World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: displaced Jaffna refugees want military zones dismantled

இலங்கை: இடம் பெயர்ந்த யாழ்ப்பாண அகதிகள் இராணுவ வலையங்களை நீக்க கோரிக்கை

By M. Aravinthan
7 July 2003

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்றவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஒரு அரசியல் உடன்பாடு குறித்து விவாதிப்பதற்காக, இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ் ஈழ விடுதலை புலிகளுக்கும் (LTTE) இடையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU - Memorandum of Understanding) கையெழுத்தாகி 15 மாதங்கள் கடந்துள்ளன.

இலங்கையின் வடபகுதியில் உள்ள யாழ் குடாநாட்டில் எந்தவிதமான மாற்றமும் ஏற்பட்டதாக தோன்றவில்லை. இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பு பகுதியாகவே இன்னமும் யாழ்பாணப் பகுதி விளங்குகிறது. இலங்கை இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலையங்களை உருவாக்குவதற்காக 130,000 பேர்களை அவர்களது வீடுகளில் இருந்து விரட்டியடித்ததால், அவர்கள் கூட்ட நெரிசல் மிக்க அகதி முகாம்களிலும் அல்லது நண்பர்கள், உறவினர்களுடனும் வாழ்ந்து வரத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதுபற்றி அரசாங்கமும் LTTE யும் தொடர்ந்து முடிவில்லாது பேச்சுவார்த்தைகளையும் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

வட பகுதி முழுவதிலும் கடற்படை, விமானப்படை மற்றும் போலீஸ் சோதனைச் சாவடிகள் இல்லை. ஆனால் ஏராளமான இராணுவத்தினர் எங்கு பார்த்தாலும் ட்ரக் வண்டிகளில் மற்றும் ஜீப்புகளில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் ஆயுதங்களை கையில் ஏந்தி சாலைகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருப்பதுடன், தங்களது தினசரி தேவைகளுக்கான பொருட்களையும் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

யாழ்பாணம் நகரிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கரைநகர் ஒரு சிறிய தீவு ஆகும். அங்குதான் பிரதான் கடற்படைத் தளம் உள்ளது. அங்கு செல்பவர்கள் தங்களது வாகனங்களிலிருந்து நுழைவு வாயிலில் இறங்கிக் கொள்ள வேண்டும். சோதனைச் சாவடியில் நிற்கின்ற இராணுவத்தினர் அரசாங்கம் தந்திருக்கின்ற அடையாள அட்டைகளை சோதித்து பார்க்கின்றனர். பார்வையாளர்களின் உடல்களிலும் சோதனை நடத்துகின்றனர். அத்துடன் காரைநகர் பகுதிக்கு செல்லுகின்ற வழியிலும் அந்த தீவிலும் இடித்துத்தள்ளப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட வீடுகளே உள்ளன.

யாழ் நகரிற்கு 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கீரிமலைப் பகுதியிலும் கண்டிப்பான இராணுவக் கட்டுப்பாடு நீடிக்கின்றது. ஒரு காலத்தில் கீரிமலைப் பகுதி மிகப்பிரபலமான சுற்றுலா மையமாக விளங்கியது. தற்போது அது ஒரு பிரதான இராணுவ முகாமாக மாற்றப்பட்டுவிட்டது. இராணுவ முகாமை சுற்றியுள்ள கைவிடப்பட்ட வீடுகள் அனைத்தையும் இராணுவத்தினர் பிடித்துக் கொண்டு அந்தப் பகுதியையே ஒரு பெரிய இராணுவக் கிராமமாக மாற்றிவிட்டனர். அந்தப் பகுதிக்கு செல்லும் பார்வையாளர்கள் கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். சோதனைச் சாவடியில் இராணுவத்தினர் அடையாள அட்டையைக் கோருவதுடன் அந்த வாகனங்களின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு அது சென்றடையும் இடம் வரை பயணம் செய்கின்றனர். சுற்றுலா செல்லும் பயணிகளை ஒரு சிப்பாய் கண்காணிப்பதோடு அவர்கள் திரும்பிச் செல்லும் வரை பின் தொடர்ந்து வருகிறார்.

உயர் பாதுகாப்பு வலையங்கள் HSZ (high security zones) என்று இரண்டு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளன. LTTE யுடன் சண்டை நடந்த காலத்தில் இராணுவ முகாம்கள் LTTE யின் தாக்குதலுக்கு இலக்காகி விடக்கூடாது என்பதற்காக இந்த வலயங்கள் உருவாக்கப்பட்டன. யாழ்பாணக் குடாநாட்டில் மட்டும் இதுபோன்ற 15 வலையங்கள் உள்ளன. இவை 160 சதுர கிலோ மீட்டர் பரப்பை உள்ளடக்கியவை அல்லது யாழ்பாணம் நிலப்பகுதியின் 18 வீத நிலப்பரப்பில் இவை பிடித்துக் கொண்டுள்ளன.

வலிகாகம் வடக்குப் பகுதியில் உள்ள பலாலி, காங்கேசன்துறை, மயிலிட்டி, தெல்லிப்பளை மற்றும் கீரிமலை உட்பட மிகப்பெரும்பாலான இடங்களில் வாழ்ந்த மக்கள் இன்னும் தங்கள் வீடுகளுக்கு திரும்பவில்லை. வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள 25,000 வீடுகளில் 18,000 வீடுகள் இன்னமும் உயர் பாதுகாப்பு வலையங்களிலேயே உள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தின் இப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 10,322 குடும்பங்களில் பல குடும்பங்கள் யாழ் மாவட்டத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பதுடன், அவற்றில் 8552 குடும்பங்கள் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மற்றும் 1780 குடும்பங்கள் அகதி முகாம்களில் இருக்கின்றன. மற்றவர்கள் வடக்கு பகுதியில் உள்ள LTTE யின் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

நமது நிருபர்கள் மல்லாகம், அளவெட்டி, சங்கானை மற்றும் மானிப்பாய் ஆகியவற்றிலுள்ள அகதி முகாம்களுக்குச் சென்றபோது, இந்த முகாம்களில் இருக்கின்ற மக்கள் தங்களது கடுமையான துயரங்களையும், நிலைமை திருந்தாமலும், ஒரு தீர்வும் ஏற்படாமலும் இருப்பது குறித்து தங்களது வெறுப்பை வெளிப்படுத்திக் கூறினர்.

சகிக்க முடியாத நிலவரங்கள்

இலங்கை இராணுவம் 1990 ஜூன் மாதம் வள்ளுவபுரம் மற்றும் தையிட்டி பகுதியில் தாக்குதல் நடத்திய போது வெளியேறிய 18 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் மல்லாகம் பகுதியில் உள்ள தும்புத் தொழிற்சாலை அகதி முகாமில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற பெரும் இராணுவத் தாக்குதலில்போது வன்னிப் பகுதிக்கு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதுடன், அங்கு மிகுந்த துன்பங்களுக்கிடையே ஏழு ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர்.

இந்த முகாமில் இருக்கும் ஐம்பது வயதுடைய ஐந்து குழந்தைகளின் தந்தையான S. மாசிலாமணி என்பவர் ''முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் காட்டுப் பகுதியில் நாங்கள் குடியேறினோம். அங்கு எங்களது குழந்தைகள் தொடர்ந்தும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். சென்ற ஆண்டு யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்பட்டவுடன் எங்களது வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியும் என்று நினைத்து நாங்கள் இங்கே திரும்பினோம். இப்போது என்ன நடந்திருக்கின்றது என்பதை நீங்களே பாருங்கள். நாங்கள் எங்களது வீடுகளிலிருந்து விரட்டப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிவிட்டன.

''ஒரு நாளைக்கு 100 அல்லது 150 ரூபாய்க்கு [$US1-1.50] கூலி வேலை செய்கிறோம். இருப்பினும் தினசரி எங்களுக்கு வேலை கிடைப்பதில்லை. யுத்து நிறுத்தத்திற்கு பின்னர் அகதிகளுக்கு தரப்படும் மாதந்திர உதவித்தொகை பாதியாக குறைக்கப்பட்டுவிட்டது. இதற்கு முன்னர் ஒரு மாதத்திற்கு 1260 ரூபாய் வீதம் இரண்டு தவணைகளில் இந்த உதவித்தொகையை வழங்கினார்கள். இப்போது அது 630 ரூபாயாக குறைக்கப்பட்டுவிட்டது. இங்கு தண்ணீர் மற்றும் ஒழுங்கான கழிப்பறை வசதிகள் கிடையாது. அத்துடன் 18 குடும்பங்களுக்கு இரண்டு கழிப்பறைகள்தான் உள்ளன'' என்று மாசிலாமணி நமது நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஏழு குழந்தைகளின் தாய் நாகேஸ்வரி தேவசகாயம் என்பவர் ''எங்களது குழந்தைகளின் படிப்பு சீர்குலைந்து விட்டது. இப்படி நாங்கள் பல்வேறு இடங்களுக்கு மாறிக் கொண்டிருந்தால் எங்களது குழந்தைகள் எப்படி கல்வி கற்க முடியும்?'' என்று அவர் கேட்டார்.

வலிகாமம் வடக்குப் பகுதியில் உள்ள 46 பாடசாலைகளில் 29 பாடசாலைகள் உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் வந்துள்ளன. அவற்றில் 16 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் 13 பாடசாலைகள் இந்த வலயத்திற்கு வெளியே செயல்பட்டு வருகின்றன. காங்கேசன்துறையில் அமைந்துள்ள மிகப்பெரிய கல்லூரியான நடேஸ்வரா கல்லூரி தற்போது கந்தரோடை மற்றும் சுன்னாகம் பகுதிகளில் உள்ள சிறிய வீடுகளுக்கு மாற்றப்பட்டுவிட்டன. இந்தக் கல்லூரி மாற்றப்படுவதற்கு முன்னர் 1,049 மாணவர்கள் படித்தனர். தற்போது 75 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் கல்வி கற்பதால் நிர்வாகம் பள்ளிக் கூடத்தை மூடிவிட முயன்று வருவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பகுதியில் இருந்த 5 மருத்துவமனைகளில் தற்போது 2 மூடப்பட்டுள்ளன. தெல்லிப்பளையில் இருந்த பிரதான மருத்துவமனை, தெல்லிப்பளை கூட்டுறவு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. வறுத்தலைவிளானில் இருந்த புற்று நோய் மருத்துவமனை மற்றும் மயலிட்டியில் இருந்த மார்பு சிகிச்சை மருத்துவமனை ஆகிய இரண்டும் மூடப்பட்டுவிட்டன.

தெல்லிப்பளை மருத்துவமனையின் நிர்வாக அதிகாரியான கே.பாலசுந்தரம் இதுபற்றி விளக்கமளிக்கையில், இராணுவ உயர் பாதுகாப்பு வலையம் உருவாக்கப்பட்டதால் இந்த மருத்துவமனை மாற்றப்பட்டதாகவும், இராணுவத் தாக்குதல் காரணமாக இந்த மருத்துவமனையின் ஒருபகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். ''இந்த சிறிய கட்டிடத்தில் எம்மால் சரியாக இயங்க முடியாதுள்ளது. இதற்கு முன்னர் இருந்த மருத்துவமனையில் 290 படுக்கைகள் இரு மாவட்ட மருத்துவ அதிகாரிகள், 14 மருத்துவ அதிகாரிகள், 2 பல் மருத்துவ அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் 62 தாதியர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால் தற்போது 102 படுக்கைகள் மட்டுமே இருப்பதுடன் ஒரேயொரு மாவட்ட மருத்துவ அதிகாரி மட்டுமே பணியாற்றி வருகிறார். அதே நேரத்தில் குறைந்த தகுதியுடைய, பதிவு செய்யப்பட்ட இரண்டு மருத்துவ அதிகாரிகள், இரண்டு ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரிகள் (RMO) மற்றும் 13 தாதிகள்'' இங்கு பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

''தமிழர் விடுதலை கூட்டணியைச் (TULF) சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இந்த மருத்துவமனைக்கு விஜயம் செய்தார். அவரிடம் மருத்துவமனையில் நிலவும் குறைபாடுகளை சுட்டிக்காட்டியபோது அவர் சுகாதார அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினார். அத்தோடு சரி. மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இங்கு வசதிகள் இல்லாத காரணத்தினால் நாங்கள் சில நோயாளிகளை, நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ள யாழ்ப்பாண மருத்துவமனைக்கு மாற்ற வேண்டி இருக்கிறது'' என்று மேலும் பாலசுந்தரம் தெரிவித்தார்.

இந்த மருத்துவமனைக்கு பல் அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர் மே மாதம் நியமிக்கப்பட்டார். ஆனால் நோயாளிக்கு சிகிச்சை செய்வதற்கு ஏற்ற இருக்கை அமைக்கப்படவில்லை. இந்த மருத்துவமனை தற்காலிக கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருப்பதால் பல் மருத்துவ இருக்கை வழங்கப்படவில்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்தோடு மருந்துகளிலும் பற்றாக் குறை நிலவுகின்றது.

மைலிட்டியைச் சேர்ந்த 41 வயதான ராஜஸ்வரி குடும்பம் உட்பட மூன்று குடும்பங்கள் 1990 ம் ஆண்டு வெளியேறி வன்னியில் வாழ்ந்து வந்தனர். யுத்த நிறுத்த அறிவிப்பிற்கு பின்னர் யாழ்பாணம் திரும்பிய அவர்கள், சேதமடைந்த நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகிலுள்ள தனியார் நிலத்தில் ஒரு குடிசையை அமைத்து வாழ்ந்து வந்தனர்.

''வன்னியில் நாங்கள் மிகப்பெரும் அளவில் துயரத்தில் தள்ளப்பட்டோம். ஒரு முறை குண்டுவீச்சு விமானத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பினோம். இத்தாக்குலின்போது பலர் எங்கள் கண் முன்னாலேயே மடிந்தனர். மருத்தவ வசதிகள் இல்லாததால் பிறப்பதற்கு முன்னரே எனது 6 குழந்தைகளை இழந்தேன். நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் யாழ்பாண மருத்துவமனையில் நான் ஒரு குழந்தை பெற்றேன். என்னையும், என்னுடைய 4 மாத குழந்தையையும், நாங்கள் தனியார் இடத்தில் குடிசை கட்டினோம் என்பதற்காக போலீஸார் அண்மையில் கைது செய்தனர். போலீசார் காலையிலிருந்து மாலைவரை எங்களை காவலில் வைத்திருந்தனர். அழுகின்ற எனது குழந்தையை பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது'' என்று ராஜேஸ்வரி தனது சோகக் கதையைக் கூறினார்.

அத்துடன் LTTE உட்பட சகல அரசியல் நிர்வாக அமைப்பு மீதும் தனது கசப்பை அவர் வெளியிட்டார். ''LTTE உட்பட பல அரசியல் கட்சிகள் எங்களைப் பார்ப்பதற்கு வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த விதமான தீர்வும் எமக்கு கிடைக்கவில்லை'' என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளால் கைவிடப்பட்டவர்கள்.

யாழ் நகரிலிருந்து 15 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள அளவெட்டியில் சிறிய குடிசைகளைக் கொண்டுள்ள குருவாலை அகதிகள் முகாமில் 254 பேர் வாழ்ந்து வருகின்றனர். 1990 க்கு பின், இவர்கள் அனைவரும் மயிலிட்டி, தெல்லிப்பளை, காங்கேசன்துறை மற்றும் மாவிட்டபுரம் ஆகிய இடங்களிலிருந்து வெளியேறி பல்வேறு இடங்களில் வாழ்ந்தபின், போர் நிறுத்த ஒப்பத்தத்திற்கு பின்பு இந்த முகாமிற்கு வந்தனர்.

45 வயதான சற்குணதேவி என்ற 5 குழந்தைகளின் தாயார் நம்மிடம் கூறியதாவது: ''நல்ல குடி தண்ணீர் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஒரேயொரு கிணறு மட்டுமே உள்ளது. அந்தத் தண்ணீரில் கெட்டவாடை வீசுவதால் எங்களால் அதை அருந்த முடியவில்லை. நீண்டதூரம் சென்று நல்ல தண்ணீர் கொண்டுவர வேண்டியிருக்கிறது. அத்துடன் மழை பெய்யும்போது இந்த இடத்தில் வெள்ளம் புகுந்து விடுகின்றது'' என்றார். போர் நிறுத்தத்திற்கு பின்னர் அகதிகளுக்கான படி பாதியாக குறைக்கப்பட்டுவிட்டது. விவசாய நிலங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அவர்கள் தினமும் வேலைசெய்து கொண்டிருந்தாலும், ஒரு நாளைக்கு 75 ரூபாய் தான் கூலியாகக் கிடைக்கின்றது.

இந்த முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இளைஞர் P.பரமேஸ்வரன் அரசியல் கட்சிகளின் போக்கை கண்டித்தார். ''எந்த கட்சியிலும் நாங்கள் சேரவில்லை. ஏனென்றால் தேர்தல் காலத்தில் தான் அவர்கள் எங்களிடம் வருகிறார்கள். அவர்கள் தேர்தல் நேரத்தில் பேசும்போது, வெற்றி பெற்றதும் தங்களது முதல் கடமை அகதிகள் பிரச்சனையை தீர்த்துவைப்பதுதான் என்று கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும் எவரும் எங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. உழைக்கும் மக்கள் தங்களுக்கு என்று சொந்தக் கட்சியை உருவாக்கி கொள்ளவேண்டும் என்பதில் உங்களது கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்'' என்று அவர் குறிப்பிட்டார்.

''தனியார் நிலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நிலத்திற்கு சொந்தக்காரர் சென்ற வாரம் வந்து, நீங்கள் இந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டும் அல்லது நான் நீதிமன்றத்திற்கு சென்று உங்களை வெளியேற்றுவேன் என்று எங்களிடம் கூறியுள்ளார். உயர் பாதுகாப்பு வலையத்திலிருக்கும் எங்களது நிலங்களை இராணுவத்தினர் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதால், நாங்கள் எங்கே போவது?'' என்று பரமேஸ்வரன் கேட்டார்.

வலிகாமம் வடக்குப் பகுதியிலுள்ள, வளமான மிகப்பெரும் நிலப்பரப்பின் பெரும்பாலான மக்கள் விவசாயிகளாக உள்ளனர். அப்பகுதியைச் சார்ந்த விவசாயிகள் உயர் பாதுகாப்பு வலையம் காரணமாக 320 ஹெக்டர் நெல் விளையும் வயல்களை கைவிட வேண்டி வந்துள்ளது. மேலும் 1,007 ஹெக்டர் தானியங்கள் பயிருடம் நிலங்கள், 196 ஹெக்டர் பனை மரங்கள், 20 ஹெக்டர் தென்னை மரங்கள் ஆகியவற்றையும் அவர்கள் கைவிட வேண்டி வந்துள்ளதால், தற்போது அவர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள்.

யாழ்பாணக் குடாநாட்டிலேயே மிகப்பெரிய தொழிற்சாலை வலிகாமம் வடக்கிலுள்ள காங்கேசன்துறை சிமேந்து தொழிற்சாலையாகும். இந்த ஆலை உயர் பாதுகாப்பு வலையத்துக்குள் வந்துள்ளதால் அது மூடப்பட்டு விட்டது. அதே போன்று மாவிட்டபுரம் மற்றும் அம்பனை அலுமினிய தொழிற்சாலைகளும், மாவிட்டபுரம் வாளித் தொழிற்சாலையும், வசாவிளான் பழச்சாறு தொழிற்சாலையும் மூடப்பட்டுவிட்டதால் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் தமது வேலைகளை இழந்துள்ளனர்.

யாழ் குடாநாட்டின் தெற்கிலுள்ள தென்மராட்சி பகுதியின் உயர் பாதுகாப்பு வலையத்துக்குள் கைதடி, நாவற்குழியின் ஒரு பகுதி, தனங்கிளப்பு, கரம்பாக்கம் மற்றும் எழுதுமட்டுவாள் ஆகிய பகுதிகளும் வருகின்றன. சாவகச்சேரியில் 2500 ஹெக்டர் விவசாய நிலம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், அதில் 600 ஹெக்டர் நிலம் உயர் பாதுகாப்பு வலையத்துக்குள் வருகின்றது. கைதடியில் 1,000 ஹெக்டர் நிலம் மீண்டும் விவசாயம் செய்வதற்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், அவற்றில் 300 ஹெக்டர் நிலத்தில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருப்பதால் அவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியாதுள்ளது.

யாழ் குடாநாட்டிலுள்ள தீவுப் பகுதிகளான ஊர்காவற்துறை, கரைநகர், அனலை தீவு, எழுவை தீவு, ஆகியவற்றில் உள்ள சுமார் 960 குடும்பங்கள் உயர் பாதுகாப்பு வலையத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

அனைத்து தரப்பிலும் அலட்சியம்

சாதாரண மக்களது நிலை குறித்து இலங்கை அரசும், LTTE யும் அலட்சியப் போக்கில் நடந்து கொள்ளுகின்றன என்பதை எடுத்துக் காட்டுகிற வகையில்தான் உயர் பாதுகாப்பு வலையங்கள் நீடிக்கின்றன. சென்ற பெப்ரவரி மாதம் அறவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திலேயே இந்த வலையங்களை நீக்கிவிட உடன்பாடு ஏற்பட்டபோதிலும், இராணுவம் அவ்வாறு செய்வதற்கு மறுத்து வருகின்றது. அத்தோடு, LTTE ஆனது முதலில் தனது ஆயுதங்களை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

ஆகவே, இதன் காரணமாக பொதுமக்களிடையே எதிர்ப்பு வளர்ந்து வருவதுடன், அகதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் பல கண்டன பேரணிகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலைமையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கத் தவறிவிட்டதாக கொழும்பு அரசாங்கத்தின் மீது LTTE குற்றம் சாட்டியுள்ளது.

இந்தப் பிரச்சனையை தள்ளிப்போடவும், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முறிவு ஏற்படாமல் தவிர்க்கவும், இலங்கை அரசாங்கமானது உயர் பாதுகாப்பு வலையங்களை ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக இந்திய இராணுவத் தளபதி சதீஷ் நம்பியாரை நியமித்தது. தமிழ் அகதிகளுக்கு அதிர்ச்சியும், ஆத்திரமும் ஏற்படுகிற வகையில் நம்பியாரின் அறிக்கைக்காக காத்திருக்க LTTE யும் உடன்பட்டது.

நம்பியார், மே 8 ந் தேதி அரசாங்கத்திற்கு ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் சில இராணுவ வலையங்களை நீக்கிவிட வேண்டுமென்றும், சில வலையங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார். ஆனால் அவர் இதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்தார். அது, ''உயர் பாதுகாப்பு வலையங்களை நீக்குவது அல்லது இலங்கை இராணுவம் தனது முன்னணி பாதுகாப்பு அரண்களை கைவிடுவதற்கு இணையாக LTTE யும் தனது இராணுவ நிலைகளை கைவிட வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும்'' என்பதாகும்.

LTTE தனது ஆயுதங்களை ஒப்படைத்து விடவேண்டும் என்று இந்திய மற்றும் அமெரிக்க நிலைப்பாடுகளை ஒட்டி இந்திய தளபதியின் ஆலோசனை அமைந்திருக்கின்றது.

LTTE யானது நம்பியாரின் அறிக்கையை நிராகரித்த போதிலும், தற்போதைய பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள தற்காலிகமாக பின்வாங்கியிருந்ததற்கு, உயர் பாதுகாப்பு வலையங்களை நீக்கிவிட வேண்டும் என்பதுதான் பிரதான பிரச்சனையாக அதற்கு இருக்கவில்லை. மாறாக, LTTE யின் பிரதான கவலை வடக்கு-கிழக்கு பகுதிகளில் இடைக்கால நிர்வாகத்தை அமைத்து அரசியல் அதிகாரத்தை பெறவேண்டும் என்பதேயாகும்.

LTTE தனது ஆயுதங்களை ஒப்படைக்கும் வரை, எந்த இராணுவ உயர் பாதுகாப்பு வலையத்தையும் நீக்க முடியாது என்று ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா திட்டவட்டமாக அறிவித்துள்ள வகையில் அவர், இராணுவத் தளபதிகளின் நிலைப்பாட்டை பகிரங்கமாக ஆதரித்துள்ளார். இதன் மூலம் மக்கள் விடுதலை முன்னணி (JVP) போன்ற சிங்கள சோவனிச குழுக்கள் உற்சாக மூட்டப்பட்டிருப்பதால், இந்தக் குழுக்கள் எந்த இராணுவ வலையத்தையும் நீக்கக் கூடாது என்று தீவிரமாக வலியுறுத்தி வருகின்றன.

LTTE யுடன் ஒரு பேரம் நடத்துமாறு வர்த்தக பிரமுகர்கள் கொடுத்துவரும் நிர்பந்தங்களுக்கு பிரதமர் ரனில் விக்கிரமசிங்கா ஆட்பட்டாலும், அவர் இராணுவத் தளபதிகள் மற்றும் சிங்கள சோவனிச குழுக்களுக்கு அடிபணிந்து போகின்ற நிலையே உருவாகியுள்ளது.

கொழும்பு ஆட்சியும், LTTE யும் துயரத்தில் சிக்கிக் கொண்டுள்ள தமிழ் அகதிகளின் பிரச்சனைக்கு எத்தகைய அரசியல் உடன்படிக்கை செய்து கொள்ள முன்வந்திருக்கிறார்கள் என்பதை, இந்த இருதரப்பினரின் அணுகுமுறைகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன், 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற உள்நாட்டுப் போரின் துன்பத்தை தாங்கிக் கொண்டுள்ள மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கோ அல்லது அவர்களது ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கோ, இந்த இரு தரப்பினரின் இயலாத்தன்மையையும் இவை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

Top of page