தென்
அமெரிக்கா
Venezuela: Is the CIA preparing another coup?
வெனிசூலா:
இன்னொரு ஆட்சிக் கவிழ்ப்புக்கு சீ.ஐ.ஏ ஆயத்தம் செய்து வருகிறதா?
By Bill Vann
11 December 2002
Back
to screen version
வெனிசூலா முதலாளிகள் ஏற்பாடு செய்த ''வேலை நிறுத்தம்'' தற்போது இரண்டாவது
வாரத்தில் அடி எடுத்து வைக்கிறது. தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் அமெரிக்க உளவு நிறுவனங்களது ஒத்துழைப்புடன்
அரசியல் குழப்பம் விளைவிக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதற்குத் தெளிவான அடையாளங்கள் தென்படுகின்றன.
சென்ற ஏப்ரல் மாதம், வெனிசூலா ஜனாதிபதி ஹியூகோ சாவேயை, அமெரிக்க ஆதரவு
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் மூலம் அசைக்க முடியவில்லை. வெனிசூலா ஆளும் வட்டாரங்கள் வாஷிங்டனுடன் இணைந்து, அவரை
தற்போது ராஜினாமாச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கிறார்கள் அல்லது இராணுவத்தின் மூலம் புதிதாக ஆட்சியைப் பிடிக்க
முயலுகிறார்கள்.
அமெரிக்கச் சந்தைக்கு, இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களை வழங்கும்
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரமாக வெனிசூலா விளங்குவதால், வெனிசூலாவில் அமெரிக்கா, நேரடியாகத் தலையிடுவதற்கான
மிரட்டலை தள்ளிவிட முடியாது.
''இந்த வேலை நிறுத்தம்'' உண்மையில் முதலாளிகள் மேற்கொண்டுள்ள கதவடைப்புத்தான்.
டிசம்பர் 2 ம் திகதி ''வேலை நிறுத்தம்'' தொடங்கியது. வெனிசூலாவின் பெரு வர்த்தக அமைப்பான ஃபெடிகாமராஸ்
(FEDECAMARAS)
மற்றும் CTV
அல்லது வெனிசூலா தொழிலாளர் சம்மேளனம், ஆகிய இரண்டும் கூட்டாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன. இந்த ஊழல்
மிக்க தொழிலாளர் அதிகாரத்துவ அமைப்பு அமெரிக்காவின்
ஏ.ஃஎப்.எல் - சி.ஐ.ஓ
(AFL-CIO) வோடு
நெருக்கமாக உள்ளதுடன், CTV
தேசிய ஜனநாயக அறக்கட்டளையிலிருந்து, கணிசமான அளவிற்கு நிதியுதவிகளையும் பெற்று வருகின்றது.
C.I.A. (மத்திய புலனாய்வு
நிறுவனம்) நேரடியாக இதற்கு முன்னர் நிதி உதவிகளை வழங்கி வந்ததற்குப் பதிலாக உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின்
ஏஜென்சிதான் இந்த அறக்கட்டளையாகும்.
முதலாளிகளும் CTV
வியும் கூட்டாக இணைந்து இயங்குவது தெளிவாகத் தெரிய வந்தது. ஏற்பாடு செய்யப்பட்ட
ஆர்பாட்டக்காரர்கள் - மோட்டார் சைக்கிள்களில் வந்த குண்டர்கள் துணையோடு கடைவடைப்புக்களை செய்வதற்கு நிர்பந்தம்
செய்தனர். தொழிலாள வர்க்கம் வாழும் பகுதிகளிலும் மற்றும் தலைநகரைச் சுற்றியுள்ள ஏழைகள் நிறைந்த மோசமான
குன்று நகர்ப் பகுதிகளிலும் தினசரி அலுவல்கள் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் நடைபெற்று வருகின்றன.
புறநகர்ப் பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான ஆர்பாட்டக்காரர்கள் தலைநகரில் குவிந்தனர்.
சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டமானது ''ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காப்பதற்காக''
அரசின் ஆதரவாளர்களால் அழைப்புவிடுத்து திரட்டப்பட்டதாகும். இது
FEDECAMARAS-CTV
இணைந்து ஏற்பாடு செய்ததற்கும் பார்க்க அதிகமான அளவிற்கு ஆர்பாட்டக்காரர்கள் அங்கு திரண்டனர்.
26 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வெனிசூலாவில் 80 சதவீதம் பேர், வறுமையில்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவேதான், முதலாளிகள், பெரு வர்த்தகர்கள் ஏற்பாடு செய்துள்ள ''வேலை
நிறுத்தத்திற்கு'' பொதுமக்களைத் திரட்டும் முயற்சி தோல்வியடைந்தது. பொதுமக்கள் ஆதரவைத் திரட்டுவதில்
தவறியவர்கள், பயங்கரவாதிகளது வன்முறை மூலம் சாவே அரசைக் கவிழ்ப்பதற்கு முயன்று கொண்டிருக்கிறார்கள்.
பொருளாதாரச் சீர்குலைவு நடவடிக்கைகள், மீடியாக்களில் பிரச்சார இயக்கங்கள் போன்றவற்றிலும் ஈடுபட்டிருப்பதுடன்
மக்களுக்கு எதிரான மனோத்தத்துவப் போர் மற்றும் மக்களைத் திசை திருப்பும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்கள், தங்களது வேலை
நிறுத்தத்தை நீடிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விவாதித்துக் கொண்டிருந்த நேரத்தில், காரகாசின் பணக்காரர்கள்
வசிக்கும் அல்டாமிரா பிரிவு சதுக்கத்தில் துப்பாக்கிகளால் சுடும் சத்தம் கேட்டது. அக்டோபர் மாதம் முதல் அதே
சதுக்கத்தில்தான் சாவேக்கு எதிராக இராணுவ ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சென்ற ஏப்ரல் மாதம் நடைபெற்ற
ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதில் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
அருகாமையிலிருக்கும் சொகுசு ஹோட்டல்களில் இருந்துகொண்டு ஜெனரல்கள், அட்மிரல்கள், கேனல்கள் செயல்பட்டு அந்த
சதுக்கத்தை "விடுவிக்கப்பட்ட சதுக்கம்" என்றே பெயர் சூட்டினர்.
சாவேக்கு எதிரான ஆர்பாட்டக்காரர்கள் சதுக்கத்தில் கூடியிருந்தபோது நடந்த
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 பேர் மாண்டனர் 20 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
ஆர்பாட்டம், மற்றும் துப்பாக்சிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்து முடிந்ததும் அரசை எதிர்க்கும்
அதிகாரிகளில் ஒருவரான ஜெனரல் என்ரிக் மெதினா கோமஸ் வானொலி, தொலைக்காட்சியில் தோன்றி இரத்தம் சிந்திய
கலவரத்திற்கு ஜனாதிபதி சாவேதான் காரணம் என குற்றம் சாட்டினார். ''ஏப்ரல் 11 ந்தேதி செய்ததைப்போல்''
இராணுவமானது அவரது ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். வெனிசூலா ஜனாதிபதி இரண்டு நாட்கள்
வெளியில் தொடர்புகொள்ள முடியாதபடி முற்றுகையிடப்பட்டபோது சிவிலியன் - இராணுவக்குழு ஒன்று அங்கு அமைக்கப்பட்டது.
பொதுமக்கள் திரண்டு இராணுவத்திற்கு எதிராகக் கண்டனக்குரல் கொடுத்தபோது இராணுவத்திற்குள்ளும் பிளவுகள் ஏற்பட்டதால்
- அந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி விரைவில் தோல்வியடைந்தது.
இதற்கிடையில், நாட்டின் பிரதான தொலைக்காட்சி அலைவரிசைகள் - அவற்றின் உரிமையாளர்கள்
அனைவரும் - ஜனாதிபதிக்கு எதிரான சக்திகளோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டவர்கள் - மீண்டும் மீண்டும் காரகாஸ்
சதுக்கத்தில் நடைபெற்ற கொலை நிகழ்ச்சிகளையே ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர், அந்த இடத்தில் சந்தேகத்திற்குரியவர் என்று
கைது செய்யப்பட்டவர் சந்தேகத்துக்குரிய மனநோயாளியான ஜோ கவியா என்ற போர்த்துக்கல் நாட்டுக் குடிமகனாவார்.
லிஸ்பனிலிருந்து ஒரு நாளைக்கு முன்னர்தான் வந்திருந்த அவர், தன்னைப் பழிவாங்கிய ஒரு டெலிவிஷன் அமைப்பிற்கு தண்டனை
வழங்வே தான் அவ்வாறு துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவித்தார்.
சாவே அரசின் ஆதரவாளரான பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பத்திரிகையாளராகவும்
உள்ள ஒருவர் குறிப்பிடுகையில் மன நோயாளி என்று பாசாங்கு செய்தவர், ஜெனரல் மெதினா கோமஸ் உடன் தொடர்புகொண்டு
பணம் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்து இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் தந்திருப்பதாக தெரிவித்தார்.
இதற்கிடையில் அந்த இடத்தில் டி.வி. புகைப்படங்களில் காணப்படுகின்ற இன்னொரு துப்பாக்கி ஏந்திய சந்தேகத்துக்குரிய
ஒருவர் இந்த நாளுக்கு முன்பு, சாவேக்கு எதிரான இயக்கத்தில் முன்னணி ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கார்காஸ்
மேயருடன் காணப்பட்டார்.
சென்ற ஏப்ரலில் நடைபெற்ற பாணியிலேயே இந்த வியக்கத்தக்க தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.
அப்போது அரசிற்கு எதிராக ஆர்பாட்டம் நடந்தபோது, அடையாளம் அறியப்படாத துப்பாக்கி ஏந்திய நபர் தாறுமாறாகச்
சுட்டதில் 18 பேர் கொல்லப்பட்டதுடன் 30 பேர் காயமடைந்தனர். இந்த இரத்தக்களறியைச் சாக்காகக் கொண்டு
இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு தலைவர்கள் அரசு மாளிகை மீது தாக்குதல் நடத்தி சாவேயைக் கைது செய்து இடைக்கால
ஆட்சிக்குழுவை அமைக்கத் திட்டமிட்டனர். அந்த நேரத்தில் கிளர்ச்சி ஜெனரல்கள் - துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு சில
மணி நேரத்திற்கு முன்பு- அரசிற்கு எதிராக திரும்பியுள்ளதாகவும், ஆர்பாட்டத்தின்போது பலர் மாண்டதற்கு அரசுதான்
பொறுப்பு என்றும் அவர்கள் பேட்டி தந்திருந்தனர். சில நாட்களே பதவியிலிருந்த அந்தக்குழு, துப்பாக்கியால் சுட்டதாகக்
கைது செய்யப்பட்ட பலரை உடனடியாக விடுதலை செய்தது.
இதற்கிடையில் அரசிற்குச் சொந்தமான, எண்ணெய் கார்ப்பரேஷனின்
(PDVSA) நடவடிக்கைகள்
வேலை நிறுத்தத்தைப் பெரிதுபடுத்திக் காட்டுகின்றன. இந்த நிறுவனத்தைச் சீரமைக்க சாவே மேற்கொண்ட முயற்சிகள்
காரணமாகவே சென்ற ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெற்றன. வெனிசூலாவின் பழைய ஆளுங்கட்சிகளான
Copei
மற்றும் கிநீநீவீரஸீ ஞிமீனீஷீநீக்ஷீஊtவீநீணீ
ஆகிய இரண்டும் இந்த நிறுவனத்தை தமது நிதி ஆதாரமாகப் பயன்படுத்தி வந்தன.
சாவே இந்த எண்ணெய் நிறுவன நிர்வாகிகளுடன் சமரசம் செய்துகொண்டதுடன் அவர்களுக்கு பெருமளவில் ஊதிய உயர்வு தருவதற்கும்
சம்மதித்தார்.
எண்ணெய்க் கப்பல்களில் பணியாற்றும் அதிகாரிகளும் தனியார் எண்ணெய் டிரக்குகளில் பணியாற்றுவோரும்,
சாவே அரசிற்கு எதிரான சதித்திட்ட அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். நாட்டின் எண்ணெய் தொழிலை மூடிவிட்டு,
பொருளாதாரம் முழுவதையும் முடக்கிவிடவேண்டும் என்பதே நோக்கமாகும். 5-வது பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான
வெனிசூலாவில், 80 வீதம் வெளிநாட்டு வருவாய் எண்ணெய் ஏற்றுமதி மூலமே கிடைக்கிறது. இதில் ஐக்கிய அமெரிக்கா 13
வீதமான மசகு எண்ணெயை இறக்குமதி செய்கின்றது. ஒரு நாளைக்கு 25 லட்சம் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்யும்
வெனிசூலாவில், 70 வீதமானவை அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.
''பெட்ரோலிய ஏற்றுமதி நடவடிக்கை முடக்கப்பட்டுவிட்டது; துறைமுகங்களின் பணிகள் முடக்கப்பட்டுவிட்டன;
எண்ணெய் சுத்திகரிப்புப் பணிகள் முடக்கப்படும் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றன'' என்று அரசு எண்ணெய் நிறுவனத் தலைவர்
அலிரேட்ரிக் திங்களன்று தெரிவித்தார்.
''தேசியப் பேரழிவு நம்மை மிரட்டிக்கொண்டிருக்கிறது. தனது கம்பெனியை அல்லது
நாட்டை நேசிக்கும் எந்தத் தொழிலாளியும் இது நடக்க அனுமதிக்கமாட்டார்'' என அலிரேட்ரிக் குறிப்பிட்டார். அரசு
நிறுவனம் தனது வழக்கமான எண்ணெய் விநியோகப் பணியை மேற்கொள்ளாவிட்டால், ஊதியம் கொடுக்க இயலாது; சப்ளை
செய்பவர்களுக்கு பணம் கொடுக்க முடியாது. விநியோக ஒப்பந்தங்களை மீறினால், பெரும் அபராதங்களைச் செலுத்தவேண்டி
வரும் என அவர் எச்சரிக்கை செய்தார். அரசு எண்ணெய் நிறுவன டைரக்டர்கள் 8 பேரில் 7 பேர் சாவேக்கு எதிராக
பதவி விலகிவிட்ட நிலையில், ரோட்ரிக்ஸ் ஒருவர் மட்டுமே பதவியில் நீடிக்கிறார்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுமையான உற்பத்தித் திறனுடன் இயங்கி
வருகின்றபோது, போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதால் எண்ணெய் விநியோகிக்க முடியவில்லை. இதன் விளைவாக எரிவாயு
சப்ளை நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. ஒரு பெரிய விமான நிறுவனம் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற கவலையால்,
தனது விமானங்கள் பயணத்தை ரத்துச் செய்துவிட்டது. எரிபொருள் கிடைக்காமல் தங்கள் விமானம் வெனிசூலாவில் தத்தளிக்கும்
நிலை ஏற்படும் என அஞ்சுவதால், காரகாஸ் நகருக்கு சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தங்களது விமானப் பயணத்தை
ரத்துச் செய்துவிட்டன.
வேலை நிறுத்தத்தைச் சமாளிக்கும் வகையில் ஜனாதிபதி சாவே, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும்,
எண்ணெய் விநியோக நிலையங்களையும், பணியை நிறுத்திவிட்ட எண்ணெய் கப்பல்களையும் கைப்பற்றிக் கொள்ளுமாறு இராணுவத்துக்கு
கட்டளையிட்டார்.
ஏற்கனவே வெனிசூலா பொருளாதாரம் மந்தகதியில் சென்று கொண்டிருக்கிறது. இதை
மேலும் மோசமடையச் செய்கிற வகையில் திங்களன்று ஒரு நாள் வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கிப்
பணிகளுக்கான அலுவல் நேரமும் பணிகளும் காலவரையற்று குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட ஆத்திரமூட்டும் சூழ்நிலைகளும், முதலாளிகள் ஏற்பாடு செய்துள்ள
நாசவேலைகளும், 1973ஆம் ஆண்டு C.I.A.
சிலி நாட்டு ஜனாதிபதி சால்வடார் அலன்டேயின் மக்கள் முன்னணி அரசை கவிழ்க்க மேற்கொண்ட இயக்கத்தை
நினைவுப்படுத்துகின்றன. அமெரிக்க புலனாய்வு அமைப்புகள், வர்த்தக சபைகள், மற்றும் ஊழல் வலதுசாரி தொழிற்சங்கங்களுடன்
இணைந்து நாட்டையே முடக்கிய லாரிச் சாரதிகள் வேலை நிறுத்தத்திற்குப் பணம் கொடுத்தன என்பது பின்னர்
அம்பலத்திற்கு வந்தது. இப்படிப்பட்ட பொருளாதார சீர்குலைவு காரணமாகவே, 1973 செப்டம்பர் 11-ந்தேதி ஜெனரல்
அகஸ்டோ பினோசே தலைமையில் நடந்த இராணுவப்புரட்சி உருவாகியதுடன், சிலி நாட்டு தொழிலாள வர்க்கம் இரத்தக்களறியில்
சிக்கியதுடன் அங்கு 15 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சியும் ஏற்பட்டது.
வெனிசூலாவில் சீர்குலைவுகளைத் தூண்டுவதில் வாஷிங்டன் ஆழமான ஈடுபாடு கொண்டிருக்கிறது
என்பதில் சந்தேகம் இல்லை. ஈராக்கிற்கு எதிரான போரை ஆரம்பிப்பதற்கு முன்னர், வெனிசூலா எண்ணெய் சீராகக் கிடைப்பதற்கான
உத்திரவாத நடவடிக்கைகளை புஷ் நிர்வாகம் எடுக்கும். வெனிசூலா அரசின் வசமுள்ள எண்ணெய் கம்பெனியைத் தனியார்
மயமாக்குவதன் மூலம் அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும், வெனிசூலா நாட்டு பெரிய கம்பெனிகளின்
அதிபர்களும் நேரடியாக அதிக லாபத்தை அடைவார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாஷிங்டனைச் சரிக்கட்டிப்போகும் அளவிற்கு சாவே தனது தேசிய
உணர்வுகள் கொந்தளிப்பைக் குறைத்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்கா, ஈராக் மீது போர் தொடுக்கும் நேரத்தில்
அமெரிக்காவிற்கான எண்ணெய் சப்ளை சீர்குலையுமானால், ''நம்பகத்தன்மையுள்ள'' சப்ளையராக அமெரிக்கா, வெனிசூலாவை
எடுத்துக்கொள்ளலாம் என்று பகிரங்கமாகவே சாவே அறிவித்துவிட்டார்.
சர்வதேச நாணய நிதியம்
(I.M.F.) விதிக்கும் பொருளாதார நிபந்தனைகளை வெனிசூலா அரசு
பெரும்பாலும் ஏற்றுச் செயல்படுத்தி வருகிறது. அப்படி இருந்தும், சாவேயைப் பதவி நீக்கம் செய்வதில் புஷ் நிர்வாகம்
மிகக் கண்டிப்பாக இருப்பதற்குக் காரணம் என்ன? ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல்களை
அவர் கண்டித்ததுடன் காஸ்ட்ரோவின் கியூபாவுடன் நட்புப் பாராட்டி வருவதால் இது வாஷிங்டனின் ஆத்திரத்தைக்
கிளறிவிட்டுள்ளது. வெனிசூலாவின் ஆளும் வர்க்கத்தைப்போல், சாவேயின் சிறு அளவிலான சீர்திருத்தங்களும், பொதுமக்களது
ஆதரவைப்பெறும் அவரது இயக்கங்களும் நாட்டின் ஏழை மக்களைக் கவர்வதால், அது செல்வத்திற்கும், உரிமைகளுக்கும்
சகிக்க முடியாத மிரட்டல் என்று அமெரிக்க நிர்வாகம் கருதுகின்றது.
சென்ற ஏப்ரலில் சாவே பதவி நீக்கம் செய்யப்பட்டபோது, அமெரிக்க அதிகாரிகள் அந்த
ஆட்சிக்கவிழ்ப்பு புரட்சியை வரவேற்றனர். புஷ் நிர்வாகத்தில் உதவியாளர்களாகப் பணியாற்றிவரும் வெளியுறவு துணை
அமைச்சர் ஓட்டோ ரீச் மற்றும் வெள்ளை மாளிகை ஆலோசகர் எலியட் ஆப்ராம்ஸ் - ஆகிய இருவரும் வெனிசூலா ஆட்சிக்கவிழ்ப்பு
புரட்சிக்குழு அமைப்பாளர்களை வாஷிங்டனில் அடிக்கடி சந்தித்திருக்கிறார்கள் என்பது அந்த நேரத்திலேயே அம்பலத்துக்கு
வந்தது. நிக்கரகுவா நாட்டில் எண்பதுகளில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் றீகன் நிர்வாகத்தின் சார்பில்
இதே அதிகாரிகள் இருவரும் பங்கெடுத்துக்கொண்டனர்.
வாஷிங்டன் நிர்வாகத்தின் நிலைப்பாட்டை அமெரிக்காவில் உள்ள மீடியாக்கள், மிகுந்த
விசுவாசத்தோடு எதிரொலித்து வருவதுடன் வெனிசூலா நிகழ்ச்சிகள் தொடர்பான உண்மைகளை திரித்து வெளியிடுகின்றன.
உதாரணமாக, வெனிசூலா நிகழ்ச்சிகளை ''தேசிய வெளிநடப்பு'' என்று நியூயோர்க் டைம்ஸ் வர்ணித்துள்ளது.
உண்மையில் அரசிற்கு எதிரான நடவடிக்கைகளில் வெகுசில தொழிலாளர்கள் மட்டுமே பங்குபெறுவதுடன் பெரும்பாலான
தொழிலாளர்கள் முதலாளிகளின் கதவடைப்பினால் பாதிக்கப்படுகின்றனர். இதனைக் கண்டித்து சில தொழிற்சாலைகளின் முன்
அமர்ந்து தொழிலாளர்களே கிளர்ச்சி செய்தும் வருகின்றனர்.
அதேபோன்று சாவேயின் ஜனாதிபதி பதவி தொடர்பாக, பொது தேசிய வாக்கெடுப்பு
நடத்த எதிர்க்கட்சிகள் கோரி வருவதாகவும், அத்தகைய வாக்கெடுப்பை தடுப்பதில் அவரின் சர்வாதிகார ஆட்சி உறுதிகாட்டி
வருவதாகவும் அமெரிக்க செய்தி நிறுவனங்கள் சித்தரிக்கின்றன.
நெருக்கடிக்குத் தீர்வுகாண, ''2006-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல்
வரை காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காகவே'' எதிர்க்கட்சிகள் கிளர்ச்சி செய்வதாக டைம்ஸ் பத்திரிகை
எழுதியுள்ளது.
உண்மை என்னவென்றால், வெனிசூலாவின் அரசியல் சாசனத்தில் இடைக்கால பொதுவாக்கெடுப்பு
நடத்த வழிவகை உள்ளதால் 1999ம் ஆண்டு இந்த அரசியல் சாசனத்தை வாக்கெடுப்பு மூலம் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.
அதன்படி 2003 ஆகஸ்ட் மாதத்தில்தான் பொதுவாக்கெடுப்பு நடைபெற வேண்டும். இருந்தபோதிலும், வெனிசூலாவின்
பலம் பொருந்திய சில அரசியல் பிரதிநிதிகள் பெப்ரவரி 2ம் திகதி பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் 7 மாதங்கள் காத்திருக்க முடியாததற்கு வேறு காரணங்கள் உள்ளன. நிலச்
சீர்திருத்தங்கள் நிலுவையில் இருப்பதுடன் அரசாங்க எண்ணெய் நிறுவன சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
அதுமட்டுமன்றி வெனிசூலாவின் ''ஜனநாயக'' எதிர்க்கட்சியினர், சாவேயை பதவியிலிருந்து நீக்குவதற்குத் தேவையான
பெரும்பான்மை வாக்குகளைப்பெற முடியாது என அஞ்சுகின்றனர். (கடந்த தேர்தலில் ஜனாதிபதி பெற்ற வாக்குகளைவிட
அதிக சதவீத வாக்குகளை எதிர்க்கட்சிகள் பெற்றால்தான் அரசியல் சாசனப்படி அவரைப் பதவி நீக்கம் செய்ய முடியும்.
கடந்த தேர்தலில் சாவே, 57 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.)
சாவே அரசைக் கவிழ்க்க விரும்புவர்களின் பிரச்சாரத்துக்காக செய்தி நிறுவனங்கள் செயல்படுவதை
எதிர்த்து வெனிசூலா மக்கள் வெகுண்டெழுந்து ஆர்பாட்டம் செய்தார்கள். திங்கள் இரவு, தொலைக்காட்சி நிலையங்கள்
முன்பாக திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் ''ஆட்சிக்கவிழ்ப்பு வெறியர்களே உண்மையைச் சொல்லுங்கள்!'' என்ற
கண்டனக் கோசங்களை எழுப்பினர். தனியாருக்குச் சொந்தமான 5 தொலைக்காட்சி நிறுவனங்கள் பகிரங்கமாக அரசிற்கு
எதிரான நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்துக் கொண்டிருப்பதுடன் அரசாங்கத்தை சீர்குலைப்பதற்காக தவறான தகவல்களையும்
கொடுத்து வருகின்றன. மராக்கே பகுதியிலுள்ள தொலைக்காட்சி நிலையத்தை பொதுமக்கள் பிடித்துக்கொண்டனர்.
இத்தகைய ஆர்பாட்டங்களை, அமெரிக்க நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் சீசர்
கவீரியா (César Gaviria)
கோபத்துடன் கண்டனம் செய்திருப்பதுடன், பொதுமக்களது ஆர்பாட்டங்களை ''மிரட்டும்
நடவடிக்கைகள்'' என்று வர்ணித்தார். அத்தோடு அரசாங்கம் ''பத்திரிகைச் சுதந்திரத்தையும், பேச்சுரிமையையும்
பாதுகாக்க நடவடிக்கை'' எடுக்கவும் கோரினார்.
கொலம்பியா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான கவீரியாவினது விமர்சனம் அவரது பாரபட்சப்
போக்கையே காட்டுகின்றது. சாவேக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சமரசம் செய்து வைப்பவர் என்று கருதப்பட்ட
கவீரியா, அமெரிக்க வெளியுறவுத் துறையைப் போல், வெனிசூலாவின் பெரு நிறுவனங்களின் கோரிக்கையான விரைவில் தேர்தல்
என்ற நிலைப்பாட்டையே தற்போது ஆதரிக்கிறார்.
இந்தக் கோரிக்கை குறித்து சமரசப் பேச்சுவார்த்தை நடாத்த தயாராக இருப்பதாக
ஜனாதிபதி சாவே ஏற்கனவே கோடிட்டுக் காட்டியுள்ளார். இருந்தபோதிலும், பொருளாதாரச் சீர்குலைவை காரணம்
காட்டி உடனடியாக அவரை ராஜினாமாச் செய்ய எதிர்க்கட்சிகள் கோரி வருவதுடன், அவரது துணை ஜனாதிபதியான
ஜோசே விசன்ட் ராங்கலை (José Vicente Rangel)
தற்காலிகமான வாரிசாகக்கூட தாங்கள் ஏற்க முடியாது என வற்புறுத்தியும்
வருகின்றன.
|