World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தோனேசியா

An uneasy peace deal signed between Indonesian government and Aceh rebels

இந்தோனேசிய அரசுக்கும், பிரிவினைவாத சுதந்திர அசே இயக்கத்திற்கும் இடையே தெளிவற்ற அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

By John Roberts
6 January 2003

Back to screen version

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின், 26 வருடங்களாக நடந்து வந்த ஆயுத மோதலை முடிவுக்கு கொண்டுவருமுகமாக இந்தோனேசிய அரசு பிரதிநிதிகளும், பிரிவினைவாத சுதந்திர அசே இயக்க (Separatist Free Aceh Movement -GAM) பிரதிநிதிகளும் 6 பக்க அமைதி உடன்படிக்கையில் டிசம்பர் 9 அன்று ஜெனிவாவில் கையெழுத்திட்டனர்.

சுமத்ராவிற்கு வடகோடி முனையில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் நிறைந்த மாகாணமான அசேயுக்கு அதிக சுயாட்சி அதிகாரமும் வழங்குமுகமாக கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையின் முக்கிய அம்சங்களாக உள்ளவை, போர் நிறுத்தமும், இராணுவ படை குறைப்புமாகும். பிராந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் வரும் 2004ல் நடைபெற உள்ளது.

இந்த உடன்படிக்கையின்படி, பிரிவினைவாத சுதந்திர அசே இயக்க போராளிகள் சர்வதேச கண்காணிப்பின் கீழ் தங்கள் ஆயுதங்களை தற்காலிக இராணுவ முகாம்களில் ஒப்படைப்பது இரண்டு மாதத்தில் ஆரம்பமாகி, ஐந்து மாதத்திற்குள் முடிவடைய வேண்டும். இதற்கு பதிலாக கொடுமையான நடவடிக்கைகளுக்கை பேர்போன உதவி இராணுவ படையினர் உள்ளடங்கலான தனது தன் பெரும்பாலான படைகளை ஜக்கார்டா (Jakarta) விலக்கிக்கொள்ளவேண்டும்.

''படையை திரும்பப்பெறுதல்'' பற்றி உடன்படிக்கையில் தெளிவாக இல்லாததுடன், அதை இணை பாதுகாப்பு குழுவிடம் (Joint Security Committee-JSC) கையளிக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது, ''பரஸ்பரம் ஒத்துக்கொண்ட தீர்மானங்கள்படி'', ''அமைதிப் பகுதிகளை'' வரையறுத்து இரு தரப்பிலும் படைகளை திரும்பப்பெற ஒழுங்கு செய்யும்.

இக்குழுவில் அங்கத்தினர்களாக பிரிவினைவாத சுதந்திர அசே இயக்க, ஜக்கார்த்தா சுவிட்சலாந்து சார்ந்த ஹென்ரி டுனன்ட் மனிதாபிமான இணக்க மையம் (Henry Dunant Centre for Humanitarian Dialogue-HDC) ஆகியவற்றின் பிரதிநிதியும், ஒரு சுயாதீன தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் இராணுவ மேற்பார்வையாளர்களும் குழுவும் அங்கத்துவம் வகிப்பர். தாய்லாந்து மேஜர் ஜெனரல் Thanongsak Tuvinan வின் தலைமையில் செயல்படும் இந்த 15 நபர் கொண்ட குழு, சுமார் 150 போர் நிறுத்த பார்வையாளர்களையும், டிசம்பர் மத்தியில் வந்த 50 சர்வதேச பிரதிநிதிகளையும் உள்ளடக்கியிருக்கும்.

இந்த உடன்படிக்கையை திருப்புமுனை என்று சர்வதேச தகவல் தொடர்பு ஸ்தாபனங்கள் புகழ்ச்சியாக சொன்னாலும் அது பலவீனமான அரசியல் அடிதளத்தின்மேல் போடப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் படைகளை திரும்பப்பெறுவது குறித்து எச்சரிக்கையுடனே உள்ளனர். பிரிவினைவாத சுதந்திர அசே இயக்கத்தினர் முன்வந்து வந்து தன் ஆயுதங்களையெல்லாம் ஒப்படைக்குமா என்பது இன்னும் தெளிவின்றி உள்ளது.

இன்னும் ஆழமாக நோக்கினால், அடிப்படையான அரசியல் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே உள்ளது. பிரிவினைவாத சுதந்திர அசே இயக்கம் இந்தோனேசிய அதிபர் மேகவதி சுகர்னபுத்ரியின் நிர்வாகமும், இராணுவ படைப்பிரிவும் (TNI) முற்றிலும் எதிர்க்கும், சுதந்திரமான அசே பற்றிய கோரிக்கையை இன்னும் கைவிடவில்லை.

பிரிவினைவாத சுதந்திர அசே இயக்கம் 2004 இல் வருகின்ற தேர்தல்களில் தன் வேட்பாளர்களை முற்றான சுதந்திரம் என்ற கோரிக்கையின் அடித்தளத்திலேயே போட்டியிட செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. தன்னுடைய இயக்கமானது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது குறித்து விவரித்த பிரிவினைவாத சுதந்திர அசே இயக்க தலைவர் அகமத் மார்சுகி (Ahmad Marzuki) ''எங்கள் போராட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றுவோம் என்று நம்புகிறேன். ஆனால் இலக்கு மறாது உள்ளது. அது சுதந்திரம்'' என குறிப்பிட்டுள்ளார்.

பிரிவினைவாத சுதந்திர அசே இயக்கத்தின் கோரிக்கைகள், கூடிய அரசியல் அதிகாரத்தையும் அப்பிராந்தியத்திலுள்ள செழிப்பான நிலவளங்களின் கட்டுப்பாட்டையும் வேண்டி நிற்கும் அசே ஆளும் தட்டினரின் நலன்களையே பிரதிபலிக்கின்றது. மேகவதி சுகர்னபுத்ரி சுகார்ட்டோ ஆட்சி காலத்தில் 5% ஆக இருந்த எண்ணெய் மற்றும் நில வாயு வருவாயை 70% ஆக அதிகரித்தது, ஒரு வகையான மாகாண சுயாட்சி அதிகாரத்தை வழங்குவதாகவும், அவர்கள் பிற்போக்கான இஸ்லாமிய ஷரியா (sharia) சட்டத்தை அமல்படுத்தவும் உரிமை அளித்துள்ளார்.

ஒப்பந்தம் அதிகளவு அபாயத்திலேயே உள்ளது. அசெயின் பாரிய அருண் எரிவாயு (Arun gasfield) வயலானது இந்தோனேசியாவின் உற்பத்தியில் 30 சதவிகிதம் வகிக்கிறது. பிரிவினைவாத சுதந்திர அசே இயக்கம் மேலும் சுதந்திரத்திற்காக கோரிக்கைகளையும் முன்வைத்தால், அது மற்றைய வளம் மிகுந்த மாகாணத்திலும் இவ்வாறான கோரிக்கைகளை தூண்டிவிடும். உதாரணத்திற்கு, சுமத்ராவிலுள்ள ரியாவில் (Riau) பெரிய எண்ணெய் வயல்கள் உள்ளன. ஏற்கனவே ரியாவிலுள்ள உள்ளூர் தலைவர்கள் தங்கள் மாகாண எண்ணெய் வருவாயிலிருந்து தங்களுக்கு அதிக விகிதமான பங்கு தேவை என்று குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்தோனேசிய இராணுவம் தனது நலன்களை பாதுகாத்துக்கொள்ள, அம்மாகாணத்தில் சுதந்திரமான அரசுக்கான அறிவிப்பு வராமல் அங்கே அதிக அளவில் பிரசன்னமாக உள்ளனர். அசேயில், மற்றைய இயற்கை வளம் மிகுந்த மாகாணங்களைப்போல் இங்குள்ள பாதுகாப்புப் படைகள் வருமானம் ஈட்ட பல வழிகளிலான வலைப்பின்னலை கொண்டுள்ளது. அவ்வழிகள் சட்ட ரீதியானதும், சட்டத்திற்கு மாறானதுமான பணம் கொழிக்கும் வியாபாரமும், போதை மருந்து கடத்தலும், ஆயுத விற்பனைகளும், மிரட்டி பணம் பறிப்பதும் உள்ளடங்கும்.

சுகாட்டோவின் சர்வாதிகாரத்தின் கீழ் இந்தோனேசிய இராணுவம், அசே மீது தயவுதாட்சண்யமின்றி மிகவும் கண்டிப்போடு தன் பிடியை வைத்திருந்துடன், எந்த எதிர்ப்பையும் ஒடுக்கி அதன் மூலம் 1976 இன் இராணுவ படைகளுடன் மோதலுக்கு வித்திட்டது. பிரிவினைவாத சுதந்திர அசே இயக்கத்திற்கும், இந்தோனேசிய இராணுவத்திற்கும் இடையே நடந்த போரில் கடந்த ஆண்டின் 1,700 உள்ளடங்கலாக இதுவரை கிட்டத்தட்ட 12,000 பேர் உயிரிழந்துள்ளனர். 1998ல் சுகார்ட்டோ ஆட்சி வீழ்ந்ததும், முதலில் அதிபர் பி.ஜே.ஹபீபியின் (B.J. Habibie) கீழும் பிறகு அவரை அடுத்து வந்த அப்துர்ரஷ்மான் வாஹித் இன் (Abdurrahman Wahid) கீழும் உடன்பாட்டுக்கான முயற்சிகள் ஆரம்பித்தன.

சுதந்திரமான அரசு குறித்த வாக்கெடுப்பு பற்றியும், சுயாட்சி விரும்பிகள் தங்கள் கொடிகளை பகிரங்கமாக பறக்கவிடலாம், பொது ஊர்வலங்கள் நடத்தலாம் என்று வாஹித்தின் அளித்த உரிமைகளை அனுமதிக்கக்கூடாத சலுகைகளாக இராணுவம் எண்ணியது. அசே மற்றும் மேற்கு பப்புவா தொடர்பான வாஹித்தின் நிலைப்பாடே வழமைக்கு மாறான முறைகளில் அவரை பதவி இறக்கவும், மேகவதி சுகர்ணபுத்ரியை அதிபராக அமர்த்தவும் இந்தோனேசிய இராணுவம் ஆதரவு வழங்கியதற்கான முக்கிய காரணமாகும்.

மேகவதி 2001 மத்தியில் பதவிக்கு வந்த பிறகு, அசேயிலுள்ள போலீஸ் மற்றும் படை எண்ணிக்கைகள் மூன்று மடங்காகி 30,000 ஆக்கப்பட்டதுடன், பிரிவினைவாத சுதந்திர அசே இயக்கத்தின் மீதும், மற்றும் சுதந்திர அரசுக்கான ஆதரவாளர்கள் மீது அடக்குமுறை கையாளப்பட்டது. இராணுவத்தின் சில பிரிவுகள் அங்கே அவசர நிலை பிரகடனப்படுத்த வலியுறுத்தி அங்கு தங்கள் நிலையை பலப்படுத்திக்கொள்ள முயல்கிறது. அதே சமயம் அமெரிக்கா உள்ளிட்ட பெரிய சக்திகளின் அழுத்தங்களுக்கு உள்ளாகி நீடித்துவரும் போரை ஒரு முடிவுக்கு கொண்டுவர பிரிவினைவாத சுதந்திர அசே இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஜக்கார்டா தள்ளப்பட்டது.

அமைதிப்பேச்சுவார்த்தை ஹென்றி டுனன்ட் மையத்தின் (Henry Dunant Centre) மூலம் நடைபெற்றது. 1999 இல் நிறுவப்பட்ட இம்மையத்திற்கு அமெரிக்கா, உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும், இந்தோனேசியாவில் முன்னாள் காலனி ஆதிக்கம் செய்த நெதர்லாந்தும் நிதியுதவி செய்கிறது. அதன் இயக்குனரான மார்ட்டின் கிரிஃபித் (Martin Griffiths) முன்னாள் பிரிட்டிஷ் தூதரும், ஐக்கிய நாடுகளின் அதிகாரியும் ஆவார்.

அங்கு ஒரு உடன்பாடு உருவாகுமானால், மேலும் 20 நாடுகள் உதவி செய்ய தயாராக இருப்பதாய் தெரிவித்ததுள்ளன. உடன்படிக்கை கையெழுத்தாகும் முன்பே அமெரிக்கா மற்றும் ஜப்பான் உதவி வழங்கும் திட்டம் குறித்து அம்மாகாணத்தில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. டிசம்பர் 16ஆம் தேதி, ஐக்கிய நாடுகளின் 10 பேர் கொண்ட குழு, அசேவுக்கு அளிக்கப்பட வேண்டிய மனிதாபிமான மதிப்பீடு குறித்து ஆய்வு நடத்த ஒரு மூன்று நாள் மதிப்பீடு செய்வதற்காக அங்கு சென்றுள்ளனர்.

இரு தரப்பினர் மீதும் புஷ் நிர்வாகம் மிகுந்த நெருக்குதலை கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தது. முக்கியமாக, முன்னாள் தளபதியும், மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு அமெரிக்க தூதருமான ஓய்வுபெற்ற அமெரிக்க ஜெனரல் அந்தோனி ஜின்னி (Anthony Zinni) எல்லா பேச்சுவார்த்தை கூட்டங்களிலும் பங்குபெற்றார். அத்துடன், மே மாதம் ஜகார்ட்டாவில் வரைந்த சுய ஆட்சி திட்டத்தின்போதும் இவர் உடன் இருந்தார். சென்ற ஆண்டு ஆரம்பத்தில் அமெரிக்க துணை செயலாளர் மற் டாலே (Matt Daley), நாட்டை விட்டு வெளியேறி ஸ்வீடனில் வாழும் பிரிவினைவாத சுதந்திர அசே இயக்க தலைவர் ஹசன் டி டைரோவை (Hasan di Tiro) சந்தித்து, சுய ஆட்சி திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

மிகப்பெரிய அமெரிக்க எக்ஸான்மோபில் கார்பரேஷன் (ExxonMobil Corporation) அசேயில் மூன்று பெரிய எரிவாயு நிலங்களையும் அருண் நீர்த்த இயற்கை எரிவாயு தொழிற்சாலையையும் சொந்தமாக வைத்துள்ளது. செவ்ரான் டெக்ஸாகோ கார்பரேஷனுக்கு (ChevronTexaco Corporation) சொந்தமான கால்டெக்ஸ் (Caltex) ரியோவில் எண்ணெய் கிணறுகளை இயக்கி வருகிறது. மலாக்கா ஜலசந்தியின் வடக்கு நுழைவாயிலருகே அசே உள்ளது. ரியோ, தென்மேற்கு கரை முழுவதுமாய் மலேசியாவுக்கு நேர்முகமாய் அமைந்துள்ளது. உலகிலேயே மிகவும் பரபரப்பாய் இயங்கும், மிக முக்கியமான கடல்வழிப்பாதைகளில் ஒன்றாக விளங்கும் இது, இந்து சமுத்திரத்தையும் பசிபிக் சமுத்திரத்தையும் இணைக்கிறது. புஷ் நிர்வாகம், ஈராக் மீது படையெடுக்க தயாராகையிலும், மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மை இல்லாமல் செய்யும்போதும், இந்தோனேசியாவின் எண்ணெய் மற்றம் எரிவாயுவைப்பெற தென்கிழக்கு ஆசியாவில் கப்பல் வழிப்பாதைகளை பாதுகாத்தலுக்கு அசேயில் ஸ்திரத்தன்மை முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.

எவ்வாறாயினும், இந்தோனேசிய இராணுவம் ஒரு தடையாக உள்ளது. ஒவ்வொரு முக்கியகட்ட பேச்சுவார்த்தையும் பாதுகாப்பு பிரிவுகள் சிலவற்றின் ஆத்திரமூட்டலுக்கு மத்தியில் இடம்பெறுகின்றது. உடன்படிக்கை கையெழுத்தாகும்போது, வட அசேயில் உள்ள பிரிவினைவாத சுதந்திர அசே இயக்க தலைமையகத்தைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான படை வீரர்கள் பீரங்கியுடன் சூழ்ந்துகொண்டு அதன்மீது மோதப்போவதாய் அச்சுறுத்தினர். உடன்படிக்கை கையெழுத்தான பின்பு, இரண்டு இராணுவவீரர்கள் உள்பட குறைந்தது 14 பேர் அங்கு நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக தெரிகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved