World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்கா 50 years since the execution of the Rosenbergs ரோசன்பேர்க்குகள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட 50ஆவது ஆண்டு By Peter Daniels and Bill Vann ஜூன் 19- யூலியஸ் ரோசன்பேர்க், எத்தல் ரோசன்பேர்க் ஆகியோர் சோவியத் ஒன்றியத்திற்காக உளவுபார்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட 50-ஆவது ஆண்டுகள் முடிவைக் குறிக்கும் நாளாகும். அமெரிக்க வரலாற்றிலேயே இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக விளங்கிய ரோசன்பேர்க்குகள் மீதான துன்புறுத்தலும் அரசு முன்னின்று நடத்திய கொலையும் இரத்தப் போக்கான நிகழ்வாக நெஞ்சில் நின்ற ரோசன்பேர்க்குகளின் சமகாலத்தவர்கள் பலர், இப்பொழுது மறைந்துவிட்டனர். ஆனால் இன்றளவும், உலகெங்கிலும் மில்லியன் கணக்கில் உள்ள பலருக்கும், இந்த இளையதம்பதியினரின் பெயர்கள் குளிர் யுத்தத்தை, அமெரிக்காவில் மக்கார்திய (McCarthyite) வேட்டையாடலை உலகம் தழுவிய அளவில் கம்யூனிசத்திற்கு எதிராக வாஷிங்டன் நிகழ்த்திய போர்ச்செயல்களுடன் சந்மந்தப்பட்ட அனைத்துக் குற்றங்களையும் கிளப்புகின்றன. நியூயோர்க் நகர கீழை கிழக்குப் பகுதிவாசியான, இரு சிறிய குழந்தைகளின் பெற்றோராகிய அவருக்கு 35-வயதும் அவ் அம்மையாருக்கு 37-வயதும் ஆக, இவர்களுடைய கொலைத்தண்டனையானது, தங்களுடைய முக்கிய நலன்கள் பணயம் வைக்கப்பட்டிருப்பதாக உணரும்பொழுது, அமெரிக்க ஆளும் நிறுவனம் காட்டுமிராண்டித்தன செயல்களை செய்யத்தயங்காது என்பதற்கு நிலவும் சான்றாக விளங்குகிறது. 50-ஆண்டுகள் கடந்தபின்னரும் கூட ரோசன்பேர்க் வழக்கைச் சூழ்ந்திருந்த பிரச்சனைகள், பல விதங்களிலும் தண்டனை நிறைவேற்றப்பட்ட காலத்தையும் விட இன்று கூடுதலான அளவில் கூர்மையான வகையில் பல வழிகளிலும் முன்வைக்கப்படுகின்றது. மீண்டும் ஒரு முறை, அமெரிக்க நிர்வாகமானது அதிருப்தியாளரை நசுக்கவும் செல்வம் கொழிக்கும் மேல் தட்டின் சார்பில் கட்டுப்பாட்டை செயலாற்றவும் ஒரு வழிமுறையாக, அனைத்து மக்கட் தொகையையும் அச்சுறுத்துவதை நாடிவருகிறது. பூகோள ரீதியான ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்ற மறைப்பில் US Apatrict Act என்ற சட்டத்தை அதிரடியாக இயற்றியுள்ளது. குற்றச்சாட்டு சுமத்தாமல் கைது செய்தல், விசாரணை இன்றி சிறையிலடைத்தல், தடையற்ற போலீஸ் கண்கானிப்பு ஆகிய அதிகாரங்களை எடுத்துக்கொண்ட முறையில், இது ஒரு பகுதியில் 50-ஆண்டுகள் முன் கொண்டுவரப்பட்ட McCarran Internal Security Act என்ற கம்யூனிச எதிர்ப்புச் சட்டத்தை மாதிரியாகக் கொண்டுள்ளது. அப்பொழுது போலவே, இன்றும், அரசாங்கத்தின் அச்சம் தூண்டுதலும், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களும் வெளிநாடுகளில் அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்கும் ஆக்கிரமிப்பிற்கும் பரந்த அளவில் ஏற்படும் எதிர்ப்பினை அடக்குதலைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. 1950-ல் ரோசன்பேர்க்குகள் கைதுசெய்யப்பட்டதும், 1951-ல் விசாரணையும் தண்டனை அளித்தலும் 1953-ல் அவர்களின் மரணதண்டனையும் கம்யூனிச எதிர்ப்பு வேட்டையாடல் மற்றும் மனப் பீதியின் நாடுதழுவிய பிரச்சாரத்தின் உச்சக்கட்டத்தினை பிரதிநிதித்துவம் செய்தது. ரோசன்பேர்க்குகள் கொலைக்கு 5-ஆண்டுகள் முன்பு பாராளுமன்ற Un -American Activities குழு ''கம்யூனிசக் கவிழ்ப்புத் திட்டம்'' பற்றி 84- முறை தொடர்ந்து விசாரனைகளை நடத்தியதோடு ''பெயர்களை வெளியிட" ஒத்துழைக்கத் தயாரற்ற நபர்கள் ஹாலிவுட் 10-என்று அழைக்கப்பட்ட குழு உட்பட சட்டமன்ற அவமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். மில்லியன் கணக்கில் தொழிலாளர்கள் விசுவாச உறுதிமொழிகளை எடுக்கக் கட்டாயப் படுத்தப்பட்டனர்; கூட்டாட்சியின் 15000-ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர் அல்லது ட்ரூமன் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட விசுவாச வாரியத்தால் (Loyalty boards) ராஜிநாமா செய்ய வற்புறுத்தப்பட்டனர். முக்கிய தொழில் நிறுவனங்களிலும் AFL மற்றும் CIO தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் உதவியும் ஊக்கமும் அளிக்கப்பட்டு வந்த, சிவப்பு பீதிகள், பெரும்பாலான போர்க்குணம் கொண்டிருந்த தொழிலாளர்களை ஆலைகளிலிருந்து வெளியேற்ற வைத்தது மற்றும் முதலாளித்துவ அரசுக்கும் அதன் இருகட்சி முறைக்கும் அமெரிக்கத் தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் கீழ்ப்படிதலை உறுதிப்படுத்தியது. அது தொழிலாளர் இயக்கத்தின் சீரழிவையும் மற்றும் பெருநிறுவனங்களின் துணை உறுப்பாக ஆன இன்றைய உருமாற்றத்தினையும் தொடக்கி வைத்தது. ஹாலிவுட் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் திரைப்படத்துறையில் உள்ள ஏனையோருக்கு எதிராக மட்டுமல்லாமல் தொழிலாளர்களுக்கும் எதிராக கறுப்பு பட்டியல்கள் தயாரிக்கப்பெற்றன. உள்நாட்டில் நிகழ்ந்த மக்கார்தியின் தீய வேட்டை, மிக நெருக்கமாக பூகோள எதிர்ப் புரட்சிகர வெளிநாட்டுக் கொள்கையாகத் திரும்பியது, அதில் வாஷிங்டனானது "சோவியத் ஆக்கிரமிப்பை" மற்றும் "கம்யூனிஸ்டுகளின் ஆட்சிக் கவிழ்ப்பை" எதிர்த்துப் போரிடல் என்ற பெயரில் இரண்டாம் உலக யுத்தத்தை அடுத்த புரட்சிகரப் போராட்ட அலையை நசுக்க விழைந்தது. ஆகஸ்ட் 1949-ல் சோவியத் ஒன்றியம் வெடித்த முதல் அணுகுண்டும், அதே ஆண்டு நிகழ்ந்த சீனப் புரட்சியின் வெற்றியும் அமெரிக்க ஆளும் வர்க்கம் வளர்த்திருந்த அயல்நாட்டுக் கொள்கையை நெருக்கடிக்கு உட்படுத்தியதோடு இதற்கு எவரைக் பலிகடாவாகச் செய்யலாம் -யாரைச் சீனாவின் "இழப்பிற்கு" சோவியத் ஒன்றியத்தின் (USSR) இராணுவ பலத்திற்கும் குறைகூறலாம்- என்ற வேட்டையைத் தொடக்கியது. ரோசன்பேர்க் குற்ற வழக்கின்மூலம் அரசாங்கம் தவறுதலுக்கு இடமில்லாத செய்தியொன்றை அனுப்ப குறியாய் இருந்தது. ஜூலியஸ் தான் இறப்பதற்குப் பெரிதும் முன்னதாகவே தெரிவித்தப்படி; ''இந்த மரணதண்டனை ஆச்சரியப்படுவதற்கில்லை, இதை (அவர்கள்) கொடுத்தே தீர வேண்டும். ஒரு ரோசன்பேர்க் வழக்கு நடத்தப்படவேண்டும்; அப்பொழுதுதான் அமெரிக்காவில் பீதி தீவிரம் அடைந்து கொரியப்போரை மக்கள் ஏற்கவேண்டி அமெரிக்காவில் பீதி தீவிரம் அடைய வேண்டி இருந்தது. போர் வரவு செலவு திட்டங்கள் அதிகரிக்கும் பொருட்டு பீதியும் அச்ச உணர்வும் அமெரிக்கா முழுவதும் அனுப்பப்பட இருந்தது. நீ வெறும் 5-ஆண்டுகள் காவலோ, நீதிமன்ற அவமதிப்பிற்காக ஓராண்டுகால சிறைவாசமோ பெறமாட்டாய், நாங்கள் உன்னைக் கொல்லப் போகிறோம்!'' என்ற உணர்வை ஏற்படுத்த இதயத்தின் இடது புறத்தில் ஒரு கத்திக்குத்து விழவேண்டி இருந்தது." J.Edgar Hoover விவரித்த ''நூற்றாண்டின் குற்றம்'' - ''அணுகுண்டுத் தயாரிப்பு இரகசியம்'' திருடப்பட்டு ரஷ்யர்களுக்குக் கொடுக்கப்பட்டது- என்ற ரோசன்பேர்க்குகளின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர்கள் செய்தார்கள் என்று நிரூபிக்க அரசாங்கம் முயன்றது.சமீபகாலத்தில் சில தகவல்கள் யூலியஸ் ரோசன்பேர்க் ஒரு வித உளவுச்செய்தியை சோவியத் அதிகாரிகளுக்கு இரண்டாம் உலகப்போரின்போது அனுப்பியதில் சம்பந்தப்பட்டு இருந்ததாக வெளிவந்துள்ளன. ரோசன்பேர்க்கோடு போர் ஆண்டுகளில் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறிக்கொள்ளும் சோவியத் உளவுத்துறை அதிகாரியொருவர் இந்தத் தகவல் குண்டுபற்றியது அல்ல, மின்னணுவியல் (Electronics) பற்றியதாகும் என்று தெரிவிக்கிறார். எவ்வாறாயினும் "அணுகுண்டின் இரகசியம்" பற்றி ரோசன்பேர்க் வெளியிட்டார் என்பது பார்த்த அளவிலேயே பொருத்தமற்ற அபத்தக்கூற்று ஆகும். அறிவியல் ரீதியாக பார்ப்பின் அப்படிப்பட்ட இரகசியம் எதுவும் கிடையாது. சோவியத் நாடு அணுகுண்டுத் தயாரிப்புத் திட்டம் ஒன்றை ஏற்கனவே கொண்டிருந்தது. அமெரிக்க அரசாங்கம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆகியோருக்கு அவர்கள் அத்தகைய இலக்கை அடைவது சற்று கால அவகாசத்தைப் பெறுவதை ஒட்டித்தான் என்பது நன்கு தெரியும். மன்ஹாட்டன் செயல்திட்டத்தைப் பற்றி பயனுடைய எந்தத் தகவலையும் பிறருக்கு அனுப்புவது என்றால் கணக்கிலடங்கா அறிவியல் தொடர்பான விஷயத் தொகுப்புக்களை அனுப்பும் வகையாக இருக்கும்; அம்மாதிரியான செயல் ஒன்றும் நடைபெறவில்லை; சொல்லப்போனால் ரோசன்பேர்க்குகளோ அவர்களைப் போன்ற உளவுவட்டத் தொடர்புடையதாகக் கூறப்படுவோருக்கோ, அவர்களின் திறமைக்கு அது அப்பாற்பட்ட விஷயமாகும். சதித்திட்டம் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் சோவியத் ஒன்றியம் அமெரிக்காவின் போர்க்கால நட்பு நாடாக இருந்தது, எதிரி நாடாக இருக்கவில்லை. நாஜி ஆக்கிரமிப்பிற்கு எதிராக வாழ்வா - சாவா போராட்டம் நடத்திக் கொண்டிருந்த சோவியத் ஒன்றியத்திற்கு யாரேனும் உதவிசெய்தால் அதைக் குற்றம் என்று பெரும்பாலான அமெரிக்க மக்கள் ஏற்றிருக்க மாட்டார்கள்; பலரும் சோவியத் மக்கள் நாஜிக்களால் இரத்தக்களறிக்கு உள்ளாக்கப்படுவதைப் பார்ப்பதில் மேலை அரசுகள் மன நிறைவு கொண்டிருந்தன என்று பலரும் கருதினர். ரூஸ்வெல்ட் நிர்வாகத்திற்குள்ளேயே சிலரும், அணுகுண்டுத் தயாரிக்கும் அமெரிக்க முயற்சியில் நேரடிப்பங்கு கொண்டவர்களுள் பலரும் அத்தகைய ஆயுதத்தைப் பற்றிய தகவல் சோவியத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டுமெனக் கருத்துக் கொண்டிருந்தனர்; அமெரிக்காவால் தயாரிக்கப்படும் அத்தகைய ஆயுதம் சோவியத் கலந்துகொள்ளும் பன்னாட்டு அமைப்பு ஒன்றின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட வேண்டும், அவ்வாறு செய்யாது அணுகுண்டு தகவல் மறைப்பு நிகழ்ந்தால் அது மொஸ்கோவோடு நெருக்கடியை அதிகப்படுத்தி, ஆயுதத்தயாரிப்புப் பந்தயம் ஏற்பட்டுவிடும் என்ற ஆழ்ந்த கவலையும் இருந்தது. ஆயினும், இரண்டாம் உலகப்போர் முடிந்த உடனே, குளிர்யுத்த ஆயுதத் தயாரிப்புப் பந்தயமும் தீவிரமாக தொடக்கப்பெற்றன; அதையொட்டி உளவாளிகளைத்தேடும் படலமும் தொடர்ந்தது. ஜனவரி 1950-அளவில் அரசுத்துறையின் பழைய அதிகாரி Alger Hiss, உளவுபார்த்தலுக்காக இல்லையென்றாலும் உளவுத்துறைபற்றிய குற்றச்சாட்டுக்களுக்காக பொய்சத்தியம் கூறியதற்கு தண்டனை பெற்றார். இரண்டு வாரங்கள் கழித்து பிரிட்டிஷ் இயற்பியல் (பெளதீகவியல்) வல்லுனர் Klaus Fuchs இங்கிலாந்தில் அமெரிக்க அணுவாயுத ஆராய்ச்சி பற்றி சோவியத் ஒன்றியத்திற்குத் தகவல் அளித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அதே வாரத்தில், விஸ்கான்சினுடைய செனட்டர் ஜோசப் மக்கார்தி, அரசுத்துறையிலும் ஏனைய அரசாங்க முகவாண்மையிலும் கம்யூனிஸ்டுகள் ஊடுருவல் பற்றி மிகவும் பகிரங்கப்படுத்தப்பட்ட தனது குற்றச்சாட்டுக்களுடன் ஒரு தேசிய அரசியல் புள்ளியாக ஆனார். கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதக் கட்சியென அறிவிக்கப்பட்டது; அதன் தலைவர்கள் சிந்தனைக்கட்டுப்பாடு ஸ்மித் சட்டப்படி சிறைக்கு அனுப்பப்பட்டனர் -அது பின்னர் அரசியலமைப்புக்கு முரணானது என்று அறிவிக்கப்பட்டது. இச்சட்டம் பலத்தால் அரசாங்கத்தைக் கவிழ்க்கலாம் என "ஆதரிப்பதை" தடைசெய்தது. யூலியஸ் ரோசன்பேர்க் கைது செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் கொரியப்போர் தொடங்கியது. Fuchs கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தீவிரமான புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு அமெரிக்க விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். சிலமாதங்களில் இந்த விசாரணை யூலியஸ் ரோசன்பேர்க்கிற்கு இட்டுச்சென்றது.பிரிட்டனில் சோவியத்துகளுக்கு அணுவாயுதத் தயாரிப்பு பற்றி அத்தகைய உண்மைத் தகவலை கொடுக்கக்கூடிய நிலையில் இருந்தவர்கள் மற்றும் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டவர்கள் மீது வழங்கப்பட்ட தண்டனையுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது, ரோசன்பேர்க் மீது சுமத்தப்பட்ட பொய்புனைவின் அரசியல் தன்மை தெளிவாகிறது. குண்டைப்பற்றி சோவியத்நாட்டிற்குத் தகவல் அளித்ததை ஒப்புக்கொண்ட, ஜேர்மனியில் பிறந்த பிரிட்டிஷ் விஞ்ஞானியான Fuchs, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அளவில் 9-ஆண்டுகால சிறைவாசம் அளிக்கப்பட்டது. Alan Nunn May என்ற பிரிட்டிஷ் இயற்பியல்வாதிக்கு உளவு பார்த்ததை ஒப்புக்கொண்டதற்கும் செறிவாக்கப்பட்ட யுரேனியம் பற்றி சோவியத் மேலாளர்களுக்கு கொடுத்ததற்காகவும் 6-ஆண்டுகள் சிறைவாசம் கிடைத்தது. எவ்வாறு ரோசன்பேர்க்குகள் வஞ்சகமான முறையில் சட்டத்தின் நசுக்குதலுக்கு இலக்காயினர்? அவர்களுடைய இறுதிமுடிவு பற்றி புரிந்து கொள்ள ஒருவர் அவர்களுடைய செயற்பாடுகளைத் தூண்டிய அரசியல் நம்பிக்கைகளை நாம் மீளாய்வு செய்ய வேண்டும். ஆயிரக்கணக்கான மற்ற புலம்பெயர்ந்தோர் அல்லது முதல் தலைமுறை அமெரிக்கர்கள் போல் குறிப்பாக பெரும் மந்த நிலையின் போது இருந்த நியூயோர்க்கின் புலம்பெயர்ந்த யூதரின் அனுபவம் போல்தான் அவர்களுடைய வாழ்க்கை அனுபவமும் இருந்தது. ஏழ்மை, சமத்துவமற்ற நிலை, பாசிச அச்சுறுத்தல்கள் மற்றும் ரஷ்யப் புரட்சியின் ஊக்கம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட எதெல் ஜூலியஸ் ரோசன்பேர்க் இளம் கம்யூனிஸ்டுகள் கழகத்தில் (Young Communist League) தங்கள் இளமைப் பருவத்திலேயே சேர்ந்திருந்தனர். ஆயினும், இவர்கள் அரசியல் அளவில் செயலாற்ற முற்பட்ட கலகட்டத்தின் போது, அமெரிக்கக் கம்யூனிஸ்டுக் கட்சியானது மாஸ்கோவில் உள்ள ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினால் வளர்த்தெடுக்கப்பட்ட மக்கள் முன்னணி நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டது. கட்சியானது தொழிற்சங்கங்களுக்கு உள்ளேயும் நாட்டின் அரசியல் வாழ்விலும் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்த அதேவேளை, ரூஸ்வெட்டிற்கும் அவருடைய புதிய பொருளாதார ஒப்பந்தத்திற்கும் (New Deal) திறனாய்வற்ற புகழாரத்தைக் கொடுப்பதில் ஈடுபட்டிருந்தது. போரில் அமெரிக்கா சேர்ந்தவுடன் இந்த மக்கள் முன்னணி நிலை உச்சப் புள்ளியை அடைந்தது. அமெரிக்க கம்யூனிஸ்டுக் கட்சி (CPUSA) கம்யூனிசத்தை ''இருபதாம் நூற்றாண்டின் அமெரிக்கனிசம்'' என்று விவரித்து வேலைநிறுத்தம் கிடையாது என்ற உறுதிமொழியைச் செயல்படுத்தி எந்தத் தொழிற் சங்கங்களில் அதற்கு செல்வாக்கு இருந்ததோ அங்கெல்லாம் கூடுதலான ஆர்வத்துடன் தொழிலாளர் வேலைசெய்யவும் ஊக்குவித்தது. சோசலிசத்திற்கான போராட்டம் என்ற அடிப்படையை விட ''சோவியத் ஒன்றியத்துடன் நட்பு'' என்ற அடிப்படையில் கட்சி ஆதரவைப் பெற்றது. அதே நேரத்தில், மாஸ்கோவின் ஸ்ராலினிச அதிகாரத்துவம் CPUSA- உட்பட உலகெங்கிலுமுள்ள கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை வேவு பார்க்கும் முயற்சியில் பயன்படுத்துவதற்கு சாகசமான ஆனால் அரசியலளவில் பொறுப்பற்ற முடிவு எடுத்தது, அவர்களை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் அயல்நாட்டின் ஏஜென்டுகள் என்ற கம்யூனிச விரோத குற்றச்சாட்டிற்கு உட்படுத்தி விட்டது. வேட்டையாடியோரின் அழுத்தத்திற்கு தலைவணங்காத ரோசன்பேர்க்குகளின் வீரத்தன்மை பற்றி ஐயம் இல்லை என்றாலும், CPUSA மற்றும் ஸ்ராலினிச அரசியல் குளிர் யுத்தத்தையொட்டி ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு அவர்களைத் தயார் செய்யாமல் விட்டதுடன், நல்ல முறையில் சட்ட வாதப்பாதுகாப்பிற்கு தயார் செய்துகொள்ளும் அவர்களின் திறனைக் கீழறுத்தும் விட்டது என்பதிலும் கூட கேள்விக்கு இடமில்லை. CP- க்கு நெருக்கமாக இருந்த, விசாரணையின் போது அவர்களுடைய சார்பில் வாதாடிய வழக்கறிஞர் குழு அரசியல் அளவிலான குற்றச்சாட்டுக்களுக்குத் தக்க பதில்சொல்லத் திறமையற்றது என்பதைத் தானே நிரூபித்தது. அரசாங்கத்தின் நோக்கம் தேசியவெறியையும் கம்யூனிச விரோதத்தையும் தட்டி எழுப்புவதாக இருந்தது, கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்ற நிலையோ சோசலிச கருத்துக்களை ஆதரிப்பவர் என்றாலுமே USSR- க்கு வேவுபார்ப்பவர் என்ற நிலைக்கு சமமாக்கப்பட்டுவிடக் கூடியதாக இருந்தது. அவர்களுடைய CP- உறுப்பான்மை பற்றிக் கேட்கப்பட்டதற்கு அவர்களுடைய வழக்கறிஞர்களின் ஆலோசனையின்படி ரோசன்பேர்க்குகள் ஐந்தாம் திருத்தப் பாதுகாப்பைக் கோரினர், இந்தச் சூழ்நிலைகளின் கீழ் அந்தத் தந்திரம் அரசாங்க வக்கீல்களின் வழக்குத்தொடுப்பு மற்றும் சதிக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்துவதற்கே வழிவிட்டது.தொடக்கத்தில் CP- யின் நாளேடான Daily worker இந்த வழக்கைப் பற்றித் தயக்கம் காட்டியது; இது சீக்கிரம் முடிந்துவிடும் என்று அது கருதியது. ''எந்த வகையிலும், உளவு பார்க்கும் அமைப்பில் அல்லது வடிவில் இதோடு தொடர்புடையதாக இருக்க நாங்கள் விரும்பவில்லை'' என்று நாளேட்டின் அப்போதைய ஆசிரியரான ஜோன் கேட்ஸ் (John Gates) 1991-ல் பேட்டி கண்ட ஒருவரிடம் கூறினார். ''மக்களுடைய மனத்தில் அப்பொழுது 'உளவாளி' 'கம்யூனிஸ்ட்' என்றால் ஒரே பொருளைக் கொடுத்த சொற்களாக இருந்தன. நாங்கள் மிகவும் ஏளனத்துக்கு உரியவர்களாக இருந்தோம்.'' என்றார் அவர். தண்டனைத் தீர்ப்புரை வழங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ரோசன்பேர்க்குகளுடைய உயிர்களைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உலகம் முழுவதும் நடந்த மனுக்கொடுக்கும் வழிவகையிலும், ஆர்ப்பாட்டங்களிலும், எதிர்ப்புக்களிலும் மில்லியன் கணக்கில் மக்கள் பங்கு பெற்றனர். மேல் முறையீட்டு முறைகளில் வழக்கு அமெரிக்க முறையீட்டு மன்றத்திற்கும் சென்று, கடைசியாக அமெரிக்கத் தலைமை நீதிமன்றத்தை அடைந்தது. இரண்டாம் சுற்று அதிகார வரம்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் 1952- பிப்ரவரியில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் எதிராக தீர்ப்பளித்தது. அந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கை விசாரிக்கத்தயாராக இல்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தில் நான்கு நீதிபதிகள் கடைசி நேரத்தில் மரணதண்டனைத் தவிர்ப்பு தர தயாராக இருந்தனர்; ஆனால் பெரும்பான்மைக்கு 5 நீதிபதிகள் இருக்க வேண்டும். நீதிபதி வில்லியம் ஓ. டக்ளாஸ் (William O. Douglas) கொடுத்த இடைக்காலத்தடையை நீக்க 1953-ல் நீதிமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நியூயோர்க்கின் சிங் சிங் (Sing Sing) சிறையில் அன்று இரவே இருவரும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டனர். விசாரணையின் போது அளிக்கப்பட்ட சாட்சியங்களும் வழக்கோடு தொடர்பு கொண்டிருந்த முக்கிய நபர்கள் பின்னர் வெளியிட்ட செய்திகளும் அரசாங்க வக்கீல்கள் குற்றச்சாட்டை குரூரமான அரசியல் பொய்புனைவு என அம்பலப்படுத்தி இருக்கிறது. விசாரணை நடத்திய, நீதிபதி இர்விங் ஆர். கப்மனுடைய (Irving R. Kaufman) மனப்பாங்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கெதிராக முதலிலிருந்தே நடுநிலையற்றிருந்தது புலனாயிற்று; இது பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதி பெலிக்ஸ் ப்ராங்போர்ட்டருடைய (Felix Frankfurter) சீற்றத்திற்கு உட்பட்டது. கப்மன் பல சட்ட விரோதமான செயல்களைச் செய்தாரென்றும், வழக்கை முறைகளுக்கு மாறாக அரசு தரப்பு வக்கீல்களுடன் முதலிலேயே விவாதித்தார் என்றும் குற்ற நிரூபணத்திற்கு மரணதண்டணை அளிப்பதாக அரசாங்கத்திடம் கூறினாரென்றும் பின்னர் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. இந்த உளவு பார்த்தலுக்கும் எதெல் ரோசன்பேர்க்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அனைவருமே இப்பொழுது ஏற்றுக்கொண்டுள்ளனர். அவருடைய சகோதரர் விசாரணையில் அவருக்கு எதிராக முக்கிய சாட்சியமளித்தார்; அவர் பின்னர் ஒப்புக்கொண்டுள்ளபடி தன்னுடைய உயிரைக்காக்கவும் தன்னுடைய மனைவி வழக்கில் தொடர்புடையவராகக் காட்டப்படுவதைத் தவிர்க்கவும் அவ்வாறு பொய் கூறியதாகத் தெரிகிறது. இரு சிறு குழந்தைகளின் தாய்மீது எந்தக் குற்றமும் இல்லை என்பது அதிகாரிகளுக்குத் தெரியும்; ஆயினும் அவரையும் வழக்கில் பகடைக்காயாக இழுத்தால் கணவர் வளைந்து கொடுக்கக்கூடும் என்று அவர்கள் நினைத்தனர். முடிவில் தன்னுடைய கணவனைத் துறக்கத் தயாராக இல்லை என்ற காரணத்திற்காகவும், அவர் கணவர் அரசாங்கத்தின்முன் அஞ்சி அடிபணியத் தயாராக இல்லை என்பதற்காகவும் இவர் மரணத்தைச் சந்திக்கநேரிட்டது. மரணத்தைக் கண்ணுற்றோர் ஜூலியஸ் மற்றும் அதெல் இருவரும் பெரும் மன உறுதியுடன் மின்சார நாற்காலிக்குச் சென்றனர் என விவரிக்கின்றனர். தன்னுடைய உயிரற்ற கணவரின் சடலத்தை எடுத்த பின்னர் நாற்காலியில் உட்காரும் முன்பு சிறை மேற்பார்வை பணிப்பெண்னிற்குக் கன்னத்தில் முத்தமிட்டார். எலெக்ட்ரோடுகள் (மின்வாய்கள்) இருந்த தொப்பி எதெலுடைய தலையை விடப் பெரியதாக இருந்ததால், தண்டனை நிறைவேற்றுபவர் ஐந்துமுறை மின்விசை (ஸ்விட்சை) இயக்க வேண்டியதாயிற்று. இந்தக் காட்டுமிராண்டித்தனமான அரசாங்கக் கொலையைப்பற்றி நியாயப்படுத்துகையில் நீதிபதி கப்மன் விசாரணை முடிவில் ஒரு பிற்போக்குக் கருத்தைக் கூறினார். ரோசன்பேர்க்குகள் செய்ததாகக் கூறப்படும் குற்றம் "கொலையை விட" மோசமானது என்றார் அவர். மேலும் ''ரஷ்யர்கள் கையில் அணுகுண்டைக் கொடுத்த -நம்முடைய சிறந்த விஞ்ஞானிகள் அவர்களால் இன்னும் பல ஆண்டுகள் அதைத்தயாரிக்க எடுத்திருக்கும் âனக் கூறுகின்றனர்- என்னுடைய கருத்தின்படி, உன்னுடைய நடவடிக்கை கொரியாவில் கம்யூனிச ஆக்கிரமிப்பை ஏற்படுத்தியது; அதையொட்டி 50,000-க்கும் மேலானோர் மாண்டனர்; உன்னுடைய அரசுத் துரோகத்தால் இன்னும் எத்தனை மில்லியன் கணக்கான நிரபராதிகள் மடியப்போகின்றனரோ யாரறிவார்... எங்களைச் சுற்றிலும் உன்னுடைய துரோகச்செயலின் சான்று ஒவ்வொரு நாளும் வளர்கிறது- சாதாரண மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் அணுகுண்டுத் தாக்குதலுக்கு எங்களைத் தயாராக்கி வருகின்றன'' என்றார். ரோசன்பேர்க்குகள் அவர்கள் இழைக்காத, குற்றஞ்சாட்டப்பட்ட காரணங்களுக்கு உண்மையிலேயே குற்றமிழைத்திருந்தால், தங்கள் நடவடிக்கைகளினால் மில்லியன் கணக்கில் அவர்கள் மக்களுடைய உயிரைக் காப்பாற்றியிருக்கக்கூடும் என இதைவிடப் பொருந்தக்கூடிய வாதத்தை செய்ய முடியும். சோவியத் ஒன்றியத்தின் (USSR)் அணுகுண்டுத் தயாரிப்பு உலகப்போருக்குப் பின்னரான அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கரமிப்பு உணர்வுகளுக்குப் பெரிய தடுப்பாய் அமைந்துவிட்டது. மாஸ்கோவிடம் அணுகுண்டு இல்லாமல் இருந்திருந்தால் தீவிர இராணுவ வெறியர்களான ஜெனரல் டக்ளஸ் மக்கார்தர் (Douglas MacArthur) கொரியப் போரின் பொழுதும், ஜெனரல் கூர்டிஸ் லுமே (Curtis LeMay) வியட்நாம் போரின்பொழுதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூறிய முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும். மாஸ்கோவின் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் சர்வதேசக் கொள்கை எதிர்ப் புரட்சிகரத் தன்மையை உடையதாக இருந்த போதிலும், அதன்விளைவாக ஒவ்வொரு நாடாக தொழிலாள வர்க்கம் வீழ்ச்சியைச் சந்தித்த போதிலும், சோவியத் ஒன்றியம் இருந்ததும் அதன் அணுவாயுதங்கள் பெற்றிருத்தலும் அமெரிக்க பேராசைகளுக்கு ஒரு இறுதியான தடுப்பாக இருந்தன. முழு உலகின்மீதும் தன் விருப்பத்தைத் திணிக்க தன்னுடைய கூடுதலான இராணுவ ரீதியான சாதக நடுலையைப் பயன்படுத்துதற்கான அதன் இயலாமை மீதான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் விரக்தி அதன் நச்சு வெளிப்பாட்டை ரோசன்பேர்க்குகளுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலில் வெளிப்பாட்டைக் கண்டது. சமீபத்திய வரலாறு சோவியத் ஒன்றியம் கலைந்துவிட்டதைக் கண்டுள்ளது. அதன்விளைவாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோளரீதியான முறைகேட்டுச் செயல்களைத் தடுக்க அணுவாயுதப் பதிலடி என்ற அச்சுறுத்தல் மறைந்துவிட்டது. புஷ் நிர்வாகத்தின் முன்கூட்டிய தடுப்பு போர்க் கொள்கை அறிவிப்பும் அமெரிக்க இராணுவ வாதத்தின் வெடிப்பும் மற்றொரு உலகப்போருக்கு வழிவகுக்க அச்சுறுத்துகின்றன. ரோசன்பேர்க்குகள் மரணத்திற்கு அனுப்பப்பட்ட 50-ஆண்டுகளில் ரோசன்பேர்க் வழக்கு இன்னமும் ஒரு தீவிரமான சர்ச்சைக்கு உரியதாகத்தான் இருந்து வருகிறது. குடியுரிமைகள் மற்றும் போரெதிர்ப்பு இயக்கங்கள் தோற்றுவித்துள்ள அரசியல் சூழ்நிலையில் அமெரிக்க அரசாங்கம் செய்த அரசியல் கொலைகள், புதிய தலைமுறை உழைப்பாளிகள், இளைஞர்களுக்கு உணர்வூட்டியுள்ளன. 1971-ல் E. L. Doctorow என்பவர் The Book of Daniel என்ற வரலாற்றுப் புத்தகத்தை ரோசன்பேர்க்குகளதும் அவர்களுடைய குழந்தைகளினதும் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதினார். 1983-ல் இந்நூல் திரைப்பட வடிவத்தில் வருவதற்கு டாக்டரோவ் உதவினார்; அத்திரைப்படம் சிட்னி லுமெட்டால் (Sidney Lumet) இயக்கப்பெற்று எட்வர்ட் ஆஸ்னர் (Edward Asner), லிண்சே கிரூஸ் (Lindsay Crouse), டிமோதி ஹட்டன் (Timothy Hutton), மண்டி படின்கின் (Mandy Patinkin), அமெண்டா பளம்மர் (Amanda Plummer), ஜோன் ரூபின்ஸ்டின் (John Rubinstein) ஆகிய நடிக நடிகையரைக் கொண்டதாக இருந்தது. மிகக்குறைந்த ஊதியத்திற்கே பெரும்பாலான நடிகர்கள் அதில் நடித்தனர்; Daniel படத்தில் நடிப்பதற்காக ஒரு மில்லியன் டாலர் படமொன்றில் நடிக்கவிருந்த வாய்ப்பை ஹட்டன் புறக்கணித்தார். ரோசன்பேர்க்குகளின் மகன்களான மைக்கேலும் (Michael) ரொபேர்ட் மீரோபோலும் (Robert Meeropol) அயர்வின்றி தம் பெற்றோரின் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளனர். 1957-ல் அபெல், ஆன் மீரோபோல் என்ற தம்பதிகள் இவர்களை தத்து எடுத்துக்கொண்டனர். அபெல் மீரோபோல் லிவிஸ் அலன் என்ற பெயரில் ''Strange Fruit" என்ற புகழ்பெற்ற பாடலை இயற்றி இசையமைத்தார், இப்பாடல் ஆபிரிக்க அமெரிக்கர்களை தெற்கு அமெரிக்காவில் அடித்து உதைத்துக் கொல்லுதலுக்கு எதிராக இயற்றப்பட்டதாகும். மீராபோல் சகோதரர்கள் "நாங்கள் உங்கள் மகன்கள்" என்ற நூலை தங்கள் அனுபங்களை விளக்கும் வகையில் எழுதியுள்ளனர். இன்னமும் தொடர்ந்து உரையாற்றி வரும் அவர்கள் அரசியல் கைதிகளின் குழந்தைகளுக்கு உதவ Rosenberg Fund for Children என்பதைத் தொடக்கியுள்ளனர். இந்த அமைப்பு நியூயோர்க் நகரத்தில் ஜூன் 19-ம் நாள் நினைவு நாள் நிகழ்ச்சி ஒன்றிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட 50-ஆண்டு நிறைவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மறுபுறம், பழைய ஸ்ராலினிச மற்றும் முன்னாள் தீவிரவாதிகள் இவர்களின் குழு ஒன்று இந்த வழக்கை அரசியல் பிற்போக்கிற்கு தங்களின் சொந்த அமைதியைப் பேணுதற்கான ஒரு வாகனமாகப் பயன்படுத்தி இருக்கிறது. இவர்களுள் மிக முக்கியமானவர், 1983-ல் வெளிவந்த The Rosenberg file என்ற புத்தகத்தின் சக ஆசிரியர் ரோனால்ட் ராடோஷ் என்பவர் ஆவார். அரசாங்கத்தின் கோப்புகளையும், அரசாங்கத் தரப்பு வாதங்களையும் ஆதாரமாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட இந்நூலில் ரோசன்பேர்க்குகளின் குற்றத்தை நிரூபிக்கப்பார்க்கும் அளவில் தன்னுடைய இடது சாரிப் பழைய வாழ்விற்கு பரிகாரம் தேட முற்படுகிறார். 2001-ல் வெளிவந்த நினைவுநூலான Commies என்னும் அவருடைய புத்தகம் குடியரசுக் கட்சி வலதுசாரியால் செயலூக்கத்துடன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ராடோஷ் தன்னுடைய பாதையின் போக்கை அதனுடைய தர்க்கரீதியான பரிதாபமான முடிவிற்குக்கொண்டு செல்கிறார்: ''இடதுசாரி தவறாக இருந்தது ரோசன்பேர்க் வழக்கில் மட்டுமல்ல, கிட்டத்தட்ட எல்லாவற்றிலுமே ..... முழு சோசலிச செயல் திட்டமும் தவறு'' என்கிறார். அரசியல் கூறுகளான ராடோஷ் போன்றோர் வலதுசாரி நிலையில் அணிசேர்ந்து நிற்க, சோவியத் அதிகாரத்துவங்களின் குற்றங்களைச் சுரண்டுவதில் சிறப்பு முயற்சி எடுக்கின்றனர்- அவற்றுள் பெரும்பாலானவற்றை பலர் முன்பு ஆதரித்து இருந்தனர்--. அதேவேளை அரசியற் பிற்போக்கிற்கு அஞ்சி அடிபணிய மறுப்பவர்களை இழிவுபடுத்துகின்றனர். ஜனநாயக உரிமைகளை உண்மையில் ஆதரிப்பவர்கள் அனைவரும், எவ்வாறு அவர்கள் 1887-ல் தூக்கிலிடப்பட்ட ஹேமார்க்கட் தியாகிகளை, மற்றும் 1927-ல் மரணதண்டனைக்கு உள்ளான சாக்கோ மற்றும் வண்செட்டி ஆகியோரை மதிக்கிறார்களோ, அதேபோல் ஜூலியஸ், எதெல் ரோசன்பேர்க்குகளின் நினைவையும் பாதுகாத்து வருகின்றனர். சோசலிச இயக்கத்தைப் பொறுத்தவரையில் பிரச்சனை அவர்கள் USSR க்கு உதவினரா என்று என்றுமே இருந்ததில்லை. தொடக்கத்திலிருந்தே இவ்வழக்கு அதன் தன்மையில் மாறவில்லை --உள்நாட்டில் அடக்குமுறை மூலமும் அயல்நாடுகளில் ஆக்கிரமிப்பு போர்களின் மூலமும் அதன் செல்வத்தையும் அதிகாரத்தையும் காப்பாற்ற உறுதியாக இருக்கும் ஆளும் மேல்தட்டின் நலன்களை மேலும் முன்னெடுக்க அரசியல் பொய்புனைவுகளால் பலியானோர் தியாகம் செய்யப்பட்டனர். |