில் தரக்குறைவான பொருட்களைப் பயன்படுத்தியதும், கட்டிடம் கட்டுவதில்
நிர்ணயிக்கப்பட்டுள்ள விதி முறைகளை மீறியதும் தான் காரணங்கள்; மேலும் இந்தப்பகுதியில் நிலத்தின் உறுதியற்ற தன்மையினால்
கட்டடங்கள் கட்டக்கூடாது என்ற விதியையும் மீறி சட்ட விரோதமான கட்டடங்கள் எழுப்பப் பெற்றதும் பல வீட்டுச்சரிவுகளுக்குக்
காரணமாயின. இந்த நாட்டில் சிறு அளவிலான பூகம்பங்கள் 1999, 1994, 1989 ஆண்டுகளில்
தோன்றியிருந்ததோடு, எல் அஸ்நம் என்ற சிறுநகரம் 1980ல் பாதிப்புக்குள்ளாகி கிட்டத்தட்ட 3000 பேரைக்
கொன்றது. 1980க்குப் பிறகு கொண்டுவரப்பட்ட கட்டிட ஒழுங்குமுறை விதிகள் வீடு கட்டும் அமைப்புக்களாலும், ஊழல்
மலிந்த அரசாங்க அதிகாரிகளாலும் அன்றாடம் புறக்கணிக்கப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான மக்கள் தற்பொழுது வெளியிடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக
முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்; இருக்கும் கட்டடங்களும் பூகம்பத்தின் பின் விளைவில் ஏற்படும் அதிர்வுகளால் தாக்கப்பட்டுவிடுமோ
என்ற அச்சத்தில் அப்படிப்பட்ட ஒரு அதிர்வு மே 24, சனிக்கிழமையன்று ரிக்டர் அளவில் 4.1 என்ற நிலையில் ஏற்பட்டது.
மின்சாரம், தொலைபேசி, தண்ணீர் போன்றவை துண்டிக்கப்பட்டுவிட்டன; அழிவையொட்டியே அதிக நடவடிக்கை எடுக்காத
அரசாங்கம் இப்பொழுது வீடிழந்தவர்களுக்கு அதிக உதவியேதும் செய்யவில்லை என்று எங்கும் பரவலான புகார்களே
எழுந்துள்ளன. குடிநீர்த்தட்டுப்பாட்டின் காரணமாக அதிக வெப்பம் காணப்படும் பகுதிகளில் வியாதிகளும் தொற்று
நோய்களும் விரைவில் பரவுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
நில நடுக்கத்தைப் பற்றிய அறிக்கைகள் அனைத்துமே அல்ஜீரிய அரசாங்கத்திற்கு எதிராக
மக்கள் கொண்டுள்ள பெருமளவு சீற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. பூமர்டெஸ் பகுதிக்கு ஜனாதிபதி போடேப்ளிகா
(Bouteflika) வருகை தர முயற்சித்த பொழுது,
கோபத்தைக் கொண்ட கூட்டம் ஒன்று கார் அணியை கற்களைக் கொண்டு வீசியும், காலால் உதைத்தும், துரத்தி
அனுப்பிவிட்டது. போடேபிளிகாவின் பரிவு உணர்வு அடுத்த ஆண்டு வர இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்காகத்
தான் இருக்கும் என்று மக்கள் நினைத்தனர். பல இடங்களிலும் இப்பொழுது அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில்
கோஷம் உரக்க ஒலிக்கிறது: "அதிகாரிகள் - கொலைகாரர்கள்"
(Pouvoir assassin!). இதே போன்ற வரவேற்பைத்தான் போடேப்ளிகா, லாக்டரியாப்
பகுதிக்குச் சென்றபோதும் சந்திக்க நேர்ந்தது; அங்கும் நில நடுக்கப் பாதிப்புற்றோருக்குப் பன்னாட்டு அளவில் வந்த
உதவிப் பொருட்களை அரசாங்கம் திருடித் தின்று விட்டதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
போடேப்ளிகாவின் அரசாங்கம் நீண்டகால அடக்குமுறை அனுபவம் உடைய இராணுவத்தின்
உதவியுடன் நடத்தப்படுகிறது. சமீபத்திய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் அறிக்கையின்படி கடந்த 10
ஆண்டுகளில் 'காணாமற்போன' மக்களின் எண்ணிக்கை பாதுகாப்புப் படைகளால் இழுத்துச் செல்லப்பட்டு, அதன்பின்
எந்த விவரமும் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படாதோர் எண்ணிக்கை 7000த்தையும் தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது;
உலகில் வேறெங்கும் போர்க்கால பொஸ்னியாவைத் தவிர இந்த அளவு உயர்ந்த எண்ணிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.
ஆயினும் கூட, அதிகாரிகளைப் பற்றிய அவர்கள் அச்சம் நிறைந்திருந்தும் கூட, நில நடுக்கத்தின் பெரும்பாதிப்பு,
மக்களை அரசாங்கத்திற்கெதிராக, ஊழல் ஆட்சியாளருக்கெதிராக, வெளிப்படையாக ஆர்ப்பாட்டம் செய்யத்தூண்டியுள்ளது.
பொதுவாக அரசுக்கு அடிபணிந்து நிற்கும் செய்தி ஊடகம் கூட இரக்க உணர்வினால்
பாதிக்கப் பட்டுள்ளது; சில ஜனாதிபதியின் ராஜிநாமாவைக்கூட கோரியுள்ளன.
Le Matin கூறியது:
"வழக்கம் போல் அருமையான நெருப்புக்கோழி போன்ற தோற்றமுறையில், அல்ஜீரியர்கள் தங்களுக்கு அனுப்பும்
பெரும் எச்சரிக்கைகளை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை".
அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளால் போடேப்ளிகாவிற்கு ஆதரவு கிடைக்கிறது. அல்ஜீரிய
ஆட்சியானது, பெரும்பாலான அரசுத்துறைகளை இப்பொழுது தனியார் மயமாக்கி, மேலை நாட்டு நிறுவனங்களின் முதலீட்டிற்கு
திறந்துவிட்டுள்ளது. பெரும் அளவு எரிவாயு, எண்ணெய் உற்பத்தி இருந்த போதிலும் அல்ஜீரிய மக்கட்தொகை கடுமையான
ஏழ்மையில் உள்ளது; 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர்; அரசாங்கமே
கொடுக்கும் வேலையற்றோர் எண்ணிக்கை 30 சதவீதமெனினும், உண்மை எண்ணிக்கை அதையும் விட அதிகமாகத்தான்
இருக்கும்.
Top of page
|