:
ஈராக்
The crisis of American capitalism and the war against Iraq
அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடியும், ஈராக்கிற்கு எதிரான போரும்
By David North
21 March 2003
Back to screen version
1. எந்தவிதமான ஆத்திரமூட்டலும் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்கா, ஈராக் மீது
படை எடுத்தது ஒரு வெட்கங்கெட்ட சம்பவமாக நிலைத்திருக்கும். இந்தப் போரை ஆரம்பித்த வாஷிங்டனில் உள்ள அரசியல்
குற்றவாளிகளும், இரத்தக் களரியில் மகிழ்ச்சிக் கூத்தாடும் ஊடகங்களில் உள்ள மட்டரகமான போக்கிரிகளும் இந்த
நாட்டை வெட்கக்கேட்டில் ஆழ்த்திவிட்டார்கள். ஒரு சிறிய மற்றும் பாதுகாப்பற்ற நாட்டை கொடூரமான மற்றும் எந்தவிதமான
எல்லையற்ற இராணுவ வலிமை மூலம் தூளாக்கிய காட்சியைக் கண்ட உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கோடிக்கணக்கான
மக்கள் வெறுப்படைந்துள்ளனர். ஈராக் மீது நடத்தப்பட்ட படை எடுப்பு ஏகாதிபத்தியப் போர் என்ற இலக்கணத்திற்கு
முற்றிலும் பொருந்தி வருவதாகும். அமெரிக்காவிலேயே மிகவும் பிற்போக்குத்தனமான சூறையாடும் நோக்கம் கொண்ட
நிதி மற்றும் நிறுவனங்களின் குழுக்களின் பிரிவுகளைச் சார்ந்தவர்களது நலன்களுக்காக இந்தக் கொடூரமான ஆக்கிரமிப்பு
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன் உடனடி பகிரங்க நோக்கம் ஈராக்கின் பரவலான எண்ணெய் வளங்கள்
மீது தனது கட்டுப்பாட்டைக் கொண்டுவருவது மற்றும் நீண்ட காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கும் அந்த நாட்டை அமெரிக்காவின்
காலனித்துவ அரசாக மாற்றுவதுமாகும்.
ஹிட்லர் மற்றும் முசோலினியின் பாசிச ஆட்சிகள் தங்களது ஆதிக்கத்தின் உச்சகட்டத்தில்
இருந்து பைத்தியக்காரத்தனமாகச் செயல்பட்ட 1930 களுக்குப் பின்னர், உலகம் புஷ் நிர்வாகம் மேற்கொண்டிருக்கின்ற
அளவிற்கு சர்வதேச அப்படியான கொள்ளைக்காரத்தனமான நடவடிக்கையையும் சந்திக்கவில்லை. 1939-ம் ஆண்டு
போலந்து மீது நடத்தப்பட்ட படை எடுப்புத்தான், ஈராக் மீது ஏவி விடப்பட்டுள்ள வன்முறைக்கு மிகவும் நேரடியான
வரலாற்று முன்மாதிரியாகும். பாக்தாத் நகரத்தின் மீது பல்லாயிரக்கணக்கான ராக்கெட்டுகள் மற்றும் குண்டுகளை வீசி
அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதல் ஈராக் மக்களை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இராணுவ
தந்திரமாகும். பென்டகன் தலைமை அதிகாரிகள் குறிப்பிடுகின்ற ''அதிர்ச்சியூட்டி நிலைகுலையச் செய்யும்'' இராணுவ
தாக்குதல் தந்திரம், இரண்டாம் உலகப்போர் ஆரம்பத்தில் நாஜிக்கள் பயன்படுத்திய மிகவும் கீழ்தரமான நடைமுறைகளில்
இருந்து உத்வேகம் பெற்றுள்ளது. ஒரு வரலாற்று ஆசிரியர் நாஜிக்கள் எப்படி போலந்தை அழித்தார்கள் என்பதை கீழ்கண்டவாறு
விளக்கியிருக்கிறார்.
''செப்டம்பரின் முதல் சில நாட்களில் புயல் வேகத்தில் போலந்து மக்கள் மீது கொடூரமான
பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டமை அந்த மகிழ்ச்சி இழந்த மக்களை அதிர்ச்சியடைந்து நிலைகுலைத்துவிட்டது. பத்து நாட்கள்
முடிவில், ஜேர்மனியின் டாங்கிகள் முதலிய வாகனங்கள் போலந்து நாட்டின் பாதுகாப்புக்களை பிளந்துகொண்டு வார்சோ
வரை சென்றுவிட்டது. போலந்து நாட்டின் போதிய அளவில்லாத விமானப்படை கிளம்பிச் செல்வதற்கு முன் தரையிலேயே
அழிக்கப்பட்டன. ஜேர்மன் நாட்டு போர் விமானங்களும், மற்றும் கீழ்வந்துதாக்கும் விமானங்களும் முன்னேறிச் செல்லும்
தரைப்படைகளுக்கு தந்திரோபாய ரீதியாக ஆதரவாக தாக்குதல் நடத்தி போலந்து நாட்டின் தகவல் தொடர்புகளை
சீர்குலைத்துவிட்டன. மற்றும், ஆகாயத்திலிருந்து அழிவையும், பயங்கரத்தையும் உருவாக்கின. ஒரு அமெரிக்க பத்திரிகையாளர்
குறிப்பிட்டதைப்போல், ''இன்றைய தினம் ஜேர்மனியர்கள் போலந்தை மிருதுவான அவித்த முட்டையைப்போல் நசுக்கிக்
கொண்டிருக்கின்றனர்` - (i).
இந்தப் போரை நியாயப்படுத்துவதற்கு புஷ் நிர்வாகமும், லண்டனில் அவர்களுக்கு உடந்தையாக
செயல்படுபவர்களும் கூறியுள்ள காரணங்கள் எல்லாம் அரைகுறை உண்மைகள் மற்றும் தவறான அடிப்படைகள் மற்றும் அப்பட்டமான
பொய்கள். இந்தக் கட்டத்தில் மீண்டும் ஈராக் வசம் இருப்பதாக கூறப்பட்ட பயங்கர ஆயுதங்களை அழிப்பதற்காக
போர் நடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டிற்குப் பதில் சொல்வது அவசியமில்லை. பல வாரங்கள், எந்த நாட்டிலும்
இல்லாத அளவிற்கு மிகத்தீவிரமாக ஈராக்கில் சோதனைகள் நடாத்தப்பட்டன. குறிப்பிடத்தக்க எந்த ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுக்குழுவின் தலைவர்களான ஹான்ஸ் பிளிக்ஸ் மற்றும் முகம்மது எல்பரடே இருவரும் கடைசியாக
தாக்கல் செய்த அறிக்கைகள், 2003 பிப்ரவரி 5 அன்று ஐ.நா.வில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பெளல்
பேசியதற்கு மறுப்பு தெரிவிப்பதாக அமைந்திருக்கின்றன. நைஜர் நாட்டிலிருந்து ஈராக் யூரேனியத்தை இறக்குமதி செய்வதற்கு
முயன்றுவருகிறது என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்த குற்றச்சாட்டு, பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரின் புலனாய்வு
சேவைகள் தயாரித்துக் கொடுத்த போலி பதிவேடுகளை அடிப்படையாகக் கொண்டவை என எல் பரடே அம்பலப்படுத்தினார்.
இதர பெரிய குற்றச்சாட்டுக்களான அலுமினியம் குழாய்கள் அணுகுண்டு தயாரிக்கும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது,
மற்றும் இரசாயன - உயிரியல் ஆயுத தயாரிப்பு நடமாடும் தொழிற்கூடங்கள் உள்ளன என்பவை எல்லாம் அடிப்படையில்லாத
குற்றச்சாட்டுக்கள் என்று நிரூபிக்கப்பட்டன. ஒரு குற்றச்சாட்டு பொய் என்று அம்பலப்படுத்தப்பட்டதும், மற்றொரு
பொய்யை புஷ் நிர்வாகம் கற்பனையாக உருவாக்குகின்றது. பொதுமக்களது கருத்தைப் பற்றியும், பொதுமக்கள் மதிக்கவேண்டுமே
என்பது பற்றியும் புஷ் நிர்வாகம் சிறிதும் கவலைப்படவில்லை. ஒன்றுக்குப்பின் மற்றொன்று என்று முரண்பட்ட வாதங்களை
எழுப்பிக்கொண்டிருக்கிறது.
மார்ச் 16 ஞாயிறன்று துணை ஜனாதிபதி ரிச்சர்ட் செனி தொலைக்காட்சியில் தோன்றி
உண்மையிலேயே ஈராக் மீண்டும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என்று கூறினார். 5 நிமிடங்களுக்குள் அவர் மீண்டும்
வலியுறுத்திக் கூறியதாவது:- ''அணு ஆயுதங்களை சதாம் ஹுசேன் பெறுவது எந்த நேரத்திலும் நடக்கலாம்.'' செனியின்
இரண்டு கருத்துகளுக்கும் இடையில் உள்ள வெட்கம்கெட்ட முரண்பாடானது பேட்டி கண்டவரால் எந்தவிதமான ஆட்சேபனையும்
இல்லாமல் அப்படியே விடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது, செனியின் குற்றச்சாட்டை ஏற்கனவே முஹம்மத் எல்பரடே
மறுத்திருக்கிறார். ஐ.நா.பாதுகாப்பு சபையில் அவர் தாக்கல் செய்த அறிக்கையில் ஈராக்கில் மீண்டும் அணு ஆயுத நடவடிக்கைகள்
ஆரம்பித்துவிட்டன என்பதை கோடிட்டுக் காட்டுவதற்கு எந்தவிதமான அடையாளமும் இல்லை, சான்றும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈராக்கிற்கு எதிரான போரை ஆரம்பிப்பதற்கான இரண்டாவது பிரதான நியாயப்படுத்தும்
காரணம், சதாம் ஹுசேனின் பாத் கட்சி ஆட்சி அல் கொய்தா பயங்கரவாதிகளுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றது
என்பதாகும். புஷ் நிர்வாகம் கூறி வந்த மற்றொரு கட்டுக்கதையான புஷ் நிர்வாகம் அதிக அளவில் நம்பி இருந்த பாரிய
அழிவிற்குரிய ஆயுதங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் மறுத்து அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றனர்.
ஆனால், சதாம் ஹுசேனையும் அல் கொய்தாவையும் தொடர்புபடுத்துவது மேலும் வலுவில்லாத அடிப்படையில்
அமைந்திருக்கின்றது. இந்தக் குற்றச்சாட்டை நிறைவேற்றுவதற்கு நம்பகத்தன்மையுள்ள எந்த ஆதாரத்தையும் நிர்வாகம்
தாக்கல் செய்யவில்லை.
இதில் மிகவும் அபத்தமான மற்றும் வெறுப்புக்குரிய காரணம், புஷ் நிர்வாகம் கூறிவரும் ஈராக்
மக்களுக்கு ஜனநாயகத்தை கொண்டு வருகிறோம் என்பதாகும். இந்தப் போர் தொடுப்பதே ஈராக் மக்களுக்கு ஜனநாயகத்தை
கொண்டு வருவதற்குத்தான் என்ற கருத்தை நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையாளரான தோமஸ் பிரீட்மன் போன்ற
மிகப்பெரிய அறிவிலிகள் நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள். மார்ச் 19ம் திகதியன்று, அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில்,
சதாம் ஹுசேனை நீக்கிவிட்டு ஈராக் கண்ணியமான மக்களுக்கு பொறுப்பான, ஒரு அரசை நிறுவுவதற்கு உதவுவது, செய்வதற்கு
ஏற்ற தகுதியுள்ள காரியம்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். அத்தகைய ஆட்சி மத்திய கிழக்கு முழுவதற்கும் முன்மாதிரியாக
விளங்கும். ஈராக் தனது ஆயுதங்களால் நம்மை அச்சுறுத்துகிறது என்பதற்காக இதை செய்யவில்லை. (இதனை பிரீட்மன்
முன்னர் ஏற்றுக்கொள்ளவில்லை) ஆனால், தோல்வி கண்டுவருகின்ற அரபு முஸ்லீம் நாடுகளால் நாம் அச்சுறுத்தப்படுகிறோம்.
ஏனென்றால், அந்த நாடுகளில் உள்ள பல இளைஞர்களை தாம் அவமதிக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, கைவிடப்பட்டுள்ளதாக
உணர்கின்றார்கள். அந்த இளைஞர்களோடு கூட்டுச் சேர்ந்து மாற்றத்தை உருவாக்குவதில் நமக்கு உண்மையான அக்கறை
உண்டு'' என்று பீரிட்மன் எழுதியிருக்கிறார்.
எவ்வளவு வெறுக்கத்தக்க வார்த்தை ஜாலங்கள் இவை என்று பாருங்கள். பல்லாயிரக்கணக்கான
ஈராக் மக்களை பயங்கரமான குண்டு வீச்சு மழை பொழிந்து கொலை செய்து கொண்டிருப்பதை ''பங்குதாரர்கள்''
நடவடிக்கை என்று வர்ணிக்கிறார்.
''ஜனநாயகத்திற்கான போர்'' என்று அமெரிக்கா கூறிவரும் கருத்திற்கு பதிலாக சில
அம்சங்களை சுருக்கமாக கூறியாகவேண்டும். புஷ் நிர்வாகம் தேர்தல் மோசடியால் பதவிக்கு வந்தது என்பது அமெரிக்க
ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய தோல்வியாகும். இதை கவனத்தில்கொள்ளாவிட்டாலும், ஈராக்கை அமெரிக்கா வெற்றிகொள்வதன்
மூலம் ஈராக் மக்களுக்கும் மற்றும் அந்த மண்டலத்தை சார்ந்தவர்களுக்கும் அதிக அடக்குமுறையும், துன்பமும்தான் வருமே
தவிர வேறு எதுவும் கிடைக்காது. மத்திய கிழக்கில், அமெரிக்காவின் வரலாற்று அடிப்படையிலான பங்கு இரத்தக்கறை
படிந்தது. அந்தப் பகுதி மக்களுக்கு எதிராக குற்றங்கள் புரிந்த இரத்தக்கறை படிந்த வரலாறு அமெரிக்காவிற்கு சொந்தமானது.
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் உள்ள மொராக்கோ, எகிப்து, சவூதி அரேபியா, குவைத்,
ஜோர்டான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை
சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க ஆதரவில் ''ஜனநாயகத்தின்'' முன்மாதிரியான இஸ்ரேல் பாலஸ்தீன மக்கள் மீது அப்பட்டமான
பயங்கரவாதத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறது. சியோனிஸ்ட்டுகள் தாங்கள் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள
எல்லைகளில் பயன்படுத்தி வருகின்ற முறைகள் அதிக அளவில் வார்சோவில் யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் பயன்படுத்திய
முறைகளை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது. ஈரானில் CIA
நியமித்த சர்வாதிகாரி 25 ஆண்டுகள் கொடூரமான ஒடுக்குமுறைகளை கையாண்டார்.
அதற்குமுன்னர் நிலவிய, மக்கள் ஆதரவுபெற்ற தேசியவாத அரசை கவிழ்ப்பதற்கும்
CIA காரணமாக
இருந்திருக்கிறது. அதன் விளைவாக, 1979ம் ஆண்டு புரட்சி உருவாயிற்று. பின்னர், அதிகாரம் வலதுசாரி இஸ்லாமிய
அடிப்படைவாதிகள் கையில் கிடைத்ததற்கு காரணம், மன்னர் ஷாவின் ஆட்சிக்கு எதிர்ப்பாக சோசலிஸ்ட்டுகள் நடத்திவந்த
பரந்த இயக்கத்தை CIA
இன் மேற்பார்வையில் அழித்தாகும்.
சதாம் ஹூசேனின் ஆட்சியே, அமெரிக்காவின் கொலை முயற்சிகளின் விளைபொருளாகும்.
1950, 1960 களிலும், ஏன் 1970 களிலும் மத்திய கிழக்கில் குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக விளங்கிய சோசலிச
தொழிலாளர் இயக்கத்தை இல்லாதொழித்தது. 1963 பெப்ரவரி 8ம் திகதி இடதுசாரி தேசியவாதியான காசிம் ஆட்சி
ஈராக்கில் கவிழ்க்கப்பட்டு, பாத் கட்சிக்காரர்கள் முதல் தடவையாக
CIA இன் ஆதரவுடன்
ஆட்சிக்கு வந்தார்கள். எகிப்து நாட்டின் அதிகாரபூர்வமான பத்திரிகையாளர், முஹம்மது ஹய்க்கால் தன்னிடம் ஜோர்டான்
மன்னர் ஹூசேன் தெரிவித்த தகவலை கீழ்கண்டவாறு கூறியிருக்கிறார்.
''ஈராக்கில் பிப்ரவரி 8 ம் திகதி என்ன நடந்தது என்பது, அமெரிக்க புலனாய்வு துறையின்
ஆதரவை பெற்றுத்தான் நடந்தது என்பதை உறுதியாக நான் அறிவேன். அதை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். தற்போது,
பாக்தாத்தில் ஆட்சி நடத்துகின்ற பலருக்கு இது தெரியாது. ஆனால் உண்மை எனக்கு தெரியும். பாத் கட்சிக்கும் அமெரிக்க
புலனாய்வினருக்கும் இடையே பல கூட்டங்கள் நடைபெற்றன. அதில் முக்கியமான கூட்டம் குவைத்தில் நடைபெற்றது. அது
உங்களுக்குத் தெரியுமா..... பிப்ரவரி 8ம் திகதி அன்று, ஒரு இரகசிய வானொலி ஈராக்கிற்கு ஒரு தகவலை அனுப்பியது.
அந்தத் தகவலில் ஆட்சியை இயக்கிய கம்யூனிஸ்ட்டுகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம்
அவர்கள் கைது செய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டக்கூடியதாக இருந்தது.'' (ii).
இத்தகைய இரத்தக்களரி நடவடிக்கைகள் மூலம் முதலில், சதாம் ஹுசைன் பாத் இயக்கத்தில்
ஒரு பெரிய தலைவராக உருவான பின்னர், அவர் அமெரிக்காவின் அன்பிற்கு பாத்திரமான 1979ம் ஆண்டு ஈராக்கில்
கம்யூனிஸ்ட்டுகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையை அமெரிக்கா ஆதரித்ததுடன் அவர் ஆட்சியில் நிலைநாட்டப்படுவதற்கு முக்கிய
பங்கு வகித்தது. 1980ம் ஆண்டு, ஈரானிற்கு எதிராக போருக்குச் செல்ல ஹூசேன் முடிவு செய்ததை அமெரிக்க ஊக்குவித்து,
அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு இராணுவ மற்றும் தளவாட ஆதரவுகளை கொடுத்தது. 1980 களில், சதாம் ஹூசேன்
உருவாக்கிய பெரும்பாலான உயிரியல் ஆயுதங்கள் ஒரு அமெரிக்க நிறுவனமான வேர்ஜீனியாவில் உள்ள
American Type Culture Collection of Manassas
நிறுவனத்தால் வழங்கப்பட்டது. இது றேகன்-புஷ் நிர்வாகத்தின் முழு ஆதரவுடன் வழங்கப்பட்டது. இந்த உயிரியியல் மாதிரிகளை
American Type Culture Collection of
Manassas அமெரிக்காவின் வர்த்தகத்துறை ஒப்புதல் இல்லாமல், ஈராக்கிற்கு
அனுப்பியிருக்க முடியாது என்ற தகவலை அமெரிக்காவின் முன்னணி உயிரியியல் மாதிரிகள் விநியோக நிறுவனமும், இலாப
நோக்கு இல்லாத சேவை அமைப்பான American Type
Culture Collection இன் துணைத்தலைவர்
Nancy J. Wysocki
கூறியுள்ளார். மேலும் நியாயமான ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அவை அனுப்பப்பட்டதாக அவர் கூறியுள்ளார். (iii).
இதைத்தவிர அமெரிக்காவிற்கும் சதாம் ஹூசேனுக்கும் இடையே நீண்ட விரும்பத்தகாத உறவுகள்
நிலவிவந்த முக்கியமான விபரங்கள் ஆகியவற்றிற்கு பின்னால், ஈராக்கை தாக்குவதற்கு ஜனநாயக தத்துவங்களை அழைப்பது,
ஒரு முக்கியமான ஜனநாயகக் கொள்கையை புறக்கணிப்பதாக அமைந்திருக்கின்றது. அதாவது தேசிய சுயநிர்ணய உரிமையை
புறக்கணிக்கும் செயலாகும். படையெடுத்துச் சென்று, ஈராக்கை பிடித்து அங்கே ஆட்சிக்கு வர இருக்கும் ஜெனரல் ரொமி
பிராங்ஸ் தலைமையில் ஒரு இராணுவ காபந்து அரசை உருவாக்குவது ஈராக்கின் தேசிய இறையாண்மையை முற்றிலுமாக
மீறுகின்ற செயலாகும்.
புஷ் நிர்வாகமும் அதன் ஊடக ஆதரவாளர்களும் எடுத்துவைக்கின்ற எந்த வாதமும் போருக்கு
சட்டபூர்வமான நியாயம் கற்பிப்பதாக அமையவில்லை. மேலும் அவற்றின் நம்பகத்தன்மையும் இல்லை. ஈராக் மீது
படையெடுத்து செல்வதற்கு முன்னரே புஷ் நிர்வாகம் புதிய இராணுவக் கொள்கையை பிரகடனப்படுத்திவிட்டது என்பதை
கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். தற்காப்பு அல்லது எதிரி தாக்கக்கூடும் என்று கருதி எதிரியை முறியடிக்கும் சட்டப்பூர்வமான
உரிமை தனக்கு உண்டு என்று ஏற்கனவே வாஷிங்டன் வலியுறுத்திக் கூறிவிட்டது. இதன் பொருள் என்னவென்றால் வாஷிங்டன்
தனக்கு எதிரியாக வரக்கூடும் என்று கருதுகின்ற எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்துகின்ற உரிமையை
பெற்றிருக்கின்றது. இந்த அடிப்படையில் பார்த்தால் உலகில் எந்தவொரு நாடும் ஏதாவது ஒரு கட்டத்தில் அமெரிக்காவின்
தாக்குதலில் இருந்து தப்ப முடியாது. மார்ச் 17 அன்று, புஷ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஈராக் மீது
தாக்குதல் நடத்துவதற்கான இறுதி நியாயத்தை பிரகடனப்படுத்தினார். ''இப்போது நாம் செயல்படுகிறோம், இப்படி
செயல்படாமல் இருந்துவிடுவதால் ஏற்படுகின்ற ஆபத்து செயல்படுவதைவிட பெரிதாக ஆகிவிடும். இன்னும் ஓராண்டிலோ
அல்லது ஐந்து ஆண்டுகளிலோ சுதந்திர நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் ஈராக்கின் வலிமை பல மடங்கு பெருகிவிடும்''
என்று பிரகடனப்படுத்தினார். இதை வேறுவகையில் சொல்வது என்றால், ஈராக் பாதுகாப்பற்ற சூழ்நிலையில்
இருக்கும்போது அமெரிக்கா தாக்கவேண்டும். ஈராக் எடுத்த நடவடிக்கைகளுக்காக அல்ல, ஆனால் எதிர்காலத்தில்
காலம் குறிப்பிடமுடியாத ஒரு நேரத்தில் ஏதாவது நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று கருதி இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த தத்தவத்திற்கு சர்வதேச சட்டத்தில் எந்தவிதமான அடிப்படையும் இல்லை. அமெரிக்காவின் இந்தத் தத்துவம்
போரையும், நாடுகள் பிடிப்பதையும் நியாயமான கொள்கையாக அறிவிக்கின்றது. ஈராக் மீதான தாக்குதல், அமெரிக்காவின்
சவால்விட முடியாத ஆதிக்கத்தினை பாதுகாப்பதற்காக அமெரிக்கா எடுக்கவிருக்கும் ஒருதொடர் ''தேர்ந்தெடுத்த
போர்'' நடவடிக்கைகளில் முதலாவதாகும். எதிர்காலத்தில், பெரிய அச்சுறுத்தலாக வளரக்கூடும் என்று கருதப்படுகின்ற
எதிரி நாடுகளை அவை அத்தகைய ஆபத்தான நிலைக்கு வளரும் முன்னரே அழித்துவிடவேண்டும் என்பதுதான் இந்தத் தத்துவம்.
2. போரை உலக ஏகாதிபத்திய யதார்த்த அரசியலின்
(realpolitik)
சட்டபூர்வ கருவியாக புகழ்ந்துரைப்பது கேடுகெட்ட அரசியல் தார்மீக சரிவை
காட்டுவதாகும். 20ம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளில் உருவான இரத்தக்களரி அனுபவங்களை அடிப்படையாகக்
கொண்டு, குறிப்பிடத்தக்க சர்வதேச சட்ட கட்டுக்போப்பு உருவாயிற்று. கோடிக்கணக்கான மக்கள் பலியான 1914 இற்கும்,
1918இற்கும் இடையில் நடைபெற்ற முதல் உலகப்போர் நாசங்களினால் உலகம் முழுவதும் இத்தகைய, போர்கள்
வெடிப்பதற்கு ''யார் பொறுப்பு'' என்ற மிக ஆவேசமான கருத்துமுரண்பாடு ஒன்றிற்று வழிவகுத்தது. அந்த விவாதத்திற்கு
அடிப்படை என்னவென்றால், சில கொள்கை, குறிக்கோள்களை, நோக்கங்களை- அவை எதுவாகயிருந்தாலும், அவற்றை
நிறைவேற்றுவதற்கு ஒரு அரசாங்கம் போர் தொடங்க முடிவு செய்து போரில் ஈடுபடுமானால், அது ஒரு குற்றச் செயல்
என்ற கருத்து உருவாயிற்று. 1914ம் ஆண்டு போர் உருவானதற்கான, காரணங்கள் நிச்சயமாக மிகவும் சிக்கலானவை.
ஜேர்மன் அரசாங்கத்தின் முடிவுகள்தான் போருக்கு பொறுப்பாக அமைந்த பிரதான காரணங்கள் என்பதை, நிரூபிப்பதற்கு
கணிசமான சான்றுகள் கிடைத்தன. ஆஸ்திரிய ஆர்ச்டியூக் (Archduke-மன்னர்)
சரஜேவோவில் படுகொலை செய்யப்பட்டதால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்தி போருக்கு
செல்லும் வகையில் அதன் கொள்கை காரணமாக ஜேர்மன் அரசு முடிவு செய்தது, திட்டமிட்டு போரில் இறங்கியது.
''போர்க் குற்றம்'' தொடர்பான பிரச்சனை இரண்டாம் உலகப்போர் முடிவில் அதைவிட
அதிக முக்கியத்துவம் பெற்றது. 2ம் உலகப்போர் ஆரம்பமாவதற்கு ஜேர்மனியின் மூன்றாவது குடியரசு தான் ஐயுறவற்ற
பொறுப்பாக விளங்கியது என்பது அமெரிக்காவும் முக்கிய அரசுகளும் உள்ளடங்கிய நாடுநேச நாடுகளை 1938ம் ஆண்டு
ஒரு முடிவெடுக்க செய்தது. அதன்படி ஜேர்மனி நாட்டின் முன்னாள் தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்த நேச நாடுகள்
முடிவு செய்தன. நூரம்பேர்க்கில் நாஜி தலைவர்கள் மீது விசாரணை நடத்துவதற்கு அடிப்படையான சட்டக் கொள்கைகளை
உருவாக்கும்போது இந்த விசாரணைகளின் நோக்கங்கள், இரண்டாவது உலகப்போரின் பல்வேறு பட்ட காரணங்களை முடிவு
செய்வதாக அமைந்திருப்பது நோக்கமல்ல எனவும், திட்டவட்டமான ஒரு விடயம் அடிப்படையாக உள்ளது எனவும் அமெரிக்க
வழக்கறிஞர் டெல்போர்ட் டெய்லர் வலியுறுத்தினார். அமெரிக்க வழக்குதொடுனரான ரொபர்ட் ஜாக்சனுக்கு, டெய்லர்
எழுதிய ஒரு குறிப்பில், ''போருக்கான காரணங்கள் முக்கியம்தான், அவை பல ஆண்டுகளுக்கு விவாதிக்கப்படும். ஆனால்,
அவற்றிற்கு இந்த விசாரணையில் இடம் இல்லை. இந்த விசாரணை மிகக் கடுமையாக ஓர் கொள்கையை உறுதியாக பற்றி
நிற்கவேண்டும். குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைவர்கள், போரை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடுவதற்கும் காரணங்கள்
எதுவாகவும் இருந்தாலும், ஆக்கிரமிப்பு போருக்கு திட்டமிடுவது, மற்றும் ஆக்கிரமிப்பு போரை ஆரம்பிப்பது சட்டவிரோதமானது.
அதற்கான காரணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் வரலாறு என்ற நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கலாம்,
ஆனால், இந்த நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க முடியாது" - (iv)
(அழுத்தம் சேர்க்கப்பட்டது).
நூரம்பேர்க் விசாரணை மிகப்பெரிய சட்ட நடைமுறை முன்மாதிரியை உருவாக்கிக்
கொண்டிருக்கிறது என்று 1946ம் ஆண்டு நன்றாக புரிந்துவிட்டது. ஆக்கிரமிப்புப் போரில் திட்டமிடுவது, மற்றும் நடத்துவது
ஒரு கிரிமினல் குற்றம் என்று சர்வதேச சட்டத்தில் ஒரு நடைமுறையை உருவாக்குகின்ற அடிப்படை நோக்கத்தோடு அந்த
விசாரணை நடைபெற்றது. அமெரிக்காவின் பிரதிநிதிகள் இந்தக் கொள்கையை வலியுறுத்தினார்கள். அமெரிக்கா அந்த
கொள்கைக்கு கட்டுப்படும் என்று ஒப்புக்கொண்டார்கள். ஜாக்சன் எழுதியுள்ளது போல்: ''ஒப்பந்தங்களை மீறி பிற
நடவடிக்கைகளை எடுப்பது, குற்றம் என்றால் அந்த செயல்களை அமெரிக்கா செய்தாலும் அல்லது ஜேர்மனி செய்தாலும்
குற்றம்தான். மற்றும் மற்றவர்களை கட்டுப்படுத்தும், கிரிமினல் குற்ற நடைமுறைகளை நாம் வகுத்து தரும்போது,
அதே நடைமுறைகள், நமக்கு எதிராகவும் பயன்படுத்தப்படலாம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்'' - (v).
புஷ் நிர்வாகம் ஆரம்பித்துள்ள போரை தேர்ந்தெடுத்தல்'' சட்ட நடைமுறைப் பொருளில்
நாஜி தலைவர்கள் எடுத்த முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளில் இருந்து அடிப்படையில் வேறுபட்டவை அல்ல. 1946ம்
ஆண்டு, அக்டோபர் மாதம் நாஜி தலைவர்கள் விசாரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். அமெரிக்க அரசிற்கு இது
நன்றாகவே தெரியும். மற்றும் அப்படி தெரிந்திருக்கின்ற காரணத்தினாலேதான், ஹேக் (Hague)
நகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ஏற்றுக்கொள்ள அமெரிக்கா மறுத்துவருகின்றது.
3. இந்தப் போரை அமெரிக்கா தான் தூண்டியது என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும்
இடமில்லை. ஈராக்கின் எண்ணெய் வளங்களை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதுதான் அதன் பிரதான
நோக்கமாகும். அமெரிக்கா ஈராக்கை வெற்றி கொள்வதற்கான முக்கிய பங்கு வகிப்பது எண்ணைய் வளம் தான் என்பதை
நிராகரிக்கும் அனைத்து முயற்சிகளும் நேர்மை குறைவானவையும் இகழ்வுக்குரியதுமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
அரசியல் மற்றும் பொருளாதார கணிப்புகளில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக, எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவைவிட
வேறு எந்த இயற்கை வளமும் இந்த அளவிற்கு முக்கியமான பங்கை வகிக்கவில்லை. அந்த முக்கியமான முயற்சிகளில், அமெரிக்காவிற்கு
சொந்தமான பெரிய எண்ணெய் நிறுவனங்களின் இலாப நோக்கு மிகவும் அற்பமானது அல்ல. அமெரிக்காவின் கைத்தொழில்,
அமெரிக்காவின் நிதி-நாணய கட்டமைப்பு மற்றும் அதன் உலக மேலாதிக்க நிலை ஆகிய அனைத்துமே, பாரசீகவளைகுடாவிலும்
மற்றும் மிக அண்மைக்காலத்தில் கஸ்பியன் படுகையிலும் கிடைக்கின்ற மிகப்பரவலான எண்ணெய் வளம் எந்தவிதமான தடையுமற்ற,
தனது கட்டுப்பாட்டில் வருவதில் தங்கியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக, அமெரிக்காவின் வெளிநாட்டுக்கொள்கை மற்றும் இராணுவ
மூலோபாய நடவடிக்கைகளின் வரலாற்றை முழுக்க முழுக்க பொருளாதார கண்ணோட்டத்தில் ஆராய்ந்தால், 1973ம்
ஆண்டின் ''எண்ணெய் அதிர்ச்சி'' க்கான பிரதிபலிப்பாக இருந்ததை காணலாம். அந்த ஆண்டு நடைபெற்ற அரபு-இஸ்ரேல்
போருக்கு பதிலளிக்கின்ற வகையில் பிரதான எண்ணெய் உற்பத்தி செய்கின்ற அரபு நாடுகள் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதித்த
தடையினால் உலகம் முழுவதிலும் பெட்ரோலிய பொருட்களின் விலை நான்குமடங்கு உயர்ந்ததுடன் இது அமெரிக்க மற்றும்
உலக முதலாளித்துவ பொருளாதாரத்தை தடுமாறச் செய்துவிட்டது. 1979ம் ஆண்டின் ஈரான் புரட்சிக்கு பின்னர் ஏற்பட்ட
இரண்டாவது எண்ணெய் அதிர்ச்சி கார்டர் தத்துவம் பிரகடனப்படுத்தப்படுவதற்கு இட்டுச்சென்றது. பாரசீக வளைகுடா
எண்ணெய் வளம் எந்தவிதமான தடையும் இல்லாமல் அமெரிக்காவிற்கு கிடைக்கவேண்டும் என்பது பிரதான மூலோபாய கவலை
என்று அந்த பிரகடனம் தெளிவுபடுத்தியது. இது கடந்த 23 ஆண்டுகளாக எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் அமெரிக்க
இராணுவப் படைகள் பாரசீக வளைகுடாப் பகுதியில் பெருமளவில் திரட்டப்பட்டு வருவதற்கு காரணமாகியது.
உலகின் பிரதான ஏகாதிபத்திய வல்லரசு என்ற வகையில் அமெரிக்காவின் உலக அந்தஸ்து,
தனக்கு எந்தவிதமான குறுக்கீடும் இல்லாமல் எண்ணெய் வளம் கிடைப்பதை பேணிக்காப்பதுடன் மட்டுமல்லாது இந்த
குறைந்துவரும் இயற்கை வளம், இதர நாடுகளுக்கு குறிப்பாக இன்றைய அல்லது எதிர்கால எதிரி நாடுகளுக்கு எந்த
அளவிற்கு கிடைக்கவேண்டும் என்பதை முடிவு செய்வதிலும் தங்கியுள்ளது.
ஒரு முக்கிய வளம் என்ற வகையில், எண்ணெயின் இந்த சர்வதேச புவிசார் அரசியல் அம்சத்தின்பால் அமெரிக்கா எடுத்துக்
கொண்ட அணுகுமுறை, 20ம் நூற்றாண்டின் கடைசி 25 ஆண்டுகளில் நடைபெற்ற அதிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்
சம்பவமான சோவியத் யூனியன் உடைவினால் ஆழமாய் பாதிப்புக்குள்ளாகி இருந்தது.
2ம் உலகப்போருக்குப் பின்னரும் மற்றும் ஏறத்தாழ அரை நூற்றாண்டு நடந்த பனிப்போர்
காலங்களில் அமெரிக்கா மேற்கொள்ள முடியாத ஏகாதிபத்திய நடைமுறைகளை, செயல் திட்டங்களை அமெரிக்கா மேற்கொள்வதற்கு
சோவியத் யூனியன் வீழ்ச்சியினை அமெரிக்க ஆளும் குழுவினர் தங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக கருதினர். ஒரு ''தனி
அமைப்பு'' (unipolar moment)
உருவாகுவதை தடுப்பதை தனது நோக்கம் என கூறி, அதாவது புதிதாக ஐக்கியப்பட்ட
ஐரோப்பாவோ அல்லது ஜப்பானோ அல்லது சிலவேளை சீனாவோ ஒரு புதிய சக்தியாக உருவாகி தனது உலக ஆதிக்கத்தை
எதிர்க்கலாம் என்பதால் அதை தடுப்பதை அமெரிக்கா தனது முக்கிய மூலோபாய நோக்கமாக கொண்டது. அமெரிக்கா
உலகப் பொருளாதாரத்தில் கணிசமான அளவிற்கு அதன் அந்தஸ்தை இழந்துகொண்டு வருவதை அறிந்துகொண்ட அமெரிக்க
ஏகாதிபத்திய கொள்கைகளை வகுப்பவர்கள், அமெரிக்கா மற்றவர்களை நிலைகுலையச் செய்யும் வகையில், அமெரிக்கா
தனது இராணுவ வலிமையை பெருக்கிக்கொண்டால் அதை ஒரு பிரதான கருவியாக பயன்படுத்தி உலகையே தனது சொந்த
நலன்களுக்கு ஏற்ப மறுஒழுங்கமைக்கலாம் என்று கருதினர். இந்த உள்ளடக்கத்தில், இராணுவ வலிமையை பயன்படுத்தி எண்ணெய்
உற்பத்தி மண்டலங்களில் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டி மற்றும் உலகளாவிய விநியோக அதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொள்ளும்
இந்த மூலோபாய கருத்து திட்டவட்டமான செயல்திட்ட நடைமுறையாக மாறியது.
4. எவ்வாறிருந்தபோதிலும், அமெரிக்காவின் பூகோள அரசியல் கணிப்புகளில் முக்கியமானதாக
எண்ணெய் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வது ஈராக் மீது போர் தொடுத்தது மற்றும் பொதுவாக இராணுவமயத்தை
தழுவிக்கொண்டதற்கான முற்றுமுழுமையான விளக்கத்தை வழங்காது. அமெரிக்கா அல்லது மற்றொரு முதலாளித்துவ நாடு
தனது உயிர் நாடி நலன்களை அடையாளம் காட்டி விளக்கம் தருவது மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளை
வகுப்பது மிக எளிதான பொருளாதார கணிப்புகளை அடிப்படையாக கொண்டதல்ல. அதற்கு மாறாக இந்த கணிப்புகள்
எவ்வளவிற்கு முக்கியம் வாய்ந்தவையாகயிருந்தாலும், அவை அந்த குறிப்பிட்ட சமுதாயத்தின் ஒட்டுமொத்த கட்டுமானம்
மற்றும் உள்உந்துசக்திகளால் ஆளுமை செலுத்தப்படுவதுடன் ஒழுங்கமைக்கப்படுகின்றன. இந்த கண்ணோட்டத்தில்
பார்க்கும்போது, ஈராக் மீது நடத்தப்பட்ட படையெடுப்பு, அமெரிக்க அரசியல் கட்டமைப்பில் நிலவுகின்ற ஆழமானதும்
மற்றும் மோசமான சமுதாய மற்றும் அரசியல் முரண்பாடுகளின் வெளிப்பாடுதான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கையை பிரிக்கும் ஊடுருவ முடியாத தடை எதுவும்
இல்லை. அவை ஆளும் குழுவில் ஆதிக்கம் செலுத்தம் தட்டினால் வகுக்கப்படும் வர்க்க கொள்கையின் ஒன்றோடொன்று தொடர்புபட்ட
பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. சர்வதேச பொருளாதார சக்திகள் தொடர்ச்சியான அழுத்தத்திற்கு
உட்பட்டிருக்கையில் ஆளும் தட்டினால் பின்பற்றப்படும் வெளிநாட்டுக் கொள்கை, உள்நாட்டு நலன்களுக்கு அவசியமான திட்டங்களையும்
துணை நடவடிக்கைகளையும் பிரதிபலிக்கின்றது.
2ம் உலகப்போர் முடிந்து ஏறத்தாழ 60 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த காலகட்டத்தை
ஆராய்ந்தால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளுக்கு இடையில் நிலவுகின்ற உறவுகள் தெளிவாக தெரிகின்றன.
இந்த 60 ஆண்டுகளையும், இரண்டு காலப்பகுதிகளாக பிரிக்கலாம். 1945 - 1975 இடைபட்ட முதல் 30 ஆண்டுகளில்,
தாராளவாத சமூக சீர்திருத்தவாதம் அமெரிக்காவின் உள்நாட்டுக் கொள்கையின் ஆதிக்கமிக்க போக்காக இருந்தது. வெளிநாட்டுக்
கொள்கையில், அமெரிக்க முதலாளித்துவம் பல்வேறு பன்னாட்டு அமைப்புகளில் வேர்விட்டிருந்த தாராளவாத சர்வதேசவாத
நோக்கத்திற்காக போராடியது. அமெரிக்க ஆளும் வர்க்கம் தனது நீண்டகால நலன்கள் என்று கருதியவற்றிற்கு இந்த பலநாடுகளை
கொண்ட நிறுவனங்கள் பணியாற்றின. மேலும் சோவியத் யூனியனுடன் சமரசம் செய்துகொண்டு அதனுடன் இணைந்து
செல்லவேண்டும் என்ற பிரதான அணுகுமுறையை எப்போதுமே முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவுகள்
எதிர்த்தன. சமரசம் என்கிற கட்டுக்கோப்பிற்குள்ளேயே, அமெரிக்க முதலாளித்துவம் மிகக்கடுமையாக தனது நலன்களை
காப்பாற்ற போராடியது. தனது சர்வதேச நலன்கள் என்று ஆளும் வர்க்கம் கருதியதற்கு முரணாக செயல்பட்டால்
போருக்குச் செல்லவும் அமெரிக்க ஆளும் வர்க்க முதலாளித்துவம் தயாராகயிருந்தன. ஆனால், 2ம் உலகப் போருக்குப்
பின்னரான பாரிய பொருளாதார செழிப்பின் மத்தியில் உள்நாட்டில் சமூக தாராளவாதமும், வெளிநாட்டில் தாராளவாத
(கம்யூனிச எதிர்ப்பு) சர்வதேசவாதம் மிகவும் விருப்பத்தக்க கொள்கை என்று அமெரிக்க முதலாளித்துவம் கருதியது.
1944ம் ஆண்டு நிறுவப்பட்ட உலக பொருளாதார அமைப்பு (பிரிட்டன் வூட்ஸ் உடன்பாடு-Bretton
Woods system) முடிவிற்கு வந்தமை தாராளவாத காலகட்டம்
முடிவிற்கு வந்ததை முன்கூட்டிகாட்டியது. 1971ம் ஆண்டு டொலர் தங்கம் மாற்றுமுறை (Dollar-gold
convertibility) முடிவிற்கு வந்தமை அதிகரித்துவரும் உலக
பொருளாதார உறுதியின்மைக்கு வழியமைத்தமை வரலாறு காணாத விலைவாசி வீக்கத்தினால் எடுத்துக்காட்டப்பட்டதுடன்,
மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் இலாப விகிதங்களில் தொடர்ச்சியான வீழ்ச்சியை உருவாக்கியது.
பொதுவான உலக பொருளாதார நிலை சீர்குலைந்துகொண்டு வந்தமை அமெரிக்க ஆளும்
வர்க்கம் தனது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கை அடிப்படைகளை மாற்றவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கியது.
அமெரிக்காவிற்குள் சமூகக்கொள்கைகள், ஒரு குறிப்பிட்ட கட்டுப்பட்டளவில் செல்வத்தை மறுபங்கீடு செய்யவேண்டியதை
நோக்கிய சென்றதுடன், மட்டுப்படுத்தப்பட்ட அளவாக இருந்த சமூக சமத்துவமின்மை இன்னும் பின்நோக்கி தள்ளப்பட்டது.
1980ம் ஆண்டு ரீகன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவிலேயே மிகப்பெரும் பணக்காரர்களுக்கான
வரிவிகிதங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டதுடன், மிக வறுமை நிலையில் உள்ள ஏழை மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக
ஒதுக்கப்படும் நிதியில் பெரும் வெட்டுக்கள் விழுந்ததுடன், தொழிற்சங்கங்கள் மீது ஒரு பரவலான தாக்குதல் நடாத்தப்பட்டது.
இக்கொள்கையின் சர்வதேச உள்ளடக்கம் சோவியத் யூனியனுடன் மோதல் தவிர்ப்பு போக்கு
கைவிடப்பட்டுடலும், அமெரிக்காவின் சர்வதேச நலன்களுக்கு தீங்கு ஏற்படுத்துபவை என்று கருதப்பட்ட ''மூன்றாம் உலக
நாடுகளில்'' தேசிய இயக்கங்களுக்கு எதிராக பொதுவாக அமெரிக்காவின் இராணுவ அழுத்தத்தை அதிகரித்தலுமாகும்.
5. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக் கொள்கைகள் விரும்பிய விளைவுகளை
உருவாக்கின. அமெரிக்காவிற்குள் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரம் ஸ்தம்பிதம் அடைந்தது அல்லது சீரழிய
ஆரம்பித்தது. ''மூன்றாம் உலக நாடுகள்'' என்று அழைக்கப்படும் நாடுகளில், கோடிக்கணக்கான மக்களது
வாழ்க்கைத்தரம் மிக பயங்கரமான அளவிற்கு சீர்குலைந்தது. ஆளும் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மேல்மட்டத்தை
சார்ந்த மிகப்பெரும் பணக்காரர்களுக்கு அவர்கள் கனவுகாணக்கூடிய அனுகூலங்கள் இந்தக் கொள்கைகளால் உருவாயின.
அமெரிக்காவிற்குள் சம்பளம் குறைந்ததும், வெளிநாடுகளில் குறைந்த ஊதியத்தில் குறைவில்லாத தொழிலாளர்கள் கிடைத்ததும்
மற்றும் பொருட்களின் விலை மிக மலிவாகயிருந்ததும் 1990 களில் பாரிய பங்கு சந்தை பொருளாதார பூரிப்பிற்கு ஏற்ற
சுற்றுச்சூழலை உருவாக்கியது. (1991ம் ஆண்டு முதல் வளைகுடாப் போருக்குப் பின்னர் இந்த பங்கு மார்க்கெட்டின்
மகத்தான வளர்ச்சி போக்கு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.)
அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மையும், அத்துடன் ஆளும் குழுவினர்
வோல்ஸ்ரீட் பங்குச்சந்தையில் ஊகவாணிபத்தால் ஏற்பட்ட பாரிய இலாபமும் அமெரிக்காவில் நிலவிய குறைந்த சம்பள மட்டத்திலும்,
வெளிநாடுகளில் இருந்து தொடர்ச்சியாக கிடைத்த மலிந்த மூலப்பொருள்களிலும்(முக்கியமாக எண்ணைய்) மற்றும் சம்பளம்
குறைந்த தொழிலாளர்களுக்கும் கட்டுப்பட்டு(உள்ளடங்கி) இருந்தது என ஒருவர் கூறலாம். கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவின்
ஆளும் தட்டினர் அடைந்த நிலையற்ற செல்வசெழிப்பும், இலத்தீன் அமெரிக்கா - ஆபிரிக்கா - ஆசியா - மற்றும்
முன்னாள் சோவியத் யூனியன் ஆகியவை பயங்கரமான வறுமை நிலைக்கு தள்ளப்பட்டதும் ஒன்றோடொன்று தொடர்புடைய
போக்குகளாகும். ஒரு கணித நிபுணர் அமெரிக்காவில் செல்வம் சேர்க்கப்பட்டதற்கும் பொருட்களின் மலிந்த விலையாலும்
மற்றும் வெளிநாட்டு தொழிலாளர் மோசமாக சுரண்டப்பட்டதாலும் ஏற்பட்ட சமூக விளைவிற்கும் இடையிலான உறவை கணிப்பாரானால்
அமெரிக்காவின் பங்கு சந்தையான வோல்ஸ்டிரீட்டில் ஒரு புதிய கோடீஸ்வரர் உருவாக்கப்படுவதற்கு ஆப்பிரிக்க, ஆசிய,
யூரேசிய மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளை எத்தனை கோடிக்கணக்கான மக்கள் வறுமையினால் அகால மரணமடைந்திருப்பர்
என்பதை துல்லியமாக கணக்கிட்டு கூறியிருப்பார்.
அமெரிக்காவில் ஆளும் குழுவிற்கு தனது சொந்த செல்வத்திற்கும், உலகத்தின் பெரும்
மக்கட்தொகையை சுரண்டுவதற்கும் கொள்ளையடித்தலுக்கும் இடையேயுள்ள உறவை அறிந்திருக்காமல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட
உறவுகளால்தான் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனமிக்க ஒரு சமுதாயப் பிரிவை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த சமூகப்
பிரிவு 1980 களிலும், 1990 களிலும் பங்குச்சந்தையின் ஊகவாணிப பூரிப்பால் பெற்றெடுக்கப்பட்ட முட்டாள்தனமான,
அகம்பாவமிக்கதும் கூக்குரல் இடும் புதுப்பணக்காரர்கள் கும்பலாகும். இந்த ஊழல்மிக்க சமூகப்பிரிவுதான், செய்திஊடகங்களில்
ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த ஊழல்மிக்க தட்டினர் தொலைக்காட்சிகளிலும், வானொலியிலும், பத்திரிகைகளிலும் தங்களது
தனித்தன்மை மிக்க அகந்தைபோக்கை, சுயநலநோக்கை மற்றும் பொதுவான பிற்போக்கு குணாதிசியங்களை பிரச்சாரம்
செய்துகொண்டிருக்கிறது. அமெரிக்க இராணுவமயத்தை மிகவும் அப்பட்டமாக ஊடகங்களில் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள அரசியல் அபிலாஷைகளை தங்களது சமூகப்பிரிவு சுயநலத்தோடு ஒப்புநோக்கி எதிரொலிக்கிறார்கள்.
எனவேதான், நியூயோர்க் ரைம்சை சேர்ந்த தோமஸ் பிரீட்மன் இந்த ஏகாதிபத்திய ஆதரவு புதுப் பணக்காரர்களை
உருவகப்படுத்திக் கொண்டிருக்கிறார். எந்தவிதமான சங்கட உணர்வு சிறிதும் இல்லாமல், ''எண்ணெய்க்காக போர்
என்றால் அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை'' என்று எழுதுகிறார்.
ஈராக்கிற்கு எதிரான போர் ஆளும் குழுவிற்கு பெரிய வரப்பிரசாதத்தை வழங்க உறுதியளித்துக்
கொண்டிருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் இராணுவ மூலோபாய நோக்கங்களோடு, நெருக்கமான உறவு கொண்டுள்ள
ஒரு இன்டர்நெட் தகவல்தளமான Stratfor
கீழ்கண்டவாறு விளக்கம் தந்திருக்கின்றது: ''நடைபெறவிருக்கின்ற போரில் மிகப்பெரிய வெற்றியாளர்களாகயிருப்பவர்கள்
யார் என்றால் மலிவான விலையில் கிடைக்கின்ற சொத்துக்களை தேடித்திரிகின்ற முதலீட்டாளர்கள். அந்த பிராந்தியத்தோடு
மற்றும் அதன் வர்த்தக நடைமுறைகளோடு பழக்கப்பட்ட வெளிநாட்டுக்காரர்கள், அங்கு ஒப்பந்தங்களை பெற்றிருப்பவர்கள்
மற்றும் ஆபத்துக்களை தாங்கிக்கொள்ளும் வல்லமை உள்ளவர்களுக்கு தொலைத்தகவல் தொடர்புகளிலிருந்து பொருட்கள் உற்பத்தி
வரையிலான பல்வேறு துறைகளில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புக்களை பெறமுடியும். அல்லது புதிய முதலீட்டாளர்கள்
ஆபத்தை எதிர்கொண்டு முதலீடு செய்பவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.'' சுருக்கமாக
இதுதான் ''ஈராக்கை விடுதலை செய்யும் நடவடிக்கையின்'' நோக்கம்.
6. இதுபோன்ற வார்த்தைகளை காகிதத்தில் அச்சடித்தால், அது அமெரிக்காவின் ஆளும்
மேல்தட்டை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள ஊழலின் அளவுகளையும், தார்மீக நெறி குறைபாடுகளையும், எடுத்துக்காட்டுவதாக
அமைந்திருக்கிறது. இறுதியாக பார்க்கும்போது, முதலாளித்துவ சமுதாயம் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த
ஊழலின் அளவும் பரிணாமும் ஆழமான புறநிலை வேர்களை கொண்ட ஒரு சமூக போக்காகும். அடிப்படை உற்பத்தி
தொழிற்துறைகளில் இலாபவீதம் தொடர்ச்சியாக அழுத்தத்திற்கு உள்ளாவதன் மூலம் மிகவும் முக்கியமாகவும், தெளிவாகவும்
தனது வெளிப்பாட்டை காட்டும் முதலாளித்துவ அமைப்பு முறையின் அதிகரித்துவரும் நெருக்கடியானது எல்லாவிதமான
மோசடிகளையும் செய்கின்ற ஒரு சூழ்நிலையை உற்சாகப்படுத்தியுள்ளது. நிறுவனங்களின் நிர்வாகிகள் சொத்துக்களின் உண்மையான
மதிப்பு, நீண்டகால அடிப்படையில் வளரும் என்பதில் நம்பிக்கை இழந்து அதற்கு பொறுப்பானவர்கள் என கூறிக்கொள்ளும்
அவர்கள் அந்த சொத்துக்ளை தங்களது சொந்த குறுகியகால சுயநல செல்வக் குவிப்பு நோக்கங்களுக்காக முழுமையாக
பயன்படுத்தி வருகிறார்கள். சட்டப்பூர்வமாக இலாபத்தை உருவாக்க முடியாத சூழ்நிலையில் அவர்கள் நிறுவனங்களின் கணக்கு
புத்தகங்களில் கற்பனைத் தேர் ஓட்டி கற்பனையாக இலாபங்களை சிருஷ்டிக்கிறார்கள். இருபதாவது நூற்றாண்டின் முதல்
50 ஆண்டுகளில் அமெரிக்க வர்த்தகத்தின் நியாயமான சாதனைகளில் ஒன்று என்று கருதப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகவியல்,
ஏமாற்று மற்றும் ஊழல் கலையாக தரம் தாழ்ந்துவிட்டது.
7. இந்த சமூக சாணி கூளத்தின் கேள்விக்கிடமின்றிய ஒட்டுமொத்த அரசியல் வெளிப்பாடுதான்
புஷ் நிர்வாகமே தவிர வேறு ஒன்றும் இல்லை. புஷ் நிர்வாகத்தின் துணை ஜனாதிபதி ரிச்சர்ட் செனி, தனது நேரத்தை
இரண்டாகப் பகிர்ந்துகொண்டு, அதில் ஒரு பகுதியை இரகசிய அரசாங்கத்திற்கு தலைமை ஏற்கும் பணியைச் செய்கிறார்.
மறுபாதி நேரத்தை ஹாலிபர்ட்டன் (Halliburton)
நிறுவன பண மூட்டையாக பணியாற்றுவதில் செலவிடுவதன் மூலம் ஒரு
ஆண்டிற்கு 1/2 மில்லியன் டொலருக்கு மேற்பட்ட தொகையை அந்த நிறுவனத்தில் இருந்து ஊதியமாக பெறுகிறார்.
Enron என்ற
நிறுவனத்தின் முன்னாள் உயர் நிர்வாகியான இராணுவ செயலாளர் ரொம் வைற், ஈராக் தொடர்பாக நிர்வாகத்தின்
கொள்கையை உருவாக்கிய ரிச்சார்ட் பேர்ல், ஆயுத வியாபாரி கஸ்ஸோகியுடன் (Khashoggi)
இரகசிய கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதியை
பொறுத்தவரை, அவர் முற்றிலும் ஒன்றுமில்லாத மனிதர். அவரை இந்த பதவிக்குவர முன்னர் ஒன்றுமில்லாதவராக இருந்த
அவரது குறிப்பிடத்தக்க மிகச்சிறந்த குணாதிசயம் பிறரை துன்புறுத்துவதில் இன்பம் காணும் போக்காகும். இதை வரலாற்று
ஆசிரியர்கள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் தார்மீக மற்றும் அறிவாற்றல் சீர்குலைவு என்றுதான் கருதுவார்கள். ஒரு ஆளும்
வர்க்கம் புஷ்சை தனது தலைவராக தேர்ந்தெடுக்கும் என்றால், உண்மையிலேயே அந்த ஆளும் வர்க்கம் வெளிப்படையாகவும்,
உள்அர்த்தத்திலும் தனது தலையை இழந்துவிட்டது என்றே பொருள்.
8. எது எப்படியிருந்தாலும் இன்னமும் உண்மையான உலகம் ஒன்று உண்டு. இந்த மோசடிகளுக்கும்
மற்றும் வெளிவேடங்களுக்கும் கீழே அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடி மிக பிரம்மாண்டமான அளவிற்கு
வளர்ந்துகொண்டே போகின்றது. அமெரிக்க கூட்டாட்சி யூனியனில் 50 மாநிலங்கள் (ஸ்டேட்ஸ்) உள்ளன. அவற்றில்
பெரும்பாலானவை திவாலாகும் விளிம்பில் நின்றுகொண்டிருக்கின்றன. சமூகநல திட்டங்கள் சீர்குலைந்துகொண்டிருக்கன்றன. பள்ளிக்
கல்வி முறை சிதைந்துகிடக்கிறது. கல்வியறிவு என்பதை விளக்குவதற்கு இலக்கண பிழையில்லாமல் ஒரு பத்தியை எழுதுவதற்கான
ஒரு அளவுகோல் என்று விளக்கம் தருவோமானால், 25 சதவிகிதத்திற்கும் குறைந்த அமெரிக்கர்கள் கல்வியறிவு உள்ளவர்களாக
கருதப்படுவார்கள். சுகாதாரத் திட்டங்களுக்கு, அடியோடு நிதிகள் இல்லை. சேவைகள் கடுமையாக குறைக்கப்பட்டுவிட்டன.
தொழில்கள் முழுவதும் சீர்குலைவு நிலையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஓராண்டிற்குள் பெரும்பாலான அமெரிக்க
விமானத் தொழில்கள் காணாமல் போய்விடும். அமெரிக்க மக்களிலேயே மிகப்பெரும் பணக்காரர்களுக்கு வரிக்குறைப்பு
சலுகைகளை தருவதற்காக பெருமளவில் நிதி ஆதாரங்கள் திருப்பிவிடப்பட்டிருப்பதால், தேசிய அளவில் திவால் நிலை
உருவாகிவிடுமோ என்ற அச்சுறுத்தல் தோன்றியுள்ளது. அமெரிக்காவில் நிலவுகின்ற சமூக சமத்துவமின்மை வேறு எந்த பிரதான
முதலாளித்துவ நாட்டையும்விட அதிகமாக உள்ளது. அமெரிக்க மக்களிலேயே மிகப்பெரும் பணக்காரர்களாகயிருக்கின்ற 2%
மக்களிடம் நாம் அதிர்ச்சியடைகின்ற அளவிற்கு தேசத்தின் செல்வம் குவிந்துகிடக்கின்றது. கெவின் பிலிப்ஸ் ஆய்வின்படி, அமெரிக்காவிலேயே
மிகப்பெரும் பணக்காரர்களாகயிருக்கின்ற 14,000 குடும்பங்களின் ஆண்டு வருமானம், மிக ஏழ்மையாக உள்ள
20,000,000 குடும்பங்களின் ஆண்டு வருமானத்தைவிட அதிகமாக உள்ளது.
9. உள்நாட்டில் நிலவுகின்ற ஆபத்தான சமூக கொந்தளிப்புகள் அதிகரித்துக்கொண்டு வருவதால்,
அவற்றைச் சமாளிக்கும் அத்தகைய ஆபத்துக்களை மட்டுப்படுத்தும் அளவிற்கு அமெரிக்காவின் வெளிநாட்டுக்கொள்கை மிகத்
தீவிரமான இராணுவமய பரிணாமம் பெற்றிருக்கிறது. இராணுவ மயம் இரண்டு உயிர்நாடியான பணிகளை செய்கிறது. முதலாவது,
படையெடுத்து சென்று சூறையாடலில் ஈடுபடுவதால் கிடைக்கின்ற மேலதிக வழங்கள், குறைந்தபட்சம் குறுகிய காலத்திற்கு
பொருளாதார பிரச்சனைகளை சமாளிப்பதற்கு உதவக்கூடும். இரண்டாவது, போரானது உள்நாட்டு சமூக அழுத்தங்களை
வெளியே திருப்பிவிடும் வழியாகின்றது.
10. இத்தகைய குறுகிய கால பயன்கள் அமெரிக்காவை பீடித்துள்ள பொருளாதார மற்றும்
சமூக நோய்களை குணப்படுத்த முடியாது. மிக விரைவாக ஈராக்கில் அமெரிக்க இராணுவ வெற்றியை எட்டினாலும் அமெரிக்காவின்
சமூக மற்றும் பொருளாதார நெருக்கடி விரைவாக தீவிரம் அடையும். அமெரிக்க சமுதாயத்தின் வெகுவான நெருக்கடியை
ஆக்கப்பூர்வமான எந்தவழியிலும், சமாளிப்பதற்கு அமெரிக்காவின், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் அங்கங்கள்
எதுவும் வல்லமை பெற்றவை அல்ல.
இந்தப் போரே அமெரிக்க ஜனநாயகத்தின் மிகுந்த நாசம்மிக்க தோல்வியை பிரதிநிதித்துவபடுத்துவதாக
அமைந்திருக்கின்றது. அரசியல் சதிகாரர்கள் அடங்கிய ஒரு சிறிய கபளீகரக்குழு இரகசிய செயல்திட்டத்தோடு இயங்குகிறது.
மற்றும் மோசடி அடிப்படையில் அந்தக்குழு ஆட்சிக்கு வந்திருக்கிறது. இது அமெரிக்க மக்கள் விரும்பாத, அல்லது
என்னவென்று புரிந்துகொள்ளாத ஒரு போரில் அமெரிக்க மக்களை இழுத்துக்கொண்டுபோய் விட்டுவிட்டது. புஷ் நிர்வாகத்தின்
கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ, போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ ஜனநாயக உரிமைகளை பறிப்பதை
கண்டிக்கவோ, சமூக சேவைகளை அழித்துவிட்டதை எதிர்க்கவோ, தொழிலாளவர்க்கத்தின் வாழ்க்கைத்தரத்தை
தொடர்ச்சியாக தாழ்த்துவதை கண்டிக்கவோ எந்தவிதமான அரசியல் அமைப்பும் அமெரிக்காவில் இல்லை. முதலாளித்துவ
தாராளவாதத்தின் அழுகிப்போன பிணமான ஜனநாயகக் கட்சி ஆழமாக மதிப்பிளந்துபோயுள்ளது. தொழிலாளவர்க்கம்
அனைவரும் தங்களது வாக்குரிமையையே இழந்துவிட்ட நிலையில் உள்ளதாக உணருகின்றனர்.
11. இருபதாவது நூற்றாண்டில் நாம் வாழ்ந்த காலம் வீணானது அல்ல. இருபதாவது
நூங்றறாண்டில் வெற்றிகளும், துன்பியல்களும் தொழிலாள வர்க்கத்திற்கு மதிப்பிட முடியாத அரசியல் படிப்பினைகளை
விட்டுச் சென்றிருக்கின்றது. அப்படி இருபதாவது நூற்றாண்டு விட்டச்சென்றுள்ள மிகவும் மதிப்புள்ள படிப்பினைகளை
விட்டுச்சென்றுள்ளது. அவற்றில், மிக முக்கியமானது ஏகாதிபத்திய போரின் தன்மை பற்றியும் முக்கியத்துவம் பற்றியதுமாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, தேசிய மற்றும் சர்வதேசிய முரண்பாடுகளை வழக்கமான வழிமுறைகளில் தீர்வு எதுவும் காண
முடியாது என்பதை இது சித்தரித்து காட்டியுள்ளது. தற்போது ஆரம்பித்துள்ள போரின் ஆரம்பக்கட்ட விளைவுகள் எதுவாகயிருந்தாலும்,
அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது அழிவுக்குரிய இடத்திற்கு வந்துவிட்டது. அது உலகை வெற்றிகொள்ள முடியாது. மத்திய
கிழக்கு வெகுஜனங்கள் மீது அது மீண்டும் காலனித்தவ விலங்குகளை பூட்ட முடியாது. தனது உள்நாட்டு நோய் நொடிகளுக்கு
மாற்று தீர்வு ஆக போரை ஒரு ஊடகமாக பயன்டுத்திக்கொள்ள முடியாது. அதற்கு நேர்மாறாக இந்தப் போரினால்
உருவாகின்ற எதிர்பாராத பிரச்சனைகளும், இந்தப் போரினால் உருவாக்கப்பட்டுள்ள பெருகிவரும் எதிர்ப்புகளாலும் அமெரிக்க
சமுதாயத்திற்குள் நிலவுகின்ற முரண்பாடுகள் தீவிரமடையவே செய்யும்.
தற்போது வெளியிடப்படும் கருத்துக்கணிப்புக்கள் ஊடகங்களின் செய்திகளைப்போல்
நம்பமுடியாதவை. ஏற்கெனவே போருக்கு எதிரான கணிசமான அளவிற்கு எதிர்ப்பு உணர்வு உள்ளதுடன் அது
வளர்ந்துவருகின்றது. போர் அரம்பத்தில் நடைபெற்ற போர் எதிர்ப்பு இயக்கம் வியட்நாம் போர் யுகத்தில் நடைபெற்ற
கண்டனப் பேரணிகளைவிட மிகப்பெரியது. அமெரிக்காவிற்குள் நடைபெற்ற கண்டனப் பேரணிகள் விரிவான சர்வதேச போர்
எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாகும். சமூக நனவில் முற்றிலும் ஒரு புதிய பண்பு உருவாகியிருப்பதை இது வெளிப்படுத்துகிறது.
இந்தப் பேரணிகள் எடுத்துக்காட்டுகின்றன. நமது யுகத்தின் மிகப்பெரிய சமூகப்பிரச்சனைகளுக்கு சர்வதேச அளவில் தீர்வுகாண
வேண்டுமே தவிர, தேசிய தீர்வுகள் இல்லை என்று விழிப்புணர்வுகள் வளர்ந்துவருகின்றன. இந்த விழிப்புணர்வு தொழிலாளவர்க்கத்தின்
ஒரு புதிய பரந்த இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும்.
மார்ச் 29--30 வாரக் கடைசியில் உலக சோசலிச வலைத் தளமும், சோசலிச
சமத்துவக் கட்சியும், ஒரு பகிரங்க மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருக்கின்றன. போரின் விளைவுகள் குறித்து பூர்வாங்க
மதிப்பீடுகளை செய்வது அந்த மாநாட்டின் பணியாக இருப்பதுடன், ஏகாதிபத்தியத்திற்கும், இராணுவ வாதத்திற்கும் எதிரான
போராட்டம் அடித்தளமாக கொள்ளவேண்டிய ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கை அபிவிருத்தி செய்யும்.
Notes:
[i] Gordon Wright, The Ordeal of Total War 1939-1945 (New York,
1968), p. 17.
[ii] Hanna Batatu, The Old Social Classes and the Revolutionary Movements
of Iraq (Princeton, 1978), pp. 985-86.
[iii] The New York Times, March 16, 2003.
[iv] Telford Taylor, The Anatomy of the Nuremberg Trials (New York,
1992), pp. 51-52.
[v] Ibid, p. 66
|