World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : நேபாளம்Continuing turmoil in Nepal after king appoints new government நேபாள மன்னர் புதிய ஆட்சியை நியமித்த பின்னரும் நீடிக்கும் கொந்தளிப்பு By Vilani Peiris தனது கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக ஜூன்-4-ந்தேதி புதிய பிரதமரை நேபாள மன்னர் கயேனேந்திரா நியமித்து, சில வாரங்களுக்கு பின்னரும்கூட அந்நாட்டில் அரசியல் கொந்தளிப்பு தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை சென்ற அக்டோபர் மாதம் மன்னர் பதவி நீக்கம் செய்ததற்கு எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் கண்டனங்கள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. நாட்டின் பொருளாதார சரிவினால் சமூக அமைதியின்மை வளர்ந்துகொண்டிருக்கின்றது. போர் நிறுத்தம் தற்போது அமலில் இருந்தாலும், மாவோயிச கொரில்லாக்களுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படவில்லை. சென்ற அக்டோபரில் மன்னர் நியமித்த முன்னாள் பிரதமர் லோகேந்திர பகதூர்சந்த் (Lokendra Bahadur Chand ) பல வாரங்கள் எதிர்க்கட்சிகள் நடத்திய கண்டனப் பேரணிகளைத் தொடர்ந்து ராஜிநாமா செய்தார். ஐந்து அரசியல் கட்சிகள் -நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, நேபாள ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் (UML), நேபாள காங்கிரஸ் (NC), நேபாள தொழிலாளர் கட்சி, நேபாள மக்கள் முன்னணி மற்றும் சத்பாவனாக் கட்சி ஆகிய கட்சிகள் சந்த் ராஜிநாமா செய்யவேண்டுமென்றும், மன்னர் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என்றும், அல்லது அனைத்து கட்சிகளும் அடங்கிய இடைக்கால ஆட்சியின் தலைமையில் புதிதாக தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் கோரின. இத்தகைய கண்டனங்கள் மே மாதக் கடைசியில் சங்க் கீழிறக்கப்படும் பொழுது உச்சக்கட்டத்தை எட்டின. தனது ராஜிநாமா "தகராறுக்கு தீர்வு" காண வழிவகுக்கும் என்று கூறினார். அவருக்கு பதிலாக மற்றொருவர் பெயரைக் கொடுக்குமாறு எதிர்க்கட்சிகளை மன்னர் கேட்டுக்கொண்டார். ஆனால், எதிர்க்கட்சிகள் ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் செயலாளர் மாதவ் குமார் நேபாளை பரிந்துரை செய்த பொழுது மன்னர் அவர்களைப் புறக்கணித்துவிட்டு, அதற்குப் பதிலாக வலதுசாரி மன்னர் பரம்பரை ஆதரவு தேசீய ஜனநாயகக் கட்சி (RPP) தலைவர் தாபாவை பிரதமராக நியமித்தார். இதர கட்சிகள் தனது ஆட்சியில் இணைந்துகொள்ள வேண்டும் என்று தாபா வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அந்த வேண்டுகோளை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துவிட்டன. அதற்குப் பின்னர் எதிர்க்கட்சிகள் பல கண்டனப் பேரணிகளை நடத்தியுள்ளன. நேரடி மனனராட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றன. காத்மாண்டுவில் ஜூன் 13-அன்று 5000-க்கு மேற்பட்ட மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ``ஜனநாயகத்தை மீட்கவேண்டும்`` ``மன்னரின் பின்னடைவு நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கவில்லை`` என்பது போன்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பினார்கள். ஒரு வாரத்திற்குப் பின்னர் மற்றொரு கண்டனப் பேரணி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் அந்தக் கண்டனப் பேரணியில் கலந்துகொண்டு சென்ற ஆண்டு மன்னர் நிர்வாக அதிகாரங்களை ஏற்றுக்கொண்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஜூலை 4-அன்று கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் காத்மாண்டுவின் தேசிய நகர மண்டபத்தில் திரண்டு மன்னரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வாறு எதிர்க்கட்சிகளை அலட்சியப்படுத்தும் துணிவு தற்போது மன்னர் கயனேந்திராவிற்கு இருப்பதற்கு காரணம் அவரது நடவடிக்கைகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா ஆகியன மறைமுகமாக அங்கீகரிப்பதுதான். பிரசல்சில் இயங்கி வரும் International Crisis Group என்ற ஆய்வுக் குழு, ஏப்ரல் மாதம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "சர்வதேச சமுதாயம்" "வலுவான மன்னர் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு சிறப்பான தகுதிபெற்றவராக இருப்பார் என்ற நம்பிக்கையில்தான் அரசாங்கத்தின் அதிகரித்துவரும் ஜனநாயக விரோதத் தன்மையை" புறக்கணித்துக் கொண்டிருந்தது என்று கருத்து தெரிவித்தது. சென்ற அக்டோபர் மாதம் பிரதமராக நியமிக்கப்ட்ட பின்னர், சந்த் நேபாள - மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPN-M) பேச்சுவார்த்தைகளை தொடக்கினார். அந்த பேச்சுவார்த்தைகள் மூலம் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால், அரசியல் தீர்வு சம்மந்தமாக குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. புஷ் நிர்வாகமானது ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி எழுச்சியை நேபாள விவகாரங்களில் தனது நேரடி பங்கை அதிகரித்துக்கொள்ள பயன்படுத்திவருகின்றது. சமாதான பேச்சுவார்த்தைகளை, குறைந்தபட்சம் வாயளவிலாவது அமெரிக்கா ஆதரித்தாலும், நேபாள இராணுவத்திற்கு வாஷிங்டன் கணிசமான இராணுவ உதவியை வழங்கியுள்ளது மற்றும் மாவோயிச கிளர்ச்சிகாரர்கள் மீது அழுத்தங்களை அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. சென்ற ஆண்டு தொடக்கத்திலிருந்து அமெரிக்க அரசுத்துறை செயலர் கொலின் பவல் உட்பட, மூன்று மூத்த அமெரிக்க அதிகாரிகள் நேபாளத்திற்கு விஜயம் செய்திருக்கின்றனர். அமெரிக்க அரசுத்துறை துணை உதவி செயலர் டோனால்ட் கேம்ப் (Donald Camp) மார்ச் மாதம் வாஷிங்டனில் உள்ள வலதுசாரி ஹெரிட்டேஜ் அறக்கட்டளை கூட்டத்தில், "அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை சவால்கள் பட்டியலில்", நேபாளம் இடம் பெற்றிருப்பதாக தெரிவித்தார். CPN-M- கட்சி சமாதானப் பேச்சு வார்த்தைகளில் கலந்துகொள்ள முடிவு செய்தமை "வெளியுறவுக் கொள்கை வெற்றி" என அவர் குறிப்பிட்டார். அப்படியென்றால் அமெரிக்காவின் மிரட்டலால் ஏற்பட்ட முடிவாகும்- போர் நிறுத்தம் நீடித்தாலும், அல்லது நீடிக்காவிட்டாலும், நேபாள ஆட்சியை வாஷிங்டன் ஆதரிக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். மாவோயிச கிளர்ச்சிக்காரர்கள், பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்த பின்னரும், புஷ் நிர்வாகம் ஏப்ரல்-30-ந் தேதி, பயங்கரவாத அமைப்புக்கள் பற்றிய அமெரிக்கப் பட்டியல்களில் ஆத்திரமூட்டும் வகையில், CPN-M-யைச் சேர்த்தது மூலம் தனது அழுத்தங்களை அவர்கள் மீது மேலும், அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர், நேபாளத்தில் உள்ள அமெரிக்க தூதர் மைக்கேல் மாலினோவ்ஸ்கி "பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கும் பயங்கரவாத தாக்குதலின் சாத்தியத்தைத் தடுப்பதற்கும்" ஐந்தாண்டு ஒப்பந்தம் ஒன்றில் நேபாள உள்துறை செயலாளர் திக்கா தத்தா நிர்ராலாவுடன் (Tika Dutta Niraula) கையெழுத்திட்டார். 2002-ல் வாஷிங்டன் நேபாளத்திற்கு, 14-மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இராணுவ உதவியை வழங்கியுள்ளது. மொத்தம் 5,000-வி-16 ரக துப்பாக்கி அனுப்புகை சரக்கில் ஜனவரி மாதம் 3000- துப்பாக்கிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது. நேபாள இராணுவத்தை அரசியல் மற்றும் ஆயுதங்களின் உதவியுடன் அமெரிக்கா பலப்படுத்தி வருவதன் மூலம், பாரம்பரியமாக பெருமளவில் இராணுவத்தை நம்பி இயங்கும், நேபாளத்தின் எதேச்சாதிகார மன்னர் ஆட்சியை அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது. மாலிநோவ்ஸ்கி மே-6-ந் தேதி பிபிசி-க்கு அளித்த பேட்டியில், "நேபாளத்தில் கிளர்ச்சிகளால் நெருக்கடி தோன்றியிருப்பதால், முன்பு எப்போதும் இருந்ததை விட தற்போது நேபாளத்தில் அமெரிக்காவின் அக்கறை அதிகமாக உள்ளது" எனக் குறிப்பிட்டார். நேபாளத்தில் குழப்பம் ஏற்பட்டால் அதன் தாக்கம் இந்திய துணைக்கண்டம் முழுவதிலும் எதிரொலிக்கும் என்பதில் அமெரிக்காவிற்கு கவலையிருக்கலாம், ஆனால், நேபாளத்துடன் அமெரிக்காவிற்கு இராணுவ உறவுகள் பெருகி வருவதற்கு பிரதானமான காரணம் அந்நாடு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த எல்லை பகுதியில் அமைந்திருக்கின்றது. மத்திய ஆசிய குடியரசுகளில் அமெரிக்காவின் புதிய தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதிலிருந்து தென்கிழக்கு ஆசியா மூலம் வடகிழக்கு ஆசியாவில் அதன் சம்பிரதாயப்பூர்வ நட்புநாடுகள் - ஜப்பான் மற்றும் தென்கொரியாவரை இணைத்து சீனாவிற்கும், மத்திய ஆசியாவிற்கும் அருகாமையில் உள்ளது. சீன எல்லைகளை ஒட்டியுள்ள நாடுகளுடன் வாஷிங்டன் பல இராணுவ ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கின்றது. வாஷிங்டன் உடன் வலுவான உறவுகளை வளர்த்துக்கொண்டு வரும் இந்தியா நேபாள முடியாட்சியை ஆதரிப்பதிலும், இராணுவத்தை வலுப்படுத்துவதிலும், இந்தியா நேபாளத்திற்கு ஆதரவு காட்டி வருகின்றது. நேபாளத்தில் "பல கட்சி அடங்கிய ஆட்சிக்காக" இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி வேண்டுகோள் விடுக்கின்ற அதேவேளை, மன்னர் நியமித்த பிரதமர் தாப்பாவை அவர் பாராட்டியுள்ளார். புதுதில்லி நேபாளத்திற்கு கணிசமான இராணுவ உதவி வழங்கியுள்ளது. இந்திய இராணுவ தலைமைத் தளபதி N.C.-Mx அந்த நாட்டிற்கு சென்ற ஏப்ரல் மாதம் விஜயம் செய்து மேலும் 1.87-பில்லியன் ரூபாய்கள் உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார். மாவோயிஸ்டுகள் தரும் சலுகைகள் CPN-M தலைவர் புஷ்ப கமல் டாகல் (Pushpa Kamal Dahal) (அவரை பிரச்சந்தா என்றும் அழைப்பாளர்கள்) தாப்பா ஆட்சியுடன் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார். முந்தைய ஆட்சியைவிட, இது வேறுபட்டது அல்ல என்று கூறியுள்ளார். நேபாளத்தில் அமெரிக்காவின் தலையீடு பெருகி வருவது குறித்து கிளர்ச்சிக்காரர்கள் கவலை அதிகரித்து வருகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. அந்த அமைப்பின் துணைத்தலைவர் பாபுராம் பட்டாராய், மே மாதம், ``கார்டியன்`` பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ``அவர்கள் (அரசாங்க) படைகள் எங்களை நசுக்கிவிட முடியாது. எங்களை இராணுவ அடிப்படையில் வீழ்த்திடவிட முடியாது, ஆனால், அமெரிக்கா உலகிலேயே மிகப்பெரிய பயங்கரவாதி, எங்களை பகிரங்கமாக அச்சுறுத்தி வருகிறது. நாங்கள் அத்தகைய மோதலை தவிர்க்க விரும்புகிறோம்`` என்று குறிப்பிட்டார்.இதர மாவோயிச குழுக்களைப் போல், CPN-M-கட்சி ஸ்ராலினிச (இரண்டு கட்ட) தத்துவத்தின் அடிப்படையில் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை முதலாளித்துவ வர்க்கத்திற்கு கீழ்ப்பட்டதாக ஆக்கிவிட்டு, சோசலிசத்திற்கான போராட்டத்தை நெடுந்தொலைவு எதிர்காலத்திற்கு தள்ளிப்போட்டிருக்கின்றது. பேச்சுவார்த்தைகளில் நுழைவதில், நேபாள மாவோயிஸ்டுகள் தங்களது மட்டுப்படுத்தப்பட்ட சொந்த கோரிக்கைகளைக்கூட புறம் தள்ளிவிட்டு பகிரங்க பங்குசந்தை மறுசீரமைப்பை ஏற்றுக்கொள்ள தங்களது விருப்பத்தை குறிகாட்டியுள்ளனர். மார்ச் 13-ந்தேதி நேபாள ஆட்சியுடன் நடவடிக்கை நெறிமுறை ஒப்பந்தத்தில் CPN-M கையெழுத்திட்ட பின்னர், அக்கட்சியின் பிரதான, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவரான கிருஷ்ண பகதூர் மகரா மன்னரை ஏற்றுக்கொள்வது குறித்து தனது கட்சி ஆராயும் என்று கோடிட்டு காட்டியுள்ளார். ``மக்கள் மன்னராட்சியை ஏற்றுக்கொள்வார்களானால், அதில் பிரச்சனை எதுவும் இல்லை, ஆனால், மக்கள் மன்னராட்சியை புறக்கணிப்பார்களானால் அது, நீக்கப்பட்டாகவேண்டும்`` என்று அவர் கூறினார். ஒரு வாரத்திற்கு பின்னர், நேபாள தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் சார்பில் ``பொருளாதார புரட்சிக்கு சமாதானம்`` என்ற தலைப்பில் பெரு வர்த்தகர்கள் நடத்திய அரங்கு கூட்டத்தில் கேள்விகளுக்கு மகரா பதிலளித்தார். கட்சியின் கொள்கைகளை பகிரங்கமாக அறிவிப்பதாக உறுதியளித்தார். ``எங்களது பொருளாதார முன்மாதிரி, வலுவான போட்டியை அடிப்படையாகக் கொண்ட சுதந்திர பொருளாதாரம் , எல்லோருக்கும் சம வாய்ப்புக்கள் கிடைக்கும் களம் ஆகும்`` என்று அவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உறுதியளித்தார். ஏப்ரல் 27-ந்தேதி, முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்னர், CPN-M தூதுக்குழு ஒன்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிற்கு விஜயம் செய்ததுடன், காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியது. தங்களுக்கு மேலும் அதிக அளவில் அங்கீகாரம் தரவேண்டும் என்று தூதுக் குழுவினர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர். ``இந்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதர்களுடன் மகாரா ஒளிவு மறைவு இல்லாமலும், ஆக்கப்பூர்வமாகவும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அமெரிக்க தூதரகத்தில் அவருக்கு சரியான வரவேற்பு இல்லை`` என்று இந்திய பிரண்ட் லைன் பத்திரிகை குறிப்பிட்டிருக்கின்றது. CPN-M அணியோடு மேலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னேற்பாடுகளை செய்வதற்காக தாப்பா ஆட்சி இரண்டு காபினெட் அமைச்சர்களை நியமித்திருக்கின்றது. மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னர், ஜூலை மாத தொடக்கத்தில் சம்பிரதாய முறையில் சமரச பேச்சை தொடக்க இரண்டு தரப்பினரும் உடன்பட்டனர். ஆழமாக பெருகிவரும் பொருளாதார நெருக்கடி மற்றும், வளர்ந்துவருகின்ற சமூகப் பதட்டங்களின் பின்னணியில் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.BBC சென்ற டிசம்பரில் வெளியிட்ட செய்தி அறிக்கைகளின்படி சென்ற ஆண்டு நேபாள பொருளாதாரம் கடந்த 20 ஆண்டுகளில் எப்போதும் காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்திருந்தது. ஜூலை 2002 உடன் முடிவடைந்த 12-மாதங்களில் நேபாள பொருளாதாரம் 0.63 சதவீதமும் வீழ்ச்சியடைந்திருந்தது. மத்திய புள்ளியியல் கழகம் இந்த தகவலை தந்திருக்கின்றது. வர்த்தகம் 11சதவீதமும், உற்பத்திப் பொருட்கள் 10 சதவீதமும், சுற்றுலா 27 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளன.நேபாளத்தின் மக்கள் தொகை 23.1 மில்லியன், இவர்களில் 1.5 மில்லியன் மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் வாடிக்கொண்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களில் 47சதவீதம் பேர் அவர்களது தகுதிக்கும் குறைந்த அரைகுறை வேலைகளில் அமர்ந்திருக்கின்றனர். மே மாதம் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் 300,000 முதல் 350,000 இளைஞர்கள் வேலை தேடி வருகின்றனர், அவர்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. மத்திய கம்பளத் தொழில்கள் சங்க தலைபர், A.G.ஷெர்பா கருத்து தெரிவிக்கும்போது, கம்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள பாதி ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். 1992-ம் ஆண்டு, கம்பளத் தொழிலில் 550,000 பேர் பணியாற்றி வந்தனர். ஆடைகள் தயாரிப்புத் தொழிலில் பணியாற்றி வந்த 60,000-முதல் 70,000 தொழிலாளர்களில் பாதிக்கு மேற்பட்டோர் கடந்த சில ஆண்டுகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுவிட்டனர். நேபாளத்தில் சமூக கொந்தளிப்பு பெருகிவருகிறது. பெட்ரோலிய பொருட்களின் விலை 65சதவீதம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து மார்ச் மாதம் காத்மாண்டு தெருக்களில் கண்டனப் பேரணிகள் நடைபெற்றன. கிராமப் பகுதிகளைச் சேர்ந்த கொத்தடிமைத் தொழிலாளர்கள் ஜூன் 13-அன்று பிரதமர் அலுவலகத்தில் மனு ஒன்றைக் கொடுத்தனர். பயிர் செய்வதற்கு நிலம், குடியிருப்பதற்கு மனைகளை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தங்களது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் கண்டனப் பேரணிகளை நடத்தப்போவதாக எச்சரித்தனர். பொதுமக்களது கசப்பு உணர்வை தடுத்து நிறுத்தும் ஒரு வழியாக, CPN-M கட்சியை முன்பிருந்த அரசியல் ஸ்திரத்தன்மை நிலைக்கு கொண்டுவரும் ஒரு வழியாக ஆட்சியில் இணைத்துக்கொள்ள மன்னரும், அவரது ஆட்சியாளர்களும் எதிர்பார்க்கின்றனர். அத்தகைய அரசியல் உத்தி தோல்வியடையுமானால், அமெரிக்க மற்றும் இந்திய ஆதரவோடு வலுப்படுத்தப்பட்டுவரும் பாதுகாப்பு படைகள் மூலம் மாவோயிச கொரில்லாக்களை மட்டுமல்லாமல், பரந்த அளவிலான அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புக்களையும் ஒடுக்கிவிட தயாரிப்பில் இருக்கின்றன. |