:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan SEP replies to a right-wing supporter of the LTTE
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின் வலதுசாரி ஆதரவாளருக்கு
பதில் அளிக்கிறது
13 February 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
பின்வரும் கடித பரிமாற்றத்தில் கொழும்பு அரசாங்கத்துடனான சமாதான பேச்சுவார்த்தையில்
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈடுபாட்டினை ஆதரிக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் ஒருவரின் மின்னஞ்சலுக்கு இலங்கை
சோசலிச சமத்துவக் கட்சி பதிலளிக்கின்றது. இந்த மின்னஞ்சலானது "தீவின் வடபகுதியான ஊர்காவற்துறையில் இருந்து
சோ.ச.க. ஆதரவாளர்களை "இல்லாதொழிக்க வேண்டும்" என்ற விடுதலைப் புலிகளின் அழைப்பு தொடர்பாக உலக
சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் உறுப்பினரான கே.ரட்னாயக்க எழுதிய கட்டுரையின் பிரதிபலிப்பாகவே அனுப்பப்பட்டிருந்தது.
அன்பின் திரு. ரட்னாயக்க,
சமாதான பேச்சுவார்த்தைக்கு உங்களது எதிர்ப்பை நியாயப்படுத்துவதற்கான உங்களது
வாதம் சிறுபிள்ளைத்தனமானது. சமமாக "சோ.ச.க. சமாதானத்திற்கு எதிரானதல்ல, ஆனால் வல்லரசுகள் மற்றும்
பெரு வர்த்தகர்களினதும் அனுசரணையுடன், விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் மூடிய கதவுகளுக்குள்ளான 'சமாதானப்
பேச்சுவார்த்தைகளில்' கலந்துரையாடும் ஊழல்மிக்க கொடுக்கல் வாங்கலை எதிர்க்கின்றது என நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்.
இரு சாராரும் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் ஆளும் வர்க்கங்களுக்கிடையில் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தை ஸ்தாபிப்பதன்
பேரில், யுத்தத்துக்கு முடிவுகட்டுவதற்கான சாதாரண உழைக்கும் மக்களின் நியாயமான விருப்பத்தினை சுரண்டிக்கொள்வது"
பற்றியே பெரிதும் பேசப்படுகின்றது. தமிழர்களுக்கு மத்தியில் நிலச்சுவாந்தார்களும் தொழிலதிபர்களும் கிடையாது.
சாதாரண உழைக்கும் மக்கள் உங்களுடன் இல்லை. அவர்கள் விடுதலைப் புலிகளுடன் இருக்கிறார்கள்.
நீங்கள் கணவு காணும் சாதாரண உழைக்கும் மக்களின் புரட்சிக்காக தமிழர்கள் காத்திருக்க
வேண்டுமானால், அவர்கள் அவ்வாறான இராச்சியம் வரும் வரை காத்திருக்க வேண்டும்! ஒருவர் யதார்த்தமாக
இருக்க வேண்டும். நீங்கள் உங்களது தலையை ஆகாயத்துக்குள் விடலாம், ஆனால் உங்களது கால்களை நிலத்திலேயே
வைக்க வேண்டும்!
யுத்தத்தால் அழிவுற்றிருக்கும் வடகிழக்கை புனரமைக்க நிதி வழங்குவது "வல்லரசுகளும்
பெரும் வர்த்தகர்களும்" அன்றி வேறு யார்? நீங்களே நன்கொடைகளை எதிர்பார்க்கும் போது புனரமைப்பு மற்றும்
புனர்வாழ்வுக்காக ஒரு டொலரையாவது சோ.ச.க. வழங்குமா?
இப்போது "பிரமுகர்கள்" பற்றி பேசுகிறீர்கள், நீங்கள் யார்? நீங்கள் ஒரு ஆங்கிலம்
பேசும் பிரமுகர் அல்லாமல் "ஒரு சாதாரண உழைக்கும் மக்களா?"
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கலாநிதி என்.எம். பெரேரா மற்றும் கொல்வின் ஆர்.டி.
சில்வா போன்ற ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அடித்த குட்டிக்கரணங்களை தமிழ் மக்களால் இலகுவில் மறக்க முடியாது. உங்களது
ட்ரொட்ஸ்கிசம் நம்பிக்கையீனமான செல்லரித்த கோட்பாடாகும். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரும்
தொழிலாள வர்க்கம், முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் பற்றி பேசுவது நகைப்புக்கிடமானதாகும்!
குறைந்தபட்சம் ஸ்ராலினிஸ்டுகளும் மா ஒ வாதிகளுமாவது சிறிதுகாலத்துக்கு சோசலிச
அரசுகளை நிர்மாணித்திருந்தார்கள். ஆனால் உங்களைப் போன்ற ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எந்தவொரு பலனுமின்றி கடந்த
90 ஆண்டுகளாக முயற்சித்துவருகின்றீர்கள்.
நீங்கள் ஊர்காவற்துறையில் ஒரு சில ஆதரவாளர்களையே கொண்டுள்ளீர்கள், ஆனால் ஆனால்
பெரிய சத்தம் போடுகிறீர்கள். வடகிலோ அல்லது தெற்கிலோ எந்தவொரு ஆளும் சபைகளுக்கும் நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள்
என் நான் நினைக்கவில்லை.
நீங்கள், "நாம் ஆயுத படைகளை, இராணுவ முகாம்களை அல்லது இராணுவ கட்டிடங்களை
அப்புறப்படுத்துமாறு கேட்கவில்லை... நாம் இராணுவத்தை வெளியேறுமாறு கேட்கவில்லை..." என்ற அன்டன் பாலசிங்கத்தின்
அறிக்கையை சூழ்நிலைக்குப் புறம்பாக சுட்டிக்காட்டுகிறீர்கள். வாதத்துக்கான புள்ளிகளை சேகரிப்பதில் நீங்கள் சாதுரியமானவர்
என கருதலாம், ஆனால் நீங்கள் நேர்மையற்றவர்! நீங்கள் அவரது கூற்றை சரியான சூழ்நிலையில் இருந்து நோக்க
வேண்டும். அதாவது உயர் பாதுகாப்பு வலயத்தை கலைப்பது மற்றும் தீவுப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை
மீளக் குடியமர்த்துவது. இந்தப் பாணியில் உங்களுக்கு ஓட்டைகளைப் பொறுக்க வேண்டுமானால் நீங்கள் அவ்வாறு செய்யலாம்
இவ்வாறான ஓட்டைகளை நீங்கள் வேண்டுமானால் பொறுக்கலாம். ஆனால் அது ஒரு பயனற்ற பயிற்சியாகவே
விளங்கும்.
"19 வருடகால யுத்தத்தில், இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தீவின் வடக்கு கிழக்கில்
இருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தனையின்றி வெளியேற்றுமாறு சமரசமற்றுக் கோரிவந்துள்ளதுடன் தமிழ் மக்கள் மீதான
அடக்கு முறைக்கு எதிராக சளையாது பிரச்சாரம் செய்ததாகவும்," நீங்கள் கூறுகின்றீர்கள். ஆம் நீங்கள் பூமியில் இலகுவானதை
செய்தீர்கள், மன்னிக்கவும் ஸைபர் தளத்தில்!
(Cyber Space). 17,698 உறுப்பினர்களை தியாகம்
செய்து சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராடிய கடினமான பணியை விடுதலைப் புலிகள் செய்ததுள்ளனர்!
இறுதியாக, நான் உங்களோடு வாதம் செய்து உங்களுடைய மிகைப்படுத்தப்பட்ட தற்பெருமைக்கு
நியாயம் வழங்க விரும்பவில்லை. ஆனால் நான் நிச்சயமாக உங்களுக்கு பிரியமான மலட்டுத் தத்துவத்தினை பிரச்சாரம்
செய்யும் உரிமையை மதிக்கிறேன்! மீண்டும் ஸைபர் தளத்தில்!
தங்கவேலு
அன்பின் திரு. தங்கவேலு,
உங்களது மின்னஞ்சலில் நீங்கள் எழுப்பும் கருத்துக்கள் எனது கட்டுரையில் உள்ள வாதங்களை
சாதாரணமாக உறுதிப்படுத்துகிறது: அதாவது பெயரளவிலான சமாதான முன்னெடுப்புக்களின் ஊடாக, விடுதலைப் புலிகள்
தமிழ் மக்களை வல்லரசுகள் மற்றும் பெரு வர்த்தகர்களின் நலன்களுக்கு கீழ்படியச் செய்கிறது. யதார்த்தம் என்ற பெயரில்,
நீங்கள் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள சகல உழைக்கும் மக்களுக்கும் அழிவுகரமானது என்பதை விரைவில் நிரூபிக்கவிருக்கும்
அதிகாரப்பகிர்வு ஒப்பந்தத்தினை நியாயப்படுத்துவதன் பேரில் தொழிலாள வர்க்கத்தையும், சோசலிசத்தையும் மற்றும்
சோசலிச சமத்துவக் கட்சியையும் இகழ்ந்துரைக்கின்றீர்கள்.
யுத்தத்தால் சீரழிந்த வடகிழக்கைப் புனர்நிர்மாணம் செய்ய வல்லரசுகளும் பெரு
வர்த்தகர்களும் அன்றி வேறு யார் நிதி வழங்குவார்கள்! என கூச்சலிடுவதனூடாக உங்களுடைய விடயத்தை இறுகப்
பற்றிக்கொள்ள முயற்சிக்கின்றீர்கள். எவ்வாறெனினும், அனைத்துலக மூலதனமானது சாதாரண மக்களின் வாழ்க்கைத்
தரத்தை மாற்றுவதில் அக்கறை செலுத்தவில்லை, மாறாக மலிவு உழைப்பின் தோற்றுவாயையே தேடுகின்றது. வடகிழக்கின்
நிவாரணத்துக்கும் "புனரமைப்புக்கும்" சர்வதேச நிதி உதவியில் ஒரு அற்பத்தொகை வழங்கப்படுமானால், அது அனைத்துலக
முதலீட்டாளர்களுக்கு தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கு சாத்தியமான நிலைமைகளை ஏற்படுத்திக் கொடுப்பதையே
குறிக்கோளாகக் கொண்டிருக்கும்.
தற்போதைய பேச்சுவார்த்தைகளில் உருவாக்கப்படவிருக்கும் புதிய அரசாங்கத்தில்
சிறியதாக இருப்பினும் தமக்கும் ஒரு பாத்திரம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில், தேவையான பொருளாதார திட்டங்களை
அமுல்செய்ய ஏற்கனவே விடுதலைப் புலிகள் தமது விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் பிரதான
பேச்சுவார்த்தையாளரான அன்டன் பாலசிங்கம், சுதந்திரத் தமிழீழ அரசுக்கான கோரிக்கையை வெளிப்படையாக கைவிட்டதோடு,
கடந்த செப்டம்பரில், "தீவை ஒரு வெற்றிகரமான புலி பொருளாதாரத்துக்கு" மாற்றுவதில் "தமிழ் புலிகளையும் சம
பங்காளிகளாக ஏற்றுக்கொள்ளுமாறு" அரசாங்கத்துக்கு அழைப்புவிடுத்தார். அனைவரும் அறிந்த வகையில் "புலி
பொருளாதாரம்" என்பது ஆசியா முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள மலிவு உழைப்பு சந்தையேயாகும்.
விடுதலைப் புலிகளும் தென்னாபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், நிகரகுவாவில்
சன்டனிஸ்டா, மத்திய கிழக்கில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் கிழக்குத் தீமோரில் பெர்ட்டலின் போன்ற இயக்கங்கள்
பயணித்து நன்கு தேய்ந்து போன அதே பாதையிலேயே பயணித்துக்கொண்டிருக்கின்ற அதேவேளை, பெறுபேறுகள்
முற்றிலும் முன்னறிவிக்கக் கூடியவையாகும். விடுதலைப் புலி தலைவர்களில் ஒரு சிறு குழுவினர் கெரில்லா உடைகளுக்குப் பதிலாக
வியாபார உடைகளையும், இலாபகரமான அரசாங்க மற்றும் கூட்டுத்தாபன நிலைகளையும் மாற்றிக்கொள்வார்கள்.
அவர்களின் மைய செயற்பாடுகளில் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சமூக, பொருளாதார வேலைத் திட்டத்திற்கு
எதிராக பரந்துபட்ட மக்கள் மத்தியில் வளர்ச்சிகாணும் ஆத்திரத்தையும் எதிர்ப்பையும் இரக்கமற்று நசுக்குவதும்
ஒன்றாகும்.
சோ.ச.க. வின் பதிலீடானது "யதார்த்தமற்ற விருப்பங்கள்" எனக் கூறுவதன் ஊடாக
விடுதலைப் புலிகளின் கொள்கையை நியாயப்படுத்த முயற்சிக்கின்றீர்கள். உங்களுடைய விடயத்தை ஆதரிப்பதற்காக, "அறுபதுகளிலும்
எழுபதுகளிலும் கொல்வின் ஆர். டி. சில்வா, என். எம். பெரேரா போன்ற ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அடித்த குட்டிக்கரணங்கள்"
என நீங்கள் சுட்டிக்காட்டுவது, "ட்ரொட்ஸ்கிசம் செல்வாக்கிழந்த செல்லரித்த கோட்பாடு" எனும் உங்களுடைய
முடிவை ஒப்புவிப்பதற்காக கலப்படமின்றி வேண்டுவதாகும். உண்மையிலேயே, ஒருவர் பெயர் குறிப்பிடுவதற்கு அப்பால்
சென்றால், வரலாறு நீங்கள் கூறுவதற்கு மிகவும் மாறான ஒன்றை வெளிப்படுத்தும்.
தேவைகருதி, 1960ற்கு முந்திய லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க.) தொடர்பாக
நீங்கள் குறிப்பிடவில்லை. 1940 களிலும் 1950களிலும் பெரேரா மற்றும் டி சில்வா உட்பட்ட ல.ச.ச.க. தலைமைத்துவம்
சோசலிச அனைத்துலகவாதத்தின் -அதாவது ட்ரொட்ஸ்கிசம்- அடிப்படைகளில் காலூன்றி சக்திமிக்க தொழிலாள வர்க்க
இயக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை திட்டவட்டமாக நிரூபித்துள்ளனர். இலங்கை ஆளும் வர்க்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட
இனவாத அரசியலுக்கு எதிராக, தமிழ், சிங்கள தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் உறுதியான போராட்டத்தினூடாக,
ல.ச.ச.க. தொலை நோக்குள்ள மற்றும் தியாக உணர்வுமிக்க தொழிலாளர் தட்டினரதும், இளைஞர்கள், புத்திஜீவிகளதும்
விசுவாசத்தை வென்றது.
ல.ச.ச.க. தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை வலிமையாக
எதிர்த்து வந்தது. 1948ல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் உரிமையை
பறிப்பதற்காக பிரஜாவுரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, கொல்வின் ஆர் .டி. சில்வா அப்பிரேரணையை
கண்டனம் செய்ததோடு இவ்வாறான பாரபட்சம் எல்லாத் தமிழர்கள் மீதும் தவிர்க்க முடியாமல் விரிவுபடுத்தப்படும்
என மிகச் சரியாக எச்சரித்தார்.
இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கிய, தமிழ் ஆளும் கும்பலின் தீர்க்கதரிசனமற்ற
ஒரு பகுதியினரை சுட்டிக்காட்டி கொல்வின் ஆர்.டி. சில்வா பின்வருமாறு குறிப்பிட்டார்: "உதாரணத்திற்கு யாழ்ப்பாண
தமிழர்கள் இதன் கீழ் வரமாட்டார்கள் என பதிலளிக்கலாம் ஆனால்... எப்பொழுது ஒரு அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு
குழுவுக்கு எதிராக இனவிரோத கொள்கையை அமுல்படுத்த ஆரம்பிக்கின்றதோ, அப்போதிருந்து மற்றுமொரு குறிப்பிட்ட
குழுவுக்கு எதிராக இனவிரோத கொள்கையை அமுல்படுத்துவது குறுகியது மாத்திரமல்ல இலகுவானதுமாகும்."
தொழிலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தில் ல.ச.ச.க. இலங்கை
முதலாளித்துவத்தின் இதயத்தையே குலுக்கிய 1953 ஹர்த்தாலின் (வேலை நிறுத்த இயக்கத்தின்) தலைமைக்கு வந்தது.
வாழ்க்கைத் தரத்தை சீரழிப்பதற்கு எதிரான ஹர்த்தால் சக்தி மிக்கதாக மாறியதால், அமைச்சரவை கொழும்பு
துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பிரித்தானிய யுத்தக் கப்பலுக்குள் தஞ்சமடைந்தது. அதனது அரசியல் பலவீனத்தை
புரிந்து கொண்ட இலங்கை முதலாளித்துவ வாதிகளில் ஒரு பகுதியினர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் பக்கமும் அதன் வெளிப்படையான இனவாத அரசியலின் பக்கமும் நனவாக திரும்பினர்.
தமிழை அரச கரும மொழியில் இருந்து நீக்கியதோடு, தமிழர்களை இரண்டாம்தர பிரஜைகளாக்கிய
பண்டாரநாயக்கவின் "தனிச் சிங்கள சட்டத்தை" ல.ச.ச.க. எதிர்த்தது. ஒரு பாராளுமன்ற விவாதத்தின்போது,
தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்திற்காக வாதாடிய என்.எம். பெரேரா: "நீங்கள், வடக்கு கிழக்கில் வாழும்
மக்களை சிங்களத்தை மாத்திரம் அரசகரும மொழியாகவும் தமிழை பிரதேச மொழியாகவும் ஏற்க நிர்ப்பந்திப்பீர்களேயானால்,
அது மோசமான அமைதியின்மைக்கும், இரத்தக் களரிக்கும் உள்நாட்டு யுத்தத்துக்கும் வழி வகுக்கும்," என தீர்க்க
தரிசனமாக எச்சரித்தார்.
1960 பதுகள், 70பதுகளில் ல.ச.ச.க. தலைவர்களின் காட்டிக்கொடுப்பு பாத்திரமானது
அவர்கள் சோசலிச கொள்கையை கடைப்பிடித்ததாலோ அல்லது மக்களை அணிதிரட்டுவதில் ட்ரொட்ஸ்கிசம் தோல்விகண்டதாலோ
ஏற்பட்டதல்ல, அதற்கும் மாறானது. கட்சி, நாட்டின் சமூக நிலைமைகளின் சக்திமிக்க அழுத்தங்களுக்கு அடிபணியத்
தொடங்கியதோடு அது வேரூன்றியிருந்த அடிப்படைகளைக் கைவிட்டது. இலங்கை தேசியவாதத்தை தழுவிக்கொண்ட
அவர்களது சந்தர்ப்பவாதத்தினை நியாயப்படுத்துவதன் பேரில், ல.ச.ச.க. தலைமைத்துவம் உங்களைப் போலவே
அதே வாதங்களை முற்றிலும் பிசகாமல் அபிவிருத்தி செய்தது: சோசலிச புரட்சிக்கான போராட்டம் "யதார்த்தமற்றதாகவும்"
அது மிகவும் "யதார்த்தமான" முறையில் -முதலாளித்துவ பாராளுமன்ற அரசியல் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
சிங்கள பேரினவாதம்- பதலீடு செய்யப்படவேண்டும் என கருதியது.
ல.ச.ச.க. 1964ல் திருமதி பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில்
இனைந்தபோது அதன் வெளிப்பாடு ட்ரொட்ஸ்கிசம் நிரந்தரமாக காட்டிக்கொடுக்கப்பட்டது. இலங்கையிலும் அனைத்துலக
ரீதியிலும் அதன் அரசியல் விளைவுகள் தொழிலாள வர்க்கத்திற்கு அழிவுகரமானதாக இருந்தது. இலங்கையில்
ல.ச.ச.க. தமிழ் சிங்கள தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தினை கைவிட்டமையானது
இனவாத அரசியலை அடித்தளமாகக் கொண்ட குட்டி முதலாளித்துவ போக்குகளுக்கு வழிவகுத்தது -மக்கள் விடுதலை முன்னணி
(JVP) தெற்கில் சிங்கள பேரினவாதத்தைத்
தழுவிக்கொண்டதோடு, விடுதலை புலிகள் வடக்கில் தமிழ் பிரிவினைவாதத்தை அபிவிருத்தி செய்தது. இறுதி ஆய்வில்,
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மரணத்திற்கு வழியமைத்த 1983 உள்நாட்டு யுத்தத்தின்
வெடிப்புக்கான அரசியல் பொறுப்பானது, 1960களில் ல.ச.ச.க. ட்ரொட்ஸ்கிசத்தை கைவிட்டமையிலேயே தங்கியுள்ளது.
ல.ச.ச.க. வின் காட்டிக் கொடுப்பை எதிர்த்ததோடு, அதன் அரசியல் மூலங்களை
ஆராய்ந்து இலங்கைத் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் சோசலிச அனைத்துலகவாத அடிப்படைகளை மீள ஸ்தாபிப்பதற்காக
குரலெழுப்பிய ஒரே அரசியல் போக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (நா.அ.அ.கு) மட்டுமேயாகும்.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (சோ.ச.க. வின் முன்னோடி) அந்த அரசியல் போராட்டத்தின் அடித்தளத்திலேயே
1968ல் ஸ்தாபிக்கப்பட்டது.
இரண்டு தசாப்தங்களாக, எமது கட்சி அடுத்தடுத்து வந்த கொழும்பு அரசாங்கங்களால்
முன்னெடுக்கப்பட்ட இனவாத யுத்தத்தை, நீங்கள் ஸைபர் தளம் என இழிவாக குறிப்பிடும் உலக சோசலிச வலைத்
தளம் உட்பட அதன் சக்திக்கு உட்பட்ட விதத்தில் கடுமையாக எதிர்த்தது. வடக்கு கிழக்கில் இருந்து இலங்கை
இராணுவத்தை உடனடியாகவும் நிபந்தினையின்றியும் விலக்கிக்கொள்ளுமாறு கோரியதனால், கொடூரமான அரச ஒடுக்குமுறைக்கும்
ஜே.வி.பி. துப்பாக்கிதாரிகளின் கொலை தாக்குதல்களுக்கும் மத்தியில் எமது கொள்கை ரீதியான உறுதியான பிரச்சாரத்தின்
மூலம் பு.க.க. மற்றும் சோ.ச.க. வும் இலங்கை முழுவதும் பிரசித்திபெற்றவையாகும். சோ.ச.க. வின்
போராட்டத்தையும் அதன் காரியாளர்கள் கொடுத்த விலையையும் கேலி செய்வதனூடாக நீங்கள் உங்களது அறியாமையை
சாதாரணமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
ஒவ்வொரு வலதுசாரி கூலிகளாலும் மற்றும் முதலாளித்துவ சார்பு தத்துவவியலாளர்களாலும்
போசித்து வளர்க்கப்பட்ட வாய்வீச்சான "சோசலிசம் செத்துவிட்டது" என்பதை நீங்கள் ஆதரிப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.
எவ்வாறெனினும் சோவியத் ஒன்றியத்தின் பொறிவானது சோசலிசத்தின் தோல்வியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை
மாறாக அதன் எதிரிடைகளையேயாகும்: அதுவே ஸ்ராலினிச அதிகாரத்துவம் அடித்தளமாகக் கொண்டிருந்த "தனி
நாட்டில் சோசலிசம்" எனும் பிற்போக்கு தேசியவாத முன்நோக்கு.
1917ம் ஆண்டின் அக்டோபர் புரட்சியில் தொழிலாள வர்க்கம் ரஷ்யாவில் ஆட்சியைக் கைப்பற்றியமைக்கு
லெனினாலும் ட்ரொட்ஸ்கியாலும் விரிவுபடுத்தப்பட்ட முன்நோக்கே வழிகாட்டியது -சோசலிசத்தை கட்டியெழுப்புவதானது
புரட்சியை பிரதான முதலாளித்துவ மையங்களுக்கு விரிவுபடுத்துவதை அவசியமாக்கியது. 1920களில் ஐரோப்பாவினதும்
சீனாவினதும் புரட்சிகர இயக்கங்களின் தோல்வியினால், ஸ்ராலின் தோன்றி உலக சோசலிச புரட்சிக்கான
முன்நோக்கை நிராகரித்ததுடன் தொழிலாள வர்க்கத்தின் செலவில் வசதியாக தமது இருப்பினை உறுதி செய்து கொண்ட
அதிகாரத்துவ கருவியின் பிரதிநிதியாக தனது நிலையினை உறுதிப்படுத்திக் கொண்டார்.
உற்பத்தியின் பூகோளமயமாக்கத்தின் தாக்கத்தின் கீழ், முதலாளித்துவ சமாதானத்தினதும்
வளத்தினதும் புதிய வயதைப் பற்றி கட்டியம் கூறுவதற்கு அப்பால், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும் கிழக்கு
ஐரோப்பாவில் ஸ்ராலினிச அரசாங்கங்களினது வீழ்ச்சியும் தேசிய பொருளாதார ஒழுங்குகளை அடித்தளமாகக் கொண்ட
சகல கட்சிகளினதும் வேலைத் திட்டத்தின் வரலாற்று அழிவுகளின்
ஆரம்ப வெளிப்பாடாகும். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் ஒரு தசாப்தத்தின் பின்னர் உலக
பொருளாதாரத்திற்கும் தேசிய அரச முறைக்குமிடையிலான அடிப்படை முரண்பாடு மீண்டும் அரசியல் வாழ்க்கையின் வெளிச்சத்திற்கு
வந்துள்ளது- நூற்றாண்டுக்குள் மூன்றாவது தடவையாக சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா பதிலீடு என்ற கேள்வியை
மனித குலத்தின் முன் தோற்றுவித்துள்ளது.
இதே போல, சீனா எப்போதும் ஒரு சோசலிச நாடாக இருந்ததில்லை. 1925-27
சீனப் புரட்சியின் தோல்விக்கான பொறுப்பு மொஸ்கோவில் இருந்த ஸ்ராலினிச அதிகராத்துவத்தின் குற்றவியல் கொள்கைகளில்
அன்றி தொழிலாள வர்க்கத்திலேயே தங்கியிருந்தது என மா ஓ முடிவு செய்தார். அவர் விவசாயிகளை அடித்தளமாகக்
கொண்டிருந்ததோடு 1949ல் சியங்காய் ஷேக்கின் அரசாங்கம் உள்நோக்கி வெடித்தபோது அதிகாரத்துக்கு வந்தது
மா ஒ வின் விவசாய இராணுவமே அன்றி தொழிலாள வர்க்கமல்ல. மா ஓ வின் விசேட வாசகமான "தனிநாட்டில்
சோசலிசம்" என்ற ஸ்ராலினிச முன்நோக்கு, சீனாவை 1949 புரட்சிக்கு முன்னர் அமுலில் இருந்த கொடூரமான
சுரண்டல்கள் இடம்பெற்ற உலகின் இலாபகரமான உழைப்புச் சந்தையாக முழுமையாக மாறியதைக் கண்டது.
சோசலிச அனைத்துலகவாத அடிப்படைகளை நடைமுறைக்கு அப்பாற்பட்டது மற்றும் "யதார்த்தமற்றது"
எனும் உங்களது நிராகரிப்புக்கும், அத்தோடு உலக முதலாளித்துவத்தின் நிலைபேறு மீதான உங்களது நம்பிக்கைக்கும் அப்பால்
ஸ்ராலினிசம் மற்றும் மா ஓ வாதத்துடனான உங்களது ஐயத்துக்கிடமற்ற ஒப்புமை வெளிப்படுகின்றது.
முடிவில் உங்களது மின்னஞ்சல் வருவதற்கு காரணமாக இருந்த விடயத்தின் பக்கம் திரும்ப
என்னை அனுமதியுங்கள்.
கடந்த 12ம் திகதி உ.சோ.வ.த. ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த்
உங்களின் ஏசியன் ரிபீயூன் கடிதத்துக்கு பதில் அளித்தார். அதில் நீங்கள், ஊர்காவற்துரையில் சோ.ச.க.
உறுப்பினர்கள் மீதான விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பாக உ.சோ.வ.த. அறிக்கையின்
நம்பகத்தன்மை தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தீர்கள். உங்களது அண்மைய மின்னஞ்சலின் முடிவுரையில், சோ.ச.க.வின்
ஜனநாயக உரிமைகள் தாக்குதல்களுக்கு உள்ளாகிவருவதை நீங்கள் ஏற்றுக்கொள்வதாக தோன்றுகிறது.
ஆனால், நீங்கள் குறிப்பிடுவதுபோல, சோ.ச.க ஒரு சிறிதளவே அரசியல் முக்கியத்துவம்
வாய்ந்ததாக இருந்தால் விடுதலைப் புலிகள் அலட்டிக் கொள்ளவது ஏன்? அதனுடைய நிலை உறுதியானதாக இருந்தால்,
எதற்காக சோ.ச.க. துடைத்துக்கட்டப்பட வேண்டும்? அதன் அங்கத்தவர்கள் பயமுறுத்தப்படுவது ஏன்? பதில் வெளிப்படையானது.
சமாதானம், சுபீட்சம் மற்றும் ஜனநாயக உரிமைகள் பற்றிய அதன் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட மாட்டாது என்பது
விடுதலைப் புலிகளின் தலைமைக்கு தெரியும். தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் இது சாட்சியமாக அதிகரித்துக்
கொண்டு வரும்போது விடுதலைப் புலிகள் மீதான எதிர்ப்பு ஆழமாகவும் பரந்தும் வளர்ச்சியடையும். அவர்களது தற்போதைய
நேர்மையான ஆதரவாளர்கள் மத்தயிலும் கூட இந்தக் கேள்வி -நாம் எதற்காக இவ்வளவு தியாகங்களையும் செய்தோம்-
எழும்.
எனவேதான் விடுதலைப் புலிகளுக்கு, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு உண்மையான பதிலீட்டை
அபிவிருத்தி செய்யும் ஒரு கட்சியிடமிருந்து வரும் விவாதம், கலந்துரையாடல் அல்லது விமர்சனத்தை பொறுத்துக்கொள்ள
முடியாதுள்ளது. கடந்த மூன்றரை தசாப்தங்களாக சோ.ச.க. போராடிவந்துள்ள கொள்கையும் வேலைத்திட்டமும்,
இனவாத அரசியலின் முட்டுச் சந்துக்கு அப்பால் ஒரு வழியைத் தேடும் தமிழ் மக்களின் அக்கறை மற்றும் எதிர்பார்ப்புகளை
ஊடுருவிச் செல்லத் தொடங்கியுள்ளதையிட்டு விடுதலைப் புலிகள் பீதிகொண்டுள்ளனர்.
சோ.ச.க. மீதான விடுதலைப் புலிகளின் வன்முறைகளையிட்டு நீங்கள் மெளனத்தைக் கடைப்பிடிக்கின்றீர்கள்.
ஜனநாயக உரிமைகள் தொடர்பாக கொஞ்சமாவது மதிப்பிருந்தால், நீங்கள் கடைப்பிடிப்பது போல, எமக்கிடையில்
வெளிப்படையான அரசியல் வேறுபாடுகள் இருந்த போதிலும், ஊர்காவற்துறையில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை
கண்டனம் செய்து உடனடியாக எழுதுவதே உங்களது கொள்கை ரீதியான நடவடிக்கையாக அமைய வேண்டும்.
உங்கள் உண்மையுள்ள
கே. ரட்னாயக்க,
உலக சோசலிச வலைத் தளம்
See Also :
இலங்கை
சோசலிஸ்டுக்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான அனைத்துலகப் பிரச்சாரம்: ஏசியன் ரிபியூன் விடுதலைப்
புலி பரிந்துரையாளருக்கான உலக சோசலிச வலைத் தளத்தின் பதிலை பிரசுரிக்கிறது
சோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும்
Top of page
|