World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

New account of US torture of Afghan and Arab prisoners

ஆப்கானிஸ்தான், அரபு, கைதிகள்: அமெரிக்க சித்திரவதை பற்றிய புதிய தகவல்
By Patrick Martin
30 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்காவின் முன்னணி செய்திப் பத்திரிகையொன்று ஆப்கானிஸ்தானில், C.I.A யினால் கைது செய்யப்பட்ட கைதிகள் மீதான விசாரணையில் அசாதாரண நடைமுறைகளை பயன்படுத்தியது தொடர்பாக, டிசம்பர் 29 ந் தேதி விரிவான விளக்கங்களைப் பிரசுரித்திருந்தது. காபூலுக்கு வெளியிலுள்ள பாக்ராம் விமானத்தளத்தில் C.I.A யின் விசாரணையில் பயன்படுத்தப்பட்ட பல முறைகள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களினால், சித்திரவதை என்று வரையறுக்கப்பட்டுள்ளன.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தனது முதல்பக்கத்தில் இந்த விவரங்களை வெளியிட்டு, அமெரிக்கத் தலைநகர் வாசகர்களின் கவனத்திற்கு இச் செய்தியை கொண்டு வந்தது. கைது செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான், அரபு யுத்தக் கைதிகளின் நிலை குறித்து அதில் விளக்கியுள்ளதோடு, தலிபான் மற்றும் அல் கெய்டா இயக்கத்தில் பணியாற்றிய இக்கைதிகளை C.I.A யின் விசாரணை தொடர்பாகவும் இப்பத்திரிகை பின்வரும் விவரங்களை தந்துள்ளது.

''இந்த இரகசிய C.I.A விசாரணை மையத்திற்குள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் கைதிகள் சில நேரங்களில் கால் கடுக்க நிற்க வைக்கப்படுகின்றனர். அல்லது பல மணி நேரம் குணிந்து நிற்கச் செய்யப்படுகின்றனர். கறுப்புத் தொப்பிகளை அல்லது வர்ணம் பூசிய கண்ணாடிகளை அவர்கள் அணிந்துகொண்டு நிற்கவேண்டும் என்று C.I.A புலன் விசாரணை முறைகளை அறிந்திருக்கும் புலனாய்வு நிபுணர்கள் தெரிவித்தனர். சில நேரங்களில் கைதிகள் விரும்பத்தகாத முறைகளில் துன்பம் தரும் வகையில் நிற்க வைக்கப்படுகின்றனர். அல்லது 24 மணி நேரமும் வெளிச்சம் பாய்ந்துகொண்டே இருப்பதால், தூக்கம் இல்லாத நிலையை உருவாக்குகின்றனர். ''மிரட்டும் நெருக்கடிகள்'' என்று அழைக்கப்படும் புலனாய்வு முறைகளைச் சார்ந்தது இந்த முறையாகும்.

அமெரிக்கப் பத்திரிகை, விவரித்திருப்பதைவிட, C.I.A பயன்படுத்தும் புலனாய்வு விசாரணை முறைகள் மிகவும் மோசமானவை. பாக்ராம் விசாரணை முகாமில் காவலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் இறந்துவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் இறந்தது இயல்பான உடல் நலிவு காரணங்களினால் என்று கூறப்பட்டாலும், அவர்கள் இருவரும் சித்திரவதை செய்யப்பட்டு மாண்டிருக்கலாம் அல்லது அவர்கள் பிடிபடும்போது ஏற்பட்ட காயங்களுக்கு முறையான சிகிச்சைகள் தரப்படாததால் இறந்திருக்கலாம். அவர்கள் இருவரும் இளைஞர்கள் நல்ல உடல் வாகுள்ளவர்கள். எனவே அவர்கள் சாவில் சந்தேகம் நீடிக்கிறது. உலக சோசலிச வலைத் தளம் 2002 டிசம்பரில் தந்திருக்கும், ''ஆப்கானிஸ்தானில் அமெரிக்க புலன் விசாரணையில் கைதி இறந்தார்'' என்ற தலைப்பிலான கட்டுரையை பார்க்கவும்.

புலன் விசாரணையில் ஒத்துழைப்பவர்கள் நல்ல முறையில் நடத்தப்படுகின்றனர். சில நேரங்களில் அத்தகைய கைதிகளுக்கு இலஞ்சப் பணமும் கிடைக்கிறது. புலன் விசாரணைக்கு ஒத்துழைப்புத் தர மறுத்து பிடிவாதம் செய்பவர்கள் பிற நாடுகளின் புலனாய்வு அதிகாரிகள் பொறுப்பிற்கு மாற்றப்படுகின்றனர். பிற நாட்டுப் புலனாய்வு அதிகாரிகள் என்ற பட்டியலில் எகிப்து, ஜோர்தான், சவூதி அரேபியா, மொராக்கோ நாடுகளின் புலனாய்வு அதிகாரிகளும் அடங்குவர். இதுபோன்ற நாடுகளின் புலனாய்வு அதிகாரிகள், மிக மோசமான சித்திரவதை முறைகளை மேற்கொள்பவர்கள். இப்படி மற்றொரு நாட்டு புலனாய்வு அதிகாரிகளிடம் கைதிகளை C.I.A ஒப்படைப்பதை ரென்டரிங் (rendering) என்று C.I.A மொழியில் சொல்லி வருகிறார்கள். தாங்கள் நேரடியாகச் சித்திரவதை செய்யாமல் இன்னொரு நாட்டு பொலீசிடம் ஒப்படைக்கும் நடைமுறை இது. இது சர்வதேசச் சட்டம், மற்றும் அமெரிக்கச் சட்டத்தை மீறும் நடவடிக்கையாகும். கிளிண்டன் நிர்வாகத்தில் அங்கீகாரம் தரப்பட்ட இந்த முறையானது, செப்டம்பர் 11 க்கு பின்னர் புஷ் நிர்வாகம் இதே முறைகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. (''பயங்கரவாதிகள் என்று குற்றம்சாட்டப்படுவோர் கடத்திச் செல்லப்படுவதை, சித்திரவதை செய்யப்படுவதை, கொலை செய்யப்படுவதை அமெரிக்கா கண்காணிக்கிறது'' என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளம் மார்ச் 2002 ல் தந்திருக்கும் கட்டுரையைப் பார்க்கவும்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபர்களான டனா பிரீஸ்ட் மற்றும் பேர்டன் கெல்மேன் இருவரும், பத்து, பனிரெண்டு முன்னாள் மற்றம் நடப்பு அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகளைப் பேட்டி கண்டனர். அவர்களில் பலர், நேரடியாகக் கைதிகளை விசாரித்தவர்கள். விசாரணையை மேற்பார்வை செய்தவர்கள். கைதிகளை விசாரிக்கும்போது, பலாத்காரம் பயன்படுத்தப்படுவது, ''நியாயமானது, அவசியமானது'' என்று அவர்கள் சமாதானம் கூறிய போதிலும், இது சம்மந்தமாக C.I.A அதிகாரப்பூர்வமான கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டது. ஆனால், பயங்கரவாத எதிர் நடவடிக்கையின் C.I.A தலைமை அதிகாரி காஃபா பிளேக், செப்டம்பர் 26 ந்தேதி நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, ''செப்டம்பர் 11 க்குப் பின்னர் கையுறைகள் பறந்துவிட்டன'' எனக் கூறி, சந்தேகிக்கப்பட்ட பயங்கரவாதிகள் மீது இம்முறையைப் பயன்படுத்தியே ஆகவேண்டும் எனவும் கருத்துத் தெரிவித்தார்.

வாஷிங்டன் போஸ்ட் மேற்கோள் காட்டியுள்ள சில விமர்சனங்கள் வாஷிங்டன் அதிகார வட்டாரத்தில் நிலவும், கிரிமினல் கும்பல் மனப்பான்மையே தற்போது, ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருப்பதைக் காட்டுகிறது. ''நீங்கள் சில நேரங்களில் ஏதாவது ஒருவரது மனித உரிமைகளை மீறிச் செயல்படாவிட்டால், நீங்கள் உங்களது கடமையைச் செய்யவில்லை என்றுதான் ஆகும். இந்த வகையில் முற்றிலும் சகிப்புத்தன்மையுடன் நடப்பதை ஊக்குவிக்க நாம் விரும்புகிறோம் என்று நான் நினைக்கவில்லை. இதுதான் நீண்ட காலமாக C.I.A யுடன் பிரச்சனையாகும்" என்று ஒரு அதிகாரி கருத்துத் தெரிவித்தார். ''நம்முடைய ஆட்கள் ஓரளவிற்கு கைதிகளை அடிக்கத்தான் செய்வார்கள்'' என்று மற்றொரு அதிகாரி கூறினார். காயம்பட்ட கைதிகளுக்குச் சிகிச்சை தருவது பற்றி கருத்துத் தெரிவித்த ஒரு அதிகாரி ''துன்பத்தைக் கட்டுப்படுத்துவது புலன் விசாரணை நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்யப்படும்'' என்றார். இதன் பொருள், காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான்.

ஆப்கானிஸ்தான் மற்றும் அல்-கெய்டா கைதிகள் பாக்ராமில் மட்டுமல்ல, இந்து சமுத்திரத்திலுள்ள பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவிலும், வெளியில் தகவல் தெரிவிக்கப்படாத இடங்களிலும், அமெரிக்காவின் சார்பில் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். கியூபாவில் உள்ள, அமெரிக்க கடற்படைத்தளமான குவாண்டனாமோவில் 625 கைதிகள் காவலில் வைக்கப்பட்டிருப்பது, கணிசமான அளவிற்கு பத்திரிகைகளில் எழுதப்பட்டு வருகிறது. 2001 செப்டம்பர் 11 ந்தேதிக்கு பின்னர், உலகின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 3000 பேர்களாகும். இதில் மிகக் குறைந்த பகுதியினரே, குவாண்டனாமோ சிறையில் உள்ளவர்கள். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மூன்றாவது நாடுகளிடம் புலன் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 2000 த்துக்கு மேற்பட்ட கைதிகள், இன்னும் இரகசியமாக அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா? அல்லது மூன்றாவது நாடுகளில் கைதிகளாக இருக்கிறார்களா? அல்லது பிடித்தவர்களே கொன்று விட்டார்களா? என்ற விவரம் தெரியவில்லை என, வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.

சித்திரவதைக்கு ஆளானவர் என்று வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ள கைதி அபு-சுபைதா என்கின்ற அல் கெய்டாவின் முன்னணி உறுப்பினராகும். சென்ற மார்ச் மாதம் பாகிஸ்தானில் அவர் பிடிபட்ட நேரத்தில் சுடப்பட்டார். விசாரணையில் அவருடைய ஒத்துழைப்பைப் பெறுவதற்காக முதலில் அவருக்கு மருத்துவ உதவிகள் மறுக்கப்பட்டன. ''ஆரம்பத்தில், அபு-சுபைதாவிற்கு, எப்போதாவது, வேதனை போக்கும் மருந்துகள் தரப்பட்டன. இப்போது அவர் விசாரணையில் ஒத்துழைப்புக் கொடுக்கிறார்'' என்று தேசிய பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்ததாக இப்பத்திரிகை தகவல் தந்தது.

ஜேர்மனி மற்றும் சிரியா நாடுகளின் குடியுரிமையக் கூட்டாக வைத்திருக்கும் மற்றொரு கைதி முகம்மது ஹைதர் சம்மர். அவரை விசாரணைக்காக சிரியா வசம் சி.ஐ.ஏ. ஒப்படைத்போது அவரை அங்கு சித்ரவதை செய்தார்கள் என்று கருதப்படுகிறது. இப்படி சிரியாவிற்கு அவர் மாற்றப்பட்டதை ஜேர்மன் அதிகாரிகள் கடுமையாகக் கண்டித்ததுடன், அவரை ஜேர்மனியிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர். செப்டம்பர் 11 ந்தேதி விமானம் கடத்தப்பட்டு, உலக வர்த்தக மையக் கட்டடத்தில் மோதி வெடிக்கச் செய்த சம்பவத்தில் அவரது தொடர்பு குறித்து விசாரிக்க ஜேர்மன் அதிகாரிகள் விரும்பினர். அதே நேரம், இவரிடம் குறுக்கு விசாரணை மூலம் பெறப்பட்ட விவரங்களை சிரியா அதிகாரிகள் அமெரிக்காவிற்குத் தெரிவித்தனர்.

C.I.A புலன் விசாரணை மையங்கள் சுயாதீன ஆய்விற்கு உட்பட்டவை அல்ல. செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் கைதிகளைச் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களது பெயர்கள் கூட இரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. கைதிகள் கடிதம் எதுவும் எழுத முடியாது. வெளியில் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள முடியாது. அத்தகைய C.I.A யின் கைதிகள், ''மாயமாக மறைந்து'' விடுவார்கள். எப்படி என்றால், எழுபதுகளிலும் எண்பதுகளிலும், C.I.A நிதியுதவி தந்து, ஏற்பாடு செய்த, லத்தீன் அமெரிக்க, மரணம் விளைவிக்கும் குழுக்கள் மூலம் ''மாயமாக'' கைதிகள் மறைந்ததைப்போலாகும்.

C.I.A புலன் விசாரணை அதிகாரிகள் பயன்படுத்தியதாக ஒப்புக்கொள்ளப்பட்ட முறைகளுக்கு, மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அது மட்டுமல்ல, அதே முறைகளை பிற நாட்டு புலனாய்வு அதிகாரிகள் பயன்படுத்தும்போது, அமெரிக்க வெளியுறவுத்துறையும் கண்டனம் செய்கிறது. 2001 ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருக்கும், மனித உரிமைகள் பற்றிய அறிக்கையில், கைதிகளைத் தூங்கவிடாமல் தடுப்பது, நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கச் செய்வது ஆகிய நடவடிக்கைகளை சித்திரவதை என்ற பகுப்பில் சேர்த்திருந்ததோடு, ஜோர்தான் அந்த முறைகளைப் பயன்படுத்துவதாகவும் அது விமர்சித்திருக்கிறது. C.I.A யின் ஆதரவுபெற்ற ஜோர்தானிடம் C.I.A தனது கைதிகளை விசாரணைக்காக ஒப்படைத்திருக்கிறது.

இப்படி அமெரிக்க அரசாங்கமானது சிடுமூஞ்சித்தனத்துடன் நடந்து வருவதை, C.I.A யின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரடெரிக் ஹிட்ஸ், சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் இதைப்பற்றி வாஷிங்டன் போஸ்ட் நிருபருடன் விவாதித்தபோது, ''நாங்கள் சித்திரவதை செய்வது இல்லை. எங்களுக்கு விளங்காத வகையில் சித்திரவதை நடப்பதை நாங்கள் சகித்துக்கொள்ள முடியாது. ஆனால் மற்றொரு நாடு சித்திரவதை மூலம் சில தகவல்களைப் பெற்றுத்தருமானால், அந்தச் சித்திரவதையின் ''பலன்களை'' நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்'' என்று குறிப்பிட்டார்.

இச்செய்தியை வெளியிட்ட மறுநாள் வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம் ஒன்றை எழுதியுள்ளது. ''பிறர் கண்ணைத் திறக்கும் வகையில்'' சி.ஐ.ஏ யின் சித்திரவதைகளை அம்பலப்படுத்தியதாகக் கூறிக்கொண்டே அந்தப் பத்திரிகை, தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்க மறுத்துவிட்டு, நழுவிக்கொள்கிறது. கைதிகள் புலன் விசாரணையில் எந்த முறையில் கையாளப்படுகின்றனர்? என்பதை புஷ் நிர்வாகம் பகிரங்கமாக பொதுமக்களுக்கு அறிவித்துவிடுவது நல்லது என்பதாக இப்பத்திரிகை தனது தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது. ''சுமாரான உடல் அளவிலான நிர்ப்பந்தம் தேவை என நிர்வாக அதிகாரிகள் முடிவு செய்தால் - ஒரு காலத்தில் அது துஷ்பிரயோகமாகக் கருதப்பட்டது - தற்போது பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் சாதாரண நடைமுறை என்று கருதப்பட்டால் அமெரிக்க மக்களுக்கு அது தெரிந்தாக வேண்டும். அமெரிக்க மக்கள் தங்களது பிரதிநிதிகள் மூலமும், தனிப்பட்ட முறையிலும், அமைப்பு ரீதியிலும், தங்களது குரல் ஒலிக்கச் செய்யவேண்டும். நிர்வாகம் ஒரு தலைப்பட்சமாக அதைச் செய்யக்கூடாது'' என்று வாஷிங்டன் போஸ்ட் அதில் குறிப்பிட்டிருக்கிறது.

டிசம்பர் 27 அன்று, நியூயோர்க்கை தலைமையிடமாகக் கொண்டுள்ள மனித உரிமை கண்காணிப்பு அமைப்பானது வெள்ளை மாளிகைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி, சித்திரவதை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, வெள்ளை மாளிகை விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தியது. வாஷிங்டன் போஸ்ட் தந்துள்ள தகவல்களின் அடிப்படையில், அமெரிக்கா, சர்வதேச மனித உரிமைகள் கூட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள மிக முக்கியமான தடைகளை மீறியதாகவும், ஜெனிவா ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா அதிகாரிகள் செயல்பட்டதாக சர்வதேச நடுவர் மன்றத்தின் முன் மட்டுமல்ல, எந்த நாட்டு குற்றவியல் விசாரணை நீதிமன்றத்தின் முன்னரும் ஆஜராகவேண்டிய, குற்றச்சாட்டுகளை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் இவ் அமைப்பு சுட்டிக்காட்டியது. கைதிகளை, மூன்றாவது நாட்டுக்கு மாற்றுவது, அங்கு சித்ரவதை செய்வார்கள் என்று தெரிந்தும் மாற்றுவது, சர்வதேசச் சட்டத்தை மீறிய செயலாகும் என இவ் அமைப்பின் கடிதம் மேலும் சுட்டிக்காட்டியது.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் கடிதம் பற்றியோ, வாஷிங்டன் போஸ்ட் செய்தி பற்றியோ, புஷ் நிர்வாகம் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. என்றாலும், நீண்ட காலமாக அமெரிக்கா எடுத்துள்ள நிலையை மீண்டும் இது உறுதிப்படுத்தியது. போர்க்கைதிகள் ஜெனீவா ஒப்பந்தப்படிதான் நடத்தப்படவேண்டும். ஆனால், பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் போர்க்கைதிகள் அல்ல என்று புஷ் நிர்வாகம் கூறி வருகிறது. அமெரிக்க செய்தி ஊடகங்கள் இந்தப் பிரச்சனை குறித்து ஒட்டுமொத்தமாக மெளனம் சாதித்து வருகின்றன. வாஷிங்டன் போஸ்ட் செய்தி பற்றி இதர ஊடகங்கள் கருத்துத் தெரிவிக்கவும் இல்லை அல்லது தலையங்கமும் எழுதவில்லை. ஆனால் பி.பி.சி. வாஷிங்டன் போஸ்ட் செய்தி பற்றி தகவல் தந்த போதிலும், அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனங்கள் எதுவும் இப்பத்திரிகை செய்தியைத் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

See Also :

ஜேர்மன் தொலைக்காட்சி ஒளிபரப்பிய செய்திப்படம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது
ஒளிபரப்பிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம்

மஜார்-இ-ஷெரிப் சிறைக் கிளர்ச்சி பற்றிய சி.என்.என் ஆவணப்படம்: அமெரிக்க போர்க்குற்றங்களின் படச்சுருள் ஆவணங்கள்

குவாண்டனாமோ தளத்தில் ஆப்கான் போர்க்கைதிகள்: கட்டுப்படுத்தப்பட்டு, அடக்கப்பட்டு, மருந்து கொடுக்கப்பட்டு, விலங்குகள் போல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Top of page