ஐவரி கோஸ்ட் நாட்டிற்கு பிரான்ஸ் அனுப்பிய 1700 துருப்புகள்
By Chris Talbot
17 December 2002
Back
to screen version
பிரான்ஸ், ஐவரி கோஸ்டிற்கு ஏற்கனவே நிலைகொண்டுள்ள 1200 துருப்புகளைவிட மேலும்
500 அதிரடிப்படை வீரர்களை அனுப்புகின்றது. இந்த படைப்பிரிவுகளில் கடற்படை வீரர்கள், பாராசூட் வீரர்கள், வெளிநாட்டு
படை வீரர்கள் ஆகியோர் அடங்குவர். 1980களுக்கு பின்னர் ஆபிரிக்காவிற்குள் பிரான்ஸ் அனுப்பும் மிகப்பெரிய ஆக்கிரமிப்புப்
படை இதுவாகும்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்த இராணுவ முரண்பாடுகளின் விளைவாக இராணுவ
வீரர்களிலுள்ள கிளர்ச்சிக் குழு ஒன்று, ஐவரி கோஸ்டின் வடக்கு நகரங்களைப் பிடித்துக் கொண்டது. தற்போது அவர்களது
நடவடிக்கைகள் அங்கு விரிவடைந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் அருகிலுள்ள நாடுகளான சியாரா லியோன்,
மற்றும் லைபீரியாவில் நடைபெற்ற போர்களை நினைவுப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுள்ளன. கிளர்ச்சி
தொடங்கிய காலத்தில், முன்னாள் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் ரொபேட் குயி
(Robert Guei) அரசுப்
படைகளால் கொல்லப்பட்டார். அந்தக் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் இராணுவத்தில் மேலும் இரண்டு
கிளர்ச்சிக் குழுக்கள் ஐவரி கோஸ்டின் மேற்குப் பகுதியில் உருவாகியுள்ளன.
பிரெஞ்சு நாட்டின் முன்னாள் காலனியான ஐவரி கோஸ்ட்டில் பல்லாயிரக்கணக்கான பிரெஞ்சு
மக்களும், குடியேறியவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். கிளர்ச்சிப்படை வீரர்களுக்கும் அரசிற்கும் இடையே நடைபெறும்
சண்டையில் போர்நிறுத்த உடன்பாடு உருவாதைக் கண்காணிப்பதற்காகவும், பிரெஞ்சு குடிமக்களைக் காப்பதற்காகவும்,
பிரெஞ்சு இராணுவ வீரர்கள் அங்கு நிலைகொண்டிருப்பதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. போர்நிறுத்த உடன்பாட்டை மீறுபவர்களைக்
கண்டதும் சுட்டுத்தள்ள தற்போது பிரெஞ்சு படைகளுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலம் வரை மேற்கு ஆபிரிக்காவினுடைய மிகுந்த வளங்களைக் கொண்டுள்ள, உலகிலேயே
கொக்கோ தயாரிக்கும் பிரதானமான நாடு இதுவாகும். தனது பொருளாதார நலன்களைக் காப்பதற்காக புதிய காலனியாதிக்க
மனப்பான்மையில் பிரான்ஸ் நடவடிக்கைகளை இங்கு எடுத்து வருகின்றது. கிளர்ச்சிக்காரர்கள் பிடித்துக்கொண்ட வடக்குப்
பகுதியை ஜனாதிபதி லோரண்ட் பாக்போ (Laurent
Gbagbo) வின் அரசுப் படைகளினால் மீண்டும் பிடிக்க முடியவில்லை.
அத்துடன் பிரான்சின் சமரச உடன்பாடு காணும் முயற்சிகளும் இங்கு தோல்வியடைந்துவிட்டன.
பாக்போ அரசை அங்கீகரித்தாலும் கிளர்ச்சிப்படை வீரர்களுக்கு எதிராக ஜனாதிபதியை
பிரான்ஸ் பகிரங்கமாக ஆதரிக்க மறுத்து வருகின்றது. ஏனென்றால் இந்த அரசு இன அடக்குமுறைகளை மேற்கொண்ட வரலாற்றை
பிரான்சு மறந்துவிடவில்லை. 1994-ல் ருவாண்டாவில் நடந்த இனப் படுகொலைகளின்போது ஆளும் வர்க்கத்தின் பின்னணியில்
பிரான்ஸ் இருந்ததுபோல தற்போது அத்தகைய ஈடுபாடு கொள்ள அது தயங்கி வருகிறது. ஆனால் பிரான்ஸ் வெளிப்படையாக
ஜனாதிபதி பாக்போவைக் கண்டித்து அறிக்கை எதையும் வெளியிடவில்லை. ஆபிரிக்கா கான்பிடென்சியல் என்ற பத்திரிகை
பிரெஞ்சுத் தூதர்களது கருத்தை வெளியிட்டிருக்கிறது. பிரிட்டன் தனது முன்னாள் காலனியான ஜிம்பாவேயில் அதிபர் முகாபே
தொடர்பாக மேற்கொண்ட அணுகுமுறையை பிரான்ஸ் கடைபிடிக்கப் போவதில்லை என்று தூதர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அத்தகைய மோதல் போக்குகளின் காரணமாக முகாபே மேலும் தனது கெடுபிடி நடவடிக்கைகளை முடித்துவிட்டார். அதே
நிலை பாக்போ அரசிலும் ஏற்பட்டுவிட விரும்பவில்லை என்று பிரெஞ்சுத் தூதர்கள் தெரிவித்தனர். மேற்கு நாடுகளுக்கு
ஆதரவான எதிர்கட்சி அரசியல்வாதி அல்சான் கொட்டாரா ஐவரி கோஸ்டின் வடக்குப் பகுதியை தளமாகக்கொண்டு செயல்பட்டு
வருகிறார். அவருக்கு எதிராக பாக்போவும் இந்த தலைவர்களும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்தி
வருகின்றனர். எனவே பிரான்ஸ் பத்து வாரங்கள் அல்சான் கொட்டாராவை அபிட்ஜானிலுள்ள (Abidjan)
தனது தூதரகத்தில் மறைத்து வைத்திருந்து, பின்னர் அவரை கப்பலில் ஏற்றி காபோனுக்கு (Gabon)
அனுப்பியும் உள்ளது.
முகாபேயைப்போல் பாக்போவும் ''ஏகாதிபத்தியத்திற்கு எதிராக'' மக்களை தூண்டிவிடுகின்ற
அளவுக்கு உரையாற்றுகின்ற வல்லமை படைத்தவர். அபித்ஜான் பகுதியில் ஏற்கனவே அவர் பிரான்சிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை
தூண்டிவிட்டிருக்கிறார். லுமொன்ட் பத்திரிகைக்கு பாக்போ அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ள முக்கியமான கருத்து
வருமாறு: ''கலாச்சார அடிப்படை என்பது ஐவரி கோஸ்ட்டுக்கு அப்பாற்பட்டது. ஜிம்பாவேயைப் பாருங்கள். மேலை
நாடுகள் அனைத்தும் ரொபேட் முகாபேக்கு எதிராக அணி திரண்டு நிற்கின்றது. ஆனால் ஆபிரிக்க மக்கள் அனைவரும் அவரை
ஆதரிக்கின்றனர்.''
ஐவரி கோஸ்ட் அரசாங்கம் தனி மனிதர்களை அவர்களது இனம், மதம் அல்லது அவர்கள்
தரும் எதிர்கட்சிகளுக்கான ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மோசமான கொலைகளையும் மற்றும்
கண்டபடியான கைதுகளையும் செய்து வருகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. வடக்கு
பகுதியை சார்ந்தவர்களும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் வாழ்கின்ற இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு
அவர்களது வீடுகள் இடித்து தள்ளப்படுகின்றன என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. கிளர்ச்சிக்கு
எதிராக பாக்போ அரசு தனது அடக்குமுறைகளை இன்னும் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் முடுக்கிவிட்டிருக்கிறது.
அரசுத் தரப்பில் நூற்றுக்கணக்கான கூலிப்படையினர் சேர்க்கப்பட்டு வருவதாக பல்வேறு செய்திகள் வந்து கொண்டு
இருக்கின்றன. இவர்களில் தென்னாபிரிக்க வெள்ளையர் குழு கூலிப்படையினரும் அடங்குவர். அங்கோலாவின் கூலிப்படையில் பணியாற்றியவர்களை
அனுப்பிய அதே கம்பெனியிலிருந்து தற்போது கூலிப்படையினர் திரட்டப்பட்டு வருகின்றனர்.
சென்ற வாரம் ஆழமில்லாத ஒரு புதைகுழியில் 120க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. ஐவரி கோஸ்ட் மத்திய பகுதியில் உள்ள மொனாக்கோ-சோகி கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி
மக்களை அரசாங்கப் படைகள் கொன்று குவித்து புதைத்துவிட்டு சென்றதாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர். சிப்பாய்கள்
வீடு வீடாகச் சென்று ஆண்கள் அனைவரையும் கொன்று குவித்தனர். அங்குள்ள பெரும்பாலான மக்கள் பக்கத்து நாடுகளான
மாலி மற்றும் பூர்கினா பாஸ்கோவிலிருந்து வந்து குடியேறிய தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளாக இருப்பதுடன் அங்குள்ள
கொக்கோ தோட்டங்களிலும் பணியாற்றிக் கொண்டு இருப்பவர்களாவர். அரசுப் படைகள் கிளர்ச்சியாளர்களை ஆதரிக்கும்
மக்கள் என அவர்களை குற்றம்சாட்டி வெளிப்படையாக கொன்று குவித்துள்ளன.
ஐவரி கோஸ்ட் தேசபக்தர் இயக்கம்
(Ivory Coast Patriotic Movement -MPCI)
என்ற வடக்குப் பகுதி கிளர்ச்சிக் குழுவானது, இந்தப் படுகொலையில் பிரான்சிற்கு
சம்மந்தம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. கிளர்ச்சிக்காரர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பவாக்கே நகரில் பல்லாயிரக்கணக்கான
மக்கள் பிரெஞ்சு இராணுவ தலைமையகத்தின் முன் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தி, பிரான்ஸ் ஐவேரி கோஸ்டிலிருந்து வெளியேற
வேண்டுமென கோரிக்கை விடுத்தபோது, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பிரெஞ்சு துருப்புக்கள் அவர்களின்
தலைக்கு மேலாக வானை நோக்கி சுட்டனர்.
கிளர்ச்சிப் படைகளுக்கு வடக்கு பிராந்தியத்தில் பொதுமக்களது ஆதரவும், நிதி உதவியும்
கிடைக்கின்றன. கட்டுப்பாடுமிக்கவர்கள் மற்றும் பெருமளவிற்கு ஆயுதம் தாங்கியவர்களாக கருதப்படும் இவர்களுடன்
ஆரம்பத்தில் அதிருப்தி கொண்ட சுமார் 700-போர் வீரர்கள் இணைந்தனர். 1999-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு
சதிப்புரட்சியில் ஆட்சியை பிடித்துக்கொண்ட ஜெனரல் குவீயினால் ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ வீரர்கள்
இவர்கள் என்று சொல்லப்படுகிறது. பத்து மாதங்களின் பின்பு மோசடித் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த பாக்போ,
இக்கிளர்ச்சியாளர்களை இராணுவத்திலிருந்து வெளியேற்ற முயற்சித்தார். ஜெனரல் குவீயி லைபீரியா அதிபர் சார்லஸ் டெய்லருடன்
நெருக்கமான உறவு கொண்டிருந்தவர் என்றும் மற்றும் ஆரம்பத்தில் இக்கிளர்ச்சிப் படையினருக்கு அத்தகைய தொடர்புகள்
இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அதற்குப்பின்னர் பாக்போ, புர்கினா பாஸ்கோ நாடு இவர்களை ஆதரிப்பதாக
குற்றம் சாட்டினார். பல வடக்குப் பகுதி முஸ்லீம்களுக்கு அருகிலுள்ள இந்த நாட்டுடன் தொடர்புகள் உண்டு. பாரம்பரிய
வேட்டைக்காரர்களான டோஜோஸ் இனத்தவர் உட்பட கிளர்ச்சிக்காரர்களுக்கு மேலும் இராணுவ வலிமையை அங்கு
பெருக்கிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
பாக்போ, தனது தாக்குதல்களை அதிகரிப்பதற்கான மறைமுக ஆதரவை பிரான்ஸ் அவருக்கு
தந்து கொண்டிருக்கின்றது. ஏனெனில் வடக்குப் பகுதியில் கிளர்ச்சிக்காரர்களுக்கும், அரசிற்கும் இடையே சமாதான
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரெஞ்சு வெளிநாட்டு அமைச்சர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததோடு,
கிளர்ச்சிக்காரர்கள் அரசாங்கத்தின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டனர். ஆயுதங்களைக் கீழேபோட அரசாங்கம் விடுத்த
கோரிக்கையை நிராகரித்த அவர்கள், புதிய தேர்தல்களை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தபோது
பாக்போ அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
பிரெஞ்சு துருப்புக்களுக்குப் பதிலாக, மேற்கு ஆபிரிக்காவில் 2,000 வீரர்கள் அடங்கிய
அமைதிப் படையை அனுப்பும் முயற்சிகள் கைவிடப்பட்டுவிட்டன. நைஜீரியா இந்த அமைதிப் படைக்கு தலைமை வகிக்கும் என
எதிர்பார்க்கப்பட்டபோதும் அந்தப் பொறுப்பை ஏற்க அது மறுத்துவிட்டது. அமெரிக்காவின் ஆதரவு இந்தப் பிரச்சனையில்
நைஜீரியாவிற்கு அவசியமாக இருந்தபோதிலும், இந்தப் பிராந்தியத்தின் பிரதான அரசான நைஜீரியாவின் இராணுவத்திற்கு
அமெரிக்கா பயிற்சியளித்தும் வருகிறது. ஐவரி கோஸ்ட் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இல்லாததால் இந்தப் பிரச்சனையை
பிரான்ஸின் வசம் விட்டுவிட அமெரிக்க விரும்புகிறது.
நாட்டின் மேற்குப் பகுதியில், லைபீரியா எல்லைக்கு அருகாமையில் மேலும் இரண்டு
கிளர்ச்சிக் குழுக்கள் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன. நீதி மற்றும் சமாதான இயக்கம்
(MJP) மற்றும் மேற்கு
ஐவேரியன் மக்கள் இயக்கம் (MPIGO)
என்ற இந்த குழுக்கள் லைபீரியா மற்றும் சியரா லியோனில் உருவாகிய கிளர்ச்சிக்காரர்களை போன்ற தோற்றம் உடையவர்களாகையால்
அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களும் இதில் ஈடுபட்டிருக்கலாம். அவர்கள் போதைப் பொருட்களில் நாட்டம் உள்ளவர்களாக
இருப்பதுடன் உள்ளூர் மக்களை கொள்ளையடிப்பவர்களாகவும் உள்ளனர். அண்மையில் வெளியான செய்திகளின்படி கொக்கோ
பயிரிடப்படும் இரண்டு நகரங்களை அவர்கள் கைப்பற்றிவிட்டதாகவும், அரச படைகள் டனான் மற்றும் மேன் என்ற இடத்தை
திரும்பப் பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. லைபீரியாவிலிருந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளும்
அங்கு உண்டு.
அண்மையில் பிரெஞ்சு துருப்புக்கள் மேற்கு பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. முறைகேடாக
நடந்துகொள்பவர்கள் யாராக இருந்தாலும் சுடுவதற்கு உத்திரவிடப்பட்டிருப்பதாக பிரெஞ்சு இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.
இந்தக் கட்டளை கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிரானதுதான் என்று கருதப்படுகின்றது.
ரஃப்ரன் (Raffarin)
அரசு ஆட்சிக்கு வந்ததும் ஆபிரிக்காவில் தனது நடவடிக்கைகளை அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஐவரி
கோஸ்ட்டில் உள்நாட்டுப் போர் ஆழமாகிக் கொண்டிருப்பதால், மனித நேயம் மற்றும் அமைதி காப்பு என்கிற
வாய்ச்சொல் அலங்காரங்களை பயன்படுத்தி சியாரா லியோனில் பிரிட்டன் இராணுவ ஆதிக்கத்தை நிலைநாட்டிக்
கொண்டிருப்பதைப்போல பிரான்சும் இங்கு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
|