World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The strange affair of the Yemeni Scud missiles

யெமன் நாட்டு ஸ்கட் ராக்கெட்டுகள் தொடர்பான வியத்தகு விவகாரம்

By Peter Symonds
14 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

"பேரழிவிற்கான ஆயுதங்கள்" தொடர்பாக அமெரிக்கா தனது ஆவேச உரைகளை முடுக்கிவிட்டு, ஈராக்கிற்கு எதிரான போருக்கு சாக்குப்போக்குளைத் தேடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த வாரம், அரபிக் கடலில், தனித்தன்மைகள் கொண்ட ஒரு சிறப்பு சம்பவம் நடந்திருக்கிறது.

பயங்கரவாதிகளது நடவடிக்கைகளுக்கு எதிரான அமெரிக்க கடற்படைப் பிரிவின் அங்கமாகச் செயல்பட்டு வரும் ஸ்பெயின் நாட்டின் இரண்டு போர்க் கப்பல்கள், வடகொரியாவின் சரக்குக் கப்பலான சோ-சன் (So San), மத்திய கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்ததை சர்வதேச கடற்பரப்பு எல்லையில் இடை மறித்தது. அந்தக் கப்பல், ஹோர்ன்ஸ் ஃஆப் ஆபிரிக்காவிலிருந்து (Horn of Africa) 1000 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று கொண்டிருந்தது, கப்பலின் கொடி ஏற்றப்படவில்லை, கப்பல் கம்பெனி பெயருக்கு மேல் வண்ணம் பூசி மறைக்கப்பட்டிருந்தது எனவும் நிறுத்துமாறு சமிக்ஞை (சைகை) காட்டப்பட்டும் கப்பல் நிறுத்தப்படவில்லை என ஸ்பெயின் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்பெயின் நாட்டு யுத்தக் கப்பலான நவரா 3 முறை அந்தக் கப்பலை நோக்கி எச்சரிக்கை சரவெடிக்குண்டுகளை வீசியது. அந்தக் கப்பல் மேல்தட்டில் போடப்பட்டிருந்த கேபிள்கள் துண்டிக்கப்பட்டன. ஒரு ஹெலிகாப்டர் அந்தக் கப்லின் மேலே சுற்றிவந்தது. அதிலிருந்த ஆயுதந்தாங்கிய கப்பற்படை வீரர்கள் இறங்கி அந்தக் கப்பலை கைப்பறினர். சோதனையிட்ட வேளையில் சிமெண்ட் பைகளுக்குக் கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த நடுத்தரமான தூர இலக்குக்கொண்டு தாக்கும் 15 ஸ்கட் ரக ராக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுடன், உயர் திறனுடைய ராக்கட்டின் தலைப்பாகமும் பீப்பாய்களில் எரிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அருகாமையில் நின்ற அமெரிக்க போர்க்கப்பலிலிருந்து அமெரிக்க ராணுவ நிபுணர்களை ஸ்பெயின் அதிகாரிகள் வரவழைத்து வெடிமருந்துகளை அவர்கள் சோதிப்பதற்காக, கப்பல் அமெரிக்கக் கப்பற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவங்ககான, ஸ்பெயின் நாட்டு ஸ்னைப்பர்கள், கப்பலில் இறங்கிய கடற்படை வீரர்கள் சிமெண்ட் பைகளுக்குக் கீழே புதைத்துவைக்கப்பட்ட ராக்கெட்டுகள் முதலிய அனைத்துமே படம் பிடிக்கப்பட்டன. மீடியாக்களுக்கு தருவதற்கு ஏற்ப அந்த ஏற்பாடு செய்யப்பட்டது. சில மணி நேரத்திற்குள், வாஷிங்டனில் அந்தச் செய்தி பத்திரிக்கைகளுக்குத் தரப்பட்டது.

ஆரம்பத்தில் பத்திரிகைகள் மிகுந்த கவனத்தோடுதான் செய்திகளை வெளியிட்டன என்றாலும், திட்டவட்டமான திசை வழியில் அவை சென்று கொண்டிருந்தன. எங்கு ராக்கெட்டுகள் செல்கின்றன என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை என்றும் அந்தக் கப்பல் ஈராக்கை நோக்கிச் செல்லவில்லை என்றும் தோன்றுவதாக பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். "சிலர் ஈராக்கிற்குச் சம்மந்தம் இல்லை, மற்றவர்கள் ஈராக்கைத் தள்ளிவிட விரும்பவில்லை. யெமனிடம் ஸ்கட் ராக்கெட்டுகள் உள்ளன. உண்மையில் எங்களுக்கு அது (ராக்கெட்) எங்கு செல்கிறது என தற்போது திட்டவட்டமாகத் தெரியாது" என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி நியூயோர்க் டைம்ஸ் ற்குத் தெரிவித்தார்.

புஷ் நிர்வாகம், ஈராக்குடன் போர் துவக்குவதற்கான அடிப்படையை நிலைநாட்டுவதற்கு மிகக் கடுமையாக துடித்துக் கொண்டிருக்கிறது. "ஈராக், ராக்கெட் வாங்கிய நாடாக இருக்குமானால், ஐ.நா. தீர்மானங்களின்படி, கப்பலைக் கைப்பற்றியது சட்டப்பூர்வமான நடவடிக்கையாக அமைந்திருக்கும். அத்துடன், ஐ.நா. தீர்மானங்களுக்கு விரோதமாக ஈராக் செயல்பட்டது என்று நிரூபிக்கப்பட்டிருக்கும். அமெரிக்காவிற்கு போருக்கான அடிப்படைகளை ராக்கெட்டுகள் தந்திருக்கும்" என்று நியூயோர்க் டைம்ஸ் கருத்துரைத்தது.

ஆனால், எல்லா விவகாரங்களும், மிக விரைவில் திசை தடுமாறிவிட்டது. அந்த ராக்கெட்டுகள் தன்னுடையவை என்று யெமன் சொந்தம் கொண்டாடியது. புதன்கிழமையன்று சம்பிரதாய முறையில் யெமன், வாஷிங்டனுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்தது. கப்பலை விடுவிக்கக் கோரியது. ராக்கெட்டுகள் வாங்கப்பட்டது சட்டப்பூர்வமான நடவடிக்கைதான். தற்காப்பு நோக்கத்திற்காக யெமன் இராணுவத்திற்காகத்தான் அந்த ராக்கெட்டுகள் தருவிக்கப்பட்டன என்று யெமன் வலியுறுத்தியது. அமெரிக்க உதவி ஜனாதிபதி ரிச்சட் செனி, யெமன் அதிபர் அலி அப்துல்லா சாலிஹ் ஆகியோருக்கிடையில் தொலைபேசித் தொடர்புகள் பரப்பரப்பாக நடைபெற்றன. வாஷிங்டன் வேண்டா வெறுப்பாக, யெமனின் கோரிக்கையை ஏற்க முடிவு செய்தது.

வெள்ளை மாளிகை திருப்தியடையவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. புஷ், "மிக மிக மகிழ்ச்சி அற்ற ஒரு மனிதராகவே" காணப்பட்டதாக ஒரு மூத்த அதிகாரி நியூயோர்க் டைம்சிற்கு த் தெரிவித்தார். சரக்குக் கப்பல் தனிவழியில் செல்லட்டும் என்ற அனுமதிக்குப் பின்னர், இவ்வாறு புஷ் காணப்பட்டாராம். ஆனால் அதற்கு மாற்று என்ன? ஒரு மத்திய கிழக்கு ஆட்சியைப் பகைத்துக்கொள்ள வேண்டும். அந்த நிர்வாகம், அல் காய்தா தீவிரவாதிகளைக் கண்டுபிடிப்பதில் அமெரிக்க இராணுவத்திற்கு யெமன் உதவியது. அமெரிக்கா ஈராக் மீது படை எடுக்க முடிவு செய்யுமானால், மறைமுகமாக வேனும் அந்நாட்டு ஆதரவு தேவை. வாஷிங்டனுக்கு அவமரியாதை ஏற்படாது தடுக்கும் வகையில் யெமன் மேலும் ராக்கெட்டுகளை வாங்குவதில்லை என்றும் தற்போது வாங்கப்பட்டுள்ள ராக்கெட்டுகள் இராணுவத்தின் பொறுப்பிலேயே இருக்கும் என்றும் உத்திரவாதம் அளித்துள்ளது.

இந்த விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர், வெள்ளை மாளிகை அதிகாரி அரி ஃபிளைசராகும் (Ari Fleischer), முரண்பாடுகளை உள்ளடக்கிய ஒரு செய்தி வளரும்போது இடையில் அவர் தடுமாறிவிட்டார். அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் கப்பல் செல்லும் பாதையை சரியாக கண்டுபிடித்தனர், ஆனால் புஷ் நிர்வாகத்திற்கு அந்த கப்பல் எந்த நாட்டிற்கு செல்கிறது என்பது தெரியாது என்பதாக, வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார். "ஒரு பயங்கரவாத நாட்டிற்கு, பயங்கரவாதத்தை தூண்டிவிடும் வல்லமையுள்ள நாட்டிற்கு அந்த கப்பல் பயணம் செய்துகொண்டிருக்கக்கூடும்" என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார். அந்த அதிகாரி குறிப்பிடும் நாடு ஈராக்தானா? என்று நிரூபர்கள் கேட்டனர். அதற்கு அந்த அதிகாரி, "அந்தக் கப்பல் சென்று சேரும் நாடு, எதுவாகயிருக்கும் என்பதில் நாங்கள் மிகுந்த கவலையோடு இருந்தோம்" என்று குறிப்பிட்டார்.

அப்படியிருக்கும்போது, இராஜதந்திர தொடர்பு மார்க்கத்தை விட்டுவிட்டு இராணுவ வழியை பின்பற்றி அந்தக் கப்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்? என்று நிருபர்கள் வினாவினர். அப்போது ஃபிளைசர், "நேற்றுவரை எந்த நாட்டோடு பேசவேண்டும்? எந்த நாட்டிற்கு செல்கிறது, என்பது எங்களுக்கு தெரியாது. யெமனுக்கு செல்வதாக இல்லாத கப்பலாக இருக்கலாம். ஆனால், கடைசியில் அது யெமனுக்கு செல்வதாக தெரிந்தது. உடனடியாக யெமனுடன் தொடர்பு கொண்டோம்" என பதிலளித்தார்.

அந்தக் கப்பல் இடைமறிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் டிசம்பர்-2-ந்தேதி வலதுசாரி வாஷிங்டன் டைம்ஸ் நாளேடு, "வடகொரியா கப்பல்கள், எரிபொருள், ராக்கெட்டுகளை யெமனுக்கு ஏற்றிச் செல்லுகின்றன" என தலைப்பிட்டு ஓர் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்தியில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளது கருத்து மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. வடகொரியாவின் நாம்போ துறைமுகத்திலிருந்து அந்தக் கப்பல் புறப்பட்டதிலிருந்து அது யெமன் நாட்டிற்கு செல்லுகின்றது என்பதையும் அந்தக் கப்பலில் ராக்கெட் உதிரி பாகங்கள் மற்றும் எரிபொருள் உட்பட இராணுவ பொருட்கள் செல்லுகின்றன என்றும், தகவல் அறிந்ததாக அந்தப் பத்திரிகை எழுதியிருந்தது.

இந்த வாரம் வோல் ஸ்ரீட் ஜேர்னல் பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. "சென்ற நவம்பர் இறுதி வாக்கில் யெமன் நாடு, ராக்கெட்டுகளை வாங்குகின்றது என்பது அமெரிக்காவிற்கு திட்டவட்டமாக தெரியும். ஏனெனில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் வடகொரியாவிற்கு யெமன் பலகோடி டாலர்களை செலுத்தியிருப்பதை கண்டுபிடித்தார்கள்". ேவாஷிங்டன் டைம்ஸ் கட்டுரை வெளியானதும், அதைப் பற்றி அஞ்சிய அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள், யெமன் அரசிற்கு, எச்சரிக்கை செய்துவிட்டன. இதில் யெமன் அரசு தனது பங்கு எதுவுமில்லை என மறுத்துவிட வேண்டுமென்று ஏற்பாடு செய்யப்பட்டது.

"அப்போது அமெரிக்காவின் முடிவு என்னவென்றால், யெமன் நாட்டு கண்டனம் எதுவுமில்லாமல், ராக்கெட்டுகளை கைப்பற்றி விடமுடியும் என்பதாகும், கப்பலை நிறுத்தி பயங்கரவாதத்தின் மீதான போரில் தனது கேந்திர நட்பு நாட்டுடன் பகிரங்கமாக மோதல் நடப்பதை தவிர்ப்பது" என வோல் ஸ்ரீட் ஜேர்னல் எழுதியிருந்தது. இதில் வெள்ளை மாளிகைக்கு, பிரச்சனை என்னவென்றால், இந்த மறைமுக ஏற்பாட்டை யெமன் மீறிவிட்டது. ராக்கெட்டுகளை தான் வாங்கியதாகவும், எனவே அந்தக்கப்பலை விட்டுவிட வேண்டுமென்றும் பகிரங்கமாக யெமன் அறிவித்துவிட்டது.

ஏற்கனவே திட்டமிட்டபடி யெமன், செயல்பட்டிருக்குமானால் வாஷிங்டன் தான் தேர்ந்தெடுக்கின்ற எந்த நாட்டின் மீதும் குற்றம்சாட்ட முடியும். அப்படி ஏற்கனவே குற்றம்சாட்டவும் தொடங்கிவிட்டது. "நிர்வாகத்தில் உள்ள சில கழுகுகள் புதன்கிழமையன்று ஈராக் அந்த ராக்கெட்டுகளை வாங்கியிருக்கலாம் என்று கோடிட்டு காட்டினர். ஆனால், நிர்வாக அதிகாரி எவரும் அந்த கருத்தை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை" என்று வோல் ஸ்ரீட் ஜேர்னல் எழுதியது.

இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள், தோல்வியடைந்ததும் வெள்ளை மாளிகை அவசர அவசரமாக தனக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிகட்ட துவங்கியது. ஸ்பெயின் நாட்டு இராணுவ அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தங்களது ஆத்திரத்தை ஊடகங்களில் வெளியிடத்தொடங்கியதும் அந் நாட்டிற்கு வருத்தம் தெரிவிக்கும் தகவல் அனுப்பப்பட்டது. வட கொரிய சோ-சன் (So San) கப்பலில் அவர்கள் ஏறியது தொடர்பாக, சரியான விளக்கம் கொடுக்கவேண்டும் என்பதற்காக அந்த கப்பலில் கொடி இல்லை எனவே, "நாடற்றது" என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச ஊடகங்கள் புஷ் நிர்வாகத்தை மிகவும் சிக்கலான தோல்வியில் இருந்து காப்பாற்ற தங்களது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டன. மிகவும் பரபரப்பூட்டும் முதல்பக்க செய்திகள், புகைப்படங்கள், மற்றும் தொலைக்காட்சி செய்திகள் உடனடியாக உள்பக்கங்களுக்கு மற்றும் டி.வி. செய்தி அறிக்கைகளும் கடைசி பகுதிக்கு சென்றுவிட்டன. ஈராக் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற தகவலை மாற்றிவிட்டு, ராக்கெட் விற்பனையில் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று கூறி வடகொரியாவையும் கண்டித்து ஊடகங்கள் செய்திகளை தந்தன. தற்போது இது பற்றிய செய்திகள் எதுவுமே ஊடகங்களில் இடம்பெறவில்லை.

ஈராக்குடன் போர் தொடுப்பதற்கு ஏதாவது ஒரு சாக்குப்போக்கு தேடுவதற்கு மிக தீவிரமாக அமெரிக்க நிர்வாகம் முயன்று வருகின்றது. அதற்கு கப்பல் கடத்தல் போன்ற வழிமுறைகளையும் பின்பற்ற விரும்புகின்றது என்பது தெளிவாகின்றது. சோ-சன் கப்பல் தொடர்பான சம்பவம், வாஷிங்டனில் உருவாக்கப்பட்ட ஒரு சதித்திட்டம். இதுவே கடைசி சதித்திட்டம் அல்ல.

See also :

தனது போர் முயற்சியை, துரிதப்படுத்துவதற்கு அமெரிக்கா, ஈராக்கின் ஐ.நா. தஸ்தாவேஜிகளை பறிமுதல் செய்தது.

ஈராக் விஞ்ஞானிகளை கடத்துமாறு ஆயுத ஆய்வாளர்களை அமெரிக்கா கோருகின்றது.

ஈராக் மீது பிரிட்டனின் ஆய்வு அறிக்கை: மனித உரிமைகளை சாட்டாக்கி போருக்கு ஆயத்தம்

Top of page