World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்கா US political life 227 years after the Declaration of Independence சுதந்திரப் பிரகடனத்திற்கு 227 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க அரசியல் வாழ்வு By The Editorial Board தன்னுடைய தோற்றத்தின் புரட்சியின் ஆண்டு விழாவை, அமெரிக்கா அதன் சமூக பொருளாதார அடித்தளங்கள் நெருக்கடிக்குட்பட்ட நிலையிலும், நாட்டின் அரசியல் வாழ்வு செயலிழந்த நிலையிலும் எதிர்கொள்ளுகிறது. செய்தி அறிக்கைகளின்படி கொடிகளை அசைத்து உயர்த்தி தாய்நாட்டின் புகழை உரக்க ஒலித்திடும் சொற்கள் அலங்காரத்திற்கிடையே, ஜூலை 4ம் தேதிக் கொண்டாட்டங்கள் மத்திய, மாநில அரசாங்கங்களைப் பீடித்துள்ள மிகப்பெரிய வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறைகள் நிலையில் நாடு முழுவதிலும் ஆங்காங்கு அதிகாரிகளை அரிதாகக் கிடைக்கும் பணத்தில் வாணவேடிக்கைகளுக்கு செலவழிப்பதற்கு ஒரு முறைக்கு இருமுறையாகச் சிந்தித்துச் செலவிடும் நிலையை ஏற்படுத்தியுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக நாளாந்தம் அமெரிக்க, ஈராக்கிய உயிரிழப்புக்களை உருவாக்கும் ஒரு காலனித்துவ ஆட்சியை ஈராக்கில் அமெரிக்கா உருவாக்குவதற்கான நிலைமையில், அதற்கு எதிரான ஒரு போராட்டத்தின் மத்தியில் அமெரிக்க விடுதலை தினம் ஒரு வெற்றுத்தன்மை சூழ்ந்ததாக உள்ளது. இந்தச் செயற்பாட்டைக் குறித்த அதிருப்தி உறுதியாக வளர்ந்துவருகையில், தற்பொழுதுள்ள அரசியல் கட்டமைப்பினுள் அவ் அதிருப்தி எவ்வித வெளிப்பாட்டையும் காணமுடியாது. அமெரிக்க அரசியல் வாழ்வின் நிலை பற்றிக் கவனத்துடன் ஆழ்ந்த சிந்தனையை மேற்கொள்ளவேண்டிய தக்க தருணம்தான் ஜூலை நான்காம் நாளாகும். இந்த நாள் சுதந்திர பிரகடனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நாளை குறிப்பதுடன், இவ் ஆவணம் அதற்கு முந்தைய பத்து ஆண்டுகளாக நடந்த காலனித்துவத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்துடன், புதிய நாட்டின் தோற்றம் பிரகடனப்படுத்தப்பட்டது. இத்தகைய ஆவணத்தைத் தயாரித்துக் கையெழுத்திட்டவர்கள் அக்காலத்தில் மிக அஞ்சாமையும், மிகவும் புத்திசாதுரியமுமானவர்களுமாவர். அவர்களது பிரகடனம் முக்கியமான ஜனநாயக கொள்கைகளையும், ''அனைத்து மக்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர்'' என்ற ''சுய சாட்சியமான உண்மைகளையும்'', கொடுங்கோன்மை நிறைந்த, தம்மை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசாங்கத்தை புரட்சியின் மூலம் தகர்த்து எறியவும் உரிமை உண்டு என்ற அவர்களிடமிருந்து பிரிக்க முடியாத உரிமைகளைக் கொண்டவர்'' என்ற கருத்துக்கள் முழக்கப்பெற்று வெளிவந்தது. பிரிட்டிஷ் முடியாட்சியின் தவறான போக்கை முழுமையாக விவரித்த இந்தப் பத்திரம், நாடெங்கிலும் நகரச் சதுக்கங்களில் உரக்கப் படிக்கப்பட்டதுடன், பொது இடங்களில் ஒட்டப்பட்டதன் மூலம் பொது மக்களின் பரந்த தட்டினர் மத்தியில் நன்கு அறியப்பெற்றது. இதே ஆண்டில் வெளியிடப்பட்ட முடியாட்சியைக் கண்டித்து, காலனித்துவ அடக்குமுறைக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபடத் தூண்டிய தோமஸ் பைனின் (Thomas Paine) புகழ்பெற்ற 'பொது உணர்வு' (Common Sense) என்ற துண்டுப் பிரசுரம் மூன்று மில்லியனுக்கும் குறைவான மக்கள் வாழ்ந்த நாட்டில் அரை மில்லியனுக்கு மேலான விற்கப்பட்டது. ஒரு முதலாளித்துவ புரட்சி என்ற அதனது சகல வரம்புக்கு உட்பட்ட தன்மையின் மத்தியிலும் 1776ம் ஆண்டுப் போராட்டம் புதிய சகாப்தத்திற்குரியதும், முக்கியமாக விடுதலைக்கான உலக நிகழ்ச்சி ஆகும். இது உயர்ந்த அரசியல் நனவு மட்டத்திலானதும், அமெரிக்க மக்களில் பரந்த பகுதினர் பங்குபெற ஒரு நிகழ்வாகும். 227 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அரசியல் வாழ்வின் நிலை என்ன என்பது? ஒரு பொருத்தமான வினாத்தான். தற்போதைய நிலைமை தொடர்பான ஒரு மேலோட்டமான ஆய்வு நாட்டு மக்கள் அரசியல் வாழ்வில் பங்குபெறும் முறையில் அதிர்ச்சியூட்டும் சரிவையும், அதைவிட அரசியல் தலைவர்களின் மாபெரும் திறனின் சரிவையும் எடுத்துக்காட்டுகின்றது. இன்று அமெரிக்க மக்கள் எதிர்கொண்டுள்ள எந்தப் பெரிய சிக்கலான பிரச்சினைகளும் ஒரு தீவிரமான பொதுவிவாதத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை. ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட போர் முடிந்து இரண்டு மாதங்களாகிவிட்ட பின்னரும் ஒவ்வொருநாளும் இரத்தம்தோய்ந்ததாகி கொண்டிருக்கின்ற யுத்தமோ அல்லது 6.5% எட்டும் வேலையின்மைப் பிரச்சினையைப் பற்றியோ அல்லது சுகாதார நலத்திட்டங்களின் நெருக்கடி பற்றியோ அல்லது பெரும்பாலான ஓய்வூதிய காலம் வந்தவர்களுக்குக் ஓய்வூதியம் இல்லாது பற்றியோ பேச இயலாது. ஈராக்கிற்கு எதிராகத் தூண்டுதலின்றி சட்ட விரோதமான போரை நடத்த உளவுத்துறை அறிக்கை திட்டமிட்டு புஷ் நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டதா என்பது பற்றி காங்கிரஸ் விசாரணை விரிவாக்கப்பட வேண்டும் என்ற இரண்டு தீர்மானங்கள் குடியரசு கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் பிரதிநிதிகள் சபையில் சத்தமின்றி ஒதுக்கப்பட்டுவிட்டன. இவ்விசாரணை ஆழ்ந்த முறையில் செய்யப்பட வேண்டும் என்பதை மறுத்தது பற்றி ஜனநாயகக் கட்சியின் தலைமை எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. காங்கிரசின் உளவுத்துறை குழுவின் உறுப்பினரும், ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினருமான ஜேன் ஹார்மன் (கலிபோர்னியா ஜனநாயகக் கட்சி) ஜனாதிபதி காங்கிரசிடத்தும், மக்களிடத்தும் பொய்யுரை கூறினாரா என்ற ''இரு கட்சியினரின்'' விசாரணை அணுகுமுறையை கவனத்திற்கு எடுக்காது தடுக்கும் நடவடிக்கையை எதிர்த்ததாக கூறியுள்ளார். இதையொட்டி இத்தீர்மானத்தைப் பற்றிய முடிவு, ஒரு உத்தியோகபூர்வமான கண்துடைப்பினை தொடர்ந்து மூடிய கதவுகளுக்குள் நடைபெறும் சில விவாதங்களும், விசாரணைகளுமாகவே இருக்கும். இத்தகைய உறுதியற்ற மற்றும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அமெரிக்க அரசியலைப் பார்க்கும்பொழுது, பிரிட்டனின் எதிர்மறையாக ஜனநாயக முறை தழைத்துச் செழிக்கும் முறையாக தோன்றுகிறது. பிளேயர் தன்னை உறுதிப்படுத்தவேண்டும் என்ற அழுத்தத்தின் முன், தொழிற்கட்சி பிரதம மந்திரி டோனி பிளேயரின் அரசாங்கம் ஈராக்கின் மீது தாக்குதல் நடத்த பொய்யுரைகள் கூறினாரா என்பது பற்றிய பாராளுமன்றத்தின் வெளிநாட்டு விடயங்களுக்கான குழுவால் நடாத்தப்படும் பொது விசாரணைகள் வாக்குமூலங்களையும் சாட்சிகளையும் ஆராய்கின்றன. மிகுந்த வெடிப்புமிக்க இன்றைய அரசியல் பிரச்சினை என்று விவாதிக்ககூடிய பிரச்சனையை வாஷிங்டன் கையாளும் முறை, எல்லா நடைமுறை அளவிலும் செயலற்றுப் போய்விட்ட அரசியல் அமைப்புமுறையின் நிலைமைக்கு அடையாளமாக உள்ளது. புஷ் நிர்வாகத்தின் கொள்ளையடிக்கும் சமூக, இராணுவக் கொள்கைகள் செயலாக்கப்படுவதற்கு இப்பொழுதுள்ள இரு கட்சி முறை மாற்று எதனையும் வழங்காதது மட்டுமல்லாது, அமெரிக்க மக்களை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை ஒவ்வொன்றைப் பற்றியும் மற்றும் தமது நலன்கள் ஆபத்துக்கு உட்பட்டுவிடக்கூடிய விடயங்களை விவாதிப்பதை உத்தியோகபூர்வமான முழு அரசியல் கட்டுமானமும் செய்தி ஊடகமும் முழுமையாக ஒதுக்கிவிட்டன. நிதி ஆதிக்கக் குழுவின் முக்கிய பிரிவுகளின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட குடியரசுக் கட்சியின் வலதுசாரிப் பகுதி அச்சுறுத்தும் வகையில் ஒரு அரசியல் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்து விட்டதுடன், இதை ஒரு முதுகெலும்பற்ற ஜனநாயகக் கட்சியும் ஏற்றுக்கொண்டுவிட்டது. இதற்கிடையில் செய்தி ஊடகமோ வெள்ளை மாளிகை, பென்டகன் இவற்றின் பிரச்சாரங்களை எதிரொலித்து முழக்கும் வகையில் காற்றலைகளில் மாசு ஏற்படுத்தும் அளவிற்கு திடுக்கிடும் கொலை வழக்குகள், கடத்தல்கள், முடிவற்ற 'தனிமனித நலன்' என்ற பெயரிலான கதைகள் ஆகியவற்றைச் செய்தி என்ற பெயரில் வெளியிட்டு மக்கள் கருத்தை எந்தளவிற்கு நெரிக்க முடியுமோ அந்த அளவு நெரிப்பதில் ஈடுபட்டுள்ளன. ''பேசக்கூடாத விஷயங்களின்'' பட்டியல் புஷ் நிர்வாகத்தில் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே போகிறது. முதலில் புஷ் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதே சட்டத்திற்குப் புறம்பான வழிவகையாகும். வாக்குகள் நசுக்கப்பட்டு, நீதிமன்ற ஆணைப்படி அவர் ஆட்சியில் அமர்த்தப்பட்ட நிலையில், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படாத அமெரிக்க ஜனாதிபதியின் நிலை பொது விவாதத்திற்கு பொருத்தமற்ற விடையமாகும். இதன்பின் நியூயோர்க் நகரத்திலும், வாஷிங்டனிலும் நிகழ்ந்த செப்டம்பர் 11 பயங்கரவாதிகள் தாக்குதல்களை தொடர்ந்து இதனை காரணங்காட்டி அனைத்து நெறிகளும் ஒதுக்கித்தள்ளப்பட்டு நிர்வாகம் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டதுடன், வெளிநாடுகளில் முன்னொருபோதும் இல்லாதளவில் இராணுவ ஆக்கிரமிப்புப் போர்களைத் தொடங்கியது. அடுத்ததாக, புஷ் தொடர்ந்தும் ஏமாற்று முறையினாலும் இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புக்களைக் காரணம் காட்டி தன்னுடைய கொள்கைகளை நியாயப்படுத்தும் அளவில், அவருடைய நிர்வாகமோ அன்று என்ன நடந்தது என்பது பற்றி முக்கியமான தகவல்களை மூடிமறைக்கும் முயற்சிகளையும் மற்றும் தாக்குதல்களுக்குப் பல மாதங்கள் முன்னர் தனது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் பேச மறுக்கவும் செய்கிறது. இதற்கிடையில் செய்தி ஊடகம் இத்தாக்குதல்கள் பற்றி சுயாதீன விசாரணைக்குழு என்படுவதின் ஆராயும் வேலைகளை தெளிவாகப் புறக்கணித்துவிட்டது. அமெரிக்கப் பெருநிறுவன, நிதிநிறுவன உயர்மட்டங்களில் மலிந்து பெருகியுள்ள பரந்த அளவிலான ஊழல் பற்றி உண்மையான விவாதங்களைக் காண்பதற்கில்லை. என்ரோனின் கென்னத் லே (Kenneth Lay) முதல் ஹாலிபர்ட்டனின் (Halliburton) செனி வரை நடத்திய இரட்டை குற்றச்செயல்கள் எவ்வாறு வேலைகளை அழித்தது மற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் சேமிப்புக்களை கபளீகரம் செய்தது பற்றிய நிகழ்ச்சிகளில் நெருங்கிய தொடர்புடையவர்களாகக் கருதப்படும் புஷ் நிர்வாகத்தின் நெருக்கமானவர்களைப் பற்றியும் விவாதங்கள் இல்லை. ஜனநாயக அடிப்படை உரிமைகளின் மீதான தாக்குதல் அரசியல்வாதிகளாலும், செய்தி ஊடகத்தாலும் குறிப்பிடப்படுவதேயில்லை. ஒருவர் கிரெடிட் கார்ட் (credit card) மோசடி செய்ததாகவும், FBI இடம் பொய் சொன்னக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டு நீதிமன்ற விசாரணை பாதியில் இருக்கும் அளவில், கடந்த வாரம் புஷ் நிர்வாகம் அதை நிறுத்திவைத்து அந்த நபரை நாட்டின் விரோதி, எதிரி இராணுவத்தை சேர்ந்தவர் என்ற குற்றத்தைச் சுமத்தி, விசாரணையும் இல்லாமல், குற்றச்சாட்டுக்கள் தாக்கலும் செய்யாமல், வழக்கறிஞர் வசதியும் கொடுக்காமல் இராணுவ விசாரணைக்குட்படுத்துவதற்காகக் காலவரையறையின்றி சிறையில் தள்ளியுள்ளது. அமெரிக்க நிறுவக அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதல் நடாத்தும் இப்படியான வழக்குகள் பற்றி காங்கிரசில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படுவது இல்லை. இது தொடர்பாக செய்தி ஊடகம் Laci Peterson வழக்கில் காட்டும் அளவில் 1% கூட இப்படிப்பட்ட வழக்கில் காட்டாமல், மக்களுடைய கவனத்தை மட்டமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கொண்டு செல்கின்றது. இறுதியாக, பெருகி வரும் மறுக்கமுடியாத ஆதாரங்களிருக்கும் அளவில், ஈராக் போரில் தன்னை வெள்ளை மாளிகையில் இருந்த உதவி சில பெருவர்த்தக, பெருநிதிய நிறுவனங்களின் நலன்களுக்காக இல்லாத ''பேரழிவு ஆயுதங்கள்'' இருப்பதாக இட்டுக் கட்டுப்பட்ட பொய்யுரைக் காரணங்களைக் காட்டி புஷ் நிர்வாகம் போரை ஆரம்பித்து நடத்தியது. செய்தி ஊடக வல்லுனர்கள், மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுவிட்ட சுயநலன்களுக்காக நடத்தப்படும் போரில் பொய் கூறப்பட்டோமோ அல்லது ஒவ்வொரு நாளும் அமெரிக்க வீரர்கள் சொல்லப்படுகிறார்களா என்பதைப் பற்றிய அக்கறை மக்களுக்கு இல்லை என்று தெரிவிக்கிறார்கள். இது ஒரு பொய். இப்போரை நடத்துவதற்கு வேண்டுமென்றே நடத்தப்பட்ட ஏமாற்றுதல் முறையைப் பற்றி மக்களிடையே கொந்தளிப்பு உள்ளது. எண்ணெய் பெருநிறுவனங்களும் Halliburton போன்ற அமைப்புக்களும், வெள்ளை மாளிகையோடும், பென்டகனோடும் நெருங்கிய தொடர்புகொண்ட கிரிமினல்களும் ஈராக்கிய வளத்தைக் கைப்பற்றித் தம் ஆதாயத்தைப் பெருக்குவதற்காக தொழிலாள வர்க்கத்தின் இளைஞர்கள் இராணுவச் சீருடையில் பலியாக்கப்படுவதற்கு மக்களிடையே கோபம் உள்ளது. ஆனால் இப்பொழுதுள்ள அரசியல் அமைப்பில் இந்தக் கோபத்திற்குத் தக்க வடிகால் இல்லை. ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி தலைமைக்கான வேட்பாளர்கள் நடத்தும் வலிமையற்றப் பிரச்சாரத்தில் இதைப் பற்றிப் பேசப்படுவது இல்லை. பெருநிறுவன ஆதிக்கத்திற்குட்பட்ட செய்தி ஊடகங்களிலும் இவை பேசப்படுவதில்லை. அமெரிக்க அரசியல் வாழ்வு இப்படியான ஒழுங்குமுறையில் இருப்பதற்கும், செய்தி ஊடகம் வாய் மூடி இருப்பதற்கும் சில புறநிலை காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் ஏறத்தாழ அமெரிக்க அரசியல் அமைப்பு ஒரு இயலாமை நிலையை அடைந்துள்ளமை ஆழ்ந்த புறநிலை முக்கியத்துவம் கொண்டது. ஆளும் சிறு வட்டத்தினதும், ஆளப்படும் பெரும்பான்மையான மக்களினதும் நலன்களுக்கு சேவை செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தனி அரசியல் கேள்வியில் கூட ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுக்க முடியாதளவிற்கு அமெரிக்காவில் வசதிபடைத்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையையுள்ள சமூகத்துருவப்படுத்தல் வளர்ந்துவிட்டது. Internal Revenue Service ஆல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் 400 தனி நபர்கள் மட்டும் 70 பில்லியன் டொலர் வருமானத்தைக் கொண்டுள்ளதைக் கூறுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த அருவருப்பூட்டும் செல்வந்தர்களின் வருமானம் கீழ்மட்டத்தில் உள்ள 90% அமெரிக்கர்களின் வருமானத்தைக் காட்டிலும் 15 மடங்கு அதிகரித்துள்ளது. வெகு உயர்நிலையிலுள்ள செல்வந்தரின் சராசரி ஆண்டு வருமானம் $175 மில்லியன் ஆகும். இது பத்தில் ஒன்பது அமெரிக்கரின் சராசரி ஆண்டு வருமானமான $27,000 இனை விட 6400 மடங்கு அதிகமாகும்.இரண்டாவது புஷ்ஷின் நிர்வாகம் வெள்ளை மாளிகையில் நிறுவப்படுவதற்கு முன்பு 20 ஆண்டுகளாக கையாளப்பட்ட கொள்கைகளின் விளைவே இந்தப் புள்ளி விவரங்கள் கூறுவது. இந்த நிர்வாகம் காங்கிரசில் கொண்டுவந்த மிகப்பெரிய அளவிலான வரி வெட்டுக்கள் இப்போக்கை இன்னும் விரைவுப்படுத்தும். அதே நேரத்தில் உழைக்கும் மக்களுக்கும், ஏழைகளுக்கும் சுகாதார வசதி, கல்வி, வீடு கட்டும் வசதி மற்ற தேவையான நலன்களுக்கு அரசாங்கம் நிதியை மறுத்து அவற்றைக் குறைத்துவிட்டது என்பது நினைவிற்கொள்ளப்படவேண்டும். ஒரு குறுகிய சலுகைகள் நிறைந்த செல்வந்தர்களின் செல்வக்கொழிப்பை அதிகப்படுத்துவதற்காகவே தன்னுடைய அடிபணிவை செய்துள்ள இந்த இரு கட்சி முறை அமெரிக்க உழைக்கும் மக்களின் பெரும்பாலோருடைய நலன்களைப் பற்றிச் சற்று திரித்த நிலையில்கூட வெளிப்படுத்த முடியாமல் விளங்கிவருகிறது. அதே காரணத்தினால்தான், சமுதாயப் பிளவுகளில் தான் தலையிட்டுச் சமரசம் செய்துவைக்கக் கூடிய தன்மையைக்கூட இழந்துவிட்ட இறுதி நிலையில் அது காணப்படுகிறது. சமுக சீர்திருத்தத்திற்கு ஜனநாயகக்கட்சி ஒரு கருவியாகச் செயல்படும் என்ற நினைப்பே இன்று வெகு சிலருக்குத்தான் உண்டு. 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் புதிய சீர்திருத்த சட்டங்கள் இயற்றிச் செயல்படுத்தப்படவில்லை, மாறாக, இதுவரை இருந்தவைகூட இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர் அனைவருமே அமெரிக்காவில் இப்படிப்பட்ட ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர் என்று பொருள் இல்லை. திரைமறைவில் கசப்பான வேறுபாடுகள் இருக்கத்தான் உள்ளன. ஆனால் அத்தகைய வேறுபாடுகள் பொது விவாதத்திற்கு வந்துவிட்டால் தங்கள் கட்டுப்பாட்டை மீறிச் செயல்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. தாங்கள் திரட்டியுள்ள பெருஞ்செல்வம் பறிபோய்விடுமோ என்ற அச்சமும் தங்களது தனிமைப்பட்ட நிலையைப் பற்றியும் தயக்கமான நிலை பற்றியும் அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். எந்த அரசியல் பிரச்சினையும் ஆழ்ந்து ஆராயப்பட்டால் தங்கள் ஊழல்கள், குற்றங்கள் போன்றவை வெளிப்பட்டு தங்கள் வீழ்ச்சிக்கு வழிகோலும் என்ற அச்ச உணர்வில்தான் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். எனவே பெரும்பாலான மக்கள் அரசியல் வாழ்விலிருந்து ஒதுக்கப்பட்டுவிடுவதற்கான முயற்சிகளுக்குத்தான் அவர்கள் நல்ல ஆதரவு காட்டுகிறார்கள். மில்லியன் கணக்கான அமெரிக்கரின் ஆழ்ந்த கோபமும், வெறுப்பும் இரு கட்சிகள் மூலம் அல்லது செய்தி ஊடகத்தின் மூலம் வெளிப்படாதுள்ளதால் அவை இல்லாமலே போய்விட்டன என்ற பொருளில்லை. இப்பொழுதுள்ள அமைப்பு முறைகளில் தங்களுடைய உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கு இடமில்லை என்பதை உணர்ந்த அளவில் அவர்கள் புதிய மற்றும் எதிர்பாராத வழிவகைகளை நாடுவர். ஆளும் உயர்தட்டு இதனை எப்பொழுதுமே மூடிமறைத்து வைத்துவிட முடியாது. இவர்கள் அனுமதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் மக்கள் அரசியல் வாழ்வில் நுழைந்துவிடுவார்கள். இந்த வேறுபாடுகளைப் பற்றி வெளிப்படுத்த இந்த அரசியல் முறை மறுப்பதால் கூர்மையான சமுதாய வேறுபாடுகள் மறைந்துவிட்டன என்று கூறவதற்கில்லை. மாறாக, இந்த அரசியல் அமைப்புமுறையே ஒரு பெரிய சரிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. கீழே தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த முரண்பாடுகள் விரைவாக ஒரு வெடிப்புமிக்க புரட்சிகரமான எழுச்சியை நோக்கி கட்டாயம் இட்டுச்செல்லப்படவுள்ளது. |