World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்க

On eve of US war against Iraq: the political challenge of 2003

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் போர் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில்: 2003-ம் ஆண்டின் அரசியல் சவால்

By the Editorial Board
6 January 2003

Back to screen version

2003ம் ஆண்டு, யுத்த அபாயத்தினதும், ஆழமான பொருளாதார நெருக்கடியினதும் பின்னணியில் ஆரம்பமாகிறது. சில வாரங்களுக்குள், எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத ஈராக் மக்கள் மீது அமெரிக்கா குண்டு மழை பொழியவிருக்கிறது.

புஷ் நிர்வாகம், போர் பற்றி இன்றும் முடிவு செய்யவில்லை என்று கூறுவது எவ்வளவிற்கு சிடுமூஞ்சித்தனமானதோ அவ்வளவிற்கு பொய்யானது. வெள்ளை மாளிகை ஏற்கனவே இராணுவத் தாக்குதலுக்குத் தயாராகிவிட்டது என்பது தெளிவாகத் தெரிகின்றது. பாரசீக வளைக்குடா பகுதியில் பாரியளவில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான துருப்புகள் அந்த பிரதேசத்திற்கு சென்றுள்ளன. அவர்களுக்குத் துணையாக கடற்படை அணிவகுத்துச் சென்றிருக்கின்றது. கடற்படைக் கப்பல்களில் அதிநுட்பமான, பயங்கரமான ஆயுதங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றிற்கு ஆதரவாக நூற்றுக்கணக்கில் போர் விமானங்கள் சென்றுள்ளன. இராணுவ நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருகின்றன. ஈராக்கின் வடக்குப் பகுதியில் குர்திஸ் மக்கள் வாழும் பகுதிகளில் சிறப்பு இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ''விமானம் பறக்கூடாத'' பகுதி என்று சொல்லப்படும் பகுதிகளில் குண்டு வீச்சுத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

அமெரிக்கப் படையெடுப்பைத் தவிர்ப்பதற்கு, சதாம் ஹூசேனைப் பதவி நீக்கம் செய்வது உட்பட, எதையும் செய்ய முடியாத நிலையில் பாக்தாத் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்களை ஈராக் மீறி வருவதாக புஷ் குறிப்பிட்டு வருவது வெளிப்படையான சாட்டுக்கள் என்பது தெரிகின்றது. வாஷிங்டனின் நோக்கம் ஈராக்கை ''நிராயுதபாணியாக்குவது'' அல்லது அழிப்பதோ அல்லது, சதாம் ஹூசேனை பதவியிலிருந்து அகற்றுவது கூட அல்ல. மாறாக, அந்நாட்டைக் கைப்பற்றி, எண்ணெய் கிணறுகளைப் கைப்பற்றுவதாகும்.

இந்தப் போரின் உடனடி இராணுவ விளைவுகள் எதுவாக இருந்தாலும், புஷ் நிர்வாகம் ஆரம்பித்து வைக்கும் இந்த நடைமுறைகள் மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமல்ல, உலகின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கும் மிகப் பெரிய கொந்தளிப்பை உருவாக்கும். இந்தப் போர், சர்வதேச அளவில் அமெரிக்காவிற்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு எதிராக மட்டுமல்ல, அமெரிக்க மக்களுக்கும் எதிராகவும் பழிவாங்கும் நடவடிக்கைகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மேற்கொள்ளப்படுவதில் தவிர்க்கமுடியாது முடிவடையும்.

ஈராக்கிற்குள் இந்தத் தாக்குதல் ஆழ்ந்த, சமாதானப்படுத்தமுடியாத எதிர்ப்புணர்வை ஏற்படுத்தும். ஈராக் மக்கள் அமெரிக்க இராணுவப் படைகளைக் காலனி -ஆதிக்க பாணியில் தங்கள் நாட்டைப் பிடிக்க வந்த அடக்குமுறையாளர்கள் என்றே கருதுவார்கள்.

ஈராக்கிற்கு எதிரான போர் தொடங்கப்படும் இதே அடிப்படையில், ஈரான், சிரியா மற்றும் இந்த பிரதேசத்து இதர நாடுகளுடன் போர் தொடங்குவது தவிர்க்க முடியாததாகிவிடும். உலகின் எண்ணெய் வினியோகத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் போக்கு, அமெரிக்கா மற்றைய நாடுகளுடன் மோதும் நிலையை உருவாக்கும். குறிப்பாக, ரஷ்யா, சீனா போன்ற பலமான நாடுகளுடனும், மற்றும் அமெரிக்காவின் அதிகாரத்திற்கு எதிராளிகளான ஐரோப்பா, ஜப்பான் உடனும் மூர்க்கமான மோதலுக்கு இட்டுச்செல்லும். அமெரிக்கா, ஈராக்கை முறியடித்து வெற்றிபெறுமானால், அதனைத்தொடர்ந்த விளவு ஒரு மூன்றாவது உலகப் போருக்கான அடிப்படைகள் உருவாகும்.

வாஷிங்டனின் போர் நோக்கங்களின் நாச விளைவுகளை ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படையெடுத்ததில் ஏற்பட்ட விளைவுகள் தெளிவுப்படுத்துகின்றன. தலிபன் ஆட்சி வீழ்ச்சியடைந்து ஓராண்டிற்குப் பின்னர் அமெரிக்க இராணுவ வீரர்களை, ஆத்திரம் கொண்ட மக்கள் தொடர்ந்து தாக்கி வருகின்றார்கள். மத்திய ஆசியாவில் அமெரிக்கா தலையிட்டதன் விளைவாக இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உறவுகள் மேலும் கசப்பாகிவிட்டன. அந்த இரண்டு நாடுகளுமே அணு ஆயுதங்களை வைத்திருப்பவை. பாகிஸ்தானின் சர்வாதிகாரம் அமெரிக்காவிற்கு ஏற்ப செயல்பட முயன்றாலும், அமெரிக்காவிற்கும், முஷாரப் ஆட்சிக்கும் எதிராக கண்டனங்களும், பொதுமக்கள் மத்தியில் கடுமையான ஆத்திர உணர்வுகளும் அதிகரித்துவரும் வேளையில் வாஷிங்டனுக்கும், இஸ்லாமாபாத்துக்கும் இடையே கொந்தளிப்புகள் முற்றிக்கொண்டு வருகின்றன. ஏற்கனவே, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் படைகளுக்கிடையே எல்லையில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

புஷ் நிர்வாகத்தின் போர் வெறிப்போக்கு கொரியா தீபகற்பத்தில் திடீரென்று மோதல்களை அதிகரித்திருக்கிறது. வாஷிங்டன் ஆத்திரமூட்டும் வகையில் பேசி, ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளிலும் இறங்கியதால், Pyongyang (வடகொரியா) எதிர் நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டு தற்போது அணு ஆயுதப்போர் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தென்கொரியாவில் அமெரிக்காவிற்கு எதிராக பொதுமக்கள் பெருமளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

முப்பதாம் ஆண்டுகளிலும், நாற்பதாம் ஆண்டுகளிலும் நடைபெற்ற சம்பவங்களுக்கு பின்னர் தற்போது அமெரிக்கா உலகம் முழுவதும் இராணுவ வன்முறை நிகழ்ச்சிகளை அலை அலையாக உருவாக்கிவிட ஆயத்தம் செய்து வருகின்றது. வரலாற்று அடிப்படையில் பார்த்தால், படை பலத்தையும், ஆக்கிரமிப்பையும் மட்டுமே நம்பியிருக்கின்ற புஷ் நிர்வாகத்தின் வெளிநாட்டுக் கொள்கைக்கு சமாந்தரமானது ஜேர்மன் நாஜிக்களது கொள்கைகளாகும்.

ஹிட்லரின் தலைமையில் ஜேர்மன் நாட்டு ஏகாதிபத்தியம் கடைபிடித்த வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் என்ன? தனது இராணுவத்தை எதிர்க்க முடியாத மிக பலவீனமான நாடுகளின் மீது சங்கிலித் தொடர்போல் இராணுவ ஆக்கிரமிப்புக்களை ஹிட்லரது இராணுவம் (Wehrmacht) மேற்கொண்டது. அத்துடன், நாடுகளை பிடித்து ஆட்சிகளை தூக்கி எறிந்துவிட்டு, பொம்மை அரசுகளை உருவாக்கினார்கள். திடீரென்று, எந்தவிதமான ஆக்கிரமிப்புகளும் இல்லாமல் போர் தொடுப்பதற்கு ஹிட்லரது சர்வாதிகாரம் அப்பட்டமான கற்பனை காரணங்களை சாக்குப்போக்காக உருவாக்கி காட்டியது. சர்வதேச சட்டத்தை பகிரங்கமாக அவமதித்ததுடன், இராஜ தந்திரங்கள் சம்பிரதாய நடைமுறைகளை மீறினார்கள். சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு நாட்டை வன்முறையால் கைப்பற்றி, அந்த நாட்டை சூறையாடுவதுதான் ஹிட்லரின் சர்வாதிகாரக் கொள்கையாக இருந்தது.

ஒவ்வொரு அம்சத்திலும் உலக அரங்கில் முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் இத்தாலிய பாசிச சர்வாதிகாரம் எதியோப்பாவை கைப்பற்றியதையும், ஜேர்மன் நாஜிக்கள் போலந்து நாட்டு ஆட்சியை கைப்பற்றியதுபோன்று பாசிச ஆட்சிகள் கடைபிடித்த நடைமுறைகளுக்கும், புஷ் நிர்வாகத்தின் நடைமுறைகளுக்கும் இடையே அடிப்படை வேறுபாடுகள் எதுவும் இல்லை.

தற்போது ஏகாதிபத்தியம் மிக மூர்க்கமான வடிவத்தை எடுப்பதை உலகம் காணக்கூடியதாக உள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நோக்கங்களான, இந்த பூமியில் எல்லா பிரதேசங்களையும் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்து முக்கிய வளங்கள் அனைத்தையும் ஏகபோகமாக கைப்பற்றி உலக சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தவும், மோசமாக சுரண்டப்பட்ட மலிவான தொழிலாளர் உழைப்பு என்கிற புதிய மனித வளத்தை பயன்படுத்திக்கொள்ளவதற்குமான தேவையை பூர்த்தி செய்வதற்காக புஷ் நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது.

போருக்கான உண்மைக் காரணங்கள்

கொரியா தீபகற்பத்தில் மோதல்கள் அதிகரித்துவருவது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு அரசியல் விளைவை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஈராக்கிற்கு எதிரான போரை நியாயப்படுத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டு வரும் சாக்குப்போக்குகளை கொரியா கொந்தளிப்புகள் தோலுரித்துக் காட்டிவிட்டன. ஈராக் "பேரழிவுகரமான ஆயுதங்களை" உருவாக்கி வருகின்றது எனவும், ஐக்கிய நாடுகள் தீர்மானங்களுக்கு எதிராக செயல்படுகின்றது என அமெரிக்கா குற்றச்சாட்டுகின்றது. இதே குற்றச்சாட்டுகளை வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்கா கூறிவந்தது. ஆனால், பொது ''தாக்கங்கள்'' வேறுபட்ட முடிவுகளை எடுக்கும் நிலையை உருவாக்கிவிட்டன.

சதாம் ஹூசேன், ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத ஆய்வாளர்களுக்கு ஒத்துழைப்பு தந்து வருகிறார். மேலும், அமெரிக்க மதிப்பீட்டின்படி கூட சதாம் ஹூசேன் அணு குண்டை உருவாக்குவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும். வடகொரியா ஐ.நா ஆயுத ஆய்வாளர்களை வெளியேற்றியது, Yongbyong அணு உலையை மீண்டும் இயக்கத் தொடங்கியது, இந்த அணு உலையின் மூலம் கிடைக்கும் புளுட்டோனியத்தைக் கொண்டு ஆறு மாதங்களில் வடகொரியா ஆறு அணு குண்டுகளை செய்துவிட முடியும். ஆனால் ஈராக்கிற்கு எதிரான யுத்த தயாரிப்புகளை முடிக்கிவிட்டுள்ள நிலைமையில் அமெரிக்காவின் பதில், வடகொரியாவுடனான முரண்பாட்டை தணித்து பேச்சு வார்த்தை நடத்தலாம் மற்றும் ஐ.நாடுகள் சபை மூலம் சமரசம் காணலாம் என்று கூறுகின்றது.

இப்படி இரண்டு நாடுகள் தொடர்பாக அமெரிக்கா மேற்கொண்டுள்ள ''பிளவுபட்ட'' அணுகுமுறைக்கு புஷ் நிர்வாக அதிகாரிகள் சரியான காரணம் கூறமுடியவில்லை. இது மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்ற ஒரே நபர் இரண்டுவிதமாக நடந்துகொள்ளும் ஒரு நோயைப்போன்றது என்று ஓர் அரசியல் விமர்சகர் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம் என்றால், ஈராக்கின் மீதான யுத்தத்திற்கான காரணத்திற்கும், வெள்ளை மாளிகையும், அமெரிக்க வெளியுறவுத்துறையும் செய்துவரும் பிரச்சாரத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. அமெரிக்க அரசாங்கம் செய்துவரும் பிரச்சாரத்தை அமெரிக்க ஊடகங்கள் அப்படியே ஏற்றுக்கொண்டு வெளியிட்டு வருகின்றன.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தில் ஒரு குழுவினர் சோவியத் யூனியன் உடைந்துவிட்டதால் கிடைத்த ஓர் வாய்ப்பை பயன்படுத்தி அமெரிக்க ஆதிக்கத்தை பரப்புவதற்கு முயலுகின்றனர். அமெரிக்க கம்பெனிகளது நலன்களை காப்பதற்காக அமெரிக்க படைகளையும், ஆயுதங்களையும் பயன்படுத்தி உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்பதுதான் அந்தக் குழுவினரின் நோக்கம். இந்த திட்டத்தின் முக்கிய திறவுகோலாக இருப்பது, யூரோ-ஆசிய கண்டத்தில் ஆதிக்கத்தை நிலைநாட்டி அதன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வளங்களை, முக்கியமாக முதலாவது அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த வளம் பெட்ரோலியத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாகும். இந்த அடிப்படையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகம் முழுவதையும் மிரட்டுவதற்கும், அடக்குவதற்கும் முனைகின்றது.

பாரசீகவளைகுடாவில் புதிய போர், அமெரிக்காவின் உண்மையான நோக்கங்களை, இராணுவ- இராஜதந்திர வலைதளமான ஸ்ராட்பார் கொம் (Stratfor.com), அண்மையில் வெளிப்படையாக மதிப்பீடு செய்துள்ளது. இந்த வலைத்தளம் புஷ் நிர்வாகத்தின் சக்திகளோடு, நெருக்கமான உறவுகளை வைத்திருப்பதோடு, பொதுவாக புஷ் நிர்வாகத்தின் மூலோபாய நோக்கங்களை வெளிப்படுத்துகின்றது. இந்த வலைத்தளம் மூன்று மிக முக்கியமான குறிக்கோள்களை சுட்டிக்காட்டுகிறது. முதலாவது, ஈராக் நாட்டு எண்ணெய் வளத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, இரண்டாவது, மத்தியக் கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் மேலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்க்கொள்வதற்கு ஈராக்கை ஒருதளமாக பயன்படுத்திக்கொள்வது, மூன்றாவதாக, மேலும் அரபு மக்களை இரத்தக்களரியினுள்ளாக்கி அதிர்ச்சியடைய செய்வதனூடாக அப்பிராந்தியத்தில் அமெரிக்க - இஸ்ரேல் மேலாதிக்கத்தை வலுப்படுத்துவது.

Stratfor.com கூறியுள்ளதாவது

''ஈராக்கை தாக்குவதற்கான முடிவு உளவியல் மற்றும் மூலோபாய தேவைகளை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது. உளவியல்ரீதியில் வாஷிங்டன், அரபு மக்கள் அமெரிக்காவை காணும் முறையை மாற்றுவதற்கு விரும்புகின்றது. அரபு மக்கள் தன்னைக் கண்டு அஞ்சவேண்டும், மற்றும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் குறிக்கோள். மூலோபாய அடிப்படையில் அமெரிக்கா, மத்திய கிழக்கின் அச்சாணியான ஈராக்கை பிடித்துக்கொள்ள விரும்புகிறது. இப்படி பிடித்துக்கொள்ளப்பட்டிருந்த ஈராக்கிலிருந்து அந்த பிராந்தியம் முழுவதிலும் தனது சக்தியை நிலைநாட்ட முடியும். ஈராக்கில் வெற்றிபெறுவதன் மூலம் அரபு உலகின் போக்கையே மாற்றிவிட முடியும் என்று அமெரிக்கா கருதுகிறது. குவைத்போன்ற சில அரபு அரசுகள் இத்தகைய போக்கினை வரவேற்றுள்ளன. ஆனால், சவுதி அரேபியா போன்ற வேறு சில நாடுகள், அத்தகைய போக்கு ஏற்படுவது குறித்து அச்சம் தெரிவித்துள்ளன. ஈராக்கை அமெரிக்கா பிடித்துக்கொள்வது அந்த பிராந்தியத்தை திட்டவட்டமாக மாற்றிவிடும் என்பது அனைவருக்கும் புரிகிறது. அமெரிக்கா அரபு உலகின் முன்னைய ஆட்சியாளர்களான பிரித்தானிய மற்றும் உஸ்மானிய பேரரசுகளின் வாரிசாக வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

''அத்தகைய அதிகாரத்திற்கு எண்ணெய் ஓர் அச்சாணியாகும். ஈராக், உலகிலேயே இரண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடு. அந்த ஏற்றுமதிகளை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு செயல்படுத்துமானால், எண்ணெய் விலைகள் மிகவும் சரிந்துவிடும். எண்ணெய் கொள்கைகளை உருவாக்குவதில், OPEC அமைப்பில் அரபு நாடுகள் இப்போது பெற்றிருக்கும் அதிகாரம் போய்விடும். எண்ணெய் வளமிக்க அரபு நாடுகள் - அதில் முதல் இடம்பெற்று முன்னணியிலுள்ள சவுதி அரேபியா தங்களது பொருளாதாரத்தை நிலைப்படுத்த முடியாது தத்தளிக்கும் சூழ்நிலை உருவாகும். அரபு நாடுகளில் பொதுமக்களது கோபத்தால் ஏற்படுத்தமுடியாத ஆட்சி மாற்றத்தை, பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றம் ஏற்படுத்திவிடும்.

''மேலும் அந்தப் பகுதியில் இஸ்ரேல் இருக்கிறது. இஸ்ரேலின் மிகக் கடுமையான எதிரியான ஈராக் போரில் தோற்றுவிடுமானால், யூதர்கள் அரசும் வாஷிங்டனும் அந்த பிராந்தியத்தில் அரசியல் ஆதிக்கம் செலுத்தும் முன்னணி நாடுகளாக ஆகிவிடும். அரபு அரசுகள் எந்த நேரத்திலும் பொருளாதார மற்றும் இராணுவ மிரட்டல்களின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டிய அவநிலை உருவாகும். ஈராக் தோல்வியால் துணிச்சல் பெறும் இஸ்ரேல் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளிலிருந்து, பாலஸ்தீன மக்களை பக்கத்து நாடுகளுக்கு வெளியேற்றும் என்று அரபு தலைவர்கள் அஞ்சுகின்றனர். இப்படி கட்டாயமாக, மக்கள் கூட்டம் வெளியேற்றப்படும்போது அது மிகப்பெரிய பேரழிவை உருவாக்கிவிடும். அத்தகைய பெரும் நெருக்கடிகளை அரபு நாடுகளால் சமாளிக்கு முடியாது போய்விடும்.''

அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடி

புஷ் நிர்வாகத்தின் வெளிநாட்டுக் கொள்கையில் கூடுதலான கவனமின்மை (recklessness) அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. புஷ் முன்வைத்துள்ள பாரசீக வளைகுடா மீதான ஒரு தலைப்பட்சமான திடீர் தாக்குதல் தத்துவம் மத்திய கிழக்கை மட்டுமல்லாது, உலகம் முழுவதிலும் உறுதியற்றநிலையை உருவாக்கும். அமெரிக்கா படையெடுத்து ஈராக்கை பிடித்துக்கொள்ளுமானால் எல்லா அரபு முதலாளித்து ஆட்சிகளையும் ஆட்டம்காண செய்வதுடன், அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய மற்றும் ஜப்பானுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகமாகும். ஈரான், இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் இதர நாடுகள் என்ன முடிவிற்கு வரும்? அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்கு தங்களிடமுள்ள ஒரே வழி மிக விரைவாக, அவசர அவசரமாக அணு ஆயுதங்களை உருவாக்குவதுதான் என்ற முடிவிற்கு வருவார்கள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய சர்வதேச உறவுகளின் ஸ்திரத்தன்மையை வாஷிங்டன் உடைப்பதன் ஊடாக, 20வது நூற்றாண்டில் இரண்டு பூகோள மோதல்களுக்கு இட்டுச்சென்ற முரண்பாடுகளை மீண்டும் ஒரு தடவை பரிசோதித்து பார்க்க முனைகின்றது.

இந்தக் கொள்கைகளின் பரவலான தாக்கங்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் கவனத்திற்கு எடுக்கவில்லை. இது அவர்களின் தன்னம்பிக்கையால் உருவானதல்ல, மாறாக ஆழமாக நெருக்கடி உணர்வின் விளைவாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால், அமெரிக்காவின் முரண்பாடுகள் அதைவிட சக்தி வாய்ந்தவை. அமெரிக்க இராணுவ வலிமை மிக பலவீனமான பொருளாதார அடித்தளத்தை கொண்டது. இக்கவலையீனமான கொள்கைக்கு காரணம், அமெரிக்க பொருளாதார சீர்குலைவு காரணமாக ஆளும் வட்டாரங்களில் கவலைகள் வளர்ந்து வருவதும், அமெரிக்காவில் சமூகநெருக்கடிகள் மோசம் அடைந்துவருவதால், அதனால் உள்நாட்டில் கொந்தளிப்பு சூழ்நிலை ஏற்படலாம் என்பதுமாகும்.

புஷ்ஷின் வெளிநாட்டுக் கொள்கையையின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், உலகில் உள்ள மிக முக்கியமான பொருளாதார வளத்தை கைப்பற்றுவதன் மூலம் அமெரிக்க பொருளாதாரம் தீர்வுகாண முடியாத தனது சங்கடங்களை சமாளித்துவிட முடியும் என்பதாகும். அமெரிக்காவின் பொருளாதார பிரச்சனைகளுக்கு அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்திடம் தீர்வு எதுவுமில்லை. எனவே, இராணுவ வலிமையை பயன்படுத்தி பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முயலுகின்றது. எனவேதான், அமெரிக்கா ஈராக்கின் எண்ணெய் கிணறுகளை கைப்பற்றிக்கொள்ளுமானால் அதனால் உலக அளவில் பெட்ரோலிய விலைவாசி போக்குகள் பயன்தரும் விளைவுகள் ஏற்படும் என வாஷிங்டனிலிருந்தும், எண்ணெய்வள தொழில் மூளைவகுப்பாளரிடமிருந்தும் கருத்துக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்க பொருளாதாரம் மிகவும் மோசமான நிதி நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கின்றது. வேலையில்லாத் திண்டாட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. தொழில்துறை முதலீடுகளின் விகிதமும் உற்பத்தி அளவும் தேங்கி நிற்கின்றன, அல்லது வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. கம்பெனிகள் மற்றும் தனி நபர்கள் வாங்கியுள்ள கடன்களின் அளவு இதுவரை இல்லாத முறையில் அதிகமாக உயர்ந்திருக்கின்றது.

நாடு முழுவதிலும் மாநில அரசுகளில் நிதி காலியாகி உள்ளது. மத்திய அரசின் வரவுசெலவுதிட்ட பற்றாக்குறை மீண்டும் உயர்ந்து கொண்டிருக்கின்றது. கிறிஸ்மஸ் விற்பனை பருவத்தில் விற்பனைகள் மிக மோசமான அளவிற்கு நடைபெற்றதால், ஆளும் வட்டாரங்களில் கவலை அதிகரித்துள்ளது. பொதுவான பொருளாதார மந்தநிலையில் பாதிக்கப்படாத ஓர் அங்கமாக கருதப்பட்ட, நுகர்வோர் செலவினம் குறைந்து கொண்டு வருவது பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.

இன்றைய நெருக்கடி 1990களில் அமெரிக்க பங்கு மார்க்கெட்டுகளில் ஏற்பட்ட செழிப்பு நெருக்கடிக்கு உள்ளானதால் தீவிரமடைந்துள்ளது. 2002-ம் ஆண்டில் மட்டும் 2.6 ரில்லியன் டாலர் மதிப்பிற்கு பங்கு விலைகள் மதிப்பு மறைந்துவிட்டது. 2000-ம் ஆண்டு கோடைக் காலத்தில் அமெரிக்க பங்கு மார்க்கெட்டான வோல்ஸ்டீரிட் குறியீட்டு எண் உச்சகட்டத்திலிருந்தது. அதற்குப் பின்னர் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட இழப்பு 7 ரில்லியன் டாலராகும்.

1929-ல் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர், சென்ற ஆண்டு ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து 3 ஆண்டுகள் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்து கொண்டு வருகின்றன. வருட ஆரம்பத்தில் பங்கு விலைகள் குறியீட்டு எண் 10,000 ஆக இருந்தது. ஜூலை மாதம் Dow Jones குறியீடு 7,000ஆக இருந்தது. மீண்டும் அக்டோபரில் அதே அளவிற்கே நீடித்தது. Dow Jones குறியீட்டு எண் ஒரே ஆண்டில் 16.6 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இது 1977-ம் ஆண்டிற்குப் பின் ஏற்பபட்ட மிக மோசமான வீழ்ச்சியாகும். சென்ற மாதம் பங்கு விலைகள் 6 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இது 1931 டிசம்பருக்குப் பின்னர், நிகழ்ந்துள்ள மிக மோசமான டிசம்பர் வீழ்ச்சியாகும். விரிவான அடிப்படையில் அமைந்த Standard & Poor's பங்குகள் புள்ளி 23 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. NASDAQ புள்ளி 33 சதிவீதம் வீழ்ச்சி கண்டது. 2000-க்கு பின்னர் பங்குகள் மதிப்பு முக்கால் பங்கு வீழ்ச்சியடைந்துவிட்டது.

இத்தகைய மகத்தான, பெரும் இழப்புகள் பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத இழப்புக்களை உருவாக்கிவிட்டன. கம்பெனிகள் கடன் பாக்கி கொடுக்க முடியாமல் மூடப்படுவதும், தனி நபர்கள் திவால் ஆவதும், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அமெரிக்க கம்பெனிகள், பங்கு பத்திரங்களுக்குப் பணம் திருப்பித் தரமுடியாமல் போன அளவு 2001-2002-ல் அதற்கு முந்திய 20 ஆண்டுகளிலும் நடைபெற்ற இதுபோன்ற கடன் நிலுவை சிக்கல்களையும் சேர்த்தால் எந்த அளவு வருமோ, அதற்கு மேலாக அதிகரித்துள்ளது. கம்பெனி முதலீடுகள் முழுமையாக வற்றிவிட்டன என்றே கூறவேண்டும். இது என்ரோன், வேர்ல்ட் காம், குளோபல் கிராசிங், டைக்கோ - (Enron, WorldCom, Global Crossing, Tyco) முதலிய பல்வேறு கம்பெனிகள் தொடர்பான மோசடிகளை தொடர்ந்து ஏற்பட்ட பங்கு சந்தை வீழ்ச்சியைத் தொடர்ந்து அமெரிக்க வர்த்தகம், மற்றும் முதலாளித்துவ அமைப்பின்மீது, பொதுமக்களது நம்பிக்கை இதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு நசுக்கிவிட்டது. இது 1929க்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான நிலையாகும்.

புஷ் நிர்வாகம், பொருளாதாரம் மறுமலர்ச்சிப் பாதையில் செல்வதாகக் கூறிக்கொண்டாலும், பொருளதார மந்த நிலைக்கு அமெரிக்கப் பொருளாதாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வேலை இல்லாத்திண்டாட்டம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதம் நுகர்வோர் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துவிட்டது. கிறிஸ்மஸ் பருவத்தில், சில்லறை விற்பனை, அளவு, கடந்த 30 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துவிட்டது. இதில் மிகப் பெரும் அளவிற்குப் பாதிக்கப்பட்டிருப்பது, உழைக்கும் வர்க்க நுகர்வோருக்குக் குறைந்த விலையில் பொருள்களை விற்கும், சில்லறை விற்பனைக் கடைதான்.

உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்க்கைத்தரம் சீர்குலைந்துகொண்டு வருகிறது. ஏறத்தாழ ஒவ்வொரு மாநில அரசும், சமூகச் சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளைப் பெருமளவில் குறைப்பதற்குத் திட்டமிட்டு வருகின்றன. வேலை இல்லாத்திண்டாட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. வறுமை அதிகரித்துக்கொண்டுள்ள நிலையில் சமூகப் பணிகளின் தேவை பெருகும்போது அவை வெட்டப்பட்டு வருகின்றன. 8 லட்சம் வேலை கிடைக்காத தொழிலாளருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகைகளை புஷ் நிர்வாகம் வெட்டிவிட்டது. நாடாளுமன்றத்தில், குடியரசுக்கட்சி உறுப்பினர்கள், ஜனநாயகக் கட்சியினரின் வாயளவிலான எதிர்ப்பின் மத்தியில் சமூக நல உதவிகள் திட்டத்தைத் தடுத்துவிட்டனர்.

அமெரிக்க முதலாளித்துவத்தின் சர்வதேச நிலைமை பாரிய அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்க, நாணய சந்தைகளில் முதலீடு செய்கின்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தங்களது சொத்துக்களின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டு வருவதைக் காண்கின்றன. பலர் அமெரிக்காவிலிருந்து முதலீடுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். இப்படி வெளிநாட்டவர் தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு வருவதால், அமெரிக்க வெளி வர்த்தகத்தில் துண்டு விழும் தொகை பகாசுரன் அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது ஆண்டிற்கு 500 பில்லியன் டாலர் அளவிற்குத் துண்டுவிழும் தொகையை, அமெரிக்கா ஈடுகட்ட இயலாது. இதன் விளைவாக அமெரிக்க டாலரின் நாணய மதிப்பின் ஸ்திரத்தன்மையே கேள்விக் குறியாகிவிட்டது. இதுவரை உலக வெளிச் செலாவணி முறையின் அடிப்படையாக டாலர் விளங்கியது. 2002-ம் ஆண்டில் யூரோவோடு ஒப்பிடுகையில் அமெரிக்க டாலரின் மதிப்பு 15.2 சதவீதமும், ''யென்'' (ஜப்பான் நாணயம்) உடன் மதிப்பிடும்போது 9.8 சதவீதமும், வீழ்ச்சியடைந்தது.

1930 களுக்குப் பின்னர் தற்போது முதல் தடவையாக உலகப் பொருளாதாரம், சர்வதேச அளவில் மந்த நிலையை நோக்கிச்சென்று கொண்டிருக்கின்றதுடன், விலைவாசிகள் வீழ்ச்சியடைந்துகொண்டிருப்பதுடன், சொத்து மதிப்புக்கள் வீழ்ச்சியடைவதுடன், கடன் வழங்கல் வற்றிவிட்டதுடன், உற்பத்தி குறைகிறதுடன், வர்த்தகம் குறைவதுடன், இலாப அமைப்பு முறை இயங்க முடியாத நிலைக்கு வந்துள்ளதற்கான சான்றுகள் அதிகரித்து வருகின்றன.

புஷ் நிர்வாகத்தின் வெளிநாட்டுக் கொள்கை, உள்நாட்டு நெருக்கடிகளைச் சமாளிப்பதை அடிப்படையாகக் கொண்டது. இது பொருளாதார நெருக்கடியும், வெடிக்கும் சமூக தன்மைகளையும் கொண்டுள்ளது. பொதுமக்களது கவனத்தைத் திசை திருப்பி, குழப்பம் செய்வதற்கு அமெரிக்க அரசு, ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளான பயங்கரவாதிகள் பற்றிய எச்சரிக்கைகள், இராணுவ-இராஜதந்திர நெருக்கடிகள் மற்றும் போர்களை உருவாக்கிக்கொண்டுள்ளது. இங்கும், அமெரிக்க முதலாளித்துவம், 1930ம் ஆண்டுகளில் நாஜி ஜேர்மனி சந்தித்த நிலைகளையே ஒப்பு நோக்கும் அளவிற்குச் சென்று கொண்டிருக்கிறது. பெருகிவரும் சமுதாய முரண்பாடுகளுக்கு ஒரே பதில் போர்தான் என்று ஹிட்லர் ஆட்சி முடிவு செய்தது. அதே வழியில் புஷ் நிர்வாகமும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

புஷ் நிர்வாகம் உள்நாட்டில் அடக்குமுறை, சர்வதேச அளவில் வன்முறை - பொய் பிரச்சாரம், மிரட்டல் ஆகியவற்றை கொண்ட சர்வதேச கோஷ்டி சண்டைக்காரன் (gangsterism) வடிவத்தை எடுத்துள்ளது. 2001-செப்டம்பர் 11-க்கு பின்னர், மத்திய அரசிடம், ஏராளமான போலீஸ் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருப்பது சாதாரண அமெரிக்கக் குடிமக்களை, பயங்கரவாதிகள் ஆபத்திலிருந்து காப்பதற்காக அல்ல. மாறாக அமெரிக்க உழைக்கும் வர்க்கம் இதற்கு முன்னர் பெற்ற நலன்களையும், வாழ்க்கைத் தரத்தையும் தாக்கித் தகர்த்து, உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளைப் பறிப்பதற்காகவே மத்திய அரசிடம் போலீஸ் அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

புதிய உள்நாட்டுப் பாதுகாப்பு இலாகா அமைக்க வகை செய்யும் சட்ட முன் வரைவு தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில், மத்திய அரசு ஊழியர்களின், தொழிற்சங்கம் அமைக்கம் உரிமையையும், சிவில் சேவை உரிமைகளையும் பறிக்க புஷ் நிர்வாகம், மேற்கொண்ட நடவடிக்கை தற்செயலாக நடந்துவிட்டதல்ல. ''தேசிய பாதுகாப்பு'', ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்ற போர்வையில், தொழிலாளர்களிடமிருந்து மேலும் தியாகங்களை எதிர்பார்ப்பதும், முதலாளிகளுக்கு எதிராகப் போராடுவதற்கான சட்டப்பூர்வ உரிமைகளைப் பறிப்பதும் புஷ் நிர்வாகத்தின் பிரதான நோக்கங்களாகும். தொழிலாளர் உரிமைகளை முதலாளிகள் பறிக்கும்போது அவர்களால் அதைத் தடுக்க முடியாத நிலையை புஷ் நிர்வாகம் உருவாக்கியுள்ளது. இதில் முக்கியமானது, புஷ் நிர்வாகம், யுனைட்டெட் ஏர்லைன்ஸ் (United Airlines) நிறுவனம் திவாலாக நிர்ப்பந்தம் கொடுத்ததாகும். இதன் மூலம் விமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள மிகப் பெரும் கம்பெனிகள், ஊழியர்களது ஊதிய விதிகங்களை பெருமளவிற்கு வெட்டுவதற்கும், படிகளைக் குறைப்பதற்கும், எல்லா சுகாதார பாதுகாப்பு, தொழில்துறைப் பாதுகாப்பு நடவடிக்கைளைக் கைவிடச் செல்வதும்தான், இன்றைய அமெரிக்க அரசின் நோக்கம். சுருக்கமாகச் சொல்வதென்றால், தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பது ஒன்றே குறிக்கோள். இதுதான் புதிய சட்டம் இயற்றப்பட்டதன் சிறப்பு.

ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம்

நடைபெறவிருக்கும் ஈராக் போரின் விளைவாக, பொருளாதார அடிப்படையில் பெரும் அவிலான செலவினங்கள் அதிகரிக்கும். இது அமெரிக்க முதலாளித்துவத்தின் உள்நாட்டு பொருளாதாரப் பிரச்சனைகள் அதிகரிக்க செய்வதுடன், உள்நாட்டில் சமுதாய நெருக்கடிகள் தீவிரமடைய செய்யும். இதன் விளைவாக, உழைக்கும் வர்க்கத்தின் மீதான தாக்குதல் போக்குகள் பெருகும். உழைக்கும் வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளும், அதன் சமுதாய நலன்களும் பாதிக்கப்படுகின்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். போரின் விளைவாக, வேலை வாய்ப்புகள், சுகாதாரச் சேவைகள், ஓய்வு ஊதியங்கள், கல்வி, வீட்டு வசதி போன்ற தொழிலாளர் உரிமைகள் மேலும் தாக்குதலுக்கு உள்ளாகும்.

அமெரிக்காவின் ஆளும் வர்க்கம், நாட்டை தவிர்க்கவே முடியாத பேரழிவிற்குள்ளாக்கும் கொள்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. நிதியை ஆதிக்கம் செலுத்தும் வர்க்கம், தனிப்பட்ட முறையில் செல்வம் குவிவதை நோக்கி ஈடுபட்டிருக்கும் நடவடிக்கைகள் மிகப்பெரும் சமுதாய சக்திகளைக் கட்டுப்படுத்த முடியாதளவில் கிளப்பிவிடும். போர் மிகவும் ஆபத்தான அரசாங்கக் கொள்கை என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும். இதனால் உருவாக்கப்படும் விளைவுகள் முற்றிலும் எதிர்பாராதாக இருக்கும். வாஷிங்டன் தலைதெறிக்கும் வேகத்தில் போரில் ஈடுபடுவது, உலகம் முழுவதிலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கிளர்ச்சிகளுக்கு எண்ணெய் ஊற்றுவதுடன், அமெரிக்காவிற்குள் சமூக கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் உருவாகும்.

வறுமையில் உள்ளதும், வஞ்சிக்கப்பட்டதுமான ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் வெறுப்புணர்வையும், கிளர்ச்சியையும் உருவாக்கும். அமெரிக்கா கட்டவிழ்த்துவிட உத்தேசித்துள்ள காட்டுமிராண்டித்தனத்தை ஏற்றுக்கொள்கின்ற மக்கள் கூட்டம் அமெரிக்காவில் இல்லை.

ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் ஏற்கனவே, ஏகாதிபத்திய - எதிர்ப்பு கிளர்ச்சி அலைகள் உருவாகியுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போர் புரிய விரும்புவார்கள் வாஷிங்டனுக்கு எதிரான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் பற்றிய மனப் பிரமை எதுவும் கொண்டிருக்கத் தேவையில்லை. பொதுமக்களிடையே போருக்கு எதிரான உணர்வுகளாலும், போரின் விளைவுகள் தொடர்பாக அவர்களது அச்சத்தினாலும், ஐரோப்பிய அல்லது ஜப்பானிய முதலாளித்துவம் வாஷிங்டனின் கொள்கைக்கு எதிராக எவ்விதமான எதிர்நடவடிக்கைகளை எடுக்க முடியாது. கைலஞ்சம் அல்லது மிரட்டல் மூலம் ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திக்கு ஆதரவாக அவர்கள் அணிவகுத்து நிற்பார்கள்.

ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையில், அமெரிக்க இப்போது முன்னிலை வகிப்பது, உலக முதலாளித்துவத்தின் அடிப்படையான முரண்பாடுகளின் விஷேடமான வெளிப்படாகும். 20ம் நூற்றாண்டில் இரண்டு முறை இத்தகைய முரண்பாடுகள் உலகப் போராக வெடித்தன. இரண்டாம் உலகப் போரிலிருந்து, அமெரிக்கா, பிரதான ஆதிக்கம் செலுத்தும் வல்லரசாக உருவாயிற்று. ஆனால், அமெரிக்காவின் ஆதிக்க வீச்சு, சோவியத் யூனியன், சீனப் புரட்சி, வெகுஜனக் கிளர்ச்சிகளால் உருவான ஐரோப்பிய காலனித்துவ சாம்ராஜியங்கள் வீழ்ச்சியால் கட்டப்படுத்தப்பட்டது. 1991-ல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதானது, அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கான தடையை நீங்கியது. இது புதிய ஏகாதிபத்திய வன்முறைகள் வெடித்து உருவாகுவதற்கு வழியமைத்தது.

முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்குவோர், கெடுபிடிப்போர் முடிந்ததோடு, ''வரலாறே முடிவிற்கு'' வந்துவிட்டது என்று போற்றிப் புகழ்கையில், தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் திடீரென வெடித்துக் கிளம்புவது, இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் உருவான உடன்பாடுகள் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியைப் தீர்க்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இந் நெருக்கடிக்கான காரணம், மிகப் பெரும் அளவிற்கு அபிவிருத்தியடைந்த, ஒருங்கிணைக்கப்பட்ட உலகப் பொருளாதாரத்திற்கும், இலாப நோக்கை அடித்தளமாக கொண்ட தேசிய அரசுகளின் பொருளாதார முறைக்கும் இடையிலுள்ள அடிப்படையிலான முரண்பாடுகளாகும்.

20ம் நூற்றாண்டில் போர்களுக்கும், புரட்சிகளுக்கும் வித்திட்ட, முரண்பாடுகள் தற்போது புதியதொரு எழுச்சிக்கான நிலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. உலகையே ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சி சர்வதேசரீதியாக புதிய புரட்சிகர நெருக்கடிகளுக்கு கட்டியம் கூறிக்கொண்டிருக்கின்றது. இந்த நெருக்கடியின் இறுதி முடிவு, மனித இனம் காட்டுமிராண்டிதனத்தை நோக்கி செல்லும் அல்லது சோசலிச சமுதாயத்தை நோக்கி நடைபோடும்.

ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான அடித்தளமான சமூக சக்தி, உழைக்கும் வர்க்கம்தான். இராணுவமயத்திற்கு எதிரான போராட்டம் சர்வதேச அளவில் இந்த உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதை அடித்தளமாக கொள்ளவேண்டும்.

எதிர்வரும் ஆண்டில் எம்முன் உள்ள அறைகூவல், சர்வதேசரீதியான போருக்கு எதிரான இயக்கத்திற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான சக்தியாக அணிதிரட்டகூடிய ஒரு முன்னோக்கை வழங்குவதாகும். புஷ், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், கடைப்பிடித்து வரும், சூறையாடல் கொள்கைகளுக்கு ஏற்கனவே எதிர்ப்பு வளர்ந்து வருகின்றது. புஷ் பொதுமக்களிடையே செல்வாக்குப் பெற்றிருக்கிறார் என்பது குறித்த ஊடகங்களினது மதிப்பீடு தவறானதும், அவமரியாதையானதுமாகும். புஷ் - பொதுமக்களின் ஆதரவை பெற்றுள்ளார் என்று கூறுவது திரித்து வெளியிடப்படும் புள்ளி விவரம் மட்டுமல்லாது, ஜனநாயகக் கட்சியிலிருந்தும், ஏனைய உத்தியோகபூர்வமான அரசியல் அமைப்பிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு இல்லாததாலாகும்.

ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் கூட, ஜனநாயகக் கட்சியிடம் இருந்து எவ்விதமான எதிர்ப்பு இல்லாதபோதும்கூட, ஈராக்கிற்கு எதிரான போருக்கு மக்களது எதிர்ப்பு வளர்ந்து வருவதைக் காட்டுகிறது. மக்களது எதிர்ப்புணர்வு வளர்ந்து வருகிறது. அமெரிக்க இராணுவ வீரர் எவரும் கொல்லப்படாவிட்டால் கூட ஈராக் மீது, ஒருதலைப்பட்சமாக தாக்குதல் நடத்துவதை பெரும்பாலான மக்கள் எதிப்பதாக அண்மையில் மக்கள் கருத்துக்கணிப்பு ஒன்று தெளிவுப்படுத்துகிறது.

புஷ் நிர்வாகத்தின் ''கொள்ளையடிக்கும்'' கொள்கைகளை எதிர்ப்பதில் அமெரிக்க உழைக்கும் வர்க்கத்திற்கு மகத்தான பொறுப்பு உண்டு. தங்களது பெயரால் போர்க் குற்றங்கள் இழைக்கப்படுவதை அமெரிக்க மக்கள் அனுமதிக்கக்கூடாது.

புஷ் மேற்கொண்டுள்ள போர் திட்டத்திற்கும், உள்நாட்டு பிற்போக்குக் கொள்கைக்கும் மாற்று முன்னோக்கை உருவாக்க விரும்புகின்ற அமெரிக்க உழைக்கும் வர்க்கம், தாராளவாத கொள்கைகளின் வீழ்ச்சி, மற்றும் முதலாளித்துவ அடிப்படையிலான இரண்டு பெரும் கட்சிகளின் தீவிர வலதுசாரி திருப்பத்தில் இருந்தும் தகுந்த படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இரண்டு கட்சி என்ற முறையை இல்லாதொழிக்க வேண்டும். முதலாளித்துவத்திற்கு மாற்றாக சோசலிச மாற்றீட்டை முன்வைக்கும் ஒரு சுயாதீனமான தொழிலாளர் இயக்கம் ஒன்றை உருவாக்கியாக வேண்டும்.

அடுத்த மாதம், உலக சோசலிச வலைத்தளத்தின் 5வது ஆண்டு நிறைவை குறிக்கின்றது. உலகம் முழுவதிலும் இயங்கும் சோசலிச சமத்துவக் கட்சிகள், மற்றும் நான்காவது அகிலத்தின் சர்வதேச குழுவின் அரசியல் அமைப்பாக இந்த வலைத் தளம் செயல்பட்டு வருகின்றது. 5வது ஆண்டைப் பூர்த்தி செய்யும் எல்லைக் கல்லை நாம் எட்டும்போது, அமெரிக்க இராணுவமயம், உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சர்வதேச உழைக்கும் வர்க்கத்தின் சுயாதீனமான சோசலிச இயக்கத்தை உருவாகுவதற்காக மத்திய அரசியல் நிலையமாக உலக சோசலிச வலைத் தளத்தை மாற்றுவதற்கான முயற்சிகளை தீவிரமாக்க நாம் உறுதியெடுத்துள்ளோம்.

சர்வதேச அளவில் உருவாகும் இச்சோசலிச இயக்கம், முதலாளித்துவ முறையைப் பகிரங்கமாக தெளிவாக எதிர்த்து நிற்கவேண்டும். முதலாவதாக ஏகாதிபத்திய யுத்த எதிர்ப்பினை, ஆளும் வர்க்கத்திடமிருந்து செல்வத்தை, உழைக்கும் வர்க்கத்திற்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படுவதுடன் இணைக்க வேண்டும். இதற்கு தற்போது செல்வம் குவிந்துள்ள, விஷேட தனிஉரிமைகளுக்கு எதிராகவும், பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் சொத்துக்கள் கைப்பற்றுவதற்குமான பெரும் கிளர்ச்சி ஆரம்பிக்கப்படவேண்டும். அத்துடன் அவை சமுக நிறுவனங்களாக மாற்றப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் விஞ்ஞானபூர்வமாக திட்டமிடப்பட்டு இந்நிறுவனங்கள் செயல்படுத்தப்படவேண்டும்.

அத்தகைய இயக்கம் உருவாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதை உலக சோசலிச வலைத்தளத்தின் வாசகர் எண்ணிக்கை பெருகிக்கொண்டு வருவது எடுத்துக்காட்டுகின்றது. உலக சோசலிச வலைத்தளம் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைச் சென்றடைவதுடன், இது பலமொழிகளில் வெளியிடப்படுவதுடன், பல நாடுகளிலும், ஒவ்வொரு கண்டத்திலும் ஆதரவாளர்களையும், கடிதத் தொடர்புகள் கொள்வோரையும் பெற்றுள்ளதுடன், எம்முடைய வாசகர்களும், ஆதரவாளர்களும், உலக சோசலிச வலைத் தளத்தின் ஆளுமையை அதிகரிப்பற்காக எமது விமர்சனங்களையும், அறிக்கைகளை பரப்புவதுடன் மற்றும் தங்களது கட்டுரைகள் மூலம் பங்களிக்குமாறு வேண்டுகின்றோம்.

எங்கள் வலைத் தளத்தைத் தொடர்புகொண்டு எங்களது இயக்கத்தில் சேர்ந்து, அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியையும், உலகம் முழுவதிலும் நான்காம் அகிலத்தின் சர்வதேசக் குழுவின் பிரிவுகளை கட்டியமைப்பதிலும் பங்குகொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved