World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : இத்தாலிBerlusconi and Europe பெர்லுஸ்கோனியும் ஐரோப்பாவும் By Peter Schwarz இத்தாலியப் பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனியின், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறு மாத காலத் தலைமையின் ஆரம்பமானது, ஐரோப்பியச் செய்தி ஊடகங்களில் அமைதியின்மை அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியைப் பற்றிய கட்டுரையையோ, கருத்து வர்ணனையையோ வெளியிடாத முக்கியச் செய்தி ஏடுகள் இல்லையென்றே கூறமுடியும். ஜேர்மனியின் Der Spiegal ''சில்வியோ பெர்லுஸ்கோனி: வளர்ப்புத் தந்தை'' என்ற தலைப்புடனும், பிரான்சின் Le Monde ''தயார் செய்யப்பட்ட நீதி, செய்தி ஊடகத்தின் கட்டுப்பாடு: பெர்லுஸ்கோனியின் கீழ் இத்தாலியின் இருண்ட பக்கம்'' என்ற தலையங்கத்துடனும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. Financial Times ''ஏன் பெர்லுஸ்கோனி ஐரோப்பாவிற்குக் கெடுதலாக இருக்கக்கூடும்?'' என்ற தலைப்பில் ஒரு வர்ணனை கொடுத்திருந்தது. பெர்லுஸ்கோனியின் பழைய வரலாறு மிகவும் இருண்டது. ஊழல், திட்டமிட்ட குற்றச் செயல்கள் ஆகியவற்றில் அவருடைய தொடர்பு நன்கு அறியப்பட்டதுடன், தனி நலன்களைப் பொது நலன்களோடு பிணைத்து அவர் செயலாற்றியது சிறிதும் நாணமற்ற செயல். இவையனைத்தையுமே மெளனத்துடன்தான் கடந்து செல்ல வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரபூர்வமாகக் கூறும், அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு, ''நல்லாட்சி'' இவற்றின் மத்தியில் அரசாங்கத்தை மட்டுமல்லாது, 90 சதவிகிதத் தனியார், பொதுச் செய்தி ஊடகங்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இத்தாலியின் அதிக மிகப்பெரிய பணக்காரர் பொருத்தமற்றவகையில் அமர்ந்திருக்கின்றார் என்பதுதான் உண்மை. தன்னுடைய பாராளுமன்றப் பெரும்பான்மையை நீதித்துறை நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக்கொள்ள சிறிதும் தயக்கம் காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பெர்லுஸ்கோனி தலைமையில் ஏற்கனவே ஈராக்கியப் போரின் பின்னர் ஆழமாக பிளவடைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் கூடுதலான பிளவுகளைக் காணக்கூடும் என்ற அதிகக் கவலையும் தோன்றியுள்ளது. ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் ஆத்திரமூட்டல் இந்த அச்சங்களை உறுதிப்படுத்த பெர்லுஸ்கோனி அதிக நேரம் வீணடிக்கவில்லை. தனது புதிய வேலையில் சேர்ந்த இரண்டாம் நாளே, அதுவரை நிதானமாக அமைதியாக இயங்கி வந்த அமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தை அவமானப்படுத்தினார். பெர்லுஸ்கோனியின் ஊடக ஆதிக்கத்தையும், நீதிமன்றத் தலையீடுகளையும் பற்றி பல அரசியல்வாதிகள் குறை கூறியபின்னர், ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சியின் உறுப்பினரான மார்ட்டின் ஷூல்ஸ் (Martin Schulz) ஐரோப்பிய உள்நாட்டு மற்றும் சட்ட கொள்கைகளைப் பற்றிப் புதிய தலைவரிடம் எதை எதிர்பார்க்க முடியும் என்று நேரடியாகவே கேட்டுவிட்டார். இத்தாலியில் நாஜி கடும் கொடுஞ்சிறை முகாம்களைப் பற்றி இத்தாலியில் தற்பொழுது எடுக்கப்பட்டு வரும் படம் ஒன்றில் ஷூல்ஸ் (Schulz) அதிகாரிப் பதவி ஏற்கலாம், ''திரு ஷூல்ஸ், அந்த வேஷத்திற்கு நீங்கள் நல்ல பொருத்தமுடையவர்'' என பெர்லுஸ்கோனி கூறினார். இந்த அவமானப்படுத்தும் கருத்து அங்கு பெரும் சீற்றத்துடன் கூடிய விளைவை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்தின் தலைவர் பாட்ரிக் கொக்ஸ் (Patrick Cox) இந்தக் குறிப்பை கூட்ட விவரத்திலிருந்து நீக்கிவிட்டார் -இதுவே பெர்லுஸ்கோனிக்கு வெளிப்படையான திட்டுதல் போலாகும். ஜேர்மன் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் இத்தாலியத் தூதரைத் தன் அலுவலகத்திற்கு வருமாறு கட்டளையிட்டு நாஜி ஒப்புவமை, ''வடிவத்திலும், பொருளிலும் முற்றிலும் ஏற்கப்பட முடியாதது'' என்று விவரித்துடன், முழுமையான மன்னிப்புக்கோர வேண்டும் என ஷ்ரோடர் வலியுறுத்தினார். பெர்லுஸ்கோனி இதையொட்டி கவனமெடுக்கவில்லை. தான் வஞ்சகமான முறையில் ஷூல்ஸ் இற்கு ஒரு வேடம் பொருந்தும் என யோசனை தெரிவித்தாகவே அவர் அறிவித்தார். இது ஒரு குறிப்பிடத்தக்க வஞ்சமான கருத்தாகும். ஏனெனில் ஷூல்ஸின் சமூக ஜனநாயக முன்னோர்கள் ஹிட்லருடைய எதிரிகளாக, கடும் முகாம்களில் தள்ளப்பட்டிருக்கையில், பெர்லுஸ்கோனி இன்றைய கூட்டணி அரசில் ஹிட்லரின் நெருங்கிய கூட்டாளியான முசோலினியின் வாரிசுகளுடன் அமர்ந்திருக்கிறார். இத்தாலியப் பிரதம மந்திரி இதைவிட தன்னுடைய ஆணவத்தையும் வரலாற்று அறியாமையையும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்க முடியாது. இதேபோல் ரோமில், ஜேர்மானியத் தூதர் அயலுறவு அமைச்சரகத்திற்குத் அழைக்கப்பட்டு ஷூல்ஸ், இத்தாலியப் பிரதமரை ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் அவமதித்துவிட்டதாகவும் அவர் மன்னிப்புக் கோரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஒரு பாரளுமன்ற உறுப்பினர் விமர்சனத்திகுரிய கேள்விகளைக் கேட்பது பெர்லுஸ்கோனியின் பேரரசில் பேரரசின் மாட்சிமைக்கு இழிவானது போலும். பெர்லுஸ்கோனியின் எடுபிடிகள் தங்கள் எஜமானருக்கு ஆதரவாக முன்வந்தனர். அவரின் குடும்பத்திற்குச் சொந்தமான Il Glornale பத்திரிகை ''மிக மிக, நன்று.'' என ஒத்திசைந்து எழுதியது. Northern Leauge சமூக சேவைகள் மந்திரி ரொபேர்டோ மரோனி (Roberto Maroni) இக்கூற்றை ''சாலச்சிறந்தது'' என்று கருத்துத் தெரிவித்தார்; அவருடைய சக கட்சியாளரும் செனட்டின் துணைத் தலைவருமான ரொபேர்டோ கால்டிரோனி (Roberto Calderoni) ''ஒரு வழியாக இப்பொழுதுதான் ஒருவர் இந்த இடதுசாரி அரசியல்வாதிகளைப் பற்றித் தெளிவாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.'' என கூறினார். கிறிஸ்தவ ஜனநாயக யூனியனை (CDU-Christian Democratic Union) சார்ந்த ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர் Hans-Gern Pottering, பெர்லுஸ்கோனியிடம் ஷூல்ஸ் மன்னிப்புக் கேட்கவேண்டும் என கோரினார். Pottering ஐரோப்பிய மக்கள் கட்சி (EVP) பிரிவின் தலைவர். இது ஜேர்மன் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/ கிறிஸ்தவ சமூக யூனியன் (CDU/CSU) உடன் இணைந்து பெர்லுஸ்கோனியின் Forza Italia வில் ஒரு பகுதியாகும். மறுநாள் பெர்லுஸ்கோனி, ஷ்ரோடருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது இத்தாலியத் தலைவர் ''தன்னுடைய சொற்கள் தேர்ந்தெடுப்பிற்கும் ஒப்புமை கூறியதிற்கும் வருத்தம் தெரிவித்ததாகக்'' ஜேர்மன் அதிபர் கூறினார். உடனே ரோமில் இது திருத்தப்பட்டது. பெர்லுஸ்கோனி மன்னிப்புக் கேட்கவில்லையென்றும் ''தன்னுடைய நகைச்சுவையின் தன்மையை எவரும் எளிதில் தவறாகப் புரிந்துகொண்டிருக்கக்கூடும் என்றும் அது ஒரு வஞ்சகமான கருத்துதான் என்று கூறியதாகவும்'' தெரிவிக்கப்பட்டது. பெர்லுஸ்கோனியைத் தூண்டிவிட்டதற்கு ஷூல்ஸ் தான் பொறுப்பேற்கவேண்டும் என்றும், அவர் பெர்லுஸ்கோனியை மட்டும் அல்ல இத்தாலியையே புண்படுத்திவிட்டார் என்றும் கூறப்பட்டது. எவ்வாறாயினும், ஜேர்மனியைப் பொறுத்தவரையில் விஷயம் முடிந்துவிட்டது என்று ஷ்ரோடர் கூறிவிட்டார். வெளிநாட்டு அமைச்சர் Joschka Fischer பெர்லுஸ்கோனியின் தூண்டுதல் பேச்சை சிறிதுபடுத்தி, ''நாம் அனைவருமே எப்பொழுதாவது ஒருதடவை ஒரு தவறான நடவடிக்கையில் ஈடுபடுகிறோம்.'' என்றார். பெர்லுஸ்கோனிக்கு எதிர்ப்பு இல்லை இவ்வாறுதான் இனி விடயங்கள் நடைபெறும். மிலான் (Milan) நகரத்திலிருந்து வந்துள்ள வலதுசாரிச் வாய்சவாடல் அரசியல்வாதியைக் கேட்பார் கிடையாது. ஒரு விஷமத்தனமான குழந்தை நாளடைவில் ஒழுங்காக நடந்துகொள்ளும் என்ற நம்பிக்கையில் முகத்தைச் சுளித்துவிட்டுப் பேசாமல் இருந்துவிடுவதைப்போல், அவர் நடத்தப்படுகிறார். ''சில வாரங்களுக்கு முன்னர் ஒருவர் பழைய, புதிய ஐரோப்பா எனக் கூறியதை, தனிமைப்படுத்தப்பட்ட பெர்லுஸ்கோனி ஐரோப்பாவை பிற்போக்குவாதிகளுக்கும் இடதுசாரிகளிடையே ஒரு சிறந்த குத்துச்சண்டை மேடை போலாக்கிவிடுவார் என்று Stephan Kornelius, Suddeutschen Zeitung பத்திரிகையில் அரசாங்கங்களின் கருத்துக்களை குறிப்பிட்டுள்ளதுடன், மேலும் ''மீண்டும் திருத்தமுடியாதளவிற்கு அது ஐரோப்பாவையே உடைத்து நாசம் உருவாக்கிவிடும். எனவே பெர்லுஸ்கோனியை தன்னை தானே தீர்மானித்துக்கொள்ள விடுவது நல்லது'' என்று முடித்தார். ஈராக்கியப் போரிலும் இத்தகைய முறையில்தான் ஜேர்மன் அரசாங்கம் வீரம் காட்டி நடந்துகொண்டது. அமெரிக்கப் போர் திட்டங்களைப் பற்றித் ஆரம்பத்தில் கூறிய குறைகள் வாஷிங்டனால் கண்டனத்துக்கு உட்பட்ட அளவில், பேசாமல் இருக்க முடிவு செய்து, புஷ் ''தன்னைத் தானே தீர்மானித்துக்கொள்வார்'' என்ற நம்பிக்கையில் விட்டுவிட்டது. அதிலிருந்து காதடைக்கும் இந்த மெளனம் தான், ஒவ்வொரு ஜனநாயக உரிமை மீறப்படும் போதும், ஐ.நா. மன்றம் அசட்டை செய்யப்பட்டபோதும், அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச வெளிநாட்டுக் கொள்கை நடவடிக்கைகளின் போதும் வரவேற்றிருக்கிறது. இதன் விளைவாக அமெரிக்கத் தீவிர வலதுசாரிகள் பலமடைந்த உணர்வைப் பெற்று இன்னும் கூடுதலான வெட்கங்கெட்ட முறையில் நடக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். பெர்லுஸ்கோனியிடமும் அதேபோன்ற முடிவுகள்தான் விளையும். இத்தாலியில், இவருடைய நீதிமன்றத் தாக்குதல்கள், பாராளுமன்ற பெரும்பான்மைகளைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்தியவை, தொலைக்காட்சி, கலாச்சார நிறுவனங்களில் வேண்டாதவர்களைத் துரத்தியடித்தல் அனைத்திலிருந்தும் பாதிப்படையாமல் வெளிவந்துவிட்டார். எந்த பகிரங்க மோதுதலையும் தவிர்த்த உத்தியோகபூர்வமான எதிர்கட்சிகளின் கோழைத்தனமும், கூழைக்கும்பிடு போடுவதுமே அரசாங்கத்திற்கு எதிராக பத்து லட்ச கணக்கில் மக்கள் வீதிக்கு வந்து கண்டனம் செய்தபோதிலும் ஒன்றுமியலாமல் போனது இதனுடைய விளைவேயாகும். தன்னுடைய ஆறு மாத கால ஐரோப்பிய ஒன்றியத் தலைமையை ஏற்று சர்வதேச செய்தி ஊடகத்தின் தாக்குதலுக்கு உட்படுவதற்கு முன்பே, எதிர்க்கட்சித் தலைவர் Francesco Rutelli தன்னுடைய ராஜ விஸ்வாசத்தைத் தெரிவித்தார். ''ஐரோப்பிய விவகாரங்களில் விசுவாசமுள்ள ஒத்துழைப்பு'' தருவதாக அவர் உறுதிமொழியளித்தார்; அதை வலியுறுத்தும் வகையில் அவர் கூறியதாவது: ''பெர்லுஸ்கோனியின் குறைந்த மதிப்பை இத்தாலிக்கெதிராக திரும்புமாறு நாம் செய்துவிடக்கூடாது.'' இந்தக் கண்ணோட்டம் பெர்லுஸ்கோனியை ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் ஆத்திரமூட்டும் கோலத்தை மேற்கொள்ள நிச்சயமாக ஊக்குவித்திருக்கவேண்டும். ஷ்ரோடர், பிஷ்ஷர் இவர்களுடைய வளைத்துகொடுக்கும் போக்கு அதேபோன்ற விளைவைத்தான் ஏற்படுத்தும். ஜனநாயக உரிமைகளை, இத்தாலியப் பிரதம மந்திரி வெளிப்படையாக இகழ்ச்சி செய்வதுடனான நேரடியாக மோதுதல் நிச்சயமாக ஐரோப்பா முழுவதும் நெருக்கடியைத்தான் ஏற்படுத்தும். ஆனால் இது ஒரு நன்மையான நெருக்கடியேயாகும். வலதுசாரியினரும், தேசியவாதிகளும் தேசிய இறைமை தாக்கப்படுவது பற்றியும் ஐரோப்பிய ஒன்றிய விதிகள் பற்றியும் குறைகூறலுடன் ஊளையிடுவார்கள். அமெரிக்க அரசாங்கம் நெறிவழிமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறையில் இத்தாலிய நண்பரைக் காக்கும். ஆனால் அத்தகைய ஆரம்ப முயற்சி கண்டம் முழுவதும், குறிப்பாக இத்தாலியில், பெர்லுஸ்கோனியின் மாதிரியான ஐரோப்பாவை எதிர்ப்பவர்களை, அதாவது பெரும்பாலான மக்களை ஊக்குவித்து எழுப்பிவிடும். பேர்லினில் உள்ள சமூக ஜனநாயக-பசுமைக் கட்சி கூட்டணியோ அல்லது ஐரோப்பாவின் வேறு எந்த அரசாங்கமோ இப்படியான ஒரு பிரதிபலிப்பை கவனத்திற்குகூட எடுக்கமாட்டாது என்பதை குறிப்பிடத்தேவையில்லை. அவர்கள் பரந்து பட்ட மக்களை அணிதிரட்டும் அபாயத்தைவிட பெர்லுஸ்கோனி போன்றவர்களுடன் இணைந்து இயங்கவே விரும்புவர். இதன்விளைவு ஐரோப்பாவில் வலதுசாரிகள் தமது குரலை உயர்த்துவதுடன், ''இடது'' அரசாங்கங்கள் என கூறப்படுபவை மீது தமது திட்டத்தை திணிப்பதாகவே இருக்கும். பெர்லுஸ்கோனி இதனை நன்கு விளங்கிவைத்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவரது முழு அரசியல் வாழ்க்கையும் இப்படியான வழிமுறைகளிலேயே தங்கியிருந்தது. இந்த மோசமான ஆத்திரமூட்டல்கள், மற்றவர்கள் வழிவிட்டுவிடுவார்கள் என்ற கணிப்பீட்டிலிருந்தே ஓரளவிற்கு எழுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் உள்ள ஒரு கண்ணாடி பெர்லுஸ்கோனிக்கு முன் காட்டப்பட்ட கோழைத்தனம் குணநலன்கள் தொடர்பான பலவீனம் அல்ல. அதற்கு அரசியல் வேர்கள் இருக்கின்றன. அவர் கோடீஸ்வரரானதற்கும், செய்தி ஊடங்களின் அரசரானதற்கும் பல தற்செயலான நிகழ்ச்சிகள் காரணமாக இருந்திருக்கலாம், ஆனால், இத்தாலியிலும், இன்று ஐரோப்பிய யூனியனின் தலைமை என்பதும் தற்செயல் அல்ல. அவரை குறைகூறுவோர் ஏற்கத்தயாராக இருப்பதைவிட இது ஐரோப்பாவின் நிலைமை பற்றி கூடுதலாகத் தெரிவிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன் ஒரு கண்ணாடியை பெர்லுஸ்கோனி காண்பிக்கிறார். அனைத்து ஐரோப்பிய அரசாங்கங்களினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் அரசியல் போக்கை நிர்ணயிக்கும் கருணையற்ற சுயவிருப்பு, தடையற்ற செல்வக்குவிப்பு, எந்தச் சமூகப் பொறுப்பையும் ஏற்க விரும்பாத உளப்பாங்கு போன்றவற்றின் மிகைப்படுத்தப்பட்ட வடிவத்தையே பெர்லுஸ்கோனியின் தன்மை பிரதிபலிக்கின்றது. இத்தாலிய தத்துவமேதை கியானி வாட்டிமோ, (Gianni Vattimo) ''பெர்லுஸ்கோனி திறமை என்ற பீடத்தின் முன் சாதாரண மக்கள் அரசியல் பங்குபற்றுவதை தியாகம் செய்கின்றார். அவர் இடைவிடாமல், முதலாளி என்ற, அதாவது சொத்துஉடைமையாளர் என்ற முறையில் தன்னுடைய அனுபவத்திற்கு'' எப்பொழுதும் அழைப்பு விடுகிறார். ஆனால் ''ஒருவர் அரசாங்கத்தையோ, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்பையோ ஒரு நிறுவனத்தை நடத்துவதுபோல், ஒருவர் நடாத்த முயன்றால், அதாவது, தடையின்றி, கட்டுப்பாடுகள் அற்று, விரைவில் முடிவுகளை எடுக்கலாம்.'' வாட்டிமோவின் கருத்தின்படி இந்த நோக்கத்திற்காக பெர்லுஸ்கோனி தன்னுடைய செய்தி ஊடகத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை பயன்படுத்துகின்றார். (1) புஷ் நிர்வாகத்தோடு வெளிப்படையான சமாந்தர தன்மைகள் காணப்படுகின்றன. அமெரிக்காவில் பலரின் தோள்களில் பகிர்ந்து சுமக்கப்படுபவையான பொருளாதார, அரசியல், செய்தி ஊடக சக்திகள் இத்தாலியில் ஒரு நபரிடம் குவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பல வளர்ச்சிகளும் இதே திசையில்தான் சென்று கொண்டிருக்கின்றன. ஜேர்மனியில், பழைய Association of German Industry (BDI) தலைவரான Hans-Olaf Henkel இன் தூண்டுதலின் பேரில் Der Spiegel இதழ், ஜேர்மன் அரசியலமைப்பு மீது ஒரு நேரடித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதற்கு எவ்விதமான உண்மையான எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. ''இந்தச் சட்டத் தொகுப்புக்கள் திருத்தங்களாலும், உருவாக்க பிழைகளாலும் சீர்குலைந்துள்ளன. இது உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய சமூக, அரசியல் சீர்திருத்தங்களுக்கு தடையாக உள்ளது''. இதற்கு பொருளாதார அடிப்படையில் ஒரு பொதுவான மீளாய்வுசெய்யப்படவேண்டும். உடன்பாடு என்பது, அதாவது சமூக, அரசியல் நலன்களை சமப்படுத்துவது பெரிய அளவில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதை தவிர வேறொன்றுமில்லை. அரசியல் என்றால் துன்பத்தைக் கொடுப்பதும், துன்பத்தைக் கொடுப்பதற்குக் காரணமாக இருப்பதும்'' போன்றவைதான் அரசியலமைப்பில் இருக்கிறது என எழுதியுள்ளது. Spiegel தாக்குதலில் ''ஜனநாயகம்'', ''அடிப்படை உரிமைகள்'' போன்ற கருத்துக்களை ஒருவர் தேடினாலும் அது பிரயோசனமற்றதாகவே இருக்கும். மாறாக, ஆலோசனை நிறுவனத் தலைவர் McKinsey அரசியலமைப்பு பிரச்சினைகளில் வல்லுநராகச் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளார் --ஒரு நிறுவனத்தின் படிநிலை நிர்வாக முறையை ஜனநாயக சமுதாயத்தில் எளிதாக மாற்றிவிட முடியும் என்பதுபோல்.''2010 நிகழ்ச்சி நிரல்'' (Agenda 2010) என்று அழைக்கப்படும் திட்டத்தை ஜேர்மனிய அரசு அதே துணியைக் கொண்டே தைத்துள்ளது. இத்திட்டம் ஜேர்மன் சமூகநல அரசுச் செலவினங்களில் பெரும் குறைப்பு வேண்டும் என்றும் செல்வந்தர் மீது வரி குறைக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது. பெர்லுஸ்கோனியும், புஷ்ஷும் இதைவிடச் சிறப்பாக அதைச் செய்திருக்க முடியாது. மேற்கு, கிழக்கு ஜேர்மனிகள் இணைக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பின்னர், அனைவருக்கும் சமமான வேலை நாட்கள் கொண்ட வாரம் என்ற சாதாரண கோரிக்கை IG Metall தொழிற்சங்கத்தால் அண்மையில் கோரப்பட்டது. இது வேலைவழங்கும் அமைப்புக்கள், செய்தி ஊடகங்கள், ஜேர்மன் அரசாங்கம், தொழிற்சங்கங்களுள்ளேயே வலதுசாரிப் பிரிவு அனைத்தும் வெறியுடைய எதிர்ப்பை சந்தித்தது. இவர்கள் அனைவருக்கும் இது ஒரு முக்கிய முன்நிகழ்வாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தைக் கிழக்கிற்கு விரிவாக்கம் செய்வது, எல்லைகள் இல்லாதுபோனாலும், கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான இப்பொழுதுள்ள பாரிய ஊதிய வேறுபாடுகள் மாற்றமடையாது என்பதை அடித்தளமாக கொண்டது. எனவேதான் ஜேர்மனியில் கூடுதலான சமப்படுத்தும் கோரிக்கைகளுக்கு விட்டுக்கொடுப்பு எதுவும் இருக்கவில்லை. மேலும் Jurgen Habermas என்ற ஜேர்மன் தத்துவமேதையின் வழி நிற்கும் அறிவுஜீவிகள் தயக்கத்துடன் தயாரித்த ஒரு திட்டம், ''அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான உலக ஆதிக்கத்திற்கு ஒரு மாற்று, ''வர்க்க முரண்பாடுகளை சீர்திருத்தம் செய்வதை அடித்தளமாக கொண்ட ஐரோப்பா மூலம் அளித்தல், மற்றும் ''உலக அளவில் அரச அதிகாரத்தைப் பணிய வைத்தல்'' ஆகியவை கோபமான நிராகரிப்பிற்கு உட்பட்டது.(2) Habermas உடைய சகாவான Ralf Dahrendorf இதற்கு புகழ் மாலை சூட்டும் வகையில் கவிதையாக, ''பொறாமையுடன் போட்டியிடும் பேராசை'' ''அடங்காப் பேராசை, கொள்ளுதலுக்கும் ஆளுதலுக்கும்'' என்பதை குறிப்பிட்டார்.(3) ஜேர்மன் அரசாங்கம் உண்மையிலேயே பெர்லுஸ்கோனியை எதிர்க்க நினைத்தால், அது தனது சொந்த அரசியல் போக்கினையும் மற்றும் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையையும் எதிர்க்க வேண்டியிருந்திருக்கும். அவ்வாறு அதை செய்யவும் நினைக்கவில்லை, செய்யவும் இயலாது. இதைவிட பெர்லுஸ்கோனி தீர்க்கப்பட முடியாத சங்கட நிலைமையை அளிக்கிறார். பெர்லுஸ்கோனியின் கீழ் எந்தவொரு நீண்டகால சமூக முன்னோக்கையும் குறுகிய கால தன்னலப் போக்கிற்கு அடிபணிய செய்வது இப்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தையே அச்சுறுத்தும் மட்டத்தை அடைந்துள்ளது. ஈராக்கியப் போரில் இத்தாலி ஏனைய ஏழு ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்துகொண்டு, ஐரோப்பிய வெளிநாட்டு பொதுக் கருத்தைத் துண்டித்து அமெரிக்காவை ஆதரித்துச் சேர்ந்தது. இதையும் தவிர பெர்லுஸ்கோனி, இகழ்வான Northern League இன் தலைவர் Umberto Bossi உடன் கூட்டணியின் உள்ளார். ''பெர்லுஸ்கோனிக்கு ஆத்திரம் வந்தால், அவர் மூர்க்கம் கொள்வார். அது ஐரோப்பிய ஒன்றிணைப்பு போக்கினை பாதிக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடியான நேரத்தில் ஒரு அசைக்கமுடியாத தலைவராக அவர் இருப்பார்'' என்று Financial Times வர்ணித்தது. "அதிகபட்ச மோசமான நிலைமைகளில் அவர் புதிய கசப்பான சண்டைகள் ஏற்படக் காரணமாகிவிடுவார்". என அது மேலும் குறிப்பிட்டது. பெர்லுஸ்கோனியைச் சமாதானப்படுத்தும் எந்த முயற்சியும் வலதுசாரி, தன்னலமிக்க சக்திகளை ஊக்கப்படுத்தத்தான் உதவும். இச்சக்திகள் ஒரு நீண்ட காலப்போக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தினை அழிவிற்கு உள்ளாக்கும். எப்படிப் பார்த்தாலும் பெர்லுஸ்கோனியின் தலைமையானது, ஐரோப்பிய ஒன்றியம் ஒற்றிணையும் போக்கின் ஆழ்ந்த நெருக்கடியின் வெளிப்பாடே ஆகும். ஐரோப்பிய ஒன்றிணைவு அரசியல் ரீதியில் தேவையானதுடன் முற்போக்கானதுமாகும். இது பெரும்பாலான மக்களின் நலன்களை அதி செல்வந்தர்களின் இலாப நோக்கங்களுக்கு எதிராக நிறுத்தும் கீழிருந்து எழும் ஒரு சோசலிச, ஜனநாயக ஐரோப்பிய வடிவில்தான் உருவாக முடியும். Notes: 1. Ganni Vattimo, "Der Lugenfuchs," Süddeutsche Zeitung, July 4, 2003. 2. Jacques Derrida and Jürgen Habermas, "Our Renewal," Frankfurt Allegemeine Zeitung, May 31, 2003. 3. Ralf Dahnendorf and Timothy Garton Ash, "The Renewal of Europe," Süddeutsche Zeitung, July 5/6, 2003. |