:
பிரான்ஸ்
Another day of action in France
பிரான்சில் மற்றும் ஒரு நாள் போராட்டம்
By Antoine Lerougetel
23 June 2003
Back to screen version
பிரான்சில் ஜூன் 19 ம் தேதியன்று ஜனாதிபதி ஜாக் சிராக், பிரதம மந்திரி ஜோன்
பியர் ராஃப்ரன் ஆகியோரின் ஓய்வு நலன்களைக் குறைக்கும் மற்றும் கல்வி முறையை மைய அதிகாரத்திலிருந்து நீக்குதல்
ஆகிய திட்டங்களை எதிர்த்து மற்றுமொரு போராட்டம் நிகழ்த்தப்பட்டது. இது எட்டாவது தடவையாக நடாத்தப்பட்ட
போராட்டமாகும். இந்த எதிர்ப்பில் பொதுத்துறை ஊழியர்களும் தனியார் துறை ஊழியர்களும் முழுமையாக இணைந்து
கொண்டனர். கடந்த செப்டம்பர் கோடை விடுமுறைகளுக்குப் பிறகு கல்வித் துறையில் நிகழ்த்தப்பட்ட 12 வது ஒரு நாள்
போராட்டமாக இது விளங்குகின்றது. இந்தப் போராட்டங்களில் பல கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்றவையாகும்.
ஜூன் 19 ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டமானது கடைசியானதாக இருக்கக்கூடும். பாரிஸிலும்,
மார்சேயிலும் மற்ற பிரெஞ்சு நகரங்களிலும் தொழிலாளர்கள் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தபொழுது ஓய்வூதியச் சட்டவரைவின்
(bill) பல பத்திகள் ஒன்றன்பின் ஒன்றாக பாராளுமன்றத்தில்
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு ஏற்கப்பட்டன. அத்துடன் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த தொழிற்சங்கத் தலைவர்கள்
வெளிப்படையாகத் இத் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.
GIO ன்
(SUD தொழிற்சங்கங்களின் 10 கூட்டமைப்புக் குழு) செய்தித் தொடர்பாளர்
அனிக் கூப் (Annick Coupe)
லிபிரேசன் என்னும் பத்திரிகைக்குத் தெரிவிக்கையில் ''தேசிய பாரளுமன்றம்
பிரான்சுவா பியோனின் திட்டத்தைப் (பிரான்சுவா பியோன், தொழிலாளர் அமைச்சர், சட்ட வரைவை மன்றத்தில்
அளித்தவர்) பற்றிய விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதை நிறைவேற்றிவிட அவர் உறுதியாக இருக்கிறார். இன்றைய
ஆர்ப்பாட்டப் போராட்டத்தால் அது நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆயினும்கூட, எங்களுடைய
இத்திட்டத்தின் மீதான எதிர்ப்பு குறையவில்லை என்று கூற பலரும் தெருவிற்கு வருவார்கள்'' என்றார்.
மே 13 அன்றிலிருந்து தான் இந்த இயக்கம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. இந்த தெளிவாகிவிட்ட
நிலையைத்தான் கூப்பே எடுத்துக் கூறியிருக்கிறார். அன்று இரண்டு மில்லியன் ஆர்ப்பாட்டக்காரர்களும், ஏறத்தாழ அதைப்போல்
இரு மடங்கு வேலை நிறுத்தம் செய்தவர்களும் அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்த்து வெளிநடப்புச் செய்திருந்தார்கள்.
கருத்துக்கணிப்புக்கள், தொழிலாளர்களின் ஓய்வூதிய நலன்களைக் கிட்டத்தட்ட 30 வீதத்தைக் குறைக்கும், தேசியக் கல்வி
முறையைத் தகர்க்கும் திட்டங்களை 66 வீதமானவர்கள் நிராகரித்துள்ளனர் என்று தெரிவிக்கின்றன. கல்வித் திட்டத்தைப்
பொறுத்தவரையில் பெரும்பாலான மக்கள் அதை ஜனநாயக சமத்துவ மரபுகளின் அடையாளமாகவே கருதுகின்றனர்.
மே 13 க்குப் பிறகு தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த இயக்கத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்கும்
அதனால் அரசாங்கத்திற்கு எக்கெடுதலும் வராமல் இருப்பதற்கும் எவ்வளவு செய்ய முடியுமோ, அவ்வளவையும் செய்தனர்.
சோஷலிஸ்டுக் கட்சிக்கு நெருக்கமான CFDT
தொழிற்சங்கமானது
(French Democratic Confederation of Labour)
அரசாங்கத் திட்டத்தை முதலிலிருந்தே ஆதரித்தது. பல காலமாக கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புள்ள
CGT (General Confederation of Labour)
தொழிற்சங்கமானது தன்னுடைய உறுப்பினர்கள் மீதே பாதகமான முறையில் தந்திர அணுகுமுறையைக் கையாண்டது. பொது
வேலைநிறுத்த அழைப்பை நிராகரித்து, ஒரு நாள் எதிர்ப்புக்களை வாரத்திற்கு ஒரு முறையோ இரு முறைகளோ நடத்தி
அரசாங்கம் அவற்றைச் சமாளித்துவிட எளிதான வழிகளைக் கையாண்டது.
ஜூன் 10 ம் தேதி நான்கு கல்வித்துறைத் தொழிற்சங்கங்களுடன் இணைந்து,
CGT அரசாங்கத்துடன்
ஒரு வட்ட மேசை மாநாடு நடத்தி துரோக ஒப்பந்தம் ஒன்றை ஏற்று ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தைத்
தகர்த்தது. Baccalaureate
தேர்வுகள் (உயர்நிலை மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக எழுதும் நாடு தழுவிய தேர்வு) தடையின்றி
நடத்தப்படும் என்ற உறுதிமொழியை தொழிற்சங்கங்களிலிருந்து பெற்ற பின்னர், அரசாங்கம் 110,000 ஆசிரியரல்லாத
ஊழியத்தில் 20,000 பேர்கள் மையக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கப்படமாட்டார்கள் என்று அறிவித்தது.
இந்த ஒப்பந்தம் அரசாங்கத்தின் மீது தொழிலாளர்கள் அழுத்தம் கொடுப்பதற்கு முக்கியமான
வழிவகையை இல்லாமற் செய்துவிட்டது மட்டுமல்லாமல் தொழிலாளர்களையும் பிரித்துவிட்டது.
மத்தியக் கட்டுப்பாட்டிலிருந்து எடுக்கப்படாத 20,000 பேரும் கூடுதலான தகுதிகளும்,
ஊதியங்களும் கொண்டவர்கள். - பள்ளி டாக்டர்கள், சமுதாயநலப் பணியாளர்கள், ஆலோசகர் போன்றோர் - மற்ற
90,000 பேர்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியத்தைக் கொண்ட தொழிலாளர்கள் ஆவர்.
கல்வித்துறைத் தொழிலாளர்கள் அரசு எதிர்ப்பு இயக்கத்தின் முதுகெலும்பாக இருந்தவர்கள்.
அவர்களில் பலர் ஒரு மாதத்துக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் இரு திட்டங்களை எதிர்த்தும், தேசியக் கல்வி முறை
உடைக்கப்படுவது, ஓய்வூதிய நலன்கள் தகர்க்கப்படுவது போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். ஜூன் 10 ம் தேதிய ஒப்பந்தம்
ஓய்வூதிய நலன்கள் எதிர்ப்பு இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசாங்கத்திற்கு எதிராக இணைந்து செயலாற்றக்கூடாது
என்ற தொழிற்சங்க விரோதத்தையும் புலப்படுத்தியது.
CGT யின் தலைவர்
பேர்னாட் தியபோல்ட்டுக்குச் (Bernard
Thiabault) சங்கடம் தரும் வகையில் தொழிலாளர் அமைச்சர் பிரான்சுவா
பியோன் இந்த இயக்கத்தைச் செயலற்ற நிலைக்குத் தள்ளியதில் முன்னவர் பங்கை வெளிப்படையாக கூறும் வகையில் தெரிவித்தார்.
யூன் 17
திகதிய லூ மொன்ட்
பத்திரிகையானது ''தொழில் அமைச்சர், 'CGT
க்கும் அதன் தலைவர் பேர்னாட் தியபோல்ட்டுக்கும் 'பொறுப்பான
போக்கிற்கு`ப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். `இந்த நெருக்கடி நேரத்தில்` கூட `பொறுப்பான எதிர்ப்பைத் தெரிவித்து`
மற்றும் வலியுறுத்தி மொன்ரோய் (Montreuil)
சார்ந்த கூட்டமைப்பு இயக்கம் பெருமளவு பரவவிடாமல் பார்த்துக்கொண்டதுடன், நிலைமை கட்டுக்கடங்காமல்
போய்விடும் ஆபத்தையும் தவிர்த்துள்ளார்'' என்று தொழிலாளர் அமைச்சர் பிரான்சுவா பியோன் ஒரு குறிப்பை அளித்துள்ளார்
என்று இப் பத்திரிகை கூறியுள்ளது.
ஜனாதிபதி சிராக், இப்போராட்டத்தின்போது பெருமளவு பின்னணியிலேயே இருந்த பின்னர்,
ஜூன் 12 ம் தேதி துலூஸ் (Toulouse)
கூட்டத்தில் பேருரை ஒன்றை நிகழ்த்தினார். லூ மொன்ட் பத்திரிகையின்படி ''எப்பொழுதையும் விடக் கூடுதலான அளவு
பாரபட்சமில்லாத அரசியல், சமுதாயப் புதைகுழியில் சிக்காத நடுநிலையாளர் என்று காட்டிக்கொள்ளும் வகையில்'' இந்தப்
போராட்டத்தில் ''வெற்றி பெற்றவர், தோல்வியடைந்தவர் என்ற பேச்சுக்கிடமில்லை'' என்று பெரும் திருச்சபை
உரைபோல் அறிவுரை கூறித் தொழிற்சங்கங்களைப் பெரிதும் புகழ்ந்தார்.
"Baccalaurate தேர்வுகள் நாடெங்கும்
நடத்தப்பெறுவதற்கு உதவியாகத் திரண்ட'' ஆசிரியர்கள் பற்றி அவர் புகழ் மாலை சூட்டியபோது கரவொலிகள் அதை
வரவேற்றன என லூ மொன்ட் பத்திரிகை எழுதியுள்ளது. பல வாரங்கள் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருந்த
அளவில் (வேலை நிறுத்த நடவடிக்கை தேர்வுகளைத் தடை செய்துவிடுமோ என்று) சிராக்கின் உதவியாளர்கள் தேர்வு எந்தத்
தடையுமின்றி நடக்கும் என்று உறுதியானவுடன் இந்தச் சொற்களை - புகழாரத்தை - தயார் செய்திருந்தனர்.
அதே உரையில் சிராக் புதிய தாக்குதல்களையும், இலையுதிர்காலத்திலிருந்து தேசிய முறையிலான
சுகாதார நலன்கள் திட்டத்தை (Securite Socials)
பற்றியும் அறிவித்தார்.
தொழிற்சங்கங்கள் நம்பிக்கைத் துரோகம் செய்திருந்தபோதிலும், ஜூன் 19 அன்று ஏராளமானோர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முந்தைய ஆர்ப்பாட்டங்களைவிட அளவில் குறைவு என்றாலும் பார்வையாளரின் கருத்தில்
எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாகவே பங்கு இருந்தது. பிரான்ஸ் முழுவதும் 300,000 பேர் ஆர்ப்பாட்டம் நடத்திய
அளவில், மேலும் சில ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிருபர் பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். அத்துடன் 60,000 மக்கள்
மொன்ட்பரனாஸ் (MontParnasse)
என்னும் இடத்திலிருந்து ஈபிள் கோபுரம் அருகிலுள்ள
Medef (முதலாளிகளின்
கூட்டமைப்பு) தலைமை அலுவலகம் வரை நீண்ட பாரிஸ் வீதிகளில் பெரிய அணியாகக் கண்களுக்கெட்டும் தூரம் வரை அணிவகுத்துச்
சென்றனர்.
உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசிய தொழிலாளர்களின்படி அரசாங்கம் தன் நிலையிலிருந்து
பின்வாங்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர். ஆனால் ஒரு எதிர்ப்பு உணர்வில் தோய்ந்திருந்து, அரசாங்கத் தாக்குதல்களுக்கெதிரான
தங்கள் எதிர்ப்பை ஆர்ப்பாட்டம் மூலமாகவேனும் வெளிப்படுத்த விழைந்தனர்.
WSWS ஆனது தியேரி, செபாஸ்தியன்,
பாஸ்கல் என்ற மூன்று பாடசாலை உணவுக்கூடத் தொழிலாளர்களிடம் மொன்ட்பரனாஸ்சிலுள்ள
Le Bretague திரைப்பட
அரங்கின் வெளியே ஆர்ப்பாட்டத்திற்காக காத்திருந்தபோது பேசியது. மே 13 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தும்
அவர்களுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.
சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பற்றி அவர்களுடைய கருத்தைக் கேட்டதற்கு: ''அவர்களைப்
பற்றிப் பேசாதீர்கள். அவர்களைப் பற்றி நான் நினைப்பதுகூடக் கிடையாது. அவர்கள் அதிகாரத்திலிருந்தாலும் நிலைமை
இவ்வாறுதான் இருக்கும்'' என்று தியேரி விடையிறுத்தார்.
இந்த முறையை மாற்ற என்ன செய்யலாம் என்று கேட்டதற்கும் விவாதித்ததற்கும், இக்கலந்துரையாடலில்
சேர்ந்துகொண்ட Liliaue
என்ற புவியியல், வரலாறு ஆசிரியர் ''நமக்கு ஒரு புரட்சிகர கட்சி தேவை'' என்று கூறினார்.
பிரான்சுவாஸ் (Francoise)
என்ற வேறு ஒரு ஆசிரியர் எவ்வாறு தொழிற்சங்கங்கள் இந்த இயக்கத்தின் கழுத்தை நெரித்துவிட்டனர் என்று விவரமாகக்
கூறி, அதைத் தோல்விக்கு அவர்கள் அழைத்துச் சென்ற முறையையும் விளக்கினார். ஆனால் அவர் அசைந்து கொடுப்பதாக
இல்லை. |