World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : பூகோள போர் எதிர்ப்பு கண்டனம்

Tens of thousands march in South Africa against Iraq war

தென்னாபிரிக்காவில் ஈராக் போருக்கு எதிராக பத்தாயிரக்கணக்கானோர் ஊர்வலம்

By Eric Graham
18 February 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் போர் முயற்சியைக் கண்டித்து சனிக்கிழமையன்று தென்னாபிரிக்காவில் பத்தாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்றனர். கேப்டவுன், ஜொஹான்ஸ்பேர்க், டர்பன் மற்றும், புளோம்பான்ரைன் பகுதிகளில் கண்டன ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

இந்தக் கண்டன ஊர்வலங்களை தென்னாபிரிக்க போர் எதிர்ப்புக் கூட்டணி நடத்தியதுடன், இந்தக் கூட்டணியில் 50 க்கு மேற்பட்ட அமைப்புகள் இணைந்து கொண்டன. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், அசானியன் மக்கள் அமைப்பு, பேன் ஆபிரிக்கன் காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக இயக்கம், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, தென்னாபிரிக்க தொழிற்சங்கங்களின் காங்கிரஸ், தென்னாபிரிக்க தேசிய குடி அமைப்பு, தென்னாபிரிக்க சர்ச் கவுன்சில், மனித உரிமைகளுக்கான வக்கீல்கள் அமைப்பு, முஸ்லீம் நீதித்துறை கவுன்சில், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்கின்ற அமைப்பான NOT IN MY NAME என்கிற தென்னாபிரிக்க யூதர்கள் அமைப்பு, ஆகிய பல்வேறு அமைப்புகள் இந்த ஊர்வலங்களில் கலந்துகொண்டன.

இந்த நிருபர், கேப் டவுனில் காலை 10 மணிக்குத் தொடங்கிய ஊர்வலத்தில் கலந்துகொண்டார். 20,000 ஆர்பாட்டக்காரர்கள் ஊர்வலமாக கீஸர்கிராசிட் தெருவிலிருந்து தொடங்கி நகரின் மையப்பகுதிகளைக் கடந்து கடற்கரையையொட்டியுள்ள அமெரிக்கத் தூதரகம் வரை சென்றது. நிறம், வயது கடந்து அனைத்து மக்களும் மற்றும் குடும்பம் குடும்பமாக குழந்தைகளைத் தள்ளு வண்டியில் ஏற்றியபடி பல குடும்பத்தினர்களும் இந்த ஊர்வலத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். விடுமுறைக்காக வந்திருந்த மற்றும் தென்னாபிரிக்காவில் வாழ்ந்து வருகின்ற அமெரிக்கக் குடிமக்களில் எண்ணிக்கையானவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

கண்டனப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் பதாகைகளை ஏந்தி வந்ததோடு, அவர்கள் புஷ்ஷின் போர்த் திட்டங்களையும் கண்டித்தனர். ஒரு குழுவினர், சிகப்பு வர்ணம் பூசிக்கொண்டு, ''ஐக்கிய அமெரிக்க ஆக்கிரமிப்பு'' (UNITED STATES OF AGGRESSION) என்ற பதாகையையும், புஷ் நிர்வாகத்தின் போர் முயற்சிகளுக்கும், ஈராக் எண்ணெய் வளத்திற்குமிடையே வலுவான தொடர்புகள் இருப்பதைக்காட்டும் வகையில் பேனர்களையும் அவர்கள் வைத்திருந்தனர்.

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியில் கலகம் அடக்கும் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ததோடு தூதரகத்தைச் சுற்றி கம்பிவேலிகளையும் அமைத்தனர். கலந்து கொண்டவர்களில் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், அமெரிக்க ஆக்கிரமிப்பைக் கண்டித்து உரையாற்றியதுடன், போருக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் நடைபெற்ற பேரணிப் பிரகடனங்களையும் அங்கு வாசித்தனர்.

ஊர்வலத்தில் கலந்துகொண்ட பலர், உலக சோசலிச வலைத் தளத்திற்குப் பேட்டியளித்தனர். போல் என்ற கேப்டவுன் பல்கலைக்கழக மாணவர், ஈராக்கின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதற்காகத்தான் அமெரிக்கா விருப்பங்கொண்டு இந்தப் போரில் இறங்குவதாகக் குறிப்பிட்டதுடன், ஐ.நா.விடம் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கருத்துத் தெரிவித்தார். ''ஐ.நா.வை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது. அமெரிக்க நலன்களுக்காகவே அது பணியாற்றி வருகிறது'' என அந்த மாணவர் குறிப்பிட்டார்.

இன ஒதுக்கல் எதிர்ப்பு இயக்கக் காலத்திலிருந்து பல ஆர்பாட்டங்களில் கலந்துகொண்ட அனுபவம் உள்ள ரெதுவான் என்ற ஒரு கடை மனேஜர், சுயநலநோக்கினால்தான் குறிப்பாக ஈராக்கின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதற்காகத்தான் புஷ் உறுதியோடு இந்தப் போரில் இறங்கத் திட்டமிட்டிருக்கிறார் எனக் கருத்துத் தெரிவித்தார். ''அமெரிக்கா மத்திய கிழக்கில் குழப்பத்தை ஏற்படுத்தி, இஸ்ரேலைப் பாதுகாக்க விரும்புகிறது'' என்றும் அவர் குறிப்பிட்டார். ''இஸ்ரேலின் ஷெரோன் அரசு, இந்தப் போரை ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு பாலஸ்தீன மக்களுக்கு எதிராக, மேலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இறங்கும். இஸ்ரேல் பிடித்துக்கொண்ட பகுதிகளிலிருந்து பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய நிலை வரலாம்'' என்று மேலும் அவர் கவலை தெரிவித்தார்.

தற்போது வேலை இல்லாமல் இருக்கும் பட்றிக் என்ற இளைஞர், இளைஞர்களது குரல் இதுபோன்ற பேரணிகளில் எதிரொலிக்க வேண்டும் என்றதுடன், ''மக்கள் தங்களது எண்ணங்களை தாங்களே முன்வந்து பேசவேண்டும். எமது சார்பில் அரசாங்கங்கள் பேசுவதற்கு அனுமதிக்கக்கூடாது. பயங்கரவாதம் பற்றிய பேச்செல்லாம் மிகவும் அபத்தமாக இருக்கின்றது. இந்தப் போரில் எவ்வளவு பேர் கொல்லப்படுவார்கள் என்பதைப் பற்றி புஷ்ஷுக்கு எதுவித கவலையுமில்லை'' எனக் கூறினார்.

ஐ.நா.வின், பாத்திரம் பற்றி பட்றிக் அவநம்பிக்கை தெரிவித்ததோடு, ஐ.நா.வை அமெரிக்கா மிரட்டிக்கொண்டிருக்கிறது என்றும் ''ஐ.நா. தீர்மானத்தை நாம் ஆதரிக்கக்கூடாது. அந்தத் தீர்மானம் ஈராக் மக்களைப் பற்றியது அல்ல. அமெரிக்க அரசு ஊழல் மலிந்த வர்த்தகத்தைப் போன்றுள்ளது. எவரும் இந்தப் போரை விரும்புவதாக நான் நினைக்கவில்லை'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

முரண்பாடுகளை சமரசம் செய்து வைப்பவரான நக்காபா என்பவர், ''சமுதாயத்தை இராணுவமயமாக்குவதை உலக மக்கள் துணிவோடு எதிர்த்து நிற்கவேண்டும். அமெரிக்கா, உலகை இராணுவமயமாக்க முயலுகிறது. இந்த முயற்சிக்கு எதிராக உலக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். ஒருதலைப்பட்சமாக ஈராக் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டால், அது ஜனநாயக உரிமைகளைச் செல்லரிக்கும் புதிய யுகத்தைத் தொடக்கி வைத்துவிடும். இனி நமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ள உரிமைகளைப் பெறமுடியாது. இராணுவ வலிமையும், பொருளாதார நலன்களும் தான் எதிர்காலத்தில் சர்வதேச உறவுகளை முடிவு செய்யும் அம்சங்களாக இருக்கும்'' என்று குறிப்பிட்டார். ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அல்லது இல்லாவிட்டாலும் இந்தப் போரை தான் எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தென்னாபிரிக்காவிற்கு விடுமுறைக்காக வந்திருக்கும் அமெரிக்கப் பிரஜையான இலனா, தான் அமெரிக்காவிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கப்பலில் ஏற்றப்பட்டு மரணத்தை சந்திப்பதற்காக வளைகுடாவிற்கு அனுப்பப்படுவதைப் பார்த்துவிட்டு வந்ததாக குறிப்பிட்டார். ''மேலும் பல மக்கள் பலியாவதைத் தடுப்பதற்காகத்தான் இந்தப் போரை நான் எதிர்ப்பதற்கு காரணம் '' என்று இலனா குறிப்பிட்டார்.

பேட்டியளித்த மிகப் பெரும்பாலானோர் புஷ்ஷின் போர்த் திட்டங்களைக் கண்டித்த தென்னாபிரிக்க ஜனாதிபதி தாபோ மபெக்கி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோரின் கருத்தை ஆதரித்தனர். ஆனால் இந்த இருவரும் ஐ.நா. ஈராக் மீது இராணுவ நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளித்தால், இதே எதிர்ப்பை நிலைநாட்ட முடியுமா? என்பதில் நிச்சயமில்லை என்று மேலும் அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

See Also :

போர் எதிர்ப்பு இயக்கம் எதிர்கொள்ளும் பணிகள்

உலக வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஒரு நிகழ்ச்சி

Top of page