World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்கா சதாம் ஹூசேன் புதல்வர்களின் புகைப்படங்கள் வெளியிடல்: வாஷிங்டன் தனது காட்டுமிராண்டித்தனத்தை தானே அம்பலப்படுத்திக் கொள்கிறது By Barry Grey ஜூலை 22 அன்று அமெரிக்கப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட, சதாம் ஹூசேனின் புதல்வர்களான உதய் மற்றும் கியூசே இருவர்களது சிதைந்த சடலங்கள் தொடர்பான புகைப்படங்களை புஷ் நிர்வாகம் வியாழக்கிழமையன்று உலகம் முழுவதும் ஒளிபரப்பியது. அது மிக கொடூரமான காட்டுமிராண்டித்தனமான காட்சியாக உலகை வருத்தத்திற்கு உள்ளாக்கியது. அமெரிக்க கேபிள் செய்தி வலைப்பின்னல்கள் உடனடியாக இறந்துபோன மனிதர்களின் இரத்தம் தோய்ந்த தலைகளையும் உடலையும் உலகம் முழுவதிலும், அமெரிக்காவின் ஒவ்வொரு உள்ளத்திலும், காட்சிக்கு வைத்தன. அமெரிக்க அரசாங்க பேச்சாளர்களும் ஊடக வண்ணனையாளர்களும் சிதைந்த உடல்களைக் கண்டு தங்களது மகிழ்ச்சியையும் மற்றும் சர்வதேச அளவில் மக்கள் அனைவரையும் அந்தப்படங்களைக் காணச் செய்ததில் அவர்களது திருப்தியையும் தெரிவிக்க தவறவில்லை. அமெரிக்காவில் அதிகாரத்தில் இருக்கும் சீரழிந்தவர்களும் அவர்களது ஊடக உடந்தையாளர்களும் தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திகு கொண்ட சொந்த அம்பலப்படுத்தல்களை விடவும் மிகுந்த கடுமையான குற்றச்சாட்டினை உலக சோசலிச வலைத் தளம் கூறி இருக்க முடியாது. உலகம் முழுவதிலும் உள்ள மிகப்பெரும்பாலான மக்களும், குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மக்களும் பிறரது துன்பத்தில் இன்பம் காணும் சாடிச போக்கை கண்டு வெறுப்பும், வெட்கமும் அடையத்தான் செய்வார்கள். ஈராக்கின் பதவியிழந்த தலைவர் மற்றும் அவரது புதல்வர்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைத்தாலும் - அவர்கள் வெறுக்கத்தக்க குற்றங்களை புரிந்தவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. புஷ் நிர்வாகம் உதய் மற்றும் கியூசே ஹுசைனை கொலை செய்து அவர்களது சடலங்கள் மீது மகிழ்ச்சி கொண்டாடுவது அமெரிக்க ஆளும் மேல்தட்டானது, காட்டுமிராண்டித்தனம் மற்றும் மனித வாழ்வை துச்சமாக மதிப்பது என்பதில் தனது எதிரிகளிடமிருந்து எந்தப் படிப்பினையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. புஷ் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள அமெரிக்க நிர்வாகியாக ஈராக்கில் உள்ள போல் பிரேமர் (Paul Bremer) போன்ற குறிப்பிடத்தக்கவர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் இருவரும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதை ஈராக் மக்களுக்கு வரப்பிரசாதம் என நியாயப்படுத்தி உள்ளனர். சதாமின் புதல்வர்களும், அவரது வலதுகரமாக விளங்கியவர்களுமான இருவரும் உண்மையில் கொல்லப்பட்டுவிட்டனர் என்பதை ஈராக் மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் அந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் பாத் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது, அந்த ஆட்சி திரும்ப வராது என்று அந்த புகைப்படங்கள் ஈராக் மக்களுக்கு உறுதியளிக்கும் என்று கூறினர். அது மட்டுமல்ல, ஈராக் நிர்வாகியான பிரேமர் கருத்து தெரிவித்துள்ளதுபோல், பாத் கட்சியைச் சேர்ந்த மற்றவர்கள் எங்கே ஒழிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி தகவல் தருவதற்கு சாதாரண ஈராக் குடிமக்களை ஊக்குவிப்பதற்காகத்தான் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. (பிரேமர் தனது பேட்டியில் பெயர் குறிப்பிடாவிட்டாலும், இன்னும் தலைமறைவாக இருந்து வருகிற சதாம் ஹுசைனை கண்டுபிடிப்பதற்காகத்தான் அந்தப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன) தங்கள் நாட்டை பிடித்துக்கொண்ட அமெரிக்கர்களுக்கு எதிராக, துருப்புகளுக்கு எதிராக கொரில்லாப்போர் நடத்துகிறவர்களது உற்சாகத்தை குலைக்கின்ற வகையிலும் அந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிரம்மருடன் இணைந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த ரம்ஸ்பீல்ட் அப்படங்களைக் காண்பித்ததானது அமெரிக்க துருப்புக்களின் உயிரைக் காப்பாற்றும் என்றார். அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில் (Philadelphia) உரையாற்றிய ஜனாதிபதி புஷ் மிகுந்த மகிழ்ச்சியோடு, ``முன்பு எப்போதும் இருந்ததைவிட, தற்போது ஈராக்கியருக்கு முந்தைய ஆட்சி போய்விட்டதை திரும்ப வராது என்பதை தெரிந்து கொள்ள முடியும்`` என்று குறிப்பிட்டார். அதற்கு முந்தைய நாள் புஷ், பிரேமர், டிரம்ஸ்பீல்ட் மற்றும் கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதி ரிச்சார்ட் மயர்ஸ் ஆகியோருடன் இணைந்து நின்று, சதாம் ஹுசைனின் புதல்வர்கள் படுகொலை செய்யப்பட்டது ஈராக்கில் பாத்திச ஆட்சியின் "மீதமிருக்கும் மறைவிடங்களை" கண்டுபிடித்து "தாக்கி தகர்க்கின்ற நடவடிக்கைகளில்" அமெரிக்க ராணுவம் ஈடுபட்டிருப்பதை அர்த்தப்படுத்தும் என புஷ் பெருமையடித்துக்கொண்டார். புஷ்-சும் அவரது கூட்டாளிகளும் இதுபோன்ற கூற்றுக்களை நம்புகிற அளவிற்கு தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்தல் மற்றும் அரசியல் மனக்குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறார்கள் என்ற அளவை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இப்போது இறந்தவரது உடலை இழிவுபடுத்தும் இந்த செயல் மற்றும் அமெரிக்க அகந்தையின் வெளிப்பாடு அரபு மக்களிடையே ஈராக் படையெடுப்பாளர்கள் மற்றும் அவர்களது அடிவருடிகள் மீது வெறுப்பு உணர்வை வளர்க்கவே செய்யும். உண்மையிலேயே இந்தப் புகைப்படங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்திலேயே ஈராக்கில் மேலும் மூன்று அமெரிக்க இராணுவ வீரர்கள் மடிந்துவிட்ட செய்திகளும் உலவிக்கொண்டிருந்தன. ஈராக் மக்களது "இதயத்தையும் எண்ணத்தையும் கவரப்போவதாக" என்னதான் பிரசாரம் செய்து கொண்டிருந்தாலும், படங்கள் காட்டுவதற்குப் பின்னே இருக்கும் மிகக் கொடூர நோக்கத்தை - குறிப்பாக ஈராக் மக்களை பயமுறுத்தவும் அச்சம் ஊட்டி அடிபணியச் செய்யவும் புதிய ஈராக்கில் யார் மேலாதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை சாதாரண மக்களுக்கு மிகத் தெளிவாக தெரிவிப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது என்ற கொடூரமான நோக்கத்தை மறைத்துவிடல் முடியாது. இந்த புகைப்படங்களை வெளியிடுவதற்கு நிர்பந்தம் இராணுவத்திலிருந்து வரவில்லை. பிரதானமாக வெள்ளை மாளிகையிலிருந்தும்; ரம்ஸ்பீல்ட் தலைமையில் செயல்பட்டுவரும் பென்டகன் சிவிலியன் தலைமையில் இருந்தும்தான் இந்த நிர்பந்தம் வந்ததாக அறிகுறிகள் இருக்கின்றன. புதன்கிழமையன்று ஈராக்கில் இராணுவத் தளபதியாக பணியாற்றிவரும் லெப்டினன்ட் ஜெனரல் ரிக்கார்டோ சஞ்சேஜ் (Lt. Gen. Ricardo Sanchez) நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது இந்த பயங்கரமான காட்சிகளை வெளியிடுவதற்கு ராணுவம் தயக்கம் காட்டியதாக குறிப்பிட்டார். ஈராக்கில் பணியாற்றி வருகிற அமெரிக்க இராணுவ வீரர்களின் பாதுகாப்பு பற்றி இந்தப் புகைப்படங்களால் வருகின்ற சிக்கல்கள் குறித்து அவர் கவலை கொணடிருந்தார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் புதன்கிழமை மாலை ரம்ஸ்பீல்ட் "புகைப்படங்கள் வெளியிடப்படும்" என்று நிருபர்களிடம் தெரிவித்தார். வியாழக்கிழமையன்று அந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டதற்கு ரம்ஸ்பீல்ட் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், வெள்ளை மாளிகை நியமித்த ஈராக் நிர்வாகியான பிரேமர் அந்தப் புகைப்படங்களை வெளியிட்டார், இராணுவத்தினர் அந்தப் புகைப்படங்களை வெளியிடவில்லை. இராணுவ வாதமும் குற்றவியல் தன்மையும் இந்த புகைப்படங்களை பொதுமக்களுகுக் காட்டுவதால் பொதுமக்களிடையே ஏற்படுகின்ற வெறுப்பு உணர்வை அறிந்துகொள்ள முடியாத கருத்து குருடர்கள்தான் வாஷிங்டனில் இப்போது ஆட்சிபுரிந்து கொண்டிருக்கின்றனர். இப்படங்களைக் காட்டலுக்கு எழும் பதில் அமெரிக்க ஆளும் மேல்தட்டின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட குறுகிய மற்றும் சீரழிந்த நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இந்த குணாதிசியங்கள் ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தின் உயர் பதிவியில் இருப்பவரிடம் மண்டிக்கிடக்கின்றன. புஷ் அவரது கூட்டாளிகளான தலைமை ஆலோசகர் கால்ரோ போன்றவர்களது அரசியல் அனுமானங்கள் மிகுந்த வக்கிரமானதும் பின்தங்கிய வகையினதுமாகும், அவை ஒரு குற்றவாளி மனநிலையைப் (criminal mentality) பிலதிபலிக்கினறன எனக் கூறின் அது மிகைப்படுத்திக் கூறுவதாகாது. புஷ்ஷின் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள உள் வட்டாரம்தான் சதாம் ஹுசைன் புதல்வர்களைக் கொன்று அவர்களது உடல்கள் தொடர்பான புகைப்படங்களை வெளியிடுவதற்கு முடிவு செய்ததில் நெருக்கமான சம்மந்தம் உள்ளவர்கள். அத்தகைய "வெற்றி" மூலம், அண்மை வாரங்களில் அரசியலில் உருவாகிவரும் பாதகமான அரசியல் விசைகளை - ஈராக் போர் தொடர்பாக கூறப்பட்டு வந்த பொய்களை, அமெரிக்கத் துருப்புக்கள் பலியாவது அதிகரித்துவருவதை மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் சரிவு ஆகியவை இணைந்து புஷ்சின் மக்கள் ஆதரவு சரிந்து கொண்டே வருகின்றதை - மாற்றிவிடும் என்று கருதினார்கள். வெள்ளை மாளிகையின் இந்த சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் நியூயார்க் டைம்ஸ், ஜூலை 24-அன்று, "ஹூசைன் புதல்வர்கள் இறப்பு விஷயத்தை மாற்ற அனுமதித்திருக்கிறது" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கின்றது. ஆசிரியர் எழுதினார்: "ஈராக்கில் செவ்வாய்கிழமையன்று சதாம் ஹூசேனின் புதல்வர்கள் மாண்டதுடன், ஜனாதிபதி புஷ்ஷிற்கு அரசியலில் இருந்த கெட்ட மாதம் நல்ல மாதமாக தற்போது மாறியிருக்கிறது." "தனிப்பட்ட முறையில் வெள்ளை மாளிகையின் ஆலோசகர்கள் ஜனாதிபதி புஷ்சிற்கு அதிஷ்டகாலம் வந்திருப்பதாக கூறுகின்றனர்" என்று அந்தக் கட்டுரை ஆசிரியர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் முன்னணி குடியரசுக்கட்சி ஆலோசகர் ஒருவரையும் மேற்கோள் காட்டி, "ஜனாதிபதி தனது மாநிலங்களுக்கான 16 வார்த்தைள் உரையின் கருப்பொருளில் இருந்து இப்போது மாற்றி இருக்கிறது" என்று கூறினார். செய்தி ஊடகங்களின் பங்கு தங்களின் அரசியல் பொறுப்பினை இழந்துவிடாதவர்கள் மற்றும் மனிதத்தன்மையைக் கொண்டிருப்பவர்கள் ஆகிய பரந்த பெரும்பான்மையினருக்கு இந்த நிகழ்ச்சிகளில் அமெரிக்க செய்திஊடகங்கள் மிகவும் வெறுக்கத்தக்க பங்காற்றியுள்ளன என்பது வியப்பாக இருக்காது. வியாழக்கிழமை காலை MSNBC-கேபிள் செய்தி வலைப்பின்னலின் பிரதான ஆசிரியர் ஜெர்ரி நாக்மன் (Jerry Nachman), சிதைந்த சடலங்களை தொலைக்காட்சியில் காட்டிக்கொண்டே இனவெறி தொனிக்கும் வகையில் விமர்சனம் செய்திருக்கிறார். அந்த நிறுவனம் NBC-மற்றும் மைக்ரோசாப்ட் கட்டுப்பாட்டில் உள்ளது. படங்களைக் காட்டியதை நியாயப்படுத்தும் வகையில், அரபு மக்களது மனப்பான்மைக்கு ஏற்றவாறு அமெரிக்கா தனது தந்திரத்தைவகுத்தது, பொது இடங்களில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதையும், பகிரங்கமாக தலை வெட்டப்படுவதையும் காண்பது அரபு மக்களுக்கு இயல்புதான் என்று நாக்மன், விமர்சனம் செய்திருக்கிறார். அவரது கருத்தை மற்றொரு பண்டிதர் வழிமொழிந்திருக்கிறார். அவர் ``பயங்கரவாத மன்னர் சதாம்`` என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதிய கான் காக்லின் ஆவார். இந்தப் புகைப்படங்களை காட்டுவதன் மூலம் அரபு உலகிலிருந்து "அமெரிக்கர்களுக்கு மரியாதையை வென்றெடுக்க" முடியும் என்று காக்லின் கருத்துத் தெரிவித்தார். CNN-மாடரேட்டர், வொல்வ் பிளிட்சர் பொதுமக்களது கருத்துக்களுக்காக தொலைபேசி இணைப்பைத் திறந்ததும், முதலில் தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டவர், அந்த புகைப்படங்கள் காட்டப்பட்டதை கண்டித்ததும் மாடரேட்டர் அதிர்ச்சியடைந்தார். அவர் இந்தப் புகைப்படங்கள் காட்டப்பட்டது தார்மீக நெறிக்கே முரணானது என்று குறிப்பிட்டார். செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் போர் வீரர்கள் சுட்டுக்கொன்ற கியூசே ஹுசைனின் 14-வயது மகன் முஸ்தபாவின் படத்தையும் காட்டுவார்களா என்று தொலைபேசியில் தொடர்புகொண்டவர் கேட்டார். ``நீங்கள் ஏன் அந்தப் புகைப்படத்தையும் காட்டவில்லை?`` என்று தொலைபேசியில் முதலில் அழைத்தவர் கேட்டார். ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையும், அவர்களை ஈராக் படைகள் சிறைப்பிடித்ததையும் நேரடியாக ஒளிபரப்பிய அல்ஜெசீரா அரபு தொலைக்காட்சி வலைப்பின்னலை, அப்போது புஷ் நிர்வாகம் பகிரங்கமாகக் கண்டித்தது. அப்படி ஒளிபரப்பியதை சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறிய செயல் என்று கண்டித்தது. அமெரிக்க ஊடகங்கள் இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்று வெள்ளை மாளிகை கேட்டுக்கொண்டது. அதற்கு பெரும்பாலான ஊடகங்கள் எந்தவிதமான பதிலும் சொல்லாமல் அடிபணிந்தன. இதை ஒப்பு நோக்கி பார்க்கும்போது, சதாம் ஹுசைனின் புதல்வர்களது சடலங்களை அரசாங்க கட்டளைப்படி மிகக்கொடூரமாக வெளியிட்டுள்ள தற்போதைய ஊடகங்களின் பாத்திரம், அரசியல் பிற்போக்குவாதிகளுக்கும் வெள்ளை மாளிகைக்கும் எந்த அளவிற்கு ஊடகங்கள் அடிபணிந்து செயல்பட்டு வருகின்றன மற்றும் எந்த அளவிற்கு ஊடகங்களில் ஊழல் மலிந்துவிட்டது என்பவற்றைத்தான் கோடிட்டுக்காடுகின்றது. |