World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈராக்US subjects Iraqi detainees to "inhuman treatment" அமெரிக்கா ஈராக்கிய கைதிகளை "மனிதத்தன்மையற்ற நடத்தைக்கு" உள்ளாக்குகின்றது By Kate Randall ஈராக்கை பிடித்துக் கொண்டுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளால் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஈராக்கியர்கள் அடிக்கடி சித்திரவதை செய்யப்பட்டு வருவதாகவும், கொடூரமான முறையில் நடாத்தப்பட்டு வருவதாகவும் பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்பு சபை ஜூன் 30ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: ''பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில்--இப்போதைய அமெரிக்க தளத்தில்-- அமைக்கப்பட்டுள்ள கிராப்பர் சென்டர் முகாமிலும் மற்றும் அபு கிரைப் சிறையிலும், காவலில் வைக்கப்பட்டுள்ள ஈராக் கைதிகளின் நிலை மிகவும் கொடூரமானது, மனிதத்தன்மையற்றது அல்லது சர்வதேச சட்டத்திற்குப் புறம்பாக இழிவாக நடாத்தப்படுகின்றனர், தண்டிக்கப்படுகின்றனர்." ஈராக்கியர்களது இல்லங்களில் அதிரடிப்படை பாணியில் சோதனைகள் நடாத்தப் பட்டுவருவதாக செய்தி மூலங்கள் தகவல்களை தந்திருக்கின்றன, அதில் குடிமக்கள் விலங்கிடப்படுகிறார்கள், முகமூடி அணிவிக்கப்படுகிறார்கள், முழங்காலில் நிற்குமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், மணிக்கணக்கில் தலைகுப்புற மண்ணில் படுக்க வைக்கப்படுகிறார்கள் மற்றும் இதர சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுகிறவர்களை குடும்பத்தைச் சார்ந்தவர்களோ, அல்லது வழக்கறிஞர்களோ, சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் என்ன என்று தகவல் தரப்படுவதில்லை. பாக்தாதில் சிறைவைக்கப்பட்டுள்ளவர்கள் "தாங்கள் கைது செய்யப்பட்டதும் மனித நேயமற்ற வகையில் அல்லது இழிவு படுத்தும் வகையில் நடத்தப்பட்டதாக மற்றும் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் அறிவித்ததாக" சர்வதேச மன்னிப்பு சபை கூறுகிறது. பிடிக்கப்பட்டவர்கள் பிளாஸ்டிக் விலங்குளால் இறுக்கமாக்க் கட்டப்பட்டனர். கைது செய்யப்பட்ட முதலாவது இரவில் கழிப்பறை வசதிகள் அனுமதிக்கப்படவில்லை மற்றும் தண்ணீரும் வழங்கப்படவில்லை என்று கைதிகள் தெரிவித்தனர். மே16 அன்று கைது செய்யப்பட்ட 31 வயது இரட்டையர்களான, உதய் மற்றும் ரஃபெட் அதல் ஆகியோரின் வழக்குப்பற்றி சர்வதேச பொது மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டிருக்கின்றது. ஈராக் தலைநகர் சூறையாடப்பட்டதைத் தொடர்ந்து பாக்தாத்தில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இறுக்கமாக விலங்கு பூட்டப்பட்ட அவர்கள், பல்வேறு முகாம்களுக்கு மாற்றிக் கொண்டேயிருந்தனர். இறுதியாக கிராப்பர் முகாமுக்கு கொண்டு வந்தனர். "அவர்கள் எங்களை விசாரணைசெய்யவில்லை மற்றும் மிருகங்களைப்போல் எங்களை நடாத்தினார்கள். முதல்வாரத்தில் குளிப்பதற்கோ துவைப்பதற்கோ எங்களை அனுமதிக்கவில்லை, போதுமான தண்ணீர் இல்லை" என்று ரஃபெட் சொன்னார். 20 நாட்கள் காவலில் இருந்த பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அச்சகோதரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக அவர்கள் அபு கிரைப் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சில கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் ஆனால் பலர் சிறையிலேயே இருந்தனர். ஜூன் 12ம் தேதி கைதிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அந்த சிறையில் பொறுப்பு வகித்த அமெரிக்க அதிகாரி அடுத்த நாள் கைதிகளின் நிலைகுறித்து தனித்தனியாக தகவல் தரப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் ஆறுகைதிகள் மட்டுமே விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்களுக்கு அவர்களது வழக்குகள் பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இதனால் கைதிகள் மற்றொரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர். இந்த எதிர்ப்புக்கு எழுந்த பதிலில் சர்வதேச மன்னிப்பு சபை எழுதியிருப்பது: ''சிறைக் காவலர்கள் கைதிகளின் தலைக்கு மேலே சுட்டார்கள். ஒரு கைதியான ஜாசிம் ஜெனரேட்டரை நோக்கி ஒரு காகிதத்தை வீசினார். அவர் முகாமிற்கு திருப்பி நடந்து வரும்போது காவலர்கள் அவரை சுட்டுக்கொன்றனர் என்று கூறிப்பிடுகிறது. ஏழு கைதிகள் காயம் அடைந்தனர்.'' ஏப்ரல் இறுதியில் கிராப்பர் முகாமிற்கு கைதிகள் வரத்துவங்கினர். முதலில் வந்த கைதிகள் திறந்த வெளியில் சுட்டெறிக்கும் வெயிலில் வைக்கப்பட்டனர். மூன்றாவது நாள் முகாம்கட்டப்படும் வரை திறந்த வெளியிலேயே இருந்தனர். ஒவ்வொரு நாளும் 4-லிட்டர் தண்ணீர் அவர்களுக்கு தரப்பட்டது. மிகக் கடுமையான வெப்பநிலையில் அது போதுமானதல்ல. "கழிப்பறைகள் தடுப்பு எதுவுமில்லாமல் திறந்த வெளியில் பூமியில் துவாரம் போட்டு அமைக்கப்பட்டிருந்தன. தோல் வியாதி பரவும் வரை குளிப்பது காவலர்களால் தடைசெய்யப்பட்டிருந்தது." என்று சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழுவினரை (IRC) மட்டும் சந்திக்க கைதிகள் அனுமதிக்கப்பட்டனர். தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கைது செய்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பது குறித்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்கப்படைகள் எந்த தகவலையும் தர மறுத்துவிட்டன மற்றும் கைதிகளை சந்திக்கவும் அனுமதிக்கப்படவில்லை. 11 வயது சிறுவன் அமெரிக்க இராணுவத்தினால் மூன்றுவாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறித்தும் சர்வதேச பொதுமன்னிப்பு சபை விசாரணை செய்துவருகிறது. ஏப்ரல்-30 அன்று வீட்டில் சோதனையிடப்பட்ட பொழுது கைது செய்யப்பட்ட, ஈராக் வர்த்தகரான 39 வயதுடைய கிரைசான் அல் அப்பாலி, எட்டு நாட்கள் வரை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தனது தூக்கத்தை கெடுத்து விசாரணை செய்ததாகவும், கையையும் காலையும், கட்டி நிர்வாணமாக குனிந்து கொண்டு நிற்குமாறு கட்டாயப் படுத்தியதாகவும், அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். அல் அபாலியை ஜூன்-20, ஜூன்-30, ஆகிய இரண்டு நாட்களிலும் அசோசியேடட் பிரஸ் பேட்டி கண்டது. ஏப்ரல் 30ம் தேதி தன்னையும், தனது 80-வயது தந்தையையும், அமெரிக்க துருப்புக்கள் கைது செய்ததாகவும் தனது சகோதரர் துரைட்டை சுட்டதாகவும் அவர் கூறினார். அமெரிக்கத்துருப்புக்களை சூறையாட வந்தவர்கள் என்று நினைத்து அவரது சகோதரர் துரைட் அவர்களை நோக்கிச் சுட்டார். பின்னர் அவரது சகோதரர் இறந்துவிட்டதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாக கிரைசான் கூறினார், ஆனாலும் தற்போது அமெரிக்கா அவரது நிலைப்பற்றி எதுவும் தெரியாது என்று கூறுகிறது என்றார். சதாம் உசேன் ஆட்சியின் முன்னணி அதிகாரியான Izzat Ibrahim al-Douri பற்றிய தகவல் அல் அபாலி குடும்பத்தினருக்கு தெரியும் என்று அமெரிக்கா கூறியது. Izzat Ibrahim al-Douri பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அபாலி குறிப்பிட்டார். எட்டு நாட்கள் விசாரணையின் பொழுது அல் அபாலி அசோசியேடட் பிரஸ்ஸிடம் "தன்னை விலங்கிட்டு, கண்ணைக்கட்டி உதைத்தார்கள், பிரகாசமான வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டிருக்குமாறு நிர்பந்தித்தார்கள். 'உரத்த கூச்சல் கொண்ட குப்பை இசையை' இரைச்சலாக ஒலிபரப்பினார்கள். "நான் சித்தத்தை இழந்துவிடப் போகிறேன் என நினைத்தேன்" என்றார் அல் அபாலி... அவர்கள் "நீ முழங்காலிட்டு இருப்பதை நான் விரும்புகிறேன்" என்றார்கள். தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு பின்னர் வலி அதிகமாகயிருந்தது. எனது முழங்கால்கள் வீங்கி விட்டன மற்றும் ரத்தம் கசிந்துவிட்டது" என்று தனது எட்டு நாள் விசாரணைபற்றி AP- நிருபரிடம் அப்பாலி தெரிவித்தார். அப்பாலி காவலில் வைக்கப்பட்டதை அல்லது அவர் நடத்தப்பட்ட விதத்தைக் குறித்து அமெரிக்க இராணுவம் எந்தவிதமான கருத்தும் கூறவில்லை, ஆனால் தூக்கத்தை கெடுப்பது இரைச்சல் அதிகம் உள்ள இசையை ஒலிபரப்புவது, கடினமான நிலைகளில் நீண்ட நேரத்திற்கு வைத்திருப்பது போன்ற நடவடிக்கைகள் சட்டப் பூர்வமானவை, ஏற்றுக் கொள்ளப்படுபவை என்று அமெரிக்க இராணுவம் தெரிவித்தது. அல்- அப்பாலியின் குற்றச் சாட்டுக்கள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு விசாரணை செய்துவருகிறது. தற்போது ஈராக்கில் உள்ள மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வாளர் சோகன்னா ப்ஜோர்க்கன் கருத்துத் தெரிவிக்கும் போது, அப்பாலி கூற்று உண்மையாக இருக்குமானால் "நீங்கள் கொடுமையாக நடத்தப்பட்டிருக்கிறீர்கள் என்பது முடிவாகும். இப்படி நடத்துவது ஜெனீவா விதிமுறைகளுக்கு முரணானது" என்று அவர் கருத்து தெரிவித்தார். அமெரிக்க இராணுவம் ஈராக்கியரது இல்லங்களில் நடத்திவருகின்ற சோதனைகள் அரபு கலாச்சார பாரம்பரியங்களுக்கு முரணானது என்று கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆயுதம் தாங்கிய வெளிநாட்டவர் அரபு இல்லங்களின் புனிதத்தை இழிவு படுத்துகின்ற வகையில் திடீர் சோதனைகள் நடாத்தி கைது செய்து வருவதாக பலர் கருதுகின்றனர். Operation Sidewinder நடவடிக்கையின் ஒரு பகுதியாக சதாம் உசேன் பிறந்த டிக்கிரிட் பகுதியைச் சுற்றிலும் அண்மை நாட்களில் இந்த திடீர் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஜூலை-1 நிலவரப்படி 180-பேரை இராணுவத்தினர் கைது செய்திருக்கின்றனர். திடீர் சோதனைகளின் போது துருப்புக்கள் குழுக்களாகச் சென்று வெளியில் உள்ள குடும்பங்களை பயமுறுத்தி வருகின்றனர். குடும்பங்களை வெளியில் நிறுத்திவிட்டு வீடுகளுக்குள் புகுந்து உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர். ஆண்களிலிருந்து பெண்களைத் தனியாகப் பிரித்து விடுகின்றனர். இது முஸ்லீம் பாரம்பரியத்தை இழிவு படுத்துவதாகும்.''லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்'' ஜூன் -27- அன்று ஷேக் கஜால் மாஹ்தி (Sheik Khazal Mahdi) இல்லத்தில் நடைபெற்ற சோதனை பற்றி தகவல்களை வெளியிட்டிருக்கிறது. நள்ளிரவிற்கு சற்று முன்னர் 1-டஜன் வாகனங்களில் சுமார் 30 அமெரிக்க துருப்புக்கள் தங்கள் வீட்டிற்கு வந்து திடீரென்று வீட்டிற்குள் நுழைந்ததாகவும், அப்போது பலர் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், ஆண்களும், பெண்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டதாகவும், மிகப்பெரும்பாலான ஆண்களுக்கு கைவிலங்கு இடப்பட்டதாகவும் சிலரது கண்ணை கட்டிவிட்டதாகவும், மாஹ்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். ''அமெரிக்கர்கள் எங்களது வீடுகளுக்குள் பலாத்காரமாக நுழைகின்றனர். அமெரிக்கர்கள் உறுதிமொழியளித்த ஜனநாயகம் எங்கே? என்று ''ஷேக் மாஹ்தி'' Times இடம் கூறினார். விடியும் வரை சோதனைகள் நடைபெற்றன. சில ஆயுதங்களை துருப்புக்கள் கைப்பற்றின, எட்டு ஆடவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உறவினர்களோடு அந்தக் குடும்பம் தொடர்பு கொள்ள இயலவில்லை. உறவினர்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் எந்த அலுவலகத்திற்கு செல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை என்று மாஹ்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அமெரிக்கத் துருப்புக்கள் 5.5- மில்லியன் தினார்களை (சுமார்-4,000-அமெரிக்க டாலர்கள்) சோதனையின்போது எடுத்துச் சென்று விட்டதாக அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அமெரிக்க இராணுவம் இப்படி ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்வது சாதாரண நடவடிக்கையாக ஆகிவிட்டது. சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் இந்தப் பணம் வந்ததாக அடிக்கடி இராணுவத்தினர் கூறுகின்றனர். ஆனால் ஷேக் மாஹ்தி குடும்பத்தினர் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சில ஆடுகளை அண்மையில் விற்றதாகவும், ஷேக் மனைவியின் மருத்துவச் செலவிற்காக அந்த பணத்தை வைத்திருந்ததாகவும், தெரிவித்தனர். பணம் சட்டப்பூர்வமாக சம்பாதிக்கப்பட்டது என்று தனிநபர்கள் நிரூபித்தால் அவை திருப்பித் தரப்படும் என்று இராணுவ அதிகாரிகள் முட்டாள்தனமான வகையில் கருத்து தெரிவித்துள்ளனர். சர்வதேச சட்டத்தை மீறும் விதமாக -- ஈராக்கில் கைது செய்யப்பட்டவர்களை சித்திரவதை செய்து முறைகேடாக நடத்தப்பட்டு வருவதுடன், எண்ணிக்கை தெரியாத அளவு சிறைக்கைதிகள் சட்டப்பூர்வ நிவாரணம் எதுவுமில்லாமல் சித்திரவதை செய்யப்படும் கொள்கையை, ஆப்கானிஸ்தானில் பல மாதங்களாக அமெரிக்கா பின்பற்றி வருகிறது. ஜூன்-21 அன்று ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கோனாரில் அசதாபாத் அருகில் உள்ள அமெரிக்கா "பிடித்து வைத்திருக்கும் இடத்தில்" ("holding facility") ஆப்கானிஸ்தான் கைதி ஒருவர் இறந்துவிட்டார். அமெரிக்க கொள்கையின் படி இராணுவ அதிகாரிகள் அந்த மனிதரின் அடையாளங்களையோ, அல்லது அவர் இறந்த விபரங்களையோ வெளியிட இராணுவ அதிகாரிகள் மறுத்து விட்டனர். சென்ற டிசம்பரில் ஆப்கானிஸ்தான் பாக்ராம் விமானத்தளத்தில் இரண்டு ஆப்கானிஸ்தான் கைதிகள் விசாரிக்கப்பட்டதில் இறந்துவிட்டனர். இவை இரண்டும் தனித்தனியாக நடைபெற்ற சம்பவங்கள்; வன்முறைகள் நிகழ்ந்ததன் உணர்வதிர்ச்சி காரணமாக இவ்விருவரும் இறந்தனர் என்று இராணுவ நோய்க்குறி ஆய்வு வல்லுநர் உறுதியாகக் கூறினர் மற்றும் இவ்விறப்புக்கள் மனிதக்கொலை என வகைப்படுத்தப்பட்டது. ஈராக்கிலும், ஆப்கனிஸ்தானிலும், கைதிகளை அமெரிக்க இராணுவம் நடாத்துகின்ற முறைகள்--தூக்கத்தை பறிப்பது, நீண்ட நாட்களுக்கு விலங்கிடுவது, சிலருக்கு மருத்துவ உதவிகளை மறுப்பது, கண்ணைக்கட்டுவது மற்றும் மணிக்கணக்கில் துன்புறுத்தும் வகையில் நிற்கச்செய்வது உட்பட--இந்நடவடிக்கைகள் ஐ.நா- உடன்படிக்கையின்படி தெளிவான சட்டவிரோத நடவடிக்கைகளாகும். சித்திரவதைக்கு எதிராக ஐ.நா- உருவாக்கிய ஒப்பந்தத்தை அமெரிக்க நாடாளுமன்றம் 1994 ம் ஆண்டு ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்க இராணுவத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளும் அனைவரையும் "பயங்கரவாதிகள்" என்ற முத்திரை குத்தி சர்வதேச சட்டத்தை இராணுவம் மீறுவதை புஷ் நிர்வாகம் நியாயப்படுத்திவருகின்றது. |