World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈராக்Iraq and Al Qaeda: another lie unravels ஈராக்கும் அல் கொய்தாவும்: மற்றொரு பொய் வெளிப்படுகிறது By Bill Vann ஈராக்கியப் பொதுமக்களைக் கொன்று குவிப்பதும், அந்நாட்டில் தொடர்ந்து ஆக்கிரமித்து இருப்பதும் செப்டம்பர் 11, 2001 இன் நியூயோர்க் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்துவதுதான் என்பதில் தமக்கு நம்பிக்கை வரும்வகையில் சில அமெரிக்கப் போர் வீரர்கள் உலக வர்த்தகமையத்தின் இரட்டைக் கோபுரப் படங்களைத் தங்கள் குண்டுதுளைக்காத உள்ஆடையுள் எடுத்துச் சென்றதாக சில செய்தி ஊடகங்கள் அறிவித்துள்ளன. கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புக்கள் கிட்டத்தட்ட 50% அமெரிக்க மக்கள் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு விமான கடத்தலில் ஈராக்கியர்கள் பங்கு பெற்றிருந்தனர் என்றும், 40% இனர் அன்று நடந்த பயங்கரவாதச் செயல்களுக்குச் சதாம் ஹுசைனும் பின்னணியில் இருந்தார் எனவும் நம்புவதாக தெரியப்படுத்துகின்றன. இந்த இரு நிகழ்ச்சிகளும் புஷ் நிர்வாகம் பாரிய செய்தி ஊடகத்தின் துணையுடன் திட்டமிட்டபடி உண்மைக்குப் புறம்பானதைப் பிரச்சாரம் செய்ததன் விளைவாகும். ஒன்றுடன் ஒன்றிணைந்த இரு பொய்யின் அடிப்படையில் வாஷிங்டன் ஈராக் மீதான தனது சட்ட விரோதப் போரை நிகழ்த்தியது. ஈராக்கிடம் உள்ள பாரியளவு இரசாயன, உயிரியல் பேரழிவு ஆயுதங்கள் அமெரிக்க மக்களுக்கு உடனடியான பெரிய ஆபத்தாக உள்ளது என்று கூறியது. அதே நேரத்தில் சதாம் ஹுசைனின் அரசாங்கத்திற்கும் அல்கொய்தாவிற்கும் நெருங்கிய தொடர்புள்ளதற்கு அசைக்க முடியாத ('bullet-proof') சான்று உள்ளதாகவும், இந்த பேரழிவு ஆயுதங்களை செப்டம்பர் 11, 2001 இனை விட கடுமையான தாக்குதலை நடாத்த இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் கொடுக்க ஈராக் அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. இப்படியாக பயமுறுத்துவதற்கு காரணம் ஓர் ஆக்கிரமிப்புப் போர் நடத்துவதற்கு அமெரிக்க மக்களை ஆதரவழிக்க செய்வதும், அமெரிக்கா ''தற்காப்பிற்காக'' ஓர் வறுமை மிகுந்த நாட்டின் மீது தாக்குதலைத் தொடருவதால் உருவாகும் பரந்த எதிர்ப்பினை அச்சுறுத்துவதற்குமாகும். ஈராக்கில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடர்ந்துள்ள நிலையில், சிறப்பு அமெரிக்க இராணுவக் குழுக்கள் நாட்டை அலசிப் பார்த்தும் பேரழிவிற்குரிய ஆயுதக் குவியலின் அடையாளம் கூட கண்டறியாத நிலைமையில், புஷ் நிர்வாகம் அவை சதாம் ஹுசைனால் மறைத்துவைக்கப்பட்டுள்ளன என்று வலியுறுத்துகிறது. புஷ் நிர்வாகம் ஈராக் இப்படியான ஆயுதங்களை வைத்திருக்கின்றது என பொய் கூறியமை வெளிப்படையானதால் சில ஜனநாயகக் கட்சி கூட பலமற்ற எதிர்ப்புக்களை உருவாக்கியுள்ளதுடன், காங்கிரஸ் விசாரணை தேவை என்ற சிதறிய ஓலங்களை எழுப்பியுள்ளது. நிர்வாகத்தின் இரண்டாம் பொய்முனை குறைந்த அளவு கவனத்தை ஈர்த்துள்ள போதிலும் கூட, அதுவும் முதல் முனையைப் போல முக்கியமானதாகவும் உண்மைக்குப் புறம்பாயும் உள்ளது. பாக்தாதில் அல்கொய்தா உள்ளதற்கான சான்றாக எந்த அடையாளமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கானவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இராணுவத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் ஒருவர்கூட இஸ்லாமியக் குழுவில் இருந்ததாக அடையாளம் காட்ட முடியவில்லை. ஈராக்கில் இருந்ததாகச் சொல்லப்பட்ட ''தீவிரவாதப் பயிற்சி முகாம்'' இருப்பதற்கான விவரம் ஒன்றுகூட கண்டுபிடிக்கப்படவில்லை. பேரழிவிற்்குரிய ஆயுதங்கள் பற்றிய கூற்றுக்கள் போலவே, நிர்வாகம் ஈராக்-அல்கொய்தா தொடர்பினை காட்டும் '' சான்றுகளை'' தயாரித்தது என்பதை எடுத்துக்காட்டும் போதியளவு ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. கணிசமான அளவில், அதனது உண்மையானதன்மை மறைக்கப்பட்டாலும் பெரும்பாலான சான்றுகள் அப்படியான உறவுகள் இல்லை என்பதையே காட்டுகின்றன. கைப்பற்றப்பட்ட அல்கொய்தா தலைவர்களிடம் அமெரிக்கா மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பாக்தாத்துடன் அப்படியான எந்தத் தொடர்பும் இஸ்லாமியக் குழு கொண்டிருக்கவில்லை என்பதற்கான சாட்சியங்களை முன்வைத்தனர் என இந்த மாத ஆரம்பத்தில் நியூயோர்க் டைம்ஸ் கூறியுள்ளது. புஷ் நிர்வாகம் இந்தச் சாட்சி பற்றிய அறிக்கையை இரகசியமாக வைத்துவிட்டு, அப்படியான தொடர்பு உள்ளது என்ற கூற்றுக்களின் அடிப்படையில்தான் போரை ஆரம்பித்தது. ஜூன் 9ம் தேதி நியூயோர்க் டைம்ஸ் இன் அறிக்கையில் (ஜேம்ஸ் றீசன் எழுதிய, ''கைப்பற்றப்பட்டவர்கள் பாக்தாத்துடன் அல்கொய்தா இணைந்து செயலாற்றியதை மறுக்கின்றனர்'') இரண்டு வெவ்வேறு நடவடிக்கைகளில் பிடிபட்ட அபு சுபைதா, கலீட் ஷேக் முகம்மதும் இதே மாதிரியான விவரங்களைத்தான் கொடுத்தனர் என்று கூறப்பட்டுள்ளது. மார்ச் 2002இல் பிடிபட்ட அபு சுபைதா மீதான CIA விசாரணை பற்றிய இரகசிய ஆவணத்தைப் படித்திருந்த அதிகாரி ஒருவர் இச்செய்தித்தாளிடம் பேசியுள்ளார். அதில் சதாம் ஹுசைனிடம் ஒத்துழைப்புக் கோரலாம் என்ற குழுவின் ஆலோசனையை தலைவரான ஒசாமா பின்லேடன் உடனடியாக நிராகரித்துவிட்டதாக பிடிபட்ட அல்கொய்தாவின் நபர் பிடித்த அமெரிக்க உளவுத்துறைக்குக் கூறியதாக தெரிவிக்கின்றார். (பின் லேடன், அல்கொய்தாவின் இஸ்லாமிய அரசுகளை உருவாக்கும் விருப்பத்திற்கு மதம்சாரா பாதிஸ்டுகளின் ஆட்சி விரும்பத்தகாததாக பின் லேடன் கருதியது அனைவரும் அறிந்ததே). டைம்ஸிற்கு உளவுத்துறை அதிகாரிகள், இந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி பிடிபட்ட கலீட் ஷேக் முகம்மதும் ஈராக்குடன் எந்த ஒத்துழைப்பையும் அல்கொய்தா வைத்திருக்கவில்லை என்று தன்னிடம் விசாரணை நடத்தியவர்களிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளனர். ''இந்த வாக்குமூலங்களை புஷ் நிர்வாகம் வெளியிடாததுடன், ஈராக்கிற்கு எதிராக போருக்கு செல்வதற்கு ஒரு காரணமாக பயன்படுத்தவிரும்பிய ஈராக்கிற்கும் அல்கொய்தாவிற்கும் தொடர்புள்ளதை ஆதரிக்கும் உளவுத்துறை அறிக்கைகளையே அடிக்கடி எடுத்துக்காட்டியது'' என்று டைம்ஸ் குறிப்பிடுகிறது. ஒரு பெயர் சொல்லப்படாத அதிகாரியை மேற்கோள்காட்டி டைம்ஸ் பின்வருமாறு எழுதியுள்ளது: ''கடந்த ஆண்டு அபு சுபைதாவைப் பற்றிய கோப்பைப் படித்த ஞாபகம் எனக்கு இருக்கிறது; நிர்வாகம் மற்றைய அறிக்கைகளையெல்லாம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அது எதைச் சொல்ல வேண்டுமென்று நோக்கம் கொண்டுள்ளதோ அதைப் பற்றி மட்டும் தகவலை வெளியிடுகிறது போலும் என்று நினைத்துக்கொண்டேன். மேலும், இது எந்த அளவிற்கு தமக்கு தேவையான முடிவிற்கு வரவேண்டிய உண்மைகளை மட்டும் பிரித்தெடுக்கின்றார்கள் என்ற முக்கிய கேள்வியை எழுப்புகின்றது. ஒரு திசையில் அழுத்தமான முடிவுகளைக் கூறுகின்ற கருத்துக்களுக்கு மிக முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், மற்றயவை பொருட்படுத்தாமல் விட்டுவிடுகின்றனர்.`` வாஷிங்டன் போஸ்ட், ஜூன் 22ம் தேதி இதழில் ஒரு இரகசிய "National Intelligence Estimate on Iraq" என்ற ஆவணத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு கட்டுரை வெளியிட்டது; பாக்தாதின் அல்கொய்தாவுடனான ஒத்துழைப்பு அமெரிக்கப் பாதுகாப்பிற்கு ஆபத்து என்று நிர்வாகத்தின் அதிகாரிகள் வாதிக்கத் திட்டமிட்டிருந்தபோது உளவுத்துறை அதிகாரிகளின் ஒருமித்த கருத்துப் பற்றி அது விளக்கியது. போஸ்டின்படி உளவுத்துறை அலுவலர்களின் அறிக்கையின்படி பாக்தாதின், அல்கொய்தாவுடனான தொடர்பு பற்றிய ஈராக்கியப் புலம்பெயர்ந்தோரின் குற்றச்சாட்டுக்கள் நம்பிக்கைக்கு உகந்தவை அல்ல என்ற எச்சரிக்கை அந்த அறிக்கையில் விடுக்கப்பட்டது. பாக்தாத் அரசாங்கத்திற்கும் ஒசாமா பின்லேடனுக்குமிடையே இருந்த ஒரே தொடர்பு அல்கொய்தா ஆரம்பிக்கப்பட்ட 1990களின் ஆரம்பத்தில் ஒரே ஒரு முறைதான் என்றும், அத்தகைய ஆரம்ப தொடர்புகள் ஈராக்கிய அரசாங்கத்திற்கும் அல்கொய்தாவிற்கும் தொடர்ச்சியான உயர்மட்ட உறவுகளை ஏற்படுத்தவில்லை'' என்றும் தெரிவிக்கப்பட்டது. 2002 அக்டோபர் 7ம் தேதி நாடு முழுவதும் ஒளிபரப்பான தொலைக்காட்சி உரையில், சின்சினாட்டியிலிருந்து பேசிய புஷ் இவ்வெச்சரிக்கைகளைப் புறக்கணித்து, ''சதாம் ஹுசைனுக்கும் அல்கொய்தாவிற்குமான தொடர்புகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளன என்று வலியுறுத்தியதோடு, தேசிய உளவுத்துறை மதிப்பீடு இதற்கான சரியான ஆதாரமில்லை என ஒதுக்கியிருந்த ஈராக் இஸ்லாமியக் குழுவின் உறுப்பினர்களுக்கு ''குண்டு தயாரித்தல், நச்சுக் கலவை தயாரித்தல், அபாயகரமான விஷ வாயுக் கலவை தயாரித்தல்'' ஆகியவற்றிற்குப் பயிற்சி கொடுத்ததாகவும் வலியுறுத்திப் பேசினார். ''எந்த நேரத்திலும் ஈராக் ஓர் உயிரியல் அல்லது இரசாயன ஆயுதத்தை பயங்கரவாதக் குழுவிற்கோ தனிப்பட்ட தீவிரவாதிகளுக்கோ கொடுக்க முடிவெடுக்க முடியும். பயங்கரவாதிகளுடனான ஈராக்கிய தொடர்பு ஈராக் அமெரிக்காவை எந்த நேரமும் விரல்ரேகைகூட விட்டுச் சென்றுவிடாமல் தாக்கிவிட அனுமதிக்கும்'' என்று கூறிய புஷ் சதாம் ஹுசைனைப் பற்றிக் கூறுகையில் ''என்னுடைய நிர்ணயிப்பின்படி சதாம் ஹுசைனை அல்கொய்தாவை தனது முன்னணி இராணுவமாகப் பயன்படுத்தக் கூடியவர் என்றே கருதுகிறேன்'' என்றார். இது நாட்டின் உளவுத்துறையினரின் தீர்ப்பு அல்ல. அவர்கள் தவிர்க்க முடியாத படையெடுப்பு நேர்ந்தால் ஈராக் அவ்வாறு கடுமையான நடவடிக்கைக்குத் தள்ளப்படலாம் என்று மட்டுமே கூறியிருந்தனர். நடந்ததைப்போல், படையெடுப்பு நிகழ்ந்தது, ஆனால் ஆயுதங்களோ பயங்கரவாதிகளோ அங்கு காணப்படவில்லை. புஷ்ஷின் உரைக்கு சில நாட்கள் முன்புதான் வெள்ளை மாளிகை ஈராக் தொடர்பான ''வெள்ளை அறிக்கை'' ஒன்றை காங்கிரசுக்கு வெளிவிட்டிருந்தது. இதில் ஈராக்கைப் பற்றி தேசிய உளவுத்துறை மதிப்பீட்டிலிருந்து சில பகுதிகளும் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் ஈராக்கிய - அல்கொய்தா தொடர்பு பற்றிய நம்பிக்கைக்குரியவையல்ல என்று எச்சரித்த பகுதிகள் நீக்கப்பட்டிருந்தன. அப்பொழுது செனட் உளவுத்துறைக் குழுவின் தலைவராக இருந்த செனட்டர் பொப் கிரஹாமின் உதவியாளர் கூறியதைப் போஸ்ட் மேற்கோளிடுகிறது: ''தங்கள் முடிவிற்கு எந்தத் தகவல்கள் ஆதரவாக உள்ளதோ அவற்றை மட்டுமே வெளியிட்டுத் தங்கள் முடிவிற்கு ஒத்துவராத தகவல்களை விட்டுவிடுகின்றார்கள் என்று செனட்டர் கிரஹாம் அபிப்பிராயப்பட்டதாக'' அவரது உதவியாளர் கூறினார். CIAயிடம் மேலதிக தகவல்கள் வெளியிடுமாறு கிரஹாம் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என போஸ்ட் கூறுகிறது. பிரதிநிதிகள் சபையும் செனட் சபையும் இணைந்து ஏமாற்ற தயாராக இருந்ததால் புஷ் நிர்வாகம் ஈராக் மீது இராணுவத்தாக்குதல் தொடுக்கலாம் என்ற அங்கீகாரத்தை அளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றின. அதை நியாயப்படுத்தும் வகையில் தீர்மானத்தில் '' செப்டம்பர் 11, 2001 நிகழ்ந்த தாக்குதலுக்கு அல்கொய்தா என்ற அமைப்புக் காரணமாக இருந்தது..., ஈராக்கிலிருப்பதாக அறியப்பட்டுள்ளது என்றும், ஈராக் '' சர்வதேச பங்கரவாதிகளுக்கு'' பேரழிவு ஆயுதங்களைக் கொடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. போருக்கான முன்னேற்பாட்டு காலம் முழுவதும் போலியான உளவுத்துறைச் செய்திகளாக அல்கொய்தா-ஈராக்கியத் தொடர்பு பற்றிய திரிக்கப்பட்ட தகவல்கள் முக்கிய பங்கை வகித்தன. ஈராக்கிய அச்சுறுத்தல் பற்றி நேரடியாகத் மதிப்பீடு செய்த கிரெக் தெல்மான் (Greg Thielmann) என்னும் சமீபத்தில் ஓய்வுபெற்ற உளவுத்துறை ஆய்வாளர்,Newsweek இற்கு ''உளவுத்துறை தவறாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக அரசாங்கத்தினுள் பெரும் வருத்தமும் கோபமும் உள்ளது. இந்த தகவலாளர்கள் அனைவரையும் இணைத்தால் மக்கள் போரைப் பற்றி ஆர்வம் காட்டுவார்கள் என நிர்வாகத்தினர் சிந்தித்திருக்கவில்லை என்று ஆழ்ந்து யோசிக்கத் தோன்றுகிறது'' என்றார். ஜூன் 9ம் தேதி வந்த நியூஸ்வீக் அறிக்கையில், ''நிர்வாகத்தின் கூற்று பற்றிய CIAயின் அவநம்பிக்கையை அவதானித்த புஷ் நிர்வாகத்தின் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் அதற்கு மாற்றாக தங்களுடைய உளவுத்துறைப் ஆய்வாளர்களைத் தனிப்பட்ட முறையில் சிறிய குழுவை ஆனால் சக்திவாய்ந்த ஒன்றை சிறப்புத் திட்ட அலுவலகம் என்ற பெயரில் அமைத்தது - அதனுடைய நண்பர்களால் பாதி நகைச்சுவையுடன் 'Cabal' என்று அழைக்கப்பட்டது'' என்று குறிப்பிட்டது. ஈராக் மீதான போரினை ஆதரிக்கும் இந்தப் பென்டகன் அதிகாரிகள் '' செப்டம்பர் 11 முக்கிய கடத்தல்காரன் முகம்மது அட்டா, பிராக்கில் (Prague) 2001ம் ஆண்டு ஏப்ரலில் ஓர் ஈராக்கிய அதிகாரியைச் சந்தித்தது பற்றிய அறிவிப்பைப் பற்றி எடுத்துக் கொண்டுள்ளனர். அந்தக் கதையில் ஒரு சிக்கல் என்னவென்று FBI குறிப்பிட்டுள்ளது. அதாவது அந்தகாலப்பகுதியில் அட்டா புளோரிடாவிற்கும் வேர்ஜீனியா பீச்சிற்கும் இடையே பயணம் செய்துகொண்டிருந்தான் அப்பொழுது (அவனுடைய வாடைக் கார் எண், ஹோட்டல் பற்றுசீட்டுக்கள் போன்றவற்றை FBI வைத்திருக்கின்றது).... பரவாயில்லை. பாதுகாப்புத்துறையினதும் மற்றும் துணை ஜனாதிபதி டிக் செனியினதும் அலுவலகப் பருந்துகள் தொடர்ந்தும் முன்னைய கருத்தை முன்வைத்தனர்...'' என்று இதழ் மேலும் கூறியுள்ளது. US News & World Report தன்னுடைய பெப்ரவரி 5ம் தேதி ஐ.நா. பாதுகாப்புக் குழுவிற்கான அமெரிக்காவின் போர் பற்றிய வாதத்தைத் தயாரிக்கையில் வெளிநாட்டு அமைச்சரான பெளவல் அல்கொய்தா பற்றிய தகவலைச் சிறிதும் பொருட்படுத்தலாயக்கில்லை என்று கருதியதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய பேச்சின் முடிவில் அதைப் புதைக்கவும் முயன்றாரென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அப்படியும்கூட NSC (தேசியப் பாதுகாப்புக் குழு) அலுவலர்கள் பெளவலை செப்டம்பர் 11 கடத்தல்காரன் முகம்மது அட்டா ஈராக் அதிகாரியொருவரைப் பிராக்கில் சந்தித்த குற்றச்சாட்டை அதனுள் சேர்க்குமாறு வலுயுறுத்தினர். பெளவல் மறுத்துவிட்டார்'' என்று தெரிவிக்கிறது.மார்ச் 16ம் தேதி போர் தொடங்குவதற்குச் சற்றுமுன், குடியரசுத் துணைத்தலைவர் செனி ''அல்கொய்தா உட்பட பல பயங்கரவாதக் குழுக்களோடு சதாம் ஹுசைன் நெடுங்காலத் தொடர்பை கொண்டுள்ளார் என்பது நமக்குத் தெரியும் '' என்று கூறினார். வாஷிங்டன் போஸ்டு ஜூன் 5ம் தேதி கட்டுரையொன்றின்படி, ("Some Iraq Analysts Felt Pressure from Cheney Visites") " செனியும் அவருடைய உதவியாளரும் கடந்த ஆண்டு பலமுறை CIA தலைமை அலுவலகத்திற்குச் சென்று ஈராக்கின் ஆயுதத் திட்டங்கள், அல்கொய்தாவுடனான தொடர்புகள் பற்றி ஆராய்பவர்களிடம் கேள்விகள் கேட்டதாகவும், சில ஆய்வாளர்கள் புஷ் நிர்வாகத்தின் கொள்கை இலக்குகளுக்குப் பொருந்துமாறு தங்கள் கருத்துக்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்திற்கு உள்ளாக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்குகின்றார்களா என்ற உணர்வைக் கொண்டார்கள்'' என எழுதியுள்ளது. உயர்மட்ட உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி, கட்டுரை தொடர்கிறது. '' கடந்த ஆகஸ்ட் மாதம் செனி நிர்வாக தலைமையை எடுத்ததில் இருந்து ஈராக்கிடம் பாரிய அழிவிற்குரிய ஆயுதங்கள் இருந்தன என்று கூறி, ஈராக்கின் மீதான இராணுவ நடவடிக்கையை வற்புறுத்தினார். உதவி ஜனாதிபதியினதும் அவருடைய தலைமை அதிகாரியான I.Lewis 'Scooter' Libby இருவரும் இங்கிருந்து (CIA இடமிருந்து) ஒரு குறிப்பிட்ட பதில் தமக்கு கிடைக்கவேண்டும் என்ற கருத்தை உணர்த்தியதாக உயர்மட்ட உளவுத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.'' ''முன்னைய மற்றும் தற்பொழுதுள்ள உளவுத்துறை அதிகாரிகள் தாங்கள் செனி மற்றும் லிப்பியிடம் இருந்து மட்டுமல்லாது பாதுகாப்புத்துறை துணைச் செயலர் போல் வொல்வோவிட்ஸ் (Paul D. Wolfowitz) உதவிச் செயலர் டக்ளஸ் பெய்த் (Douglas Feith) மற்றும் CIA இயக்குனரான George J.Tenet ஆகியோரிடமிருந்தும் புஷ் நிர்வாகம் ஈராக் மீதான யுத்தத்திற்கு செல்வதற்கு உதவுவதற்கான காரணங்களை உருவாக்க கூடிய தகவல்களையோ அல்லது அறிக்கைகளைளோ கண்டுபிடிக்குமாறு தொடர்ந்த `பேரிகை முழக்கத்தை` (drum-beat) உணர்ந்ததாக குறிப்பிட்டனர். ''தாங்கள் நினைத்ததற்கு எதிரான அணுகுமுறை வந்த அளவில் அவை மாற்றப்படவேண்டும் என்று வொல்வோவிட்ஸ் உம் மற்றவர்களும் கலந்துகொண்டு வற்புறுத்திய கூட்டங்களில் கலந்து கொண்ட முன்னாள் பாதுகாப்பு உளவுத்துறை அதிகாரி ஒருவர் அவர்கள்தாம் நமக்குப் பெரும் மனச்சுமை கொடுத்தவர்கள் (brow-beaters)'' என்று தெரிவிக்கிறார். '' சில இணைப்புத் துறைகள் கூட்டங்களில் வொல்போவிட்ஸ் ஆய்வாளர்களின் வேலையை இகழ்வுடன் நோக்கினார் என்றும் அவர் தெரிவித்தார். வொல்போவிட்ஸ் மற்றும் பென்டகனிலிருந்த பலருக்கு ஹுசைனுக்கும் ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா பயங்கர வலைப்பின்னலுக்கும் இடையில் உள்ள தொடர்பை நிரூபிக்க இரகசிய தகவல்களை கண்டுபிடிப்பது முக்கிய புள்ளியாக இருந்தது.'' சதாம் ஹுசைனை அல்கொய்தாவுடன் தொடர்புபடுத்தும் இந்த போலிச் `சான்றுக்கான` பிரச்சாரம் போருக்குச் சில மாதங்களுக்கு முன் மட்டும் ஆரம்பிக்கவில்லை என்று போஸ்ட் கூறுகிறது: ''பென்டகன் மற்றும் உலக வர்த்தக மையம் மீதான தாக்குதல்கள் நடைபெற்றபோதே, வொல்வோவிட்ஸ் சில பென்டகன் உயரதிகாரிகளிடம் ஈராக் இத்தாக்குதலுக்கு பொறுப்பாக இருக்கலாம் என தான் நினைப்பதாக தெரிவித்தார்: ''நான் என தலையைச் சொறிந்துகொண்டேன், ஏனென்றால் எல்லோருமே அல்கொய்தாதான் காரணமாக இருக்கும் என்று நினைத்திருந்தனர். ஓராண்டிற்குள் நாங்கள் அல்கொய்தா-ஈராக் பற்றிய தொடர்பை ஆராய்வதற்கான விஷேட பணியாளர்களை பெற்றோம். மிகுந்த ஆக்ரோஷத்துடன் அத்தேடுதல் நடைபெற்றது'' என்றார் அப்படிப்பட்ட கூட்டமொன்றில் கலந்துகொண்ட ஒரு முன்னாள் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி. இதேபோல் நியூயோர்க் டைம்ஸும், ஜூன் 5ம் தேதி வெளியிட்ட கட்டுரை ஒன்றில் (''உதவியாளர் போரை நியாயப்படுத்த ஆவணங்களை மாற்றும் முயற்சியில்லை என்று மறுக்கிறார்'') ''பாதுகாப்புத்துறை கொள்கை உதவிச் செயலர் டக்ளஸ் ஜே. பெய்த், நாட்டின் உளவுத்துறை நிறுவனங்கள் கவனிக்காமல் விட்டிருக்கக்கூடும் என்றும் கருதியதால் தன்னுடைய அலுவலகத்தில் செப்டம்பர் 11, 2001 இற்குப்பிறகு ஈராக்கிற்கும் மற்றைய நாடுகளுக்கும் இடையிலான தீவிரவாதத் தொடர்புகள் பற்றி அது ஆராய ஒரு சிறிய உளவுத்துறைக்குழு ஒன்றை உருவாக்கியதாக குறிப்பிட்டதாக'' எழுதியுள்ளது. டைம்ஸிடம் பென்டகன் அதிகாரிகள் '''இக்குழு மிக ஆற்றல்வாய்ந்த கணனிகளையும் புது மென்பொருளையும் பயன்படுத்தி பயங்கரவாதத்திற்கு ஈராக்கின் பரந்த தொடர்புகளைக் காட்டும் விவரங்கள் தொகுப்பாக கிடைக்குமா என்ற நோக்கத்தில் ஒவ்வொரு உளவுத்துறை நிறுவனத்தின் ஆவணத்தையும் அறிக்கையையும் அலசிப் பார்த்தது'' எனக் கூறினார். ''இக்குழுவின் முக்கிய கண்டுபிடிப்புக்கள் ஈராக்கிற்கும் அல்கொய்தாவிற்குமிடையே ஐயத்திற்குரிய தொடர்புகள் இருக்கும் என்பது ஆகும். இம்முடிவை CIAவும் DIAஐயும் சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தன'' என்று Times அறிக்கை கூறுகிறது. உண்மையில் பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அதிகாரிகளின் ஈராக் - அல்கொய்தா தொடர்பு பற்றிய உந்துதல் செப்டம்பர் 11க்கும் முன்னரே இருந்தது. புஷ்ஷின் ஈராக் போருக்கு ஆதரவு கொடுக்கும் செய்தித்தாளான Wall Street Journal இன் தலையங்கம் கடந்த அக்டோபரில் ''2001ல் புஷ் நிர்வாகம் ஆட்சியைப் பிடித்த அளவில், பென்டகன் அதிகாரிகள் உளவுத்துறை அதிகாரிகளிடம் பாக்தாதின் பயங்கரவாதத் தொடர்பு பற்றி நச்சரிக்கத் தலைப்பட்டுவிட்டனர்'' என எழுதியது. Journal மேலும் ''ஏப்ரல் 2001ல் அல்கொய்தா பற்றி விவாதிக்கக் கூட்டப்பட்ட மூத்த நிர்வாக அதிகாரிகள் கூட்டம் ஒன்றில் ஓர் உயர் பாதுகாப்புத்துறை அதிகாரி திரு.கிளார்க்கை (Richard Clarke, பயங்கரவாத்திற்கு எதிரான தேசிய பாதுகாப்பு குழுவின் இணைப்பாளர்), ஈராக் திரு. பின்லேடனுடைய குழுவோடு தொடர்பு கொண்டுள்ளதா என்று கேட்டார். அறையில் இருந்த இருவர் கிளார்க் `இல்லை` எனக் கூறியதாகத் தெரிவிக்கின்றனர்.''என எழுதியது.மேலும் நிர்வாகம் ஈராக்கை 1993 உலக வர்த்தக மையத்தின் தாக்குதலுடன் தொடர்புபடுத்த முனைப்புடன் முயற்சித்தமை பயனற்றுப் போயிற்று என அக்கட்டுரை கூறுகிறது. உலக வர்த்தக மையத்தின் தாக்குதலுக்கு முன்பே உளவுத்துறைத் தகவலைத் திரிக்கும் முயற்சி ஆரம்பமாகிவிட்டதுடன், செப்டம்பர் 11க்குப் பதிலடியாக ஈராக்கின் மீதான போரை நியாயப்படுத்துவது பொய்யை பென்டகன் வழங்கியுள்ளது. ஈராக்கின் மீது படையெடுக்க வேண்டும் என்ற திட்டத்திலேயே புஷ் நிர்வாகம் ஆட்சிக்கு வந்தது. ஈரக்கிடம் பாரிய அழிக்குரிய ஆயுதமோ பயங்கரவாத தொடர்போ கிடையாது. அதனது நோக்கம் ஈராக்கின் பாரியளவு எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதன் மூலம் தனது பொருளாதார, பூகோளஅரசியல் போட்டியாளாராக வரக்கூடியவர்களுக்கு எதிராக தனது மூலோபாய நலன்களை பாதுகாத்துக்கொள்வதாகும். ஆரம்பத்திலிருந்தே ஒரு ஆக்கிரமிப்புப் போர் நடத்தத் திட்டம் தீட்டியதோடு அப்படிப்பட்ட போரை நடத்த ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்க அல்லது தோற்றுவிக்க போலிக் காரணத்தையும் தேடியது. செப்டம்பர் 11 நிர்வாகத்திற்குத் தேவையான ஒரு போலிச் சாக்கைக் கொடுத்தது. அப்பாவிமக்களின் இழப்பினால் அமெரிக்க மக்கள் அடைந்த அதிர்ச்சியையும் துக்கத்தையும் சுரண்டிக்கொண்டு பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே ஈராக்கிற்கெதிரான போருக்குத் நடவடிக்கைகள் தயார்படுத்தப்பட்டன. செய்தி ஊடகங்கள் ஆரம்பத்திலிருந்தே இந்தப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. இவ்வகையில் மிகவும் குறிப்பிடத்தகுந்த உண்மை வெளிப்பாடுகளில் ஒன்று நேட்டோவின் முன்னாள் தளபதியும், ஓய்வுபெற்ற ஜெனரலுமான வெஸ்லி கிளார்க் ஜூன் 15 அன்று "Meet the Press" நிகழ்ச்சியில் வழங்கிய வாக்குமூலம் ஆகும். ''2001 இன், செப்டம்பர் 11 தாக்குதலை அடுத்து உடனடியாக செப்டம்பர் 11 ஐ சதாம் ஹுசைனுடன் தொடர்புப்படுத்த நடந்தது'' என்றார் கிளார்க். இந்தக் கருத்து நிகழ்ச்சியை நடத்திய ரிம் ரஸ்சேர்ட் (Tim Russert) இனை கீழ்க்கண்டவற்றே கேட்கத் தூண்டியது. ரஸ்சேர்ட்: ''யாரால்? யார் அதைச் செய்தார்கள்?''. கிளார்க்: ''வெள்ளை மாளிகையிலிருந்தும், வெள்ளை மாளிகையைச் சுற்றிலுமிருந்தவரிடமிருந்தும் அது வந்தது. நான் செப்டம்பர் 11 அன்று ஒரு அழைப்புப் பெற்றேன். நான் CNN இல் இருந்தேன். என்னுடைய வீட்டிற்கு வந்த தொலைபேசித் தகவல் ''நீங்கள் இதை தொடர்பு உடையதாகக் கூறவேண்டும். இது ஒரு அரசாங்க ஆதரவுடனான பயங்கரவாதம். இது சதாம் ஹுசைனுடன் தொடர்புப்படுப்படவேண்டும்''. என கூறியது. நான் சொன்னேன், ''சரி, நான் அதைச் சொல்லத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு உங்கள் ஆதாரம் எங்கே உள்ளது? எனக்கு அதற்கான ஆதாரம் கொடுக்கப்படவேயில்லை.'' மான்ஹட்டன் கீழ்ப்பகுதியில் நெருப்பு இன்னமும் எரிந்துகொண்டிருக்கும்போதே, கடத்தல்காரர்கள் அடையாளம் காணப்படுவதற்கு முன்பே நிர்வாகம் செய்தி ஊடக ஒருங்கிணைப்புடன் ஈராக்கின் மீது குற்றஞ்சாட்டிப் பிரச்சாரத்தைத் ஆரம்பித்தது. செய்தி ஊடக வர்ணனையாளர்கள், வல்லுனர்கள் ஆகியோர் கூப்பிடப்பட்டு ஒரு சிறிய சான்றுகூட இல்லாமல் ஈராக்தான் தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தது என்று தொடர்புப்படுத்தும் குறிப்புக்களைக் கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். பெரும்பாலோர் புஷ் நிர்வாகத்தின் போர்க் குழுவிற்குப் பிரச்சாரக் கருவியாக அரசாங்கத்தோடு ஒத்துழைத்தனர். எல்லா கணக்குகளின்படியும் ஈராக்கியப் போருக்குச் சிற்பியாக உள்ள துணை ஜனாதிபதி செனி கடந்த வாரம் போரில் முக்கிய நன்மை பெறுவோரான Independent Petroleum Assocaition of America நண்பர்களின் கூட்டத்தில் அரசாங்கத்தின் மதிப்பிழந்த கருத்தை மீண்டும் திரும்ப கூறினார். ''பல பழைய நண்பர்களும் வாடிக்கையாளரும் உள்ள இந்தக் கூட்டத்தில், செனி '' புஷ் நிர்வாகம் பயங்கரவாத அமைப்புக்களுக்கும் அவற்றை ஆதரிக்கும் நாடுகளுக்கும் இடையில் செப்டம்பர் 11க்கு முன்னிருந்த செயற்கையான வித்தியாசப்படுத்தல்களை நிராகரித்து வெளிநாட்டுக்கொள்கையில் ஒரு புதிய சகாப்தத்தை கொண்டுவந்துள்ளது. மேலும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகள் மற்றும் அவர்களுக்குப் புகலிடம் கொடுக்கும் நாடுகள் ஆகியவை பயங்கரவாதிகளைப் போலவே குற்றம் இழைத்தவர்களாகக் கருதப்படுவர் என்று புஷ் நிர்வாகம் தெளிவாக்கிவிட்டது. இன்று புஷ் கொள்கையின் முக்கியத்துவத்தைப்பற்றி உலகில் எவரேனும் சந்தேகம் இருந்தால் ஈராக்கில் சதாம் ஹுசைனின் அரசாங்கத்தின் விதியைப் பற்றி நினைத்துப் பார்க்குமாறு அவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார் ஈராக்கிற்கும், அல்கொய்தாவிற்கும் இடையேயுள்ள வித்தியாசம் ''செயற்கையல்ல'', ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்த புஷ் நிர்வாகத்தால் உற்பத்தி செய்யப்பட்ட தொடர்புதான் ''செயற்கை'' என்பது இப்பொழுது மிகத் தெளிவாகிவிட்டது. |