World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைLTTE calls for SEP members in northern Sri Lanka to be "wiped out" தமிழீழ விடுதலைப் புலிகள் வட இலங்கையில் உள்ள சோ.ச.க. அங்கத்தவர்களை "ஒழித்துக்கட்ட" அழைப்பு விடுக்கின்றது By K. Ratnayake தமிழீழ விடுதலைப் புலிகள், தனது இரு அங்கத்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ள இரண்டு வழக்குகளின் விசாரணைகள் இடம்பெறுவதற்கு முன்னதாக, வட இலங்கையின் ஊர்காவற்துறை தீவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை உக்கிரப்படுத்தியுள்ளது. திங்கட் கிழமை இரவு, "சோ.ச.க. உறுப்பினர்களையும் அவர்களின் கட்சி நடவடிக்கைகளையும் தீவுப்பகுதியிலிருந்து துடைத்துக் கட்ட" அனைத்து மக்களுக்கும் அழைப்புவிடுக்கும் துண்டுப்பிரசுரங்கள் தீவின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்தன. இந்த துண்டுப்பிரசுரம் குறிப்பாக நான்கு சோ.ச.க. அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பெயர்களை -முத்துலிங்கம் முருகானந்தன், நடராஜா விமலேஸ்வரன், நாகராஜா கோடீஸ்வரன், இராசலிங்கம் திலகேஸ்வரன் மற்றும் கிருஷ்ணபிள்ளை சித்திரகுமார்- குறிப்பிட்டுள்ளதோடு, "விடுதலைப் புலிகளுக்கு எதிராக அறிக்கைகள் விடுப்பதாகவும், வேலணை மேற்கு அம்பிகைநகர் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் எதிராக இயங்குவதாகவும்," கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த துண்டுப் பிரசுரம் கணனி ஒன்றில் தயாரிக்கப்பட்டு "வேலனை மேற்கு, அம்பிகைநகர் பொதுமக்கள்" என கையொப்பமிடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், விடுதலைப் புலிகள் இந்த அச்சுறுத்தலை அனுமதித்துள்ளனர் என்பதில் சந்தேகத்துக்கிடமில்லை. இந்த அமைப்பு தனது அரசியல் எதிரிகள் மீது உடல்ரீதியான வன்முறைகளை பயன்படுத்துவதில் பிரசித்திபெற்றதாகும். கடந்த செப்டம்பரில், விடுதலைப் புலிகளின் ஊர்காவற்துறை பிரதேச தலைவரான செம்மணன், சோ.ச.க. முன்னின்று அமைத்த அம்பிகை நகர் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம், அப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் அலுவலகமொன்றை அமைக்க சங்கத்திலிருந்து நிதியுதவி தர மறுத்ததை தொடர்ந்து சோ.ச.க. வுக்கு எதிராக கொலை அச்சுறுத்தல்களை விடுத்தார். அக்டோபர் 8, விடுதலைப் புலி உறுப்பினரான கார்த்திகேசு அமிர்தலிங்கம், சோ.ச.க. அங்கத்தவரான நாகராசா கோடீஸ்வரனை காரணமின்றி தாக்கி அவரது தலை கழுத்து மற்றும் தோள்களில் பெரும் காயங்களை விளைவித்தார். சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளமும், விடுதலைப் புலிகளின் தலைமையானது ஊர்காவற்துறையில் உள்ள தனது அலுவலர்களை ஒரு ஒழுங்குக்கு அழைக்குமாறும், சட்டபூர்வமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கட்சியின் ஜனநாயக உரிமையை உத்தரவாதம் செய்யுமாறும் கோரும் அனைத்துலக பிரச்சாரத்தை தொடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் சோ.ச.க. வுக்கு எதிரான தனது அச்சுறுத்தல்களை தீவிரமாக்குவதன் மூலம் பிரதிபலித்தது. அண்மைய துண்டுப்பிரசுரமானது இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவிருக்கும் இரண்டு வழக்குகளுக்கும் -முதலாவது ஆரம்ப மரண அச்சுறுத்தல் தொடர்பாக செம்மணனுக்கு எதிரானது. இரண்டாவது அமிர்தலிங்கம் தொடுத்த தாக்குதல் தொடர்பானதாகும்- சிறிது முன்னதாகவே ஒட்டப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளிலும், பொலிசார் குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்தது உ.சோ.வ.த. வின் பிரச்சாரம் உலக ரீதியில் கண்டனக் கடித வடிவிலான ஆதரவைப் பெறத்தொடங்கிய பின்னரேயாகும். அமிர்தலிங்கத்துக்கு எதிரான வழக்கின் ஆரம்ப விசாரணையின் போது, சோ.ச.க. அங்கத்தவர் கோடீஸ்வரன் சார்பான சட்டத்தரணி, பொலிசார் முன்வைத்த அற்ப குற்றச்சாட்டுக்களை சவால் செய்தார். அவரது வேண்டுகோளின் பிரகாரம், நீதிபதி கோடீஸ்வரனின் காயங்களின் தீவிரத்தை உறுதிப்படுத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பூரண அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார். ஊர்காவற்துறையில் இந்த வாரம் ஒட்டப்பட்டிருந்த அச்சுறுத்தல் துண்டுப்பிரசுரத்தில் இரு அப்பட்டமான பொய்கள் காணப்பட்டன. "சமாதானத்தை விரும்பாதவர்களையும் தொழிலாளர்களின் பணத்தை அபகரிப்பவர்களையும் விரட்டியடி," என அதன் தலைப்பு குறிப்பிட்டிருந்தது. சோ.ச.க. வை "தொழிலாளர் பணத்தை களவாடுவதாக" அல்லது அம்பிகை நகர் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்துக்கு "எதிராக செயற்படுவதாக" மறைமுகமாக சுட்டிக்காட்டுவதே அதன் தலையங்கத்தில் வெளிப்படுகிறது. இந்த சங்கமானது, சோ.ச.க. அங்கத்தவர்களது ஊக்குவிப்பினால் நிறுவப்பட்டதுடன், மீனவர்களது உரிமைகளை காக்கும், குறிப்பாக இலங்கை கடற் படையினரின் அடக்குமுறைகளுக்கு எதிரான அதன் பிரச்சாரங்களால் பிரசித்தி பெற்றதாகும். துண்டுப்பிரசுரத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சோ.ச.க. அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களான நால்வரும் சங்க குழுவுக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகும். இந்தக் குழு, விடுதலைப் புலிகளின் அலுவலகம் ஒன்றை அந்தப் பிரதேசத்தில் அமைப்பதற்காக நிதி வழங்க மறுத்ததையடுத்து, அது சங்கத்தை கைப்பற்றிக் கொள்ள முயற்சித்தது. அது ஜனநாயகமற்ற விதத்தில் விடுதலைப் புலி ஆதரவாளர்களது குழுவொன்றை நியமித்து, சங்க அலுவலகத்தை பலாத்காரமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன் சோ.ச.க. அங்கத்தவர்கள், சங்கத்தின் அலுவலர்கள் என்ற வகையில் அவர்களின் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை சாத்தியமற்றதாக்கியுள்ளது. தற்சமயம் விடுதலைப் புலிகள், உள்ளூர் மீனவர்களை இணைத்துக்கொள்வதன் பேரில் அவர்களை கொடுமைப்படுத்தவும் அச்சுறுத்தவும், மற்றும் சோ.ச.க. அங்கத்தவர்களான சங்க குழு உறுப்பினர்களை சங்க கையேடுகளையும் நிதியையும் கையளிக்குமாறு வற்புறுத்தவும், தனது போலி சங்கத்தை அங்கீகரிக்குமாறு உள்ளூர் அதிகாரிகளை நெருக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக உள்ளடக்கமானது, சோ.ச.க. வை "தொழிலாளர்களின் பணத்தை களவாடுவதாக" குற்றஞ்சாட்டும் அசட்டுத்தனத்தைக் கொண்டுள்ளது. சோ.ச.க. அங்கத்தவர்கள் "சமாதானத்தை விரும்பவில்லை" என்ற இரண்டாவது குற்றச்சாட்டும் இதற்கு சமமாக முற்றிலும் வஞ்சகமான ஒன்றாகும். சோ.ச.க, (அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும்) ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் நாட்டின் தமிழ் சிறுபான்மையினரது ஜனநாய உரிமைகளை நசுக்குவதற்காக முன்னெடுத்த கொடூர யுத்தத்திற்கு எதிரான அதன் கொள்கைபிடிப்பானதும் பலம்வாய்ந்ததுமான நிலைப்பாட்டுக்கு இலங்கை பூராவும் பிரசித்த பெற்ற ஒன்றாகும். கடந்த 19 வருடங்களாக, இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தீவின் வடக்கு கிழக்கிலிருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தனையின்றி வெளியேற்றுமாறு சமரசமற்று கோரிவருவதோடு தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றது. சோ.ச.க. சமாதானத்துக்கு எதிராக அல்ல. மாறாக பெரும் வல்லரசுகள் மற்றும் பெரு வர்த்தகர்களின் அனுசரணையுடன் இலங்கை அரசாஙக்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மூடிய கதவுகளுக்குள் இடம்பெறும் "சமாதானப் பேச்சுவார்த்தைகள்" என்ற மோசடியான கொடுக்கல் வாங்கல்களையே எதிர்க்கின்றது. இரு சாராரும், சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆளும் கும்பல்களுக்கிடையிலான ஒரு அதிகாரப்பகிர்வு உடன்படிக்கையை ஸ்தாபிப்பதற்காக, யுத்தத்துக்கு முடிவுகட்டும் சாதாரண உழைக்கும் மக்களின் உண்மையான அபிலாஷைகளை சுரண்டிக் கொள்கின்றனர். அவ்வாறான ஒரு உடன்படிக்கையானது, சிங்களம் மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்துக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிராக திருப்பப்படும் என சோ.ச.க. உறுதியாக எச்சரிக்கின்றது. தாய்லாந்தில் இடம்பெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையில், விடுதலைப் புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளர் அன்டன் பாலசிங்கம் "தீவை வெற்றிகரமான புலி பொருளாதாரத்துக்கு மாற்றியமைப்பதில்" இலங்கை அரசாங்கத்துடன் சம பங்காளியாகுவதற்கான விடுதலைப் புலிகளின் விருப்பினை வெளிப்படுத்தினார். இந்த கூற்றானது, சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மறுசீரமைப்பு கோரிக்கைகளை அமுல்செய்வதற்கான கொழும்பின் முயற்சிகளுக்கு விடுதலைப் புலிகள் ஆதரவு வழங்கும் என சர்வதேச முதலீட்டாளர்களுக்கு திட்டமிட்டு விடுக்கும் சமிக்ஞையே ஆகும். ஆனால், இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான திட்டங்களை அமுல்படுத்த வேண்டுமானால், தனது தொழில், நிலைமைகள் மற்றும் வாழ்க்கை தரத்தை சீரழிப்பதற்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்க வேண்டும். விடுதலைப் புலிகள் கொழும்பு கொள்கைகளின் பொலிஸ்காரனாக இலங்கை பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து செயற்படுவதற்கான தமது விருப்பினை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த மாதம் சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில் பாலசிங்கம் பின்வருமாறு விளக்கினார்: "நாம் ஆயுதப் படைகளை, இராணுவ முகாம்களை அல்லது இராணுவக் கட்டிடங்களை கலைக்குமாறு கோரவில்லை... நாம் இராணுவத்தை வெளியேறக் கோரவில்லை." இன்னமும் இதே ஆயுதப் படைகள் இரு தசாப்தங்களாக வடக்கு கிழக்கில் ஒரு பயங்கரவாத மற்றும் ஒடுக்குமுறை ஆட்சியை நடத்தி வருவதுடன் ஆயிரக்கணக்கானோரை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றியுள்ளதோடு, ஏனைய பெருந்தொகையானவர்களின் சாவுக்கும், காயங்களுக்கும் பொறுப்பாளிகளாக உள்ளனர். சோ.ச.க, விடுதலைப் புலிகளின் அரசியல் முன்நோக்குடன் அடிப்படையான, கொள்கை ரீதியான வேறுபாட்டைக் கொண்டுள்ளது என்பது நன்கு தெரிந்ததே. ஆனால் விடுதலைப் புலிகள் வெறுமனே தனது நிகழ்ச்சி நிரலை பகிரங்கமாக ஊர்காவற்துறை மீனவர்கள் முன் சமர்ப்பிக்க முடியாதுள்ளது. ஆகவே அது தனது பரந்த முதலாளித்துவ வேலைத்திட்டம் பற்றிய சோ.ச.க. வின் கண்டனங்களுக்கு பதிலளிக்க இலாயக்கற்றுள்ளது. இதற்குப் பதிலாக அது காடைத்தனத்தையும் பொய்களையும் அவிழ்த்து விடுகின்றது. மூன்று மாதங்களாக உ.சோ.வ.த. தனது பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்துள்ள போதிலும், விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம், தமக்குக் கீழ் இயங்குபவர்களை ஒரு ஒழுங்குக்கு கொண்டுவருமாறும் அச்சுறுத்தல்களில் இருந்து சுயாதீனமாக தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சோ.ச.க.வின் உரிமையை உறுதிசெய்யுமாறும் கோரி, உலகம் பூராவும் இருந்து வந்த பல கடிதங்களுக்கு அறிக்கைகளை வெளியிடவோ அல்லது பதலளிக்கவோ தவறிவிட்டது. கடந்த மாதம் விடுதலைப் புலிகள் ஊர்காவற்துறையில் உள்ள தனது அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதனூடாக தனது பிரதிபலிப்புகளை காட்டியது. ஆரம்பத்தில் கொலை அச்சுறுத்தல் விடுத்த செம்மணன், யாழ்ப்பாண மாவட்டத்துக்கான உப அரசியல் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அவரது உதவியாளரான அருந்தவனும் மற்றுமொரு முன்னணி அங்கத்தவரான தேவனும் முறையே ஊர்காவற்துரையின் பிரதேச தலைவராகவும் பிரதி பிரதேச தலைவராகவும் பதவி உயர்வளிக்கப்பட்டுள்ளனர். சோ.ச.க. வை ஊர்காவற்துறையிலிருந்து "ஒழித்துக் கட்டுவதற்கான" விடுதலைப் புலிகளின் முயற்சிகள், கொழும்புடனான அதன் அதிகாரப் பகிர்வு தயாரிப்புகளை திணிப்பதற்காக அது பயன்படுத்தவுள்ள வழிமுறைகள் சம்பந்தமாக இலங்கை தொழிலாள வர்க்கத்துக்கு விடுக்கும் தெளிவான எச்சரிக்கையாகும். உண்மையில், விடுதலைப் புலிகள் மீது ஆத்திரமும் வெறுப்பும் அடைந்துள்ள தமிழர்கள் மத்தியில் சோ.ச.க. குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் என அது பீதிகொண்டுள்ளது. இந்த அமைப்பு பாடசாலை பிள்ளைகளை போராளிகளாக "இணைத்துக் கொள்ளவும்" மற்றும் சிறு வியாபாரிகளிடம் வரிகளை கறந்துகொள்ளவும், விலைவாசியை வானுயர வைப்பதற்கும் இதே வழிமுறைகளையே கையாளுகின்றது. சோ.ச.க, விடுதலைப் புலிகளின் அண்மைய அச்சறுத்தலின் அர்த்தத்தையிட்டு சந்தேகமின்றி உள்ளது. எமது ஊர்காவற்துறை தோழர்களின் உயிர் பெரும் ஆபத்துக்குள்ளாகியுள்ளது. நாம் எமது பிரச்சாரத்துக்கான தமது ஆதரவை புதுப்பிக்க முயற்சிக்குமாறும், விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கண்டனம் செய்யும் கடிதங்களை அனுப்புமாறும் தொழிலாளர்கள், புத்தி ஜீவிகள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். எமது பிரச்சாரத்துக்கும் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்குமான செலவீனங்களுக்காக திரட்டப்படும் 50,000 ($US500) ரூபா பாதுகாப்பு நிதிக்கு நிதிவழங்குமாறும் வேண்டுகிறோம். கடிதங்களையும் அறிக்கைகளையும் தபால் செய்யவேண்டிய அல்லது மின்னஞ்சல் செய்யவேண்டிய முகவரிகள்: யாழ்ப்பாணம் Ilamparithi Sri Lanka கொழும்பு LTTE Sri Lanka Email: slmm-hq@mfa.no அவை கீழ்வரும் முகவரிகளுக்கும் தபால் செய்ய அல்லது தொலைமடல் செய்ய முடியும்: லண்டன் The LTTE c/- Eelam House 202 Long Lane London SE1 4QB United Kingdom Telephone: 44-171-403-4554 Fax: 44-171-403-1653தயவு செய்து அனைத்து அறிக்கைகளின் பிரதிகளையும் உ.சோ.வ.த.வுக்கும் அனுப்பி வைக்கவும்: Email: editor@wsws.org Fax: United States: 248-967-3023 Britain: 0114 244 0224 Australia: 02 9790 3501 நிதி உதவிகள் அனுப்பப்பட வேண்டிய முகவரி: Account Number 1472834301 at the Kirullapona Branch of
the Commercial Bank of Ceylon |