World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்காFailed coup attempt in Mauritania மொரிட்டானியாவில் தோல்வி கண்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி By Brian Smith மொரிட்டானியாவின் ஜனாதிபதி மாவியாசித் அஹமத் ஹவுஸ் தயாவினுடைய (Maaouya Sid'Ahmed Ould Taya) ஆட்சியை கவிழ்ப்பதற்கு நடைபெற்ற முயற்சி தோல்வியடைந்துள்ளது. அவர் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியிலிருந்து உயிர் தப்பினாலும் அவரது மேற்கு நாடுகளின் அரசாங்கங்களுக்கு ஆதரவான ஆட்சி எப்போதுமே ஆபத்தை சந்திக்கும் நிலையில் உள்ளது. ஈராக் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்பு நடத்தியதைத் தொடர்ந்து இஸ்லாமிய மற்றும் இதர கட்சி இயக்கங்களின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. அத்தகைய தரப்பினர் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து ஒடுக்குவதற்கான முற்சிகளை மேற்கொண்டதை தொடர்ந்து இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றிருக்கின்றது. 2.7 மில்லியன் மக்கள் வாழும் மொரிட்டானியா மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நாடாகும். இன அடிப்படையில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கருப்பு மற்றும் மூர் இனமக்கள் வாழுகின்ற இந்த நாட்டின் சராசரி தனிநபர் வருமானம் ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்கா டொலராக உள்ளது. தலைநகரான நவாக்சோட் (Nouakchott) தவிர சிறிய நகரங்கள்தான் இந்த நாட்டில் அதிகம் உள்ளன. மக்களில் பாதிப்பேர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதுடன், அவர்களில் பலர் நாடோடி நிலையில் உள்ளார்கள். கடந்த ஆறு மாதங்களாக வறட்சியும், பட்டினியும் நிலவியதால், கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மொரிட்டானியாவின் பிரதான ஏற்றுமதிகள் இரும்புத்தாதும், மீனும் ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மேலை நாடுகள் தற்போது அக்கறை செலுத்தி வருகின்றன. பாத் கட்சி கருத்துக்களை ஆதரிப்பவர் என்று கருதப்படுகின்ற இராணுவ டாங்கிப் படைப்பிரிவு கேனல் சுலே ஹவுத் கனா (Saleh Ould Hnana) தலைமையில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றிருக்கின்றது. இதற்கு முந்தைய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பங்குபெற்றார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சென்ற ஆண்டு அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். விமானப்படையில் அதிருப்தி கொண்ட அதிகாரிகள் தலைமையில் இந்தப்பிரிவினர் மற்றும் அட்டார் இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் இணைந்து இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டார்கள். தலைநகருக்கு தென்கிழக்கே, 273 மைல்களுக்கு அப்பால்தான் இந்தப் படைப்பிரிவு அமைந்திருக்கின்றது. ஜூன் 8 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி துவங்கியது. தலைநகரில் உள்ள ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி இயந்திர துப்பாக்கிகள் சுடும் ஓசையும் கடுமையான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட வெடி ஓசையும் கேட்டதுடன், ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி இராணுவ நடமாட்டமும் காணப்பட்டது. இரண்டு நாட்கள் நீடித்த இச்சண்டையில் முதலில் கிளர்ச்சிக்காரர்கள் கை ஓங்குவதாக தோன்றியது. ஜனாதிபதி மாளிகை வானொலி நிலையம் மற்றும் முக்கியமான அரசாங்க கட்டிடங்கள் கைப்பற்றப்பட்டன. கடுமையான சண்டையில் அவை பலமுறை கைமாறின. ஆட்சித்தரப்பு படைகளும் கிளர்ச்சிக்காரர்களும், ஒரே வகையான சீருடையணிந்து டாங்கிகளுடன் கடுமையாக சண்டையிட்டனர். 24 மணி நேரத்திற்கு மேல் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டதுடன் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. நகர மையத்திற்கு தெற்கே உள்ள அரபாத் புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் படைமுகாமைச் சுற்றி கடுமையான சண்டை நடைபெற்ற அந்த இடம் கிளர்ச்சிக்காரர்களின் தலைமையிடமாக செயல்பட்டது. ஜனாதிபதி தலைமறைவாகி விட்டதால் அவர் எங்கிருக்கிறார் என்பது பல நாட்களாக எவருக்குமே தெரியாமல் இருந்தது. அவர் பிரஞ்சு தூதரகத்தில் இல்லையென்று மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் கருத்து எதுவும் கூறவில்லை. ஆட்சிக்கவிழ்ப்பு கிளர்ச்சியாளர்களை ஆதரித்த அதிகாரிகளில் இராணுவ தலைமை தளபதி முஹம்மத் லாமின் அவுல் என்பயாமி உட்பட பலர் இடம் பெற்றிருந்தனர். அத்துடன் இந்த மோதலில் தலைமைத் தளபதி முஹம்மத் கொல்லப்பட்டார். ஏராளமான படைப்பிரிவுகள் கிளர்ச்சியை அடக்குவதற்காக கொண்டுவரப்பட்டன. பிரதான மருத்துவமனை தந்துள்ள தகவலின்படி பலர் கொல்லப்பட்டதுடன் ஏராளமான சிவிலியன்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும் இதுபற்றி துல்லியமான புள்ளி விபரங்கள் கிடைக்கவில்லை. ஆட்சிகவிழ்ப்பு முயற்சியை ஒழித்த பின்னர் ஆட்சியாளர்கள் தங்களது ஆதரவாளர்களை திரட்டி தெருக்களில் அணுவகுத்து வந்தனர். ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை அவர்கள் கண்டித்ததோடு ஜனாதிபதி தயாவிற்கு தமது ஆதரவையும் தெரிவித்தனர். சென்ற நவம்பரில் அமெரிக்க நிர்வாகம் வொய்ஸ் ஆஃப் அமெரிக்கா வானொலி வழியாக ஒரு செய்தியை பரப்பியது. மேற்கு ஆபிரிக்கா, ஓசமா- பின்லேடனின் அல்கொய்தா அமைப்பிற்கு அதன் நடவடிக்கைகளுக்கு புதிய தளமாக உருவாகி வருகின்றது என்று அமெரிக்க நிர்வாகம் கவலை தெரிவித்திருந்தது. மொரிட்டானியாவிலும், மாலியிலும் மிகப்பெரிய பாலைவனப் பகுதிகள் இருப்பதாலும் மக்கட் தொகை மிகக் குறைவாக உள்ளதாலும் அந்த இரண்டு நாடுகளும் ஆயுதங்கள் கடத்துவதற்கு வாய்ப்புள்ளவையாக இருக்கின்றன என்று வொய்ஸ் ஆஃப் அமெரிக்கா தெரிவித்தது. பிரதான ஊடகங்களில் சில மட்டுமே இந்தத் தகவலை பிரசுரித்திருந்தன என்றாலும், அமெரிக்க புலனாய்வு வட்டாரங்களுக்கு நெருக்கமாக உள்ள இணையத் தளமான ஸ்டார்ட்பார் (Stratfor) அந்த செய்தியை ஏற்று கீழ்கண்டவாறு விமர்சனம் செய்திருந்தது:- ''மாலியும் மற்றும் மொரிட்டானியாவும் மேலை நாட்டு ஊடகங்களின் ராடார் திரைகளில் இடம் பெற்றிருக்கவில்லை என்பது மிகத் தெளிவான காரணமாகும். வொய்ஸ் ஆஃப் அமெரிக்க தகவல் சுட்டிக்காட்டுகின்ற திசைவழி நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், வாஷிங்டன் அந்த நிலையை மாற்றுவதற்கு முயலக்கூடும்.'' இந்த இணையத் தளமானது இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் வெளிநாட்டு அமைப்பு எதுவும் சம்மந்தப்பட்டிருப்பதாக கருதவில்லை. ஆனால் கிளர்ச்சித் தலைவரான ஹானா தனது வலிமையை நிலைநாட்டி இருப்பதுடன், ஜனாதிபதி தயாவை வீழ்த்துகின்ற அளவிற்கு ஒரு படையை திரட்ட முடியும் என்று அவர் நிரூபித்திருக்கிறார். வெளித்தோற்றத்தைக் கண்டு பார்க்கும் போது இந்த முயற்சி இராணுவத்திற்குள்ளேயே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று தெளிவாக தெரிவதாக அந்த இணையத் தளம் எழுதியிருக்கிறது. அண்மை ஆண்டுகளில் ஜனாதிபதி தயா தனது ஆட்சியை மேலை நாடுகளுக்கு ஆதரவான பாதையில் இட்டுச் செல்கிறார். அவர் 1984 ம் ஆண்டு முதல் பதவிக்கு வந்ததிலிருந்து சதாம் ஹூசேனோடு நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டார். அவர் முதலாவது வளைகுடாப்போரில் ஈராக்கை ஆதரித்திருந்தபோதிலும், போருக்கப்பின்னர் ஈராக்குடனான நெருக்கத்தை விலக்கிக்கொண்டார். மேலை நாடுகளுக்கு மிதவாதியைப்போல் காட்டிக் கொள்வதற்காக இஸ்ரேல் உடன் 1999 ம் ஆண்டு உறவை நிலைநாட்டிக் கொண்டார். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன் அதனுடன் நெருங்கிய உறவையும் நிலைநாட்டி வருகின்றது. இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை வைத்துக்கொண்டுள்ள மூன்று அரபு நாடுகளில் மொரிட்டானியாவும் ஒன்று. மொரிட்டானியாவில் ஏராளமான முஸ்லீம் மக்கள் இருப்பதால் அவர்கள் இஸ்ரேலுடனான உறவை பரவலாக எதிர்த்து வருகின்றனர். 2001 செம்டம்பர் 11 ந்தேதி அமெரிக்கா மீது தாக்குதல் நடந்த பின்னர் ''சர்வதேச பயங்கரவாதிகளை எதிர்த்து போராடுவதில்'' தனது உறுதிப்பாட்டை மொரிட்டானியா திரும்பத் திரும்ப வலியுறுத்தியது. சென்ற நவம்பரில் ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சி அலுவலகங்களை மூடியதுடன், வன்முறையை தூண்டியதாக அவற்றிற்கு தடையும் விதித்தனர். இதன் காரணமாக நாடு முழுவதிலும் கண்டன ஆட்ப்பாட்டங்கள் மிகப்பெரும் அளவில் நடைபெற்றன. தலைநகரில் மட்டும் 15,000 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஈராக் மீது அமெரிக்கா தலைமையில் போர் துவங்கிய பின்னர், ஜனாதிபதி தயாவிற்கு கடுமையான நிர்பந்தங்கள் உருவாகி வருகின்றன. அவர் அரசியல் மற்றும் மத அடிப்படையிலான எதிர்கட்சிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் பொதுமக்களிடையே ஆத்திரம் தூண்டப்படுகின்ற நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமிய குழுக்களான அல்-சலாபியா மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு ஆகியவற்றின் மீதும், சதாம் ஹூசேனோடு தொடர்பு கொண்டிருந்த அரசியல் தலைவர்கள் மீதும், ஜனாதிபதி தயா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஈராக்கின் பாத் கட்சியோடு உறவு வைத்திருப்பதாக கூறப்படும் மொரிட்டானியாவின் தேசிய ஹவந்த் கார்டே கட்சிக்கு (PAGN) தடைவிதித்திருக்கிறார். அந்தக் கட்சியை சீரமைக்க முயன்ற 10 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் ஆரம்பத்தில் ஈராக்கிற்கு ஆதரவான எந்தக் கிளர்ச்சியையும் ஒடுக்குவதற்கு முயன்று வந்தார்கள். சென்ற ஏப்ரல் மாதம் ஈராக் போருக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் அணிவகுத்து வந்தபோது அதிகார பூர்வமான ஊடகங்கள் இஸ்லாமிய தீவிர வாதத்திற்கு எதிரான பிரச்சார இயக்கத்தை துவக்கின. அல் கொய்தா அமைப்பு ''மொரிட்டானியாவில் உயிர்த் துடிப்போடு சிறப்பாக இயங்கி வருகிறது'' என்று விமர்சகர்கள் குறிப்பிட்டனர். மொரிட்டானியாவின் வடக்குப் பகுதியிலுள்ள பக்கத்து நாடான மொரோக்கோவில் தற்கொலை குண்டு வெடிப்புக்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து மொரிட்டானியா பிரதமர் கருத்து தெரிவிக்கும்போது இதர நாடுகளிலிருந்து விரட்டப்பட்டு வரும் தீவிரவாதிகள் மொரிட்டானியாவை ஒரு தளமாக பயன்படுத்த விரும்புகின்றனர் என்று குற்றம்சாட்டினார். சென்ற மாதம் 32 இஸ்லாமிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு, இளைஞர்களை போராளிகளாக ஆக்குவதற்கு மசூதிகளை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. சென்ற வாரம் துவங்கிய விசாரணையில், அரசியல் சட்டப்படி அமைந்த ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டினார்கள் என்பதில் இருந்து சட்ட விரோத அமைப்புக்களுக்கு உறுப்பினர்களை சேர்ந்தார்கள் என்பது வரை பல்வேறு குற்றச்சாட்டுகளை இத்தலைவர்கள் மீது சுமத்தப்பட்டது. இவர்களுடன் மேலும் 60 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர் இந்த நடவடிக்கைகளுக்கு இலக்காணவர்களில் நீதிபதிகள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். நாட்டிற்கு எதிராக அவர்கள் சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கின்றது. நாச வேலைகளில் ஈடுபட்டதாகவும், சகிப்புத்தன்மைக்கு விரோதமாக எழுதியதாகவும் சென்றவாரம் அரபு மொழி வார இதழான எர்ராயா மூடப்பட்டதுடன், இப்பத்திரிகையின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு எதிராக கைது உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கின்ற தேர்தலுக்கு முன்னர் அனைத்து எதிர்ப்புக்களையும் அடக்கி, ஒடுக்குவதற்காக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. தலைநகரில் இயங்கி வருகின்ற சவூதி இஸ்லாமிய கழகத்தில் பணியாற்றி வருகின்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்காக சென்ற மாதம் எதிர்கட்சிகள் மிகப்பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. ஜனாதிபதி தயா ஒரு இராணுவ கேனலாக இருந்தவர். 1984 ம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு கிளர்ச்சியில் பதவிக்கு வந்தார். 1991 முதல் அவர் ஒரு பல கட்சி கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறார். என்றாலும், அவரது ஆளும் ஜனநாயக மற்றும் சமூக குடியரசுக் கட்சியின் முழுக் கட்டுப்பாட்டில்தான் அரசாங்கம் இயங்கி வருகின்றது. 1992 ல் ஜனாதிபதி தேர்தலில் அவர் ஒரு சிவிலியனாக போட்டியிட்டதுடன், அதே போன்றே 1997 தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அந்த தேர்தலை ஐந்து கட்சி எதிர்கட்சி கூட்டணியினர் புறக்கணித்தனர். இரண்டு தேர்தல்களுமே சந்தேகத்திற்குரியவையாக, மோசடிகள் நடைபெற்றதாக கருதப்பட்டன. 1997 ல் நடைபெற்ற தேர்தலில் தயாவின் கட்சி செனட் சபையில் 56 பதவிகளில் 54 பதவிகளை வென்றது. தேசிய அசெம்பளியில் 81 இடங்களில் 64 இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சிக்கவிழ்ப்பு கிளர்ச்சியின் போது அமெரிக்க தூதரகம் தாக்கப்படவில்லை என்றாலும், ஆரம்பத்தில் வந்த சில தகவல்கள் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டன. தனது தூதரகத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக அமெரிக்கா 34 ஆயுதம் தாங்கிய அமெரிக்கப் படையினரை அனுப்பியது. தேவைப்பட்டால் அங்குள்ள அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவதற்கு உதவுவதற்காகவும் அவை அனுப்பப்பட்டன. ஏழுபது அமைதிப்படை தொண்டர்கள் உட்பட மொரிட்டானியாவில் 200 முதல் 300 அமெரிக்க குடிமக்கள் இருக்கின்றனர். அமெரிக்க நிர்வாகம் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்ததற்கும், ஜனாதிபதி தயாவின் ஆட்சி நீடிப்பது குறித்தும் தனது மகிழ்ச்சியை தெரிவித்தது. இதில் வேடிக்கை உணர்வு எதுவும் இல்லாமல் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்தை கவனிப்போம். ''அரசியல் சட்டத்திற்கு புறம்பான மற்றும் பலாத்கார முறைகளில் அரசாங்கங்களை மாற்றுகின்ற முயற்சிகளை அமெரிக்கா எதிர்ப்பதாக'' அந்த அதிகாரி கூறியிருப்பது வேடிக்கையாக இல்லையா! |