WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
கலை
விமர்சனம்
A haunting portrait of US-backed terror in 1950s Vietnam
1950 களில் வியட்நாமில் அமெரிக்க ஆதரவில் நடைபெற்ற
பயங்கரத்தின் உள்ளத்தை உலுக்கும் சித்தரிப்பு
The Quiet American ,
இயக்கம்: பிலீப் நொய்ஸ், கிரஹாம் கிரீளின் நாவலைக் கையாண்டு எடுக்கப்பட்ட கதை
By Richard Phillips
17 December 2002
Back to screen version
The Quiet American (அமைதியான
அமெரிக்கர்), பிலிப் நொய்ஸினால் இயக்கப்பட்டு, தற்பொழுது அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் திரையிடப்பட்டுள்ளது. வியட்நாமில்
பிரெஞ்சுக் காலனித்துவ ஆட்சியின் கடைசி ஆண்டுகளில், அமெரிக்க உளவுத்துறை ஏஜென்டுகளும் அவர்களுடைய உள்ளூர் கையாட்களினதும்
இரத்தக்களறிப் பங்கைப் பற்றிய உள்ளத்தை உலுக்கும், சிந்தனையைத் தூண்டும் சித்தரிப்பாகும் இது. கிரகாம் கிரீனின்
புகழ்பெற்ற 1955ம் ஆண்டு நாவலிலிருந்து கையாளப்பட்டுள்ள இச்சித்திரம், எவ்வாறு அமெரிக்கத் ஆதரவுடனான பயங்கரவாதம்
வியட்நாமில் அமெரிக்கர் தலையீட்டிற்கு வழிவகை செய்தது என்பதைத் தக்க நேரத்தில் தெரிவிக்கிறது.
1952 சைகோன் பின்னணியில், வியட்நாமின் தேசிய விடுதலை படைகள் பிரான்ஸின் காலனித்துவ
ஆட்சியாளர்களுக்கு பெரும் தாக்குதல்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும்போது, திரைப்படத்தில் ஒரு சிக்கலான காதல்
கதையையும் கொலைப் புதிரையும் உள்ளடக்கியுள்ளது. அமெரிக்க உதவிப் பணியாளர், இளைஞர் ஒருவரின் சடலம் ஆற்றில்
கண்டுபிடிக்கப்படுவதிலிருந்து கதை ஆரம்பமாகிறது. அமெரிக்கரான ஆல்டன் பைல் (Alden
Pyle - பிராண்டன் பிரேசர்-
Brendan Fraser) கொலை செய்யப்பட்டுள்ளார். பிரெஞ்சுக்
குடியேற்றப் போலீஸ் தோமஸ் பெளலர் (Thomas
Fowler-மைக்கேல் கைன்
-Michael Caine)) என்ற ஒரு பிரிட்டிஷ் லண்டன் டைம்ஸின்
நிருபரைத் தொடர்பு கொண்டு சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு கேட்டுக்கொள்கிறது. வாழ்க்கையில்
நன்கு அடிப்பட்டு, உலகத்தை அறிந்த செய்தியாளரான அபின் பழக்க அடிமையான பெளலர், பைலின் நண்பராக முதலில்
இருந்து பின்னர் விரோதியானவர்.
விரிவான, முந்நிகழ்ந்தவற்றைக் காட்டும் வகையில் ஆரம்பமான கதை முதலில் சில மாதங்கள்
முன்பு நிகழ்ந்த பெளலரின் பைலேயுடனான முதல் சந்திப்பை கூறும் வகையில் ஆரம்பமாகி தனிப்பட்ட, அரசியல் நிகழ்ச்சிகள்
எவ்வாறு அவர்களை முதலில் ஒன்று சேர்த்தது என்றும் விரோதிகளாக பின்னர் எப்படி மாற்றியது என்பதையும் தெரிவிக்கின்றது.
புத்துணர்ச்சி ததும்பும் முகத்துடன் உள்ள பைலே, சைகோனில் வந்தவுடன் பெளலரோடு
நண்பராகிறார். நல்ல அறிவுடைய ஆனால் வாழ்க்கையில் நம்பிக்கையிழந்த செய்தியாளரான பெளலரிடம் நாட்டைப் பற்றிய
ஆலோசனையையும் தகவல்களையும் கேட்கிறார். பெளலர் தனக்கு நடந்து கொண்டிருக்கும் போரைப் பற்றிக் ''எந்த
கருத்தும்'' கிடையாது என்றும் தான் ஒரு சாதாரண பார்வையாளர் எனவும் கூறுகிறார். பைலேயோ பிரான்ஸ், பிரிட்டன்
போல அமெரிக்கா ஒரு காலனித்துவ வெறிகொண்ட நாடு அல்ல என்றும் வியட்நாமில் ஜனநாயகத்தைக் கொண்டுவர அது
விரும்புவதாகவும் கூறுகிறார்.
பின்னர் பெளலர், பைலேயுக்கு புஓவ்கை (கோ தி ஹையென்) தான் சேர்ந்து வாழும் வியட்நாம்
பெண்மணிக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். பைலே இந்த அழகிய இளம் நங்கையரிடம் கண்கட்டு வித்தைக்குட்பட்டதுபோல்
மயங்கிப்போகிறார். இதற்கிடையில் டைம்ஸிடமிருந்து பைலருக்கு லண்டன் திரும்புமாறு ஒரு தந்தி வருகிறது. புஓவ்கை
விட்டு நீங்கவும், பிரிட்டனின் தன்னுடைய தோல்வியடைந்த திருமண வாழ்விற்குத் திரும்ப மனமல்லாமலும், பெளலர் போர்
நடக்கும் வடபகுதிக்குச் சென்று வியட்நாமில் தான் தொடர்ந்திருந்து போர்ச் செய்திகளைத் தொடர்ந்து அனுப்ப முடிவெடுக்கிறார்.
பிரெஞ்சுப் படைகளுடன் Phat
Diem என்ற இடத்திற்குப் பயணிக்கும் பெளலர் இந்தப் பயங்கரப் பகுதியில்
பைலேயை சந்திக்கிறார். ஆனால் உள்ளூர் கிராமவாசிகள் படுகொலை செய்யப்படுவது கண்டுபிடிப்பதையடுத்து இந்த
வினோதமான சந்திப்பு மறந்து போகிறது. பிரெஞ்சுக் கமாண்டரும், பைலேயும் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான வியட்மின்
(வியட்கொங்கின் முன்னோடிகள்) இந்த அட்டூழியத்தைச் செய்திருக்க வேண்டுமென்று கருதுகின்றனர். பெளலருக்கு அதில்
நம்பிக்கையேற்படவில்லை.
அன்று இரவு, வடக்கே வந்தது பெளலரிடம் நேருக்கு நேர் தான் புஓவ்கை (Phuong)
காதல் கொண்டுள்ளதாகவும், அவளை சேகோன் திரும்பியதும் திருமணம் செய்துகொள்ளக் கேட்கப் போவதைத் தெரிவிப்பதற்கு
என்று பைலே ஒப்புக்கொள்கிறார். ஆனால் புஓங்கோ (Phuong)
பைலேயின் விருப்பத்தை ஏற்கவில்லை; ஆனால் சில வாரங்களில் அமெரிக்கனை பிடித்துக்கொண்டால் நல்லது என்ற தன்னுடைய
கூடுதலான அவாகொண்ட சகோதரி கொடுக்கும் அழுத்தத்தால் பைலேயுடன் வாழ்வதற்கு இடம் மாறுகிறாள்.
புஓங்குடனான தொடர்பினால் முதுமையை விரட்டும் நோக்கம் கொண்ட நொந்துபோன செய்தி
நிருபர், பைலேயைப் பற்றியும் மேலும் உதவித் திட்டத்தில் உள்ள சில நிழலுருவங்களைப் பற்றியும் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறார்.
இந்த இளம் அமெரிக்கர் ஜெனரல் தே (General Thé)
என்ற உள்நாட்டு தளபதிக்கும் மற்றைய வலதுசாரிகளுக்கும் அரசியல், பொருளாதார உதவிகளை வழங்கும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள
CIA (Central
Intelligence Agency) யின் உறுப்பினர். பிரான்சையும், வியட்நாமினையும்
எதிர்க்கும் இந்த ''மூன்றாவது சக்தி'' அமெரிக்காவால் உருவாக்கப்பட்டதுடன், வியட்நாமைக் கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவந்து இந்தோ-சீனப் பகுதியில் அமெரிக்க நலன்களை விரிவுபடுத்த முயல்கிறது.
இந்தக் கூட்டு நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு பேசாமல் இருக்க முடியாது என்று உணரும்
பெளலர் அமெரிக்க மருந்து உதவி திட்டத்தின் வழியாக வரும் இரசாயனப் பொருட்கள் குண்டுகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படலாம்
என்று கண்டுபிடிக்கிறார். இந்தச் சந்தேகம் இரண்டு கார்களிலுள்ள குண்டுகள் சைகோனின் நடுவில் வெடித்தபோது பெரும்
சோகம் தரும் வகையில் உறுதிப்படுத்துப்படுகிறது. இந்தத் பயங்கரவாதத் தாக்குதலில் பல நிரபராதிகள் கொல்லப்படுவதுடன்,
அதை பெளலர் நேரடியாகக் காண்கின்றார். இத்தாக்குதலுக்கு கம்யூனிஸ்டுகளின் மீது குற்றம்சாட்டப்படுகின்றது. இது பெளலர்
அவருடைய தனி உதவியாளரும் கம்யூனிஸ்ட் ஆதரவாளருமான ஹின் (Hinh-டிசி
மா-Tzi Ma)
இனால் ''மனிதனாக வாழவேண்டுமென்றால் இரு பக்கங்களில் ஒன்றைப் பற்றி எப்போதாவது தேர்ந்தெடுக்கவேண்டும்''
என்று கூறப்பட்ட அளவில் பைலேயை எதிர்க்கவேண்டும் என்ற முடிவிற்கு வருகிறார்.
பிரெஞ்சுக்காரர் கம்யூனிஸ்டுகளைத் தோற்கடிக்க முடியாது என்றும் போரில் ''எந்தக் கருவிகளையெல்லாம்
பயன்படுத்த முடியுமோ அவையெல்லாம் பயன்படுத்தப்பட வேண்டும்`` என்று பயங்கரத் தாக்குதலை நியாயப்படுத்த
பைலே முயல்கிறார். மேலும் இந்த குண்டு வெடிப்பைப்பு அமெரிக்கச் காங்கிரஸில் வியட்நாமில் ''கம்யூனிசத்திற்கெதிரான
போர்'' என்ற கருத்திற்கு ஆதரவு கிடைக்கும் என்றும் கூறுகிறார். இந்த விளைவினால் அதிர்ச்சி அடைந்த பெளலர்,
பைலேயின் மரணத்திற்குச் சதித்திட்டம் போடுவோருக்கு உதவ முடிவு செய்கிறார்.
The Quiet American
நிருபர் புஓங்குடன் (Phuong)
தன் உறவைப் புதுப்பித்துக்கொள்ளும் அளவில் முடிகிறது. பெளலரால் எழுதப்பட்ட தொடர் கட்டுரைகள் டைம்ஸில் வந்த
அறிக்கைகள் திரையில் தோன்றுகின்றன. 1954ல் பிரான்ஸ்
Dien Bien Phuல் தோல்வியுறும் இறுதி நிகழ்ச்சி, பின்னர் 1960
நடுப்பகுதிகளில் ஜோன் எப்.கென்னடி தலைமையில் முழு போருக்காக அமெரிக்க இராணுவ முஸ்தீபுகள் காட்டப்படுகின்றன.
நொய்சின் திரைப்படத்தில் பரிந்துரைக்கப்படுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. கதாபாத்திரங்களாக
அறிவுக்கூர்மையான கைனும், பிரேசரும் ஆற்றல் வெளிப்பாட்டுடன் நடித்துள்ளனர். கைன், இப்பொழுது 69 வயதானாலும்கூட,
சில சமயம் 50 வயது இடைவெளியுடைய Do Thi Hai Yen
உடன் இடைவெளியைக் குறைக்கப் பாடுபட்டாலும் அது ஒரு பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. சொல்லப்போனால்,
களைத்த, சிறிது சோகம் கப்பிய டைம்ஸ் நிருபர் பாத்திரத்தில் நடிப்பதற்காகவே பிறந்தவர் போல்,
தன்னுடைய நீண்ட சினிமா வாழ்வில் அரிய படைப்பு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
ஏனைய வியட்நாம் நடிக நடிகையர்கள் போல் 19 வயதான டோ தீ ஹை யென் புஓங்காக
(Phuong)
மிக அற்புதமாக நடித்துள்ளார். வியட்நாமின் காலனித்துவ சுரண்டலுக்குத் தெளிவான அடையாளக் குறியீடாக புஓங்
(Phuong)
பாத்திரம் உள்ளது. வெளிநாட்டவரால் திருமணம் செய்துகொள்வதாக உத்தரவாதம் வழங்கி பின் நட்டாற்றில் விட்டுவிடப்பட்டு,
மீண்டும் வீட்டிற்கும் திரும்ப முடியாமலும், வேறு ஒரு நாட்டில் புதிய வாழ்க்கை ஒன்றை தொடங்க முடியாமலும் உள்ள வியட்நாம்
பெண்களின் நிலைப்பற்றி அவள் கண்ணீர் மல்கியபடி பைலருக்கு விளக்கும் காட்சி மனத்தை நெகிழவைக்கிறது.
நல்ல வேளையாக நொய்ஸ் தன்னுடைய படப்பிடிப்பாளர் பல நேரமும் முறுக்குடன் இருக்கும்
கிரிஸ்டோபர் டோயிலைக் (Christopher Doyle)
கட்டிற்குள் வைத்துள்ளார். இதனால் விளைந்த திரைத்தோற்றங்கள்
வரம்பிற்குட்பட்டும் வியக்கத்தக்க அளவு நல்ல முறையிலும் அமைந்துள்ளன. ஒரு மிகச்சிறந்த ஒலி வடிவம் அவை கூடுதலான
அழகுடன் மிளரச் செய்கின்றன.
The Quiet American ஒரு
பெரிய சகாப்தத்தைக் கொண்டுவரும் முயற்சி அல்ல. ஆனால் நொய்சின் கவனமான அணுகுமுறையும் கிரினின் தலைசிறந்த
முன்கூட்டியே உணரும் தன்மையும் பெரிதும் அப்படியே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி படத்தைக் காணும்
சிந்திக்கும் பார்வையாளர் உள்ளத்தை உருக்கும் நெகிழ்வுடன் அரசியல் சக்தியும் இணைந்து நயத்துடன் வெளிப்படுதலை நன்கு
பாராட்டுவர். முக்கியமான The Quiet American
ஒரு புதிய தலைமுறையை இந்தோசீனாவில் அமெரிக்கத் தலையீட்டைப் பற்றிய வரலாற்றை ஆராயத்தூண்டி
CIA ஆதரவுபெற்ற பயங்கரவாதிகள் எவ்வாறு வியட்நாமில் செயல்பட்டனர்,
அமெரிக்க சக்திகளுடன் அவற்றின் நட்பு நாடுகள் 40 ஆண்டுகளாக இரகசிய நடவடிக்கைகளை இலத்தீன் அமெரிக்கா,
மத்திய கிழக்குப் பகுதிகள் ஆகியவற்றில் கொண்டுள்ள தொடர்புகளை ஆராய உதவும்.
சைகோன் குண்டுவெடிப்பு திரையில் எதிரொலிக்கும்பொழுதும், பைலே ''மூன்றாவது
சக்தி'' ''வியட்நாமை காப்பாற்றத்'' தேவை என்று விளக்கும்போதும், றீகன் ஆட்சிக்காலத்தில் அரசாங்கம்
தொழில்நுட்ப, நிதியுதவியை ஒசாமா பின்லேடன் போன்றோருக்கு வழங்க, அவர்களை ஆப்கானிஸ்தானில்
USSRக்கு எதிராக ''விடுதலைக்குப் போராடும் வீரர்கள்'' எனப்
பாராட்டியது நீண்டகாலத்திற்கு முன்னர் அல்ல என்பதுதான் ஞாபகப்படுத்தப்படுகின்றது.
அரசியல் தணிக்கையும், கிரீன் மீது அமெரிக்க உளவும்
The Quiet American தற்பொழுது
பிரிட்டனிலும், அமெரிக்காவில் குறைந்த அளவு நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் போன்ற இடங்களில் அகாடமி அவார்டுக்காக
வெளியிடப்பட்டாலும் கூட, முக்கிய தயாரிப்பாளர் மிராமாக்ஸ் (Miramax)
நினைத்துள்ளபடி நடந்தால் இன்னமும் தகரப் பெட்டிகளிலேயே
சுருண்டிருக்கும். 2001 நடுப்பகுதியில் முடிக்கப்பட்டுவிட்ட போதிலும் மிராமாக்ஸ் நிர்வாகிகள் அமெரிக்கா மீது
செப்டம்பர் 11 நடந்த தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு வெளியீட்டை நிறுத்திவைத்திருந்தனர்.
உலக வர்த்தக மைய தாக்குதலுக்குப் பின் எதிர்மறையான ''பார்வையாளர் சோதனை''
விளவுகளைக் கொண்டு, மிராமாக்ஸின் இணைத் தலைவர் ஹார்வே வின்ஸ்டின் (Harvey
Weinstein) நொய்சின் படம் ''நாட்டுப்பற்று இல்லாதது'' எனவும்
''அமெரிக்க ஒற்றுமையுணர்வுடன் ஒன்றாகச் செயல்பட வேண்டும்'' என்றும் வேலை புரிபவர்களாலும் நண்பர்களாலும் கூறப்படதால்
உடனடியாக வெளியீடு செய்யப்படமாட்டாது என்று அறிவித்தார். தனிப்பட்ட முறையில் ''அது கிட்டத்தட்ட இறந்துவிட்டது''
எனவும் படம் ஒருபோதும் வெளிவராது என்று நொய்சிடம் கூறப்பட்டது.
சில மாதங்களுக்குப் பிறகு, சில திரை மறைவில் கைனும், நொய்சும் நடத்திய சில நடவடிக்கைகளுக்கு
பின்னர் சில அமெரிக்க திரைப்பட விமர்சகர்கள் அது வெளியிடப்பட வேண்டுமெனக் கோரிய அளவில் மிராமாக்ஸ்
டோரன்டோ திரைப்படவிழாவில் அதைத் திரையிட ஒப்புக்கொண்டது. அது அங்கு விமர்சனத்துடன் புகழப்பட்ட பிறகுதான்
அமெரிக்கத் தயாரிப்பாளர்கள் இறுதியாகக் மட்டுப்பட்டளவில் அமெரிக்காவில் வெளியிட இசைந்தனர்.
நொய்சும், கைனும் இறுதியில் இந்த கோபமூட்டும் அரசியல் சார்ந்த தடையை உடைக்க
முயன்றபோதிலும், அவர்கள் பெற்ற கஷ்டங்கள் 1950களில் கிரீன் தன்னுடைய நூலை வெளியிட பட்ட துன்பங்களை ஒத்து
இருந்தது.
அந்த நேரத்தில் கிரீன் ''ஓர் அமெரிக்க எதிர்ப்பாளர்'' என்று பல அமெரிக்க
விமர்சகர்களால் கண்டனத்திற்குள்ளானார். அவ்விமர்சகர்கள் வேண்டுமென்றே வியட்நாமில் அமெரிக்க இரகசிய செயல்பாடுகள்
பற்றிய தன்மையை இரட்டைத்தன்மையின்றி கண்டித்த கதையை திரித்ததுடன், நிராகரித்தனர். 1956ல் நியூயோர்க்
டைம்ஸின் விமர்சனம் ஒன்று கதை ''தயார் நிலை மிகுந்த பாத்திரங்களை'' கொண்டது எனவும் கதையில் ''அனுபவமிக்க,
புத்திசாலித்தனமான கம்யூனிச எதிர்ப்பு'' இல்லை என்றும் வருத்தப்பட்டிருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜோசப் எல்.மான்கிவிக்ஸ் (Joseph
L. Mankiewicz) ஒரு ஹாலிவுட் படத்தை மைக்கேல் ரெட்கிரேவ்
(Michael Redgrave),
முன்னாள் அமெரிக்கப் போர்க் கதாநாயகன் ஆடி மேர்பி (Audie
Murphy) இவர்களை வைத்து எடுத்தார். மான்கிவிக்ஸ் இப்பொழுதைய
பைலேயின் பாத்திரத்தைத் திருத்தி குற்றமற்ற ஆனால் வீரம் நிறைந்த ஜனநாயகத்திற்காக போரிடும் அப்பாவி நபராகக்
காட்டி அமெரிக்க ஆதரவுபெற்ற தெற்கு வியட்நாம் கைப்பாவை ஆட்சியான
Ngo Dinh Diemக்கு அப்படத்தை அர்ப்பணித்தார்.
மான்கிவிக்ஸ் இகழ்வுற்ற அமெரிக்க இராணுவ எதிர்ப்புரட்சியின் கோட்பாட்டு வல்லுநரான
எட்வர்ட் ஜி.லான்ஸ்டேலுடன் (Edward G. Lansdale)
கருத்தைக் கதையின் தன்மையைப் பற்றி ஆலோசனை நடத்திய பின்னர் செய்தி ஊடகத்திற்கு ''அமெரிக்க எதிர்ப்பும்''
''கம்யூனிச அடிவருடலும்'' ''உலகம் முழுவதும் விரவியுள்ளன'' என்று தெரிவித்தார். லான்ஸ்டேல் ''மூன்றாவது
சக்தி'' கையாட்களை பிலிப்பைன்ஸிலும் வியட்நாமிலும் 1940களிலும் 1950களிலும் உருவாக்கியதுடன்,
Diemக்கு மூத்த அமெரிக்க
ஆலோசகராகவும் இருந்தார். கிரீனுடைய நூலில் பைலிக்கு ஒரு மாதிரியாகவும் இருந்தார்.
மான்கிவிசின் திரைப்படத்தை ''அமெரிக்காவிற்கான பிரச்சாரம்'' என்று கண்டித்த கிரீன்
தன்னடைய நூலைக் காத்திட பாத்திரங்கள், தேவைக்கேற்ப படைக்கப்படுதலைவிட மற்றெந்த நாவலிலும் உள்ளதைவிட
தன்னுடைய நூலாகிய The Quiet
Americanல்
கூடுதலான நேரடி இயைபு உள்ளது எனக் கூறினார். மான்கிவிசின் திரித்தல்களை ''நம்பிக்கைத் துரோகம்'' என்று
விவரித்த கிரீன் அத்திரைப்படம் ''வேண்டுமென்றே புத்தகத்தையும் ஆசிரியரையும் தாக்கும் முயற்சியைக் கொண்டுள்ளது''
என்றும் கூறினார்.
20வது நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரிட்டனின் எழுத்தாளர்களில் ஒருவரான கிரீன், நாவலாசிரியரும்,
சிறுகதை எழுத்தாளரும், நாடகாசிரியரும், திரைப்பட விமர்சகரும், பத்திரிகையாளரும் ஆவார். இவர் தொடர்ச்சியாக
50களிலும் 60களிலும் வியட்நாமில் அமெரிக்காவின் தலையீடு பற்றி வெளிப்படுத்தியதோடு கண்டனமும் செய்துள்ளார். பல
ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களுக்கும் ஆதரவை நல்கியதுடன், தொடர்ச்சியாக இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவால்
ஆதரிக்கப்பட்ட கொலைக் குழுக்களை கண்டித்துள்ளதுடன், இலத்தீன் அமெரிக்கத் தலைவர்களான கியூபா ஜனாதிபதி பிடல்
காஸ்ட்ரோ, நிகரகுவாவின் டானியல் ஒட்டேகா, சிலியின் சல்வடோர் அலென்டே, பனாமாவின் மக்கள் ஆதரவுகொண்ட
இராணுவத் தளபதி ஒமர் டோரிஜோஸ் உட்பட பலருடன் சிநேகிதபூர்வான உறவை கொண்டிருந்தார்.
1964ம் ஆண்டு லண்டன் டெய்லி டெலிகிராபிற்கு வியட்கொங் கைதிகளை தெற்கு
வியட்நாம் படையினர் சித்திரவதை செய்ததைப் பற்றி வர்ணனை செய்கையில் கிரீன் பின்வருமாறு எழுதினார்:
''பிரிட்டிஷ் அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளிவரும் சித்திரவதைப் படங்களின் புதிய வினோதமான
தன்மை என்னவென்றால், அவை சித்திரவதை செய்தவர்களுடன் ஒப்புதலுடனும் தண்டனை பற்றிய தலைப்புக்கள் கொடுக்கப்படாமலும்
வெளியிடப்பட்டுள்ளதுதான்''. அவை பூச்சி உயிரினங்கள் பற்றிய நூலிலிருந்து வெளிவந்தவைபோல் தோன்றுகின்றன. ''வெள்ளை
எறும்பு சிவப்பு எறும்புகள் மீது வெற்றிகரமான தினத்திற்கு பின் எடுக்கும் நடவடிக்கைகள்'' போன்றது.
''ஆனால் இவை எறும்புகள் அல்ல, மனிதர்களைப் பற்றியது. மேலை நாடுகள் காட்டுமிராண்டித்தனத்தை
நோக்கிய நீண்ட, மெதுவாக சரிவு சட்டென விரைவாகிவிட்டதுபோல் தோன்றுகிறது. அமெரிக்க உதவி, ஆலோசனை
இல்லாமல் புகைப்படங்களிலுள்ள இந்த சித்திரவதை செய்பவர்களுடைய இராணுவம் செயல்பட முடியாது. இது அமெரிக்க
அதிகாரிகள் சித்திரவதை செய்வதை விசாரணையின் ஒரு பகுதியாக அனுமதிக்கிறார்கள் என்று அர்த்தப்படுகின்றதா?''
அமெரிக்க உளவுத்துறை கிரீனை ''அபாயகரமானவர்'' என்று கருதியது. ஸ்ராலினிச கிழக்கு
ஐரோப்பா மற்றும் ரஷ்யாவில் அடக்குமுறை அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவருடைய சிறிய நூல்களும்,
நாவல்களும், சிறுகதைகளும் சோவியத் யூனியனில் வெளியிடக்கூடாது என்று தடை செய்யப்பட்டிருந்தும், அவரை
''கம்யூனிஸ்ட் அனுதாபி'' என்று இலக்கணம் கூறியதுடன் அமெரிக்காவுக்கு வரக்கூடாது என்றும் சில காலம் தடைவிதித்தது.
செய்தியுரிமை அடிப்படையில், பிரிட்டனின் கார்டியன் நாளேட்டிற்கு கடந்த
வாரம் கிடைத்த ஆவணங்களின் படி, கிரீன் 1950லிருந்து 1991இல் இறக்கும்வரை அமெரிக்க உளவுத்துறையின் தொடர்ந்த
கண்காணிப்புக்கு உட்பட்டிருந்தார் எனத் தெரிகிறது என எழுதியுள்ளது. இதழின்படி அமெரிக்க அதிகாரிகள் மிகக்கூடுதலான
அளவு கிரீன் மீது வேவுபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அமெரிக்கா வர அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நேரத்திலும்
அவருடைய தபால்களைப் படித்தல், அமெரிக்க தூதர்கள் மற்றைய கையாட்கள் மூலம் குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவிற்கான
அவருடைய பிரயாணங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல், அவர் கலந்துகொண்ட சர்வதேச விழாக்களை வேவு பார்த்தல்
போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தனர்.
பிலிப் நொய்சும், மைக்கேல் கைனும் மிராமாக்ஸிலிருந்து எதிர்ப்பை எதிர்பார்க்காவிட்டாலும்,
The Quiet American
வெளியீட்டிற்காக அவர்கள் பிரச்சாரம் முக்கியமானது ஆகும். அவர்களுடைய முயற்சியும்,
திரைப்படமும் அரசியல் அமைப்பு சொல்லக்கூடாது என விரும்புவதை படத் தயாரிப்பாளர்களையும், எழுத்தாளர்களையும்
நாடகப்படுத்த உற்சாகப்படுத்தும் என எதிர்பார்ப்போம். அதுதான் கிரீனுடைய நூலுக்கும், உணர்வுக்கும், அவருடைய
அடிக்கடி மறக்கப்பட்டுவிட்ட வர்ணனையான ''அரசாங்க இயந்திரத்தை எழுத்தாளர் கொஞ்சம் தீவிர முனைப்போடு நின்று
எதிர்க்கவேண்டும்'' என்பதற்கும் நாம் அளிக்கக்கூடிய மதிப்பாகும். |