World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்க

Left apologists for US imperialism red-bait the anti-war movement

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வக்காலத்து வாங்கும் இடதுகள் போர் எதிர்ப்பு இயக்கத்தை கம்யூனிச அவதூறாக செய்கின்றனர்

By David Walsh and Barry Grey
5 February 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கிற்கு எதிராக புஷ் நிர்வாகம் மேற்கொண்டுள்ள போர் ஆயத்த நடவடிக்கைகளுக்கு பரந்தளவிலான எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருவது அமெரிக்காவின் அரசியல் மற்றும் ஊடக நிர்வாகத்தினரை சற்றும் எதிர்பாராத வகையில் அதிர்ச்சியடையச் செய்துவிட்டது. இப்படிப்பட்ட இயக்கத்திற்கு இவர்கள் அனைவரும் ஒரேமாதிரிதான் பதிலளிக்கின்றனர். அதாவது, போருக்கு எதிரான இயக்கத்தில் இடதுபக்கம் சார்பான பிரிவுகளை இல்லாதொழித்தலும், அரசியல் அடிப்படையில் தீங்கற்றதாக காட்டுவதுமாகும்.

போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கம்யூனிஸ்ட்டுகளும் மற்ற வெளியில் இருந்து வந்த கிளர்ச்சியாளர்களும் ஏற்பாடு செய்தவை என்று கூறி போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிராக தீவிர வலதுசாரிகள் கம்யூனிச பூச்சாண்டி காட்ட ஆரம்பித்துவிட்டனர். அரசாங்கத்தின் ஒரு பகுதியாக செயல்படும் நியூயோர்க் டைம்ஸ் வகையை சார்ந்த தாராளவாதிகள் மிக நாசூக்காக சோசலிச போக்கினரை இழிவுப்படுத்தி தனிமைப்படுத்த முயன்று வருவதுடன், போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டனங்களை ஜனநாயக கட்சியின் ஒரு பிரிவின் கீழ் கொண்டுவருவதற்கு முயன்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த இரண்டு தரப்பினருமே தொழிலாளர் உலக கட்சியை தனிமைப்படுத்தி கண்டனக் கணைகளை தொடுத்து வருகிறார்கள். இந்தக் கட்சி போருக்கு எதிரான பல்வேறு குழுக்களின் கூட்டணியான ANSWER என்னும் அமைப்பு முன்னணி பங்கு வகிக்கிறது. இது வாஷிங்டனிலும் இதர நகரங்களிலும் பெருமளவிற்கு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

பொது மக்களது இயல்பான இந்த போர் எதிர்ப்பு இயக்கத்தை திசைமாறச்செய்யும் முயற்சியில் இன்னொரு குழு உதவியாகவும் தூண்டுதலாகவும் செயல்பட்டு வருகிறது. இவர்கள் முன்னாள் தீவிரவாதிகள் பழைய போர் எதிர்ப்பு தாராளவாதிகளும் நேஷன் பத்திரிகையை மையமாக கொண்டிருக்கிறார்கள். சென்ற அக்டோபரில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவில் முதல் தடவையாக நடைப்பெற்றபோது மூன்று கட்டுரைகளை நேஷன் பத்திரிகை வெளியிட்டது. அப்போதிலிருந்து இந்தக்குழுவின் தலையீடு தொடங்கிவிட்டது. 2002 செப்டம்பர் 29 அன்று லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நாளிதழில் மார்க் கூப்பர் (Marc Cooper) ''A Smast Peace Movement is MAI" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியருந்தார். "யார் தலைமை வகிப்பது?'' என்ற தலைப்பில் டொட் ஜிட்லின் (Todd Gitlin) மதர் ஜோன்ஸ் சஞ்சிகையில் (Mother Jones magazine) இல் அக்டோபர் 14 2002 இல் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ''அந்த பதாகைகளுக்கு பின்னே இன்றைய போர் இயக்கத்தின் வித்தியாசமான பிரச்சனைக்குரிய பூர்வீகம்'' என்ற தலைப்பில் டேவிட் கோன் (David Corn) 2002-நவம்பர் 1ல் லா வீக்லி (LA Weekly) பத்திரிகையில் எழுதியிருந்தார்.

நேஷன் பத்திரிகையில் கட்டுரைகளை எழுதுகின்ற ஆசிரியரான கூப்பர் 1971ம் ஆண்டு சிலி நாட்டிற்குச் சென்று சால்வடார் அலன்டே (Salvador Allende) இன் மக்கள் முன்னணி அரசுக்கு தொண்டு சேவையில் ஈடுபட்டதுடன், இராணுவ சதிப்புரட்சியின் போது அலன்டேயின் மொழிப்பெயர்பாளராக பணியாற்றினார். ஜிட்லின் 1963-64 இல் ஜனநாயக அமைப்பிற்கான மாணவர்கள் (Students for a Democratic Society- SDS) இன் தலைவராக பணியாற்றினார். பதினாறு ஆண்டுகள் பார்கிலேயில் (Berkeley) உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணியாற்றிவிட்டு தற்போது அவர் நியூயோர்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ''பத்திரிகைத்துறை'' மற்றும் சமூகவியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நேஷன் பத்திரிகையின் வாஷிங்டன் ஆசிரியராக இருக்கும் கோன் இதற்கு முன்னர் Ralph Nader (பசுமைக்கட்சி தலைவர்) இன் Center for Study of Responsive Law இல் பணிபுரிந்தார்.

இங்கே நாம் சுட்டிக்காட்டியுள்ள மூன்று கட்டுரைகளும் ''இடது'' சாக்கடை தகவல்துறை வகையைச் சார்ந்தவை. இந்தக்கட்டுரை ஆசிரியர்கள் முக்கியமான விவாதங்களை முன்வைப்பதற்கு முயலவில்லை. அதற்கு பதிலாக திரிபுகளிலும், குழப்பம் ஏற்படுத்துவதிலும் அர்த்தமற்ற தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார். இவர்கள் தம்மை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளிநாட்டுக் கொள்கையை பாதுகாப்பவர்களாகவும், மற்றும் ஜனநாயக கட்சியினதும் AFL-CIO- தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அரசியல் கைக்கூலிகளாகவும் காட்டிக்கொள்கின்றனர்.

இடதுசாரி சக்திகளை அவர்கள் தாக்கும்போது கம்யூனிஸ்டுகளுக்கு அவர்கள் கம்யூனிஸ்டுகளை தாக்கும் போக்கை அப்பட்டமாக கடைபிடித்து வருகின்றார்கள். இந்த அரசியல் தட்டினரின் அரசியல் மற்றும் தார்மீக ஒழுக்கம் எப்படிப்பட்டது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தும் ஒரு சம்பவத்தை பார்ப்போம். அமெரிக்காவின் தீவிர வலதுசாரி வார்த்தை ஜாலவாதியான Bill O'Reilly உடனான ஃபொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் நவம்பர் 19 அன்று உரையாடல் நிகழ்ச்சியான "O'Reilly Factor" இல் டேவிட் கோர்ன் கலந்து கொண்டு உலக தொழிலாளர் கட்சியை பழிவாங்கும் நோக்கில் தனது கருத்துக்களை கூறியதுடன், போருக்கு எதிரான இயக்கத்தின் மீது சேற்றைவாரி வீசியிருக்கிறார்.

O'Reilly தனது அறிமுக கேள்வியில் ''உலக தொழிலாளர் கட்சி அமெரிக்காவின் மிக தீவிரமான கம்யூனிச இயக்கம் என்று நீங்கள் கூறுகிறீர்கள், அந்த இயக்கம் இந்த அமைதி பேரணிகளை நடத்துகிறது, அது உண்மையா?'' என்று கேட்டார். அதற்கு கோர்ன் பதிலளிக்கும் போது, ''அவர்களை ஒரு அமைப்பு என்று சொல்வது அவர்களுக்கு தகுதிக்கு மீறிய மதிப்பை தருவதாகும். ஒரு தொலைபேசி பூத்தை நிரப்புகிற அளவிற்கு அவர்களுக்கு ஆட்கள் இருக்கிறார்களா என்பதை நான் சந்தேகிக்கிறேன். நியூயோர்க் நகரிலிருந்து செயல்படுகிற ஒரு சிறிய பிரிவைச்சார்ந்த அரசியல் குழு அது என்று கோர்ன் பதிலளித்தார்.

Joseph McCarthy இன் பாரம்பரியத்தில் வருகின்ற ஒரு நபரான O'Reilly, கோர்ன் தனது உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி மிகச்சரியாக ஒன்றை சொன்னார். ''ANSWER நிர்வாக குழுவிலிருக்கின்ற ஒரு நபரை சுட்டிக்காட்டுங்கள், அவர்தான் இந்த இயக்கங்களுக்கெல்லாம் பின்னணியில் இருந்து இயக்குகிறார் என்பதை நீங்கள் சுட்டிக்காட்ட முடியும் இல்லையா? என்று O'Reilly குறிப்பிட்டார்.

ஜில்டின் மற்றும் கூப்பர் ஆகிய இருவரும் மேலும், மேலும் வலதுசாரி பாதையிலேயே சென்று கொண்டிருக்கும், கடந்த 20 ஆண்டுகளில் தங்கள் கருத்துக்களை பாரியளவில் மாற்றிக்கொண்ட முன்னாள் போர் எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் தீவிரவாதிகள் தலைமுறையை சார்ந்தவர்கள். நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னரே அவர்கள் தற்போதைய சமுதாய அமைப்பு முறையுடன் தமது ஐக்கியத்தை காட்டிக்கொண்டவர்கள் மட்டுமல்லாது, ஆட்சியில் இருப்பவர்களின் ஒவ்வொரு நெருக்கடியான நேரத்திலும் அவர்களுக்கு தங்கள் விசுவாசத்தை காட்டிக்கொண்டு வருபவர்கள்.

இந்த சமூக தட்டினர் வியட்நாம் போன்ற ஏகாதிபத்திய போர்களுக்கான காரணம் முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் என்பதையும் மற்றும் அவை இவ்வமைப்பின் தவிர்க்கமுடியாத விளைவுகள் என்ற மார்க்சிச ஆய்வுகளை ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரம் குறித்த நம்பிக்கையை அவர்கள் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக இழந்துவிட்டார்கள். ''1968ன் தலைமுறையை சார்ந்தவர்களில்'' பலர் ஊடகங்களில், பல்கலைக்கழகங்களில், தாராளவாத ஆலோசகர் குழுக்களில், தொழிற்சங்களில் இதர அமைப்புகளில் பெரும் வசதியான பதவிகளை பெற்றுக் கொண்டார்கள்.

90களின் ஆரம்பத்தில் யூகோஸ்லாவியாவில் நடைபெற்ற உள்நாட்டு போர் மற்றும் 98ல் சேர்பியா மீது அமெரிக்கா தலைமையில் நடைபெற்ற குண்டுவீச்சு தாக்குதல் ஆகிய இந்த காலகட்டத்தில் தான் இந்த தரப்பினர் தெளிவாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு வெளியே வந்தனர். பழைய இடதுசாரிகளில் பலர் ஏகாதிபத்திய தலையீட்டின் உற்சாகமான ஆதரவாளர்களாக ஆனார்கள். ஊடகங்கள் வெளியிட்ட போர் பிரச்சாரத்தை ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொண்டார்கள். நேட்டோ வின் யுத்தம் ''இனச்சுத்திகரிப்புக்கு'' எதிராக நடத்தி வருகின்ற புனிதப்போர் என்று ஊடகங்கள் வர்ணித்ததை இந்த தரப்பினர் விமர்சனமற்று ஏற்றுக்கொண்டனர்.

1991ம் ஆண்டில் கலைக்கப்பட்டது உள்ளடங்கலாக யூகோஸ்லாவியாவில் ஏற்பட்ட துயரநிகழ்ச்சிகளுக்கும், அதைத் தொடர்ந்து பொஸ்னியாவிலும் கொசவோவிலும் ஏற்பட்ட இனமோதல்களுக்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள் இடைவிடாது மேற்கொண்ட குழப்பம் விளைவிக்கும் பிரச்சாரத்தின் விளைவாகும். ஆனால் முன்னாள் தீவிரவாதிகள் இந்த உண்மைகளை புறக்கணித்து விட்டனர். தங்களது இடதுசாரி முத்திரையை முன்னாள் ஸ்ராலினிஸ்டும் தற்போதைய சேர்பிய தேசியவாதியாகவும் மாறிய மிலோசிவிக்கை ராட்சதனாக சித்தரிப்பதற்கு தந்து விட்டனர். மார்க்சிஸ்ட்டுகள் மிலோசிவிக் ஆட்சிக்கும் அல்பேனியா, கொசாவோ மக்களை அவர் நடத்திய விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், அமெரிக்க-நேட்டோ சேர்பியாவில் நடத்திய தாக்குதல் ஏகாதிபத்திய போர் என்றும் இது மேலும் நடக்க இருக்கிற இரத்தம் சிந்துகின்ற போருக்கு முன்னோடி என்றும் கண்டுகொண்டனர்.

இந்தப் பின்னணியில் மேலே குறிப்பிட்டப்பட்டுள்ள மூன்று கட்டுரைகளிலும் அந்தக் கட்டுரையாளர்கள் மிலோசிவிக் வழக்கை நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள சர்வதேச குழுவில் அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபரான ராம்சே கிளார்க் (Ramsey Clark-ANSWER அமைப்பின் முன்னணி பேச்சாளர்) இடம் பெற்றிருப்பதை பெருமளவிற்கு விமர்சித்திருக்கின்றனர். கோர்ன் இது பற்றி தனது கட்டுரையில் எழுதும்போது உலக தொழிலாளர் கட்சி முன்னாள் யூகோஸ்லாவிய ஜனாதிபதி மிலோசிவிக் மீது போர்குற்ற வழக்கு நடத்தக் கூடாது என்று பிரச்சாரம் செய்தது எனவும், ராம்சே கிளார்க் சர்வதேச நீதிமன்றத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு குறுக்கே நிற்கும் எவரையும் ஒடுக்குகின்ற மேற்கு நாட்டு கைத்தடி என்று வர்ணித்ததாகவும் அவர் எழுதியிருக்கிறார்.

கோர்ன், ஜிட்லின் மற்றும் கூப்பர் ஆகிய மூவருமே இது போன்ற அதிஇடதுசாரி தீவிரவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியும். மிலோசிவிக் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள நடுவர் மன்றம் அமெரிக்கா-நேட்டோவின் யூகோஸ்லாவியா மீது ஆக்கிரமிப்பு நடத்தியதை நியாயப்படுத்துவதகான நீதியை தடம்புரளச் செய்வதற்கான அரசியல் நோக்கம் என்பது தற்போது பரவலாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த விசாரணையில் முன்னாள் சேர்பியா ஜனாதிபதி குற்றம் சாட்டியவர்களின் திரிபுகளையும், மிதமிஞ்சிய கற்பனைகளையும், இட்டுக்கட்டிய கதைகளையும் அம்பலப்படுத்தி வருகிறார்.

நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள மூன்று கட்டுரை ஆசிரியர்களுக்கும், சேர்பியா மீதான அமெரிக்க-நேட்டோ நடத்திய போரில் இருந்து ஒரு புதிய அரசியல் வாழ்க்கை ஆரம்பமாகின்றது. அதாவது அமெரிக்க இராணுவவாதத்தின் ''இடது'' பாதுகாவலராகின்றனர். அந்த மூன்று கட்டுரை ஆசிரியர்களும் பயங்கரவாத்திற்கு எதிராக புஷ் மேற்கொண்டுள்ள போரையும் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்திய படையெடுப்பையும் அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டனர். LA Times வார இதழில் கூப்பர் எழுதியிருக்கும் கட்டுரையில் அல்கொய்தா இயக்கத்திற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கை நியாயமானது மட்டுமல்ல மிகவும் அவசியமானதும் ஆகும் என்று வர்ணித்திருப்பதுடன், இன்று ஆப்கானிஸ்தானில் நிலவுகின்ற படுமோசமான நிலைமையை வர்ணமான நிறங்களால் சித்தரித்திருக்கிறார்.

எவ்வாறிருந்திபோதிலும், தற்போது கூப்பர், ஜிட்லின் மற்றும் கோர்ன் ஆகிய மூவரும் ஈராக்கிற்கு எதிராக போரை எதிர்ப்பதாக கூறிக்கொள்பவர்கள். இதற்கு முந்திய அமெரிக்காவின் போர்களை ஆதரித்தவர்கள் ஏன் இந்த குறிப்பிட்ட போரை எதிர்க்கிறார்கள் என்பதை அவர்கள் விளக்கவில்லை, உண்மையில், நாங்கள் காணப்போவதுபோல் அவர்கள் ஈராக்கிற்கு எதிரான போரை உண்மையில் எதிர்க்கவில்லை.

அதற்கு நேர்மாறாக அமெரிக்க நிர்வாகத்தின் அடிப்படைக் கொள்கைகள் அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துக்கொண்டு, ஈராக்கிற்கு எதிரான போர் முயற்சியை கொள்கை அடிப்படையில் எதிர்க்காது முழுக்க தந்திரோபாய அடிப்படையில் எதிர்க்கும் நியூயோர்க் டைம்ஸ் நாளிதழின் நிலைப்பாட்டை அவர்கள் எதிரொலிக்கின்றார்கள்.

இந்த மூன்றுபேரினதும் அடையாளம் என்னவெனில் அவர்களிடம் வரலாற்று, அரசியல் மற்றும் சமூக ஆய்வு எதுவுமில்லை. புஷ்ஷின் போர் கொள்கைக்கு எதிரான சோசலிச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களினது விமர்சனங்கள் மீது சேற்றை வாரி வீச வேண்டும் என்ற அவசரத்தில் நடைபெற இருக்கும் போரில் உந்துசக்திகளான பாரசீக வளைகுடாவிலும், மத்திய கிழக்கிலும் அமெரிக்க இராணுவ தலையீட்டின் வரலாறு என்ன?, புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள் மற்றும் அரசியல் தன்மைகள் என்ன?, இன்றைக்கு அமெரிக்க சமூக ஏற்றத்தாழ்வுகளின் நிலை என்ன?, அல்லது எந்த பொருளாதார உள்ளடக்கத்தினுள் யுத்தம் வெளிப்படுகின்றது? என்பவை பற்றி எல்லாம் அந்த மூன்று கட்டுரையாசிரியர்களும் கவலைப்படவில்லை.

இந்த மூன்று கட்டுரைகளிலும் ''எண்ணெய்'' என்ற சொல்லே பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போர் எதிர்ப்பு இயக்கம் தன்னைத்தானே அழித்துக் கொள்வதிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் வழங்குகின்ற ஆலோசனைகளை அவர்கள் வழங்குவதாக கருதுகின்றார்கள். அவர்களது அரசியலின் பிற்போக்குத்தனம் ஒரு பக்கம் இருக்க, சுயாதீனமான ஒரு ஆய்வு இல்லாத காரணத்தால், இது அவர்களை ஏமாற்றுக்காரர்கள் எனவும் போலிகள் எனவும் முத்திரை குத்துகின்றது.

அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் ''சிறந்த'' பக்கம்

கூப்பர் தனது கட்டுரையில், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் போருக்கு எதிரான ''முழங்கால் உதறலெடுக்கும் இடது பிரிவு'' 40 ஆண்டுகளாக மோசமான அமெரிக்க எதிர்ப்பு வாதத்தை நடத்தி வருவதுடன், அமெரிக்க இராணுவ வலிமையை பயன்படுத்துவது தார்மீக நெறிக்கு முரணானது என்று வர்ணிக்கிறார்கள் என்று சாடியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் இன்னுமொரு இடத்தில் இது தொடர்பாக கூப்பர் ''அதிக முதிர்ச்சி பெற்ற இடதுசாரிகள் பிரிவுகளுக்கு'' சமாதான இயக்கத்தில் முன்னணிக்கு வந்து மோசமான அமெரிக்காவை மட்டும் காண்பவர்களை ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.

இதில் கூப்பருடைய செயல்பாட்டு முறை எல்லா வாயடிப்புவாதிகளையும் போன்றது. ''மோசமான அமெரிக்காவை மட்டும்'' காணும் ஒரு பொம்மையை உருவாக்கி வைத்து அந்த பொம்மையை வீழ்த்துவது தான் அவரது அணுகுமுறை. சோசலிஸ்டுகள் ''மோசமான அமெரிக்காவை'' மட்டும் பார்க்கவில்லை. அவர்கள் ஆளும் வர்க்கத்தினையும் அதன் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் இராணுவத் தலைமை ஆகியவற்றை ஒரு பக்கமாகவும் உழைக்கும் மக்களை இன்னொரு பக்கமாகவும் வைத்து அடிப்படையாக வித்தியாசப்படுத்தி பார்க்கிறார்கள்.

அது எப்படியிருந்தாலும் கூப்பர் அமெரிக்க ஆளும் வர்க்கத்துடன் அமெரிக்க மக்களை ஒன்றாகச் சேர்க்கும் மோசமான முயற்சியிலிருந்து அமெரிக்க மக்களை காப்பாற்றவில்லை. ஆனால் அமெரிக்க சமுதாயத்தில் ஆக்கபூர்வமான அம்சத்தை காண மறுக்கின்றவர்களுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பாதுகாக்கின்றார்.

''ஈராக்குடன் நடைபெறும் மோதலின் முழுமையான பரிமாணங்களை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும்! ஆம்! -போரினை உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக புஷ் பயன்படுத்திக் கொள்கிறார்! ஆனால் சதாம் ஹூசேன் மிகக்கொடூரமான கொடுங்கோன்மை ஆட்சியாளர் என்பதும் உண்மைதான்! ஈராக் மக்கள் சதாம் ஹூசேன் இல்லாவிட்டால் நன்றாகவே இருப்பார்கள். அவர் பல ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்களை மீறி நடந்திருக்கிறார். மக்களை கொன்று குவிக்கும் பல பயங்கர ஆயுதங்களை தயாரிப்பதற்கு முயன்று வருகிறார். ஐ.நா ஆயுத சோதனைத்திட்டத்தை குள்ளத்தனமாக திசைதிருப்பி விட்டார். மீண்டும் அதே ஆயுதங்களை அவர் ஈராக்கினுள் உருவாக்கக்கூடும்'' இவ்வாறு கூப்பர் விவாதிக்கின்றார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அமெரிக்க போர் பிரச்சார களஞ்சியத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டு, மறுக்க முடியாத உண்மைகளை போல் திரும்ப கூறப்பட்டிருக்கிறது. ஈராக்கின் ''பயங்கரமான மக்களை கொன்று குவிக்கும் ஆயுதங்கள்'' தொடர்பாக ஜோர்ஜ் புஷ், டொனால்ட் ரம்ஸ்பெல்ட் அல்லது கொலின் பெளல் ஆகியோருக்கு கிடைத்த சான்றைவிட கூப்பருக்கு வேறு எந்த சான்றும் கிடைக்கவில்லை.

கூப்பர் கிளிப்பிள்ளைப்போல் ஈராக் தொடர்பான அமெரிக்காவின் அணுகு முறையை ஆதரித்து வருவது தெளிவான ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது. அமெரிக்க இராணுவம் கொசோவாவில் மற்றும் ஆப்கானிஸ்தானில் புரிந்தது போன்ற ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் ''நிலை நாட்ட மட்டும்'' நியாயமான போரை நடத்துகின்றதென்றால் ஏன் அவர் இந்த மனிதாபிமான முயற்சியையும் ஆதரிக்கக் கூடாது? உண்மையில், கூப்பர் ஈராக் மீது நடவடிக்கை எடுப்பதை எதிர்க்கவில்லை ஆனால் புஷ் நிர்வாகம் ''அவசரக் கோலத்தில்'' போருக்கு செல்வதை மட்டுமே கண்டிக்கிறார். (ஜிட்லின் தனது கட்டுரையில் இதே சொற்றொடரை பயன்படுத்துகிறார். இடதுகள், அவசரமாக போருக்கு செல்வதற்கு எதிராக பிரயோசனமாக தமது பலத்தை பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்.)

''சதாம் ஹூசேனை அடக்கினால் போதும் படை எடுக்க வேண்டியதில்லை என்று இடதுகள் கூறுகிறார்கள். அப்படியென்றால் அமெரிக்க ஆயுதப்படைகள் தானே சதாம் ஹூசேனை அடக்கவேண்டும்? அத்தகைய நடவடிக்கை முடிவில் ஆயுத பரிசோதனைகளை அவர் முறியடித்து விட்டால் அப்போது என்ன செய்ய வேண்டும்? அந்த நேரத்தில் நீண்டகாலமாக நிலைபெற்றுவிட்ட ஆபத்தான ஹூசேன் போன்ற சர்வாதிகாரியை எப்படி சமாளிப்பது அல்லது எதிர்த்து வீழ்த்துவதில் சர்வதேச சமூகத்தின் பொறுப்பு என்ன?'' இவ்வாறு கூப்பர் ஆரவாரமாக கேட்கின்றார். தனது கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. அவர் பதில் சொல்ல வேண்டியதில்லை ஏனென்றால் அவரின் பதில் தெளிவானது.

கூப்பர் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினருக்காக வாதாடுகிறார். அந்தப் பிரிவினர் மிக கவனமாகவும், திட்டமிட்டும் போர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். புஷ் அவசரமாக, கவனக்குறைவாக எடுக்கும் நடவடிக்கைகளால் அரசியல் ரீதியில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறார்கள். ''பின்லேடன் கும்பலை எதிர்த்து போரிட வேண்டியது அவசியம். ஈராக்கிற்கு எதிராக போருக்குச் செல்லவது அதை திசை திருப்பி விடும்'' என்பது கூப்பரின் வாதம். இது நாடாளுமன்ற ஜனநாயக கட்சியில் ஒரு பிரிவினரது நிலைப்பாடு. இவர்களில் சிலர் ஈராக் மீது படையெடுப்பதற்கு புஷ் அதிகாரம் பெறுவதற்கான சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

ஜில்டின்: ''தேசபக்த போர் எதிர்ப்பாளி''

ஜில்டின் போருக்கு எதிரான கண்டனம் நடத்துபவர்களின் நண்பனைப்போல் நடக்கிறார். அந்த இயக்கம் வெற்றி பெற வாழ்த்தும் ஒருவரைப்போல் பாசாங்கு செய்கிறார். அவர் தனது கட்டுரையில் இந்த கண்டன பேரணி எப்போதோ நடந்திருக்க வேண்டியது உண்மை, அவசியமான ஒன்று என்று வர்ணித்து விட்டு உடனடியாக தற்போது போர் எதிர்ப்பு இயக்கத்தை நடத்தும் தலைவர்கள் மீது தனது கண்டனக்கணையைத் தொடுக்கிறார். அவர் தற்போதைய போர் எதிர்ப்பு இயக்கத்தின் தலைமையான உலக தொழிலாளர் கட்சி ''தன்னை சுற்றி ஒரு நெருப்பு வளையத்தை உருவாக்கிக்கொண்டு, இப்போர் எதிர்ப்பு இயக்கத்தை பாரம்பரிய இடதுசாரிகளின் கசப்பான முடிவை நோக்கி இட்டுச்செல்வதுடன், கோடிக்கணக்கான அமெரிக்க மக்களது உண்மையான கவலைகளை விட்டு ஒதுங்கிச் செல்வதுடன், போர் தொடர்பான உணர்வுகளுக்கு தீயூட்டக் கூடியதும்'' என்று ஜிட்லின் விளக்கியிருக்கிறார்.

அவர் குறிப்பிடுகின்ற ''கசப்பான முடிவான பாரம்பரியம்'' என்ன என்பது விளக்கப்படவில்லை, எவ்வாறிருந்தபோதிலும், அதன் அடிப்படை உள்ளடக்கம் முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பு என்பது தான். ''பாரம்பரியமற்ற'' ஜிட்லின் நீண்ட காலத்திற்கு முன்னரே இந்த முதலாளித்துவ சமூக அமைப்புடன் சமாதானம் செய்துகொண்டு, அதன் பலனாக வசதியான பல்கலைக்கழக பதவியுடன் வாழ்ந்து வருகிறார்.

ஐ.நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்னான பேரணியில் பேச்சாளர்கள் பேசுவதையும், ''பொருளாதார தடைகள் வேண்டாம், குண்டு வீச வேண்டாம்'' என்பது போன்ற பதாகைகள் வருவதையும் பயத்துடன் ஜிட்லின் வர்ணிக்கிறார். இன்றைய உலகத்தின் உண்மையான நிலவரத்தை புரிந்து கொள்ளாமல் இவ்வாறு செய்கிறார்கள் என அவர் இச்சுலோகத்தை நிராகரிக்கின்றார். ''பொருளாதார தடைகள் வேண்டாம், குண்டு வீச வேண்டாம்'' என்ற பதாகைகளை ஏந்தி வந்த இடது குறுங்குழுவாதிகள் சதாம் ஹூசேனை கண்டிப்பதற்கு விரும்பாததுடன், பலாத்காரத்தை பிரயோகிப்பது தொடர்பான புரிந்துகொள்ளகூடிய காரணங்களையும் நிராகரிப்பதாக'' குறிப்பிடுகின்றார்.

மிகச் சாதாரணமான கோரிக்கைகளைக் கண்டே இப்படி பைத்தியம் பிடித்தது போல் விமர்சனம் செய்யும் ஜிட்லினை அரசியல் அடிப்படையில் நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சிக்காரர்கள் கிளின்டன் மற்றும் புஷ் நிர்வாகத்தின் போர் முயற்சிகளுக்கு ஊக்க மூட்டும் வகையில் இவர்கள் செயல்படும் இதர நிர்வாக ''தாராளவாதிகள்'' ஆகியோருடன் சேர்த்துக்கொள்ள முடியும்.

நிர்வாகத்தின் போர்கொள்கையை எதிர்க்கும் இடதுசாரி எதிர்ப்பாளர்கள் ''தார்மீக முறையில் கறைபட்டவர்கள்'' என்று ஜில்டின் வர்ணிக்கிறார். ''பரவலான அமெரிக்க மக்களது ஆதரவைப்பெற வேண்டும் என்றால் தாராளவாத- இடதுசாரி போர் எதிர்ப்பாளர்கள் தேசபக்தர்களுக்கு முன்னர் அணிவகுத்து நிற்க வேண்டும்'' என்று ஆலோசனை கூறுகிறார். இங்கு பரந்த தொழிலா வர்க்கத்தின் முன் முன்னாள் வியட்நாம் போர் எதிர்ப்பு வீரர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன் தனது கோழைத் தனத்தையும், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடக்கும் தன்மையையும் முன்வைக்கின்றார். அவரைப்போன்ற சிந்தனையாளர்கள் கருதுவதைப்போல் அமெரிக்க உழைக்கும் வர்க்கம் பிற்போக்கு சக்தி என்றே அவரால் கருதமுடியும்.

இதில் உண்மையான உள்ளடக்கம் என்னவென்றால், ஜிட்லின் இன் பயத்திற்கு காரணம் பரந்த அடிப்படையில் போர் எதிர்ப்பு இயக்கத்தின் தோற்றத்தின்போது முதலாவதாக பிரதிபலிப்பாக உழைக்கும் வர்க்கத்திற்குள் தீவிரவாத போக்குகள் உருவாகிவருவதுதான்.

ஜிட்லின் மற்றொரு ஆரவாரமான கேள்வியையும் எழுப்பியுள்ளார். ''இந்தப் பேரழிவிற்கு சதாம் ஹூசேன் ஏதாவது ஒரு வகையில் பொறுப்பு ஏற்க வேண்டாமா? அதை நாம் கவனத்தில் கொள்ளக்கூடாதா?'' என்ற கேள்வியில் சதாம்ஹூசைன் ஆட்சியின் மீதும் அமெரிக்காவின் இலக்காகி உள்ள ஏனேய பல ஆட்சிகளின் மீதும் குறைகூறத்தக்க நிலை மீதான வலியுறுத்தல்கள் உள்ளன. இவற்றில் சில உண்மையானவை, சில மிகைப்படுத்தப்பட்டவை. ஆனால் இவை இம்மூன்று கட்டுரை ஆசிரியர்களுக்கும் பொதுவானதாக இருக்கின்றது.

இந்த ஆட்சிகள் புரிந்ததாக கூறப்படும் குற்றங்கள் ஏகாதிபத்தியங்களின் தலையீட்டினை ஜனநாயகத் தன்மையானது மற்றும் மனிதநேயமானது என வர்ணம் பூசுவதற்கு நியாயப்படுத்த முன்னுரையாக பயன்படுத்தப்படுகின்றது. இதில் வேறு எல்லாவற்றையும் போல் ஜிட்லின் குழுவினர் ஆளும் வர்க்கத்தின் கருத்தைத்தான் கிளிப்பிள்ளைகளைப் போல் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

மார்க்சிஸ்டுகளைப் பொறுத்தவரை இத்தகைய ஆட்சிகள் நடத்தும் சூறையாடல்கள் அடிப்படையாக அவர்களின் வர்க்கத்தன்மையையே பிரதிபலிக்கின்றது. அவை தேசிய முதலாளித்துவ அரசுகளாகும். அவர்களின் முக்கியமான பிற்போக்குத்தனம் என்னவெனில் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபட்டு உண்மையான சுதந்திரம் பெறமுடியாது கட்டுப்பட்டுகிடப்பதாகும். உண்மையில், ஏதாவது ஒரு கட்டத்தில் சதாம் ஹூசேன் உட்பட எல்லா ஆட்சிகளுமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தினது அல்லது வேறு ஏதாவது ஒரு ஏகாதிபத்தியத்தின் ஆதரவில் இயங்கியவர்கள் தான்.

இது போன்ற ஆட்சிகளிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டியது உழைக்கும் வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய பணியாகும். இது சர்வதேச தொழிலாள வர்க்கத்தினது ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது.

கம்யூனிஸ்டுகளை சிவப்பு அவதூறு செய்யும் "தாராண்மை" பாணி

கோர்ன் தமது கட்டுரையை ஏளனத்துடன் ஆரம்பிக்கின்றார். வாஷிங்டனில் அக்டோபர் 26-ந் தேதி நடைபெற்ற பேரணியில் ''முமியா அபு ஜமாலை (Mumia Abu-Jamal) விடுதலை செய்'' ''Cuban 5 ஐ விடுதலைசெய்'' ''ஜமீல் இல் அமீனை (Jamil Al-Amin) விடுதலை செய்'' (அதாவது முன்னாள் பிளாக் பந்தர் (Black Panther) அமைப்பின் ராப் பிரெளன் (H. Rap Brown), 2000ல் துணை பொலிஸ் அதிகாரியைக் கொன்றதாக மார்ச் மாதம் தண்டிக்கப்பட்டவர்), லியொனார்ட் பெல்டியே (Leonard Peltier) இனை விடுதலைசெய், மற்றும் சியோனிசத்தை முறியடிப்போம், நாங்கள் அந்தக் கிளர்ச்சியில் உள்ள முதலாளித்துவத்தை தடுத்து நிறுத்துவோம்'' போன்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

கோர்ன் இக்கட்டுரையில் கையாண்டிருக்கும் ஏளனம் வெளிநாடுகளில் புஷ் நிர்வாகம் மேற்கொண்டுள்ள போர் வெறி நடவடிக்கைகளுக்கும் அதன் உள்நாட்டு ஒடுக்குமுறை சமூக பிற்போக்கு கொள்கைகளுக்கும் மற்றும் இஸ்ரேலின் ஷரோன் ஆட்சிக்கு வழங்கிவரும் ஆதரவிற்கும் தொடர்பு இருப்பதாக காட்டும் கருத்தை பரிகாசிக்கும் வகையில் இந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது. கூப்பர், ஜிட்லின் மற்றும் கோர்ன் ஆகியோரின் கட்டுரைகளில் இரண்டாவதாக அவர்கள் தெரிவிக்கின்ற வாதத்தின் பொதுக்கருத்து இதன் மூலம் வெளிப்படுகிறது.

போர் எதிர்ப்பு இயக்கத்திலிருந்து இடது சக்திகளை தனிமைப்படுத்தி வெளியேற்றுவதுதன் மூலம் சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளிலிருந்து (சமுதாய ஏற்றத்தாழ்வுகள், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவது உழைக்கும் வர்க்கத்தை இரண்டு கட்சி அமைப்புடன் கட்டிப்போடுதல்) போரை தனிமைப்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் இவை ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாத அளவிற்கு தொடர்புடையவை. இந்த அரசியல் நோக்கம் இரண்டு நோக்கத்தினை உள்ளடக்கியுள்ளது. அதாவது தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாக கொண்டு சோசலிச முன்நோக்கினால் உயிரூட்டப்படும் பரந்த போர் எதிர்ப்பு இயக்கத்தின் உருவாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான்.

அது எப்படியிருந்தாலும் கூப்பர் மற்றும் ஜிட்லினைப்போல் கோர்னும் ஈராக்கிற்கு எதிரான போரை உண்மையிலேயே எதிர்க்கவில்லை. புஷ் நிர்வாகத்தின் தந்திரங்கள் தொடர்பாகத்தான் அவர் கருத்து வேறுபாடு கொள்கிறார். ''இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவர்களது பிரதான நோக்கங்கள் என்ன என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. முமியா அபு ஜமால் பிரச்சனை, ஐ.நாடுகள் ஆயுத ஆய்வாளர்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் மீண்டும் சோதனைகள் நடத்த வேண்டும். ஜோர்ஜ்.டபிள்யு புஷ் போரை ஆரம்பிக்கு முன் இது நடக்க வேண்டும் என்பது அதிக முக்கியத்துவம் பெறவில்லை'' என்று கோர்ன் எழுதியிருக்கிறார்.

போர் எதிர்ப்பு இயக்கம் கட்டுப்பாடு இல்லா புதிய ஆயுத சோதனைகளுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். அதுவும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு முன்னோடியாக இருக்கும்! இதுதான் வைத்தியர் கோர்ன் வழங்கும் மருந்து. இத்தகைய நண்பர்கள் இருக்கும்போது ஈராக் போரை எதிர்ப்பவர்களுக்கு எதிரிகள் எவரும் தேவையே இல்லை.

இந்தக் கட்டுரையாளர்கள் மூன்று பேரில் கோர்ன், வெளிப்படையாக கம்யூனிசத்தை எதிர்ப்பவர் இடதுசாரிகளை பழி வாங்க வேண்டும் என்று துடிப்பவர். இந்த அவரது நோக்கம் அவர் O'Reilly நடத்திய தொலைக்காட்சி நிகழ்சியில் கலந்து கொண்டதன் மூலம் தெளிவாகத் தெரிகின்றது.

ஒரு இடத்தில் உலக தொழிலாளர் கட்சி போர் எதிர்ப்பு இயக்கத்தில் தனது பங்கை வகிக்கிறது என்று கூறுகிறார். இன்னொரு இடத்தில் கம்யூனிஸ்ட்டுகள் பஸ்களை வாடகைக்கு அமர்த்தி பேரணிகளுக்கான அனுமதிகளை வாங்கி அங்கு அவர்கள் செய்ததுபோல், ஏதாவது கருத்து தெரிவிப்பார்களானால் போர் எதிர்ப்பு இயக்கம் இடதுசாரி அல்லாதவர்களை கொண்ட கடுமையான காலத்தை எதிர்கொள்ளப்போகின்றது என்று கூறுகிறார்.

கோர்ன் AFL-CIO- தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மிக வெளிப்படையான ஆதரவாளர் என்பது தற்செயலாக நடந்து விட்ட ஒன்றல்ல; ''போர் எதிர்ப்பு இயக்கம் என்பது அரசியலில் நிர்பந்தத்தை கொண்டு வரவேண்டுமென்றால் மிகப் பரவலாகவும் வாஷிங்டனிலும் இதர இடங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும். இந்தக் கட்டத்தை புதிய சமாதான இயக்கம் அடைவதற்கு தொழிற்சங்கங்களையும் தேவாலையங்களையும் கொண்டிருக் வேண்டும்.'' என்று நேஷன் பத்திரிகையின் வாஷிங்டன் ஆசிரியர் எழுதுகிறார்.

இதற்கு பொருள் என்ன? போர் எதிர்ப்பு இயக்கம், தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும், ஜனநாயக கட்சிகளுக்கும் கீழ்பணிந்து நடக்க வேண்டும் என்பது தான். இத்தகைய தொழிற்சங்க குழுக்களும், தேவாலயங்களும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மனித உரிமைகள் பற்றியும் தொழிலாளர் உரிமைகள் பற்றியும் கவனம் செலுத்தும் அத்தகைய குழுக்கள் சோசலிச கொடுங்கோலர்களுடன் இணைந்து போராடும் இவர்களோடு எப்படி இணைந்து பணியாற்ற முடியும் என்று கோர்ன் கேட்கிறார். அவர் குறிப்பிடுவது வடகொரியாத் தலைவர் கிம்ஜான் II-க்கு உலக தொழிலாளர் கட்சி ஆதரவு தருவதைப் பற்றியது.

கிம், ஒரு சோசலிசவாதி என்று அழைக்கப்படுவது உண்மையை திரிப்பதாகும். அதே போன்று AFL-CIO உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தொழிலாளர் உரிமைக்காக போராடும் அமைப்பு என்று வர்ணிப்பது அப்பட்டமான உண்மையை திரிப்பதாகும். அமெரிக்க தொழிற்சங்க அமைப்பு பல ஆண்டுகளாக CIA இற்கு தன்னுடைய நிதியை விநியோகிக்கின்ற கால்வாயாக பயன்பட்டுவருகின்றது. இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, மற்றும் ஆசிய நாடுகள் முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கான சாதனமாக அமெரிக்க தொழிற்சங்க இயக்கம் (AFL-CIO) செயல்பட்டு வருகிறது. உள்நாட்டில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும், வேலை வாய்ப்புகளையும், வேலை நிலைகளையும், மற்றும் ஓய்வு ஊதியங்களை அழிக்கின்ற பணியில் நேரடியாக AFL-CIO இயக்கம் ஒத்துழைத்து வருகிறது.

அமெரிக்க முதலாளித்துவத்திற்கு எதிரான எந்த மக்கள் இயக்கத்திற்கும் கூப்பர், ஜிட்லின், மற்றும் கோர்ன் ஆகியோர் உணர்மையான எதிரிகளாவர். இந்த நிலைப்பாட்டின் காரணமாக ஏகாதிபத்திய உலக அமைப்பு முறையினாலும் அதன் முரண்பாடுகளாலும் உருவான ஈராக் மீதான போரை அவர்கள் எதிர்ப்பது இயலாத காரியம். இந்த மூவரும், இவர்களை போன்றவர்களும், போர் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கு பெறும் தீவிரமிக்க பிரிவினரை மூர்க்கமாக கண்டிப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பொதுமக்களிடையே தீவிரவாத உணர்வுகள் உருவாகி விடுமானால், இப்போது முதலாளித்துவத்தை பாதுகாக்கும் சக்திகள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவார்கள். இந்த பயத்தின் காரணமாகத்தான் தற்போது போர் எதிர்ப்பு இயக்கத்தை கண்டித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் நடைபெற்றுக் கொண்டுள்ள சம்பவங்கள் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் மிகுந்த பலாத்கார வடிவில் தெளிவாக மீண்டும் உருவாகிவரும் ஏகாதிபத்தியம் மீதான மார்க்சிசத்தின் விமர்சனங்களை சரியாகவும் சிறப்பாகவும் உறுதிபடுத்திக் கொண்டுவருகின்றன. இந்த மார்க்சிச கருத்துக்கள் மேலும், மேலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இத்தகைய முக்கிய வலதுசாரி சக்திகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது சொந்த ஏகாதிபத்திய சக்திக்கு ஜனநாயக மற்றும் முற்போக்கு சாயம்பூச முயல்கின்றனர். இதில் அவர்கள் வெற்றி பெறமுடியாது என்பதை அவர்கள் எடுத்து வைக்கும் பதட்டமிக்கதும் வெளிப்படையானதுமான வியர்வை சிந்தும் நடவடிக்கைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

See Also :

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் மைக்கேல் கெல்லி உலக தொழிலாளர் கட்சி மீது காட்டும் கம்யூனிச பூச்சாண்டி

போருக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்

ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்

Top of page