World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

New Zealand commits troops and police to Solomon Islands occupation force

சொலமன் தீவுகள் மீதான ஆக்கிரமிப்பு படைகளுக்கு ஆதரவாக துருப்புக்கள் மற்றும் போலிசாரை அனுப்ப நியூசிலாந்து உறுதி

By John Braddock
1 July 2003

Back to screen version

அவுஸ்திரேலியா தலைமையில் செயல்படும் தெற்கு பசுபிக் ''பாதுகாப்பு'' படைகளின் ஒரு பகுதியாக சொலமன் தீவுகளுக்கு நியூசிலாந்தின் தொழிற் கட்சி அரசாங்கம் தனது துருப்புக்களையும், ஆயுதம் தாங்கிய போலீஸாரையும் அனுப்புகின்றது. நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் பில் கோப் (Phil Goff) ஞாயிறன்று வெளியிட்ட அறிவிப்பில் இரண்டு அரசாங்கங்களுமே கொள்கை அடிப்படையில் இந்த நடவடிக்கைக்கு உடன்பட்டிருப்பதாக தெரிவித்தார். அத்துடன் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், கொடூரமான காலனி ஆதிக்க முறையில் ஆட்சியை நடாத்துவதற்கு நியூசிலாந்து தனது இராணுவத்தையும், போர் விமானங்களையும் அனுப்புவதற்கும் அண்மையில் முடிவு செய்துள்ளது.

இந்த முடிவு, பசுபிக் பகுதியில் நியூசிலாந்தின் காலனி ஆதிக்க பாரம்பரியத்தை உயிர்பிப்பதாக அமைந்திருக்கின்றது. சமாவோ பகுதியில் நியூசிலாந்து ஆதிக்கத்திற்கு எதிராக மா இனத்தவர் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அவர்களை ஒடுக்குவதற்கு சென்ற முறை நியூசிலாந்து தனது படைகளை அனுப்பியது. 1929 ம் ஆண்டு நடைபெற்ற ''கருப்பு சனிக்கிழமை'' படுகொலையில் நியூசிலாந்து துருப்புக்கள் எந்தவிதமான ஆயுதமும் இல்லாத சமாவே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இயந்திர துப்பாக்கியால் சுட்டபோது அதில் 9 பேர் கொல்லப்பட்டனர், 50 க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

சொலமன் தீவுகள் மீது தயக்கத்துடன் கூடிய இளைய பங்குதாரராக நியூசிலாந்து செயல்பட விரும்பவில்லை. அவுஸ்திரேலியாவுடன் இணைந்து நியூசிலாந்து ஆளும் தட்டுக்கள், அவுஸ்திரேலியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்ைகளை மிக மூர்க்கமாக தென் பசிபிக்கில் வலியுறுத்த விரும்புகிறது. இந்த வாரம் நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் சிட்னியில் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரான அலெக்ஸாண்டர் டவுனரை சந்தித்து பேசினார். திங்களன்று நடைபெறவிருக்கும் பசுபிக் அரங்கு வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கூட்டு நிலைப்பாடு இறுதியாக்கப்படும்.

சென்ற வாரம் கான்பராவில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்களான மார்க் பர்டன் மற்றும் செனட்டர் ரொபேட் ஹில், நியூசிலாந்து போலீஸ்துறை அமைச்சர் ஜோர்ஜ் ஹாக்கின்ஸ் போலீஸ் கமிஷனர் ராப் ராபின்சன் மற்றும் அவுஸ்திரேலிய, சொலமன் தீவு அதிகாரிகள், மூத்த இராணுவ அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

நியூசிலாந்து அரசாங்க பிரதிநிதிகள் அவுஸ்திரேலிய அரசாங்க பிரதிநிதிகளோடு இராணுவத் தலையீடு தொடர்பாக உடன்பாடு கண்டனர். நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் கோப் கருத்துப்படி ''சொலமன் தீவுகள் குழப்பத்தில் சிக்கிக்கொண்டிருக்கின்றன. அவை பயங்கரவாதிகள் மற்றும் போதைப் பொருட்கள் கடத்துவோரின் புகலிடமாக'' அமையும் அபாயத்தில் உள்ளதுடன் ''தோல்வியுற்ற அரசாகவும்'' இருக்கின்றன. ''இதற்கு பிராந்திய அடிப்படையில்தான் பதில் நடவடிக்கை எடுக்கவேண்டும்''. சொலமன் தீவுகள் குழப்ப சூழ்நிலையை நெருக்கிக் கொண்டிருப்பதால், போலீஸாருக்கு உதவியாக ''இராணுவ உதவி'' தேவைப்படுகிறது. ஏனெனில் பல்வேறு போட்டிக் குழுக்கள் மற்றும் குற்றம் புரிவோரிடையே உயர் சக்தியுள்ள ஆயுதங்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றன என்று கோப் விளக்கினார்.

ஈராக்கிற்கும், ஆப்கானிஸ்தானுக்கும் துருப்புக்களை அனுப்புவதை நியாயப்படுத்தும் வகையில் கிளார்க் கூறிய சொற்களை எதிரொலிக்கின்ற வகையில் கோப், சொலமன் தீவுகளில் நியூசிலாந்தின் பங்கு பணியை விவரித்தார். அங்கு நியூசிலாந்து ''ஒரு நல்ல சர்வதேச குடிமகனாக செயல்படும்'' என்றும், மேலும் நியூசிலாந்து ''தனது சொந்த நலன்களைக் காப்பாற்றும்'' என்றும், பசுபிக் விவகாரங்களில் இராணுவத் தலையீடு ஒரு குறிப்பிட்ட (நீர் வரை) எல்லைக்கல்லாக அமையும் என்றும் அவர் விளக்கினார். மேலும், சொலமன் தீவுகளில் நிலவரத்தை இப்படியே விட்டுவிட்டால் ஐ.நா.வோ அல்லது காமன்வெல்த்தோ இராணுவத் தலையீட்டை கோருகின்ற அளவிற்கு நிலவரம் முற்றிவிடும் என்றும் கோப் குறிப்பிட்டார்.

ஆனால், சொலமன் தீவுகள் அரசாங்கத்திடமிருந்து முறையான அழைப்பு இதற்கு தேவையாக உள்ளது. இல்லையென்றால் இராணுவத் தலையீடு ஒரு வகையான புதிய காலனி ஆதிக்கம் அல்லது படையெடுப்பு என்று கருதப்படும். இதை வேறு வகையில் விளக்குவது என்றால் இராணுவ நடவடிக்கைக்கு தகுந்த ராஜ்ஜியத்துறை முகமூடி போட்டுக் கொள்கிறார்கள் என்றுதான் பொருள்.

அவுஸ்திரேலியாவுடன் நெருக்கமான ஆலோசனை செய்த பின்னர், நியூசிலாந்து 40 மூத்த போலீஸ் அதிகாரிகளையும், 200 துருப்புக்களையும் மேலும் 2000 துருப்புக்களையும் அனுப்பும். இத் துருப்புக்களிடம் பல்வேறு வகையான (5.56mm) இயந்திர துப்பாக்கிகள், வெடிகுண்டுகளை வெடிக்க வைக்கும் கருவிகள் ஆகியவை இடம்பெறும். அத்துடன் போலீஸாரும் தகுந்த ஆயுதங்களையும் பெற்றிருப்பர்.

சொலமன் தீவுகளில் நீண்டகால அடிப்படையில், காலனி ஆதிக்க நிர்வாகத்தை நடத்துவதற்கு அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் திட்டமிட்டிருக்கின்றன. இது 10 ஆண்டுகளுக்கு நடைமுறையிலிருக்கின்ற திட்டமாகும். பிராந்திய பிரதான வல்லரசுகள் ''நிபுணர்களை'' வழங்கும். அவர்கள் ''சொலமன் தீவுகளின் நிர்வாகத்தில் முழுமையாக இணைந்து பணியாற்றுவர்'' என்று டோமினியன் போஸ்ட்`பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது.

நியூசிலாந்து அரசியல் நிர்வாகம் இந்த முயற்சிக்கு பக்கபலமாக உள்ளது. கடந்த பல வாரங்களில் உள்ளூர் பத்திரிகைகள், அரசாங்கத்தை உற்சாகப்படுத்துகிற வகையிலும் இராணுவத் தலையீட்டை ஆதரிக்கின்ற வகையிலும் தமது பத்திரிகைகளில் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ''சொலமன் தீவுகளில் நிறைந்திருக்கும் அச்சமும், விரக்தியும், சட்டமில்லா நாட்டில் சட்டத்தை கொண்டு வரும் நடவடிக்கை என்றும், இத் தீவுகளில் நடமாடும் முரடர்களை கடுமையாக தாக்கும் இராணுவத் திட்டத்தில், அங்கிருக்கும் ஊழல் மலிந்த போலீஸ் படை ஓர் பெரிய பிரச்சனையாகும்'' என்று கொப் கூறுகிறார். அத்துடன் ''தகராறுகளில் பிளவுபட்டு கிடக்கும் சொலமன் தீவுகளின் சண்டைகளை அடக்குவதற்கு படைகளை அனுப்ப நியூசிலாந்து தயாராகின்றது''. ''ஹான்சாக் சிறப்பு படைகளை அனுப்ப சொலமன் தீவுகள் கோரிக்கை'' என்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் செய்திகளும் இப்பத்திரிகைகளினால் வெளியிடப்படுகின்றன.

அவுஸ்திரேலியா தன்னிச்சையாக நடவடிக்கையில் இறங்கிவிட்டது என்ற தோற்றத்தை உருவாக்காது தவிர்ப்பதற்காக நியூசிலாந்தை இணைத்துக்கொள்ள ஆர்வம் கொண்டிருக்கின்றது. அவுஸ்திரேலியா இந்த மண்டலத்தில் வல்லரசாக விளங்குவதற்கு முயலுகின்றது என்ற எண்ணத்தை உருவாக்கக்கூடாது என்பதற்காக இந்த மண்டலத்தில் சமச்சீர் நிலையை உருவாக்க முயன்று வருகின்றது என்று சென்ற வாரம் கான்பெராவில் தேசிய பத்திரிகை கிளப்பில் உரையாற்றும்போது டவுனர் குறிப்பிட்டார். அத்துடன் கிளார்க்கினுடைய அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் அவர் பாராட்டியதுடன், திமோரில் அவர்கள் சிறப்பாக பணியாற்றினார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நியூசிலாந்து படைகளை அனுப்பவேண்டும் என்பதில் எல்லாக் கட்சிகளும் உடன்பட்டிருக்கின்றன. ஆனால், இளம் இராணுவத்தினருக்கு ஆபத்துக்கள் அதிகம் உள்ளது என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர். நீண்ட கால ஈடுபாட்டிற்கு ஏற்ற வகையில் நியூசிலாந்து இராணுவத்திற்கு தகுந்த ஆயுதங்களும், ஆதரவும் வழங்கப்பட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. அத்துடன் நீண்ட கால நடவடிக்கைக்கு அரசாங்கம் தயாராகயிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஈராக் போரின்போது, தொழிற் கட்சிக்கு பிரதான ''போர் எதிர்ப்பு'' இடது கன்னையாக தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட பசுமைக் கட்சிக்காரர்கள் நியூசிலாந்து படைகளை அனுப்புவது தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால், நியூசிலாந்து ஆயுதப்படைகள் சர்வதேச சமாதான பாதுகாப்புக் குழுக்களில் பணியாற்றுவதை இந்தக் கட்சி உற்சாகமாக வரவேற்றுள்ளது. பசுமைக் கட்சி சார்பில் பாதுகாப்புத்துறை விவகாரங்களை கவனித்து வருகின்ற கீத்லோக் என்பவர் கிழக்கு திமோர் படையெடுப்பின்போது நியூசிலாந்து முன்னணியில் நிற்கவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டவராவர். அதற்கு பின்னர், சொலமன் தீவுகள் போன்ற பிராந்திய நிலவரங்களில் விரைவில் நாட்டின் ஆயுதப்படைகள் அனுப்பப்பட வேண்டும் என்பதில் தொழிற் கட்சியை மிகுந்த உற்சாகத்தோடு இந்த பசுமைக் கட்சி ஆதரித்தும் வருகின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved