World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

Venezuela "strike": the anatomy of a US-backed provocation

வெனிசூலா "வேலை நிறுத்தம்": அமெரிக்க ஆதரவு ஆத்திரமூட்டலின் கூறுகள்

By Patrick Martin
20 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

வெனிசூலா ஜனாதிபதி ஹீயூகோ சாவிசை பதவியிலிருந்து விரட்டுவதற்கு திட்டமிட்டு அந்நாட்டில் கிளர்ச்சிகளை செய்துவருகிற வலதுசாரி தலைவர்கள் அடங்கிய முன்னணிக் குழு, கடந்த ஆறு வாரங்களுக்கு மேலாக நடந்துவரும் வர்த்தக நிறுவனங்களின் கதவடைப்பை விலக்கிக் கொள்ளவதற்கான முதல் நிபந்தனையாக ஜனாதிபதி உடனடியாக பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டிருக்கிறது.

ஜனநாயக ஒருங்கிணைப்பாளர் அமைப்பைச் சார்ந்த பிரதிநிதிகள், மருத்துவர்கள், உணவு விடுதி உரிமையாளர்கள் மற்றும் இதர சிறு வர்த்தகர்கள், டிசம்பர்-2-ந்தேதி தொடங்கிய பொது வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டதை முடிவுக்குக் கொண்டுவர சுதந்திரம் அளிக்கப்படுவதாக அறிவித்தனர். வெனிசூலா வர்த்தக சபையின் (Fedecamaras) தலைவர் ரபேல் அல்பான்சோ இதுபற்றி கருத்து தெரிவிக்கும்போது தொடர்ந்து கதவடைப்பு நடைபெற்றால், பல வர்த்தக அமைப்புக்கள் திவாலாகும் நிலைமையில் இருப்பதாக குறிப்பிட்டார். "தனியார் துறையை அடியோடு மடியச்செய்கிற முடிவு சரியான முடிவாக இருக்காது, என்று நாங்கள் கருதுகிறோம். மீண்டும் திறப்பதா, இல்லையா என்பது தனிநபர் மட்டத்தில் முடிவு செய்துகொள்ள வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.

சாவீசிற்கு எதிரான இயக்கத்தை ஆதரிக்கின்ற முதலாளிகள் இங்கொன்றும், அங்கொன்றுமாக நடத்திய கதவடைப்புக்கள் ஒப்பீட்டளவில் சிறிய பாதிப்பையே ஏற்படுத்தியது. இதில் குறிப்பிடத்தக்கது அரசிற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம் PDVSA நிர்வாக அதிகாரிகளாலும் மேலாளர்களாலும் மூடப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம்தான் வெனிசூலா மிகப்பெரும் அளவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. அரசாங்கத்தின் வருமானத்தில் பாதி இந்த நிறுவனத்தின் மூலம் கிடைக்கிறது.

இந்த அதிகாரிகளில் மிகப்பெரும்பாலோர் முந்திய வலதுசாரி அரசுகளால் நியமிக்கப்பட்டவர்கள். இவர்கள் சாவீசிற்கு குரோதமானவர்கள், கதவடைப்பிற்கு ஆதரவாக வெண்ணிற ஆடை தொழிலாளர்களும், கீழ்மட்ட நிர்வாக அலுவலர்களும் (white-collar workers and lower-level management) அடங்கிய தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. ஆனால், பல தொழிலாளர்கள் தங்களது தொழிற்கூடங்களை விட்டு வெளியேறாமல் தொடர்ந்த பணியைச் செய்து வருகின்றனர். அவர்கள் கதவடைப்பிற்கு எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

சாவீஸ் அரசு எண்ணெய் உற்பத்தியை குறைந்த அளவிற்கு மீண்டும் தொடக்குவதில் வெற்றிபெற்றது. நாட்டிலுள்ள மூன்று பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் இரண்டில் மேல்தட்டு அதிகாரிகள் நாசவேலைகளில் ஈடுபட்டாலும் அடித்தள தொழிலாளர்கள் அவர்களுக்கு பதிலாக எண்ணெய் சுத்திகரிப்பு பணிகளை தொடர்ந்து செய்தனர். ஒவ்வொரு நாளும் 400,000 பீப்பாய்கள் அளவிற்கு எண்ணெய் உற்பத்தி பெருகியது. ஆனால், இந்த உற்பத்தி ஏற்றுமதியை தொடக்குவதற்கு போதுமானதல்ல எனினும் உள்நாட்டுத் தேவைகளுக்குப் போதுமானதாக இருக்கிறது. ஓரளவிற்கு ஏற்றுமதிகள் நடந்துவருவதற்கு உதவுகின்ற வகையில் பிரேசில், ரஷ்யா மற்றும் இதர நாடுகளிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை வெனிசூலாவிற்கு ஏற்றுமதிக்காக வந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் ஆதரவோடு வெனிசூலா ஜனாதிபதி பதவி நீக்கம் செய்வதற்கு நடைபெற்றுவரும் கிளர்ச்சிகளை எதிர்க்கும் நாடுகள் தற்போது ஏற்றுமதியில் உதவி வருகின்றன.

டிசம்பர்-29-ந்தேதி நியூயோர்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள ஓர் செய்தியில் வெனிசூலா எண்ணெய் "வேலை நிறுத்தத்தின்" உண்மையான வர்க்க பிளவுகள் தெளிவாக தரப்பட்டுள்ளன. வடஅமெரிக்க பத்திரிக்கைகளில் வெனிசூலா நிகழ்ச்சிகள் குறித்து வெளியிடப்படும் மிக நேர்மையான செய்திகளில் அதுவும் ஒன்று. டைம்ஸ் நிருபர் ஜிஞ்சர் தாம்ஸன் வெனிசூலாவின் பியூர்ட்டோ லா குரூஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்குச் சென்று அங்கிருந்து கீழ்கண்டவாறு எழுதினார்:

"வெனிசூலாவின் பொருளாதாரத்தை நாசம் செய்யும் தேசிய வேலை நிறுத்தம் ஏறத்தாழ ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த வாரம் எண்ணெய் சுத்திகரிப்பு மீண்டும் தொடங்கி வழக்கமான அளவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்துதான் நாட்டின் கிழக்குப் பகுதியில் பாதி இடங்களுக்கு கேசலின் வழங்கப்படுகிறது. இரவுப் பணிமுறை தொழிலாளர்கள் போர் வீரர்களைப்போன்று உற்சாகத்தோடு பணியாற்றி வருகின்றனர்.

"அரசிற்கு சொந்தமான PDGSA எண்ணெய் நிறுவனத்தில் கடந்த 12-ஆண்டுகளாக பணியாற்றிவரும், பெலிக்ஸ் டீலிசோ - எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் இணைப்பகத்தை மேற்பார்வையிட்டு வருகிறார். அது மிகப்பெரிய கம்பியூட்டர் சாதனம். அதில் கண் சிமிட்டும் பல பொத்தான்கள் உள்ளன. கம்பியூட்டர் திரையில், விண்வெளி ஓடத்தின் பாலம் போன்று காணப்படும் திரைகளில் டீலிசோ 3,000-இயந்திரங்கள் கச்சா எண்ணெய்யை கேசலினாக மாற்றுவதை கண்காணித்துக் கொண்டிருக்கிறார். அந்த ஊழியர் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்தான். அவர் இந்த ஆலையில் நிபுணராக பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறார். ஒரு குண்டை அப்படியே, செயலிழக்கச் செய்வதைப்போன்ற சிக்கலான பணி என்று தனது பணியை அவர் கருதுகிறார்.

"இப்படி ஒரு சில தொழிலாளர்கள் அதிக நேரம் பணியாற்றிக் கொண்டிருப்பதால், வெனிசூலாவின் கேசலின் குழாய்களில் சொட்டு சொட்டாக, கேசலின் வருவதற்கு சாவீஸ் ஏற்பாடு செய்திருக்கிறார். சென்ற வார தொடக்கத்திலிருந்து ஒரு நாளைக்கு 60,000-பீப்பாய்கள் இந்த சுத்திகரிப்பு ஆலையில் தயாரிக்கப்படுகிறது. இது இந்த ஆலையின் உற்பத்தித்திறனில் 70-சதவிகிதம் ஆகும். வெனிசூலா நாட்டில் ஒவ்வொரு நாளும், 225,000-பீப்பாய்கள் கேசலின் பயன்படுத்தப்படுகிறது. இதில் கால் பங்கு தற்போது தயாராகி வருகிறது.

"அந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, அரசாங்கம் வேலை நிறுத்தத்தினை முறியடித்துவிட்டதற்கு அடையாளமாக விளங்குகிறது. அந்த தொழிற்சாலையைச் சார்ந்த எல்லா உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளும், வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர். ஆனால், ஆப்பரேட்டர்கள், மெக்கானிக்குகள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களில் 20-சதவிகிதம் பேருக்கு குறைவானவர்கள் தான் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நாங்கள் தற்போது இதற்கு முன்னர் எப்போதும் இருந்ததைவிட பெருமை அடைகிறோம். "இந்த சுத்திகரிப்பு ஆலையை எங்களது மேற்பார்வை அதிகாரிகள் இல்லாமலேயே எங்களால் நடத்த முடியும் என்பதை அவர்களுக்கு காட்டிவிட்டோம்" என்று கடந்த 17-ஆண்டுகளாக அந்த ஆலையில் பணியாற்றிவரும் ஊழியர் வில்பிரடோ பாஸ்டார்டோ (Wilfredo Bastardo ) தெரிவித்தார்.

PDVSA-ன் 1,000-ஊழியர்களை சாவீஸ் பதவி நீக்கம் செய்துவிட்டார். இவர்களில் மிகப்பெரும்பாலோர் உயர் மற்றும் நடுத்தர அதிகாரிகள். நீண்ட காலமாக வெனிசூலாவின் ஆளும் தட்டிற்கு லஞ்சப்பணமாக கோடிக்கணக்கான டாலர்களை கொடுப்பதற்கும் ஆதிக்க சக்திகள் பயன்பெறும் பேரங்களை நடத்துவதற்கும், அரசாங்கத்தின் இந்த நிறுவனத்தை பயன்படுத்தி வந்த, நிலைபெற்றுவிட்ட நிர்வாகத்தை அசைப்பதற்காக கம்பெனியை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்போவதாக சாவீஸ் ஆலோசனை கூறினார்.

எண்ணெய் சுத்திகரிப்பு மீண்டும் தொடங்கியதும் "பொது வேலை நிறுத்தம்" பெரும்பாலும் மேட்டுக்குடியினர் வாழும் காரக்காஸ் கிழக்குப் பகுதி புறநகர்களுக்கு அப்பால் பரவவில்லை. எனவே, உடனடியாக, ஆட்சிக் கவிழ்ப்பு ஆபத்து இல்லை என்பதால் சாவீஸ் பிரேசிலுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார். ஜனவரி-2-ந்தேதி பிரேசிலின் புதிய குடியரசுத்தலைவர் லூயி இனாசியோ லூலா டாசில்வா (Luis Inacio "Lula" da Silva) - பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது தனது நாட்டில் வேலை நிறுத்தத்தை ஏற்பாடு செய்திருப்பவர்கள் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ள பயங்கரவாதிகள் அவர்கள் வேலை நிறுத்தம் என்ற வேடம் புணைந்து எண்ணெய் மற்றும் உணவு விநியோகத்தை தடுத்துக்கொண்டிருக்கிறார்கள் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் நாசவேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

சாவீஸுக்கு எதிரான இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வெனிசூலா தலைநகரில் ஜனவரி 3-ந்தேதி சாவீஸுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்கள் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். வெனிசூலா செய்தி ஊடகங்கள் வலதுசாரி அணியினரால் முற்றிலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. அம்நோதலில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டது அரசாங்கத்தின் மிகக் கொடூரமான அடக்குமுறை என்று அந்த ஊடகங்கள் வர்ணித்தன. அந்த இருவரும் சாவீஸின் ஆதரவாளர்கள் என்று பின்னர் தெரியவந்தது. அதில் ஒருவர் கல்வி அமைச்சகத்தில் பாதுகாப்பு காவலர் மற்றொருவர் நடைபாதையில் வியாபாரம் செய்பவர், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஜனவரி-8-ந் தேதி பல வர்த்தக நிறுவனங்கள் திரும்ப திறக்கப்பட இருக்கையில், சாவீஸிற்கு எதிரான எதிர்ப்புக்களை வலுப்படுத்துவதற்காக வங்கி ஊரியர்கள் 48-மணி நேரம் வேலை நிறுத்தம் செய்வார்கள் என்று ஜனநாயக ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார். என்றாலும், வங்கி ஊழியர்களில் 30-சதவிகிதம் பேரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு தொழிற்சங்கம் மட்டுமே, வேலை நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. அமெரிக்காவின் நிதி நிறுவனங்களான, சிட்டி வங்கி உட்பட வங்கிகளின் மூத்த நிர்வாக அதிகாரிகள் வேலை நிறுத்தத்தை ஆதரித்து நடவடிக்கை எடுத்தாலும், வங்கி ஊழியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கிகளைவிட்டு வெளியேற மறுத்துவிட்டனர்.

இந்த வங்கி கதவடைப்பு வலதுசாரி அணியினரின் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக சிதைத்துவிட்டது. ஏனெனில் வங்கிகள் சிறு வர்த்தகர்கள், நடுத்தர வகுப்பினருக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். அப்படியிருந்தாலும் அது நெருக்கடியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மற்றும், நடுத்தர வகுப்பினர் பெரும்பாலும் ரொக்கத்தை தங்கள் வீடுகளில் அலுவலகங்களில் வைத்து பயன்படுத்துபவர்கள்.

அமெரிக்காவின் பங்கு

சாவீஸிற்கு எதிரான இயக்கம் தோன்றி வளர்ந்து பின்னர் சரிந்துகொண்டு வருவதில் அமெரிக்க அரசாங்கம் திட்டவட்டமான பங்கு வகித்திருக்கிறது. வெனிசூலா எண்ணெய் தொழில் மூலம் ஒரு நாளைக்கு 13-லட்சம் பீப்பாய்கள் அமெரிக்க சந்தைக்கு வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட சப்ளை தடைப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்ததும், உடனடியாக, "பொது வேலை நிறுத்தம்" விலக்கிக்கொள்ளப்படுவதாக ஜனநாயக ஒருங்கிணைப்பாளர் அறிவித்திருக்கிறார்.

சென்ற ஆண்டு புஷ் நிர்வாகம், இரண்டு முறை சாவீஸிற்கு எதிரான இயக்கத்திற்கு தனது ஆதரவை தந்திருக்கிறது. சென்ற ஏப்ரல் மாதம் நடைபெற்ற இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதியை அமெரிக்கா ஆதரித்தது. மேலை நாடுகளிலேயே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஜனாதிபதியை பதவியிலிருந்து விரட்டிவிட்டு ஓர் குழுவினர் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று கூறிய ஒரே அரசு அமெரிக்கா தான். வெனிசூலா வர்த்தக சபை தலைவர், பெக்ரோ கர்மோனா (Pedro Carmona) புதிய ஆட்சித்தலைவராக அமர்த்தப்பட்டதும், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, அவசரச் சட்டங்கள் மூலமே ஆட்சியை நடத்த ஆரம்பித்தார். 48-மணி நேரத்தில் இராணுவம் மீண்டும் ஆட்சியை சாவீஸ் வசம் ஒப்படைத்தது. இதற்குக் காரணம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு எதிராக பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டதுதான்.

அவரது வலதுசாரி எதிரிகள் மீண்டும் தங்களது அணியை சேர்த்துக்கொண்டு டிசம்பர்-2-ந்தேதி முதலாளிகள் மூலம் கதவடைப்பு கிளர்ச்சியை துவக்கினர். இந்த நடவடிக்கையை வெனிசூலா மற்றும் வடஅமெரிக்க ஊடகங்கள் வேலை நிறுத்தம் என்று சித்தரித்துக்காட்டின. அந்த நடிப்பு வலதுசாரி CTV தொழிற்சங்க சம்மேளனத்தால் தக்க வைக்கப்பட்டது. இந்த சம்மேளனம் அமெரிக்க AFL-CIO-மற்றும் வெளியுறவுத்துறையின் பண உதவி பெற்ற கைக்கூலி அமைப்பாகும்.

டிசம்பர்-13-ந்தேதி - மீண்டும் புஷ் நிர்வாகம், வெனிசூலாவில் நடைபெறும் அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட கிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தது. ஜனாதிபதியின் பத்திரிகைத் தொடர்பு செயலாளர் அரி பிளெய்ஷர் (Ari Fleischer ) புதிய தேர்தலை வெனிசூலாவில் நடத்துவதற்கு வெள்ளை மாளிகை ஆதரிப்பதாக, அறிவித்தார். அந்நாட்டு அரசியல் சட்டப்படி சாவீஸ் 2006-வரை பதவியில் இருக்க முடியும் என்று தெரிந்தும் மேற்கண்டவாறு அமெரிக்கா கருத்து தெரிவித்தது. மூன்று நாட்களுக்குப் பின்னர் புஷ் நிர்வாகம் தனது நிலையிலிருந்து பின்வாங்கி வெனிசூலாவில் நெருக்கடிக்கு "தேர்தல் தீர்வு" காணவேண்டும் என்று கருத்து தெரிவித்தார். தேர்தல் தீர்வு என்றால் என்ன என்பதை அமெரிக்கா விளக்கவில்லை. வலதுசாரி எதிர்கட்சி கோரியபடி சாவீஸ் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கா கைவிட்டது.

பல்வேறு வெளிநாட்டுக் கொள்கை சம்பந்தப்பட்ட ஆதங்கங்கள் இந்த மிக கவனமான அணுகுமுறைக்கு காரணமாகும். சாவீஸ் விரைவில் பதவியிலிருந்து நீக்கப்படுவதாகயிருந்தால், எதிர்கட்சிகள் எண்ணெய் தொழிலில் நடத்திய கதவடைப்பை ஆதரிக்க அமெரிக்கா தயாராகயிருந்தது. ஆனால், வெனிசூலா அரசு எண்ணெய் வழங்குவதில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்தது. உற்பத்தி மீண்டும் தொடங்கியது. அவசரமாக இறக்குமதிகள் செய்யப்பட்டன. இந்த நெருக்கடியின் பெரும் பாதிப்பு அமெரிக்க எண்ணெய் சந்தையில் எதிரொலித்தது. அமெரிக்காவில் எண்ணெய் விலைகள் மிக வேகமாக உயர்ந்தன. அளிப்பில் இறுக்கம் ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்கு வெனிசூலாவிலிருந்து எண்ணெய் கிடைப்பதில் இழப்பு ஏற்படுமானால், அமெரிக்கா ஈராக் மீது மேற்கொள்ளவிருக்கும் தாக்குதல் மூலம் எண்ணெய் சந்தையில் ஏற்படவிருக்கும் தாக்கங்கள் மேலும் அதிகரிக்கும்.

வடகொரியாவைப்போல் புஷ் நிர்வாகம், உடனடியாக வெனிசூலாவுடன் அரசியல் மோதல் போக்கை கடைப்பிடிக்க தயாராக இல்லை. ஏனெனில், ஈராக்குடன் போர் நடத்துவதில் உள்ள முனைப்பை அது திசை தடுமாறச் செய்துவிட்டது. மேலும், ஈக்குவேடார், மற்றும் இதர லத்தீன் அமெரிக்க எண்ணெய் உற்பத்தியாளர்கள் வெனிசூலாவிற்கு அவசரமாக எண்ணெய் சப்ளை செய்தனர். இதன் மூலம் சாவீஸிற்கு எதிரான இயக்கம், அமெரிக்காவின் தெற்குக் கண்டம் முழுவதிலும் உள்ள நாடுகளுடன் அமெரிக்காவின் உறவுகளில் பெரிய நெருக்கடி உருவாக்கிவிடும் என்ற அபாயம் ஏற்பட்டது.

வாஷிங்டன் போஸ்ட் ஜனவரி 10-ந்தேதி வெளியிட்டுள்ள ஓர் செய்தியில் புஷ் நிர்வாகம் வெனிசூலா நெருக்கடியை முடித்துவைப்பதற்கு முயலும் காரணத்தை விளக்கியது. "பிரேசிலில் பதவிக்கு வந்திருக்கும் புதிய இடதுசாரி ஆதரவு அரசாங்கம் வெனிசூலா தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிவதற்காகத்தான்" அமெரிக்கா இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டது. சாவீஸ் அரசியல் சம்மந்தமாக அமெரிக்க வெளியுறவுத்துறை கவலைகளை மேலும், அதிகரிக்கும் வகையில் அதனுடைய விளைவுகள் உருவாகிவிடக்கூடும் என்று கருதியது. வாஷிங்டன் போஸ்ட் நிருபருக்கு பேட்டியளித்த ஒரு வெளியுறவுத்துறை அதிகாரி, சற்று வெளிப்படையாக, "ஒவ்வொரு நாளும் நமக்கு வெனிசூலாவில் இருந்து, 15-லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் கிடைக்கிறது. தற்போது அது கிடைக்கவில்லை" என்று விளக்கினார்.

சாவீசும் இராணுவமும்

வெனிசூலாவில் தனது நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியதன் மூலம், புஷ் நிர்வாகம் அந்நாட்டில் வலதுசாரி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடப்பதை கைவிட்டுவிடவில்லை. சாவீஸ் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களை திரட்ட அந்நாட்டு எதிர்கட்சிகள் தவறிவிட்ட காரணத்தினால், வெள்ளை மாளிகையும், வெளியுறவுத்துறையும், தங்களது முதலாவது நடவடிக்கைக்கு திரும்பிவிட்டன. இராணுவத்தின் சில பிரிவினரோடு, இரகசியமாக சதி ஆலோசனைகள் நடத்துவதுதான் அமெரிக்காவின் முதல் பணியாக இருந்தது. அந்த நிலைக்கு தற்போது, அமெரிக்கா திரும்ப வந்துவிட்டது.

இந்த காலகட்டம் முழுவதிலும், மறைமுகமாக, போலீஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆதரவுக்கான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்ற ஏப்ரல் மாதம் அமெரிக்கா ஆதரவுடன் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 100-க்கு மேற்பட்ட இராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்கள். மேலும் அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது நடைபெற்றுவரும் நெருக்கடியில் எந்த இராணுவப் பிரிவும் கலவரத்தில் ஈடுபடவில்லை. ஜனநாயக ஒருங்கிணைப்பாளர், சாவீஸிற்கு எதிராக இரண்டாவது ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை எடுக்க பகிரங்கமாக அழைப்புவிடுத்தாலும், அதை இராணுவப் பிரிவுகள் பொருட்படுத்தவில்லை.

காரக்காஸ் பகுதி போலீஸார் ஆட்சிக்கு எதிராக திரட்டப்பட்டிருக்கின்றன. நகரத்தின் மேயர் அல்போன்ஸோ பீனா (Alfonso Pena), ஜனநாயக ஒருங்கிணைப்பாளர் அணியில் முன்னணியில் இருப்பவர். அவர் போலீஸாரை ஆட்சிக்கு எதிராக திரட்டி வருகிறார். சாவீஸிற்கு ஆதரவாக, ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். காரக்காஸ் போலீசார் கலவரத்தைத் துண்டிவிடவில்லை அல்லது அனுமதிக்கவில்லை. ஜனவரி3-ந்தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடுகளுக்கு பின்னர், சாவீஸிற்கு விசுவாசமான படைவீரர்கள் சப்மிஷின்கன்கள், சாட்-கன்கள் உட்பட, பெரிய ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய போலீஸ் துறை தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தினர். போலீஸாரிடம் தற்போது சாதாரண ஆயுதங்களே உள்ளன.

சாவீஸ் முன்னாள் பாராசூட் வீரர் - 1992-ம் ஆண்டு வலதுசாரி அரசை வீழ்த்துவதற்கு நடைபெற்ற, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு தலைமை தாங்கி தோல்வி கண்டவர், எனவே, தற்போது ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் தரப்பிலிருந்து தனக்கு கிடைத்திருக்கும், ஆதரவையும், இராணுவத்தில் தனது ஆதரவையும் அரசியல் அடிப்படையில் சமச்சீர் நிலையில் கொண்டு செல்ல முயன்று வருகிறார். 1998-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும், 2000-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும், கணிசமான பெரும்பான்மையுடன் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுமக்களது விருப்பங்களை எடுத்துரைக்கும் வாய்ச்சவடால் பிரச்சாரத்தை செய்திருந்தார். இராணுவம் சமுதாய சீர்த்திருத்தங்களை மக்களுக்காக செயல்படுத்தும் ஒரு கருவிதான் என்று அவர் மக்களிடையே நிலைநாட்டி வருகிறார். நாட்டின் சமுதாய, பொருளாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் இராணுவத்தின் பங்கை வலியுறுத்தி வருகிறார்.

சாவீஸ் ஒரு சோசலிஸ்ட் அல்லர், அவர் வெனிசூலா நாட்டு தேசியவாதி மற்றும் முதலாளித்துவ ஆதரவாளர். அவரது சீர்திருத்தக் கொள்கைகள் நாட்டின் பொருளாதார சமுதாய தட்டினர் நீண்ட காலமாக அனுபவித்துவரும் நிலைபெற்றுவிட்ட தனிச்சலுகைகளுக்கு எதிராக அமைந்திருப்பதால், அத்தகைய தட்டுகளுடன் அவர் நேரடியாக மோதுகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இத்தகைய ஆதிக்க சக்திகள் சாவீஸ் மீது எந்த அளவிற்கு வெறுப்புக் கொண்டிருக்கிறார்கள்? என்பதை அமெரிக்க அரசியல் பார்வையாளர் ஒருவர் கீழ்க்கண்டவாறு, விளக்கியுள்ளார்:

"சாவீஸிற்கு எதிரான வெறுப்பில் பெரும்பகுதி எங்கிருந்து, எழுகிறது என்று பார்த்தால், அவர் பிறந்த வகுப்பின் மீதே வெறுப்பு வெளிப்படுவது தெரிகிறது. ஒரு சிறிய நகரத்து பள்ளி ஆசிரியர்களான பெற்றோரின் மகன் சாவீஸ், அவர் வலுவான உடலமைப்பும், வலுவான கரங்களையும், அகன்ற முகத்தையும் கொண்டவர். இப்படிப்பட்ட உடலமைப்பு கொண்டவர்கள் கட்டுமான தொழிலாளர்களாக அல்லது பேருந்து ஓட்டுநர்களாக இருப்பதைத்தான், வெனிசூலாவின் மேட்டுக்குடியினர் பார்த்திருக்கிறார்கள். நாட்டின் ஆட்சிப் பொறுப்பை இப்படிப்பட்டவர்கள் நடத்துவதை மேட்டுக்குடியினர் பார்த்ததில்லை. சாவீஸ் உட்காரும் அறையிலேயே மற்றவர்கள் அமருவதற்கு மறுக்கிறார்கள். இப்படி அவரோடு சரிசமமாக உட்கார்ந்து பேசுவதற்கு மறுக்கின்ற மேட்டுக்குடி மக்கள் எப்படி அவருடன் பொருளாதாரக் கொள்கைகளை பற்றாக்குறை நாட்டு நிதிவளங்களை பயன்படுத்துவதைப் பற்றி விவாதிப்பார்கள்" (வெனிசூலாவில் Agence France- செய்தி நிறுவனத்தின் நிருபராக பணியாற்றிய பாரி சீலின், மதர்ஜோன்ஸ் இதழில், இன்றைய இதழில் எழுதியுள்ளார்).

ஊழல் மலிந்த அமெரிக்காவின் ஊடகங்கள்

அமெரிக்க ஊடகங்கள் மிகவும் வெறுக்கத்தக்க கிரிமினல் நடவடிக்கைகளில் வெனிசூலா நிகழ்ச்சிகளை பொறுத்தவரை ஈடுபட்டிருக்கின்றன. வாஷிங்டன் போஸ்ட், நியூயோர்க் டைம்ஸ் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், மற்றும் Associated Press -செய்தி நிறுவனம் ஆகியவற்றிற்கு வெனிசூலா தலைநகரான காரக்காஸ் பகுதியில் நிருபர்கள் உண்டு. அவர்கள் நேரடியாகவே, சாவீஸுக்கு எதிரான வலதுசாரி அணியினரின் இயக்கத்திற்கு பின்னணியாக உள்ள சமுதாயப் பிரிவுகளைப் பார்க்கின்றனர். அப்படி நேரடியாக பார்த்த பின்னரும், "பொது வேலை நிறுத்தம்" நடப்பதாகவும், அதில் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்வதாகவும், பொதுமக்களது கிளர்ச்சி போன்று சித்தரித்து செய்திகளை தருகிறார்கள். வெனிசூலா சமுதாயத்தின் மேட்டுக்குடியினர்தான் இதைச் செய்கிறார்கள் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுவதில்லை.

அமெரிக்காவைப்போல் வெனிசூலாவிலும், ஊடகங்கள் ஒரு சில பணக்காரக் குடும்பங்களின் ஏகபோக உடைமைகளாகவே உள்ளன. குஸ்டாவோ சிஸ்நரோ (Gustavo Cisneros) வெனிசூலாவிலேயே முதலாவது பெரிய பணக்கார 5.3-பில்லியன் டாலர் சொத்துக்களுக்கு சொந்தக்காரர் என்று கருதப்படுகிறார். இவர் அந்த நாட்டு ஊடகங்களின் சக்கரவர்த்தி. சாவீஸிற்கு எதிரணியில் முன்னணியில் இருப்பவர்.

நியூயோர்க் டைம்ஸ் நாளிதழ், உண்மையில் எதிர்க்கட்சி பிரதிநிதி ஒருவரை தனது பொருளாதார ஆய்வாளராக ஊதியத்திற்கு நியமித்திருக்கிறது. அவர் அந்தப் பத்திரிகையின் நிருபர், பிரான்ஸிஸ்கோ டாரோ (Francisco Toro) என்பது அவர் பெயர். அவர் Veneconomia நிறுவனத்தில் பணியாற்றியவர். அவர் சாவீஸிற்கு எதிரான தகவல் தளம் ஒன்றை நடத்தி வந்தார். அதை மூடிவிட மறுத்துவிட்டார். எனவே, இந்த வாரம் நியூயோர்க் டைம்ஸிலிருந்து விலகிக்கொண்டார். நியூயோர்க் டைம்ஸ் ஆசிரியர் பாட்ரிக் ஜெ. லியான்சுக்கு (Patrick J. Lyons) அவர் எழுதியுள்ள பதவி விலகல் கடிதத்தில், தனது "வாழ்க்கை நடைமுறை, வெனிசூலாவில் தீவிர எதிர்ப்பு நடவடிக்கையோடு பிணைக்கப்பட்டிருப்பதால்", தான் பணியாற்றுவதில் "சொந்த நலன்களுக்கும், பொது நலன்களுக்குமிடையே மோதல்கள்" ஏற்படும் என்பதால் நிருபர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக கூறியிருக்கிறார்.

தீவிர வலதுசாரி அமெரிக்க ஊடக பிரிவுகள், சாவீஸ் அரசிற்கு எதிராக முழு வீச்சில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. தீவிர வலதுசாரி எண்ணம் கொண்ட செல்வாக்கு மிக்க சஞ்சிகையான «ïûùTM KiÎ -தனது தகவல் தளத்தில் ஜனவரி-8-ந்தேதி ஒரு செய்தியை வெளியிட்டது. செப்டம்பர்-11-ந்தேதி அமெரிக்காவில் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர், அல்கொய்தா அமைப்பிற்கு உதவுகின்ற நோக்கத்தில் ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் ஆட்சிக்கு சாவீஸ் நிதி உதவி செய்தார் என்பதே அந்தச் செய்தி. ஏப்ரல் மாதம் வெனிசூலாவில் ஆட்சிக் கவிழ்ப்பு புரட்சி நடைபெற்று தோல்வியடைந்த நேரத்தில் சிக்காகோ டிரிபியூன் பிரசுரித்த தவறான செய்தி ஒன்றை எதிரொலிக்கும் வகையில் «ïûùTM KiÎ தகவல் தளம் அந்த செய்தியை தந்திருக்கிறது. சிக்காகோ டிரிபியூன் தனது செய்தியை திரும்ப பெற்றுக்கொண்டது. சாவீஸ் ஓசமா பின்லேடனுக்கு ஆதரவாக பேசவில்லை என்று அந்த பத்திரிகை மறுப்பு வெளியிட்டது.

வெனிசூலாவில் வலதுசாரி பாசிச குழுவினர், ஆட்சியை பிடித்துக்கொள்ளும் அபாயம் இன்னும் நீங்கிவிடவில்லை. கடந்த பல மாதங்களாக எண்ணெய் சப்ளை சீர்குலைந்திருக்கிறது. அதை சீரமைப்பதற்கு நடவடிக்கைகள் உடனடியாக வெற்றிபெறும் என்ற நிலை இல்லை. தேசிய வருமானம் இழப்பு, பொருளாதார உற்பத்தி இழப்பு ஆகியவை ஏற்கனவே மிகக்கடுமையாக உள்ளன. முதல் மூன்று மாதங்களில் வெனிசூலா பொருளாதார நடவடிக்கைகள் 40-சதவிகிதம் குறைந்துவிடும் என்று இந்த வாரம் ஒரு பொருளாதார கணிப்பாளர் தெரிவித்திருக்கிறார். ஆண்டு முழுவதிலும் நாட்டு பொருளாதாரம் 9-சதவிகிதம் வீழ்ச்சியடையும்.

பொதுமக்களுக்கு ஏற்புடைய கொள்கைகளை சாவீஸ் அறிவித்து மிகவும், சுமாரான சமுதாய சீர்திருத்தங்களை செய்து வருகிறார். இது வெனிசூலா தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஒட்டுமொத்த சமுதாய நலன்கள் கணிசமான அளவிற்கு உயருவதற்கு உதவாது. அமெரிக்க ஆதரவுடன் நடைபெறும் மற்றொரு ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் வன்முறையை நிரந்தரமாக தடுத்து நிறுத்துவதற்கு அவரது திட்டங்கள் பயன்படாது. வெனிசூலா ஆளும் வர்க்கமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும், அடக்க முடியாத எதிர்ப்பு உணர்வுடன் செயல்பட்டு வருவதை சமாளிக்க ஒரே வழி, வெனிசூலா லத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவிலே உள்ள தொழிலாள வர்க்கத்தை ஒரு சர்வதேச சோசலிச பொது வேலைத்திட்டத்தின் கீழ் அணிதிரட்டுவதுதான்.

See Also :

வெனிசூலா ஆட்சிக் கவிழ்ப்பை நோக்கி வாஷிங்டன் சூழ்ச்சி

வெனிசூலா: இன்னொரு ஆட்சிக் கவிழ்ப்புக்கு சீ.ஐ.ஏ ஆயத்தம் செய்து வருகிறதா?

Top of page