World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: மத்திய கிழக்கு : ஈராக்Bush administration stung by second report of Iraq inspectors ஐ.நா ஆயுத ஆய்வாளர்களின் இரண்டாவது அறிக்கையால் புஷ் நிர்வாகம் கடுப்பு By Patrick Martin ஐ.நா தலைமை ஆயுத ஆய்வாளர்களான Hans Blix மற்றும் Mohamed ElBaradei இருவரும் வெள்ளிக்கிழமையன்று தங்களது இரண்டாவது அறிக்கையை ஐ.நா பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் அவர்கள், ஈராக்கிடம் அணு மற்றும் உயிரியியல் அல்லது இரசாயன அடிப்படையிலான ஆயுதங்கள் எதுவேனும் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் தற்போது இல்லை என கூறியிருந்தனர். அதற்கு புஷ் நிர்வாகம் தனது கடுமையான கசப்பு உணர்வை வெளிப்படுத்தியது. புஷ் நிர்வாகம் தனது போர் முயற்சிக்கு அடிப்படையாகக் கொண்டிருந்த விடையங்களுடன் பகிரங்கமாக முரண்படும், Blix மற்றும் ElBaradei இன் அறிக்கை சமர்பிக்கப்படும் வேளையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் Colin Powell தனது முகத்தில் எந்த உணர்ச்சியுமற்று கல்லாய் அமர்ந்திருந்து கேட்டார். அவர்களது அறிக்கை வெளிவந்தவுடன் பிரான்ஸ், ரஷ்யா, சீனா, மற்றும் ஜேர்மனிய தூதுவர்கள் அதனை ஆதாரமாய் உடன்பற்றி ஈராக் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க அங்கீகாரம் வழங்க வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா வைத்துள்ள கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அண்மைய வாரங்களில் ஈராக் ஐ.நா ஆயுத ஆய்வாளர்களுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு தந்துவிடுவதாகவும், ஈராக்கின் ஆயுத தயாரிப்பு விஞ்ஞானிகளை தனிப்பட்ட முறையில் பேட்டி காண்பதற்கு முதல் தடவையாக ஈராக் அனுமதி வழங்கியுள்ளதனையும் Blix குறிப்பிட்டார். மேலும் ஈராக் எல்லைக்குள் U-2-உளவு விமானங்களை செயற்படுத்த ஐ.நா.விற்கு ஈராக் அனுமதி வழங்கியுள்ளது, ஈராக்கில் எந்த இடத்திற்கு ஆய்வாளர்கள் செல்லவிருந்தாலும் அதற்கு முழு வசதிகளையும் ஈராக் தொடர்ந்து வழங்குமென அவர் தெரிவித்தார். சென்ற வாரம் ஐ.நா பாதுகாப்பு சபையில் Powell உரையாற்றும்போது கூறிய பல குற்றச்சாட்டுகளை சுவீடன் நாட்டு தூதுவர் வெளிப்படையாகவே மறுத்தார். தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ஈராக் மறைத்து வைத்திருப்பதாக ஐ.நா-வில் தனது தரப்பு சான்றாக ஈராக் ஆயுதக் கிடங்கு தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்றினை Powell குறிப்பிட்டுக் காட்டினார். அதைப்பற்றி கருத்து தெரிவித்த Blix ''இப்படி ஆயுதங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவது வழக்கமாக நடைபெறுகின்ற இயல்பான நடவடிக்கை தான்." இதைவிடுத்து ஆய்வாளர்களிடமிருந்து மறைப்பதற்கு ஈராக் முயன்றதாக இதனை எடுத்துக்கொள்ள முடியாது. "எந்தவொரு சம்பவத்திலும் ஆய்வாளர்கள் வருவதை முன் கூட்டியே அறிந்து ஈராக் நடவடிக்கை எடுக்கின்றது என்பதற்கு எந்த விதமான சான்றும் இல்லை'' என அவர் விளக்கினார். இது Powell இன் மற்றொரு குற்றச்சாட்டை மறுப்பதாக உள்ளது. ஈராக்கிடம் Al Samoud 2 ராக்கெட் உள்ளது. இது 150-கிலோ மீட்டருக்கு (93 மைல்கள்) அப்பால் சென்று தாக்கும் ராக்கெட்டுகளுக்கு ஐ.நா-பாதுகாப்புக் கவுன்சில் தடைவிதித்திருக்கிறது. ''ஈராக் வசம் உள்ள ராக்கெட்டுகள் சோதனை செய்யப்பட்டபோது அவை 110 மைல்கள் சென்றன இது ஒரு சிறிய வேறுபாடுதான், இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ஈராக் இந்த ராக்கெட்டுகள் தொடர்பாக தானே முன்வந்து தகவல்களை தந்தது'' என Blix ஒப்புக் கொண்டிருக்கிறார். அத்தகைய ராக்கெட்டுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தடைக்கு முரணானவையென்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியோடு எண்பதுகளில் தயாரித்த இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களின் முன்னைய கையிருப்புகளை எப்போது எப்படி ஈராக் அழித்தது என்பதற்கான முழு விபரங்களையும் ஈராக் தரவேண்டுமென்று கேட்கப்பட்டது ஆனால் முழு விபரங்களையும் ஈராக் தரவில்லை. இருந்தபோதிலும், இந்த ஆயுதங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என்று திட்டவட்டமாக ஆதாரம்காட்ட இயலாது என Blix குறிப்பிட்டார். ''அந்த ஆயுதங்கள் இருப்பதாக ஒருவர் முடிவு செய்துவிடக் கூடாது, இருப்பினும் இதற்கான சாத்தியங்கள் இல்லை எனவும் முடிவுகட்டிவிட முடியாது" என Blix குறிப்பிட்டார். "புஷ் நிர்வாகத்தின் குற்றச்சாட்டுகளுக்கு தெளிவாக ஆதரவளிக்காத தன்மை கொண்ட குறிப்பு ஒன்றில், அவர் கூறினார்; ஆய்வாளர்கள் தம் பங்கிற்கு, ஆதாரங்களின் அடிப்படையிலேயே அறிக்கை தரமுடியும், தம்மால் முடிந்தவரை பரிசோதித்ததன் பின்னர் பகிரங்கப்படுத்துவார்கள். ஆதாரம் இல்லாமல் நம்பிக்கை எழமுடியாது'' என Blix குறிப்பிட்டார். ElBaradei இன் அறிக்கை புஷ் நிர்வாகத்தின் நிலைப்பாட்டிற்கு சற்றும் சார்பானதாக அமையவில்லை. ''எங்களுக்கு விதிக்கப்பட்ட திகதி வரையில் ஈராக்கில் தடைவிதிக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்களோ இருப்பதற்கான அல்லது அணு தொடர்புடைய நடவடிக்கைகள் நடைபெறுவதற்கான எந்த விதமான ஆதாரத்தினையும் பெற்றுக்கொள்ளவில்லை'' என அவர் குறிப்பிட்டார்.வியன்னாவை தலைமையிடமாக்கொண்டு இயங்கிவரும் சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் (IAEA) தலைவராக பணியாற்றி வரும் ElBaradei, ஈராக் தனது அணுவாயுத திட்டத்தை மறைத்து வைத்திருக்க கூடும் என்ற புஷ் நிர்வாகத்தின் கருத்தை நேரடியாக மறுத்திருக்கிறார். மேலும், ''சர்வதேச அணுசக்தி ஏஜென்சி அணு ஆயுதங்கள் தொடர்பாக நடத்திவரும் நேரடி விசாரணைகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சம்மந்தப்பட்ட நாட்டின் முழு ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கூட அங்கு வலிந்து உட்புகுந்து விசாரணை நடத்துவதன் (Intrusive verification system) மூலம் அணுவாயுதங்கள் தொடர்பான தடயங்கள் இருப்பதை கண்டுபிடித்து விட முடியும்'' என அவர் விளக்கினார். கொலின் பவெல் குமுறல் Blix இன் அறிக்கை வலியுறுத்திய கருத்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் Powell ஐ நிச்சயமாக அதிர்ச்சியடைய செய்துவிட்டது. முதலாவது அறிக்கை ஜனவரி, 27ம் திகதி வெளியிடப்பட்டது அதைவிட இரண்டாவது அறிக்கை ஈராக்கின் ஒத்துழைப்பினை கடுமையான விமர்சன மதிப்பீட்டோடு வருமெனவும், அவ் அறிக்கை ஐ.நா பாதுகாப்பு சபையில் இராணுவத்தை பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் தரும் தீர்மானத்திற்கு அடிப்படையாக அமையும் என்றும் புஷ் நிர்வாகம் பல நாட்களாக ஊடகங்களுக்கு நம்பிக்கை தெரிவித்து வந்தது.திட்டவட்டமான கண்டனங்களுக்கு பதில் சொல்ல தயாரான நிலையில் Powell இல்லை. ஈராக் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறது என்பதற்கு அமெரிக்கா தாக்கல் செய்திருப்பதாக கூறப்படும் ஆதாரத்தை மறுத்து Blix கூறிய கருத்துக்களையோ அல்லது ஈராக் ஆயுத குவியல்கள் வைத்திருப்பதாக கூறப்படுவது குறித்த புலனாய்வு தகவலுக்கான அடிப்படையை தாக்கல் செய்வதற்கு அமெரிக்கா தவறிவிட்டதை அவர் கண்டித்திருப்பது குறித்தோ Powell எந்த விதமான பதிலும் கூறவில்லை. ஈராக்கில் ஐ.நா ஆய்வாளர்களது பணிகளை பாராட்டும் வேளையில், விரைவில் வரவிருக்கும் மற்றைய தகவல்களினை எதிர்பார்த்து, பல விதமாக அமையக்கூடும் என்பதனால் ஆயுத ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்டு பூர்த்தியாக்கப்படமால் தரப்பட்டிருந்த வரைவறிக்கையில் "அமெரிக்காவிற்கு ஈராக்கின் ஆயுதங்களால் ஆபத்து ஏற்படலாம்" என குறிப்பிடப்பட்டிருந்ததை அவதானமின்றி அப்படியே படித்து விட்ட Colin Powell அசடுவழிய காட்சியளித்தார். ''இந்த பயங்கரமான ஆயுதங்களில் ஒன்று நகரங்களை நோக்கி வருவதை பார்த்து காத்துக் கொண்டிருக்க முடியாது. அந்த ஆயுதங்களை அல் கெய்டா அல்லது வேறு எவராவது வெடிக்க வைத்த பின்னர் எங்கிருந்து வந்தது என்று கைது செய்து கொண்டு நிற்க முடியாது. இத்தகைய ஆயுதங்களுக்கு எது மூலம் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்கு இது தான் தருனம்'' என அவர் குறிப்பிட்டார். இப்படியே அவரது கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடாமல் இருந்தது; Powell -தனது பாராட்டுக்குரிய- ஐ.நா ஆய்வாளர்களுடனான ஈராக்கின் ஒத்துழைப்பு நடவடிக்கை ஆக்கப்பூர்வமானது என்றார். ''நம்மை ஏமாற்றும் தந்திரங்கள் நிறைந்துள்ளன ஆய்வாளர்கள் இன்னமும் கண்காணிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களது பேச்சுக்கள் ஒட்டுகேட்கப்படுகின்றன. அவர்கள் ஈராக்கில் தங்களது பணியை சிறப்பாக செய்வதற்கு தேவைப்படும் வசதிகள் இன்னமும் கிடைக்கவில்லை'' என அவர் குறிப்பிட்டார். ''இப்படியே இந்த நடவடிக்கை முடிவில்லாமல் சுற்றி வருவதற்கு அனுமதிக்க முடியாது''. என்று Powell கூறி முடித்தார். அவரது கருத்துகள் புஷ் நிர்வாகம் தனது போர் ஆயத்த முயற்சிகளுக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து எந்த அளவிற்கு ஆழமாக விரக்தியும், கசப்பும் அடைந்துள்ளது என்பதை ஆழமாக எடுத்துக்காட்டுவதாக இருக்கின்றது. ஐரோப்பிய சக்திகள் பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் Blix மற்றும் ElBaradei அறிக்கைகளை ஆதாரமாகக் காட்டி ஆயுதச்சோதனைகள் காலவரையின்றி நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பிரஞ்சு வெளியுறவு அமைச்சர் Dominique de Villepin ஐ.நாவில் உரையாற்றும்போது ''போருக்கு மாற்றீடு ஒன்று தேவை'' என்று வலியுறுத்தினார். அவர் உரையாற்றும் போது ஐ.நா-தூதர்கள் மட்டுமல்ல பார்வையாளர்கள் மாடத்தில் இடம் பெற்றிருந்த பொதுமக்களும் கைதட்டி வரவேற்றனர். இது ஐ.நா தலைமையகத்தில் வழமைக்கு மாறான ஒரு சம்பவமாகும். இப்படி பொதுமக்களே கைதட்டி வரவேற்பது சர்வதேச அளவில் அமெரிக்க போர் முயற்சிக்கு எதிராக எழுந்துள்ள பரவலான கவலையை வெளிப்படுத்துகின்றது. Powell பேசும் போது யாரும் கைதட்டி வரவேற்கவில்லை. மார்ச்14ம் திகதி ஐ.நா பாதுகாப்பு சபை மற்றொரு அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தை நடத்த வேண்டுமென்று Villepin ஆலோசனை கூறினார். மார்ச் முதல் வாரத்தில் அமாவாசையின் போது ஈராக் இலக்குகள் மீது மறைந்து சென்று தாக்கும் போர்விமானங்கள் மூலம் தாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு அமெரிக்க முயற்சியை தடுப்பதற்காக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் அந்த யோசனையை தெரிவித்தார். அது மட்டுமல்ல அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அதன் பிரதான போட்டியாளர்களுக்கும் இடையில் -குறிப்பாக ஐரோப்பிய நாடுகள்- எந்த அளவிற்கு கருத்து மோதல்கள் உருவாகி வருகின்றன, என்பதையும் இது எடுத்துக் காட்டுகின்றது. தனது ஆக்கிரமிப்பு கொள்கைக்கு சர்வதேச அளவில் ஐ.நா-வை ஒரு ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்திக் கொள்ள புஷ் நிர்வாகம் விரும்புகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவை விட இராணுவ வலிமையில் பலவீனமான ஐரோப்பிய சக்திகள் ஐ.நா கட்டமைப்பின் மூலம் அமெரிக்க இராணுவ பலத்தினை பிரயோகிப்பதற்கு வரையறையை நிர்ணயிக்க விரும்புகின்றன. இந்த இராஜதந்திர மோதலின் விளைவு இன்னும் சரியாகக் கணித்துக் கூற முடியாததாகவே உள்ளது. ஈராக்கிற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க கோரும் பிரிட்டனின் தீர்மானத்திற்கு ஆதரவாக மூன்று வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்பது தெளிவாகி விட்டது. அந்த மூன்றும் அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றினதாகும். ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, மற்றும் சீனா, ஆகிய நான்கு பெரிய சக்திகள் தீர்மானத்தை எதிர்க்கின்றன. இவற்றிலுள்ள மூன்று நாடுகளுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையின் ''ரத்து அதிகாரம்'' உண்டு. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள இதர நாடுகள் சிரியா, பாகிஸ்தான், கினியா, அங்கோலா, மெக்சிகோ, பல்கேரியா, மற்றும் கமரூன் ஆகியவையாகும். சிறிய நாடுகள் பெரும்பாலும் ஏகாதிபத்திய ராஜ்ஜியத்துறை கொள்கைகளை பின்பற்றி எந்த நாடு அதிக சலுகை தருகிறதோ அதற்கு ஏற்ப வாக்களித்து வருகின்றன. இந்த வகையில் புஷ் நிர்வாகம் தனது போர் திட்டங்களை செயல்படுத்த துடித்துக்கொண்டிருப்பதால் சிறிய நாடுகளை வளைத்துப்போட முயற்சிக்கலாம். இதைப்பற்றி அமெரிக்க அதிகாரி ஒருவர் வாஷிங்டன் போஸ்ட் நிருபரிடம், மற்றொரு அமெரிக்காவின் நட்பு நாடான துருக்கி தயக்கம் காட்டி வருவது பற்றி விளக்கும்போது ''எவ்வளவு அதிகமாக முடியுமோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அமெரிக்காவிடமிருந்து பணத்தை கறப்பதற்கு விரும்புகிறார்கள்'' என்று குறிப்பிட்டார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி ஐ.நா பாதுகாப்பு சபையில் தனக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகளை பெறுவதற்கு அமெரிக்க அரசு தவறுமானால் மற்றும் தேவையான ஆதரவு கிடைக்காவிட்டால் அல்லது பிரான்ஸ், ரஷ்யா, மற்றும் சீனா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டால் புஷ் நிர்வாகம் தன்னிச்சையாக போரைத் தொடங்குவதில் உறுதி கொண்டிருப்பதாக தோன்றுகிறது. அப்போது தனது இந்த கிறிமினல் நடவடிக்கைக்கு ஆதரவாக அச்சமூட்டியோ அல்லது இச்சகம் பேசியோ, எவ்வளவு அதிகமாக முடியுமோ அவ்வளவு அதிகமாக தன்பக்கம் அரசுகள் ஆதரவை திரட்டிக் கொள்ள உறுதி கொண்டிருக்கிறது. அமெரிக்க ஆளும் குழுவிற்குள் உள்ள ஒரு சில குழுக்களுக்கு இப்போது நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச சட்டத்தை பகிரங்கமாக மீறப்போகிறோம் என்பது தான் இந்த நடுக்கத்திற்கு காரணம். இது போன்ற குழுக்கள் நீண்டகாலமாக ஈராக்கிற்கு எதிரான போர் முயற்சியை ஆதரித்து வந்தன. ஐ.நா தலைமை ஆயுதங்கள் ஆய்வாளர் Blix இன் அறிக்கை வெளிவந்தவுடன் பல்வேறு அரசியல் தலைவர்கள், ஊடக விமர்சகர்கள் இது போன்ற சந்தேகங்களை வெளிப்படுத்தினர். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நபராஸ்கா மாநில செனட்டரான Chuck Hagel வெளியுறவுக்குழு உறுப்பினராகவும் இருக்கின்றார். இவர் புளோரிடாவில் கடற்படை தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது புஷ் ஐ.நா-வை இழிவுபடுத்துவதை கண்டித்தார். ''நாம் வடகொரியா, மற்றும் ஈராக்குடன் மட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை ஆனால் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு அதற்கு அப்பாலும் நம்முடைய நடவடிக்கைகள் நீடிக்கின்றன. ஐ.நா-விலிருந்து தம்மை தனிமைப்படுத்திக் கொண்டு ஈராக்கை தாக்குவோமானால் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கு என்ன விலை கொடுப்பது என்பது தான் கேள்வி'' என அவர் குறிப்பிட்டார். ''சதாம் ஹூசேனை பதவியிலிருந்தது நீக்குவதற்காக நாம் தன்னிச்சையாக போருக்குச்சென்றால் நாம் மேலும் அதிகம் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம். போருக்கு பிந்திய நிலவரம் முழுக்க நமக்கு சுமையாகவே மாறிவிடும்'' என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski கவலை தெரிவித்தார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் இராஜதந்திர விடையங்களின் இரண்டு பிரதான விமர்சன கட்டுரையாளர்கள் தற்போது புஷ் நிர்வாகம் ஐரோப்பிய நாடுகளை பகைத்துக்கொள்ளும் வகையில் வெகு வேகமாக சென்று கொண்டிருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் ஈராக்கிற்கு எதிரான போர் முயற்சியை தீவிரமாக ஆதரிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ''இந்த வாதங்களும் மற்றும் எதிர்த்து நிற்கும் போக்கும் ஈராக் மற்றும் வடகொரியா மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல சர்வதேச விவகாரங்களில் அமெரிக்க தலைமையின் தகைமையும் தன்மையும் இப்போது விவாதிக்கப்பட்டுவருகின்றன'' என்று ஜிம் ஹோகலண்ட் எழுதியிருக்கிறார். தன்னுடைய "மித மிஞ்சிய வலிமையை" மட்டுமே வெள்ளை மாளிகை நம்பியிருப்பதை அவர் கண்டித்தார். இராஜதந்திரங்கள் மற்றும் தந்திரோபாயங்களில் அந்த அளவிற்கு கவனம் செலுத்தப்படவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டார். கட்டுரையாளர் David Ignatius புஷ் நிர்வாகமானது, சதாம் ஹூசேன் பிரமை பிடித்து ஆடிக்கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்; இது Moby Dick நாவலில் Ahab கப்பலில் தேடிச் சென்ற கதையைப் போன்று இருக்கிறது. அதே போன்று இப்போதும் கப்பல் உடைந்து தவிக்கும் நிலை ஏற்படலாம்; ''கடந்த சில வாரங்களாக சதாம் ஹூசேனை மிகத்தீவிரமாக வேட்டையாடுகிறார்கள். அந்த வேட்டை இப்போது தன்னைத்தானே அழித்துக்கொண்டிருக்கும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. நிர்வாகம் அனைத்தையும் தியாகம் செய்வதற்கு விருப்பத்தோடு இருப்பதாக தோன்றுகிறது. தனது நட்பு நாடுகளை தன்னுடைய வளத்தை ஏன் தனது மக்களது பாதுகாப்பையே தியாகம் செய்துவிட புஷ் நிர்வாகம் தயாராகயிருக்கிறது. அந்த அளவிற்கு ஈராக் தலைவரை பதவியிலிருந்து நீக்குவதில் உறுதி கொண்டிருக்கிறது'' என்று அவர் எழுதியிருக்கிறார். இது போன்ற பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டாலும் அமெரிக்க ஆளும் தட்டுக்குள் புஷ் நிர்வாகத்தின் போர் முயற்சியை பகிரங்கமாக எதிர்ப்பதற்கோ அல்லது அது என்ன என்று விளக்குவதற்கோ எவருக்கும் துணிச்சல் இல்லை. இந்த அரசு உலகம் முழுவதிலும் கவனக் குறைவான முறையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. கொள்ளைக்கார யுத்தங்களை உருவாக்கி உலகம் முழுவதிலும் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலை நிறுத்த விரும்புகிறது. அமெரிக்காவின் கொள்கையில் போர் ஒரு கருவியல்ல. அதுவே அதன் கொள்கையாகிவிட்டது: புஷ் நிர்வாகம் பயங்கரவாதம் என்னும் பயத்தினையும் யுத்த சூழ் நிலையையும் பயன்படுத்தி, முன்னர் ஆப்கானிஸ்தானிலும் தற்போது ஈராக்கிலும் செயற்பட்டுவருகின்றது. அமெரிக்க முதலாளித்துவமானது, அதனது ஆழமாகிவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்தும், மற்றும் புஷ் நிர்வாகத்தின் பிற்போக்கு சமூகக் கொள்கைகளின் மேல் உருவாகிவரும் எதிர்ப்பிலிருந்தும் மக்களது கவனத்தை திசைதிருப்புவதற்காக இது போன்ற போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த அடிப்படையான விடயங்கள் தவிர்க்கமுடியாதபடி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை போருக்கு இட்டுச் செல்கின்றது. இந்தப் போர் மத்திய கிழக்கில் மட்டுமல்லாது இறுதியில் உலகம் முழுவதும் பரவிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. |