:
ஆசியா
:
ஆப்கானிஸ்தான்
Signs of growing opposition:
US launches large military operation in southern Afghanistan
வளர்ந்துவரும் எதிர்ப்பின் அறிகுறி:
தெற்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய பெரும் இராணுவ நடவடிக்கை
By Peter Symonds
31 January 2003
Back
to screen version
இந்த வாரம் ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் கடுமையான சண்டை நடைபெற்றுள்ளது.
இந்த மோதல்கள் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துக் கொண்டதைத் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய எதிர்ப்புக்கள்
தொடர்ந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றன. இச்சம்பவங்கள் அமெரிக்கப் படைகள் இருப்பதை விரிவான அடிப்படையில்
எதிர்ப்பவர்களும், வெறுப்படைபவர்களும் அங்கு இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் உள்ளது.
பாகிஸ்தான் எல்லையிலுள்ள ஸ்பின் பல்தாக் (Spin
Boldak) நகரத்திற்கு அருகில் நூற்றுக்கணக்கான அமெரிக்க, ஐரோப்பிய
மற்றும் ஆப்கானிஸ்தான் படைகள் கடந்த மாதங்களிலும் பார்க்க அதிகமான முறையில் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
திங்களன்றும், செவ்வாயன்றும் 12 முதல் 14 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பரவலான மோதல்களில் ஈடுபட்ட 80
ஆயுதம் தாங்கிய எதிர்ப்பாளர்களில் 18 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தினர் தெரிவித்தனர்.
ஒரு தகவலின் அடிப்படையில், ஸ்பின் பல்தாக்கிற்கு வடக்கே ஒரு கட்டிட வளாகத்திற்குள்
அமெரிக்க தளபதிகளின் தலைமையில் அதனது சிறப்புப் படையைச் சேர்ந்தவர்கள் திட்டவட்டமான இராணுவ நடவடிக்கையில்
இறங்கினர். இச்சண்டையின்போது அமெரிக்க மற்றும் ஆப்கான் படைகள் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர்
காயம் அடைந்து, மேலும் மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில்
ஆடிகார் (Adi Ghar)
மலைத் தொடர்களுக்கு வடக்கே, குகை வட்டாரத்திற்குள் ஏராளமான எதிர்ப்புப் படைகள் குவியலாக இருப்பதாக விசாரணையிலிருந்து
தகவல் கிடைத்தது.
இவ்விடத்துக்கு அப்பாச் ஹெலிகாப்டர்கள் (Apache
helicopters) விசாரணைக்காக அனுப்பப்பட்டபோது அவை எதிர்ப்பாளர்களின்
துப்பாக்கி சூட்டுத் தாக்குதலுக்கு இலக்காயின. உடனடியாக அமெரிக்க இராணுவத் தளபதிகள் சுமார் 350 அமெரிக்க,
ஐரோப்பிய மற்றும் ஆப்கன் படை வீரர்களை இவ்விடத்துக்கு அனுப்பி வைத்தனர். இங்கு நடாத்தப்பட்ட விமானத்
தாக்குதல்கள் மூலம் பெரும்பாலானவர்கள் மாண்டனர். யு.எஸ்.B-1
குண்டு வீச்சு விமானங்கள் மற்றம் F-16
போர் விமானங்கள் மிக சக்திவாய்ந்த குண்டுகளை வீசி அந்தக் குகைகளை தூள்துளாக இடித்துத் தள்ளின.
அத்துடன் AC-130
போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் எதிர்ப்பாளர்கள் பதுங்கியிருக்கக்கூடும் என்று கருதப்படும் பகுதிகளில் மேலும்
பல குண்டு வீச்சுக்களை நடத்தி அவற்றை தகர்த்தன.
எதிர்ப்பு அணிகளில் மிச்சம் இருந்தவர்கள் அருகாமையில் உள்ள பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்டனர்
என்று தெரிகிறது. இதற்கு முன்னர், அறிந்திராத குறைந்தபட்சம் 160 குகைகளில் அமெரிக்கப்படைகள் எதிரிகளை
தேடிக்கொண்டிருப்பதாக அமெரிக்க இராணுவ அதிகாரி கேனல் றோஜர் கிங் புதன்கிழமையன்று கோடிட்டு காட்டினார்.
இராணுவத்தினர் 107 மி.மி. ராக்கெட்டுகளையும், இதர ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும், எரிபொருளையும் உணவு
மட்டும் இதர பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தார்.
இச் சண்டையில் ஈடுபட்டவர்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்கள் என்பதில் மாறுபட்ட
தகவல்கள் வந்துகொண்டிருந்தாலும், ஆப்கான் கிளர்ச்சிக் குழுவின் தலைவர் குல்புதின் ஹெக்மத்யார் மற்றும் அவரது எசாப்
இ.இஸ்லாமி (Hezb-e-Islami)
குழுவைச் சார்ந்தவர்கள்தான் இதில் ஈடுபட்டனர் என்று றோஜர் கிங் மேலும் குறிப்பிட்டார்.
1980 களில் CIA
யானது, எசாப் இ.இஸ்லாமி குழு மற்றும் இதர முஜாஹுதின் இராணுவக் குழுக்களையும் ஆதரித்தபோது, அவர்கள் காபூலில்
இருந்த சோவியத் ஆதரவு ஆட்சியை வெளியேற்றுவதற்கு சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். உண்மையில் அப்போது, பஸ்தூன்
இனத்தைச் சேர்ந்த ஹெக்மத்யாருக்கு அமெரிக்கா ஆயுதங்களையும், நிதி உதவிகளையும் பெருமளவில் செய்து உதவியது.
1992 ம் ஆண்டு மொஸ்கோ ஆதரவு நிர்வாகம் வீழ்ச்சியடைந்த பின்பு, அரசியல் மேலாதிக்கம்
பெறுவதற்காக எசாப்-இ-இஸ்லாமி மற்ற இராணுவக் குழுக்களுடன் கடுமையாகப் போரிட்டதினால் காபூலின் பெரும் பகுதி
அழிந்துபோனது. இச்சண்டையில் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். 1996 ம் ஆண்டு சிறிது காலம் ஹெக்மத்யார் பிரதமராக
பதவி வகித்தபோது, தமக்குள் மோதிக்கொண்ட இந்த இராணுவக் குழுக்கள் தலிபானுக்கு எதிராக அணி திரள்வதற்கு முயன்றன.
இதே ஆண்டு காபூல் வீழ்ச்சியடைந்து அதனை தாலிபான்கள் கைப்பற்றிக்கொண்டதும், ஹெக்மத்யார் ஈரானுக்கு தப்பி
ஓடினார்.
தாலிபானுக்கு அடுத்த ஆட்சியை அமைப்பதற்கு, சென்ற ஆண்டு முயற்சிகள் நடந்தபோது
முன்னாள் ''சுதந்திர போராட்ட வீரர்'' ஹெக்மத்யார் மற்றும் இதர முஜாஹூதின் தலைவர்களை வாஷிங்டன் புறக்கணித்துவிட்டு,
ஹமித் கர்சாய் என்ற மிகவும் அடிபணியும் ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுத்தது. சென்ற மே மாதம் ஹெக்மத்யார்
தாலிபானோடு சேர்ந்துவிட்டார் என்ற நிரூபிக்கப்படாத தகவலின் அடிப்படையில் ஒரு விமானத்திலிருந்து டாங்கி எதிர்ப்பு
ராக்கெட்டை வீசி இவரைக் கொலை செய்வதற்கு CIA
முயன்றது. இத்தாக்குதலில் ஹெக்மத்யார் தப்பிவிட்டபோதிலும் அவரது ஆதரவாளர்கள் பலர் பலியாகினர்.
இந்தச் சம்பவத்தின் பின்னர் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து
புனிதப்போர் அல்லது ஜிஹாத் நடத்தவேண்டும் என்று ஹெக்மத்யார் கோரிக்கை விடுத்து வருவதுடன், கர்சாய் வாஷிங்டனின்
கைப்பொம்மை என்றும் கண்டித்தார். ஆடிகார் மலைத்தொடர் பகுதியில் போரிட்ட 80 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்
ஹெக்மத்யாரின் எசாப்-இ-இஸ்லாமி அமைப்போடு சம்மந்தப்பட்டவர்களா என்பது நிச்சயமற்றதாக இருக்கிறது. இதில்
என்ன தெளிவாகத் தெரிகிறது என்றால், கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக அமெரிக்க இராணுவம் முரட்டுத்தனமான நடவடிக்கைகளில்
ஈடுபட்டிருப்பதும், வறுமையும், வசதிக்குறைவும் ஆப்கானிஸ்தான் முழுவதும் நிலவுவதும், பெரும்பாலான மக்கள் இந்த ஆக்கிரமிப்புக்கு
எதிரான வெறுப்பைக் கொண்டுள்ளதும், இந்நிலமை மேலும் வலுத்துக்கொண்டே போகும் என்பதாகும்.
அமெரிக்க இராணுவப் பேச்சாளர்கள், தற்போது அமெரிக்கப் படைகள் அல்லது தமது
ஆப்கான் சகாக்களது படைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை சிறிய பயனற்ற தாக்குதல் செய்தியாக தருகின்றார்கள்.
இது சம்மந்தமாக BBC
வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை ஒன்றில் ''சிறிய குழுக்களாக இருந்து அவர்கள் போரிடுகிறார்கள். அவர்களில் சிலர்
தாலிபான் அல்லது ஹெக்மத்யாருடன் தொடர்பு இல்லாதவர்கள். அமெரிக்காவின் குண்டு வீச்சால் ஏற்பட்ட உயிர் சேதம்
மற்றும் பொதுச் சேதங்களுக்குப் பதிலடியாக தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பக்தியா, பக்டிக்கா, கோஸ்ட் மாகாணங்களில்
அவர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றார்கள்'' என்று குறிப்பிட்டிருக்கிறது.
சில பகுதிகளில் குறிப்பாக பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் கர்சாய் அரசின்
கட்டுப்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. அண்மையில், கிறிஸ்டியன் சயன்ஸ் மொனிட்டர் பத்திரிகை பிரசுரித்த
ஒரு கட்டுரையில், பாகிஸ்தான் எல்லையில் உள்ள அசதாபாத் நகர பாதுகாப்பு தலைமை அதிகாரி நஜிபுல்லா கூறிய
கருத்துக்களை மேற்கோள் காட்டியிருந்தது. இவர், கர்சாயின் கட்டுப்பாட்டில் இல்லாத பல அருகாமை நகரங்களைக் குறிப்பிட்டதுடன்,
''அங்குள்ளவர்கள் அரசிற்கும், எங்களுக்கும் எதிராக உள்ளனர். ஏன் அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் என்றால்,
நாங்கள் அவர்களுக்கு எதையும் கொண்டு வரவில்லை. மருத்துவமனைகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை, சாலைகள்
இல்லை, பாதுகாப்பு இல்லை, தலைவர்களது முகங்கள் தான் மாறியிருக்கின்றனவே தவிர, வேறு எதுவும் மாறவில்லை
என்று மக்கள் கருதுவதாக'' அவர் கூறியிருந்தார்.
தன்னுடைய தலைமையில் சரியாக பயிற்சி பெறாத, போதுமான ஆயுதங்கள் இல்லாத
1.800 துருப்புக்கள் இருப்பதாக நஜிபுல்லா கூறினார். அவர்களது பெயரளவு ஊதியம் மாதத்திற்கு ஒரு அமெரிக்க டாலராக
இருப்பதுடன், பல மாதங்களாக அவர்கள் பணம் எதையும் பெறவில்லை. ''எங்களது சொந்த மக்களையே நாங்கள்
நம்ப முடியவில்லை. நான் அவர்களுக்கு 10 ரூபாய்தான் தரமுடியும். யாராவது ஒருவர் அவர்களுக்கு 1000 ம் ரூபாய்களை
கொடுத்தால் அவர்களில் 300 பேர் எங்களிடமிருந்து எல்லாவற்றையும் கைப்பற்றிக்கொள்ள முடியும். இந்த நகரத்தை
மட்டுமல்ல, மாகாணத்தையே பிடித்துக்கொள்ள முடியும்'' என்று மேலும் நஜிபுல்லா கூறினார்.
ஈராக் மீது அமெரிக்கா ஆக்கிரமிக்குமானால், ஆப்கானிஸ்தானிலுள்ள வெளிநாட்டுப் படைகளுக்கு
எதிரான எதிர்ப்புக்கள் தீவிரமாகும் என்று காபூலில் உள்ள சர்வதேச பாதுகாப்பு உதவிப் படையினரின் (International
Security Assistance Force - ISAF) துருக்கி நாட்டுத்
தளபதி ஜெனரல் கில்மி ஹக்கின் சூர்லூ அச்சம் தெரிவித்தார். இவர் ஜனவரி தொடக்கத்தில் வாஷிங்டன் போஸ்ட்
பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ''ஈராக்கில் போர் தொடங்குமானால் ஆப்கானிஸ்தான் முழுவதிலும் பல அனுதாபிகள்
அதற்கு இருக்கக்கூடும். அத்தகைய அனுதாபிகள் மூலம் வெளிநாட்டவருக்கு, ஐ.நா. கூட்டணிப் படைகளுக்கு, சர்வதேச
உதவிப்படைகளுக்கு மற்றும் ஆப்கானிஸ்தான் வரும் எல்லா வெளிநாட்டு வியபாரிகளுக்கும் எதிராக பயங்கரவாதிகளின்
தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
சூர்லூ தனது தலைமையில் செயல்படும் 4.300 துருப்புக்கள் இடைவிடாது தாக்குதல் நடத்த
வாய்ப்பான இடங்களில் தலையிட்டு காபூல் நகரத்தை சுற்றி பதுக்கி வைக்கப்பட்டுள்ள பெரும் ஆயுதங்களை கண்டுபிடித்து
வருவதாக தெரிவித்தார். அத்துடன், அவர் பல்வேறு சங்கிலித்தொடர் போன்ற தாக்குதல் சம்பவங்களையும் குறிப்பிட்டார்.
அமெரிக்க இராணுவ வீரர்கள் மீதான வெடிகுண்டுத் தாக்குதல், பெண்கள் பாடசாலையில் வெடிமருந்து பதுக்கல்,
ISAF வளாகத்திற்கு
வெளியில் காத்துக்கொண்டு நின்ற வெளிநாட்டவர் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களை எடுத்துக் காட்டினார்.
இதே உணர்வுகளை எல்லை நகரமான அன்கொராடாவைச் சேர்ந்த அரசாங்க அதிகாரியான
பொறியியலாளர் ஹமீன் என்பவரும் எதிரொலித்தார். ஹமீன் நியூயார்க் டைம்ஸ் நிருபருக்கு அளித்த பேட்டியில்
''இப்போதெல்லாம், அல்கெய்டா மிகத் தீவிரமாக பணியாற்றுவதுடன், அவர்கள் ஏராளமாக எல்லையைத்தாண்டி இங்கு
வருகிறார்கள். எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி அமெரிக்கா ஈராக்கை தாக்கியதும், அல்கெய்டா இங்கு
தாக்குதலை நடத்தும். அவர்கள் அதிக எண்ணிக்கையில் அமெரிக்கத் தளத்திலும், அமெரிக்கர்களோடு பணியாற்றுபவர்கள்
மீதும் தாக்குதல் நடத்துவார்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
மற்றவர்களைப்போல் ஹமீனும் எதிர்ப்பாளர்கள் அனைவரையும் ''அல்கெய்டா'' மற்றும்
''தாலிபான்'' என்றே முத்திரை குத்திவிடுகிறார். ஆனால், ஈராக் மீது அமெரிக்கா ஆக்கிரமிக்கும்போது ஆப்கானிஸ்தானிற்குள்
பரவலாக எதிர்ப்பு வெடித்துக் கிளம்பலாம் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஈராக்கிற்கு எதிராகப் போர் தொடங்கப்படுவதற்கு
முன்னர் ஆப்கானிஸ்தானில் அரசாங்க எதிர்ப்புப் குழுக்கள் மீது இதே தாக்குதல் நடத்தவேண்டுமென்ற அடிப்படையில்தான்,
அண்மையில் அமெரிக்க இராணுவத்தினர் ஸ்பின் பால்டாக் அருகே நடவடிக்கையில் இறங்கியது. அதே நேரத்தில் பாகிஸ்தான்,
தனது ஆப்கான் எல்லையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வாஷிங்டன் வற்புறுத்தி வருகிறது. பாகிஸ்தானிற்குள்
தப்பி ஓடும் ஆப்கான் அரசாங்க எதிர்ப்புப் படைகளை ''விரட்டிச் சென்று'' பாகிஸ்தான் எல்லையில் பிடிப்பதற்கு
அனுமதியையும் வாஷிங்டன் கோரியுள்ளது.
''இவை எல்லாம் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமைதியையும், ஜனநாயகத்தையும்,
நல்வாழ்வையும் கொண்டு வந்திருப்பதாக புஷ் அமெரிக்க மக்களுக்கு விடுத்த உரையில் கூறியிருப்பது கேலிக்கூத்தாக ஆகிவிட்டது.
''ஆப்கானிஸ்தானிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்க உதவியதாகவும், அவர்களுக்கு, அவர்களது நாட்டை
பாதுகாப்பானதான ஆக்கித் தந்ததாகவும், புதிய சமுதாயத்தை மீண்டும் உருவாக்கியதாகவும், எல்லா குழந்தைகளுக்கும்
கல்வி வசதி செய்து தந்திருப்பதாகவும்'' புஷ் கூறுகிறார்.
சென்ற ஆண்டு அமெரிக்கா, ஆப்கானிஸ்தானுக்குத் தந்தது என்ன? ஆயிரக்கணக்கான அப்பாவி
மக்களின் மரணம், அடிப்படை மனித உரிமைகள் நசுக்கப்பட்டு காபூலில் அமைக்கப்பட்ட பொம்மை ஆட்சி போன்றவைகளே
ஆகும். உலகிலேயே, மிகுந்த வறுமை நிலையில் வாடிக்கொண்டிருக்கிற ஆப்கானிஸ்தானுக்கு, அவர்களது சமூகத் தேவைகளைக்கூட
பூர்த்தி செய்ய முடியாத, அப்பணிகளைத் தொடங்குவதற்குக்கூட முடியாத அளவிற்கு சொற்பத் தொகையே ஒதுக்கப்பட்டது.
தற்போது, புஷ் நிர்வாகம் ஈராக்கிற்கு எதிராகப் போர் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து
கொண்டிருப்பதால், இது ஈராக் மக்களுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகமாகக் கொண்டிருக்கின்றது.
அதேநேரம் ஆப்கானிஸ்தானைப் போல், ஈராக்கிலும் பொதுமக்கள் கடுமையாக எதிர்க்கும் அளவுக்கு இந்த ஆக்கிரமிப்பானது
ஆத்திரமூட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
|