WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Desperately searching for allies: Washington fetes Australian prime
minister
மூர்க்கமாக நட்பு நாடுகளைத் தேடல்:
அவுஸ்திரேலியா பிரதம மந்திரிக்கு வாஷிங்டனில் கொண்டாட்டம்
By Richard Phillips
19 February 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
சர்வதேச அளவில் போருக்கு எதிராக மக்கள் பெருமளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களை
நடத்திக்கொண்டிருக்கையில், இராஜங்கத்துறை அளவில் பிரான்ஸ், ஜெர்மனி, மற்றும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றன. எனவே அமெரிக்க அரசாங்கம், தனது மிகவும் நெருக்கமான நட்பு நாடுகள் சர்வதேச அளவில்
போருக்கு ஆதரவு வழங்கி வருகிறது என்ற ஒரு சித்திரத்தை உருவாக்க மூர்க்கத்தனமாக முயன்று வருகிறது.
கடந்த இரண்டு வாரங்களில் வாஷிங்டனுக்கு விஜயம் செய்தவர்களில் இத்தாலியப் பிரதமர்
சில்வியோ பெர்லுஸ்கோனி, போலந்துப் பிரதமர் லேசக் மில்லர் மற்றும் பாஹ்ரன் மன்னர் அமார்க் ஆகியோர்கள்
அடங்குவர். இவர்கள் அனைவருக்கும் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், பாரசீக வளைகுடாவில் இராணுவத்
தாக்குதல் நடக்கும்போது இவர்கள் என்ன செய்யவேண்டும் என்ற அறிவுரையும் கூறப்பட்டது. பின்னர் இவர்கள் அமெரிக்க
ஊடகங்களிலும் காட்டப்பட்டனர்.
சென்ற வாரம், அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹோவார்ட் அமெரிக்கா சென்றிருந்தார்.
அவர் சென்ற ஜூன் மாதமே போரில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை திட்டமிடத் தொடங்கியதோடு, அண்மையில்
மத்திய கிழக்கிற்கு 2000 துருப்புக்களையும் அனுப்பியிருந்தார். அவர் செய்தி ஊடகங்களில் பேட்டியளிக்கும்போது சிடுமூஞ்சித்தனமான
முறையில், தனது பயணம் ''ஒரு சமாதானத்துக்கான நடவடிக்கை'' என்று வர்ணித்தார்.
புஷ் நிர்வாகத்தின் ஈராக்கிற்கு எதிரான போரில், ஹோவார்ட் மக்களது வெறுப்பை
பெருமளவில் சம்பாதித்துக் கொண்டு வருகிறார். ஏற்கனவே அவர் தனது நாட்டு பாராளுமன்றத்திலும், உள்ளூர்
ஊடகங்களிலும் போரில் கலந்துகொள்வது குறித்து தனது அரசாங்கம் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று பல மாதங்களாக
பொய் கூறி வந்தார். ஆனால், அவர் வாஷிங்டன் விஜயம் மேற்கொண்ட இரண்டாவது நாளில் இந்த பொய்
அம்பலத்திற்கு வந்துவிட்டது.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் மாநாட்டில் புஷ்ஷை நோக்கி
ஒரு பத்திரிகையாளர் கேள்விக்கணை ஒன்றைத் தொடுத்தார். அமெரிக்கா, அவுஸ்திரேலியாவை போருக்கு அணி சேர்ந்துள்ள
நாடுகளில் ஒன்றாக கருதுகிறீர்களா? என்பது கேள்வி. ''ஆம், அப்படியே கருதுகிறேன்'' என்று புஷ் பதில்
சொன்னபோது, ஹோவார்ட் அதிர்ச்சியடைந்தது அவரது முகத்தில் தெரிந்தது. இதை சற்று தாமதமாக உணர்ந்துகொண்ட
புஷ் சமாளிப்பதற்காக ''அமெரிக்காவுடன் விரும்பி கூட்டணி சேர்ந்துள்ள நாடுகள் என்றால் என்ன என்பதன் பொருளை
ஜோன் ஹோவர்ட் அறிவார். அவர்தான் அதை முடிவு செய்ய வேண்டும்'' என்று சொல்லி இந்த சங்கடத்தை சமாளித்தார்.
ஆனால், அவுஸ்திரேலிய பிரதமர் நிபந்தனை எதுவும் விதிக்காமல் அமெரிக்கா தலைமையில்
நடைபெறும் போருக்கு ஆதரவு தருவதாக உறுதியளித்திருக்கிறார் என்பது, வெள்ளை மாளிகை அவருக்கு அளித்த மிக
அசாதாரணமான வரவேற்பிலிருந்து தெளிவாகத் தெரிந்தது.
நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளை எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் சந்திப்பதற்கு
ஹோவார்ட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த அதிகாரிகள் அமெரிக்க செய்தி ஊடகங்களின் முன், அவுஸ்திரேலியா
பிரதமரை அளவிற்கு அதிகமாக புகழ்ந்து பேசினர். துணை ஜனாதிபதி டிக் செனியோடு பகல் விருந்தில் கலந்துகொண்டார்.
பின்பு வெளியுறவு அமைச்சர் கொலின் பவெல் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் டேனால்ட் ரம்ஸ்பீல்ட் ஆகியோரை
ஹோவார்ட் சந்தித்ததோடு ஜனாதிபதி புஷ் உடனும் இரகசிய பேச்சு நடத்தி, தனிப்பட்ட முறையில் இரவுப் போசனத்திலும்
அவருடன் உண்டு களித்தார்.
தனது அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகை நிருபர்கள் மாநாட்டில், ஹோவார்ட் தனது
நெருக்கமான நண்பர் என்றும், அவரது முடிவை தான் சிறப்பாக கருதுவதாகவும், அவரோடு அடிக்கடி பேசிக்
கொண்டிருப்பதாகவும், தெளிவான நோக்கு உள்ளவர் என்று தாம் நம்புவதாகவும் புஷ் புகழ்ந்துரைத்தார். ''21
வது நூற்றாண்டில் நாம் அடி எடுத்து வைக்கும்போது, சுதந்திர உலகிற்கு ஏற்படுகின்ற மிரட்டல்களை அவர் தெளிவாக
அறிந்தவர். சமாதான உலகையும் சுதந்திர சமுதாயத்தையும் உருவாக்குவதற்கு அவரோடு இணைந்து பணியாற்றுவதில்
நான் பெருமைப்படுகிறேன். அவர் நன்நெறிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவர். அவரைப் பெரிதும் மதிக்கிறேன்''
என்று புஷ் பாராட்டினார்.
புஷ் தனிப்பட்ட முறையில் ஹோவார்ட்டுக்கு அளித்த விருந்தை பற்றி அவுஸ்திரேலிய ஊடக
அறிக்கையொன்று மிக சிறப்பாக பாராட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது. ''புஷ் மாடத்திலிருந்து,
ஒளி வெள்ளத்தில் நனைந்து கொண்டிருக்கும் வாஷிங்டன் நினைவுச் சின்னத்தை சுட்டிக்காட்டினார். அப்போது
அவருக்கருகில் அவரது கறுப்புநிற ஸ்கொட்லாந்து நாய்க்குட்டியும் இருந்தது'' என்றெல்லாம் விளக்கியிருக்கிறது.
இப்படித் தாஜா செய்கிற வகையில் செய்திகள் வெளியிடப்படுவது, ஹோவார்ட்டுக்கு தரப்பட்ட
ராஜ வரவேற்பு ஆகியவை புஷ் நிர்வாகமும், வாஷிங்டன் பத்திரிகையாளர்களும் மாறிவிட்டதை, தங்களது போக்குகளை
மாற்றிக்கொண்டதைக் காட்டுகிறது. செப்டம்பர் 2001 ம் ஆண்டு, அமெரிக்கா-அவுஸ்திரேலியா ஐம்பது ஆண்டுகள்
கூட்டுறவைக் கொண்டாடுகின்ற வகையில் ஹோவர்ட் அமெரிக்காவிற்கு வந்து சேருவதற்கு சில நாட்களுக்கு முன்னர், அமெரிக்காவின்
நியூயோர்க் டைம்ஸ், வோல் ஸ்ரீட் ஜூர்னல் மற்றும் இதர முன்னணி செய்திப் பத்திரிகைகள், அவரை பகிரங்கமாகக்
கண்டித்து எழுதியிருந்தன. அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புக விரும்புபவர்களையும், அகதிகளையும் அவரது அரசு மிகக்
கொடூரமாக நடத்துவதாக கண்டனம் செய்தது. அப்போது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல் லொஸ்
ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை அவரைக் கண்டித்து வேட்டைக்கார ஜோன் என்று கேலி செய்து எழுதியிருந்தது.
2001 அக்டோபரில், அமெரிக்காவின் தலைமையில் ஆப்கானிஸ்தானில் இராணுவ நடவடிக்கை
எடுக்கப்பட்டபோது, ஹோவார்ட் 1500 அவுஸ்திரேலிய துருப்புக்களை அனுப்பியிருந்தார். இதனை புஷ் பகிரங்கமாக
அங்கீகரிக்கவும் இல்லை. அமெரிக்க ஊடகங்கள் இதனைப் பொருட்படுத்தவும் இல்லை. அந்த நேரத்தில் ஹோவர்ட் மிகவும்
வருந்தினார். ஷியாட்டில் டைம்ஸ் பத்திரிகையில் மட்டுமே இதுபற்றி ஒரு சிறு குறிப்பு காணப்பட்டது. இந்தப்
பத்திரிகை ஒன்றுதான் அவுஸ்திரேலிய துருப்புக்கள் ஆப்கானிஸ்தான் செல்வது பற்றிய தகவல் தந்திருந்ததோடு கூடவே
ஹோவர்ட் ''மிகவும் மந்தமானவர்'' என்றும் வர்ணித்திருந்தது.
தற்போது ஹோவர்ட் மிகப்பெரிய சிறப்புமிக்க பிரமுகர் நிலைக்கு உயர்த்தப்பட்டிருப்பதற்கு
ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு காரணங்கள் இருப்பதாக தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத மூத்த அமெரிக்க
அரசாங்க அதிகாரி ஒருவர் அவுஸ்திரேலியன் பைனான்சியல் ரீவியுவிற்கு சென்ற வாரம் விளக்கம் அளித்திருந்தார்.
''அமெரிக்கா, தனது உள்நாட்டு அரசியல் மற்றும் ஊடக ஆதரவாளர்களுக்கு தன்னை
ஆதரிக்கின்ற மரியாதையான நாடுகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்று என்று காட்டவேண்டியது முக்கியமானதாகும்''. அத்துடன்
''மற்ற நாட்டுத் தலைவர்களோடு கலந்துரையாடுகிறோம். அவர்களிடம் ஆலோசனை கேட்கிறோம். கண்ணை
மூடிக்கொண்டு நடவடிக்கையில் இறங்கவில்லை என்பதைக் காட்டுவதும் முக்கியமானதாகும். ஏனெனில் உள்நாட்டில்
தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை இதன் மூலம் சமாளிக்க முடியும்'' இவ்வாறு அந்த
அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
குட் கேம்பல் (Kurt Campbell)
முன்னாள் பென்டகன், இராணுவ மற்றும் சர்வதேச ஆய்வு நிலையத்தின் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான
தலைமை அதிகாரி ஒருவர் பத்திரிகைக்கு ''ஹோவர்ட் இங்கு இன்றைய தினம் இருக்கிறார் என்பது மிகப்பெரிய
விடயம். நிர்வாகத்திற்கு ஆதரவு தெரிவிக்க, எந்த நாடு முன்வந்தாலும் அதற்கு பெரிய சிறப்பு தரப்படும். அந்த
நாட்டை நீண்ட காலம் நினைவில் நிறுத்திக்கொள்வோம்'' என்று தெரிவித்தார்.
வாஷிங்டனில், தனக்கு தரப்பட்ட வரவேற்பினால் உற்சாகம் அடைந்த ஹோவர்ட், சர்வதேச
அளவில் பெரும் செல்வாக்குள்ள தலைவரைப்போல் காட்டிக்கொள்ள முயன்றதோடு, அமெரிக்காவின் இன்றைய
கொள்கையைக் கேட்பவர்களுக்கு தகுந்த விளக்கமும் தந்தார். ரம்ஸ்பீல்ட்டுடன் கூட்டாக சேர்ந்து பத்திரிகையாளர்
மாநாட்டில் கலந்துகொண்ட ஹோவார்ட், ''இதுபோன்ற பெரிய சுமையை அமெரிக்காவும், பிரிட்டனும் மட்டுமே
தாங்க முடியும் என்று அவுஸ்திரேலியா நம்பவில்லை'' என்றும் குறிப்பிட்டார்.
''உலகம் முழுவதிலும் நம்பிக்கை ஒளி தோன்ற வேண்டும், ஒரே கருத்தை ஈராக்கிற்கும்
குறிப்பாக அரபு நாடுகளுக்கும் உரத்த குரலில் சொல்ல வேண்டும். நண்பர்களே, போட்டி தொடங்கிவிட்டது என்று
அறிவிக்க வேண்டும்''. இப்படி ஹோவர்ட் தன்னை ஒரு நியாயமான, சாதாரண அடிமட்டத்து மனிதனைப்போல்
காட்டிக்கொள்ள முயன்றிருப்பது, முழுக்க அவரது இயல்புக்கே விரோதமானது. ஹோவர்ட்டின் ஊடக ஆலோசகர்கள்,
அவருக்கு இவ்வாறு ஆலோசனை கூறியிருக்கிறார்கள் என்பது அவரது உரைகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
நியூயோர்க்கில் ஹோவர்ட், ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அனான் மற்றும்
ஐ.நா. தலைமை ஆயுத ஆய்வாளர் ஹான்ஸ் பிளிட்ஸ் இருவரையும் சந்தித்தார். ஈராக் தனது ஆயுதங்களைத் துறப்பதற்கு
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிர்ப்பந்தங்களைப் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஐ.நா.வின் மதிப்பும்,
செல்வாக்கும் ''நிரந்தரமாக சேதமடைந்துவிடும்'' என்று அவர் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் கூறியதாக பத்திரிகைகள்
செய்தி வெளியிட்டன. ஈராக் தனது ஆயுதங்களை துறந்துவிடவேண்டும். அல்லது அதன் விளைவுகளை சந்திக்க வேண்டும்
என்று ஹோவர்ட் குறிப்பிட்டார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈராக் தொடர்பான தனது தீர்மானங்களை நேரடியாகவும்,
அதிகாரபூர்வமாகவும் செயல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
பிளிட்ஸின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர், அந்த அறிக்கை வெளியிடப்படுவது ''மிகமிக
முக்கியமான'' நிகழ்ச்சி என்றும் கூறினார். ஆயுத ஆய்வாளர்களின் அறிக்கை, அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு
எந்தவிதமான விசையையும், உந்து சக்தியையும் தரவில்லை என்பதால் ஹோவார்ட் அந்த அறிக்கையை சாதாரணமாகத்
தள்ளிவிட்டார். ''இறுதியாகப் பார்த்தால் அதில் ஒன்றும் அதிகம் இருப்பதாக நான் நினைக்கவில்லை'' என்று புஷ்
நிர்வாகத்தின் பாணியை பின்பற்றி ஹோவார்ட் கருத்து தெரிவித்தார்.
ஹோவர்ட்டை பெரிய அளவில், ஒரு நாட்டின் தலைவராக சித்தரித்துக்காட்ட வாஷிங்டன்
மேற்க்கொண்டிருக்கிற முயற்சியானது சிரிப்புக்கு இடமளிக்கிறது. அவுஸ்திரேலியாவிலேயே மிகக் குறைந்த அறிவாற்றல்
உள்ளவர், பண்பாடு இல்லாதவர் அண்மை ஆண்டுகளில் மிகக் குறுகலான மாகாண முதல்வர் அளவிற்கு உள்ளவர். தனது
அந்தஸ்து பற்றி வெட்கப்படாதவர் ஆகும். அவரது அரசியல் வாழ்க்கையே, அவுஸ்திரேலிய சமூகத்தில் மிகவும் பின்தங்கிய
மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சக்திகளை திரட்டித்தான் ஆரம்பிக்கப்பட்டதாகும். ஆனால் சென்ற வாரம் வாஷிங்டனில்
அவருக்கு புதிதாக பாராட்டுகள் குவிந்தன. இதற்குக் காரணம் சர்வதேச அளவில் அமெரிக்க அரசு அதிக அளவில் தனிமைப்படுத்தப்பட்டு
வருகிறது என்பதாகும்.
லண்டனில் டொனி பிளேயர் மற்றும் ஜகார்த்தாவில் இந்தோனேஷிய ஜனாதிபதி மேகவதியையும்
சந்தித்த பின்னர் சென்ற ஞாயிற்றுக்கிழமை காலை ஹோவர்ட் அவுஸ்திரேலியா திரும்பினார். பின்பு அங்கு உள்நாட்டு
ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டியில், இப்படிப்பட்ட போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களால் தான் மாறப் போவதில்லை
என்று கருத்து தெரிவித்தார். அத்துடன் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்களை ''கலகக்
கும்பல்'' என்று மிகுந்த இறுமாப்போடு வர்ணித்தார்.
போர் முயற்சிக்கான ஆதரவைக் கொடுப்பதற்கு அடிப்படையாக அமைந்திருக்கும்
''உண்மையான'' காரணங்களையும் விளக்கினார். ''மக்களை கொன்று குவிக்கும்'' பயங்கர ஆயுதங்கள் என்ற
பொய்க் குற்றச்சாட்டை திரும்பச் சொன்னார். அதே அடிப்படையில் உலக சமாதானத்தை நிலைநாட்டுவது தனது
நோக்கம் என்றார். அமெரிக்காவும், அவுஸ்திரேலியாவும் உடன்பாடு செய்து கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
''உலக அளவில், நமது அந்தஸ்தை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இது மிக முக்கியமான கருத்தாக கொள்ளத்தக்கது''
என்று விளக்கமும் தந்தார்.
விபரங்கள் எதையும் தருவதற்கு ஹோவர்ட் மறுத்துவிட்டாலும், முர்டோக்கின் அவுஸ்திரேலியன்
நாளிதழ் அடுத்த நாள் ஒரு கட்டுரையை பிரசுரித்தது. ''போரின் விளைவாக, போரின் பரிசாக அமெரிக்காவுடன்
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்துகொள்ளும்'' என்று தலைப்பிட்டு அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது. சுதந்திர
வர்த்தக பேரத்தின் மூலம், அதிகமான அளவிற்கு பயன்பெறுகின்ற அவுஸ்திரேலிய தொழில்களை அந்தக் கட்டுரையில்
பட்டியல் போட்டு விளக்கியிருந்தார்கள்.
''கடந்த ஐம்பது ஆண்டுகளில் முதல் தடவையாக'' அவுஸ்திரேலியா, அமெரிக்காவுடன்
ஒரு போரில் பங்கு எடுத்துக்கொண்டு போர் முடிந்த பின்னர், ''பொருளாதார அனுகூலங்களை பெறுவதற்கு வாய்ப்பு
உருவாகியுள்ளது'' என்று அந்தப் பத்திரிகை எழுதியுள்ளது. சர்க்கரை, பால் பண்ணைப் பொருட்கள், மாட்டு இறைச்சித்
தொழில், திரைப்படத் தயாரிப்பு, மருந்துகள், ஆராய்ச்சி மற்றும் சேவைத் தொழில்கள் ஆகியவை மிகப்பெரும்
அளவிற்கு லாபம் பெறும் என்று அந்தப் பத்திரிகை மதிப்பீடு செய்திருக்கிறது.
''பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' மற்றும் ''பாதுகாப்பாக வாழும் இடமாக
உலகை மாற்றுவது'' என்பதற்கு அப்பால், ஹோவர்ட் அரசாங்கம் அமெரிக்கா தலைமையில் நடத்தப்படும் கிறிமினல்
போர் முயற்சிக்கு அடிமைத்தனமாக ஆதரவு தருவதற்கான காரணம், அவுஸ்திரேலிய கூட்டுத்தாபனங்களின் கூலிப்படை
நலன்களை பாதுகாப்பதற்காகத்தான் ஆகும். அத்தோடு, அமெரிக்காவுடன் அதன் பொருளாதார உறவுகளை நிலைநாட்டவும்,
தனது ஆசியா-பசிபிக் பிராந்தியத்தின் விரிவான பொருளாதார மற்றும் கேந்திர நலன்களைக்
காப்பாற்றிக்கொள்ளவும், அது இப்போருக்கு ஆதரவு காட்டி வருகிறது.
Top of page
|