World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US proconsul cancels municipal election in Iraq

ஈராக் நகரசபை தேர்தலை ரத்து செய்த அமெரிக்க அதிகாரிகள்

By Peter Symonds
23 June 2003

Back to screen version

ஈராக்கின் தெற்குப் பகுதி நகரான நஜாப்பில் நடைபெறவிருந்த மேயர் தேர்தலை ரத்து செய்ததன் மூலம் புஷ் நிர்வாகம் இந்த நாட்டில் அடையாளத்திற்குகூட ஜனநாயகத்தை அனுமதிக்கப் போவதில்லை என்பதை மீண்டும் தெளிவாக பிரகடனப்படுத்திவிட்டது.

சென்ற சனிக்கிழமையன்று மேயர் தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெறுவதாக இருந்தபோதிலும், வாக்குப்பதிவின் ஆரம்பக் கட்டத்திலிருந்து இறுதிவரை அமெரிக்க இராணுவம் நாடக பாணியில் நடந்து கொண்டது. கடற்படை பிரிவு தளபதியான லெப்டினன்ட் கேனல் கிறிஸ்தோபர் கான்லின் உள்ளூர் தொலைக்காட்சியில் தோன்றி தேர்தல் நடப்பதை அறிவித்தார். இதன்பின்பு வாக்காளர்கள் தங்களை பதிவு செய்து கொள்வதற்கு உதவியாக, சென்ற மாத இறுதியில் அமெரிக்கப் படைகள் அங்குள்ள பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டனர். இதற்காக மத்திய அலுவலகம் ஒன்றும் வாக்குகளை எண்ணுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.

மக்கள் தொடர்பு வெறும் காட்சிப் பொருள் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதர எல்லா நகரங்களிலும் அமெரிக்கா தலைமையில் இயங்கும் ஆக்கிரமிப்பு படைகள் நகரசபை நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர். நஜாப் நகர் மட்டுமே விதிவிலக்காக முதலாவது பகிரங்க தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பதினெட்டு வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், ஒவ்வொருவருக்கும் உள்ளூர் தொலைக்காட்சி நிலையத்தில் சரிசமமான நேரம் ஒதுக்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

வாக்காளர்கள் பதிவு துவங்கியதும் அமெரிக்க இராணுவத்தின் சார்பில் ஈராக் நிர்வாகத்தை நடத்தி வருகின்ற மூன்றாவது போல் பிரிமர் (Paul Bremer III) திடீரென்று உள்ளூர் தளபதியின் முடிவை ரத்து செய்து தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததுடன், ஒரு வாரத்திற்கு தேர்தலை காலவரையின்றி தள்ளி வைத்தார். முறையான தேர்தல் சட்டமோ நடைமுறைகளோ இல்லாமல் தேர்தலை நடத்துவது ''உசிதமானதல்ல'' என்று அவர் அறிவித்தார். நஜாப் நகரில் உள்ள அமெரிக்கப் படைகள் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்வது மிக கடினமானது. உள்ளூர் தளபதி மேஜர் டேவிட் தாத் மிகவும் கவனமாக நியூயார்க் டைம்ஸ் நிருபருக்கு பேட்டியளித்தார். ''இந்ந நகரம் ஸ்திரத்தன்மையோடு உள்ளது. தேர்தலுக்கு நஜாப் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று நாங்கள் நினைத்தோம்'' என்று அவர் குறிப்பிட்டார். போல் பிரிமர் தேர்தலை தள்ளி வைப்பதற்கு முடிவு செய்ததற்கான உண்மையான காரணம், மேயர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று கருதப்பட்ட 51 வயதான ஆசாத் சுல்தான் அபுலிலால் வாஷிங்டன் ஏற்றுக் கொள்ளாத விரும்பாத தலைவர் என்பதுதான் ஆகும்.

இந்தப் பிரச்சனைகள் குறித்து பிரிமர் அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி ''நியூயார்க் டைம்ஸ்'' நிருபருக்கு பேட்டியளித்தபோது ''ஈராக்கில் பல பகுதிகளில் செயல்பட்டு வருகின்ற அமைப்பு ரீதியில் வலுவான அரசியல் குழுக்கள், அமெரிக்காவை ஏற்றுக் கொள்ளாதவர்கள், தீவிரவாதிகள் மற்றும் பாத் கட்சியில் மிச்சம் இருப்பவர்கள் ஆகியோர் மற்றைய குழுக்களிலும் பார்க்க அனுகூலமாக உள்ளார்கள்'' என்றார். இதனை வேறு வார்த்தைகளில் கூறினால், அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ள எந்த தேர்தல்களாகவே இருந்தாலும் அமெரிக்காவின் நம்பிக்கையை பெறாத எவரும் நகரசபைத் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதில் அமெரிக்கா மிக கவனமாக செயல்பட்டு வருகின்றது என்பதாகும்..

ஜிலால் ''பாத்'' கட்சியைச் சேர்ந்தவரோ அல்லது ''தீவிரவாதியோ'' அல்லர். ஈராக்கில் ஷியாக்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டுவரும் இஸ்லாமிய புரட்சி உச்ச கவுன்சிலின் (SCIRI) உறுப்பினராக இருக்கின்றார். இந்த அமைப்பு 1991 ம் ஆண்டு சதாம் ஹூசேனுக்கு எதிராக நடத்திய கிளர்ச்சி தோல்வியடைந்த பின், அவர் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பின்பு நாட்டை விட்டு வெளியேறினார். SCIRI ஈரானின் ஆதரவு அமைப்பு என்று தற்போது அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் 1998 ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றம் இயற்றிய ஈராக் விடுதலை சட்டத்தின்படி அமெரிக்க ஆதரவையும் பண உதவியையும் பெறுவதற்கு தகுதிபடைத்த ஆறு ஈராக் எதிர்கட்சி குழுக்களில் ஒன்றாக இந்த SEIRI அமைப்பு அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

SCIRI அமைப்பானது பெரும்பாலான ஈராக் மக்களை கொண்டு அமெரிக்க துருப்புக்களை ஈராக்கிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரி வருகிறது. சென்ற வியாழக்கிழமையன்று நஜாப் நகரில் 1000 க்கு மேற்பட்ட மக்கள் திரண்டு இத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு கண்டணம் தெரிவித்தனர். மிகுந்த மிதவாத அடிப்படையில் நிதானமான அறிக்கை ஒன்றை திலால் அப்போது ஊடகங்களுக்கு வெளியிட்டார். ''எங்களுக்கு அவர்கள் சுதந்திரம் தராவிட்டால் நாங்கள் என்ன செய்வது? எங்களுக்கு பொறுமை இருக்கின்றது. அந்த பொறுமை நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாது'' என்று திலால் அப்போது எச்சரிக்கை செய்திருந்தார்.

நஜாப் தேர்தல் ரத்து செய்யப்பட்டது திடீரென்று தொடர்பு எதுவும் இல்லாமல் நடந்துவிட்ட சம்பவம் அல்ல. சென்ற மாதம் பிரிமர் பாக்தாத் வந்து சேர்ந்தவுடன் ஒரு கூட்டத்தை நடத்தியபோது, ஈராக்கிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும், இதர தலைவர்களும், ஈராக்கில் இடைக்கால நிர்வாகம் அமைக்க வேண்டுமென்றும், அந்த நிர்வாகம் அமெரிக்கப் படைகளுக்கு ஆலோசனை கூறும் அமைப்பாக செயல்பட வேண்டும் என்றும் பிரிமர் குறிப்பிட்டார். இப்படி அவர்களை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக 25 முதல் 30 ஈராக்கியர்கள் அடங்கிய ஆலோசனைக்குழுவை தான் தேர்ந்தெடுக்கப்போவதாக பிரிமர் அறிவித்தார். அப்படி தான் நியமிக்கும் குழுவின் ஆலோசனைகளை ''விரிவான அடிப்படையில் ஏற்றுக் கொள்வதாகவும்'' ஆனால் எந்த முடிவும் கூட்டணிப் படைகளின் நலன்களுக்கோ அல்லது ''ஈராக் மக்களின் சிறப்பான நலன்களுக்கோ'' முரணாக இருந்தால் அந்த முடிவுகளை தான் ரத்து செய்து விடுவதாகவும் அறிவித்தார். ஆதலால் தேசிய தேர்தல்கள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

பிரிமர் பாத் கட்சிக்கு தடை விதித்ததுடன், அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார். வாஷிங்டனுக்கு விரோதமானவர்கள் என்று கருதப்படுபவர்கள் பாத் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களை ஈராக்கில் எந்தப் பதவியிலும் நியமிப்பதை தடுக்கும் வகையில் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் செய்தி ஊடகங்கள் மீது அமெரிக்காவின் பிடியை இறுக்குகின்ற வகையில் பிரிமர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். அவர், சென்றவாரம் மிகுந்த பரவலான ''முன்தணிக்கை'' கட்டளையை பிறப்பித்ததுடன் உள்நாட்டில் குழப்பங்களை ஊக்குவிப்பது, தடைசெய்யப்பட்ட பாத் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது அல்லது கூட்டணிப் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிடுவதற்கு தடைவிதித்தார். இப்படி தடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற செய்தி ஊடகங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு அச்சகங்கள் மற்றும் அலுவலகங்கள் பறிமுதல் செய்யப்படும். இந்த தடைகளின் கீழ் கைது செய்யப்படும் தனிநபர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு ஓராண்டுவரை சிறைத்தண்டனையும் 1000 அமெரிக்க டொலர்கள் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த புதிய விதிமுறைகள் செயல்படுத்தப்படுவதற்கு முன்னரே அமெரிக்கப்படைகள் நஜாப் நகரில் உள்ள சதா-அல்-நவுமா பத்திரிகை அலுவலகங்களில் புகுந்து திடீர் சோதனைகளை நடத்தினார்கள். அவர்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்குமாறு மக்களை கேட்டுக்கொண்ட இந்த பத்திரிகையின் பிரதிகளை பறிமுதல் செய்ததுடன், குறைந்த பட்சம் நான்கு ஊழியர்களை கைது செய்து காவலில் வைத்தனர். இதுபற்றி 32 வயதான காலர் அலி ஷியாத் என்ற காவலர் தெரிவிக்கையில், ''அமெரிக்க விசாரணை அதிகாரிகள் இந்த பத்திரிகையின் ஊழியர்களை கட்டிப்போட்டு நான்கு நாட்களாக விசாரித்தனர்'' என்றார்.

பாக்தாத்தில் செயல்பட்டுவரும் செய்தி ஊடகங்கள் பிரிமரின் முன்தணிக்கை நடவடிக்கைகளுக்கு ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்தன. பரவலாக மக்களிடையே விற்பனை செய்யப்பட்டு வருகின்ற அஸ்ஸா பத்திரிகை தனது தலையங்கத்தில் ''பிரிமர் ஒரு பாத் கட்சியைச் சார்ந்தவர்'' என்று தலைப்பிட்டு இரண்டு கட்டுரைகளை வெளியிட்டது. ''நான்கு மாதங்களுக்கு முன்னர் நாங்கள் அமெரிக்காவின் ஏஜென்ட்டுகள் என்று எங்கள் மீது மிக எளிதாக ஒரு குற்றச்சாட்டை கூறினார்கள். இப்போது எங்கள் தலையில் முன்டா கட்டி நாங்கள் சதாம் ஹூசேனின் ஏஜென்ட்டுகள் என்றும், பாத் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் கூறுகின்றார்கள்'' என்று இந்த பத்திரிகை எழுதியுள்ளது.

இந்த விமர்சனங்கள் ஈராக்கின் உண்மையான நிலையை தெளிவாக உணர்த்துவதாக அமைந்திருக்கவில்லை. அடிப்படை ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுவது மற்றும் சமூகத்தின் வறுமைநிலை ஆகியவற்றை மிகுந்த மங்கலான முறையில் காட்டுவதாகத் தான் இது போன்ற விமர்சனங்கள் அமைந்திருக்கின்றன. பிரிமர் சர்வாதிகார முறைகளில் நிர்வாகத்தை நடத்தி வருகிறார். ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்காவிற்கு காலனி ஆதிக்க முறையில் ஆட்சி நடத்தி வருவதற்கு உள்நாட்டில் எந்த அரசியல் ஆதரவு எதுவும் கிடையாது என்பது இது போன்ற நடவடிக்கைகள் மூலம் தெளிவாகத் தெரிகின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved