World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியாSilicosis deaths in Pondicherry, India Women victims of lack of safety standards இந்தியாவின், பாண்டிச்சேரியில் சிலிகோசிஸ் சாவுகள், பாதுகாப்பற்ற நிலையால் பலியான பெண்கள் By Kranti Kumara கடந்த ஆண்டிற்குள்ளே, தென்னிந்தியாவில் உள்ள பாண்டிச்சேரி மாநகர் அருகில் 7-இளம் பெண்கள் சிலிகாசிஸ் நோயால், பலியாகிவிட்டனர். கண்ணாடித் தொழிலில் பயன்படுத்தப்படும் சிலிகா கச்சாப் பொருளிலிருந்து வெளிப்படும், தூசிகளை சுவாசிக்க நேர்வதால் மூச்சுக்குழாய்க் கோளாறுகள் ஏற்பட்டு உடல் நிலை மோசமாகி மாண்டிருக்கின்றனர். இப்பெண்கள் அனைவரும் பாண்டிச்சேரி அருகில் உள்ள பல்லார்பூர் இன்டஸ்ரீஸ் லிமிடெட் (BILT) என்ற கண்ணாடி கன்டெய்னர்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றும் மற்றும் அருகாமையில் உள்ள வில்லியனூர் மற்றும் அரும்பார்த்தபுரத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இக்கிராமங்களிலுள்ள ஏனைய பெண்கள் பலரும் சிகிச்சை செய்யமுடியாத இந்த நோய் பரவி பல்வேறு கட்டங்களில் உள்ளனர். பத்திரிகைச் செய்திகளின்படி, இந்த இரண்டு கிராமங்களையும் சேர்ந்த ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் ஒரு பெண் இந்த சிலிகோசிசால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இடைவிடாத மார்புவலி, இருமல், மூச்சுத்தணறல் மற்றும் பசியின்மை நீடித்தல் போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 1992-ம் ஆண்டு மிகுந்த பரபரப்போடு BILT- கண்ணாடிக்குடுவைகள் தொழிற்சாலை துவக்கிவைக்கப்பட்டது. உள்ளூர் பொருளாதாரத்திற்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றும் வரி வருவாய் அதிகம் வரும் என்றும் வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேச அரசாங்கம் போற்றிப் புகழ்ந்தது. உண்மையில் அந்தத் தொழிற்சாலை மிகப்பெரும் அளவில் ஒப்பந்தத் தொழிலாளர்களையே பணியில் அமர்த்தியது. உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் மூலம் 1500- தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது. இந்தத் தொழிலாளர்களை ஒரு நாளைக்கு 8-முதல் 12-மணி நேரத்திற்கு தினக்கூலி ரூ-14-முதல்ரூ-24-வரை மட்டும் ( சுமார் 0.30 முதல் 0.50- அமெரிக்க டாலர்!) கொடுத்து சுரண்டுவது கொடுமையானது. அருகாமையில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து தொழிலாளர்கள் வருகின்றனர். ஆண்களுக்கு கச்சாப் பொருட்களை ஏற்றி இறக்கும் பணிகள் தரப்படுகின்றன. பெண்கள் பெரும்பாலும் மணல்பிரிப்பு பகுதியில் சிலிகாவைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலிகா தூசியை சுவாசிப்பதால் வரும் ஆபத்துக்கள் அனைவரும் அறிந்ததுதான். பணியாற்றும் இடங்களில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப் படுத்தப்பட்டால் சிலிகோசிஸ் நோயைத் தடுக்க முடியும். அப்படி இருந்தும் தொழிலாளருக்கு எந்த விதமான பாதுகாப்பும் தரப்படவில்லை. சிலிகாவைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் சிலிகா தூசியை சுவாசிப்பதால் வரும் ஆபத்தை முற்றிலும் அறிந்து கொள்ளாமலேயே பணிபுரிந்து வருகின்றனர். வேறு வழியில்லா பிழைப்பும் குழந்தை உழைப்பும் சிலிகோசிஸ் நோயினால் மடிந்த இளம் பெண்களில் பலர் அந்தத் தொழிற்சாலையில் குழந்தைத் தொழிலாளராகப் பணியில் சேர்ந்தவர்கள். இந்தியாவில்தான் உலகிலேயே மிகப்பெரும் அளவில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. சர்வதேச உதவி அமைப்புக்கள் இந்தியாவில் 60- முதல் 100-மில்லியன் சிறுவர்கள் தொழிலாளர்களாக உள்ளதாக மதிப்பீடு செய்துள்ளன. இந்தப் பிள்ளைகளின் வளரும் பருவம் மட்டுமே தட்டிப் பறிக்கப்படவில்லை, அவர்கள் முதலாளிகள் தயவில் வாழும் நிலையிலும் தள்ளப்பட்டுள்ளனர். ஏழை உழைக்கும் குடும்பங்களை வறுமை எந்த அளவிற்கு விரட்டிக்கொண்டிருக்கிறது? என்பதையும் அது குழந்தைத் தொழிலாளரை உருவாக்குகின்றது என்பதையும் இளம் பெண் கவிதாவின் கதை தெளிவாக விளக்குகிறது. அந்தப்பெண் வில்லியனூர் கிராமத்தைச் சேர்ந்தவள். அவரது தாய் சுசீலாவும், தந்தை செல்வராஜும், தினக் கூலிக்கு கட்டுமானத் தொழிலில் வேலைசெய்பவர்கள். அவர்களது கூலி ரூ-50- ,தோராயமாக ஒரு அமெரிக்க டாலருக்குச் சமம், இவ்வளவு குறைந்த தினக்கூலியைக்கொண்டு மூன்று குழந்தைகளைப் படிக்க வைக்கவும் இயலவில்லை, சாப்பாட்டிற்கும் போதுமானதாக இல்லை. இதன் விளைவாக அந்தக் குடும்பம் அடிக்கடி இரவில் பட்டினி கிடக்க வேண்டிவந்தது. இப்படிப்பட்ட தாங்க முடியாத நிலையிலிருந்து குடும்பத்திற்கு ஓரளவு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கவிதா, 14-வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திக் கொண்டு வேலை தேடத்துவங்கினார். அருகாமையில் உள்ள BILT- கண்ணாடித் தொழிற்சாலையில் ஒரு ஒப்பந்தக்காரர் மூலம் வேலையில் சேர்ந்தார். 10-மணி நேரப்பணிக்கு தினசரி ரூ-24- ஊதியம் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து, அவரது இளைய சகோதரி சித்ராவும், அதே கண்ணாடி தொழிற்சாலையில் சேர்ந்தார். தொழிற்சாலையில் சேர்ந்து 4-ஆண்டுகளுக்குப் பின்னர், 1998-ம் ஆண்டு கவிதாவிற்கு, கடுமையான மார்புவலி மற்றும் உடல் வலியும் ஆரம்பமானது. படுவேகமாக அவரது உடல் நிலை மோசமடையத் துவங்கியது. 1999- நடுவில் அவரது உடல் மெலிந்தது, உடல் எடையை இழக்க ஆரம்பித்தார், விரைவில் இடைவிடாத இருமலால் பாதிக்கப்பட்டார். அவர் மருத்துவர்களை நாடியபொழுது, அவர்கள் அவரது நோய் குறித்து தவறாக மதிப்பீடு செய்து காச நோய் (TB) என்று கூறிவிட்டனர் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவமனை செல்வதற்குப் பணித்தனர். மருத்துவமனையில் கொடுத்த மருந்தாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதில் வியப்பிற்கு இடமில்லை. உடல் நலிவுற்ற போதும் கண்ணாடித் தொழிற்சாலையில் தொடர்ந்து பணியாற்றினார். அவர் அறியாமலேயே அவரது நோய் கடுமையாகியது. 2002- ஏப்ரல் இரவில், கவிதாவுக்கு கடினமான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதிகச் செலவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கான செலவு ரூ-7000-ஐக் குடும்பம் ஏற்க வேண்டிவந்தது. அவரது உடல் நிலை தேறாததால் இரண்டாவது அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. 12-நாட்கள் துன்பத்தில் சிக்கித்தவித்த கவிதா, இறுதியாக அவரது 22-வது வயதில் இறந்துவிட்டார். அவரது மரணச் சான்றிதழில் காச நோயினால் இறந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். கவிதா, இறந்த பின்னர் சிறிது காலம் கழித்து, கவிதாவின் மூன்று தோழிகள், அதே தெருவில் வசிப்பவர்கள், அவர்களும் கண்ணாடி ஆலையில் பணியாற்றியவர்கள், இறந்து விட்டனர். இறந்தவர்களில் ஒருவரான உமாவின் சவ விசாரணை அறிக்கையில் சிலிகோசிஸ் நோயினால் மரணம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏழை மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் அவர்களது விருப்பம் போல் குழந்தைகளை வேலைகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கற்பனை பொய்யானது என்பதை நிரூபிக்கும் வகையில் உமாவின் தாய் செல்வி மிகுந்த துயரத்தோடு ஒரு நிருபருக்கு பேட்டியளித்தார். ''உமா நல்ல மாணவி, குடும்பத்தை நடத்த பணம் பற்றாக்குறையில் இருக்கிறதே என்பதற்காக அவளை நான் வேலைக்கு அனுப்பினேன். எனது குழந்தையை நான் இழந்ததைவிட பசியைத் தாங்கிக் கொண்டிருக்கலாம்'' என்று அவர் கூறினார். தங்களது குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக வாங்கிய கடன்களால் அந்தக் குடும்பங்கள் தற்போது கடன்களில் சிக்கிக் கொண்டுள்ளன. அவர்களின் குழந்தைகள் சம்பாதித்த ஊதியங்களைவிட கடன் தொகை பல மடங்கு கூடுதலாகப் பெருகி விட்டது. அரசாங்கத்திடமிருந்தோ, அல்லது தொழிற்சாலையிலிருந்தோ, எந்தவிதமான நஷ்ட ஈடும் இந்தக் குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை. புதுவை யூனியன் பிரதேச தொழிலாளர் துறை ஆணையர் ரத்தன் சிங் அளித்துள்ள பேட்டி பாதிக்கப்படும் தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது எவ்வளவு கொடுமையான அலட்சியத்தோடு அரசாங்கம் நடந்துகொள்கிறது என்பதைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. ''நஷ்ட ஈடு கொடுப்பதைப் பற்றி நாம் சிந்திக்கும் முன்னர் அந்த இரண்டு கிராமங்களைச்சேர்ந்த பெண்களது நோய் மற்றும் மரணத்திற்குரிய காரணத்தை விசாரித்து அறிந்தாக வேண்டும்'' என ரத்தன் சிங் கூறியுள்ளார். விவகாரங்களை சிக்கலாக்குகிற வகையில் கண்ணாடித் தொழிற்சாலை பல முறை நிர்வாகம் கைமாறியுள்ளது. தற்போது ''ஹிந்துஸ்தான் தேசிய கண்ணாடி மற்றும் தொழிற்சாலைகள்'' என்ற பெரிய கம்பெனியின் ஓர் அங்கமாக உள்ளது. புதிய நிர்வாகம் தனக்கு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பாக எந்த பொறுப்பும் இல்லை என்று அறிவித்து விட்டது. அரசாங்கம் "நியாயமற்ற" கோரிக்கைகளைத் திணிக்க முயன்றால் தொழிற்சாலையை மூடிவிடப் போவதாகவும் அச்சுறுத்தியுள்ளன. ஏஸ் (Ace) கண்ணாடி தொழிற்சாலை என்று தற்போது மறுபெயர் சூட்டப்பட்டுள்ள நிறுவனத்தின் தலைமை பொது மேலாளரான ராஜன் சால்வி கருத்து தெரிவிக்கும் போது தொழிற்சாலை மூடப்பட்டால் வேலை வாய்ப்பு போய்விடும் என்றும் ரூ-19- கோடி வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளார். அந்த தொழிற்சாலையில் செயல்பட்டுவருகின்ற ஒரே தொழிற்சங்கம் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை (CPI-M) சார்ந்த CITU ஆகும். அந்த தொழிற்சாலையில் நிலவுகின்ற வருந்தத்தக்க நிலவரம் குறித்து அந்த தொழிற்சங்கம் எந்தவிதமான போராட்டத்தையும் நடத்தவில்லை. (1998-ல் ஒரு முறையும், 1999-ல் ஒரு முறையும்) பாண்டிச்சேரி தொழிலாளர் துறைக்கு கடிதங்கள் எழுதுவதோடு தனது நடவடிக்கைகளை கட்டுப்படுத்திக் கொண்டது. இந்தியாவில் பணியிட பாதுகாப்பு இந்திய தொழிற்சாலைகள் சட்டம் தங்களது தொழிற்சாலைகளில் ஆபத்தை விளைவிக்கும் நிலவரம் உள்ளதா என்பதை (அரசாங்க தொழிற் கூட ஆய்வாளர்களுக்கு) தெரிவிக்கும் பொறுப்பு முதலாளிகள் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. நரி, கோழிக் கூட்டிற்கு காவல் இருந்த கதையை இது நினைவுபடுத்துகிறது. 1984-ம் ஆண்டு போபாலில் யூனியன் கார்பைட் தொழிற்சாலை பேரழிவில்-- பல்லாயிரக் கணக்கானோர் நோய்வாய்பட்டனர் மற்றும் மேலும் லட்சக் கணக்கானோர் நீண்டகால நோய்வாய்ப்படலுக்கு ஆளானார்கள். இந்திய அராசங்கம் மேற்கொண்ட மனித நேயமற்ற மற்றும் கிரிமினல் நடவடிக்கையின் நேரடி விளைவாய்த்தான் இந்த நிலவரம் ஏற்பட்டது. இன்றைக்கும் கூட அந்தத் தொழிற்சாலை விஷக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரைக் குடிக்கின்ற மக்கள் நோய்வாய்ப் படுகின்றனர். யூனியன் கார்பைட் கார்ப்பரேஷன் தற்போது டெள கெமிக்கல் நிறுவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது. போபாலில் அந்தப் பகுதியைத் தூய்மைப்படுத்துகிற பொறுப்பை அந்த நிறுவனம் ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றது. இந்திய - தொழிற்சாலைகள் சட்டத்தில் மிகவும் மனதைக் கவருகின்ற வகையில் இந்திய தொழிலாள வர்க்கத்திற்கு பல்வேறு உரிமைகள் தரப்பட்டிருந்தாலும், இந்திய அரசாங்கம் தொழிலாளர் சுகாதாரம் தொடர்பாக அலட்சிய அணுகுமுறையுடன் நடந்து கொள்வதுடன் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தை தனியார் தொழிற்சாலைகள் மீறுகின்ற போது அத்தகைய மீறல்களை மறைப்பதற்கும் ஒத்துழைத்துழைத்து வருகின்றன. இந்தியாவில் பணியாற்றி வருகின்ற 400- மில்லியன் தொழிலாளர்களில் 28 மில்லியன் தொழிலாளர்கள்தான் தொழிற்சங்கங்களை சார்ந்திருக்கின்றனர். இந்தியாவில் ஒட்டு மொத்தமாக பணியாற்றும் தொழிலாளர்களில் 7 சதவீதம்பேர் மட்டுமே தொழிற்சங்கங்களைச் சார்ந்தவர்கள். (270-மில்லியன் ஊழியர்கள் விவசாயத் தொழிலாளர்கள்). பாண்டிச்சேரி சிலிகோசிஸ் துயர நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டுவதைப்போல் தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் தொழிலாளர்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து பொருட்படுத்துவதில்லை. ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்த தொழிறசங்கங்கள் உட்பட அனைத்தும் ''நவீனமயமாக்கல்" என்ற போர்வையின் கீழ் முன்னர் அரசுடைமையாக இருந்த தொழிற்சாலைகளை தனியார்மயமாக்கும், உடனிணைந்த விளைவாக வேலை நிலைமைகளை சீரழிக்கும் கொள்கை போன்றவற்றை ஆதரிக்கின்றன. காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக வரிச்சலுகைகள் மற்றும் ஏனைய சலுகைகளை வழங்குவதில் போட்டியிடுகின்றன, அதேவேளை தொழிலாளர்களின் பணி இட பாதுகாப்பு மற்றும் நலன்கள் தொடர்பான எந்த அக்கறைகளையும் தவிர்க்கின்றன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பணி தொடர்பான சாவுகள் எண்ணிக்கையை சுமார் 1,50,000- என்று சர்வதேச அமைப்புக்கள் மதிப்பீடு செய்துள்ளன. அவற்றுடன் பணியால் வரும் நோய்களுக்கு இலக்காவோர் 2-மில்லியன் தொழிலாளர்கள் ஆவர். இந்தியாவில் உள்ள பணி இடப் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் பற்றிய நிலைகளை அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் 19-வது நூற்றாண்டு கடைசிப் பகுதியில் நிலவியது போன்ற நிலவரத்துடன்தான் ஒப்பிட முடியும். 1990 முதல் தொழிலாளர்கள் பணி இட பாதுகாப்பு மற்றும் உடல் நலப் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் எந்த ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திடவில்லை. இப்படி தொழிலாளர்களின் உடல் நலத்தையும் பாதுகாப்பையும் அலட்சியம் செய்வதை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கம்பெனிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுகின்றன. தொழிலாளர்களின் உழைப்பை பயன்படுத்தி மிகப்பெரும் அளவில் லாபம் ஈட்டுவதுடன் அவர்கள் பெரும் அளவிலான விஷக் கழிவுகளை தற்காலிகமாகக் கொட்டி வைப்பது சுற்றுப்புறச் சூழலை நீண்ட காலத்திற்கு மாசுபடுத்தும் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் தீங்கை விளைவிக்கும். உற்பத்தியானது தொழிலாளர்களின் உடல் நலனும் பிழைப்புச்சாதனமும் பெரு வணிக நிறுவனங்களின் இலாபத்திற்குக் கீழ்ப்படுத்தப்படுவதைக் காட்டிலும் தொழிலாளர்களின் நலவாழ்வுக்கு கீழ்ப்படுத்தப்படும்பொழுதுதான் இத்தகைய காட்டுமிராண்டித்தனம் முடிவடையும். |