World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்காGuantanamo detainees face military tribunals Bush picks six for drumhead trials, possible execution குவான்டநாமோ கைதிகள் இராணுவ நீதிமன்றத்தை எதிர்நோக்குகின்றனர் மரண தண்டனை விதிக்கும் நோக்கில் புஷ் ஆறுபேரை போர்க்குற்ற விசாரணைக்காக தேர்ந்தெடுத்துள்ளார் By Bill Vann குவான்டநாமோ வளைகுடா கப்பற்படைத் தளத்தில் அமைந்துள்ள முகாம்களில் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருந்த 680 கைதிகளில் 6பேரை ஜனாதிபதி புஷ் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்கள் மீது இரகசிய இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெறவிருக்கின்றன. இந்த விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படலாம். ''இந்த எதிரி போராளிகள் ஒவ்வொருவரும் அல்கொய்தா அமைப்பின் உறுப்பினர்கள் அல்லது அமெரிக்காவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கையில் சம்மந்தப்பட்டவர்கள் என்று நம்புவதற்கு காரணம் இருப்பதாக ஜனாதிபதி உறுதியுடன் உள்ளார்'' என்று ஜூலை 3ம் திகதி பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. விசாரணை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளும், குவான்டநாமோ பகுதியில் நிரந்தர சிறை அமைத்து, மரண தண்டனை வழங்குவதற்கான அறையையும் உருவாக்க ஒரே நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டனர். அமெரிக்க ஆட்சி குவான்டநாமோ கைதிகளை போர்க் கைதிகள் என்று வரையறை செய்வதற்கு மறுத்துவிட்டது. அந்த நாட்டின் அப்போதைய ஆட்சியாக தலிபான்தான் செயல்பட்டுள்ளபோது ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்துச் சென்றபோது, தலிபான் சார்பில் அவர்கள் போர் புரிந்ததால் இவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இது கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. மற்றவர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இதர பகுதிகளில் பணியாற்றிய CIA-ஏஜென்ட்டுகள் அல்லது இராணுவ சிறப்புப் படைப் பிரிவுகளால் கடத்தி கைது செய்யப்பட்டவர்கள். காவலில் வைக்கப்பட்டுள்ள பலர் 18 மாதங்களுக்கு மேலாக எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமலும், வழக்கறிஞர்களோ அல்லது அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்களோ சந்திக்க முடியாத வகையில் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். ஜெனீவா உடன்படிக்கையின்படி போர் கைதிகளுக்கு உரிய உரிமைகள் எதுவும் அவர்களுக்கு இல்லை அல்லது அமெரிக்க நீதிமன்றங்களில் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உள்ள உரிமைகளும் இல்லை என்று வாஷிங்டன் கூறிவருகின்றது. போர் கைதிகளை நடத்துகின்ற முறை தொடர்பான சர்வதேச சட்டங்கள் இந்த கைதிகளுக்கு பொருந்தாது என்பது புஷ் நிர்வாகத்தின் அகந்தை மிக்க வாதம் ஆகும். ஏனெனில் அவர்கள் சட்ட விரோத போராளிகள் என்று அமெரிக்கா கூறுகின்றது. சட்ட விரோத போராளிகள் என்ற சொல் அமெரிக்கா அல்லது சர்வதேச சட்டத்தில் இடம்பெறவில்லை. மேலும், அந்த சொல் அமெரிக்க இராணுவத்திற்கு அதிக அளவில் பொருந்துவதாக அமைந்திருக்கின்றது. அமெரிக்க அரசியல் சட்டத்தை பொறுத்தவரை நீதிமன்றங்களின் ஒப்புதலோடு புஷ் நிர்வாகம் எடுத்துவைக்கின்ற வாதம் என்னவென்றால், அந்த கைதிகள் அமெரிக்க மண்ணில் காவலில் வைக்கப்படவில்லை என்பதாகும். அவர்கள் கப்பற்படை தளத்தில் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அடிப்படையில் அது கியூபா நாட்டு எல்லையில் இருக்கின்றது என்றாலும், அந்தப் பகுதி 100 ஆண்டுகளாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதனுடைய இறுதி முடிவு என்ன? இராணுவ நீதிமன்றங்கள் அல்லது விசாரணை குழுக்கள் என்று நிர்வாகம் வர்ணிக்கும் அமைப்புக்கள் முறைகேடாக குடிமக்களை இராணுவ நீதிக்கு உள்ளாக்கும். அதே நேரத்தில் போர்க் கைதிகளுக்கு ஜெனீவா ஒப்பந்தப்படி கிடைக்கின்ற உரிமைகளை பறித்துக்கொள்ளும், இரண்டு வகைகளிலும் நோக்கம் ஒன்றுதான். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்டபூர்வமான வழிவகைகள் மறுக்கப்படுகின்றன. மேலும் நிர்வாகம் விரும்புகின்ற தீர்ப்புகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படுகின்றது. இராணுவ இரகசியங்கள் காக்கப்படவேண்டும் என்ற சூழ்நிலையில் அமெரிக்க நிர்வாகத்தில் கைதிகள் எவ்வாறு நடாத்தப்படுகின்றார்கள் என்பது வெளியிடத்தேவையில்லை என ஜனாதிபதி அறிவித்ததுடன், 2002 ஜனவரி மாதம், இந்தக் கைதிகளை விலங்கிட்டு, முகமூடி போட்டு குவான்டநாமோ சிறை முகாமிற்கு அனுப்ப ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் அந்தச் சூழ்நிலையில் கைதிகள் பெயர் எதுவும் வெளியிடப்படவில்லை. அந்த ஆறு பேரும் விசாரணைக்கு கொண்டுவரப்படுவார்களா என்பதே பெரிய கேள்விக்குறியாக அமைந்துவிட்டது. அமெரிக்க ஆட்சி அவர்கள் மீது எந்தவிதமான குற்றச்சாட்டையும் கூறாமல் அல்லது விசாரணையை நடத்தாமல் கடந்த ஒன்றை ஆண்டுகளாக மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளையே நீடிப்பதற்கு முடிவு செய்யலாம். இந்த ஆறு பேரையும் விசாரணைக்கு உட்படுத்துவதா, இல்லையா என்பதை முடிவு செய்கின்ற பொறுப்பு பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் பெளல் வொல்போவிட்ச் முடிவிற்கு விடப்பட்டுள்ளது. அவர் சிறப்பு இராணுவ நீதிமன்றங்கள் என்கிற கங்காரு நீதிமன்ற முறைக்கு (kangaroo court system) தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. புலன் விசாரணை அதிகாரிகள் கைதிகளிடம் இருந்து சேகரித்த தகவலின் அடிப்படையில் வொல்போவிட்ச் முடிவு செய்வார் என்று கூறப்படுகின்றது. புலன் விசாரணை அதிகாரிகள் சித்திரவதை முதலிய பல்வேறு விசாரணை முறைகளை மேற்க்கொண்டனர். இராணுவ புலனாய்வு குழுவினரும் சிலவகை ஆதாரங்களை திரட்டியுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கைதிகளின் அரசுகளுக்கு ஜனாதிபதி புஷ்ஷின் கட்டளையை அமெரிக்க நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது. முதலில், விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்ற ஆறு பேரில் மூவர் ஈராக்கிற்கு எதிராக நடந்த சட்ட விரோதப் போரில் தீவிரமாக பங்கெடுத்துக்கொண்ட நாடுகள் இரண்டின் பிரஜைகளாவர். இருவர் பிரிட்டனின் குடிமக்கள், ஒருவர் ஆஸ்திரேலிய குடிமகன். விசாரணைக்கு கொண்டுவர இருக்கும் இரண்டு பிரிட்டன் கைதிகளும், பெரோஸ் அப்பாசி (Feroz Abbasi வயது: 23) லண்டன் பகுதியைச் சேர்ந்தவர். மற்றொருவர், மோஆஸம் பெக் (Moazzam Begg வயது: 35) பேர்மிங்காம் பகுதியில் வாழ்பவர். ஆஸ்திரேலியாவின் அடிலைட் பகுதியைச் சார்ந்த டேவிட் ஹிக்சும் (David Hicks) இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். மற்ற மூவர் யார் என்று இன்னும் குறிப்பிடப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் உள்ள வாஷிங்டனின் பொம்மை ஆட்சியாளர்கள் அமெரிக்கா காவலில் உள்ள ஆப்கானிஸ்தான் பிரஜைகள் குறித்து மெளனம் சாதிக்கத்தான் செய்வர். காபூலில் அமெரிக்கா படையெடுத்து வருவதற்கு முன்னர் வசதிக் குறைவான குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் நடத்திய அறக்கட்டளை ஊழியரும் மொழிபெயர்ப்பாளருமான பெக்கை (Begg), 2002 ஜனவரி மாதம் பாகிஸ்தானில் CIA அவரை கடத்திக்கொண்டு வந்தது. ஆப்கானிஸ்தான் எல்லையில் ஒரு காரில் கடத்திவரப்பட்ட அவர் ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமானத் தளத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் அங்கு விசாரணை நடத்தினார்கள், அதற்கு பின்னர் அவர் குவான்டநாமோ முகாமிற்கு அனுப்பப்பட்டார். அப்பாஸியின் பிரிட்டிஷ் வழக்குரைஞர் லூயிஸ் கிறிஸ்டியன் இராணுவ நீதிமன்றங்களையும், அது விதிக்கக்கூடும் என்று கருதப்படும் மரண தண்டனையும், "காட்டுமிராண்டித்தனமானது" என்று வர்ணித்தார். கார்டியன் பத்திரிகைக்கு லூயிஸ் கிறிஸ்டியன் பேட்டியளிக்கும்போது எனது கட்சிக்காரர் வெற்றிபெற்றவரின் நீதிக்கு "வல்லான் வகுத்தளித்ததே வாய்க்கால்" என்பதற்கு பலியாகிவிடக்கூடும் என்று குறிப்பிட்டார். சட்ட விரோத காவலை தடுத்து நிறுத்துமாறு குரல் கொடுக்க பிளேயர் ஆட்சி தவறிவிட்டது என்று குறிப்பிட்டார். அப்பாஸியும், இதர பிரிட்டிஷ் பிரஜைகளும், குவான்டநாமோ முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருப்பது அமெரிக்காவிடம் பிரிட்டனுக்கு எந்த விதமான செல்வாக்கும் இல்லை என்பதையும், தனது பிரஜைகளுக்காக பிரிட்டன் எதையும் செய்யவில்லை என்பதையும் காட்டுவதாக அந்த வழக்கறிஞர் கருத்து தெரிவித்தார். பத்திரிகைகளில் வந்திருக்கின்ற செய்திகளின்படி இராணுவ காவலர்கள் அந்த இரண்டு பிரிட்டிஷ் கைதிகளிடமும் குற்றத்தை ஒப்புக்கொண்டு 20ஆண்டு சிறை தண்டனையை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விசாரணைக்கு சென்று அங்கு வழங்கப்படுகின்ற தூக்கு தண்டனையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் அவர்களிடம் கூறியிருக்கிறார்கள். டெல்டா முகாமிலும், குவான்டநாமோ முகாமிலும் நிலவுகின்ற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இராணுவ அதிகாரிகள் விரும்புகின்ற ஒப்புதல் வாக்கமூலங்களை பெற்றுவிட முடியும் என கருதுகிறார்கள். அந்த முகாம்களில் மோசமான நிலை உள்ளதாக கருதப்படுகின்றது. அண்மையில் 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். கைதிகளிடையே பரவலான மனச் சோர்வும், குழப்பமும் நிலவுவதாக விடுதலை செய்யப்பட்ட கைதிகள் தெரிவித்தனர். 6ல் 8-என்ற அடிக்கணக்கில் செய்யப்பட்ட கூண்டுகளுக்குள் நிரந்தரமாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் மட்டுமே அடைக்கப்பட்ட இடத்தில் உடற்பயிற்சிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு வாரத்திற்கு 15 நிமிடங்கள் மட்டுமே குளிப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மனித உரிமை அமைப்புக்கள், சிவில் உரிமை குழுக்கள், சட்டபூர்வ பாதுகாப்பு அமைப்புக்கள் ஆகியவை இராணுவ நீதிமன்றங்கள் அடிப்படையிலேயே நியாயம் அற்றவை என்று கண்டித்துள்ளனர். அமெரிக்க நீதிமன்றங்களில் புஷ் நிர்வாகம் வைத்திருக்கின்ற சான்றுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எனவேதான், இராணுவ நீதிமன்றங்களை புஷ் நிர்வாகம் நாடியுள்ளது. சாதாரண அமெரிக்க நீதிமன்றங்களில் அமெரிக்கா பிடித்து வைத்துள்ள கைதிகளை கண்டிப்பதற்கு தேவையான சான்றுகள் இல்லை. இத்தகைய இராணுவ நீதிமன்றங்களில் விசாரணை நடத்துவது நீதியை பரிகாசம் செய்வதாகும் என்று சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருக்கின்றது. ''சர்வதேச அளவில் நியாயமான விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை மேலும் கொச்சைப்படுத்துகின்ற வகையிலும், தனது சொந்த கீர்த்திக்கே மேலும் இழிவு ஏற்படுத்துகிற வகையிலும், நடவடிக்கைகள் செல்வதற்கு முன்னர் அமெரிக்க நிர்வாகம் தனது முலோபாயம் குறித்து மறு பரிசீலணை செய்யவேண்டும்'' என்று சர்வதேச பொதுமன்னிப்பு சபை வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருக்கிறது. மனித உரிமைகள் கண்காணிப்பு ''பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் மீது உத்தேச இராணுவ விசாரணை கமிஷன்கள் விசாரணை நடத்துமானால் அவை தற்போது நடைமுறையில் உள்ள இராணுவ உத்தரவுகள் மற்றும் கட்டளைகள் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நியாயமான விசாரணை கிடைக்கவேண்டும் என்ற அடிப்படை உரிமையையே சீர்குலைத்துவிடும். தூக்கு தண்டனை உட்பட இதுபோன்ற விசாரணை மன்றங்கள் தருகின்ற தீர்ப்புகள் சட்டப்பூர்வமானவையா என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் அமைந்திருக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான போர், சட்ட விதிகள் எதையும் பொருட்படுத்தவேண்டிய அவசியமில்லாதது என்ற ஒரு குறிப்பை உலகம் முழுவதற்கும் பரப்பிவிடும்'' என்று தனது அறிக்கையில் கூறி உள்ளது. இராணுவ நீதிமன்றங்கள் அமைப்பு முழுவதும் சங்கிலித்தொடர் போன்ற இராணுவ கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் செயல்படுபவை. இராணுவ ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப்பட்டு பணியாற்றுகின்ற இராணுவ அதிகாரிகள் நீதிபதிகளாகவும், நடுவர் குழுவாகவும், தண்டனை வழங்குபவர்களாகவும் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு வழக்கறிஞர்களாகவும் பணியாற்றுகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் இராணுவ வழக்கறிஞர்கள் வாதாடுவதற்கு நியமிக்கப்படுவர். இராணுவ நீதிமன்ற விசாரணை விதிகளின்படி குற்றம் சாட்டப்படுபவர்கள் கூடுதலாக குடிமக்கள் வழக்கறிஞர் உதவியை கோரலாம். அப்படி கோரப்படும் வழக்கறிஞர் அமெரிக்க குடிமகனாக இருக்கவேண்டும். அரசாங்கம் ''இரகசியம்'' என்று வகுத்துள்ள தகவலை அவர் தெரிந்துகொள்ளலாம் என்று அனுமதி பெற்றிருக்கவேண்டும். இராணுவ அடிப்படையில் தவறு எதுவும் செய்யாதவர் என்று நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். குடிமக்களின் வழக்கறிஞர்கள் ஒரு வழக்கை நடத்த சம்மதித்தால் அவர்களுக்கு ஆட்சியாளர்கள் எந்தவிதமான நிதி ஒதுக்கீடும் செய்யமாட்டார்கள், அத்தகைய வழக்கறிஞர்கள் விசாரணை நடைபெறும் காலம் முழுவதிலும் கான்டநாமோ பகுதியில் கைதிகளைபோல்தான் நடமாடவேண்டும். வெளியில் எவரோடும் தொடர்புகொள்ளக்கூடாது என்று தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ள கைதி எப்படி குடிமக்கள் வழக்கறிஞர் உதவியை நாட முடியும் என்பது தெளிவாக அறிவிக்கப்படவில்லை. சான்றுகள் பதிவு செய்வது தொடர்பான விதிகளின்படி குவான்டநாமோ காவல் முகாமில் வழக்கறிஞர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தரப்பை தயாரிப்பது கட்டுப்படுத்தப்படலாம். பேட்டிகள் எடுக்கவோ, அல்லது எந்த விதமான சான்றுகள் எதையும் பெறவோ, உரிமைகள் எதுவும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் எந்த விதமான தவறும் செய்யாதவர் என்று நிரூபிப்பதற்கு சான்றுகள் திரட்டுவதற்கு எந்த விதமான உரிமையும் வழங்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டு வரும் வழக்கறிஞரும், நடத்துகின்ற உரையாடல் அனைத்தும் பதிவு செய்யப்படுவதால் வழக்கறிஞர்- வாடிக்கையாளர் (Attorney-client) முன்னுரிமைகள் இரத்து செய்யப்படுகின்றன. குற்றம் சாட்டுவோர் எந்த சான்றையும் தாக்கல் செய்ய முடியும். சாதாரண நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளாத சான்றுகளைக்கூட இராணுவ நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய முடியும். சித்ரவதை மூலம் பேச்சுவாக்கில் பிறர் சொல்லக் கேட்டது, தொலைபேசி தொடர்புகள் மற்றும் பெயர் அறியப்படாத சாட்சிகளின் சான்றுகள் ஆகியவற்றையும் இராணுவ நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய முடியும். அதே நேரத்தில் குடிமக்கள் வழக்கறிஞர்களின் உரிமைகள் மிகப்பெரும் அளவிற்கு பறிக்கப்படுகின்றன. பென்டகன் வெளியிடுகின்ற விசாரணை செய்திக் குறிப்புகளை தவிர குடிமக்கள் வழக்கறிஞர்கள் எந்த விதமான தகவல்களையும் வெளியில் சொல்லக்கூடாது. தேசிய குற்றவியல் வழக்கு விசாரணை வழக்கறிஞர்கள் சங்கம், தனது வழக்கறிஞர்கள் எவரும் குவான்டநாமோ இராணுவ நீதிமன்றங்களில் ஆஜராக வேண்டாம் என்று ஆலோசனை கூறியுள்ளது. ஏனெனில், அந்த விசாரணையே அடிப்படையில் நியாயமற்றது. ஒரு மூத்த இராணுவ அதிகாரி தனக்கு பதவி உயர்வு வேண்டும் என்று கருதுவாரானால் அப்படிப்பட்ட ஒரு அதிகாரி அமெரிக்க குடியரசுத் தலைவர் குற்றம் சாட்டியிருக்கும் நபரை விடுதலை செய்வது மிகவும் சிக்கலான ஒன்று என சங்கத்தலைவர் லோரன்ஸ் கோல்ட்மன் கருத்து தெரிவித்துள்ளார். இராணுவ நீதிமன்ற விசாரணை அடிப்படையே குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்பாவிகள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதாக கூறப்படுவது குறித்து ஆராய்வதற்கு முன்னர் பென்டகன் தலைவர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கருத்தை பார்க்க வேண்டும். இராணுவ காவலில் உள்ளவர்கள் முறைகேடாக நடத்தப்படுவதாக கூறப்படுவது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ''மற்றவர்கள் நடத்தப்படுவதை விட அவர்கள் மிக சிறப்பாகவே நடத்தப்பட்டு வருகின்றனர்'' என்று அவர் கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் அப்பாவியா, அல்லது குற்றம் புரிந்தவரா? அவர் வாழ வேண்டுமா அல்லது தூக்கு தண்டனைக்கு உள்ளாக வேண்டுமா? என்கிற அதிகாரம் தலைமை தளபதி என்கிற முறையில் ஜனாதிபதி புஷ்ஷின் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிலோ, அல்லது சர்வதேச நீதிமன்றம் எதிலுமோ மேல்முறையீடு எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை. இராணுவ நீதிமன்றம் விடுதலை செய்தாலும் அதை இரத்து செய்து தூக்கு தண்டனை விதிப்பதற்கு ஜனாதிபதி புஷ்ஷிற்கு அதிகாரம் உண்டு. விடுதலை செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்டாலும் கைது செய்யப்பட்டவரை காலவரையின்றி காவலில் வைத்திருக்க அமெரிக்காவிற்கு அதிகாரம் உண்டு. வாஷிங்டன், போர் குற்றங்கள் தொடர்பான இராணுவ நீதிமன்றங்களை அமைத்து அதற்கான விதிகளை பென்டகன் வெளியிட்டபோது அத்தகைய குற்றங்களுக்கு மிக விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அமெரிக்க அதிகாரிகள் பயங்கரவாதிகள் என்று கருதும் எந்த சக்திக்கும் உதவினார்கள் அல்லது இணைந்திருந்தார்கள் என்று குற்றம் சாட்டப்படுகின்ற எவர் மீதும் வழக்குத் தொடர முடியும். இராணுவ நீதிமன்றத்தில் முதலில் விசாரணைக்கு வரும் இரண்டு பேர் பிரிட்டனின் குடிமக்கள் என்ற தகவல் வெளிவந்ததும் ஜூலை மாதம் 7-ந்தேதி நாடாளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றன, விவாதங்கள் சூடாக கிளம்பின. சகல கட்சிகளை சேர்ந்தவர்களும் இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்த்தனர். அதனை அவர்கள் ''கங்காரு நீதிமன்றம்'' என்றும், ''நீதி நாடகம்'' என்றும் வர்ணித்தனர். வெளியுறவுத்துறை அமைச்சர் கிரிஸ் முல்லின் (Chris Mullin) விவாதத்தில் கலந்துகொண்டு பேசும்போது, ''நாடாளுமன்ற விவாதங்கள் பற்றிய முழு விபரக் குறிப்பு பிரிட்டனில் உள்ள அமெரிக்க தூதருக்கு தரப்படும். பிரதமர் டோனி பிளேயரின் ஆட்சி அமெரிக்கா விசாரணைகளை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்தவேண்டும் என்று கோரிக்கையை விடுத்திருக்கிறார்'' என கூறினார். அந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் நாடாளுமன்ற விவாதங்கள் அமைந்திருக்கின்றன. பிரிட்டனின் குடிமக்கள் பிரிட்டனிலேயே விசாரிக்கப்படுவதற்கு வழி செய்யும் முறையில் அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட வேண்டுமென்று பிளேயர் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளமாட்டார் என்பதை கோடிட்டு காட்டும் வகையில் அறிக்கைகள் அமைந்திருக்கன்றன. கண்டன அறிக்கைகள் வெளியிடப்பட்டதோடு சரி, இராணுவ அநீதி நீடிப்பதை அனுமதிக்க, பிரிட்டிஷ் ஆட்சி தயாராகயிருக்கின்றது. உண்மையிலேயே, லண்டன் பைனான்சியல் டைம்ஸ் புதன்கிழமையன்று வெளியிட்டுள்ள தகவலின்படி ''பிளேயர் ஆட்சி கவலைப்படுவது எல்லாம் பிரிட்டிஷ் நீதிமன்றம் எதிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர முடியாது என்பதுதான், அமெரிக்க இராணுவ நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படும் சாட்சியம், ஆங்கிலேய சட்டப்படி நீதிமன்றத்தில் அனுமதிக்க முடியாது. ஏனென்றால், சாட்சியம் பெறப்பட்ட முறையை ஆங்கிலச் சட்டம் ஆராய்ந்து பார்க்கும் தன்மை கொண்டது'' என்று பைனான்சியல் டைம்ஸ் எழுதியிருக்கிறது. இராணுவ நீதிமன்றங்கள் தொடர்பான சட்ட விதிகளை இயற்றுவதில் பென்டகனின் ஆலோசகராக செயல்பட்டுவரும் Johns Hopkins சர்வதேச சட்ட பேராசிரியர் ரூத் வெட்ஜ்வூட் (Ruth Wedgwood) பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கைகள் வெளியில் வந்திருப்பதை எள்ளி நகையாடினார். ''சில பிரிட்டிஷ் அமைச்சர்கள் எழுப்பியுள்ள வாதங்களில் இருந்து இது மிகப்பெரிய வியப்பு என்று ஒருவர் கருதக்கூடும். உண்மையிலேயே, அமெரிக்கா பல மாதங்களாக பிரிட்டிஷ் அரசை இது குறித்து ஆலோசித்து வருகின்றது'' என்று அவர் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். வெட்ஜ்வூட் தனது சட்டப்படிப்பு தகுதிகள் தவிர, பாதுகாப்பு கொள்கை குழு உறுப்பிராகவும், ஈராக்கை விடுவிப்பதற்கான குழுவிலும் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஜோன் ஹொவார்ட்டின் ஆட்சி அமெரிக்காவின் விசாரணை முறைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய பிரஜையான டேவிட் ஹிக்சிற்கு (David Hicks) மரண தண்டனை விதிக்கப்படலாம். ஆஸ்திரேலிய அட்டர்னி ஜெனரல் டாரில் வில்லியம்ஸ் (Daryl Williams) சென்ற வாரம் ''ஒரு கிரிமினல் குற்ற நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற சாதாரண உரிமைகள் ஹிக்சிற்கு கிடைக்கும்'' என்று அறிவித்தார். ஹொவார்ட்டை பொறுத்தவரை அவர் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். தனக்கு கிடைத்துள்ள தகவலின்படி ஆஸ்திரேலிய பிரஜை எவரும் அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு உட்பட்டால் அடிப்படை நிபந்தனை நிறைவேற்றப்படும் என்பதில் தாம் திருப்தியடைவதாக குறிப்பிட்டிருக்கிறார். அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர், அப்பாவி என்ற அனுமானம் ஒரு வழக்கறிஞரை வைத்துக்கொள்ளும் உரிமை கிடைக்கும் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். ''அமெரிக்காவில் நடக்கும் விசாரணை நியாயமானது என்று ஆஸ்திரேலிய அட்டார்னி ஜெனரல் எவ்வாறு கூற முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை'' என்று ஹிக்சின் வக்கீல் ஸ்டீபன் கென்னி (Stephen Kenny), சிட்னி மார்னிங் ஹெரால்டிற்கு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் இராணுவ நீதிமன்ற விசாரணை முறையில் குற்றம் சாட்டப்பட்டவர், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அப்பாவி என்று கருதப்படுவார் என்பதற்கு எந்தவிதமான உத்திரவாதமும் இல்லை. அல்லது குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையும் இல்லை. மற்றும் மேல்முறையீடு செய்வதற்கு உரிமையும் இல்லை. எனவே, ஹிக்கிஸ் சந்திக்கவிருக்கும் விசாரணை நியாயமானதும் அல்ல, சுதந்திரமானதும் அல்ல என்று அவர் வழக்கறிஞர் கருத்து தெரிவித்தார். இதற்கிடையில் பிரச்சார உத்தியாக, நீதியை நிலைநாட்டுவதற்கு வாஷிங்டன் தயாரித்துள்ள இராணுவ நீதிமன்ற அடிப்படையில் ஈராக்கில், அமெரிக்க இராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்பதை கோடிட்டு காட்டும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஈராக்கில் தற்போது பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் எவரையும் குவான்டநாமோ முகாமிற்கு அனுப்புகின்ற திட்டமில்லை என்று பென்டகன் அறிவித்திருக்கின்றது. சீருடை அணியாத ஈராக் போராளிகள் அனைவரும் சட்ட விரோத போராளிகள் என்று அறிவிக்கப்படுவார்கள் என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கிடையில் நிர்வாக அதிகாரிகள் ஈராக்கில் அமெரிக்க இராணுவத்திற்கு எதிர்ப்பு காட்டுபவர்களை ''பயங்கரவாதிகள்'' என்று வர்ணிக்கின்றனர். ஆப்கானிஸ்தானைப் போல், ஈராக்கிலும் கைதிகளை சட்ட விரோத போராளிகள் என்று அமெரிக்க வர்ணிப்பதால் ஜெனீவா ஒப்பந்தத்தை புறக்கணித்துவிட முடியும் என்று கருதுகிறார்கள். இப்படி ஜெனீவா ஒப்பந்தத்தை புறக்கணிப்பதற்கு எந்தவிதமான சட்டபூர்வ முன்மாதிரியும் இல்லை. ஆனால், அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பை முன்நின்று இயக்கிக்கொண்டிருப்பவர்கள் மிகுந்த இறுமாப்போடு இந்தக் கருத்தை கூறுகிறார்கள். 1949ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஜெனீவா ஒப்பந்தத்தில் ''சட்ட விரோத போராளிகள்'' என்று எந்தக் குறிப்பும் இல்லை. அந்த ஒப்பந்தப்படி போரில் பிடிக்கப்படும் கைதிகளை எந்த நாடும் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் மூலம் தான் நீதி நிர்வாக உத்திரவாதங்கள் அனைத்திற்கும் உட்பட்டு நாகரீக மக்களுக்கு தவிர்க்க முடியாத அவசியம் என்று கருதப்படும், நடைமுறைகளை பின்பற்றித்தான் விசாரித்து தண்டனை வழங்கப்படவேண்டும். கைது செய்தும் துருப்புக்கள் அனுபவிப்பது போன்ற ''சாதகமான'' நிலைகளில் கைதிகள் நடத்தப்படவேண்டும் என்று ஜெனீவா ஒப்பந்தம் தெளிவுபடுத்துகின்றது. ஒரு போராளி போர்க் கைதிகளுக்குரிய (POW) உரிமைகள் படைத்தவரா என்பது தொடர்பான பிரச்சனை பற்றி தீர்மானிப்பது கைது செய்யும் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு இயங்கும் ''பொருத்தமான அதிகாரம்'' படைத்த நீதிமன்றம் அதாவது ஒரு சர்வதேச நீதிமன்றம் தான் அது குறித்து முடிவு செய்யவேண்டும் என்றும், ஜெனீவா ஒப்பந்தம் தெளிவுபடுத்துகிறது. வாஷிங்டன் தனது சட்ட விரோதமான போரில் மேலும், ஈராக்கை பிடித்துக்கொண்டதில் ஒட்டுமொத்தமாக ஜெனீவா ஒப்பந்தத்தை மீற நடந்திருக்கிறது. இது போர்க் கைதிகள் பிரச்சனைக்கும் அப்பாற்பட்ட விவகாரம் ஆகும். ஆயுதம் ஏந்தாத குடிமக்களை ஆங்காங்கே கைது செய்வதற்கும், ஜெனீவா ஒப்பந்தம் தடைவிதிக்கின்றது. ஈராக்கில் தற்போது இரண்டு வகையான இராணுவ நடவடிக்கைகளிலும், பெருமளவிற்கு குடிமக்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஜூலை 9 ம் திகதியன்று, லண்டன் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையில் இரவு நேரத்தில் அமெரிக்க ரோந்து படையினர் வீடுகளில் புகுந்து ஈராக் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக்கூட கைது செய்துவருவதாக அதிக அளவில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தெருக்களில் நடமாடிக்கொண்டிருப்பவர்களை பிடித்து விலங்கிட்டு முகமூடி போட்டு பாக்தாத்தை சுற்றியுள்ள சிறை முகாம்களுக்கு கொண்டு செல்கிறார்கள் என்று அப்பத்திரிகை வெளியிட்டிருக்கின்றது. பாக்தாத் சர்வதேச விமான நிலைய எல்லையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறை முகாமில் 122 டிகிரி பரனைட் வெப்பத்தில் கைதிகள் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. மனித உரிமைக் குழுக்கள் இவை பற்றி விடுத்துள்ள அறிக்கையின் அமெரிக்க பிஸ்கட் பாக்கெட்டுகளை சாப்பிட்டார்கள் (இது அவர் கொள்ளையடித்தவர் என்பதற்கான சான்றாகலாம்), ஊரடங்கு உத்தரவை மீறி சிகரெட் பாக்கெட் வாங்குவதற்குச் சென்றார்கள் என்பது போன்ற ''குற்றங்களுக்கெல்லாம்'' இளைஞர்களை அமெரிக்கத் துருப்புகள் காலவரையற்ற காவலில் வைத்திருக்கிறார்கள் என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 11 வயது சிறுவன் சூபியான் அப்த் அல் ஹானியின் (Sufiyan Abd al-Ghani) வழக்கை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அந்தப் பகுதியில் நடமாடிய அமெரிக்க ரோந்து படையினர் மீது யாரோ சுட்டார்கள் என்பதற்காக அந்தச் சிறுவனை அவன் வீட்டுக்கு முன் நிறுத்தி அவன் கையைக் கட்டி, விமான நிலையத்தில் உள்ள வயதுவந்தோருக்கான சிறையில் 22 கைதிகளுடன் அவனையும் அடைத்தனர். பின்னர் விலங்கிட்டு இதர 20 இளைஞர்களுடன் தவறு செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல், சான்றும் இன்றி, 6 வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்காவிற்கு எதிரான கேலிச் சித்திரங்களை சுவர்களில் வரைந்தார்கள், அமெரிக்க இராணுவ வீரர்களை இழிவுபடுத்தினார்கள் என்று இதர சிறுவர்கள் சிறையிலடைக்கப்பட்டிருக்கின்றனர். |