பிரான்ஸ்: அரசு சிக்கன நடவடிக்கைகளோடு புத்தாண்டை வரவேற்றது
By Alex Lefebvre
10 January 2003
Back
to screen version
பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் தன்னுடைய புத்தாண்டுச் செய்தியில், 2003 ஆம் ஆண்டு
பிரம்மாண்டமான ''சீர்திருத்தங்களை'' ஓய்வூதியம், சுகாதாரம், கல்வி உட்பட எல்லா வகையான முக்கியமான சமூக
செலவீனங்களிலும் காணும் என்றுள்ளார்.
அநேகமாக எல்லா பழமைவாத அரசுகளின் தீர்மானங்களைப் போலவே இந்த அறிவிப்பு
மிகவும் புனிதமாகவும் அதே சமயம் ஆர்வம் இல்லாததாகவும் அமைந்தது. ''பெரும்பாலான பிரெஞ்சு மக்களை இதற்காக
ஒன்றுபடுத்தி கொண்டுவர நிச்சயம் முடியும் என்பது என் நம்பிக்கை'' என்று அவர் குறிப்பிட்டார். தொழில்துறையில்
கண்டிப்பான மற்றும் தெளிவான நடவடிக்கைகள் ஏற்பட வழிவகுக்கும் என்ற எண்ணம் தொழிலாளர் மத்தியில் ஏற்பட்டு வரும்
நிலைமையில், தமது சொந்த நலன்களுக்காக சிக்கனக் கொள்கைகளை அரசு கையாளுவதை இது சுட்டிக்காட்டுகின்றது.
எடுக்கக்கூடிய முக்கிய நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் மறைக்க முடியாததால், பலவீனமான
பொருளாதாரத்தின்மீது அரசு செயல்படுத்த உள்ள இந் நடவடிக்கையானது அதிகார வட்டாரங்களில் அச்சத்தை
கொடுத்துள்ளது. அத்துடன், தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்துவரும் திருப்தியின்மை சூழலில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட
உள்ளதாக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செப்டம்பர் 2002 பேச்சுவார்த்தைக்குப்பின், பிரதம மந்திரி ஜோன் பியர்
ரஃப்ரனின் 2003 க்கான பட்ஜெட்டில் கல்வி, உள்கட்டுமான வளர்ச்சி மற்றும் கலாச்சார திட்டங்களுக்கான நிதி
ஒதுக்கீட்டில் அதிக அளவில் துண்டு விழுந்துள்ளது. இருந்தபோதிலும், முன்பு பேசப்பட்ட பட்ஜெட் திட்டங்களின் கடுமையானது
இதில் குறைவாக இருந்தது.
அதிக நம்பிக்கையான கண்ணோட்டத்தில் தேசிய பொருளாதார வளர்ச்சி 2003 ல் அமையவுள்ளதால்,
செலவுகளை கணிசமாகக் குறைப்பதாக நியாயப்படுத்துகிறார்கள். 2.5 சதவிகித வளர்ச்சி அளவு என்று அரசு ஊகித்து
இருந்தாலும், அது ஆளும் வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய புள்ளி விவர மையம் (Insee)
இந்த வளர்ச்சியானது 1 முதல் 1.5 சதவிகிதம் வரை இருக்கும் என்று கணித்துள்ளது பற்றியும் கேள்விகள் எழுந்தது.
நுகர்வோர் செலவு செய்யும் சக்தியில்தான் பிரான்சின் பொருளாதார வளர்ச்சிக்கு மூலாதாரமே
உள்ளது. இன்னொரு பக்கம், வர்த்தக முதலீடானது, சென்ற 2002 காலாண்டுகளில் குறைந்து காணப்பட்டதற்கு இப்போது
புள்ளி விவரங்கள் உள்ளன. உலகப் பொருளாதார சூழல் பிரெஞ்சு வர்த்தக முதலீட்டிற்கு நல்ல எதிர்காலம் உண்டு என
நம்பிக்கை கொண்டாலும், நுகர்வோரின் அதிகரித்துவரும் கடன் தொல்லையும், உயர்ந்துவரும் பணவீக்கமும், நுகர்வோர்
செலவு செய்யும் நிதியை குறைத்துவிடும் என்று Insee
மையம் வேதனைப்படுகிறது. 2.5 வளர்ச்சி சதவிகிதம் என்பது ''தன்னார்வ'' மதிப்பீடுதான் என்று ரஃப்ரன் ஒப்புக்கொண்டார்.
ஐரோப்பிய யூனியன் (EU)
தன் அங்கத்தினர் நாடுகளுக்கு விதித்துள்ள 3 சதவிகித ஒட்டுமொத்த உற்பத்தி அளவைவிட, பிரான்சின் பற்றாக்குறை
பட்ஜெட் இந்த அளவையும் தாண்டிவிடும் அபாயத்தில் உள்ளது என்று எச்சரித்துள்ளது. பிரெஞ்சு நிர்வாக ஊழியர்களின் ஓய்வூதிய
திட்டங்களில் உடனடியாக ''அதிக அளவில் சீர்திருத்தங்கள்'' வேண்டும் என்று அது பரிந்துரை செய்துள்ளது. அது எந்த
ஒரு குறிப்பிட்ட திட்டத்தையும் அறிவிக்காதபோதிலும், வயதானவர்களின் உழைப்பு ''மிக அதிகரித்த தேவையாக'' உள்ளது
என்றது. பிரெஞ்சுப் பத்திரிகைகள் அதே தினம் வெளியிட்ட அறிக்கைகளில், ''பெரிய பிரித்தானியாவில்'' நிர்வாக
ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 லிருந்து 65 ஆக உயர்த்தியுள்ளது எனக் கூறின.
அரசின் நிதி நெருக்கடிகள் அதிகரித்து வருவதால், நிதி வருவாய் பிரச்சனைகளும் அதிகமாகின்ற
அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த டிசம்பரில், அரசானது ''நிதி பாதுகாப்புச் சட்டம்'' ஒன்றை மார்ச் மாதத்திற்குள்
இயற்றி அமுலாக்கிவிட பூர்வாங்க வேலைகளைத் துவக்கிவிட்டது. அது ஒரு தனித்துவம் பெற்ற நிறுவனத்தை அமைத்து அதன்
மூலம் முதலீடுகளையும், காப்புறுதி நிறுவனங்களையும் மேற்பார்வயிைட்டு, முதலீட்டு ஆலோசகர்களின் நடவடிக்கைகளையும்,
கணக்காளர்கள் ஆலோசகர்களாக செயல்படாமலிருக்க நிபந்தனைகளையும் விதிக்கும். ஜனவரி 3 ஆம் தேதி பொதுக்
காப்புறுதி நிதி (CGA. General Insurance Fund)
திவாலானது. இந்தத் துறையிலுள்ள மேலும் பல நிறுவனங்கள் ''அபாயகரமான நிதி நிலைமையில்'' தான் உள்ளது என்று
பத்திரிகைகள், மிகுந்த விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியிட்டது.
ரஃப்ரன் அரசினுடைய இலக்கின் அடிப்படை முறைகளை, அதன் சீர்திருத்தமான `உனெடிக்`
(Unedic)
என்ற வேலையில்லாதோர் காப்புறுதித் திட்டம் மூலம் காட்டியுள்ளது. இத்திட்டத்தை ஆதரிக்கும் உழைப்பாளர்களின் வரியை
உயர்த்தியும், வேலையற்றோர் தங்களின் ஓய்வு காலத்திற்கு செலுத்தும் வரியை 1.2 லிருந்து 3 சதவிகிதமாய் உயர்த்தியும்,
பணி ஓய்வுபெறும் வயதை 55 லிருந்து 57 ஆக அதிகரித்தும், ஐம்பது வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கும்
சகாய நிதி காலத்தை 45 மாதங்கலிலிருந்து 36 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
''அவசரகால வேலைக்காலத்திற்கான'' தொழிலாளர்கள் பெற்றுவரும் மாற்று உதவித்
தொகைக்கான பணி தேவைகளை ஒவ்வொரு 18 மாத காலத்தில் 4 மாதங்கள் வேலை செய்திருக்கவேண்டியதற்கு பதில்
ஒவ்வொரு 22 ற்கும் 6 மாதமாவது கண்டிப்பாய் பணி செய்திருத்தல் வேண்டும். இதற்கு மெடெஃப் (Medef)
என்ற முதலாளிகள் சங்கம் உற்சாகத்துடன் தன்னுடைய ஒப்புதலை அளித்துள்ளது.
சில தொழிற்சங்கங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஆனால் ஒரே ஒரு தொழிற்சங்கமான
CFDT மட்டும் இதை ஒப்புக்கொண்டு
கையெழுத்திட்டது. பிரெஞ்சு தொழிலாளர் சட்டப்படி, அமுல்படுத்த இதுவே போதுமானதாகும்.
ரஃப்ரன் அரசு சுகாதார மற்றும் கல்வி ''சீர்திருத்தங்கள்'' என்பதன் பேரில் பெரிய
அளவிலான வெட்டுக்களோடும், செயற்கைத்தனமான முன்னேற்றங்களோடும் காட்டியபோதும், அது மிகப்பெரிய எதிர்ப்பை
சம்பாதித்துள்ளது. தேசிய அளவிலான கல்வியில், அரசானது கிட்டத்தட்ட 5000 பணி இடங்களை ஒழித்து, பல நூற்றுக்கணக்கான
இளைஞர்களின் பணி ஒப்பந்தங்களை ரத்து செய்தது. இவற்றினுள் கல்வித்துறையின் துணை ஆசிரியர் பதவிகளும் அடங்கும்.
மருத்துவத்துறையின் ஒரு பாதியை தனியார்மயமாக்குவதற்கு தன் ஆதரவைத் தெரிவித்த சுகாதராரத்துறை
அமைச்சர் ஜோன் பிரான்சுவா மத்தே (Jean-François
Mattei) கிராமப்புறங்களில் உள்ள பிரசவ விடுதிகளை மூடிவிடும் தன்
எண்ணத்தையும் தெரிவித்தார். புதிய தாய்மார்கள் பிராந்திய பிரசவ விடுதிகளில் குழந்தைகளை பிரசவிப்பார்கள் என்றும்,
பிரசவம் இயல்பாகவே அமையும் என்று இருக்கும்பட்சத்தில், அவர்களை ஏழு மணிநேரத்திற்குப்பிறகு உள்ளூர், பிரத்தியோகமற்ற
பொது மருத்துவ விடுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
வரவிருக்கும் ஓய்வூதிய திட்டத்தின் சீர்திருத்தத்தை அரசு மிகுந்த கவலையுடன் எதிர்பார்க்கிறது.
1996 முதலே சராசரி ஓய்வூதியத்தின் வாங்கும் திறனானது குறைந்து வருகிறது. சென்ற முறை ஓய்வூதிய திட்டத்தில் பெரிய
அளவிலான வெட்டுக்களை அலென் ஜூப்பே (Alain Juppé)
தலைமையிலான அரசு அமுல்படுத்த முயன்றபோது பெரிய அளவிலான போராட்டங்கள் பொதுத்துறைகளில் நவம்பர் -
டிசம்பர் 1995 இல் வெடித்தது. தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டிற்கும் அப்பால் இப்போராட்டங்கள் நடந்ததால்,
பொதுமக்களின் கணிசமான ஆதரவு இதற்கு கிட்டியது. இதனால் அரசின் திட்டம் செயலிழந்துபோய் அதன் ஒரு பகுதி திட்டத்தை
திரும்பப்பெற்றது.
இந்தக் கொந்தளிப்பு, தொழிற்சங்க அதிகாரிகளாலும், ''இடதுசாரிக்'' கட்சிகளாலும்
கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஜுப்பேயின் மத்திய - வலதுசாரி கூட்டு அரசு 1997 ஜூன் மாதம் நடந்த பாராளுமன்ற
தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, லியோனல் ஜோஸ்பன் தலைமையில் சோஷலிச கூட்டு அரசு பதவிக்கு வந்தது.
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தொலை தகவல், இரயில்வே, சக்தி,
போக்குவரத்து மற்றும் கல்வி துறைகளில் நடந்த பிரம்மாண்டமான ஆர்பாட்டங்கள், பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின்
தீவிரப்போக்கு அதிகரித்துக் கொண்டுவருவதை எடுத்துக் காட்டுகின்றது.
தேசிய தொழிற்சங்க சம்மேளனம் பெரிய அளவிலான செயல்திட்டங்களை டிசம்பர் 9 முதல்
அறிவித்து அழைப்பு விடுக்காத போதிலும், பாரீஸில் தேசிய கல்வித்துறை ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அறிவிக்கப்பட்ட
கண்டிப்பான திட்டங்களை எதிர்த்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களை மேற்கொண்டனர். அவர்கள் தொழிற்சாலை
நிரப்பும் போராட்டத்தையும் மேற்கொண்டு இத்திட்டத்திற்கு பதிலடி தந்தனர். மத்தேயின் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட
பிறகு, பிரசவ மருத்துவர்கள் போராட்டம் நடத்தியும், தவறு செய்யும் முறையின் காப்புறுதித் தொகை தவணைகளை
9,156 யிலிருந்து 16,000 யுரோக்களாக உயர்த்த திட்டமிட்டிருந்ததை, குறைக்கக் கோரியும் போராட்டம் செய்தனர்.
விமானங்களில் பணிபுரியும் மருத்துவர்களும்கூட மேலும் சிறந்த ஊதியத்திற்கும் வேலைச் சூழலுக்கும் போராடி வருகின்றனர்.
அங்கேர்ஸ்சிலுள்ள (Angers)
திவாலாகும்
ACT தொழிற்சாலையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள தொழிலாளர்களுக்கு
உள்ளூர்க் கடைக்காரர்கள் உணவு வழங்கி உதவி வருகின்றனர்.
கேதோட் டியூப்கள் (cathode
tubes) தயாரிக்கும் தொழிற்சாலையான, வடகிழக்கு பிரான்சின்
மொன்ட் செயின்ட் மார்த்தனிலுள்ள டேவூ (Daewoo)
தொழிற்சாலையை தொழிலாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். நிறுவனத்தை
மூடிவிட்டபின் தமக்கு அதிகமான இறுதிச் சம்பளமும், சகாயங்களும் தர உத்திரவாதம் அளிக்காவிட்டால், இரசாயன விஷப்பொருட்களை
அருகில் ஓடும் நதியில் கொட்டிவிடுவோம் என அச்சுறுத்தியுள்ளனர்.
டிசம்பர் 11 தொழில் நீதிமன்ற பிரதிநிதிகளுக்கான (prud'homale)
தேர்தல்களும், அரசின் நடவடிக்கைகளையும் பார்க்கும்போது, ஆளும் கட்சி வட்டாரங்கள் எப்படி தொழிலாள வர்க்கத்தின்
எதிர்ப்புகளை தணிக்க முயல்கின்றது என்பது தெரிகிறது. தொழில் நீதி மன்றங்களில்,
தொழில் சாராத வழக்கதிகாரிகள், இவர்கள் பிராந்திய மற்றும் தொழிற்சாலைக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள நீதிமன்றத்தில்
ஒப்பந்தம் சம்பந்தமான தகராறுகளை மேற்பார்வை செய்பவர்களாகும். இவர்களில் ஒரு பாதியினர் தொழிலாளர்களின்
வாக்குரிமைபெற்ற தொழிற்சங்க வேட்பாளர்கள். மற்றொரு பாதியினர் வர்த்தக உரிமையாளர்களால் வாக்குரிமை
பெற்று நியமிக்கப்பட்டவர்கள்.
பல பிரிவுகளில் தொழில்புரியும் தொழிலாள வர்க்கத்துக்கு இம்முறை நடந்த இத்தேர்தல்
ஒரு நிகழ்வாக இருக்கவில்லை. இத் தேர்தலில் தொழிலாளர்கள் பங்குபற்றாமை என்பது முந்தைய சாதனையை முறியடித்து
67 சதவிகிதமாக உள்ளது. அதே சமயம் முக்கிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கிட்டத்தட்ட அதே இடத்தை பிடித்திருந்தது.
பொது தொழிலாளர்கள் அமைப்பு (CGT)
32.5 சதவிகித வாக்குகள் பெற்றும், பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர்கள் சங்கம் (CFDT)
சற்று அதிகமாய் 25.6 சதவிகிதம் பெற்றும், தொழிலாளர்கள் சக்தி (Fo)
2 சதவிகிதத்தை இழந்து 18.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது.
CFDT சங்கம் ஓய்வூதிய வெட்டுக்களை ஆதரித்தும்,
Fo அமைப்பானது ஓய்வூதிய வெட்டுக்கள் குறித்த எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும்
கலந்துகொள்ள மறுத்ததினாலும், அரசும், பழமைவாத பத்திரிகையான லு பிகாரேவும் (Le Figaro)
இத் தேர்தல் பெரும் வெற்றி என்று அறிவித்தது. அரசாங்கமானது, ஒரு நீண்ட
பேச்சுவார்த்தையை தொழிற்சங்க அமைப்புகளுடனும், முதலாளிகள் சங்கத்தோடும் நடத்தி, அதன் முடிவுகளை ''சமநிலைப்படுத்தும்''
வகையில் உபயோகித்துக்கொள்ள முயன்று வருகின்றது.
எந்த ஒரு தொழிற்சங்கத்திற்கும், ஓய்வூதியம் மற்றும் சமூக நலன்களைப் பாதுகாக்க பெரியதொரு
போராட்டம் நடத்தும் எண்ணமே இல்லை. Fo
அமைப்பானது இச்சீர்திருத்த திட்டங்கள் குறித்து குரலெழுப்பி விமர்சித்தபோதிலும் -
CFDT சங்கமானது,
பொதுத்துறையில் ஓய்வூதிய திருத்தங்கள் தவிர்க்கமுடியாதது என்று அறிவித்தது. ரஃப்ரன் அரசின் கொள்கைகளை எதிர்க்கவோ,
ஒரு சமுக இயக்கத்தை வளர்க்கவோ CFDT
சங்கத்துக்கு எந்த ஒரு அக்கறையும் இல்லை. சொல்லப்போனால், லிபரேஷன் என்ற பத்திரிகை,
Fo சங்க அதிகாரிகள்,
அரசு அதிகாரிகளுடன் எப்படி இரகசியமாய் கலந்துபேசி, லொறி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை
நவம்பர் 24-25 இல் முடிவுக்கு கொண்டு வந்தனர் என்பதை வெளியிட்டிருந்தது.
|